"நாணயம்"

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சமீபகாலமாக தொடர்ச்சியாக சரிந்து கொண்டே வருகிறது. .

ஜூன் 29 நிலவரப்படி, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயானது 79.05 காசுகள் வரை சரிந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே ரூபாய் மதிப்பானது இந்த அளவுக்கு சரிந்தது கிடையாது.
 மார்ச் மாதத்தில் 77 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பானது தற்போது 79.05-யை தொட்டுவிட்டது. ரூபாய் மதிப்பானது மேலும் சரியக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பானது ஏன் தொடர்ச்சியாக சரிந்துக்கொண்டு இருக்கிறது? இதனால் யாருக்கு பாதிப்பு என்பதே நம் முன்னால் உள்ள கேள்வியாக அமைகிறது.
***
முதலாவதாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவிற்கு கூறப்படும் முக்கிய காரணம், அமெரிக்க மத்திய பெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு. பெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதால் இந்திய பங்குச் சந்தையில் உள்ள அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் முதலீடு செய்கிறார்கள்.
 இலாபம் அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமே அதற்கு காரணம்.
அமெரிக்க மத்திய பெடரல் வங்கியானது தற்போது வரை 1.5 டாலர் வட்டி அதிகரித்து உள்ளது. மார்ச் மாதத்தில் 0.25 டாலர், மே மாதத்தில் 0.5 டாலர், மற்றும் ஜீன் மாதத்தில் 0.75 டாலர் அதிகரித்துள்ளது. 
வருங்காலங்களில் வட்டி விகிதமானது இன்னும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதனால்தான் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். 
ஜீன் 23 புள்ளிவிவரப்படி, 40 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் ஜீன் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தையைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றன.
 ஜீன் மாதத்திலேயே இவ்வளவு தொகை என்றால் அதற்கு முந்தைய மாதங்களில் எவ்வளவு பணம் வெளியேறி இருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தாலே இந்திய பொருளாதாரத்தின் அவல நிலையை புரிந்துக்கொள்ள முடியும்.
அமெரிக்க மத்திய பெடரல் வங்கியானது ஏன் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும்? அமெரிக்காவின் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கமானது 8.6% வரை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையானது விண்னைமுட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. 
எனவே அமெரிக்க அரசானது பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும்போது, வங்கிகளில் கடன் வாங்கினால் அதிக வட்டி கட்ட வேண்டும் என நிர்பந்தம் ஏற்படும்.
 அதனால் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடன் வாங்க யோசிப்பர் அல்லது கடன் வாங்க மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளை கடன் வாங்கிதான் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
வட்டி அதிகரிக்கும்போது தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதைப் பெரும்பாலான மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள். முதலீட்டாளர்களும் புதிய திட்டங்களில் கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு தயங்குகிறார்கள்.
 எனவே சந்தையில் பெரும்பாலான பொருட்களுக்கான தேவைகள் குறைகிறது. 
பொருளாதாரத் தத்துவமானது (supply and demand) தேவை – அளிப்பு தத்துவத்தை பொறுத்து இயங்குவதால், பொருட்களுக்கான தேவை குறையும்போது பணவீக்கமும் குறைகிறது.
பணவீக்கத்தை மீண்டும் 2 சதவீதமாக கொண்டு வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என அமெரிக்க மத்திய பெடரல் வங்கியின் கொள்கைகளை வகுக்கும் திறந்த சந்தை குழு தெரிவித்துள்ளது. எனவே வட்டியானது மேலும் அதிகரிக்கப்படும். அதனால் இந்திய பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுவது தொடர்ந்து நடக்கும்.
 வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள் அந்நிய செலவாணியை கொண்டு செல்வதால் இந்திய அரசின் அந்நிய செலவாணி கையிருப்பு தொடர்ந்து குறையும்.
இரண்டாவதாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது தொடர்ந்து அதிகரிப்பது. உக்ரைன் – ரஷ்ய போரினால் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன் விலை ஏறிக்கொண்டே வருகிறது.
இந்தியாவானது கச்சா எண்ணெயை பொருத்தவரை 80% இறக்குமதியையே சார்ந்து உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும்போது, அதிக டாலர் கொடுத்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு ஏற்படுகிறது.
 இதனால் அந்நிய செலவாணியானது மேலும் கரைகிறது.
ரஷ்யாவானது குறைந்த விலையில், ரூபாய் – ரூபிள் பரிவர்த்தகத்தில் எண்ணெய் தரும்போது இந்தியாவானது அமெரிக்காவை மீறி வாங்கியதற்கு காரணம் ரஷ்ய – இந்தியா பரிவர்த்தனையில் டாலர் தேவையில்லை என்பதே ஆகும்.
இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வானது இந்திய அரசின் அந்நிய செலவாணிக் கையிருப்பை வெகுவாக குறைக்கிறது. 
அந்நிய செலவாணி கையிருப்பை பொறுத்தே நாணயத்தின் மதிப்பு தீர்மாணிக்கப்படுவதால் அதன் மதிப்பும் வெகுவாக குறைகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் யாருக்கு பாதிப்பு? பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கே. அம்பானி, அதானி போன்றவர்கள் ஒரு நிமிடத்தில் தங்கள் முதலீடுகளை வேறொரு நாட்டிற்கு மாற்றிவிடுவார்கள்.
 ஆனால் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் யாவும் உழைக்கும் மக்களின் முதுகின் மீதே ஏற்றப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்களின் விலையானது தாறுமாறாக உயரும், கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையானது மேலும் அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாய், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாய் மற்றும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள கேஸ் இணைப்புகளுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கியது எல்லாம் இந்திய ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட பணவீக்கத்தை குறைக்கவே.
மோடி அரசுக்கா மக்களின் மீது அக்கறை என்ற கேள்வி இயல்பாக எழலாம். 
ஜீன் இறுதியில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் அரிசி, கோதுமை மற்றும் மருந்துப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்ததன் மூலம் கேள்வி என்ற பேச்சுக்கே இடமில்லை, தாங்கள் முற்றிலுமாக மக்கள் விரோதிகள் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து விட்டார்கள்.
இலங்கை நிலையை நோக்கி இந்தியாவானது படிப்படியாக மெல்ல நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இலங்கை உழைக்கும் மக்கள் ராஜபக்சே கும்பலை எப்படி புறமுதுகிட்டு ஓட வைத்தார்களோ, அதேபோல் இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை உழைக்கும் மக்கள் ஓடஒட அடித்து விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
பாசிஸ்டுகள் பற்றி வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் ஒன்றே ஒன்றுதான் “பாசிஸ்டுகள் வீழ்வர், மக்களே வெல்வர்”.
-பிரவீன்
------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?