முடிவுக்கு வருகிறதா?

 ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.


இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார்.


சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர்


இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின் பின்னணியில் தந்தையும், மகனும் இருந்ததாக கூறப்படுகிறது.


வடசென்னையில் ஆம்ஸ்ட்ராங் - நாகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அதிகாரம், செல்வாக்குடன் இருந்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இருவருக்கும் மறைமுக பிரச்சினை ஏற்பட்டு, விரோதமாக வளர்ந்து வந்துள்ளது.


இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

.

நன்னடத்தை அடிப்படையில், அவர் விடுதலையாகும் சூழல்உருவான நேரத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசுவை திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் அழுத்தம் கொடுத்த நிலையில், இந்த கொலை வழக்கிலும் ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார்.


இதனால், அவர் விடுதலையாகும் வாய்ப்பு பறிபோனது.

இந்த சூழலில், நாகேந்திரன் மகனும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அஸ்வத்தாமன் கடந்த ஆண்டுமீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை பகுதியை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரரை துப்பாக்கிமுனையில் மிரட்டி ரூ.10 கோடி பறித்ததாக புகார்எழுந்தது.


இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் வந்த அஸ்வத்தாமனை ஆவடி மாநகர போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


இதுதவிர, கடந்த மக்களவை தேர்தலில் அஸ்வத்தாமனுக்கு எம்.பி. சீட் கிடைக்காமல் போனது.

இதற்கெல்லாம் ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்று கருதியதால் தந்தையும், மகனும் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர்.


தேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தான் இதில் நேரடியாக ஈடுபட முடியாது என்பதால், பொன்னை பாலு மற்றும் கூட்டாளிகளின் உதவியுடன் இதை செயல்படுத்தி உள்ளார் அஸ்வத்தாமன். நிழல் உலக தாதாவான சம்போ செந்திலிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.


சம்போ செந்தில் மீது 3 கொலை வழக்கு, வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் போனில் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்து வரும் அவரது இருப்பிடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.


கூலிப்படையினருக்கு ஹவாலா முறையிலேயே பணம் கைமாறியுள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


இந்நிலையில், சிறையில் இருக்கும் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் கைதுசெய்யப்பட உள்ளார். அதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!