கல்வித் துறையை சீரழிக்காதீர்.
சீ ர்திருத்தம் வேண்டி மிக இக்கட்டான காலகட்டத்தில் தமிழகக் கல்வித் துறை இருக்கும் நிலையில், அதற்குப் பொருத்தமாக அந்தப் பணியில் வந்தமர்ந்த பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மிக மோசமானது.
தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருப்பதன் மூலம், பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பான பணிகளை மட்டும்தான் உதயச்சந்திரன் இனி மேற்கொள்ள முடியும் எனும் நிலையை உருவாகியிருக்கிறது தமிழக அரசு.
இரவோடு இரவாகச் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, கல்வித் துறையில் ஆக்கபூர்வ மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் நலனையும் மாநில நலன்களையும் புறக்கணித்து, உட்கட்சிப் பிளவு, பதவி அதிகாரச் சண்டை, குதிரைப் பேரம் - ஊழல் குற்றச்சாட்டுகள் என்று பயணித்துக்கொண்டிருக்கும் அதிமுக அரசுக்குக் கொஞ்சமேனும் நற்பெயர் கிடைத்தது என்றால், அதற்கு கல்வித் துறையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும், செயலர் உதயச்சந்திரனும் இணைந்து எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம்.
பொதுத் தேர்வுகளில் தரவரிசை ரத்து, ப்ளஸ் ஒன் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, நூலகங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று கவனம் ஈர்த்தார்கள் இருவரும்.
ஆனால், நிர்வாகரீதியிலான நடவடிக்கைகள் எனும் பெயரில் விதிமுறைகளை மீறி ஆசிரியர்கள் இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு உதயச்சந்திரன் ஒத்துழைப்பு வழங்கவில்லை;
முறைகேடுகளுக்கு அவர் உடன்படவில்லை என்பதால், அவர் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாயின.
இதற்கிடையே, நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றும் வரை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவில் உள்ளவர்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து, உதயச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில்தான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு. ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறைக்கு செயலாளர் ஒருவர் பணியில் தொடரும் சூழலில், அவருக்கு மேலே ஒருவரை முதன்மைச் செயலாளராக நியமித்திருப்பது செயலரின் அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
2016 தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜெயலலிதா உடல் நலப் பாதிப்புக்குள்ளானது தொடங்கி அவருடைய மரணம், ஆட்சிஅதிகாரத்துக்கான போட்டி என்று கிட்டத்தட்ட ஓராண்டாக அரசில் இருப்பவர்கள் செயல்படாமலேயே இருந்தாலும், தமிழக நிர்வாகம் மோசமாகாமல் இருக்கக் காரணம்,
அதிகாரிகள் மட்டத்தில் அவர் களுக்குக் கிடைத்துவந்த சுதந்திரம்தான். தான் செயல்படாததோடு, செயல்படும் அதிகாரிகளையும் விடுவதில்லை என்று ஒரு அரசாங் கம் இறங்கினால், அதன் வீழ்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
மோசமான இந்த உத்தரவை முதல்வர் பழனிசாமி திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்!
======================================================================================
இன்று,
- ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
- வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
- சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
- காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
- குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)