வெறும் 160 கிலோகள்தானாம்.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92,000 கோடி ரூபாய் AGR பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி, மோடியின் தயவால் சந்தைக்கு புதிதாக வந்த ஜியோ நிறுவனத்தால் ஏற்கெனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா, டாடா டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்தனர்.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
இதுதொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், பார்தி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் நிறுவனங்களின் சார்பாக மொத்தம் 10,000 கோடி ரூபாயும், வோடஃபோன் - ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தியது.
53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய வோடஃபோன் நிறுவனம் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் எனத் தெரியவில்லை. வோடஃபோன் நிறுவனம் ஒருவேளை தனது நிறுவனத்தை இந்தியாவிலிருந்து காலி செய்தால் அது, இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
ஒரு பெரும் தனியார் முதலாளியின் வீழ்ச்சி எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக் கேட்டால், அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகச் செயல்படும் வோடஃபோன் 37 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்த சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை காட்டியே எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதுதவிர, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்துஸ்தான் - IndusInd, ஐசிஐசிஐ - ICICI, ஹெடிஎப்சி - HDFC உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளனர்.
மேற்கூறியபடி வோடஃபோன் - ஐடியா திவாலானால் அதன் சொத்துகளை பறிமுதல் செய்து வங்கிகள் குறைவான தொகைக்கு ஏலத்தில் விடும். அந்த தொகை முழுமையான கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது கேள்விக்குறியே.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
அடுத்ததாக, மூடப்படும் இந்த நிறுவனத்தால் நேரடியாக 13,500 ஊழியர்கள் உடனடி வேலையிழப்பைச் சந்திப்பார்கள். இதைத் தவிர மறைமுகமாக ஏராளமானோரும் தங்களின் வேலையைப் பறிகொடுக்கவேண்டியது வரும்.
தற்போதுள்ள சூழலில் வோடஃபோன் திவால் நிலைக்குச் சென்றால், இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையும் 40 புள்ளிகள் கீழிறங்கிச் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு சந்தை 4 நிறுவனங்களாகச் சுருங்கியுள்ள நிலையில், மேலும் 2 நிறுவனங்களாகச் சுருங்கும். அதன் மூலம் ஜியோ நிறுவனம் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மேலும் ஏர்டெல் நிறுவனத்தினை காலி செய்யும் முயற்சிக்கும்.
ஒருவேளை 2 நிறுவனங்கள் மட்டும் சந்தையில் இருந்தால் தொலைத்தொடர்புத் துறையில் அந்த நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம். அந்த நிறுவனம் சொல்வதுதான் கட்டணம் என்றாகிவிடும். தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் என்ற அமைப்பே தேவை இல்லாமல் போகும்.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
தொலைத்தொடர்புத் துறையில் வேறு எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவிற்கு வராது. இது இந்தியாவிற்குக் கிடைக்கும் வருவாய் வளர்ச்சியை மேலும் சிதைக்கும். இந்த நிலைக்கு ஜியோவின் அசுர வளர்ச்சியே முழுமுதற் காரணம்.
மத்திய அரசின் உதவியுடன் பிரதமர் மோடியையே விளம்பர மாடலாக வைத்து களமிறங்கிய ஜியோ, பிற நிறுவனங்கள் அளித்துவந்த கட்டணத்தை தலைகீழாகத் திருப்பிப்போடும் அளவிற்குக் கட்டணத்தை பல மடங்கு குறைத்தது.
ஜியோ சேவை பிரதமர் மோடியினுடையது என்ற வகையிலேயே மறைமுகமாக விளம்பரம் செய்யப்பட்டதோடு, மத்திய அரசுடனான இணக்கத்தைப் பயன்படுத்தி ஜியோ, பல கோடி ரூபாயை வங்கியில் கடன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!
அதுமட்டுமின்றி தனியார் நிறுவனமான ஜியோவிற்கு வழங்கிய சிறப்பு அனுமதியைக் கூட மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு இந்த அரசாங்கம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது, தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தவே பயன்படும் என்பதே உண்மை.
+--------+-------+---------+---------+
எல்ஐசி தனியார்மயமாகிறது 
என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது இயல்பானதே.
