சனி, 29 பிப்ரவரி, 2020

நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை :

டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு போலீஸ்தான் முழுக் காரணம். அதற்கு நானே ஆதாரம்’ என்று பாஜகவின் கூட்டணி கட்சி எம்பியும், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகனுமான நரேஷ் குஜ்ரால் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

பஞ்சாப் சிரோன்மணி அகாலி தள் கட்சியின் மக்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால். இவர் பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
புதன்கிழமை (26-2-2020) இரவு 11.30 மணியளவில் இவருக்குத் தெரிந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உரையாடிய நபர் தானும் 15 முஸ்லிம்களும் வடகிழக்கு டெல்லியில் மவுஜ்புரில் உள்ள கோண்டா சவுக் என்னும் இடத்தில் வன்முறையாளர்களிடம் சிக்கியிருப்பதாகவும், உடனே உதவி புரியும்படியும் கதறியுள்ளார்.
செய்தி அறிந்து பதறிப்போன நரேஷ் குஜ்ரால் உடனடியாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, சூழலை விளக்கிச் சொல்லி, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை, எம். பி. நரேஷ் குஜ்ல் தெரிவித்த இடத்திற்கும் செல்லவில்லை. அவரது நண்பருக்கும் முஸ்லிம்களுக்கும் உதவியும் அளிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் குஜரால் தற்போது டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ‘நாடாளுமன்ற எம்.பி. யான நானே நேரடியாக போன் செய்து புகார் அளித்தும் அதற்கு இதுதான் கதி என்றால், காவல்துறையின் தயவில்லாமல் வன்முறை நிகழவில்லை என்பதுதான் உறுதியாகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியிலும், ‘அன்று 1984 ஆண்டில் நடந்ததைப் போல், இன்றும் காவல்துறையினர் சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்காமல் இருப்பதால்தான் அந்த மக்கள் அதிகம் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறையில் 38 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-------------------------------------------------------------
பாஜக எவ்வழி,ஆம் ஆத்மி அவ்வழி.

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை உத்தரப்பிரதேச அரசு அண்மையில் அமல்படுத்திய சூழலில், டெல்லி காவல்துறையும் தற்போது இதனை பின்பற்றி கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------+

நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை :


மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித்துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசியலமைப்பு சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியேற்று வந்தது.
ஆனால், மோடி ஆட்சியில் தமது கடமைகளை செய்யாமல் நீதித்துறை விலக்கிக் கொண்டதாகவும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதாகவும் முன்னாள் இந்நாள் நீதிபதிகள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வெளியான செய்திகளை விட நீதித்துறை குறித்து நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள் குறித்த தாக்கம் அதிகம். குறிப்பாக தங்களுடைய விவகாரங்களிலேயே நீதித்துறையால் தனது உறுதித்தன்மையைக் காட்ட முடியவில்லை. அதனால் மக்களும் தங்களின் பிரச்னைக்கு நீதிமன்றம் தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று பேசப்படுகிறது.
இதற்குத் தொடக்கப்புள்ளி மோடி அரசு தான். நீதித்துறையில் மோடி அரசின் தலையீடு குறித்து சில முக்கியமான நடவடிக்கைகளை மட்டுமே இந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு நீதிபதி லோயாவின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இல்லை.. இல்லை; தள்ளுபடி செய்ய வற்புறுத்தப்பட்டது.
யார் இந்த நீதிபதி லோயா?
கடந்த 2005-ம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பு வகித்தார். அப்போது குஜராத் காவல்துறையிடம் விசாரணைக் கைதியாக இருந்தவர் சொராபுதீன் ஷேக். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பா.ஜ.க அரசு என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொன்றது. அதுமட்டுமின்றி சொராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட இரு தினங்களிலேயே அவரது மனைவி கௌசர் பீவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
அப்போது போலி என்கவுன்ட்டர் மூலமே சொராபுதீன் மற்றும் துளசிராம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலைக்கு பின்னணியில் உள்துறை அமைச்சர் தலையீடு இருப்பதாகவும் அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வராக பதவி வகித்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் விசாரிக்கப்படவேண்டிய சூழல் எழுந்தது.
அதனால் வழக்கு குஜராத்துக்கு வெளியே மாற்றப்பட்டது. மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்திய நீதிபதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா தலைமையேற்று வழக்கை விசாரித்து வந்தார்.
பல வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் முறையாக ஆஜராகாமல் அமித்ஷா உள்ளிட்டோர் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாக்பூரில் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்ற நீதிபதி லோயா மரணமடைந்தார். அப்போது நீதிபதி லோயாவின் சகோதரி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு ‘தி கேரவன்’ இதழுக்கு பேட்டியளித்தார்.
அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த பொதுநல வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 19 தேதி அன்று நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி கன்வில்கர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பு வெளியான நாள் அன்றே, இது இந்திய நீதித்துறையில் கறுப்பு தினம் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்றம் சரியில்லை :
அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் உள்ள நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.
அதில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி செல்லமேஸ்வர் தாங்கள் பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதித்துறைக்கு மூத்த நீதிபதிகளான நாங்களே பொறுப்பு என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு பதவிக்காலத்தை நீதிபதி தீபக் மிஸ்ரா நிறைவு செய்தார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குப் பிறகு ரஞ்சன் கோகாய் அந்தப் பதவியை ஏற்றார். அதன்பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி புகார் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்தப் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாகவும், புகார் தொடர்பான அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் அவரை விடுவித்து, உச்சநீதிமன்ற விசாரணைக் கமிட்டி அறிவித்தது. அதுமட்டுமின்றி, புகார் தெரிவித்த 14 நாள்களுக்குள் அவசர அவசரமாக இந்த விசாரணை முடிக்கப்பட்டது.
மேலும், புகார் கொடுத்த பெண்ணுக்கு வாதாடவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. இப்படிப் பல சிக்கல் இந்தப் புகார் விசாரணையில் எழுந்தது. முன்னதாக பா.ஜ.கவினருக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் அவரை பழிவாங்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் முக்கிய வழக்குகளில் அவரது தீர்ப்பு மத்திய அரசுக்கு சாதகமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதன் காரணமாக, அவர் மீதான வழக்கு தள்ளுபடிக்கு பின்னால் மத்திய பா.ஜ.க அரசு இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு இறங்கியது என்பது குறிப்பத்தக்கது.
இதனையடுத்து புதிய நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது, தலைமை நீதிபதிகள் மீது சக நீதிபதிகள் புகார், நீதிபதிகள் மீது அதிருப்தி என நீதித்துறையின் மீது பல பிரச்னைகள் எழுந்த சமயத்தில், நீதிபதிகள் நியமனம் செய்வதில் சாதிய பாகுபாடுகள், பாரபட்சம் பார்க்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை மத்திய அரசு மாற்றியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீதித்துறையை பா.ஜ.க தலைவர்களை பாதுகாக்கவே பயன்படுத்துவதை விளக்குவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய நீதித்துறை மோடி அரசின் ஆட்சியில் முடக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நீதிபதி லோயா முதல் தற்போது முரளிதர் வரை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றவர்கள் மீது இந்த பா.ஜ.க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறது என நீதித்துறையைச் சார்ந்தவர்களே குற்றம்சாட்டுகின்றனர்.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

