ஒளி வட்டங்களுக்கு பின்னால்

கிரிமினல் சாமியார்கள் .


எந்தவொரு மத நம்பிக்கையின் பெயராலும் வன்முறை நிகழ்த்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி வள்ளுவரின் வழிநின்று கடிதோச்சி மெல்ல எறிந்துள்ளார். 

காமக் கொடூர சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை மனதில் வைத்துக் கொண்டு பிரதமர் இவ்வாறு மனதின் குரலில் பேசியுள்ளார் என்று ஊடகங்கள் பொழிப்புரை எழுதியுள்ளன. 
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற ஆசாமி மீதான பாலியல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் 38 பேர் பலியானார்கள்.

இரு ஐபிஎஸ் அதிகாரிகள், 60 பாதுகாப்புப் படையினர் உட்பட 360 பேர் படுகாயமடைந்தனர். 
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் பற்றி எரிந்தன. அப்போதெல்லாம்வன்முறையாளர்களை கண்டித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட கூறாமல் சகித்துக் கொண்டேஇருந்துவிட்டார். 


இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இப்போது பொத்தாம்பொதுவாக பேசியுள்ளார் பிரதமர். 
இவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், குர்மீத் ராமின் சக சாமியாருமான சாக்சி மகராஜ் இது இந்து மதத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறார். 

மத்திய அமைச்சர்கள் உட்பட ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த பலருக்கு வாய் என்ற ஒரு உடலுறுப்பு இருப்பதே மறந்து போய்விட்டது. 

குர்மித் ராமிற்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
குற்றவாளி என்று அறிவித்ததற்கே பெரும் வன்முறையில் ஈடுபட்டவர்களை தற்போது மத்திய, மாநில பாஜக அரசுகள் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

கிரிமினல் பின்னணி கொண்ட தேரா சச்சா சவுதா சாமியார் தண்டிக்கப்பட்டால் பெரும் வன்முறை வெடிக்கும் என்று ஹரியானா மாநில பாஜக அரசுக்கு நன்கு தெரியும். 

எனினும் நீதிமன்றத்திற்கு கிரிமினல் சாமியார் 200 கார்கள் பின்தொடர ராஜ உலா போல செல்ல அனுமதிக்கப்பட்டார். 
பாலியல்வன்புணர்வு வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய சீடர்கள் என்று கூறிக்கொள்ளும், குண்டர்கள் 2 மாநிலசட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர்.

ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது. மத்திய அரசும், ஹரியானா மாநில கட்டார் அரசும் வேடிக்கை பார்த்தன.
அரசியல் லாபத்திற்காக ஹரியானா மாநிலத்தைதீக்கிரையாக்கிவிட்டீர்கள் என்றும் வன்முறையாளர்களிடம் மாநில அரசு சரணடைந்துவிட்டது என்றும்மாநில உயர்நீதிமன்றம் கட்டார் தலையில் ஓங்கி குட்டியது. மோடி இந்தியாவின் பிரதமர். 

பாஜகவின் பிரதமர் அல்ல என்றும் நீதிமன்றம் சாடியது. 
2002ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு குர்மீத் ராம் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் துறவி கடிதம் எழுதியுள்ளார்.
தன்னுடைய பெயரை குறிப்பிட்டால் உயிருக்கு ஆபத்து நேரும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ள அவர் தன்னுடைய குடும்பமே குர்மீத் ராமின் பக்தர்கள் என்பதால் தன்னை துறவியாக்கி ஆசிரமத்தில் சேர்த்து விட்டதாக கூறியுள்ளார். 

ஒருநாள் குர்மீத் ராம் தன்னை பாதாள அறைக்கு அழைத்து தனக்கு விருப்பமான பெண் துறவியாக அவரை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார். அப்போது தொலைக்காட்சியில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்ததாகவும் குர்மீத் ராமின் தலையணை பக்கத்தில் கைத்துப்பாக்கி இருந்ததாகவும் அந்த பெண் துறவி கடிதத்தில் கூறியுள்ளார். 

