செவ்வாய், 31 அக்டோபர், 2017

சாதி இரண்டொழிய .....

கட்டபொம்மனில் ஆரம்பித்த போக்குவரத்துக் கழகங்கள்,மாவட்டங்கள்  பெயர்,பெரும்பிடுகு வரை போய் 500பேர்கள் மட்டுமே உள்ள சாதியினர் கூட தங்கள் சாதி தலைவர் பெயரை வைக்கக்கோரி போராடும் அளவு போனது.
அம்பேத்கார் பேருந்து மீது பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்து ஆதரவாளர்கள் கல்வீசவும்,அவர்கள் திருப்பி இவர்கள் பேருந்தை  எரிப்பதுமாக போர்க்களமாகியது தமிழகம் .

எந்தப்பேருந்தை எந்த சாதிக்காரன் தாக்குவனோ என்ற பயம் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவு தமிழகம் பாதுகாப்பில்லாமல் போனது பலருக்கு மலரும் நினைவில் இருக்கலாம்.
சாதி தலைவர்கள் பெயரை சூட்டுவதால் உண்டான பலனை தமிழகம் அனுபவித்தப்பின்னர்தான் தலைவர் கலைஞர் மாவட்டங்கள்,போக்குவரத்துக்கழகங்களில் இருந்து அவர்கள் பெயரை நீக்கி கலவரங்களுக்கு முடிவு கட்டினார்.
ஆனால் அதை அவரது மகனே மீண்டும் துவக்குவது சரியல்ல. விடுதலைப் போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்களை சாதிய ரீதியில் அணுகும் போக்கு தலை தூக்கி உள்ள நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் வேலையை தளபதி செய்யக் கூடாது.


ஏற்கனவே மதுரை விமான நிலையத்துக்கு காரராஜர் பெயரை வைக்க கோரி நாடார் சங்கங்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளதை தளபதி நினைவில் கொள்ளவில்லையே.


காமராஜர் தற்போது தமிழத்தின் பெருந்தலைவராக இல்லை.நாடார் சங்கங்கள் அவரை தங்கள் சாதி தலைவராக குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டார்கள்.

இந்திய அரசியலிலே பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் காமராஜர் படத்தை வீடுகளில் வைத்ததற்காக என்னை நீ அந்த சாதியா என்று கேட்டவர்கள் பலர்.கல்விக்கண் திறந்த காமராஜருக்கே அந்நிலை என்றால் தனது வாழ் நாளில் தனது சாதிக்காக  உழைத்த காங்கிரஸ்,பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த தலைவர் முத்துராமலிங்கம் நிலை எப்படி என்று தெரியாதா?

சுபாஷ் சந்திர போஸின் பார்வர்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தது போய் பார்வர்ட் பிளாக் என்றால் தேவரின அமைப்பாக மாறிப்போனது வரலாறு.

முத்துராமலிங்கத் தேவர்,காமராஜர்,வ.உ.சி.போன்றோரை சாதிகள் முன்னிறுத்தும் போக்கு இருக்கையில் வீண் குழப்பத்தை உண்டாக்காமல் இருக்க தலைவர்கள் பெயரை சூட்டாமல் அந்தந்த இடத்தின்,ஊரின் பெயர்களை வைப்பதுதான் அமைதிக்கான வழி .


அதுமட்டுமல்ல வெளி நாடுகளில் உள்ளவர்கள் யார் பெயர் எந்த ஊர் என்று குழம்பாமல் இருக்கவும் உதவும்.

தேவர் பிறந்தநாளில் ஏதாவது சொல்லவேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்வது எதிர்தரப்பை அவர்கள் மீது அவநம்பிக்கையை வைக்கத்தான் உதவும்.


தொகுதிகளை சாதி வாக்குகளை
கணக்கிட்டு பார்த்துக்கொடுப்பதே தவறு.


சொல்லப்போனால் பிற சாதியினர் வாக்குகள் ஒட்டு மொத்தமாக அதிகமாகத்தான் இருக்கும்.அவர்கள் திட்டமிட்டு கட்சிகளின் சாதி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால்?


அந்நிலை விரைவில் வரப்போகிறது.சாதி வெறியை அரசியல் கட்சிகள்தான் தூண்டுகின்றன.அதற்கு திமுகவும் விலக்கல்ல என்ற அவப்பெயர் வேண்டாம் தளபதி அவர்களே?

==================================================================================================
ன்று,

அக்டொபர்-31.

 • இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
 • அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)
 • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)
 •  முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி  நினைவு தினம்(1984)
சென்னை மழை பேரிடர் உதவி தொலைபேசிகள்.
044-25367823
044-25384965
044-25383694
இந்திராகாந்தி  1917 நவ., 19ல், ஜவஹர்லால் நேரு - கமலா தம்பதிக்கு, மகளாக பிறந்தார். 
நேரு மறைவிற்கு பின், நாட்டின் மூன்றாவது பிரதமராக, 1966ல் பதவியேற்றார். 

