பிராடு பிரதர்ஸ்.

 வேலூர், காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 2015-ம் ஆண்டு முதலே பங்குச் சந்தையில் முதலீடு செய்துவந்தார். இவருடன் சகோதரர்கள் ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் பெரியப்பா மகன் மோகன்பாபு ஆகியோரும் கைகோத்தனர்.

ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்ற சூழலில், ‘உங்க பணத்தை எங்கிட்ட குடுங்க, நான் சூப்பர் லாபம் சம்பாதிச்சுத் தர்றேன்’ என்று அக்கம்பக்கத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று பணத்தை வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுபோல பாவ்லா காட்டி, அவர்களுடைய பணத்தை அவர்களுக்கே திருப்பித் தந்துகொண்டிருந்தார்கள் பிராடு பிரதர்ஸ்.

இந்த ஃபிராடு பிசினஸ் 2019-ம் ஆண்டுக்குப்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது. ‘1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்’ என்பதுதான் இவருடைய பிஸினஸின் அடிநாதம். 

ஒரே ஆண்டில் போட்ட பணம் டபுளாகிவிடும் என்பதால், பல்வேறு காரணங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் மட்டுமல்லாது, கடனை வாங்கிக்கூட பணத்தைக் கொட்ட ஆரம்பித்தார்கள் மக்கள்.

பணம் எண்ணும் மெஷின்கள் வைத்தும்கூட எண்ண முடியாத அளவுக்கு பணம் கொட்டுவதைப் பார்த்து பிரமித்துப்போன ஃபிராடு பிரதர்ஸ், அடுத்தக் கட்டமாகத்தான் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றைக் கையில் எடுத்தார்கள்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின்மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சேர்த்தாலும், நிறுவனத்துக்கென பெரிய இமேஜ் எதுவும் இல்லை. நிறுவனத்துக்காக வேலை பார்க்கும் 300 லீடர்களுக்கும் (ஏஜென்ட்டுகள்), அவர்களின்கீழ் இருக்கும் குட்டி லீடர்களுக்கும் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் ஏற்படுத்தித் தருகிற மாதிரியான ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும். 

இதை மிகவும் ‘ஹைஃபை’ அமைப்பாக நடத்துவதன்மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும். இதன் கிளைகளை வெளிநாடுகளில் ஆரம்பித்து, இங்கிருந்து பணத்தைக் கொண்டுபோக வேண்டும். ஒருகட்டத்தில் மொத்தப் பணத்துடன் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடவேண்டும்’ என்பதுதான் அந்த முக்கிய திட்டம்.

இதைச் செயல்படுத்துவதற்காக ‘மார்க் (MARC) ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தைப் புதிதாக உருவாக்கினார்கள். 

நம்மூரில் நிறைய கிளப்கள் இருப்பது மாதிரி, இதையும் ஒரு கிளப் என்கிற வகையிலேயே உருவாக்கினார்கள். `Connect to Convert’ என்பது இந்த க்ளப்பின் டேக் லைன். அதாவது, உங்களை வேறு பலருடன் இணைத்துக் கொள்வதன்மூலம் உங்கள் பிசினஸை வைத்துப் பணம் சம்பாதிப்பது. அப்படி என்ன பிசினஸ் என்கிறீர்களா?

 ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மக்களிடம் இருந்தும், சமூகத்தில் அந்தஸ்துள்ளன மனிதர்களிடம் இருந்தும் பணத்தை வசூகூட்டத்தினரும்.

இந்த `மார்க் கிளப்’பின் அறிமுகக் கூட்டம், 2021 நவம்பரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கோலகலமாக நடத்தப்பட்டது. 


கோட், சூட்டுடன் வரும் `சதுரங்கவேட்டை’ ஏமாற்றுக்காரர்களைப் போல, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் கோட், சூட் அணிந்திருந்தார்கள்.

 ‘நீங்கள் பெரும் பணக்காரராக ஆவதற்கென்றே அவதரித்தவர்கள். எங்களுடன் சேருங்கள். அதன்பிறகு, நீங்கள் வேறு லெவலில் இருப்பீர்கள்’ என்று ஜனார்த்தனனும், மோகன் பாபுவும் பேசப் பேச, சுவிசேஷக் கூட்டத்தில் உருண்டுபுரளும் கூட்டத்தைப் போல, ஒட்டுமொத்தக் கூட்டத்தினரும் `வசிய நிலைக்கு ஆளானார்கள்.

ஆரம்பமே அமர்க்களம் என்றான பின்பு, மார்க் நிறுவனத்தின் கிளைகளை தமிழகத்தில் 72 பகுதிகளுக்கு ஏலம் விட்டார்கள். 

ஐ.பி.எல் கிரிக்கெட் டீம் ஏலம் விடப்படுவது போல, ஒவ்வொரு நகரத்துக்கும் ஏலம் விடப்பட, ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த செட்டப் ஆட்கள் பலரும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார்கள். காஞ்சிபுரம் உள்பட பல முக்கியமான நகரங்களுக்கு ‘மின்மினி’ சரவணக்குமார் ஏலம் எடுத்தார். 


வேலூர் கிளையை மோகன் பாபுவே வைத்துக்கொண்டார். இப்படி பல நகரங்களுக்கு வெற்றிகரமாக விற்றதன் மூலம் ஃபிராடு பிரதர்ஸ்களுக்குக் கிடைத்தது சுமார் 400 கோடி ரூபாய். 

