புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆன்டி ஆக்சிடன்ட்.

 நம் தாத்தா, பாட்டி காலத்தில் ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்’ என்ற வார்த்தையோ அதைப்பற்றிய புரிதல்களோ, அதைப்பற்றிய தேடல்களோ இல்லாத போதே ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்ந்து ஆயுள்காலத்தை கூட்டினர். 

காரணம் அவர்கள் பயன்படுத்திய உணவு வகைகள், பின்பற்றிய மருத்துவ முறைகள் அனைத்திலும் இன்று நாம் தேடும் ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்’ நிரம்பி இருந்தது என்பது தான் இன்றைய அறிவியல் புரிதல்.

டாக்டர் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள கிரீன் டீ குடிச்சா நல்லதுன்னு சொன்னாங்க, அதனால சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஏன் புற்றுநோய்கள் கூட வராமல் தடுக்கும் என சொன்னாங்க” என்று பச்சை தேநீரினை நாடும் நம்மவர்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையும் மறந்தவர்கள் தான். 

இன்னும் சொல்லப்போனால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல் என்னவெனில் அறிவியலாளர்களே வியக்கும் வண்ணம் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டது நம்ம ஊர் ‘நெல்லிக்கனி’ என்பது தான்.

அந்த வகையில் நெல்லிக்கனிக்கு அடுத்தாற்போல் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டதும், அதிக மருத்துவ குணமுடையதும், இருதயத்தை காப்பதும், கிறிஸ்துவ காலத்திற்கு முன்பிருந்தே கிரேக்கர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பழம் தான் ‘திராட்சை’. 

‘கொடிமுந்திரி’ என்கிற பெயரால் அழைக்கப்படும் திராட்சை பல்வேறு நன்மை பயக்கும் பாலிபினோலிக் மூலக்கூறுகளை உடையது.

அதிலும் முக்கியமாக குறிப்பிடப்படுவது அதில் உள்ள ‘ரெஸ்வெரட்ரால்’ என்ற வேதிப்பொருள் தான்.

 வெளிநாடுகளில் அதிகமான விலைக்கு வலைவீசி தேடப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப்பொருள் இதுவே. ஏனெனில் இன்று உயிர்கொல்லி தொற்றா நோயாக கருதப்படும் நோய்களுள் ஒன்றான இருதய நோய்கள் வரவிடாமல் தடுக்கும் தன்மை இதற்க்குண்டு.  

திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால் வேதிப்பொருள் ரத்த குழாய்களில் வீக்கம், த்ரோம்பஸ் எனும் ரத்தக்கட்டி உருவாக்கம், அதில் பிளேட்லெட் படிதல் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட்டு இருதய அடைப்பு வராமல் தடுக்கும் தன்மையுடையது. 

மிக முக்கிய தொற்றாகவும் அசுர நோயாகவும் கருதப்படும் நீரிழிவு நோயில் இறப்புக்கான முக்கிய காரணம் இருதயக் கோளாறு தான். ரெஸ்வெரட்ரால் என்ற வேதிப்பொருள் உடைய இந்த திராட்சை அதைத் தடுக்கும் மாமருந்து என்றே சொல்லலாம்.

மேலும், திராட்சைக்கு வீக்கமுறுக்கி தன்மையும், ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், அல்சைமர் எனும் நோயினை வரவொட்டாமல் தடுக்கும் நரம்பு மண்டல பாதுகாக்கும் தன்மையும், அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடையதால் புற்றுநோய்களை தடுக்கும் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும் உள்ளது.

திராட்சையில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது என்பது பலருக்கும் தெரியும். இது உண்ணும் உணவின் சீரணத்தை தூண்டி மலத்தை இளக்கி மலச்சிக்கலை நீக்கும் தன்மையுடையது. 

மேலும், உடலுக்கு நன்மை பயக்கும் விட்டமின்களும், தாதுஉப்புகளும் உள்ளதால், உடலைத்தேற்றும் தன்மையுடையது. அவ்வப்போது உலர்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து நீருடன் சேர்த்து திராட்சையை எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும்.

ஆனால், இந்த திராட்சை இன்று விடம்மூடிய அமிர்தமாக, அதாவது விஷமாகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் தோய்த்து எடுக்கப்பட்ட அமிர்தமாக உள்ளது.

 திராட்சையில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் நீங்க அதனை உப்புநீரில் கழிவு பயன்படுத்தல் நல்லது.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த திராட்சையில், அதன் மேல்தோல் மற்றும் விதைகளில் தான் அதிக ரெஸ்வெரட்ரால் உள்ளது. 

ஆக, இனியாவது திராட்சையை தின்று விதைகளை வீணாக்காமல் அதனையும் உலர்த்தி பொடித்து பயன்படுத்த தொடங்கினால் இருதயத்தின் நலம் பாதுகாக்கப்படும். ஆயுள்காலம் கூடும்.

“டாக்டர் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு, இனிப்பு சத்துள்ள திராட்சையை சாப்பிடலாமா?” என்று பலருக்கு தோன்றும் கேள்வி. ஆராய்ந்து பார்த்தால், திராட்சையின் கிளைசெமிக் குறியீடு எண் வெறும் 43 முதல் 53 தான்.

 இது நாம் சாப்பிடும் இட்லி, தோசையை விட மிகக்குறைவு. ஏனெனில் இட்லி, தோசையின் கிளைசெமிக் குறியீடு எண் 73 முதல் 80 வரை. ஆக, திராட்சை இட்லியை விட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த உணவுப்பொருள் தான். 

மேலும், மருத்துவ குணமிக்க பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப்பொருள்கள் அடங்கிய மகத்தான பழவகை. 

எனவே, நாள்தோறும் திராட்சை அடங்கிய பழக்கலவைகளை எடுத்துக்கொள்வதால், நிச்சயம் நலம் நம் வாசல் கதவை தட்டும் என்பது உறுதி.

                                                -. மரு.சோ.தில்லை வாணன்.

-------------------------------------------------------------------------------