வியாழன், 31 ஆகஸ்ட், 2017

நீல திமிங்கல சவால்

நீல திமிங்கல சவால்  (Blue whale Challenge) பல உயிர்களை கொல்லும் விபரீத விளையாட்டு. இது இணையதளத்தில் விளையாடப்படும் ஒரு அபாய விளையாட்டு.
 இது மனரீதியாக பாதிக்கப்படும் ஒரு விளையாட்டு. 

இது வரை இந்த விளையாட்டால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 
அயல்நாட்டில் தொடங்கி தற்பொது இந்தியாவிற்குள் ஊடுருவி பல மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது இந்த உயிர்கொல்லி  விளையாட்டு.


இது போனில் டவுன்லோட் செய்யும் மற்ற விளையாட்டுகள் போல அல்ல. 
இது சமூக வலைத்தளங்கள்  மூலம் ஒரு ரகசிய குழுவில் சேர்ந்து விளையாடப்படும் விளையாட்டாகும்
முதலில் ரஷ்ய சமூக வலைதளத்தில் துவங்கப்பட்டு இதுவரை ரஷ்யாவில் 133 பேரின் உயிரை எடுத்துள்ளது. இது 50 நாட்களுக்கு விளையாடப்படும்  விளையாட்டு.

இதில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரால் கொடுக்கப்படும் அபாய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். 

இறுதியாக 50-வது நாளில் விளையாடுபவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும். 
இந்த 50 நாட்களில் தங்களை தாமே காயப்படுத்தும் வகையில் விளையாட்டு அமையும். 

அதாவது இரவில் தனியாக பேய் படம் பார்ப்பது, உடம்பில் கத்தியால் நீல திமிங்கலத்தை வரைவது, கத்தியால் வெட்டுவது, மொட்டை மாடி சுவற்றில் நின்று பாட்டு கேட்பது போன்ற கட்டளைகளை போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

அது மட்டுமின்றி அவர்கள் செய்யும் அனைத்து விபரீத பணிகளை செல்பி வீடியோ எடுத்து இணையத்தில் போட வேண்டும். 
அதன் பின்னரே அவர்களுக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும். 
இந்த டாஸ்க் குகள் பிக் பாஸ் டாஸ்க் போன்று விளையாட்டுத்தனமாக இராது.உயிர்க்கொல்லி டாஸ்க்கள் .

இந்த அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றிய பிறகு இறுதியாக தற்கொலை டாஸ்க் கொடுக்கப்படும். 

இந்த விளையாட்டிற்கு அடிமையாகி பலர் தங்கள் உயிர்களை மாய்த்து கொள்கின்றனர், முக்கியமாக குழந்தைகள் மற்றும் மாணவர்கள்.

இந்த ப்ளூ வேல் விளையாட்டு கொடூரமான சவாலை போல இன்னும் பல சவால்கள்கொண்ட விளையாட்டுகள் இணையத்தில் உலவுகின்றன.

தனது சவாலை சந்தித்து திறமையை காட்டுவது போல் ஆரம்பமாகும் இந்த விளையாட்டுகள் கடைசியில் மனப்பாதிப்பை உண்டாக்கி கடைசி சவாலாக தற்கொலைக்கு தள்ளி விடுகின்றன.

அதாவது சோக்கிங் சவால், கழுத்தை நெரித்தல்; கோஸ்ட் பெப்பர் சவால், அதிக மிளகாயை வாயில் அடைத்து செல்பி எடுக்க வேண்டும்; சினமன் சவால், பட்டைத் தூளை தண்ணீர் குடிக்காமல் முழுங்க வேண்டும். 

இவை எல்லாம் உயிரை பறிக்கும்  அபாயமான சவால்கள் ,விளையாட்டுகள் ஆகும்.

2015-ல் இருந்து விளையாடி வரும் இந்த நீலத்திமிங்கல விளையாட்டு தற்பொழுது இந்தியாவில் பரவி வருகிறது. 
கடந்த 29 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 14 வயதான மாணவன், ப்ளூ வேல் சவாலை ஏற்று 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான். 

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஒரு மாணவன் இந்த விளையாட்டால் தற்கொலை செய்துள்ளான்.
தற்போது மதுரையில் ஒரு மாணவன் இவ்விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டதாக கொடூரமான செய்தி வந்துள்ளது.

அரசும் சமுக வலைதளங்களும் இதை தடுக்கம் முயற்சியில் ஈடுபட்டாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது மனதை  பாதித்து தற்கொலை செய்யத் தூண்டும்  விளையாட்டு. 

இந்த சமூகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத குழந்தைகள் எவரும் இல்லை. 
குழைந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க பெற்றோர்களே போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். 

நாகரீக வாழ்க்கையில் சிறு வயதிலே தனி அறை, தனி கைபேசி என சகலமும் கிடைத்துவிடுகிறது. இது போன்ற தனிமையே இது போன்ற விளையாட்டில் ஈடுபடக் காரணமாக அமையலாம். 

பொதுவாக போட்டியாளர்கள் ’yes’ என்று உடம்பில் ப்ளேடால் வெட்டி அதை புகைப்படம் எடுத்து அனுப்பிய பிறகே விளையாட்டில் இணைக்கப் படுவார்கள். 

உதட்டில் காயம் மற்றும் உடம்பில் வெட்டு காயம் போன்றவற்றை பார்த்தால் உடனே நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நடு இரவில் தூங்காமல் இருத்தல், வினோதமான பாடல் ஏதேனும் கேட்டால் உடனே அதை நிறுத்த வேண்டும்.


பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது குழந்தைகளை கண்காணித்து இது போன்ற விளையாட்டிற்கு அவர்கள் அடிமை ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

அவர்கள் தனிமையை விரும்பினால் உடனடியாக அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். 
இது மன அழுத்தத்திலும், தனிமையில் இருக்கும் சிறுவர்களை அபாய விளையாட்டுகளில் இருந்து காக்க உதவும்.