போலிச் சாமியாரின் உண்மை உருவத்தை அறிந்து அதிர்ச்சியான அவர் தாங்கள் இவ்வாறு செய்யலாமா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த ஆசாமி நான் தான் கடவுள். கடவுளான கிருஷ்ணன் 360 கோபியர்களோடு கொஞ்சி மகிழ்ந்ததை குறித்துகுறிப்பிட்டு தானும் அப்படித்தான் என்றுள்ளார். தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுக்குஉட்படுத்தியதாகவும் அந்த ஆசிரமத்தில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெண்கள் பாபாவினால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்தான் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் அனைவருமே தன்னுடைய சீடர்கள்தான் என்றும் அவரை எதிர்த்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன்என்றும் சாமியார் மிரட்டியுள்ளார். மாதத்திற்கு ஒருமுறை தனக்கு சாமியாரிடமிருந்து அழைப்பு வரும்என்றும் அட்டவணை போட்டு பெண்களை அந்த ஆசாமி சீரழிப்பார் என்றும் அந்த பெண் துறவி வாஜ்பாய்க்கு எழுதியுள்ளார்.

ஆனால் வாஜ்பாய் கண்டுகொள்ள வில்லை.சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த இரண்டுபெண் துறவிகள் பாபாவிடம் மன்னிப்பு வாங்கிவிட்டீர்களா என்று சக பெண் துறவிகள் கேட்பார்கள் என்றும் மன்னிப்பு என்பது சங்கேத வார்த்தையாக அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். குர்மீத் ராம் ஆசிரமத்தில் துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இதிலிருந்தே இவர் ஆற்றி வந்த ஆன்மீகப்பணியின் லட்சணத்தை புரிந்து கொள்ள முடியும். இதனிடையே குழந்தைகளை சீரழித்த கிழவன் குஜராத்தைச் சேர்ந்த ஆசாராம் பாபு வழக்கை இழுத்தடிப்பது ஏன் என குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவர் வழக்கிலும் சாட்சிகள் மர்மமாக மரணமடைந்து வருகின்றன.
நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்குவிசாரணையை எடுத்துக்கொண்டது. 

பாபாவின்அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திய கடிதத்தை வெளியிட்ட ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளர் 2002 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 
இந்தியாவில் நேருவின் காலத்திற்கு பிறகு வட மாநிலங்களில் போலிச்சாமியார்களை அரசியல்வாதிகள் ஆதரித்து ஊட்டி வளர்ப்பது துவங்கிவிட்டது. 
இந்திராகாந்தி காலத்திலேயே சந்திராசாமியார், திரேந்திர பிரம்மாச்சாரி போன்ற ஆயுதத் தரகர்கள், அரசியல் தரகர்கள் சாமியார் என்ற போர்வையில் வலம் வந்தனர்.

ராஜீவ் காந்தி காலத்திலும் இவர்களது செல்வாக்கு தொடர்ந்தது.பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பூட்டாசிங்,சபாநாயகராக இருந்த பல்ராம் ஜாக்கர் ஆகியோர் பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாணச் சாமியார் ஒருவரிடம் ஆசிபெற்ற புகைப்படங்கள் சிரிப்பாய் சிரித்தன. சமய, சமூகத் துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுத்த பலர் உண்டு. சாதி, மத வழக்குகளுக்கு எதிராக தமிழில் சித்தர்கள் குரல் கொடுத்தனர்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சூபிகள் மதத்திற்குள் மாற்றத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மதத்தை பரப்ப வந்த சில பாதிரியார்களும் கூட குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை ஒழிக்க போராடியுள்ளனர். 
அதற்குமுன்பே ராமானுஜர், விவேகானந்தர் போன்றவர்கள்மூட நம்பிக்கைளுக்கு எதிராகவும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் என்ற தாயுமானவரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவள்ளலாரும், அகிலத் திரட்டு தந்த வைகுண்ட சாமியும், கேரளத்தில் அய்யன் காளியும், நாராயண குருவும் மக்களை பற்றியே சிந்தித்தவர்கள். 

