சனி, 29 பிப்ரவரி, 2020

நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை :

டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு போலீஸ்தான் முழுக் காரணம். அதற்கு நானே ஆதாரம்’ என்று பாஜகவின் கூட்டணி கட்சி எம்பியும், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகனுமான நரேஷ் குஜ்ரால் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

பஞ்சாப் சிரோன்மணி அகாலி தள் கட்சியின் மக்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால். இவர் பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
புதன்கிழமை (26-2-2020) இரவு 11.30 மணியளவில் இவருக்குத் தெரிந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. உரையாடிய நபர் தானும் 15 முஸ்லிம்களும் வடகிழக்கு டெல்லியில் மவுஜ்புரில் உள்ள கோண்டா சவுக் என்னும் இடத்தில் வன்முறையாளர்களிடம் சிக்கியிருப்பதாகவும், உடனே உதவி புரியும்படியும் கதறியுள்ளார்.
செய்தி அறிந்து பதறிப்போன நரேஷ் குஜ்ரால் உடனடியாக டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, சூழலை விளக்கிச் சொல்லி, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை, எம். பி. நரேஷ் குஜ்ல் தெரிவித்த இடத்திற்கும் செல்லவில்லை. அவரது நண்பருக்கும் முஸ்லிம்களுக்கும் உதவியும் அளிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் குஜரால் தற்போது டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ‘நாடாளுமன்ற எம்.பி. யான நானே நேரடியாக போன் செய்து புகார் அளித்தும் அதற்கு இதுதான் கதி என்றால், காவல்துறையின் தயவில்லாமல் வன்முறை நிகழவில்லை என்பதுதான் உறுதியாகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியிலும், ‘அன்று 1984 ஆண்டில் நடந்ததைப் போல், இன்றும் காவல்துறையினர் சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்காமல் இருப்பதால்தான் அந்த மக்கள் அதிகம் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறையில் 38 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-------------------------------------------------------------
பாஜக எவ்வழி,ஆம் ஆத்மி அவ்வழி.

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை உத்தரப்பிரதேச அரசு அண்மையில் அமல்படுத்திய சூழலில், டெல்லி காவல்துறையும் தற்போது இதனை பின்பற்றி கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------+

நீதிபதி லோயா முதல்... முரளிதர் வரை :


மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித்துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசியலமைப்பு சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியேற்று வந்தது.
ஆனால், மோடி ஆட்சியில் தமது கடமைகளை செய்யாமல் நீதித்துறை விலக்கிக் கொண்டதாகவும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதாகவும் முன்னாள் இந்நாள் நீதிபதிகள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வெளியான செய்திகளை விட நீதித்துறை குறித்து நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள் குறித்த தாக்கம் அதிகம். குறிப்பாக தங்களுடைய விவகாரங்களிலேயே நீதித்துறையால் தனது உறுதித்தன்மையைக் காட்ட முடியவில்லை. அதனால் மக்களும் தங்களின் பிரச்னைக்கு நீதிமன்றம் தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று பேசப்படுகிறது.
இதற்குத் தொடக்கப்புள்ளி மோடி அரசு தான். நீதித்துறையில் மோடி அரசின் தலையீடு குறித்து சில முக்கியமான நடவடிக்கைகளை மட்டுமே இந்தக் கட்டுரையில் தொகுத்துள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு நீதிபதி லோயாவின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இல்லை.. இல்லை; தள்ளுபடி செய்ய வற்புறுத்தப்பட்டது.
யார் இந்த நீதிபதி லோயா?
கடந்த 2005-ம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பு வகித்தார். அப்போது குஜராத் காவல்துறையிடம் விசாரணைக் கைதியாக இருந்தவர் சொராபுதீன் ஷேக். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பா.ஜ.க அரசு என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொன்றது. அதுமட்டுமின்றி சொராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட இரு தினங்களிலேயே அவரது மனைவி கௌசர் பீவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
அப்போது போலி என்கவுன்ட்டர் மூலமே சொராபுதீன் மற்றும் துளசிராம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலைக்கு பின்னணியில் உள்துறை அமைச்சர் தலையீடு இருப்பதாகவும் அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வராக பதவி வகித்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் விசாரிக்கப்படவேண்டிய சூழல் எழுந்தது.
அதனால் வழக்கு குஜராத்துக்கு வெளியே மாற்றப்பட்டது. மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்திய நீதிபதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா தலைமையேற்று வழக்கை விசாரித்து வந்தார்.
பல வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் முறையாக ஆஜராகாமல் அமித்ஷா உள்ளிட்டோர் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நாக்பூரில் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்ற நீதிபதி லோயா மரணமடைந்தார். அப்போது நீதிபதி லோயாவின் சகோதரி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு ‘தி கேரவன்’ இதழுக்கு பேட்டியளித்தார்.
அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த பொதுநல வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 19 தேதி அன்று நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி கன்வில்கர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பு வெளியான நாள் அன்றே, இது இந்திய நீதித்துறையில் கறுப்பு தினம் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்றம் சரியில்லை :
அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் உள்ள நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.
அதில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி செல்லமேஸ்வர் தாங்கள் பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதித்துறைக்கு மூத்த நீதிபதிகளான நாங்களே பொறுப்பு என்றும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு பதவிக்காலத்தை நீதிபதி தீபக் மிஸ்ரா நிறைவு செய்தார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குப் பிறகு ரஞ்சன் கோகாய் அந்தப் பதவியை ஏற்றார். அதன்பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி புகார் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்தப் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாகவும், புகார் தொடர்பான அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் அவரை விடுவித்து, உச்சநீதிமன்ற விசாரணைக் கமிட்டி அறிவித்தது. அதுமட்டுமின்றி, புகார் தெரிவித்த 14 நாள்களுக்குள் அவசர அவசரமாக இந்த விசாரணை முடிக்கப்பட்டது.
மேலும், புகார் கொடுத்த பெண்ணுக்கு வாதாடவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. இப்படிப் பல சிக்கல் இந்தப் புகார் விசாரணையில் எழுந்தது. முன்னதாக பா.ஜ.கவினருக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் அவரை பழிவாங்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் முக்கிய வழக்குகளில் அவரது தீர்ப்பு மத்திய அரசுக்கு சாதகமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதன் காரணமாக, அவர் மீதான வழக்கு தள்ளுபடிக்கு பின்னால் மத்திய பா.ஜ.க அரசு இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு இறங்கியது என்பது குறிப்பத்தக்கது.
இதனையடுத்து புதிய நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதிப்பது, தலைமை நீதிபதிகள் மீது சக நீதிபதிகள் புகார், நீதிபதிகள் மீது அதிருப்தி என நீதித்துறையின் மீது பல பிரச்னைகள் எழுந்த சமயத்தில், நீதிபதிகள் நியமனம் செய்வதில் சாதிய பாகுபாடுகள், பாரபட்சம் பார்க்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை மத்திய அரசு மாற்றியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீதித்துறையை பா.ஜ.க தலைவர்களை பாதுகாக்கவே பயன்படுத்துவதை விளக்குவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய நீதித்துறை மோடி அரசின் ஆட்சியில் முடக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நீதிபதி லோயா முதல் தற்போது முரளிதர் வரை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றவர்கள் மீது இந்த பா.ஜ.க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறது என நீதித்துறையைச் சார்ந்தவர்களே குற்றம்சாட்டுகின்றனர்.