புதன், 27 ஜூலை, 2022

நெடுஞ்சாலை ஊழல்

2018-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டை எழுப்பியது தி.மு.க. 'தன் உறவினர்களுக்குச் சாதகமாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடான வழிகளில் எடப்பாடி வழங்கிவிட்டார்' என்பதுதான் தி.மு.க எழுப்பிய குற்றச்சாட்டு. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த முறைகேட்டை விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி, சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார். அதோடு எடப்பாடி மீதான முறைகேடுப் புகாரும் அமுங்கிப்போனது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் புத்துயிர் பெற்றதுதான் அரசியல் 'ஹாட்.’

நேற்று, ஜூலை 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'வக்காலத்து மாற்ற வேண்டியிருப்பதால், மூன்று வார கால அவகாசம் தேவை' என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டது. 'அவ்வளவு கால அவகாசம் தர முடியாது' என மறுத்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

எடப்பாடி மீது நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடுப் புகார்களை தி.மு.க எழுப்புவதற்கு முன்னதாக, அப்போது டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த தங்க தமிழ்ச்செல்வன், மறைந்த வெற்றிவேல் ஆகியோர் எழுப்பினர்.

 "நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகள் முதல்வர் எடப்பாடியின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு 1,500 கோடி ரூபாய் நஷ்டம்" என்று பகீர் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தார்கள்.


 அதன் பிறகே, தி.மு.க தரப்பிலிருந்து இந்த முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் திரட்டப்பட்டு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாரளிக்கப்பட்டது. ஐந்து சாலைப் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்தது தி.மு.க தரப்பு.

 தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய புகாரில், "ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் இடையிலான நான்குவழிச் சாலை அமைக்க முதலில் 713.34 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. 

பிறகு, இந்தத் தொகையை 1,515 கோடி ரூபாயாக உயர்த்தினர். இந்தத் திட்டத்தின்படி, 'ஒப்பந்ததாரருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 75 கோடி ரூபாய் வீதம் கட்டணமாக எட்டாண்டுகளுக்கு கொடுக்க வேண்டும்' என்று நிர்ணயிக்கப்பட்டது. சந்தை நிலவரப்படி ஒரு கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க, ஒப்பந்ததாரருக்கான லாபம் எல்லாவற்றையும் சேர்த்தே 2.2 கோடி ரூபாய்தான் செலவாகும். மொத்தச் செலவு, வருங்காலத்தில் ஏற்படும் விலை ஏற்றம் என எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிட்டால்கூட, இந்த சாலைத் திட்டத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படாது. 

ஆனால், இந்தத் திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.பாரதி

இந்தச் சாலைத் திட்டத்துக்கான டெண்டர் 'ராமலிங்கம் அண்ட் கோ' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக, சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் இருக்கிறார். 

எடப்பாடி பழனிசாமியின் மருமகளான திவ்யாவின் நெருங்கிய உறவினர்தான் இந்த சந்திரகாந்த். முதல்வராகவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன் மகன் மிதுனின் மைத்துனருக்கு 1,515 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை வழங்கியிருக்கிறார்.


இரண்டாவதாக, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழித்தடம் திட்டத்துக்கு 407.6 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. 

பின்பு, இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவு 720 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு எட்டு ஆண்டு காலத்துக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 45 கோடி ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு கி.மீ-க்கு 2.2 கோடி ரூபாய் என்று கணக்கிட்டால் மொத்த செலவு 130 கோடியைத் தாண்டாது. 'வேங்கடாசலபதி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனம் எடப்பாடியின் சம்பந்தி பி.சுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமானது.

நெடுஞ்சாலை

மூன்றாவது திட்டம், மதுரை ரிங் ரோடில் நான்கு வழித்தடம் அமைப்பதற்கானது. இதன் மொத்தச் செலவு 200 கோடி ரூபாய். இந்த சாலைத் திட்டத்துக்கான ஒப்பந்தம்ஸ்ரீ பாலாஜி டோல் வேஸ்' என்கிற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக சுப்பிரமணியம், நாகராஜன், ஜே.சேகர் ஆகியோர் இருக்கிறார்கள். 

இவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்தான். இந்த நிறுவனத்துக்கு திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டவுடன், இந்தத் திட்டத்துக்கு 18.57 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

நான்காவதாக, வண்டலூர்- வாலாஜாபாத் ஆறுவழித்தடம் தொடங்கப்பட்டது. இதுவும் நாகராஜன் என்பவரின் 'எஸ்.கே.பி. அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே' நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது திட்டமாக, ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் மாநில நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. 

இந்த ஒப்பந்தமும் எஸ்.கே.பி நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஒரு பொது சேவகர். சந்திரகாந்த், சுப்பிரமணியம், பி.நாகராஜன், ஜே.சேகர் ஆகியோருடன் குற்றச்சதியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருக்கிறார். அதிகார துஷ்பிரயோகம் செய்து மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கச் செய்திருக்கிறார்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவுகள் 13(1), 13 (2) ஆகிய பிரிவுகளிலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120-பி ஆகியவற்றின் கீழும், எடப்பாடி செய்திருக்கும் இந்தக் குற்றங்கள் தண்டனைக்குரியவை. 

எடப்பாடியின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காகவே இந்தத் திட்டங்களின் செலவும், நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டன. ஒப்பந்தப் புள்ளி வெளிப்படைத் தன்மைச் சட்டம் 1998-ன் விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. 

இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என்று தன் புகாரில் கூறியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

எடப்பாடி பழனிசாமி

சுமார் 4,800 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டெண்டர்களில் முறைகேடு நடந்ததாகப் பதியப்பட்ட இந்தப் புகாரில்தான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த விசாரணை இடைக்காலத் தடையால் அந்தரத்தில் நிற்கிறது. 

இது குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ அதிகாரிகள் சிலர், "இடைக்காலத்தடையை உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டாலே, எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ விசாரணை தொடங்குவதற்கு எந்தத் தடங்கலும் இல்லை. 

எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்கள், ஆதாரங்கள் அடிப்படையில், பூர்வாங்கமாக எங்கள் விசாரணையை நாங்கள் முடித்தே வைத்திருக்கிறோம். தேவைப்பட்டால், எடப்பாடிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தப்படும். இந்த வழக்கில், எடப்பாடியின் மகன் மிதுனின் இரண்டு உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மிதுன் மீதும் வழக்கு பாய்வதற்கு முகாந்திரம் இருக்கிறது. 

இந்த வழக்கு உண்மையிலேயே எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தப்போகும் வழக்குதான்" என்றனர்

ஒருபக்கம் எடப்பாடிக்கு ஆதரவானவர்கள் மீது வருமான வரித்துறை சோதனைகள் தடதடக்கின்றன. அவர் முகாமிலுள்ள சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை ஆரம்பமாகவிருக்கிறது. 

இந்தச் சூழலில், "எடப்பாடியின் மீதும் சி.பி.ஐ விசாரணை தொடரப்பட்டால், அரசியல்ரீதியாக அவருக்குப் பின்னடைவுதான்" என்கிறார்கள்.

------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 24 ஜூலை, 2022

பள்ளி கல்வி ஊழல்

 தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி, மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

பார்த்தா சாட்டர்ஜி முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் ஆவார்.

பல்வேறு முக்கிய இலாகாக்களைக் கையாளும் ஒரு முக்கிய (ஹெவிவெயிட்) அமைச்சராக இருப்பதைத் தவிர, பார்த்தா சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். 

கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பதவிக்குப் பிறகு மிக முக்கியமான கட்சிப் பதவி இது.

கொல்கத்தாவின் மிக முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரும், கொல்கத்தாவின் பெஹாலா பாஸ்கிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டவருமான 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க கட்சி ரீதியிலான விவகாரங்களைக் கையாளும் போது மம்தாவின் “நம்பிக்கைக்குரிய” தலைவராக இருந்து வருகிறார். 

திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டக் குழுக்களின் அரசியலமைப்பு முதல் தேர்தல் உத்திகளை உருவாக்குவது வரை, ஒட்டுமொத்த கட்சி நிறுவன விஷயங்களில் பார்த்தா சாட்டர்ஜி முக்கிய பங்கு வகிக்கிறார். கட்சியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.முக்கியமான கட்சிப் பதவி இது.

கொல்கத்தாவின் மிக முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரும், கொல்கத்தாவின் பெஹாலா பாஸ்கிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டவருமான 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க கட்சி ரீதியிலான விவகாரங்களைக் கையாளும் போது மம்தாவின் “நம்பிக்கைக்குரிய” தலைவராக இருந்து வருகிறார். 

திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டக் குழுக்களின் அரசியலமைப்பு முதல் தேர்தல் உத்திகளை உருவாக்குவது வரை, ஒட்டுமொத்த கட்சி நிறுவன விஷயங்களில் பார்த்தா சாட்டர்ஜி முக்கிய பங்கு வகிக்கிறார். கட்சியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

பார்த்தா சாட்டர்ஜி  அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆண்ட்ரூ யூல் நிறுவனத்தில் மனிதவள நிபுணராக பணியாற்றினார். மம்தா பானர்ஜி காங்கிரஸில் இருந்து விலகி 1998 இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய பிறகு, பார்த்தா சாட்டர்ஜி கட்சியில் சேர்ந்தார். 

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் 2001 இல் பெஹாலா பாஸ்சிமில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன்பிறகு தொடர்ந்து அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வருகிறார். 

2006 முதல் 2011 வரை சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பார்த்தா சாட்டர்ஜி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் அகற்றி அதன் அரசாங்கத்தை அமைத்தபோது, ​​தேர்தலில் 59,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்த்தா சாட்டர்ஜி, மம்தா அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

பார்த்தா சாட்டர்ஜி வர்த்தகம் மற்றும் தொழில், பொது நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளுக்கு மம்தாவால் அமைச்சராக்கப்பட்டார். பின்னர் அவர் சட்டசபையின் துணைத் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.

2014 இல், பார்த்தா சாட்டர்ஜி உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்விக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  தற்போதைய SSC ஊழலின் மையத்தில் உள்ள இந்த இலாகாக்களை 2021 வரை அவர் வைத்திருந்தார். 2021ல் அவருக்குப் பதிலாக மற்றொரு அமைச்சர் பிரத்யா பாசு உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்விக்கான நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, மம்தா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவர் மீண்டும் வணிகம் மற்றும் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளை பார்த்தா சாட்டர்ஜிக்கு ஒதுக்கினார்.

பார்த்தா சாட்டர்ஜி மாநிலக் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் தொடக்கக் கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகுதிப் பட்டியலில் இடம் பெறுபவர்களுக்குப் பதிலாக, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணப் பலன்களுக்கு ஈடாக வேலை கிடைப்பதை உறுதி செய்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை பார்த்தா சாட்டர்ஜி எதிர்கொள்கிறார்.

பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நெருங்கிய பெண் கூட்டாளியான அர்பிதா முகர்ஜி, இரண்டு அமைச்சர்கள், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் முன்னாள் உதவியாளர்கள் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் தோண்டத் தோண்ட பணம் கிடைத்தது. அவருடைய வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கண்டெடுக்கப்பட்டது. 

வங்கி அதிகாரிகள் உதவியுடன், பணம் எண்ணும் இயந்திரங்கள் வாயிலாக அவை எண்ணப்பட்டன.
மொத்தம், 21 கோடி ரூபாய் பணம் மட்டும் கிடைத்துள்ளது. 

இதைத் தவிர நகைகள், ஆவணங்கள் என பெரிய அளவில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, 26 மணி நேர விசாரணைக்குப் பின், பார்த்தா சாட்டர்ஜியும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோசடி வழக்கில் மாநில மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளது, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

_----------------------------------------------------------------_

தமிழக அரசு பள்ளிகளுக்கு  புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. 