அரசின் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடியை, மக்கள் சேமிப்பிலிருந்து திரட்டித் தந்துகொண்டிருக்கிற ஒரு மாபெரும் நிறுவனம் அரசின் கையைவிட்டுப் போவது என்பது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்பதால் உறுதியான எதிர்ப்புடன் போராடி, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நடவடிக்கையே.
அதே நேரத்தில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படுகிற, ஏற்படுத்தப்படுகிற அச்சங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன. எல்ஐசியுடன் 23 தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கிற நிலையில், முக்கால் பங்கு(74.71 சதவீதம்) சந்தைப் பங்கினை எல்ஐசி கொண்டிருக்கிறது. அதாவது, தனியார் நிறுவனங்களின் சராசரி சந்தைப் பங்கு வெறும் 1.09 சதவீதம்.
தனியார் அனுமதிக்கப்பட்ட பிற துறைகள் அனைத்திலும் ஒரு சில ஆண்டுகளிலேயே, சந்தையின் மிகப்பெரிய பங்கினை கைப்பற்றிவிட்ட தனியார், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும், 20 ஆண்டுகளாக முயற்சித்தும் ஒரு சதவீதத்தைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது என்பதே, எல்ஐசியின் நம்பகத்தன்மைக்கு சான்று. அப்படியான நம்பகத்தன்மைகொண்ட நிறுவனத்துடன் போராட முடியாத நிலையில், அந்நிறுவனத்தை பலவீனப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இயல்பே.
அத்தகைய ஒரு முயற்சியே, சில நாட்களுக்கு முன் பரபரப்பையூட்டிய, எல்ஐசியின் வராக்கடன் பற்றிய செய்தியாகும். இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதை, பெரு முதலாளிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பல துறைகளும் அதனால் ஆட்குறைப்பு செய்வதையும் அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது. அப்படியான வீழ்ச்சியைச் சந்தித்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு, அவற்றுக்கு நிதியுதவி அளித்திருக்கிற வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிலும் வராக்கடனாக வெளிப்பட்டிருக்கிறது. எனவே, வராக் கடனுக்குக் காரணம் இந்த அரசு கடைப்பிடித்துக்கொண்டிருக்கிற பொருளாதாரக் கொள்கைகளே.
அப்படியான வராக் கடனைக்கூட, வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களின் வராக்கடனுடன் ஒப்பிட்டால், மிகக்குறைவாகவே இருக்கிறது என்பது ஒருபுறம். மறுபுறம், எல்ஐசி நிர்வகிக்கும் ரூ.31 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், சுமார் ரூ.30 ஆயிரம் கோடி என்பது, சதவீத அடிப்படையிலேயே மிகமிகக் குறைவு என்பதும் புரியும். ஆனாலும், ஏதோ எல்ஐசியே திவாலாகிவிடப் போவதுபோன்ற பதட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதைப் போன்றதொரு நடவடிக்கையே, தற்போது, எல்ஐசி தனியார்மயமாக்கப்பட்டு, 40 கோடி மக்களின் பணமும் பறிபோய்விடும் என்ற பிரச்சாரமும்.
இப்பிரச்சாரத்தைச் செய்வதன்மூலம், அதைச் செய்பவர்களே ஒரு செய்தியை ஒப்புக்கொள்கிறார்கள். அது, தனியாரிடம் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்காது என்பதுதான்.
அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.
எல்ஐசியின் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்று, பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு முயற்சிக்கிறது என்பதுதான் உண்மை. வெறும் ரூ.100 கோடி முதலீட்டைச் செய்த அரசிற்கு, லாபத்தில் பங்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.2610 கோடியைத் தருகிற ஒரு நிறுவனத்தை விற்பது, பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக, மாதம் மூவாயிரம் ரூபாய்க்குப் பால் கறக்கும், கறவை மாட்டை விற்பதுபோன்ற புத்திசாலித்தனமாகும்.