குன்றக்குடி அடிகளார் மார்க்சியத்தையும், மக்கள் ஒற்றுமையையும் நேசிப்பவராக பவனி வந்தார். ஆந்திராவில் வீரேசலிங்கம் பந்தலு, கர்நாடகத்தில் பசவண்ணா என பல சமூக சீர்திருத்தவாதிகள் செயல்பட்டுள்ளனர்.
தென்னகத்திற்கு இத்தகைய பாரம்பரியம் எப்போதும் உண்டு. வட மாநிலங்களிலும் சமயத் துறையில் சீர்திருத்தம் கோரிய பல இயக்கங்கள் தோன்றியுள்ளன. ஆனால் அரசியல் அதிகாரத்தைவிட மடாதிபதிகளின் அதிகாரம் தூக்கலாக பல சமயங்களில் வெளிப் பட்டுள்ளது.

அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் தன்னுடைய சில ஆட்கள் மூலமாக முந்தைய சங்கராச்சாரியார் தலையிட்டுள்ளார். இந்திராகாந்தி இவரை சந்திக்க வந்த போது, கிணற்றுக்கு அந்தப்பக்கம் அவரை அமர வைத்து பேசியுள்ளார். 
விதவைகளை துறவிகள் நேரடியாக பார்க்கக் கூடாதாம். ஜனாதிபதி பொறுப்பில் இருந்தாலும் கூடசங்கராச்சாரியார்களை பார்க்க வந்தால் சாமியார்நாற்காலியில் அமர்ந்திருப்பதும் பெரும் பொறுப்பிலிருப்பவர்கள் கீழே அமர்ந்திருப்பதும் சர்வசாதாரணமான காட்சி. 

ஆனால் தமிழகத்தில் கொலை வழக்கு ஒன்றில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும், மாதர் சங்கத்தின் பெரும் முயற்சியால் திருச்சி சாமியார்பிரேமானந்தா சிறையில் அடைக்கப்பட்டு இரட்டைஆயுள் தண்டனை பெற்ற போதும், திருவண்ணாமலைசாமியார் நித்தியானந்தா கைது செய்யப்பட்டபோதும் தமிழகத்தில் எந்த கலவரமும் இல்லை.
மாறாக ஒருகொண்டாட்ட மனநிலைதான் வெளிப்பட்டது. சாய்பாபா கூட சர்ச்சைகளின் வளையத்திற்குள்தான் இருந்தார். 

அவரது சீடரே அவரை கொல்லவந்தபோது ஓடி ஒளிந்து கொண்ட அவர் வெறும் கையால்விபூதி எடுப்பதாகவும் தண்ணீரை பெட்ரோலாக மாற்றுவதாகவும் அவரது சீடர்கள் கதை கட்டிவிட்டனர். 
அவரது மறைவிற்கு பிறகு பல ஆயிரம் கோடிசொத்து அவருக்கு இருப்பது வெளிவந்தது. 
கல்கிசாமியார் துவங்கி ஜக்கி வாசுதேவ் வரை இளைஞர்களையும் இளம் பெண்களையும் போதைக்கு அடிமையாக்குவதாக சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

கபட சாமியார்கள் ஆடம்பரத்தில் திளைக்க, பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கர்புர்கி ஆகியோர் இந்துத்துவா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காடுகளை அழித்து நிலங்களை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ் நடத்திய ஆதிசிவன் சிலை திறப்புக்குபிரதமர் மோடியே நேரில் வந்தார். 
தற்போது தண்டிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங்கையும் வளர்த்துவிட்டவர்கள் பிரதமர் மோடியும் ஹரியானா முதல்வர்கட்டார் உள்ளிட்ட பாஜகவினரும்தான் என்கிறது இந்து ஏடு. 

மோடி இந்த சாமியாரை குரு என்று புகழ்ந்துரைத்துள்ளதோடு தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்என்றும் அவரை கூறியுள்ளார்.
ஹரியானா மாநில கட்டார் அரசு ஏராளமான நிதியுதவியை இவருக்கு செய்துள்ளது. யமுனைக் கரையை சீர்குலைத்த ரவிசங்கர் சாமியாருக்கும் மோடி அரசு பக்கபலமாக இருந்தது.