கூடுதல் விலை மின்சாரம்

மாநில மின் விநியோக நிறுவனங்கள் காற்றாலை மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமலிருப்பதால், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் இரண்டாண்டுகளாக அடைந்த வளர்ச்சி தடைப்பட்டிருப்பதாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய சூரிய சக்திக் கழகம் நடத்திய ஏலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.46 என்ற விலையில் தர நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. 

அதனால், ஒரு யூனிட் ரூ.4.60 என்ற பழைய விலையில் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்ய மாநில மின் விநியோக நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 

இதனால், தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால், கூடுதல் விலைக்கு வாங்க மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நெருக்குதல் கொடுக்கிறது.

சூரியசக்தி அல்லாத புதுப்பிக்கத்தக்க சக்திகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை உற்பத்தியாளர்கள் நிறுத்திவிடுவார்கள்என்றும், இதனால் இந்த மின் உற்பத்தியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பானு பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.

(கூடுதல் விலைக்கு) மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்களைத் தடுக்கக்கூடாது என்று மாநில மின் ஒழுங்குமுறை ஆணையங்களை எச்சரிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தனியார் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலஅரசுகளுக்கு மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இந்த நெருக்குதலை மத்திய அரசு கொடுத்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்கு, மாநிலஅரசுகள் விற்பனை வரி, மதிப்புக் கூட்டும்வரி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டாலும், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்று மத்திய அரசுஅறிவித்திருந்தது. 

அதனால், இவற்றுக்கு பழைய அனைத்து வரிகளும் வசூலிக்கப்படுகின்றன. 
மின்சாரம், உரங்கள், பிற பெட்ரோலிய வேதிப் பொருட்கள் தயாரிப்பில் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோல்முதல், நாஃப்தா வரை கச்சா எண்ணெய்யிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மூலப்பொருட்களுக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி அல்லாத வரிகளை, உற்பத்திப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து கழித்துக் கொள்ள முடியாது. 
அதனால், இவை தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை அதிகரிப்பதால், மாநிலஅரசுகள் வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நிதியமைச்சர்அருண் ஜெட்லி மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரட்டைப் பாலியல் வன்குற்ற வழக்கின் கிரிமினல் குற்றவாளியான குர்மீத் சிங்கிற்கு ஆதரவாக ஒட்டு மொத்த பாஜக கும்பலும் களத்தில் இறங்கியுள்ளது.

இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் பாஜக தலைவர் அமித்ஷா.சாமியார் மீது குற்றம் இல்லை; அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் மீதுதான் குற்றம் என்று கூறியிருக்கிறார்.தீர்ப்பு நாளன்று கலவரம் வெடிக்கும் என்று தெரிந்தே மெளனமாக இருந்தார் ஹாரியானா மாநில பாஜக முதலமைச்சர் கட்டார். அதேசமயம் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், குற்றவாளி சாமியாருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். சிபிஐ நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். 

பாஜகவின் முதலமைச்சர் சாமியாரின் ஆதரவாளர்கள் கூடுவதையும். அவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதையும் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கவில்லை. 
மாநில அரசு இயந்திரத்தையும் முடக்கிவிட்டு மௌனமாக இருந்துவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் வேதனையடைந்தேன் என்று மட்டும் குறிப்பிடுகிறார். தேசத்தின் தலைநகரை அடுத்து உள்ள ஹரியானாவை கட்டுக்குள் கொண்டு வர பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ உடனடியாக தலையிடவில்லை.கள்ளச் சாமியாரான குர்மீத்சிங்கிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? 
பாஜகவின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. 

இந்த பின்புலத்தைத் தான் நாம் அறிய வேண்டியுள்ளது.
ஹரியானா மாநில பாஜக, தேரா சச்சா சவுதா அமைப்புடன் மிக நெருக்கமான உறவு வைத்து வருகிறது. ஹரியானா மாநில கல்வியமைச்சர் ராம் பிலாஸ் சர்மா இன்னும் மேலே போய், 144 தடை உத்தரவு சாமியாரின் ஆதரவாளர்களுக்கு பொருந்தாது என்று பகிரங்கமாக சொல்கிறார்.
குர்மீத்துடனான மேற்படி கல்வி அமைச்சரின் தொடர்பு மிகவும் வெளிப்படையானது. சமீபத்தில் சாமியாருக்கு 51 லட்சம் ரூபாயை அரசு சார்பில் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சரை அடுத்து சாமியாருக்கு மிக நெருக்கமாக இருப்பவர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ். இவர் மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ரூபாயை தேரா நிர்வாகத்தின் விளையாட்டு திட்டத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.ஹரியானா மாநில அச்சுமற்றும் ஸ்டேசனரி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் மனிஸ் குரோவர்,தேரா மடத்திற்கு 11 லட்சம் ரூபாயை தனது அமைச்சக நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கினார்.

அரசாங்க நிதியினை தனிப்பட்ட சாமியாருக்கு தங்களுடைய அரசியல் தேவைக்காக பாஜக வாரி வழங்கியுள்ளது.
இவர்கள் இந்த நன்கொடைகளை வழங்கும் போது சாமியார் மீது பாலியல் வழக்கு நடைபெற்று வருவதை அறிந்தவர்களே.பாஜகவின் மத்திய தலைமையும் மேற்படி கள்ளச்சாமியாருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. 

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், தேரா நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளார். 

2014இல் நடைபெற்ற ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலின் போது சிர்சா பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மோடி, பாலியல் வழக்கில் சிக்கியிருந்த சாமியாரை மிக வெளிப்படையாகவே புகழ்ந்து பேசியுள்ளார்.

 இதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் அகாலிதள கட்சி தலைவர்கள் மறைமுகமாக சாமியாரை சந்தித்து வந்தனர், பேசியும் உள்ளனர். ஆனால் பாஜகவும், மோடியின் ஆட்களும் நேரடியாகவே அவருடன் கைகோர்த்துக் கொண்டனர்.
கள்ளச்சாமியாரும் முதல் முறையாக ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை நேரடியாக கேட்டுக்கொண்டதும் நடைபெற்றது. 

இதற்கு முன்பு இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு அவர் வாக்கு கேட்டதில்லை.கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தில்லியில் அமித் ஷா - ராம் ரஹிம் சந்திப்பு நடந்துள்ளது. இந்தசந்திப்பின்போது 2019இல் நடைபெறவுள்ள ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் சாமியாரின் ஆதரவு தேவை என்று கோரியுள்ளார்.

அமித்ஷாவை சந்தித்து வந்த சில நாட்களிலேயே பாஜகவின் பொதுசெயலாளர் கைலாஷ்விஜய்வர்கியா 44 பாஜக வேட்பாளர்களுடன் சாமியாரை சந்தித்துள்ளார். சாமியாரும் வேட்பாளர்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.மோடிஅரசு சாமியாரை தனது தூய்மை பாரத இயக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறது.

இதுபற்றி மோடி தனது டுவிட்டர் பதிவில், பாபா ராம் ரஹிம்ஜி யும் அவரது ஆதரவாளர்களும் வெகு சிறப்பானமுயற்சிகளை மேற்கொள்கிறார்கள். 

அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள அவர்களது ஆதரவாளர்களை தூய்மை பாரத திட்டத்திற்கு இணைக்கிறார்கள். ( 28.10.2014) எனப் பதிவு செய்துள்ளார்.பாஜகவை பொறுத்தளவில்,குர்மீத் ராம் ரஹீம் சிங், அக்கட்சிக்கு ஒரு மதிப்புமிக்க கூட்டாளி. ஒரு கோடிப் பேரைக் கொண்ட தேரா அமைப்பில் பெரும்பாலானோர் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களே. 

அவர்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி, தன்னைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக் கொண்டகுர்மீத் சிங், தன்னைப் போற்றும் மக்கள் கூட்டத்தை, பாஜகவுடன் பேரம் பேசி, வாக்கு வங்கியாக மாற்றிவிட்டார்.

2019இல் நடைபெறயிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானா மற்றும்பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்களை பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றிட தொடர்ந்து அவருடன் நெருக்கமான தொடர்புகளை பாஜக தலைவர்கள் வைத்து வருகின்றனர். 

தேரா அமைப்புடன் பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக தொடர்புகளை கொண்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ், தேரா அமைப்பை பயன்படுத்தி சமூக ரீதியாக அவர்களின் ஆதரவாளர்களை திரட்ட திட்டமிட்டுள்ளது. 

தேரா அமைப்புடன் இணைந்து பல ஆண்டுகளாக ராதா சோவமி சத்சங் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது.தேரா அமைப்பானது சீக்கிய தலித் மக்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. இவர்கள் சாதி ஆதிக்க சீக்கியர்களால் மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

இதைப்பயன்படுத்தி தலித் சீக்கியர்களை இந்து மதத்திற்கு மாற்றும் வேலையினை தேரா மூலமாக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வருகிறது.சீக்கிய மதத்திற்குள் நிலவும் சாதிய முரண்பாட்டை ஆர்எஸ்எஸ் தனது மதவாத அரசியலுக்காக பயன்படுத்தவே விரும்புகிறது. 

ஆர்எஸ்எஸ்சின் இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதற்கான முறையில் அதன் தலைவர் மோகன் பகவத் தெற்கு பஞ்சாப்பில் உள்ள மான்சாவிற்கு 2014ஆம் ஆண்டில் பல முறை வருகைதந்து நேரம் செலவழித்துள்ளார்.

பஞ்சாப் - ஹரியானா சமூக அரசியல் தளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் தேரா அமைப்புக்கள் ஒரே வழியில் கரம் கோர்த்துள்ளன.கலவரம் நடந்தாலும் ஹரியானா முதல்வர் கட்டார் வேடிக்கை பார்த்ததன் பின்னணி இதுதான்!

=====================================================================================

ன்று,
ஆகஸ்ட்-31.
 • மலேசிய விடுதலை தினம்(1957)
 • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
 • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)
=====================================================================================

தற்போது வருகின்ற  கோபமூட்டும் செய்திகளாக படித்து இருக்கும் தங்கள் மண் இளைப்பாறலுக்கு.கீழே சுழலும் கரு வளையத்தை ஒரு 30 நொடிகள் பார்த்து விட்டு அதன்பின் அதன் கீழ்   உள்ள படத்தையோ ,ஆந்தை படத்தையோ ,அல்லது உங்கள் உள்ளங்கையையோ  பாருங்கள்.
புதன், 30 ஆகஸ்ட், 2017

ஒளி வட்டங்களுக்கு பின்னால்

கிரிமினல் சாமியார்கள் .


எந்தவொரு மத நம்பிக்கையின் பெயராலும் வன்முறை நிகழ்த்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி வள்ளுவரின் வழிநின்று கடிதோச்சி மெல்ல எறிந்துள்ளார். 

காமக் கொடூர சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை மனதில் வைத்துக் கொண்டு பிரதமர் இவ்வாறு மனதின் குரலில் பேசியுள்ளார் என்று ஊடகங்கள் பொழிப்புரை எழுதியுள்ளன. 
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற ஆசாமி மீதான பாலியல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் 38 பேர் பலியானார்கள்.