இந்தப் பணத்தை ஏஜென்ட்டுகள் பணமாகக் கட்டினார்களா அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் கடந்த சில மாதங்களாகவே வெளியில் கசிந்தாலும், வருமான வரித் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் எதுவும் இதையெல்லாம் விசாரித்ததா, இனிமேலாவது விசாரிக்குமா என்பதும் தெரியவில்லை.

மார்க் கிளப்பில் முதலில் உறுப்பினராக வேண்டும் எனில், ரூ.36,000 செலுத்த வேண்டும். இப்படிச் சேர்பவர்கள், அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் வாரம் ஒருமுறை நடக்கும் பிரேக் பாஸ்ட் மீட்டிங்கில் பங்கேற்கலாம். 

அதில் மூளைச் சலவை செய்யப்படும். பிறகென்ன... முதலீடுகள் கொட்ட ஆரம்பித்துவிடும். இந்தக் கூட்டங்களுக்கு மேலும் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு பிரபலம் அதில் கலந்துகொண்டு பேசுவார்.

 `நீயா, நானா’ கோபிநாத், `பத்திரிகையாளர்’ ரங்கராஜ் பாண்டே, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும்கூட பங்கேற்றது உண்டு.

இது மட்டுமா... தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்குப் பணத்தை அள்ளிவிட்டனர் பிராடு பிரதர்ஸ். 

அடுத்து, இளையராஜாவின் இசைக் கச்சேரி, பட்டிமன்றங்கள் என்று பலவாறாக ஸ்பான்ஸர் செய்து, மார்க் கிளப் என்கிற பிராண்ட்டை சாதாரண மனிதர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தனர். 

திரைப்பட நடிகர் மாதவன் போட்டோவைப் போட்டு செய்தித்தாள்களில் பெரிதாக விளம்பரமும் செய்தார்கள். நம்பி நாராயணன் கதையைப் படமாக எடுத்தவர் பிராடு பிரதர்களை நம்பி மோசம் போனார்.

மார்க் நிறுவன கிளைகளை விற்றதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய்களை வைத்துதான் இதற்கெல்லாம் செலவு செய்துள்ளனர். 

கையோடு அதற்குப் பலனும் கிடைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போடத் தயங்கியவர்கள்கூட, மார்க் கிளப் கூட்டங்களில் கலந்துகொண்டபின் அசந்து போனார்கள். ‘அடேங்கப்பா, தயாநிதி மாறன், சேகர்பாபு, மாதவன், பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர்களை எல்லாம் அசால்ட்டாக அழைத்து வருகிறார்கள்! 

இவர்கள் பவர்ஃபுல்லான ஆள்களாகத்தான் இருக்கவேண்டும்’ என்று நம்பிக்கையை ஏகத்துக்கும் வளர்த்துக் கொண்டு, ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என்றெல்லாம் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். 

பெரும் பணக்காரர்களும் கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட, அவர்களும் கோடிக் கணக்கில் பணம் போட்டிருக்கிறார்கள்.

இதன் பிறகுதான், சதுரங்கத்தின் அடுத்த மூவை புத்திசாலித்தனமாக நகர்த்தத் தொடங்கினார்கள் பிராடு பிரதர்ஸ். அதுதான், வெளிநாடுகளில் மார்க் கிளப்பின் கிளைகளைத் தொடங்குவது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இந்தக் கிளைகள் திறக்கப்பட்டன. 

அந்த நாடுகளில் பிசினஸ் செய்வதாக சொல்லி, இங்கிருந்து பணத்தைக் கொண்டு போயிருக்கிறார்கள். தொழில் முதலீடு வருகிறது என்பதால், அந்த நாட்டு அரசாங்கங்கள் சிவப்புக் கம்பளத்தையே விரித்துள்ளன.

இப்படிப் பலமுறை வெளிநாட்டுக்குப் பணம் போய்க் கொண்டிருந்த நிலையில்தான், ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக் கதைகள் சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.

 அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதியப்பட்ட சூழலில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துக்கு தலைவலி உருவாக ஆரம்பித்தது. அப்போது இந்த நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கியது பொருளாதாரக் குற்றப்பிரிவு. விசாரணை நடத்தக்கூடாது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி ஆனது. 

அதே சமயத்தில்தான். ஜூனியர் விகடன் மற்றும் நாணயம் விகடன் இதழ்களிலும் விகடனின் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்களிலும் ஐ.எஃப்.எஸ் மோசடித் திருவிளையாடல் குறித்த செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, மொத்த பணத்தையும் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, குடும்பசகிதம் எஸ்கேப் ஆகிவிட்டார்கள் ஃபிராடு பிரதர்ஸ்.

பெருந்தலைகள் எல்லாம் தப்பிவிட்ட நிலையில், காஞ்சிபுரம்- மின்மினி சரவணன், வேலூர்- குப்புராஜ், நெமிலி- ஜெகநாதன் ஆகிய முக்கிய ஏஜென்ட்டுகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

 இவர்களிடம் முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே ஐ.எஃப்.எஸ் மற்றும் மார்க் இரண்டு பெயர்களிலும் நடத்தப்பட்ட பல்லாயிரம் கோடி மோசடி குறித்த தகவல்கள் வெளியில் வரும். 

ஆனால், முறையான விசாரணை நடத்தப்படுமா என்பதுதான் சந்தேகமாகவே இருக்கிறது. 

காரணம், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, ‘தலை’களெல்லாம் தப்பும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பொருளாதாரக் குற்றப்பிரிவுதான் தற்போது வரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை .

---------------------------------------------------------------------------













இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?