அதன்படி தமிழகத்தில் பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக சிஇஓவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை, பற்றாக்குறை,மாணவர் சேர்க்கை மற்றும் உள்ளூர் விடுமுறை விடுதல் உள்ளிட்டவற்றை சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Kallakurichi incident reverberates TN Govt new order for schools

அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சனி, 23 ஜூலை, 2022

காணொலிகள்

 ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக விரைவில் இது தொடர்பாக பரீசீலனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செவ்வாய், 19 ஜூலை, 2022

"ஷாக்" கட்டணங்கள்.

 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.  

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை  இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல்,  இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. 

இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50  உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்)  மாதம் ஒன்றிற்கு ரூ.72.50  உயர்த்த  உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50   உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50  உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275  உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.565  உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 

500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

93% (2.26 இலட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு,  குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது  53% (19.28 இலட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1  உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு  750  யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கு மேல், யூனிட் ஒன்றிற்கு 70 பைசா உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் "மின்மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்" திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகிதப் பட்டியலில் மின்னேற்றம் (charging) செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகிதப் பட்டியலில் பொது மின்னேற்றம் (charging) செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------வெள்ளி, 15 ஜூலை, 2022

உண்மை

 கொரோனா காலத்தில் நல்ல வளர்ச்சி கண்ட துறைகளில் மருத்துவ துறையும் ஒன்று. குறிப்பாக மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியினை கண்டன.

"டோலோ 650" கொரோனா காலத்தில் அதிகம் தேவைப்பட்ட மாத்திரைகளில் இதுவும் ஒன்று.

இதன் காரணமாக கொரோனா காலத்தில் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்றுள்ளதாகவும், இதன் மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் மைக்ரோ லேப் நிறுவனத்தில் 9 மாநிலங்களில் 36 இடங்களில் வருமான வரித்துறையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மைக்ரோலேப்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பெங்களூரு அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், கணக்கில் காட்டப்படாத 1.20 கோடி ரூபாய் பணம், 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆச்சரியத்தினையும், அதிர்ச்சியையும் அளிக்கும் விஷயம் என்னவெனில், மருத்துவ நிபுணர்களுக்கு இலவசமாக பரிசுகளை கொடுத்தன் பேரில், விற்பனை மற்றும் ஊக்குவிப்பு (Sales & Promotion) என்ற தலைப்பில் கீழ் அனுமதிக்க முடியாத செலவினங்களுக்கும் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன. இதற்காக மட்டும் சுமார் 1,000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனம் மருத்துவ சந்தையில் முன்னணி வகித்த ஒரு நிறுவனமாகவும் இருந்தது. இப்படி ஒரு நிறுவனமாக இருந்த மைக்ரோலேப்ஸ் பல்வேறு வழிகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.


----------------------------------------------------------------------------

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடைய வெளியான இந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது.

அந்த வகையில் விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. 

மேலும் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி 2 தான் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருந்த நிலையில் அதனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது விக்ரம்.

அப்படியான விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகவும் பிரபலமான OTT தளமான ஹாட்ஸ்டாரில் வெளியானது, திரையரங்கில் படைத்த சாதனைகளை தொடர்ந்து OTT-யிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இதற்கிடையே தற்போது உலகளவில் மிகவும் பிரபலமானIMDb தளம் 2022 ஆம் அரையாண்டில் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி விக்ரம் திரைப்படம் No.1 இடத்தை பிடித்திருக்கிறது, அதனை தொடர்ந்து KGF 2, RRR உள்ளிட்ட திரைப்படங்கள் 2-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்திருக்கிறது. 

இந்த பட்டியலை கண்ட ரசிகர்கள் என்னதான் உலகளவில் வசூல் குவித்தாலும் விக்ரம் படத்திற்கு அடுத்து தான் KGF 2, RRR உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன என்பதை கொண்டாடுகிறார்கள்.

--------------------------------------------------------------------------------