ஆன்மீக அரசியல்

தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்குப அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன.
இந்துக்கள் வீடுகளுக்கு அடையாளமாக காவிக் கொடிகள் கட்டியிருக்காங்க. கொடி இல்லாத வீடு மட்டும் குறிவச்சு தாக்கலாம்.
முன்னாடியே டிராக்டர்கள்ல லோடு லோடா கற்களை கொண்டு வந்திருக்காங்க.
உள்ளூர் ஆட்களைத்தவிர வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டாந்து இறக்கியிருப்பாங்க. ஜஸ்ட் 2 கிலோமீட்டர்ல உபி,
வெளியூர் ஆட்கள்தான் கலவரம் செய்யறதுக்கு வசதி.
தெரிஞ்சவன்னு யாரையும் விடவும் மாட்டான். நாளைக்கு மாட்டவும் மாட்டான்.
கலவரம் செய்யறதுக்கே பழக்கப்பட்ட கும்பல்.
டிரம்ப் வர்ற நேரத்துல மீடியா கவனம் பூராவும் அங்கேதான் இருக்கும்னு தெரிஞ்சே ப்ளான் போட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்கும் பெண்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரையிலும் அமைதியான போராட்டமாகவே நடந்து வந்திருக்கிறது.
அவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள் பாஜகவினர். இதைத்தூண்டி விட்டவர் பாஜவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா. சிஏஏ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி, சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு டிராக்டர்களில் கற்களைக் கொண்டு வந்து இறக்கி வைத்த வீடியோக்களும் வெளிவந்துள்ளன. சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை விரட்டியடித்து அதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நாங்களே அதைச் செய்வோம், டிரம்ப் போகட்டும் என்றுதான் விட்டுவைத்திருக்கிறோம் என்று பகிரங்கமாக போலீசுக்கு மிரட்டல் விட்டிருக்கிறார் கபில் மிஸ்ரா.
பாஜக பலத்த அடி வாங்கிய தில்லி தேர்தலில் தோல்வி கண்டவர்களில் இவரும் ஒருவர். தில்லி தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அடிக்கு பழிவாங்குவதும் ஒரு நோக்கமாக இருக்கலாம்
தில்லி போலீஸ் வழக்கம்போல பாஜகவினருக்கு ஆதரவாக, கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அவர்கள் கல்வீச்சு நடத்தியதால் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களும் திருப்பி கல்வீசியிருக்கிறார்கள். இப்போது “இருதரப்பும் மோதிக்கொண்டதாக” செய்திகள் வெளியிடப்படுகின்றன.
பொதுமக்களில் ஒருவரும் காவலர்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லா ஊடகங்களும் டிரம்ப்பின் பின்னால் இருப்பதால் செய்தி ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் இப்போதுதான் மெதுவாக வந்து கொண்டிருக்கின்றன. அதுவும்கூட சமூக ஊடகங்களில் வெளிவந்த காரணத்தால்தான்.
நிலைமை வருத்தம் தருவதாக கேஜ்ரிவால் அறிக்கை விட்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கவர்னர் சொல்கிறார்!
முஸ்லிம்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுவதும், அடையாளம் கண்டு தாக்குவதும் பாஜக ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பழகிப்போன விஷயம்.
நிலைமையைப் பார்த்தால், பழைய தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்துகள் இருப்பதாகவே தெரிகிறது. காவல்துறை மனச்சாட்சிப்படி செயல்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
-------------------+--------------------+

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில், தனது ஈஷா யோகா மையத்தில் கூட்டத்தைக் கூட்டி கல்லா கட்டுகிறது சர்ச்சைக்குரிய சாமியார் ஜக்கி வாசுதேவின் கும்பல்.

"பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தைச் சுற்றிவாழும் பழங்குடியின மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் வானளாவிய கட்டடங்களை எழுப்பிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆதாரப்பூர்வ புகார்கள் கொடுத்தாலும் ஆள்வோர் அதைக் கண்டுகொள்வதில்லை. சிவராத்திரி தியானம் என்ற பெயரில் அளவுக்கதிகமான ஒளி, ஒலியை எழுப்பி, வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும் தொடர்கதையாகி இருக்கிறது' என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும் பேசிய அவர்கள், "இதைத் தட்டிக் கேட்டுப் போராடும் பழங்குடியின மக்களை மிரட்டுவதற்காகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடியை சிவராத்திரி நாளில் ஈஷாவுக்குக் கூட்டிவந்து, தனது ஆளுமையை நிறுவினார் ஜக்கி. அதேபோல், இங்கு தன்னைப்போலவே கட்டி வைத்திருக்கும் ஆதியோகி சிலையை வியாபாரமாக்க, சினிமா நடிகைகளை ஆடவைத்தார். அப்படித்தான் ஒருமுறை தமன்னாவும், காஜல் அகர்வாலும் வந்து ஆடிவிட்டுப் போனார்கள்.

 
jakki


ஜக்கியும், நடிகைகளுமாக இப்படி சேர்ந்து போடும் ஆட்டத்தைப் பார்க்க, அலைமோதும் கூட்டத்திற்கு ரகரகமாக கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேடைக்கு நெருக்கமாக இருக்கும் கங்கா கேலரியில் இடம்பெற, தலைக்கு ரூ.50 ஆயிரம் கட்டவேண்டும். அடுத்த வரிசையான யமுனா கேலரிக்கு ரூ.20 ஆயிரமும், நர்மதா கேலரிக்கு ரூ.5 ஆயிரமும், கோதாவரிக்கு ஆயிரம் ரூபாயும் விதிக்கப்பட்டிருந்தது. கடைசி வரிசைக்கு காவிரி எனப் பெயரிட்டு, அதற்கும் ரூ.500 வசூல்செய்தே ஆட்களை அனுமதிக்கிறார்கள். இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்றார்கள்.
என்றார்கள்.