இரு ஐபிஎஸ் அதிகாரிகள், 60 பாதுகாப்புப் படையினர் உட்பட 360 பேர் படுகாயமடைந்தனர். 
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் பற்றி எரிந்தன. அப்போதெல்லாம்வன்முறையாளர்களை கண்டித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட கூறாமல் சகித்துக் கொண்டேஇருந்துவிட்டார். 


இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இப்போது பொத்தாம்பொதுவாக பேசியுள்ளார் பிரதமர். 
இவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், குர்மீத் ராமின் சக சாமியாருமான சாக்சி மகராஜ் இது இந்து மதத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறார். 

மத்திய அமைச்சர்கள் உட்பட ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த பலருக்கு வாய் என்ற ஒரு உடலுறுப்பு இருப்பதே மறந்து போய்விட்டது. 

குர்மித் ராமிற்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
குற்றவாளி என்று அறிவித்ததற்கே பெரும் வன்முறையில் ஈடுபட்டவர்களை தற்போது மத்திய, மாநில பாஜக அரசுகள் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

கிரிமினல் பின்னணி கொண்ட தேரா சச்சா சவுதா சாமியார் தண்டிக்கப்பட்டால் பெரும் வன்முறை வெடிக்கும் என்று ஹரியானா மாநில பாஜக அரசுக்கு நன்கு தெரியும். 

எனினும் நீதிமன்றத்திற்கு கிரிமினல் சாமியார் 200 கார்கள் பின்தொடர ராஜ உலா போல செல்ல அனுமதிக்கப்பட்டார். 
பாலியல்வன்புணர்வு வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய சீடர்கள் என்று கூறிக்கொள்ளும், குண்டர்கள் 2 மாநிலசட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர்.

ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது. மத்திய அரசும், ஹரியானா மாநில கட்டார் அரசும் வேடிக்கை பார்த்தன.
அரசியல் லாபத்திற்காக ஹரியானா மாநிலத்தைதீக்கிரையாக்கிவிட்டீர்கள் என்றும் வன்முறையாளர்களிடம் மாநில அரசு சரணடைந்துவிட்டது என்றும்மாநில உயர்நீதிமன்றம் கட்டார் தலையில் ஓங்கி குட்டியது. மோடி இந்தியாவின் பிரதமர். 

பாஜகவின் பிரதமர் அல்ல என்றும் நீதிமன்றம் சாடியது. 
2002ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு குர்மீத் ராம் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் துறவி கடிதம் எழுதியுள்ளார்.
தன்னுடைய பெயரை குறிப்பிட்டால் உயிருக்கு ஆபத்து நேரும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ள அவர் தன்னுடைய குடும்பமே குர்மீத் ராமின் பக்தர்கள் என்பதால் தன்னை துறவியாக்கி ஆசிரமத்தில் சேர்த்து விட்டதாக கூறியுள்ளார். 

ஒருநாள் குர்மீத் ராம் தன்னை பாதாள அறைக்கு அழைத்து தனக்கு விருப்பமான பெண் துறவியாக அவரை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது தொலைக்காட்சியில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்ததாகவும் குர்மீத் ராமின் தலையணை பக்கத்தில் கைத்துப்பாக்கி இருந்ததாகவும் அந்த பெண் துறவி கடிதத்தில் கூறியுள்ளார். 

போலிச் சாமியாரின் உண்மை உருவத்தை அறிந்து அதிர்ச்சியான அவர் தாங்கள் இவ்வாறு செய்யலாமா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த ஆசாமி நான் தான் கடவுள். கடவுளான கிருஷ்ணன் 360 கோபியர்களோடு கொஞ்சி மகிழ்ந்ததை குறித்துகுறிப்பிட்டு தானும் அப்படித்தான் என்றுள்ளார். தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுக்குஉட்படுத்தியதாகவும் அந்த ஆசிரமத்தில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெண்கள் பாபாவினால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்தான் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் அனைவருமே தன்னுடைய சீடர்கள்தான் என்றும் அவரை எதிர்த்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன்என்றும் சாமியார் மிரட்டியுள்ளார். மாதத்திற்கு ஒருமுறை தனக்கு சாமியாரிடமிருந்து அழைப்பு வரும்என்றும் அட்டவணை போட்டு பெண்களை அந்த ஆசாமி சீரழிப்பார் என்றும் அந்த பெண் துறவி வாஜ்பாய்க்கு எழுதியுள்ளார்.

ஆனால் வாஜ்பாய் கண்டுகொள்ள வில்லை.சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த இரண்டுபெண் துறவிகள் பாபாவிடம் மன்னிப்பு வாங்கிவிட்டீர்களா என்று சக பெண் துறவிகள் கேட்பார்கள் என்றும் மன்னிப்பு என்பது சங்கேத வார்த்தையாக அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். குர்மீத் ராம் ஆசிரமத்தில் துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இதிலிருந்தே இவர் ஆற்றி வந்த ஆன்மீகப்பணியின் லட்சணத்தை புரிந்து கொள்ள முடியும். இதனிடையே குழந்தைகளை சீரழித்த கிழவன் குஜராத்தைச் சேர்ந்த ஆசாராம் பாபு வழக்கை இழுத்தடிப்பது ஏன் என குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவர் வழக்கிலும் சாட்சிகள் மர்மமாக மரணமடைந்து வருகின்றன.
நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்குவிசாரணையை எடுத்துக்கொண்டது. 

பாபாவின்அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திய கடிதத்தை வெளியிட்ட ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளர் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 
இந்தியாவில் நேருவின் காலத்திற்கு பிறகு வட மாநிலங்களில் போலிச்சாமியார்களை அரசியல்வாதிகள் ஆதரித்து ஊட்டி வளர்ப்பது துவங்கிவிட்டது. 
இந்திராகாந்தி காலத்திலேயே சந்திராசாமியார், திரேந்திர பிரம்மாச்சாரி போன்ற ஆயுதத் தரகர்கள், அரசியல் தரகர்கள் சாமியார் என்ற போர்வையில் வலம் வந்தனர்.

