புதன், 7 பிப்ரவரி, 2018

ஊழல் துறை!

தமிழகக் கல்வித்துறை
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி லஞ்சம் வாங்கும் போது கையும்களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்டது பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூற முடியாது. 
அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் நியமனத்திலேயே பல கோடிகள் புரள்வதாக கூறப்படும் நிலையில், பணம் கொடுத்து பணிக்கு வந்தவர் அந்தப் பணத்தை வசூலிப்பது என்பதும் ஒரு எழுதப்படாத விதியாகவே மாற்றப்பட்டுவிட்டது.

பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியர் ஒருவரை பணி நிரந்தரம் செய்வதற்கு ரூ.30 லட்சம் அளவுக்கு துணைவேந்தர் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டிருக்கிறார். 
தமிழகத்தில் இயங்கும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணி நியமனம், பணி நிரந்தரம் ஆகியவற்றுக்கு பணமில்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. ஆய்வு மாணவர்கள் கூடபணம் கொடுத்தால் மட்டுமே, ஆய்வை முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. 
இப்போது கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இவர் பெருமளவு பணம் குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
பல்கலைக் கழகத்தில் வசூலிக்கப்படும் தொகையில், அமைச்சர்கள் உள்பட பலருக்கு பங்குத் தொகை செல்வதாகவும் கூறப்படுகிறது. துணைவேந்தர் கணபதி பங்குத் தொகையை மேலிடத்திற்கு உரிய வகையில் செலுத்தாததால் தான் தற்போது சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று நிராகரித்துவிட முடியாது. 
இதேபோன்று பல்வேறு பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மீதும், ஏராளமான புகார்கள் உள்ளன. கைது செய்யப்பட்டதும் நடந்துள்ளது. 
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் வீழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது லஞ்சமும், ஊழலுமே ஆகும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் அந்தப் பொறுப்பிற்கு தகுதியானவர் தானா என்று சர்ச்சை எழுந்தது. அவரது பணிக் காலத்தில் ஏராளமானபுகார்கள் எழுந்தன. 
துணைவேந்தர் உள்ளிட்ட உயர் பதவி நியமனம் என்பது அவர்களது கல்வித் திறன் மற்றும் பணித்திறன் அடிப்படையில், நடைபெறுவது இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களே நியமிக்கப்படுகிறார்கள். 
இதனால் தனது பணிக் காலத்தில் முடிந்தவரை சுருட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். தொலை தூர கல்வி என்பதும் கூட பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே மாறியுள்ளது.
சத்துணவு பணியாளர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் என அனைத்துக்கும் வெளிப்படையாகவே விலை நிர்ணயிக்கும் அளவுக்கு தமிழகம் சென்றிருப்பது மிகப் பெரிய வீழ்ச்சியாகும். 
பணம் கொடுத்து பணிக்கு வருவது அந்தப் பணியை வைத்துச் சம்பாதிப்பது என ஒரு விஷச் சக்கரம் போல, சமூகம் சுழற்றப்படுகிறது. 
ஜனநாயக முறையிலான தேர்தலும் கூட இவ்வாறு மாற்றப்பட்டுவிட்டது. துணைவேந்தர் கைது என்பது நோயின் வெளிப்பாடே. நோய் மிகவும் முற்றிய நிலையில் உள்ளது. 

 பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், தமிழகம் முழுவதும் பரவலாக எல்லா அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பல லட்சங்கள் உதவிப்பேராசிரியர் பணி நியமனங்களுக்குப் பெறப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 
இந்த லஞ்சப் பேரலையில் கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி கல்வி இயக்குநர், கல்லூரி இணை இயக்குநர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் எனப் பலர் பங்கு பெற்றிருப்பதாக தெரிகிறது . 
பல கல்வி நிறுவனங்களில் சரியான முறையில் நேர்முகத்தேர்வுகள் நடைபெறவில்லை என்ற புகார்களும் உள்ளன. சில கல்லூரிகளில் பணிக்குச்சேர்ந்த ஆசிரியர்கள் லஞ்சப்பணத்தை இன்னும் தவணை முறையில் செலுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 
தமிழகம் முழுவதும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் இந்த ஊழலை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது அதிகார மட்டத்த்தில் கொள்ளையில் பங்கிருப்பதாகவே தெரிநிறது.
தங்களுக்கு 8 கோடிகளை துணைவேந்தர் பதவிக்கு கொடுத்தவன் அதை சம்பாதிக்க வேண்டுமே என்ற பெருந்தன்மை,அல்லது அவர் சம்பாதிக்கும் அளவைப்பார்த்து அடுத்தமுறை இப்பதவிக்கு கேட்புத்தொகையை அதிகரிக்கவேண்டும் என்ற ஆவலாக  கூட இருக்கலாம்.
 இதுவரை 3000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள், நபருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு மேலும் வசூலிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பணம் கொடுக்காமல் யாரும் துணைவேந்தர் ஆகவே முடியாது என்ற குற்றச்சாட்டும் பலமாக இருக்கிறது. இவ்வாறு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை. இதற்காக அரசு உயர்நிலை விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து, அரசு உதவி பெறும் அனைத்துக் கல்லூரிகளிலும் செய்யப்பட்டுள்ள உதவிப்பேராசிரியர் பணி நியமனங்களையும் விசாரிக்க வேண்டும். 
இது மூன்று மாதக் காலத் தவணைக்குள் முடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இது குறித்து ஒரு பொது விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை, தரவுகளை அரசு பெற வேண்டும். இனி நடை பெறும் பணி நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறச்செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நேரடியாகப் பணியமர்த்தல் செய்யப்படவேண்டும். 
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் தரவரிசைப் பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். லஞ்ச ஊழலில் சிக்கும் அனைத்து அதிகாரிகளையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 
தமிழகத்தின் உயர் கல்வியை இந்த அரசு  கேலிக் கூத்தாக்கியுள்ளது. இதைச் சீர்செய்வது என்பது அவசிய உடனடித் தேவையாகும்.
ஆனால் ஊழலில் பங்குக்கு அடித்துக்கொள்ளும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை அது நடக்குமா?
இவர் காட்டுவது தமிழகக் கல்வித்துறை ஓட்டையை அல்ல.மதுரை மண்டபம் இடிந்ததை . 
======================================================================================
ன்று,
பிப்ரவரி-07.

  • சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1971)
  • கிரனடா விடுதலை தினம்(1974)
  • புளூட்டோ, நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது(1979)
  • ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1992)
========================================================================================