 
actress


இந்தமுறை, திரையுலகின் அட்ராக்ட்டிவ் நட்சத்திரத்தை இந்த விழாவிற்கு அழைத்து, அவர் வரமறுத்ததுதான் ஹாட் டாபிக் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆம், இளசுகளின் கனவுக் கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருக்கும் நயன்தாரா சிவராத்திரி விழாவிற்கு வந்தாலே கூட்டம் அமோகமாக கூடும். கரன்சிகளை அள்ளலாம் என்று ஜக்கி திட்டம் தீட்டினார்.

 
jakki


இதற்காக நயன்தாரா தரப்பை ஜக்கியின் ஆட்கள் அணுகினார்கள். நயனோ, "என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாது. நான் கேரளா திருவல்லா சிரியன் கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவள் என்றாலும், எந்த மத நிகழ்ச்சியையும் தவிர்த்தது கிடையாது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்திற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற எல்லா கோவில்களுக்கும் போயிட்டேன். போய்க்கிட்டும் இருக்கேன். அதனால, வேறெந்த நிகழ்ச்சியிலும் இப்போதைக்கு கலந்துகொள்ள முடியாது' என்று மறுத்திருக்கிறார்.

 
jakki


இதைக்கேட்டு கடுப்பான ஜக்கி தரப்பு.. "நாங்க யார்ன்னு தெரியுமா? நாங்க கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்ல எவ்வளவு தைரியம் வேணும்? பார்த்துக்கலாம்'' என்று மிரட்டி இருக்கிறது. அதன் பிறகுதான், அடுத்த சாய்ஸாக "டார்லிங்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நிக்கி கல்ராணியை தேர்வு செய்தார்கள். இவரும் ஜக்கியைப் போலவே கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில்தான் படித்தார். அதனால், கிறிஸ்தவத்தின் மேல் தனக்கிருக்கும் ஈர்ப்பைக் காரணம்காட்டி, அவரும் வர மறுத்திருக்கிறார். அவரை ஐ.டி. ரெய்டைக் காட்டி ஜக்கி தரப்பு மிரட்ட, வேறு வழியில்லாமல் ஈஷாவுக்குள் ஐக்கியமானார் நிக்கி. மத்திய அரசில் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காட்ட ஐ.டி.ரெய்டு என மிரட்டல் விடுவது சகஜமாகி விட்டது.
ஐ.டி.யைக் காட்டி நிக்கியை ஈஷா தரப்பு வளைத்ததுபோல, ஏன் நயன்தாராவை இழுக்கவில்லை என்று நாம் கேட்டபோது, "தன்னுடைய பவரைப் பயன்படுத்தி நயன்தாராவை ஐ.டி. ரெய்டில் சிக்க வைக்கலாம் என்று முதலில் ஈஷா கணக்குப் போட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் ரஜினியோடு நயன் ஜோடிபோட்ட "தர்பார்' படம் வெளியானதால், அவரை மிரட்டும் வகையில் ஐ.டி.யை இதில் இழுத்துவிட்டால் ரஜினியின் மேலிட செல்வாக்கை எதிர்கொள்ள நேரிடலாம் என நயன் மீதான வேகத்தை கொஞ்சம் பிரேக் போட்டு வைக்கலாம் என்று ஈஷா தரப்பு முடிவு செய்திருக்கிறது'' என்கிறார்கள்.

"துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைக்க, நடிகைகள் காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி ஆட்டம்போட, இந்த ஆண்டு சிவராத்திரியில் ஜக்கி வாசுதேவின் ஆட்டம் வழக்கத்தை விடவும் கூடுதலாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதுபற்றி விரிவாக நம்மிடம் பேசிய வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பன்னீர் செல்வம், "இந்த மகா சிவராத்திரி விழா நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானியை வைத்து நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு ஒரு அரசாணையை சத்தமில்லாமல் அனுப்பினார்கள்.

அந்த அரசாணையில், "அரசாங்கத்தின் அனுமதிபெற்ற மலைப்பகுதி இல்லாத இடங்களில், நகர் ஊரமைப்புத் துறையின் கூட்டு உள்ளூர் திட்டக் குழுமத்திற்கும், புறநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர்களுக்கும், மண்டல இணை இயக்குனருக்கும், நகர் ஊரமைப்பு இயக்குனருக்கும் எப்படி கட்டடங்கள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறதோ, அதேபோல மலைப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கும் சீக்கிரம் அனுமதி வழங்கப்படும். அப்படி மலையிடத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ள மலையிடப் பாதுகாப்புக் குழுவான HACAவின் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், மலைப்பகுதியில் கட்டடம் கட்ட, மாவட்ட அதிகாரிகள் மூலம் எல்லா அனுமதியையும் பெற்று விடலாம் எனும்போது, ஏற்கனவே அனுமதி இல்லாமல் கட்டடங்களை கட்டியெழுப்பி இருக்கும் ஈஷாவுக்கு இது உற்சாகம் தரும் அறிவிப்புதானே?

இது மட்டுமா? 15 ஆயிரம் சதுர அடிக்கு மேல் போனால் மட்டுமே HACA அனுமதி வாங்கவேண்டும் என்பதைக் கேட்டாலே நெஞ்சு பதறுகிறது. காரணம், அதே அரசாணையில், "அரசின் முழுமைத் திட்டம் உள்ள மலை இடங்களில் கனிம, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர், வனத்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் அனுமதி கேட்டு, ஒரு மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அனுமதி கொடுத்ததாக எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் அதிமுக்கியமாக, முழுமைத் திட்டம் இல்லாத மலை இடங்களில் நடைமுறைக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று சொன்னவர்கள், நகர்ப்புற பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு ஒரு ஹெக்டேர், ஊரகப்பகுதியில் இரண்டு ஹெக்டேருக்கு அதிகமாகும் பட்சத்தில் HACAவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதில்தான் ஈஷாவின் வேலைத் திட்டமே அடங்கியிருக்கிறது.