ராஜீவ் காந்தி காலத்திலும் இவர்களது செல்வாக்கு தொடர்ந்தது.பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பூட்டாசிங்,சபாநாயகராக இருந்த பல்ராம் ஜாக்கர் ஆகியோர் பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாணச் சாமியார் ஒருவரிடம் ஆசிபெற்ற புகைப்படங்கள் சிரிப்பாய் சிரித்தன. சமய, சமூகத் துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுத்த பலர் உண்டு. சாதி, மத வழக்குகளுக்கு எதிராக தமிழில் சித்தர்கள் குரல் கொடுத்தனர்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சூபிகள் மதத்திற்குள் மாற்றத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மதத்தை பரப்ப வந்த சில பாதிரியார்களும் கூட குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை ஒழிக்க போராடியுள்ளனர். 
அதற்குமுன்பே ராமானுஜர், விவேகானந்தர் போன்றவர்கள்மூட நம்பிக்கைளுக்கு எதிராகவும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் என்ற தாயுமானவரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவள்ளலாரும், அகிலத் திரட்டு தந்த வைகுண்ட சாமியும், கேரளத்தில் அய்யன் காளியும், நாராயண குருவும் மக்களை பற்றியே சிந்தித்தவர்கள். 

குன்றக்குடி அடிகளார் மார்க்சியத்தையும், மக்கள் ஒற்றுமையையும் நேசிப்பவராக பவனி வந்தார். ஆந்திராவில் வீரேசலிங்கம் பந்தலு, கர்நாடகத்தில் பசவண்ணா என பல சமூக சீர்திருத்தவாதிகள் செயல்பட்டுள்ளனர்.
தென்னகத்திற்கு இத்தகைய பாரம்பரியம் எப்போதும் உண்டு. வட மாநிலங்களிலும் சமயத் துறையில் சீர்திருத்தம் கோரிய பல இயக்கங்கள் தோன்றியுள்ளன. ஆனால் அரசியல் அதிகாரத்தைவிட மடாதிபதிகளின் அதிகாரம் தூக்கலாக பல சமயங்களில் வெளிப் பட்டுள்ளது.

அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் தன்னுடைய சில ஆட்கள் மூலமாக முந்தைய சங்கராச்சாரியார் தலையிட்டுள்ளார். இந்திராகாந்தி இவரை சந்திக்க வந்த போது, கிணற்றுக்கு அந்தப்பக்கம் அவரை அமர வைத்து பேசியுள்ளார். 
விதவைகளை துறவிகள் நேரடியாக பார்க்கக் கூடாதாம். ஜனாதிபதி பொறுப்பில் இருந்தாலும் கூடசங்கராச்சாரியார்களை பார்க்க வந்தால் சாமியார்நாற்காலியில் அமர்ந்திருப்பதும் பெரும் பொறுப்பிலிருப்பவர்கள் கீழே அமர்ந்திருப்பதும் சர்வசாதாரணமான காட்சி. 

ஆனால் தமிழகத்தில் கொலை வழக்கு ஒன்றில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும், மாதர் சங்கத்தின் பெரும் முயற்சியால் திருச்சி சாமியார்பிரேமானந்தா சிறையில் அடைக்கப்பட்டு இரட்டைஆயுள் தண்டனை பெற்ற போதும், திருவண்ணாமலைசாமியார் நித்தியானந்தா கைது செய்யப்பட்டபோதும் தமிழகத்தில் எந்த கலவரமும் இல்லை.
மாறாக ஒருகொண்டாட்ட மனநிலைதான் வெளிப்பட்டது. சாய்பாபா கூட சர்ச்சைகளின் வளையத்திற்குள்தான் இருந்தார். 

அவரது சீடரே அவரை கொல்லவந்தபோது ஓடி ஒளிந்து கொண்ட அவர் வெறும் கையால்விபூதி எடுப்பதாகவும் தண்ணீரை பெட்ரோலாக மாற்றுவதாகவும் அவரது சீடர்கள் கதை கட்டிவிட்டனர். 
அவரது மறைவிற்கு பிறகு பல ஆயிரம் கோடிசொத்து அவருக்கு இருப்பது வெளிவந்தது. 
கல்கிசாமியார் துவங்கி ஜக்கி வாசுதேவ் வரை இளைஞர்களையும் இளம் பெண்களையும் போதைக்கு அடிமையாக்குவதாக சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

கபட சாமியார்கள் ஆடம்பரத்தில் திளைக்க, பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கர்புர்கி ஆகியோர் இந்துத்துவா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காடுகளை அழித்து நிலங்களை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ் நடத்திய ஆதிசிவன் சிலை திறப்புக்குபிரதமர் மோடியே நேரில் வந்தார். 
தற்போது தண்டிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங்கையும் வளர்த்துவிட்டவர்கள் பிரதமர் மோடியும் ஹரியானா முதல்வர்கட்டார் உள்ளிட்ட பாஜகவினரும்தான் என்கிறது இந்து ஏடு. 

மோடி இந்த சாமியாரை குரு என்று புகழ்ந்துரைத்துள்ளதோடு தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்என்றும் அவரை கூறியுள்ளார்.
ஹரியானா மாநில கட்டார் அரசு ஏராளமான நிதியுதவியை இவருக்கு செய்துள்ளது. யமுனைக் கரையை சீர்குலைத்த ரவிசங்கர் சாமியாருக்கும் மோடி அரசு பக்கபலமாக இருந்தது.

