நெடுஞ்சாலை ஊழல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
2018-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டை எழுப்பியது தி.மு.க. 'தன் உறவினர்களுக்குச் சாதகமாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடான வழிகளில் எடப்பாடி வழங்கிவிட்டார்' என்பதுதான் தி.மு.க எழுப்பிய குற்றச்சாட்டு.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த முறைகேட்டை விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி, சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார். அதோடு எடப்பாடி மீதான முறைகேடுப் புகாரும் அமுங்கிப்போனது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், மீண்டும் புத்துயிர் பெற்றதுதான் அரசியல் 'ஹாட்.’
நேற்று, ஜூலை 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'வக்காலத்து மாற்ற வேண்டியிருப்பதால், மூன்று வார கால அவகாசம் தேவை' என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டது. 'அவ்வளவு கால அவகாசம் தர முடியாது' என மறுத்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறது.
எடப்பாடி மீது நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடுப் புகார்களை தி.மு.க எழுப்புவதற்கு முன்னதாக, அப்போது டி.டி.வி.தினகரன் அணியிலிருந்த தங்க தமிழ்ச்செல்வன், மறைந்த வெற்றிவேல் ஆகியோர் எழுப்பினர்.
"நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகள் முதல்வர் எடப்பாடியின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு 1,500 கோடி ரூபாய் நஷ்டம்" என்று பகீர் குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தார்கள்.
அதன் பிறகே, தி.மு.க தரப்பிலிருந்து இந்த முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் திரட்டப்பட்டு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாரளிக்கப்பட்டது. ஐந்து சாலைப் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்தது தி.மு.க தரப்பு.
தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு ஆர்.எஸ்.பாரதி அனுப்பிய புகாரில், "ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் இடையிலான நான்குவழிச் சாலை அமைக்க முதலில் 713.34 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.
பிறகு, இந்தத் தொகையை 1,515 கோடி ரூபாயாக உயர்த்தினர். இந்தத் திட்டத்தின்படி, 'ஒப்பந்ததாரருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 75 கோடி ரூபாய் வீதம் கட்டணமாக எட்டாண்டுகளுக்கு கொடுக்க வேண்டும்' என்று நிர்ணயிக்கப்பட்டது. சந்தை நிலவரப்படி ஒரு கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க, ஒப்பந்ததாரருக்கான லாபம் எல்லாவற்றையும் சேர்த்தே 2.2 கோடி ரூபாய்தான் செலவாகும். மொத்தச் செலவு, வருங்காலத்தில் ஏற்படும் விலை ஏற்றம் என எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிட்டால்கூட, இந்த சாலைத் திட்டத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படாது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சாலைத் திட்டத்துக்கான டெண்டர் 'ராமலிங்கம் அண்ட் கோ' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக, சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் மருமகளான திவ்யாவின் நெருங்கிய உறவினர்தான் இந்த சந்திரகாந்த். முதல்வராகவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன் மகன் மிதுனின் மைத்துனருக்கு 1,515 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை வழங்கியிருக்கிறார்.
இரண்டாவதாக, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழித்தடம் திட்டத்துக்கு 407.6 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.
பின்பு, இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவு 720 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு எட்டு ஆண்டு காலத்துக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 45 கோடி ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு கி.மீ-க்கு 2.2 கோடி ரூபாய் என்று கணக்கிட்டால் மொத்த செலவு 130 கோடியைத் தாண்டாது. 'வேங்கடாசலபதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் எடப்பாடியின் சம்பந்தி பி.சுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமானது.
மூன்றாவது திட்டம், மதுரை ரிங் ரோடில் நான்கு வழித்தடம் அமைப்பதற்கானது. இதன் மொத்தச் செலவு 200 கோடி ரூபாய். இந்த சாலைத் திட்டத்துக்கான ஒப்பந்தம்ஸ்ரீ பாலாஜி டோல் வேஸ்' என்கிற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக சுப்பிரமணியம், நாகராஜன், ஜே.சேகர் ஆகியோர் இருக்கிறார்கள்.
இவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்தான். இந்த நிறுவனத்துக்கு திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டவுடன், இந்தத் திட்டத்துக்கு 18.57 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
நான்காவதாக, வண்டலூர்- வாலாஜாபாத் ஆறுவழித்தடம் தொடங்கப்பட்டது. இதுவும் நாகராஜன் என்பவரின் 'எஸ்.கே.பி. அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே' நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது திட்டமாக, ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் மாநில நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்த ஒப்பந்தமும் எஸ்.கே.பி நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஒரு பொது சேவகர். சந்திரகாந்த், சுப்பிரமணியம், பி.நாகராஜன், ஜே.சேகர் ஆகியோருடன் குற்றச்சதியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருக்கிறார். அதிகார துஷ்பிரயோகம் செய்து மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கச் செய்திருக்கிறார்.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவுகள் 13(1), 13 (2) ஆகிய பிரிவுகளிலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120-பி ஆகியவற்றின் கீழும், எடப்பாடி செய்திருக்கும் இந்தக் குற்றங்கள் தண்டனைக்குரியவை.
எடப்பாடியின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காகவே இந்தத் திட்டங்களின் செலவும், நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டன. ஒப்பந்தப் புள்ளி வெளிப்படைத் தன்மைச் சட்டம் 1998-ன் விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என்று தன் புகாரில் கூறியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
சுமார் 4,800 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டெண்டர்களில் முறைகேடு நடந்ததாகப் பதியப்பட்ட இந்தப் புகாரில்தான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த விசாரணை இடைக்காலத் தடையால் அந்தரத்தில் நிற்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ அதிகாரிகள் சிலர், "இடைக்காலத்தடையை உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டாலே, எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ விசாரணை தொடங்குவதற்கு எந்தத் தடங்கலும் இல்லை.
எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்கள், ஆதாரங்கள் அடிப்படையில், பூர்வாங்கமாக எங்கள் விசாரணையை நாங்கள் முடித்தே வைத்திருக்கிறோம். தேவைப்பட்டால், எடப்பாடிக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தப்படும். இந்த வழக்கில், எடப்பாடியின் மகன் மிதுனின் இரண்டு உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மிதுன் மீதும் வழக்கு பாய்வதற்கு முகாந்திரம் இருக்கிறது.
இந்த வழக்கு உண்மையிலேயே எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தப்போகும் வழக்குதான்" என்றனர்
ஒருபக்கம் எடப்பாடிக்கு ஆதரவானவர்கள் மீது வருமான வரித்துறை சோதனைகள் தடதடக்கின்றன. அவர் முகாமிலுள்ள சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை ஆரம்பமாகவிருக்கிறது.
இந்தச் சூழலில், "எடப்பாடியின் மீதும் சி.பி.ஐ விசாரணை தொடரப்பட்டால், அரசியல்ரீதியாக அவருக்குப் பின்னடைவுதான்" என்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்