அதாவது, HACAவின் அனுமதியை யானை வழித்தடங்கள் இருக்கும் காட்டுக்குள்தான் பெறவேண்டும். அப்படி இருக்கையில், நகர்ப்புறத்தில் இருக்கும் மனையிடங்களுக்கு HACA அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? ஆக, ஈஷாவுக்காக எல்லா விதிமுறைகளையும் தளர்த்திக் கொடுத்து தங்களது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

முழுக்க முழுக்க மலை வாழ்விடப் பகுதிகளுக்கு எதிரான இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, பழங்குடியின சங்கத் தலைவியான முத்தம்மாள் மூலம் வழக்குத் தொடரப் போகிறோம். மக்களும், வன விலங்குகளும் வெல்வார்கள்'' என்றார் நம்பிக்கையுடன்.

இதற்கிடையில், இந்துத்வ மேடைகளில் அடிக்கடி தலைகாட்டும் அ.தி.மு.க.வின் ஒரே மக்களவை எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஈஷாவின் சிவராத்திரி இரவில் தென்பட்டார். அங்கே ஜக்கியின் கால்களைத் தொட்டுத் தழுவிய ஓ.பி.ஆர்., மோடியிடம் பேசி எனக்கொரு மினிஸ்டர் பதவியை வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதற்கு ஜக்கியிடம் இருந்து கிரீன் சிக்னல் வர, உற்சாகமாக சிவராத்திரியை அங்கு கழித்திருக்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்.

-மணிகண்டன்

திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஆர்.எஸ்.எஸ் ,ஆட்டம் ஆரம்பம்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது சிஏஏவுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாக கூறி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டப்பகுதியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  இந்த வன்முறையில் 3 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமைக்காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் காவல் ஆணையர் அமித்ஷர்மா மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதையடுத்து துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நிலையை ஆர்.எஸ்.எஸ்.&பாஜக வினர் மற்ற போராட்டக் களங்களிலும் செயல் படுத்த உள்ளதாக தகவல் வருகிறது.
-------------------+------------------+------------------
அண்டவியல் ஹாக்கிங் கடைசி ஆய்வு.8

அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், தனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தார்.
அவர் கடைசியாக எந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தார் என்பது சார்ந்த விவரங்கள் மர்மமாகவே இருந்தன. அந்த மர்மம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தை போன்றே இருக்கும் பல கிரகங்களை கொண்டு இருப்பதாகக் கூறுகிறது.
சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வுக்கட்டுரையானது, பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கிறது.
நாம் இருக்கும் பூமி, அந்த பூமி இருக்கும் சூரிய குடும்பம், அந்த சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம் (மில்கி வே கேலக்ஸி), அந்த பால்வெளி மண்டலத்தை சுற்றி இருக்கும் இதர பால்வெளி மண்டலங்கள் என எல்லாமும் சேர ஒரு பிரபஞ்சம் உருவாகும்.
அப்படியான பிரபஞ்சம் ஆனது தனியாக இல்லை, தன்னை போன்றே உள்ள பல நூற்றுக்கணக்கான பிரபஞ்சங்களை கொண்டுள்ளது என்று நம்புமொரு கோட்பாடு தான் - பேரலல் யுனிவர்ஸ் அல்லது மல்டிவெர்ஸ் (Multiverse).!
அங்கு உயிர்கள் நிச்சயமாக இருக்கலாம் அல்லது சுத்தமாக இல்லாமல் கூட போகலாம். ஏனெனில் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமான பிக் பேங்க் (Big Bang) வெடிப்பில் சிதறிய அத்துணை பிரபஞ்சங்களிலும் அணு உற்பத்தி ஆகியிருக்கும் என்று கூற முடியாது.
அணு இல்லையேல் மூலக்கூறுகள் இல்லை, மூலக்கூறுகள் இல்லை என்றால் நட்சத்திரங்கள் உருவாகி இருக்காது. நட்சத்திரங்கள் உருவாகவில்லை என்றால் நிச்சயமான கிரகங்கள் உருவாகி இருக்காது. கிரகங்கள் இல்லை என்றால் நிச்சயமாக உயிர்கள் இல்லை என்று தானே அர்த்தம்.
சரி ஒருவேளை, அணுக்கள் உருவாகி இருந்தால், அதன் வழியாக கிரங்கங்கள் உருவாகி இருந்தால், உயிர்களும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது தானே என்று கேட்டால் - ஆம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த உயிரினம் நம்மை போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.? அல்லது நம்மை மிஞ்சியதொரு உச்சத்தை அடைந்து இருக்குமா.? என்கிற கேள்விக்கு பதில் இல்லை.
இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை, 1980 களில் ஹாக்கிங் தேட தொடங்கினார். அவருக்கு துணையாக அமெரிக்க இயற்பியலாளர் ஆன ஜேம்ஸ் ஹார்டில் பணியாற்றினார்.
இந்த கூட்டணி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை உருவாக்கியது. அது, பிரபஞ்சம் ஆனது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்கிற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் இருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களை தீர்த்தது.
ஹார்டில் - ஹாக்கிங் கூட்டணியானது, குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற ஒரு கோட்பாட்டை பயன்படுத்தி, எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விளக்கியது.
அந்த புதிய விளக்கத்தை பகுப்பாய்வு செய்தபோது, ​​பிக் பேங் எனும் பெருவெடிப்பானது ஒரே ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை, முடிவில்லாத எண்ணிக்கையின் கீழ் பல பிரபஞ்சங்களை உருவாக்கி இருக்கும் என்கிற ஒரு உறுதிப்பாடு கிடைத்தது.
-----------+----------+-----------+------------
வாழ்வாதாரம்,பாதுகாப்பின்மை.
உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், லாண்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் 180 நாடுகளில் குழந்தைகளுக்கான நல்வாழ்வு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் பற்றியும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
40 குழந்தைகள் நல நிபுணர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்று, நிலைத் தன்மை மற்றும் செழிப்புக் குறியீடு ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த ஆய்வை நடத்தினர்.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், பிரசவ கால குழந்தை இறப்பு, குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், சுகாதாரம், தூய்மை மற்றும் தீவிர ஏழ்மை இல்லாமை, கல்வி வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுதந்திரம், வன்முறையில் இருந்து பாதுகாப்பு போன்றவையும் செழிப்புக் குறியீடுகளில் அடங்கும்.