 அவரும் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தார். உலகளவில் பல தீவுகளுக்கு சொந்தக்காரராக உள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களை கண்டால் ஜிஎஸ்டியும் பதுங்கிக்கொள்கிறது. அவையெல்லாம் சுதேசி பொருட்களாம். 
அதிகாரத்தை ருசிக்கும் பல அரசியல்வாதிகள் தங்களது கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றஇந்த கார்ப்பரேட் சாமியார்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சாமியார்களின் ஆசிரமங்களை வருமானத்துறை எட்டிக்கூடப் பார்க்காது. தமிழகத்தில் தேர்தலின்போது பிடிபட்ட பல்லாயிரம் கோடியின் மூலமும் இன்னமும் கண்டறியப்படவில்லை. தங்களுடைய களவாணித்தனத்துக்கு காவலாளியும், வாக்குவங்கி அரசியலுக்காகவும் முதலாளித்துவஅரசியல்வாதிகள் போலிச் சாமியார்களை வளர்த்துவிடுகின்றனர். 

பிறகு யாரும் கேள்விக்கேட்க முடியாதஇடத்திற்கு போலிச்சாமியார்கள் சென்றுவிடுகின்றனர். 
ஒரு கிரிமினல் சாமியாரின் ஆதரவாளர்களை வெளிப்படையாகக்கூட கண்டிக்கமுடியாத பிரதமரைபெற்றிருக்கும் நிலையில் மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிலும் அவர் சாமியார்களின் ஆதரவாளராக அமைந்திருப்பது மிகப்பெரிய கொடுமை.நாட்டுக்குத்தான்.

நன்றி:தீக்கதிர்.                                                                                                            -மதுக்கூர் இராமலிங்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும்பாலான அமைச்சகங்கள் டுவிட்டர், பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களோடு தொடர்புகொண்டு வருகின்றன. 
இதற்கு ஒவ்வொரு அமைச்சகமும் ஆண்டுக்கு ரூ.2 கோடி செலவு செய்வதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.
இந்த ஏடு 56 அமைச்சகங்களுக்கு, சமூக வலைத்தளங்களில் கணக்கு உள்ளதா, அதற்கு தனியார் ஆலோசகர்கள் அல்லது தொழில்முறை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனுச்செய்தது.
சிவில் விமானப் போக்குவரத்துத்துறை, நுண், சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை தவிர மற்ற அனைத்து அமைச்சகங்களும் தங்களுக்கு டுவிட்டர், பேஸ்புக் கணக்கு இருப்பதாக பதிலளித்துள்ளன. தகவல்தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து அமைச்சகங்களும் மோடி அரசு பதவியேற்ற சில மாதங்களில் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களைத் துவக்கியுள்ளன.
2016க்குப் பின் நிறுவனங்கள் அல்லது தனியார் ஆலோசகர்கள் மூலம் அதிகமாக தொழில்முறை உதவியை அரசு பெறத்துவங்கியுள்ளது. 
உள்துறை, தகவல் தொடர்புத்துறை, உணவுப் பதப்படுத்துதல் துறை, சுற்றுலாத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, நிதி ஆயோக், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை, ஆயுஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் துறை உள்ளிட்ட துறைகள் தொழில்முறை உதவி பெற்றுள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூன்றாண்டுகளுக்கு ரூ.7 கோடி கொடுத்து குவாண்டம் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
மற்ற அமைச்சகங்களும் இதுபோன்ற ஒப்பந்தங்களை வெவ்வேறு தொகைகளுக்குச் செய்துள்ளன.தனியார் நிறுவனங்கள் அல்லது ஆலோசகர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து அமைச்சகங்களும் தகவல் தெரிவித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சகம் மட்டும் எந்த நிறுவனத்துடன் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் என்ற தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை என்று கூறித் தர மறுத்துவிட்டது.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-30.
======================================================================================

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காரியம் கைகூடியதும் பலிக்கடா...

ஹரியானாவில் சிர்சாவை தலைமையிடமாக வைத்து, செயல்பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு. 
இதன் தலைவனான, குர்மீத் ராம் ரஹீம் சிங், ௫௧, தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரண்டு பெண் துறவிகள் புகார் கூறியிருந்தனர். கடந்த, 2002ல், அப்போதைய பிரதமர், வாஜ்பாய்க்கு, இந்த பெண் துறவிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* 2002 ஏப்., : குர்மித் ராம் ரஹீம் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு, ஆசிரம பெண் பக்தர்கள் கடிதம்.
* மே : கடிதம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிர்சா மாவட்ட நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை.
* செப்., : குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக மாவட்ட நீதிமன்றம் அளித்த பதிலை அடுத்து, வழக்கை சி.பி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
* டிச., : குர்மித் சிங் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு.
* 2007 ஜூலை : அம்பாலா நீதிமன்றத்தில் குர்மித் சிங் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல். அதில் பாதிக்கப்பட்ட 2 பெண் பக்தைகளின் குற்றச்சாட்டு பதிவு இடம்பெற்றிருந்தது.
* 2008 செப்.,: சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் குர்மித் சிங் மீது ஐ.பி.சி., பிரிவு 376 (பாலியல்) மற்றும் 506 (கிரிமினல்) வழக்கு பதிந்தது.
* 2009 - 2010 : சிறப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
* 2011 ஏப். : அம்பாலா நீதிமன்றத்துக்கு பதிலாக பஞ்சுக்லா நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்.
* 2017 ஜூலை: சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தினமும் நடத்தியது.
* ஆக. 17: விசாரணை நிறைவடைந்தது. 'தீர்ப்பு ஆக., 25ல் வழங்கப்படும்' என நீதிபதி ஜகதீப் சிங் அறிவிப்பு.
* ஆக., 25: 'குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி' என நீதிபதி தீர்ப்பு. 'தண்டனை விபரம் ஆக., 28ல் வழங்கப்படும்' என அறிவிப்பு. ரோஹ்டாக் சிறையில் அடைப்பு.
* ஆக., 28: குர்மித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.
பாலியல் பலாத்கார வழக்கில், ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், ஹரியானா, பஞ்சாப், டில்லியில் அவனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