 அவரும் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தார். உலகளவில் பல தீவுகளுக்கு சொந்தக்காரராக உள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களை கண்டால் ஜிஎஸ்டியும் பதுங்கிக்கொள்கிறது. அவையெல்லாம் சுதேசி பொருட்களாம். 
அதிகாரத்தை ருசிக்கும் பல அரசியல்வாதிகள் தங்களது கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றஇந்த கார்ப்பரேட் சாமியார்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சாமியார்களின் ஆசிரமங்களை வருமானத்துறை எட்டிக்கூடப் பார்க்காது. தமிழகத்தில் தேர்தலின்போது பிடிபட்ட பல்லாயிரம் கோடியின் மூலமும் இன்னமும் கண்டறியப்படவில்லை. தங்களுடைய களவாணித்தனத்துக்கு காவலாளியும், வாக்குவங்கி அரசியலுக்காகவும் முதலாளித்துவஅரசியல்வாதிகள் போலிச் சாமியார்களை வளர்த்துவிடுகின்றனர். 

பிறகு யாரும் கேள்விக்கேட்க முடியாதஇடத்திற்கு போலிச்சாமியார்கள் சென்றுவிடுகின்றனர். 
ஒரு கிரிமினல் சாமியாரின் ஆதரவாளர்களை வெளிப்படையாகக்கூட கண்டிக்கமுடியாத பிரதமரைபெற்றிருக்கும் நிலையில் மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிலும் அவர் சாமியார்களின் ஆதரவாளராக அமைந்திருப்பது மிகப்பெரிய கொடுமை.நாட்டுக்குத்தான்.

நன்றி:தீக்கதிர்.                                                                                                            -மதுக்கூர் இராமலிங்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பெரும்பாலான அமைச்சகங்கள் டுவிட்டர், பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களோடு தொடர்புகொண்டு வருகின்றன. 
இதற்கு ஒவ்வொரு அமைச்சகமும் ஆண்டுக்கு ரூ.2 கோடி செலவு செய்வதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.
இந்த ஏடு 56 அமைச்சகங்களுக்கு, சமூக வலைத்தளங்களில் கணக்கு உள்ளதா, அதற்கு தனியார் ஆலோசகர்கள் அல்லது தொழில்முறை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனுச்செய்தது.
சிவில் விமானப் போக்குவரத்துத்துறை, நுண், சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை தவிர மற்ற அனைத்து அமைச்சகங்களும் தங்களுக்கு டுவிட்டர், பேஸ்புக் கணக்கு இருப்பதாக பதிலளித்துள்ளன. தகவல்தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து அமைச்சகங்களும் மோடி அரசு பதவியேற்ற சில மாதங்களில் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களைத் துவக்கியுள்ளன.
2016க்குப் பின் நிறுவனங்கள் அல்லது தனியார் ஆலோசகர்கள் மூலம் அதிகமாக தொழில்முறை உதவியை அரசு பெறத்துவங்கியுள்ளது. 
உள்துறை, தகவல் தொடர்புத்துறை, உணவுப் பதப்படுத்துதல் துறை, சுற்றுலாத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, நிதி ஆயோக், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை, ஆயுஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் துறை உள்ளிட்ட துறைகள் தொழில்முறை உதவி பெற்றுள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூன்றாண்டுகளுக்கு ரூ.7 கோடி கொடுத்து குவாண்டம் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 
மற்ற அமைச்சகங்களும் இதுபோன்ற ஒப்பந்தங்களை வெவ்வேறு தொகைகளுக்குச் செய்துள்ளன.தனியார் நிறுவனங்கள் அல்லது ஆலோசகர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து அமைச்சகங்களும் தகவல் தெரிவித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சகம் மட்டும் எந்த நிறுவனத்துடன் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் என்ற தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை என்று கூறித் தர மறுத்துவிட்டது.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-30.
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?