“குழந்தைகள் வாழமுடியாத மோசமான நாடாக மாறிய இந்தியா”: மோடி ஆட்சியின் சாதனை இதுதானா? - அதிர்ச்சி தகவல்!
இதன்படி நிலைத்தன்மை குறியீட்டில், குழந்தைகளுக்கு உகந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய வாழ்வு ஆகியவை அடங்கு. அதன்படி, நிலைத்தன்மை குறியீட்டில் 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடமே கிடைத்துள்ளது.
அதேப்போல் செழிப்புத் திறன் குறியீட்டில், இன்னும் மோசமாக 131-வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த செழிப்புத் திறன் குறியீட்டு பட்டியலில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர் 12-வது இடத்தையும், சீனா 43-வது இடத்தையும், சிறிய நாடான இலங்கை 68-வது இடத்தையும் பெற்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
பாகிஸ்தான் 140-வது இடத்தையும், வங்கதேசம் 143-வது இடத்தையும் பெற்றுள்ளன. குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, நல்ல ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை வழங்கும் நாடுகள் பட்டியலில், நார்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்கொரியா இரண்டாவது இடத்தையும், நெதர்லாந்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆனால் மோடியின் கடந்த கால ஆட்சியில் இருந்து தற்போது வரை மக்கள் எல்லாவகையான சிரமங்களையும் சந்தித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