இதில், 38 பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். ரயில்கள், பஸ்கள் உட்பட பொது சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை குறித்த விசாரணையை, பஞ்ச்குலாவில் உள்ள நீதிமன்றத்தில் அறிவிக்காமல், ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள, ரோதக் சிறை வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஹெலிகாப்டர் மூலம், பஞ்ச்குலாவில் இருந்து, ரோதக் சிறை வளாகத்துக்கு நேற்று வந்தார். இரு தரப்பினரின் இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதி, பின், தண்டனை விபரத்தை அறிவித்தார். 
இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால், இதை இரண்டு வழக்காக கணக்கில் எடுத்து, ராம் ரஹீமுக்கு, ஒவ்வொரு வழக்கிலும், தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனையை, தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.மேலும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், தலா, 14 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட பெண் துறவிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சாமியார் ராம் ரஹீம், 20 ஆண்டு, சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
ராணுவமும் தயார் நிலையில் இருந்தது.ரோதக் நகருக்குள் நுழைவதற்கு வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாலியல் பலாத்கார வழக்கில், தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டதும், குர்மீத் ராம் ரஹீம், தரையில் புரண்டு, கண்ணீர் விட்டு கதறியதாக தெரிகிறது.''நான் அப்பாவி, என்னை மன்னித்து விடுங்கள்,'' என்று, அவன் கைகூப்பி அழுததாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரம் தரையிலேயே அமர்ந்திருந்த அவனை, சிறை காவலர்கள் பலவந்தப்படுத்தியே, சிறைக்குள் அழைத்து சென்றனர்.
சாமியார் ராம் ரஹீம், பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராம் ரஹீமின் மனைவி, ஹர்ஜீத் கவுர். இவர்களது மகள்கள்சரண்பிரீத், அமன்பிரீத் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. மகன் ஜஸ்மீத். ஆனால், தேரா சச்சா அமைப்பின் அடுத்த வாரிசாகப் போவது யார் என்ற போட்டியில், இவர்கள் யாரும் இல்லை.
அமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வரும், பெண் ஆதரவாளரான, விபாசனா மற்றும் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இடையே கடும் போட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, 35 வயதாகும் விபாசனா, கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, ராம் ரஹீமின் தீவிர பக்தையாக இருந்தார்.

தற்போது, அமைப்பின் முழு நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். ராம் ரஹீம் நடித்த படங்களில் உதவியதுடன், அந்த படத்திலும் நடித்தவர், அவனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத். ராம் ரஹீமின் அடுத்த வாரிசு என்று தன்னை அவர் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

சிறைத்தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ராம் ரகீம் மகள் பாஜக மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 சாமியாரின் மகள்ஹனிபிரீத்

" ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டார் மற்றும் அனில் ஜெயின், அருண் ஆகியோர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும், அப்போது சாமியாரின் ஆதரவாளர்களின் வாக்குகள் மூலம் பாஜக வெற்றிக்கு உதவ வேண்டும் என்றும் அமித்ஷா மூலம் சாமியார் ராம் ரகீமிடம் கோரிக்கை வைத்தனர். 
 அவ்வாறு வெற்றிக்கு உதவி வெற்றி பெற்றால்  சாமியார் குர்மீத் ராம் ரகீம் மீதானஅனைத்து  வன்புணர்வு வழக்கு,கொலை வழக்குகள்  சரி கட்டப்பட்டு விடுதலை செய்யப்படும் என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 
அதன்படி சுமார் 28 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கு சாமியார் உதவியுள்ளார். 
ஆனால் பாஜக சாமியாருடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாட்டை மீறி விட்டதாகவும், தன் தந்தை மீதான வழக்கில் தண்டனை பெற விட்டுவிட்டதாகவும் ,பாஜக தான் வெற்றி பேர் எவ்வளவு கீழாகவும் இறங்கும்,எதையும் செய்யும் ஆனால் மற்றவர்களை காரியம் கைகூடியதும்  பலிக்கடாவாக்கி கைவிட்டு ஏமாற்றிவிடுகிறது "
என்று பகிரங்கமாக பாஜக தலைகளை குற்றம் சாட்டியுள்ளார்.
இதை இங்குள்ள அதிமுக அணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலியல் பலாத்கார வழக்கில், ஆக., 25ல் தீர்ப்பு அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டதும், ராம் ரஹீமுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், வன்முறையில் ஈடுபடுவதற்காக, இளைஞர் படையை உருவாக்கி வைத்திருந்தனர். இவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி, வன்முறையை துவக்கி வைத்தனர்.144 தடையுத்தரவு அறிவித்த அரியானா பாஜக அரசு இந்த சாமியாரின் குண்டர்படையினர் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன்  அங்கு குவியவும் அனுமதித்துள்ளது.அதைத்தான் நீதிமன்றம் கண்டித்துள்ளது.எதிர்க்கட்சிகள் கலவரத்துக்கு காரணமான,துணைபோன முதல்வர் 
மனோகர் லால் கட்டார்  பதவி விளக்க வற்புறுத்தி வருகின்றன.
இதே போல் மற்றோரு சிங்கம்பிடித்த சாமியாரையும் பாஜக குஜராத் அரசு பாதுகாத்து வருவதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சாமியார் ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது, ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்கள், பாலியல் பலாத்கார புகாரை கூறியுள்ளனர். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், அவர் மீது பல வழக்குகள் உள்ளன. 
ஆசாராம்


இது தொடர்பாக, 2013ல் கைது செய்யப்பட்ட ஆசாராம், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு ஜாமின் வழங்கவும், உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 

இந்நிலையில், ஆசாராமுக்கு சொந்தமான, குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த, இரு சகோதரிகள், அவருக்கு எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். 