ஆனால், மாட்டை விற்றதும், மாடு வாங்கியவரிடம் சென்று விடுவதைப் போல, எல்ஐசியின் நிர்வாகம் மாறிவிடப்போவதில்லை. விற்கப்பட்ட பங்குகளுக்கான லாபப் பங்கையும், மக்களின் சேமிப்பிலிருந்து கிடைக்கும் நிதியையும் அரசு இழக்கப் போகிறது என்பது, அனைத்துப் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே. அதனால், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகிற இழப்பு, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின்மீது விழுந்த அடியாக, 134 கோடி மக்களின்மீதும் விழப்போகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்காக, 40 கோடிப் பாலிசிதாரர்களின் நிதியும் காணாமல் போய்விடுமா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக, டிசம்பர் 2019 நிலவரப்படி, ஸ்டேட் வங்கியின் 42.32 சதவீதப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் 57.68 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிற அரசுதான் இன்றும் அதன் உரிமையாளர். பங்கு விற்பனைக்குப்பின் ஸ்டேட் வங்கியில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியானால், எல்ஐசிக்குப் பாதிப்பே இல்லையா, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்? பாதிப்பு இல்லை என்று சொல்லவில்லை. பாதிப்பு எவ்வளவு, யாருக்கு என்பதெல்லாம்தான் மறைக்கப்பட்ட உண்மைகள்.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதால், இந்தியாவின் பொதுமக்களுக்குத்தான் முதல் பாதிப்பு. பாலிசிதாரராகப் பார்த்தால், தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகம் சென்றால், அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டால், தவறான நிர்வாகத்தால் இழப்பு ஏற்படலாம். 1994இல் முதல் பங்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டேட் வங்கியின் 40 சதவீதப் பங்குகளை விற்க கால் நூற்றாண்டு ஆகியுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே அரசு விற்பதாக அறிவித்திருக்கிற பல நிறுவனங்களை விற்காமல், சரியாகச் சொன்னால் விற்க முடியாமல் இருப்பதற்குக் காரணமே வாங்குமளவுக்கு சந்தையில் நிதிப்புழக்கம் இல்லாததுதான். சிறிய நிறுவனங்களுக்கே அதுதான் நிலை என்னும்போது, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை வாங்க நிதி வேண்டுமல்லவா?
அரசின் மற்ற நிறுவனங்களை விற்றபோது, எல்ஐசிதான் கணிசமான பங்குகளை வாங்கி உதவியது. அதாவது, எல்ஐசியிம் மட்டும்தான் அவ்வளவு நிதியிருந்தது. அப்படிப்பட்ட எல்ஐசியை வாங்க? அதனால், எல்ஐசியின் பங்குகளை விற்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், பண்ட பாத்திரங்களை விற்கும் குடிகாரனைப் போல இந்த அரசு, எதை விற்றாவது, அடிமாட்டு விலைக்கு விற்றாவது பற்றாக்குறையைச் சரிசெய்யவேண்டிய மிகமோசமான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதால், எப்படியாவது விற்க முயற்சி செய்யும் என்பதுதான் உண்மை. அந்த விற்பனை உடனடியாக எல்ஐசி வாடிக்கையாளர்களைப் பாதிக்கப் போவதில்லை.
ஆனால், 64 ஆண்டுகளில் எல்ஐசி ஒருமுறைகூடப் பயன்படுத்தியிராத, அரசு உத்தரவாதம் இல்லாமற்போகும். எல்ஐசிக்கு அரசு உத்தரவாதம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்படும். லாபத்தில் நிறுவனத்தின் உரிமையாளருக்கும், பாலிசிதாரருக்கும் வழங்கும் பங்கின் விகிதம் மாறுவதால், பின்னாளில் போனஸ் குறைக்கப்படலாம். இவற்றின்மூலம் அரசு உதவ முயற்சிப்பது தனியார் நிறுவனங்களுக்கே.
தனியார் முதலாளிகளிடம் நிதி வாங்கி, ஆட்சியைப் பிடித்தபின், அவர்களுக்காக, அரசின் நிறுவனங்களுக்கே கேடு விளைவிப்பதைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளினால், இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்படும் பாதிப்புகளைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு பறிபோய்விடும் என்பதான தப்புப் பிரச்சாரத்தைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
இவற்றை மட்டும் எதிர்ப்போம்!
என்ன நடந்தாலும்,
எங்கள் வாழ்வும், மக்கள் நலனும் என்றும் எல்ஐசியே!
என்றும் அதற்குத் துணை நிற்போம்.
முத்துக்குமாரசாமி.
  • எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 
  • இந்தி மட்டுமே அலுவல் மொழி?
  • ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அகிலஇந்திய மருத்துவ அறிவியல் கழகமான ‘எய்ம்ஸ்’ (AIIMS) நிறுவனத்தில், ஊழியர்கள் அனைவரும், இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அந்த மருத்துவமனையின் துணை இயக்குநர் பி.கே. ராய் உத்தரவு போட் டுள்ளார்.அதுமட்டுமன்றி, அலுவலக உத்தரவுகளை இந்தியிலேயே பிறப்பிக்க வேண்டும்; இந்தி மொழியிலேயே பதில்களை அளிக்க வேண் டும்; பதிவேடுகளையும் இந்தியிலேயே தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
    எய்ம்ஸ் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்திபேசாத மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களே அதிகம் பணியாற்றி வரும் நிலையில், பி.கே.ராயின் இந்த உத்தரவுக்கு ஒடிசா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தி தெரிந்தவர்களை மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஊழியர்களாகப் பணி அமர்த்துவதற்கான சதித் திட்டத்தின் முன்னோட் டமே இந்த நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.“மொழியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஒடிசாவாகும். எங்கள் தாய்மொழியை ஓரங்கட்டும் எவரையும், எந்தவொரு நிறுவனத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்று, பிஜூ ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த பூரி தொகுதி எம்.பி. பினாக்கி மிஸ்ராவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • _-----------------++++++++++-----------------+
  • நல்ல தீர்ப்புகள் இரண்டு.
இரண்டு உயர்நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இரு தீர்ப்புகள் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவ தற்கான அடிப்படை உரிமைகளை காலந் தாழ்த்தாமல் நேர்மையாக உயர்த்திப்பிடித்தி ருக்கின்றன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வாயம், மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் நகரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களை அனுமதித்ததற்கு எதிராக கூடுதல் மாவட்ட நடுவர் பிறப்பித்திருந்த ஆணையைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதற்கு இரு நாட்களுக்கு முன்பு, கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூரு காவல்துறையி னர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப்போராட்டங்கள் நடத்துவதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவின்கீழ் பிறப்பித்திருந்த தடை உத்தரவை, சட்டவிரோதமானது என்று கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  
உயர்மட்ட நீதித்துறையில் சில பிரிவுக ளும், ஏன், உச்சநீதிமன்றமும்கூட அரசமைப் புச்சட்ட உரிமைகளை உயர்த்திப் பிடிப்ப தில் ஒதுங்கிநின்று கொண்டு, தோல்வி அடைந் துள்ள நிலையில், இந்த இரண்டு தீர்ப்பு களும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
தேச விரோதிகள்,  தேசத் துரோகிகள் என்றழைக்கக் கூடாது
மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்கா பாத் அமர்வாயத்தில் நீதியரசர்கள் நாலாவதே, செவ்லிகார் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் அளித்துள்ள தீர்ப்பு, கிளர்ச்சி செய்வதற்கு குடிமக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகள் எப்படி அமைதியான முறையிலும், சட்டப்பூர்வமாகவும் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு நல்லதொரு படிப்பினையாகும். எல்லாவற்றிலும் முதலாவதாக. நீதிமன்றமா னது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரா கக் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை, “தேசத் துரோகிகள் என்றோ, தேச விரோதிகள் என்றோ அழைக்கக்கூடாது” என்றும், “ஏனெனில் அவர் கள் ஒரு சட்டத்தை எதிர்க்க விரும்புகிறார்கள்” என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பில் மேலும், “நாம் அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களைப் பரிசீலனை செய்யும்போது, நம்முடைய அரசமைப்புச்சட்டம் மற்றும் சட்டங்கள் உரு வான வரலாறுகளையும் நினைவு கூர்வது அவசியம்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீதிமன்றம், ஒரு வரலாற்றுத் தொலை நோக்குப் பார்வையுடன் கிளர்ச்சி செய்வதற் கான சுதந்திரத்தை விளக்கியிருக்கிறது. “இந்தியா அஹிம்சைவழியில் அமைதியான முறையில் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்க ளின் வழியாகத்தான் சுதந்திரம் பெற்றது. அஹிம்சை என்னும் இந்தப் பாதை இன்று வரையிலும் நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டு மக்களில் பெரும்பாலான வர்கள் அஹிம்சைப் பாதையில் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது நம் அதிர்ஷ்டமாகும். இப்போது நம்முன் உள்ள பிரச்சனையிலும்கூட, மனுதாரர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தங்கள் எதிர்ப்பி னைக் காட்டுவதற்கு அமைதியானமுறையில் கிளர்ச்சி செய்வதையே விரும்புகிறார்கள்.”   