வெறும் 160 கிலோகள்தானாம்.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92,000 கோடி ரூபாய் AGR பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி, மோடியின் தயவால் சந்தைக்கு புதிதாக வந்த ஜியோ நிறுவனத்தால் ஏற்கெனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா, டாடா டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்தனர்.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
இதுதொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், பார்தி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் நிறுவனங்களின் சார்பாக மொத்தம் 10,000 கோடி ரூபாயும், வோடஃபோன் - ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தியது.
53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய வோடஃபோன் நிறுவனம் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் எனத் தெரியவில்லை. வோடஃபோன் நிறுவனம் ஒருவேளை தனது நிறுவனத்தை இந்தியாவிலிருந்து காலி செய்தால் அது, இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
ஒரு பெரும் தனியார் முதலாளியின் வீழ்ச்சி எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக் கேட்டால், அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகச் செயல்படும் வோடஃபோன் 37 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்த சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை காட்டியே எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதுதவிர, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்துஸ்தான் - IndusInd, ஐசிஐசிஐ - ICICI, ஹெடிஎப்சி - HDFC உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளனர்.
மேற்கூறியபடி வோடஃபோன் - ஐடியா திவாலானால் அதன் சொத்துகளை பறிமுதல் செய்து வங்கிகள் குறைவான தொகைக்கு ஏலத்தில் விடும். அந்த தொகை முழுமையான கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது கேள்விக்குறியே.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
அடுத்ததாக, மூடப்படும் இந்த நிறுவனத்தால் நேரடியாக 13,500 ஊழியர்கள் உடனடி வேலையிழப்பைச் சந்திப்பார்கள். இதைத் தவிர மறைமுகமாக ஏராளமானோரும் தங்களின் வேலையைப் பறிகொடுக்கவேண்டியது வரும்.
தற்போதுள்ள சூழலில் வோடஃபோன் திவால் நிலைக்குச் சென்றால், இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையும் 40 புள்ளிகள் கீழிறங்கிச் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு சந்தை 4 நிறுவனங்களாகச் சுருங்கியுள்ள நிலையில், மேலும் 2 நிறுவனங்களாகச் சுருங்கும். அதன் மூலம் ஜியோ நிறுவனம் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மேலும் ஏர்டெல் நிறுவனத்தினை காலி செய்யும் முயற்சிக்கும்.
ஒருவேளை 2 நிறுவனங்கள் மட்டும் சந்தையில் இருந்தால் தொலைத்தொடர்புத் துறையில் அந்த நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம். அந்த நிறுவனம் சொல்வதுதான் கட்டணம் என்றாகிவிடும். தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் என்ற அமைப்பே தேவை இல்லாமல் போகும்.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
தொலைத்தொடர்புத் துறையில் வேறு எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவிற்கு வராது. இது இந்தியாவிற்குக் கிடைக்கும் வருவாய் வளர்ச்சியை மேலும் சிதைக்கும். இந்த நிலைக்கு ஜியோவின் அசுர வளர்ச்சியே முழுமுதற் காரணம்.
மத்திய அரசின் உதவியுடன் பிரதமர் மோடியையே விளம்பர மாடலாக வைத்து களமிறங்கிய ஜியோ, பிற நிறுவனங்கள் அளித்துவந்த கட்டணத்தை தலைகீழாகத் திருப்பிப்போடும் அளவிற்குக் கட்டணத்தை பல மடங்கு குறைத்தது.
ஜியோ சேவை பிரதமர் மோடியினுடையது என்ற வகையிலேயே மறைமுகமாக விளம்பரம் செய்யப்பட்டதோடு, மத்திய அரசுடனான இணக்கத்தைப் பயன்படுத்தி ஜியோ, பல கோடி ரூபாயை வங்கியில் கடன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
அதுமட்டுமின்றி தனியார் நிறுவனமான ஜியோவிற்கு வழங்கிய சிறப்பு அனுமதியைக் கூட மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு இந்த அரசாங்கம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது, தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தவே பயன்படும் என்பதே உண்மை.
+--------+-------+---------+---------+
எல்ஐசி தனியார்மயமாகிறது 
என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது இயல்பானதே.
அரசின் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடியை, மக்கள் சேமிப்பிலிருந்து திரட்டித் தந்துகொண்டிருக்கிற ஒரு மாபெரும் நிறுவனம் அரசின் கையைவிட்டுப் போவது என்பது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்பதால் உறுதியான எதிர்ப்புடன் போராடி, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நடவடிக்கையே.
அதே நேரத்தில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படுகிற, ஏற்படுத்தப்படுகிற அச்சங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன. எல்ஐசியுடன் 23 தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கிற நிலையில், முக்கால் பங்கு(74.71 சதவீதம்) சந்தைப் பங்கினை எல்ஐசி கொண்டிருக்கிறது. அதாவது, தனியார் நிறுவனங்களின் சராசரி சந்தைப் பங்கு வெறும் 1.09 சதவீதம்.
தனியார் அனுமதிக்கப்பட்ட பிற துறைகள் அனைத்திலும் ஒரு சில ஆண்டுகளிலேயே, சந்தையின் மிகப்பெரிய பங்கினை கைப்பற்றிவிட்ட தனியார், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும், 20 ஆண்டுகளாக முயற்சித்தும் ஒரு சதவீதத்தைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது என்பதே, எல்ஐசியின் நம்பகத்தன்மைக்கு சான்று. அப்படியான நம்பகத்தன்மைகொண்ட நிறுவனத்துடன் போராட முடியாத நிலையில், அந்நிறுவனத்தை பலவீனப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இயல்பே.
அத்தகைய ஒரு முயற்சியே, சில நாட்களுக்கு முன் பரபரப்பையூட்டிய, எல்ஐசியின் வராக்கடன் பற்றிய செய்தியாகும். இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதை, பெரு முதலாளிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பல துறைகளும் அதனால் ஆட்குறைப்பு செய்வதையும் அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது. அப்படியான வீழ்ச்சியைச் சந்தித்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு, அவற்றுக்கு நிதியுதவி அளித்திருக்கிற வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிலும் வராக்கடனாக வெளிப்பட்டிருக்கிறது. எனவே, வராக் கடனுக்குக் காரணம் இந்த அரசு கடைப்பிடித்துக்கொண்டிருக்கிற பொருளாதாரக் கொள்கைகளே.
அப்படியான வராக் கடனைக்கூட, வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களின் வராக்கடனுடன் ஒப்பிட்டால், மிகக்குறைவாகவே இருக்கிறது என்பது ஒருபுறம். மறுபுறம், எல்ஐசி நிர்வகிக்கும் ரூ.31 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், சுமார் ரூ.30 ஆயிரம் கோடி என்பது, சதவீத அடிப்படையிலேயே மிகமிகக் குறைவு என்பதும் புரியும். ஆனாலும், ஏதோ எல்ஐசியே திவாலாகிவிடப் போவதுபோன்ற பதட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதைப் போன்றதொரு நடவடிக்கையே, தற்போது, எல்ஐசி தனியார்மயமாக்கப்பட்டு, 40 கோடி மக்களின் பணமும் பறிபோய்விடும் என்ற பிரச்சாரமும்.
இப்பிரச்சாரத்தைச் செய்வதன்மூலம், அதைச் செய்பவர்களே ஒரு செய்தியை ஒப்புக்கொள்கிறார்கள். அது, தனியாரிடம் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்காது என்பதுதான்.
அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.
எல்ஐசியின் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்று, பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு முயற்சிக்கிறது என்பதுதான் உண்மை. வெறும் ரூ.100 கோடி முதலீட்டைச் செய்த அரசிற்கு, லாபத்தில் பங்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.2610 கோடியைத் தருகிற ஒரு நிறுவனத்தை விற்பது, பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக, மாதம் மூவாயிரம் ரூபாய்க்குப் பால் கறக்கும், கறவை மாட்டை விற்பதுபோன்ற புத்திசாலித்தனமாகும்.