இது தொடர்பான வழக்கை, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள, குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரிக்கிறது.இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சகோதரிகள் உட்பட, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த, ஏப்., 12ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது. 

ஆனால் குஜராத் அரசு இவ்வழக்கை கண்டு கொள்ளவில்லை.நடத்தவே இல்லை. 

அப்போது, இந்த வழக்கில், சாட்சிகளிடம் இதுவரை விசாரணை நடத்தப்படாததற்கு, உச்ச  நீதிமன்றம அமர்வுகண்டனம் தெரிவித்தது. விசாரணை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, குஜராத் அரசு அறிக்கை அளிக்க, அமர்வு உத்தரவிட்டது.அதன் பின்னரே தற்போது இவ்  வழக்கு, நீதிபதிகள், என்.வி.ரமணா, அமிதவ ராய் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன்,மீண்டும் விசாரணைக்கு வந்தது.
======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-29.
 • இந்திய தேசிய விளையாட்டு தினம்
 • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
 • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
=======================================================================================
குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....?
ராம் ரஹீம்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். 
சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். 
இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு. 
திராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன “மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழை” என்ற மூன்று முழக்கங்கள்தான். 
ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 
'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. 
இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். 
மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது. 
தன் அமைப்பின் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார்.
 பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம். 

ரஹீம்சிங் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். 
ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார் என்கிறார்கள். 
மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். 
மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். 
இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம்.  
சாமியார்கள் மக்களிடையே அதீத புகழ்பெறத் துவங்குகிறபோது, சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கைதான். நம்மூரில் சில 'கடவுளர்கள்' திரைப்படங்களில் நடித்ததுண்டு. தெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். 
கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 
2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு. 
மாநிலத்தில் 2012-ல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன. 
ராம் ரஹீம்
இந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் போன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார். 
கடந்த 2002-ம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. 
ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார். 
உச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது. இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை. 
ராம் ரஹீம்
ரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. 
தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார். 
சட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இப்படித்தான். 
ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார். ஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். 
ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.
ரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர். 
இவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன. 
ராம் ரஹீம்
பிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். 
ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. 
வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர். 


திங்கள், 28 ஆகஸ்ட், 2017

கல்வித் துறையை சீரழிக்காதீர்.

சீ ர்திருத்தம் வேண்டி மிக இக்கட்டான காலகட்டத்தில் தமிழகக் கல்வித் துறை இருக்கும் நிலையில், அதற்குப் பொருத்தமாக அந்தப் பணியில் வந்தமர்ந்த பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மிக மோசமானது. 

தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருப்பதன் மூலம், பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பான பணிகளை மட்டும்தான் உதயச்சந்திரன் இனி மேற்கொள்ள முடியும் எனும் நிலையை உருவாகியிருக்கிறது தமிழக அரசு. 
இரவோடு இரவாகச் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, கல்வித் துறையில் ஆக்கபூர்வ மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் நலனையும் மாநில நலன்களையும் புறக்கணித்து, உட்கட்சிப் பிளவு, பதவி அதிகாரச் சண்டை, குதிரைப் பேரம் - ஊழல் குற்றச்சாட்டுகள் என்று பயணித்துக்கொண்டிருக்கும் அதிமுக அரசுக்குக் கொஞ்சமேனும் நற்பெயர் கிடைத்தது என்றால், அதற்கு கல்வித் துறையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும், செயலர் உதயச்சந்திரனும் இணைந்து எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். 
பொதுத் தேர்வுகளில் தரவரிசை ரத்து, ப்ளஸ் ஒன் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, நூலகங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று கவனம் ஈர்த்தார்கள் இருவரும். 

ஆனால், நிர்வாகரீதியிலான நடவடிக்கைகள் எனும் பெயரில் விதிமுறைகளை மீறி ஆசிரியர்கள் இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு உதயச்சந்திரன் ஒத்துழைப்பு வழங்கவில்லை; 
முறைகேடுகளுக்கு அவர் உடன்படவில்லை என்பதால், அவர் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாயின. 
இதற்கிடையே, நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றும் வரை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவில் உள்ளவர்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து, உதயச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இத்தகைய சூழலில்தான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு. ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறைக்கு செயலாளர் ஒருவர் பணியில் தொடரும் சூழலில், அவருக்கு மேலே ஒருவரை முதன்மைச் செயலாளராக நியமித்திருப்பது செயலரின் அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
2016 தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜெயலலிதா உடல் நலப் பாதிப்புக்குள்ளானது தொடங்கி அவருடைய மரணம், ஆட்சிஅதிகாரத்துக்கான போட்டி என்று கிட்டத்தட்ட ஓராண்டாக அரசில் இருப்பவர்கள் செயல்படாமலேயே இருந்தாலும், தமிழக நிர்வாகம் மோசமாகாமல் இருக்கக் காரணம், 
அதிகாரிகள் மட்டத்தில் அவர் களுக்குக் கிடைத்துவந்த சுதந்திரம்தான். தான் செயல்படாததோடு, செயல்படும் அதிகாரிகளையும் விடுவதில்லை என்று ஒரு அரசாங் கம் இறங்கினால், அதன் வீழ்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. 
மோசமான இந்த உத்தரவை முதல்வர் பழனிசாமி திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்!
======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-28.


 • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
 • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
 • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
 • காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
 • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
=======================================================================================