அதிகார வர்க்கம் மனதில் கொள்ள வேண்டியது
“குடிமக்கள் விடுதலைப் போராட்டத்தின் விளைவாக எய்தியுள்ள ஒரு குறிப்பிட்ட சட்டமானது தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல் என்று நம்புகிறபோது, அது குடி மக்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு எதிரானதாக இருக்கும்போது, அதனைப் பாதுகாக்கவேண்டியது தங்கள் கடமை என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பதை அதிகாரவர்க்கம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்வதற்கு அனுமதிக்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் வல்லமையைக் காட்டவேண்டிய சாத்தி யப்பாடுகள் எப்போதும் அங்கே இருக்கின்றன. இதன் விளைவு வன்முறை, குழப்பம், ஒழுங்கின்மை மற்றும் இறுதியாக நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்படும்”.   
மகாராஷ்டிராவில் பீட் நகரில் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்துவதற்கு,  கூடுதல் மாவட்ட நடுவரால் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறை  ஆய்வாளர் அனுமதி அளிக்க மறுத்ததை ஆட்சேபித்து பீட் நகரத்தைச் சேர்ந்த இப்தேகார் ஷேக் என்பவர் தொடுத்திருந்த மனுவை அனுமதித்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்திருக்கிறது. தீர்ப்பானது, அரசமைப்புச்சட்டத்தில் பொறிக் கப்பட்டுள்ள குடிமக்களின் அடிப்படை உரிமை களையும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள எந்தச் சட்டத்தையும் எதிர்த்திட அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளையும் மிகவும் சிறப்பானமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறது.
இது ஒரு மரணஅடி
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெறும் கிளர்ச்சிப்போராட்டங்களை நசுக்குவதற்காக நாடு முழுதும் வகைதொகையின்றி குற்றவி யல் நடைமுறைச்சட்டத்தின் 144ஆவது பிரி வின்கீழான தடை உத்தரவு பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிரான ஒரு மரண அடியாகும். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில், ஒட்டு மொத்த மாநிலத்திலும் கிளர்ச்சிப் போராட்டங்க ளை நசுக்குவதற்காக 144 தடை விதிக்கப் பட்டிருந்தது. பெங்களூருவில், காவல்துறையி னர் டிசம்பர் 18 அன்று இப்பிரிவின்கீழ் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இதன்மூலம், காவல்துறையினர் ஏற்கனவே டிசம்பர் 19 அன்று நகரத்தில் கிளர்ச்சிப் போராட்டங்க ளுக்கான பேரணிகள் நடத்துவதற்காக அளிக் கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தனர்.  கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதற் காக திரண்டவர்களை, வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உட்பட மக்கள் திரளை கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்திடுவோம். நீதிமன்றம், காவல்துறையினர் விதித்திருந்த 144 தடை உத்தரவை, சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. காவல்துறை யினர், இத்தகைய உத்தரவு பிறப்பிப்பதற் கான பொருண்மைகள் எதையும் தாக்கல் செய்ய வில்லை என்றும் “காவல்துறையினர் கிளர்ச்சிகளுக்கும், தொந்தரவுகளுக்கும் இடையேயிருக்கின்ற வித்தியாசங்க ளைப் பார்க்காமல் அவை இரண்டும் ஒன்றே என்பதுபோல் நடந்துகொண்டிருக்கின்றனர்,” என்றும் கூறியிருக்கிறது.
ஒரே இரவுக்குள் ரத்து ஏன்?