ஆனால், மாட்டை விற்றதும், மாடு வாங்கியவரிடம் சென்று விடுவதைப் போல, எல்ஐசியின் நிர்வாகம் மாறிவிடப்போவதில்லை. விற்கப்பட்ட பங்குகளுக்கான லாபப் பங்கையும், மக்களின் சேமிப்பிலிருந்து கிடைக்கும் நிதியையும் அரசு இழக்கப் போகிறது என்பது, அனைத்துப் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே. அதனால், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகிற இழப்பு, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின்மீது விழுந்த அடியாக, 134 கோடி மக்களின்மீதும் விழப்போகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்காக, 40 கோடிப் பாலிசிதாரர்களின் நிதியும் காணாமல் போய்விடுமா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக, டிசம்பர் 2019 நிலவரப்படி, ஸ்டேட் வங்கியின் 42.32 சதவீதப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் 57.68 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிற அரசுதான் இன்றும் அதன் உரிமையாளர். பங்கு விற்பனைக்குப்பின் ஸ்டேட் வங்கியில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியானால், எல்ஐசிக்குப் பாதிப்பே இல்லையா, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்? பாதிப்பு இல்லை என்று சொல்லவில்லை. பாதிப்பு எவ்வளவு, யாருக்கு என்பதெல்லாம்தான் மறைக்கப்பட்ட உண்மைகள்.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதால், இந்தியாவின் பொதுமக்களுக்குத்தான் முதல் பாதிப்பு. பாலிசிதாரராகப் பார்த்தால், தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகம் சென்றால், அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டால், தவறான நிர்வாகத்தால் இழப்பு ஏற்படலாம். 1994இல் முதல் பங்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டேட் வங்கியின் 40 சதவீதப் பங்குகளை விற்க கால் நூற்றாண்டு ஆகியுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே அரசு விற்பதாக அறிவித்திருக்கிற பல நிறுவனங்களை விற்காமல், சரியாகச் சொன்னால் விற்க முடியாமல் இருப்பதற்குக் காரணமே வாங்குமளவுக்கு சந்தையில் நிதிப்புழக்கம் இல்லாததுதான். சிறிய நிறுவனங்களுக்கே அதுதான் நிலை என்னும்போது, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை வாங்க நிதி வேண்டுமல்லவா?
அரசின் மற்ற நிறுவனங்களை விற்றபோது, எல்ஐசிதான் கணிசமான பங்குகளை வாங்கி உதவியது. அதாவது, எல்ஐசியிம் மட்டும்தான் அவ்வளவு நிதியிருந்தது. அப்படிப்பட்ட எல்ஐசியை வாங்க? அதனால், எல்ஐசியின் பங்குகளை விற்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், பண்ட பாத்திரங்களை விற்கும் குடிகாரனைப் போல இந்த அரசு, எதை விற்றாவது, அடிமாட்டு விலைக்கு விற்றாவது பற்றாக்குறையைச் சரிசெய்யவேண்டிய மிகமோசமான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதால், எப்படியாவது விற்க முயற்சி செய்யும் என்பதுதான் உண்மை. அந்த விற்பனை உடனடியாக எல்ஐசி வாடிக்கையாளர்களைப் பாதிக்கப் போவதில்லை.
ஆனால், 64 ஆண்டுகளில் எல்ஐசி ஒருமுறைகூடப் பயன்படுத்தியிராத, அரசு உத்தரவாதம் இல்லாமற்போகும். எல்ஐசிக்கு அரசு உத்தரவாதம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்படும். லாபத்தில் நிறுவனத்தின் உரிமையாளருக்கும், பாலிசிதாரருக்கும் வழங்கும் பங்கின் விகிதம் மாறுவதால், பின்னாளில் போனஸ் குறைக்கப்படலாம். இவற்றின்மூலம் அரசு உதவ முயற்சிப்பது தனியார் நிறுவனங்களுக்கே.
தனியார் முதலாளிகளிடம் நிதி வாங்கி, ஆட்சியைப் பிடித்தபின், அவர்களுக்காக, அரசின் நிறுவனங்களுக்கே கேடு விளைவிப்பதைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளினால், இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்படும் பாதிப்புகளைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு பறிபோய்விடும் என்பதான தப்புப் பிரச்சாரத்தைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
இவற்றை மட்டும் எதிர்ப்போம்!
என்ன நடந்தாலும்,
எங்கள் வாழ்வும், மக்கள் நலனும் என்றும் எல்ஐசியே!
என்றும் அதற்குத் துணை நிற்போம்.
முத்துக்குமாரசாமி.
  • எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 
  • இந்தி மட்டுமே அலுவல் மொழி?
  • ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அகிலஇந்திய மருத்துவ அறிவியல் கழகமான ‘எய்ம்ஸ்’ (AIIMS) நிறுவனத்தில், ஊழியர்கள் அனைவரும், இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அந்த மருத்துவமனையின் துணை இயக்குநர் பி.கே. ராய் உத்தரவு போட் டுள்ளார்.அதுமட்டுமன்றி, அலுவலக உத்தரவுகளை இந்தியிலேயே பிறப்பிக்க வேண்டும்; இந்தி மொழியிலேயே பதில்களை அளிக்க வேண் டும்; பதிவேடுகளையும் இந்தியிலேயே தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
    எய்ம்ஸ் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்திபேசாத மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களே அதிகம் பணியாற்றி வரும் நிலையில், பி.கே.ராயின் இந்த உத்தரவுக்கு ஒடிசா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தி தெரிந்தவர்களை மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஊழியர்களாகப் பணி அமர்த்துவதற்கான சதித் திட்டத்தின் முன்னோட் டமே இந்த நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.“மொழியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஒடிசாவாகும். எங்கள் தாய்மொழியை ஓரங்கட்டும் எவரையும், எந்தவொரு நிறுவனத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்று, பிஜூ ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த பூரி தொகுதி எம்.பி. பினாக்கி மிஸ்ராவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • _-----------------++++++++++-----------------+
  • நல்ல தீர்ப்புகள் இரண்டு.
இரண்டு உயர்நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இரு தீர்ப்புகள் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவ தற்கான அடிப்படை உரிமைகளை காலந் தாழ்த்தாமல் நேர்மையாக உயர்த்திப்பிடித்தி ருக்கின்றன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வாயம், மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் நகரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களை அனுமதித்ததற்கு எதிராக கூடுதல் மாவட்ட நடுவர் பிறப்பித்திருந்த ஆணையைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதற்கு இரு நாட்களுக்கு முன்பு, கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூரு காவல்துறையி னர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப்போராட்டங்கள் நடத்துவதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவின்கீழ் பிறப்பித்திருந்த தடை உத்தரவை, சட்டவிரோதமானது என்று கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  
உயர்மட்ட நீதித்துறையில் சில பிரிவுக ளும், ஏன், உச்சநீதிமன்றமும்கூட அரசமைப் புச்சட்ட உரிமைகளை உயர்த்திப் பிடிப்ப தில் ஒதுங்கிநின்று கொண்டு, தோல்வி அடைந் துள்ள நிலையில், இந்த இரண்டு தீர்ப்பு களும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
தேச விரோதிகள்,  தேசத் துரோகிகள் என்றழைக்கக் கூடாது
மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்கா பாத் அமர்வாயத்தில் நீதியரசர்கள் நாலாவதே, செவ்லிகார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் அளித்துள்ள தீர்ப்பு, கிளர்ச்சி செய்வதற்கு குடிமக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகள் எப்படி அமைதியான முறையிலும், சட்டப்பூர்வமாகவும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு நல்லதொரு படிப்பினையாகும். எல்லாவற்றிலும் முதலாவதாக. நீதிமன்றமா னது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரா கக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை, “தேசத் துரோகிகள் என்றோ, தேச விரோதிகள் என்றோ அழைக்கக்கூடாது” என்றும், “ஏனெனில் அவர் கள் ஒரு சட்டத்தை எதிர்க்க விரும்புகிறார்கள்” என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பில் மேலும், “நாம் அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களைப் பரிசீலனை செய்யும்போது, நம்முடைய அரசமைப்புச்சட்டம் மற்றும் சட்டங்கள் உரு வான வரலாறுகளையும் நினைவு கூர்வது அவசியம்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீதிமன்றம், ஒரு வரலாற்றுத் தொலை நோக்குப் பார்வையுடன் கிளர்ச்சி செய்வதற் கான சுதந்திரத்தை விளக்கியிருக்கிறது. “இந்தியா அஹிம்சைவழியில் அமைதியான முறையில் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்க ளின் வழியாகத்தான் சுதந்திரம் பெற்றது. அஹிம்சை என்னும் இந்தப் பாதை இன்று வரையிலும் நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பாலான வர்கள் அஹிம்சைப் பாதையில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது நம் அதிர்ஷ்டமாகும். இப்போது நம்முன் உள்ள பிரச்சனையிலும்கூட, மனுதாரர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தங்கள் எதிர்ப்பி னைக் காட்டுவதற்கு அமைதியானமுறையில் கிளர்ச்சி செய்வதையே விரும்புகிறார்கள்.”   