விசாரணையின்போது, அமர்வாயத்திற் குத் தலைமை வகித்த தலைமை நீதிபதி, நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு கிளர்ச்சிப் போராட்டமும் அமைதியைக் குலைத்திடும் என்று ஆட்சியாளர்கள் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தார்கள் என்றும், மற்றும் அமைதியான முறையில் கூடுவதற்கு அனுமதி அளித்துவிட்டு பின் ஒரேயிரவுக்குள் அதனை ரத்து  செய்தது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பி இருந்தார். குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் அனைத்து நிறு வனங்களையும் தங்களுக்கு உடந்தையாக, தங்களின் கைக்கூலிகளாக வசப்படுத்தியி ருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த இரு தீர்ப்பு ரைகளும் புதிய காற்றை சுவாசிப்பது போன்று இருக்கின்றன. அரசாங்கத்தை எதிர்ப்பவர்க ளுக்கு எதிராக, அல்லது, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகக் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்காத நாளே இல்லை. இந்தியத் தண்ட னைச் சட்டத்தின் 124-ஏ பிரிவின் கீழான தேசத் துரோகக் குற்றப்பிரிவு, சட்டவிரோத நட வடிக்கைகள் தடைச்சட்டம் மற்றும் தேசப் பாது காப்புச் சட்டம் ஆகியவை மத்திய அரசாங்கம் மற்றும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்க ளின் கைகளில், தங்களுக்கு எதிராகப் பேசுகிற வர்களைத் தண்டிப்பதற்கான ஆயுதங்களாக மாறி இருக்கின்றன. கடந்த சில வாரங்களாக, பல்வேறு மாநிலங்களிலும் எண்ணற்ற தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக் கின்றன.   
அதிர்ச்சியளிக்கும் வழக்கு
இவற்றில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வழக்கு என்பது இரு பெண்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்காகும். குடியு ரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு பள்ளிக் கூடத்தில் நாடகம் ஒன்றை நடத்தினார்கள் என்றுகூறி, பிடார் (Bidar) என்னும் ஊரில் பெண் தலைமை ஆசிரியர் மீதும், ஒன்பது வயது குழந்தையின் அன்னையின் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அல்லது மோடி-அமித் ஷாவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக பேசுகின்றவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் வழக்கமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. கருத்துவேறுபாடுகளைத் தெரிவிப்பவர்க ளுக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவை பயன் படுத்துவது அப்பட்டமான சட்டவிரோதமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து 124-ஏ பிரிவை ரத்து செய்திட வேண்டுமென்று கோரிக் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயத்தில், உச்சநீதிமன்றமும் தேசத்துரோகப் பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைத்திடுவதற்குத் தலையிட வேண்டும். ஏனெனில், ஏற்கனவே இதே உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர் வாயமானது, கேதார்நாத் வழக்கில் அளித் துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வன்முறையை நேரடியாகத் தூண்டுவது மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மீது மட்டுமே இந்தப் பிரிவைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்திட முடியும்.
எமணி
----------------+++++++++------------+++++++++++
3350 டன் இல்லை.
வெறும் 160 கிலோகள்
தங்கம்தான்.
உத்தரபிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அது முழுக்க உண்மையில்லை என்று ஜிஎஸ்ஐ தெரிவித்துள்ளது.
உண்மை என்ன?
இது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில், 20 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.
பல விலை உயர்ந்த தாதுக்கள் இருக்கலாம்
மேலும் இந்த சுரங்கங்களில் தங்கத்தை தவிர இப்பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு கணித்தது போல அந்த இடங்களில் தங்கம் கிடைதால், அது மாநிலத்தின் வருவாய்க்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் பலபேருக்கு வேலை வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் என்றெல்லாம் கற்பனையில் கோட்டை கட்டப்பட்டது.
வெளியான தகவல் உண்மை அல்ல
ஆனால் ஏமாற்றம் அளிக்கும் விதமாக அப்படி எல்லாம் எதுவும் தங்கம் பெரியளவில் இல்லை என்று பெரிய பூசணிக்காயை போட்டு உடைத்தாற்போல் ஜிஎஸ்ஐ அறிவித்துள்ளது. உண்மையில் எதிர்பார்த்ததை போல 3,350 டன் தங்கம் இல்லையாம். மேலும் இவ்வாறு வெளியான தகவல் உண்மை அல்ல என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
160 கிலோ தங்கம் கிடைக்கலாம்
மேலும் இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவில் தங்கம் ஏதும் கண்டுபிடிக்கவில்லை, மாறாக வேறு தாதுக்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தாதுக்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்தால் வெறும் 160 கிலோ தங்கம் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் இது கூட தோராயமான அறிக்கை தானாம். பிரித்து எடுத்தால் தானே தெரியவரும். எது எவ்வளவு மதிப்புடையது என்று.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?