அதிகார வர்க்கம் மனதில் கொள்ள வேண்டியது
“குடிமக்கள் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக எய்தியுள்ள ஒரு குறிப்பிட்ட சட்டமானது தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல் என்று நம்புகிறபோது, அது குடி மக்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு எதிரானதாக இருக்கும்போது, அதனைப் பாதுகாக்கவேண்டியது தங்கள் கடமை என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பதை அதிகாரவர்க்கம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்வதற்கு அனுமதிக்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் வல்லமையைக் காட்டவேண்டிய சாத்தி யப்பாடுகள் எப்போதும் அங்கே இருக்கின்றன. இதன் விளைவு வன்முறை, குழப்பம், ஒழுங்கின்மை மற்றும் இறுதியாக நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்படும்”.   
மகாராஷ்டிராவில் பீட் நகரில் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்துவதற்கு,  கூடுதல் மாவட்ட நடுவரால் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறை  ஆய்வாளர் அனுமதி அளிக்க மறுத்ததை ஆட்சேபித்து பீட் நகரத்தைச் சேர்ந்த இப்தேகார் ஷேக் என்பவர் தொடுத்திருந்த மனுவை அனுமதித்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்திருக்கிறது. தீர்ப்பானது, அரசமைப்புச்சட்டத்தில் பொறிக் கப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை உரிமை களையும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள எந்தச் சட்டத்தையும் எதிர்த்திட அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளையும் மிகவும் சிறப்பானமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறது.
இது ஒரு மரணஅடி
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் கிளர்ச்சிப்போராட்டங்களை நசுக்குவதற்காக நாடு முழுதும் வகைதொகையின்றி குற்றவி யல் நடைமுறைச்சட்டத்தின் 144ஆவது பிரி வின்கீழான தடை உத்தரவு பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிரான ஒரு மரண அடியாகும். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில், ஒட்டு மொத்த மாநிலத்திலும் கிளர்ச்சிப் போராட்டங்க ளை நசுக்குவதற்காக 144 தடை விதிக்கப் பட்டிருந்தது. பெங்களூருவில், காவல்துறையி னர் டிசம்பர் 18 அன்று இப்பிரிவின்கீழ் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதன்மூலம், காவல்துறையினர் ஏற்கனவே டிசம்பர் 19 அன்று நகரத்தில் கிளர்ச்சிப் போராட்டங்க ளுக்கான பேரணிகள் நடத்துவதற்காக அளிக் கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தனர்.  கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதற் காக திரண்டவர்களை, வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உட்பட மக்கள் திரளை கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்திடுவோம். நீதிமன்றம், காவல்துறையினர் விதித்திருந்த 144 தடை உத்தரவை, சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. காவல்துறை யினர், இத்தகைய உத்தரவு பிறப்பிப்பதற் கான பொருண்மைகள் எதையும் தாக்கல் செய்ய வில்லை என்றும் “காவல்துறையினர் கிளர்ச்சிகளுக்கும், தொந்தரவுகளுக்கும் இடையேயிருக்கின்ற வித்தியாசங்க ளைப் பார்க்காமல் அவை இரண்டும் ஒன்றே என்பதுபோல் நடந்துகொண்டிருக்கின்றனர்,” என்றும் கூறியிருக்கிறது.
ஒரே இரவுக்குள் ரத்து ஏன்?
விசாரணையின்போது, அமர்வாயத்திற் குத் தலைமை வகித்த தலைமை நீதிபதி, நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு கிளர்ச்சிப் போராட்டமும் அமைதியைக் குலைத்திடும் என்று ஆட்சியாளர்கள் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என்றும், மற்றும் அமைதியான முறையில் கூடுவதற்கு அனுமதி அளித்துவிட்டு பின் ஒரேயிரவுக்குள் அதனை ரத்து  செய்தது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பி இருந்தார். குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் அனைத்து நிறு வனங்களையும் தங்களுக்கு உடந்தையாக, தங்களின் கைக்கூலிகளாக வசப்படுத்தியி ருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த இரு தீர்ப்பு ரைகளும் புதிய காற்றை சுவாசிப்பது போன்று இருக்கின்றன. அரசாங்கத்தை எதிர்ப்பவர்க ளுக்கு எதிராக, அல்லது, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகக் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்காத நாளே இல்லை. இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின் கீழான தேசத் துரோகக் குற்றப்பிரிவு, சட்டவிரோத நட வடிக்கைகள் தடைச்சட்டம் மற்றும் தேசப் பாது காப்புச் சட்டம் ஆகியவை மத்திய அரசாங்கம் மற்றும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்க ளின் கைகளில், தங்களுக்கு எதிராகப் பேசுகிற வர்களைத் தண்டிப்பதற்கான ஆயுதங்களாக மாறி இருக்கின்றன. கடந்த சில வாரங்களாக, பல்வேறு மாநிலங்களிலும் எண்ணற்ற தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக் கின்றன.   
அதிர்ச்சியளிக்கும் வழக்கு
இவற்றில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வழக்கு என்பது இரு பெண்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்காகும். குடியு ரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு பள்ளிக் கூடத்தில் நாடகம் ஒன்றை நடத்தினார்கள் என்றுகூறி, பிடார் (Bidar) என்னும் ஊரில் பெண் தலைமை ஆசிரியர் மீதும், ஒன்பது வயது குழந்தையின் அன்னையின் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அல்லது மோடி-அமித் ஷாவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக பேசுகின்றவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் வழக்கமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. கருத்துவேறுபாடுகளைத் தெரிவிப்பவர்க ளுக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவை பயன் படுத்துவது அப்பட்டமான சட்டவிரோதமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து 124-ஏ பிரிவை ரத்து செய்திட வேண்டுமென்று கோரிக் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயத்தில், உச்சநீதிமன்றமும் தேசத்துரோகப் பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைத்திடுவதற்குத் தலையிட வேண்டும். ஏனெனில், ஏற்கனவே இதே உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர் வாயமானது, கேதார்நாத் வழக்கில் அளித் துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வன்முறையை நேரடியாகத் தூண்டுவது மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மீது மட்டுமே இந்தப் பிரிவைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்திட முடியும்.
எமணி
----------------+++++++++------------+++++++++++
3350 டன் இல்லை.
வெறும் 160 கிலோகள்
தங்கம்தான்.
உத்தரபிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அது முழுக்க உண்மையில்லை என்று ஜிஎஸ்ஐ தெரிவித்துள்ளது.
உண்மை என்ன?
இது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில், 20 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.
பல விலை உயர்ந்த தாதுக்கள் இருக்கலாம்
மேலும் இந்த சுரங்கங்களில் தங்கத்தை தவிர இப்பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு கணித்தது போல அந்த இடங்களில் தங்கம் கிடைதால், அது மாநிலத்தின் வருவாய்க்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் பலபேருக்கு வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் என்றெல்லாம் கற்பனையில் கோட்டை கட்டப்பட்டது.
வெளியான தகவல் உண்மை அல்ல
ஆனால் ஏமாற்றம் அளிக்கும் விதமாக அப்படி எல்லாம் எதுவும் தங்கம் பெரியளவில் இல்லை என்று பெரிய பூசணிக்காயை போட்டு உடைத்தாற்போல் ஜிஎஸ்ஐ அறிவித்துள்ளது. உண்மையில் எதிர்பார்த்ததை போல 3,350 டன் தங்கம் இல்லையாம். மேலும் இவ்வாறு வெளியான தகவல் உண்மை அல்ல என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
160 கிலோ தங்கம் கிடைக்கலாம்
மேலும் இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவில் தங்கம் ஏதும் கண்டுபிடிக்கவில்லை, மாறாக வேறு தாதுக்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தாதுக்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்தால் வெறும் 160 கிலோ தங்கம் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் இது கூட தோராயமான அறிக்கை தானாம். பிரித்து எடுத்தால் தானே தெரியவரும். எது எவ்வளவு மதிப்புடையது என்று.