1969 ஜூலையில், வங்கிகளை தேசியமயமாக்கினார். 

1971ல் நடந்த பொதுத் தேர்தலில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அச்சமயத்தில், கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டது. 

இந்திய படைகள் உதவியுடன், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து, வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது.
 1984 ஜூனில், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் பயங்கரவாதிகள் முகாமிட்டனர். 

பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார் பிரதமர் இந்திரா. பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 
அதனால் கோபங்கொண்ட சீக்கிய இனத்தவர்கள் சிலர் இவரை பழி வாங்க திட்டமிட்டிருந்தனர்.
1984 அக்டோபர் 31ல், டில்லியில் உள்ள  வீட்டில் அவரது மெய்காப்பாளராலே  இந்திராகாந்தி  சுட்டு கொல்லப்பட்டார்.
==================================================================================================

                                                         யாரென்று தெரிகிறதா?


திங்கள், 30 அக்டோபர், 2017

அரசு வங்கிகளை காப்பாற்றுவது எப்படி?
பாஜக  முறை. 

அண்மையில் நிதி அமைச்சர் ஜெட்லிஅறிவித்துள்ள வங்கிகளின் மூலதனத்தைக் கூட்டுவது தொடர்பானநடவடிக்கைகள் பற்றி பல குழப்பமானகருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் சொல்லாத சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வோம்.

ஏற்கெனவே மந்த நிலையில் இறங்கியிருந்த இந்திய பொருளாதாரம், செல்லாக்காசு பிரச்சனை, விலங்கு சந்தைகளில் அரசு ஏற்படுத்திய குழப்பம், தயாரிப்பின்றியும் மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டுமிதித்தும், சிறு,குறு தொழில்முனைவோரையும் வணிகர்களையும் மறைமுக வரிவலைக்குள் கொண்டுவரும் நோக்குடனும் அமல்படுத்தப்பட்டு வரும் ஜிஎஸ்டி ஆகியவற்றால், மேலும் கடுமையாக சீர்குலைந்துள்ளது.

தொடர்ந்துமத்திய அரசு இதனை மறுத்துவந்தாலும் இதன் உண்மை கருதி மறுபக்கம் பல“புதிய” தடாலடி அறிவிப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்பொழுது வந்துள்ள அறிவிப்புகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தல் தொடர்பானதை மட்டும் இப்பதிவில் சுருக்கமாக காண்போம்.
2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின்மறுமூலதனமயத்திற்கு செலவிட உள்ளதாக ஜெட்லி அறிவிப்பு கூறுகிறது. 
இதில் பட்ஜெட் மூலம் 19 ஆயிரம் கோடிகளுக்கு சற்றுக் குறைவாக மட்டுமே தரப்பட உள்ளது.
(இது ஏற்கெனவே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட தொகையை விட மூவாயிரம் கோடி மட்டுமே அதிகம்.) வங்கிகள் பங்கு சந்தையில் பங்குகளை விற்று ஐம்பத்து எட்டாயிரம்கோடி ரூபாய் திரட்ட வேண்டும். 
இதுதனியார்மயம் தவிர வேறல்ல.

 மீதம்கணிசமான தொகையை அரசு “மறுமூலதன பாண்டு”களாக வங்கிகளுக்கு விற்று வங்கிகளின் மூலதன அளவை உயர்த்தும். 


இது வங்கிகளின்போதுமான மூலதன விகிதத்தை பாஸல் நெறிமுறைகள் – 3 என்ற பெயரில்பன்னாட்டு நிதி மூலதனம் பரிந்துரைக்கின்ற அளவிற்கு கொண்டுவரும். 

ஆனால் பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நெறிமுறை அவசியம் அல்ல. ஏனெனில், அரசு வங்கிகள் என்பதால் மக்களின் முழுநம்பிக்கையை பெற்றுள்ள வங்கிகள் இவை.

(தனியார் வங்கிகளையே பெரும்பாலும் கொண்ட முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா கூடபாஸல் நெறிமுறைகள் - 3 அமலாக்கத்தை ஏற்கவில்லை.)
எனினும் இதை செய்துதான் ஆகவேண்டும் என்று கருதினாலும் பொதுத்துறை வங்கிகளுக்கு பாண்டுகள் விற்பதற்குப் பதில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கடன் பெற்று இத்தொகையை வங்கிகளுக்கு கொடுத்திருக்க முடியும். 

இரண்டுமே பிஸ்கல் பற்றாக்குறையைக் கூட்டும் என்பதால் இதில் வேறு பிரச்சனை இல்லை.மாறாக வங்கிகளை காசு கொடுத்து பாண்டுவாங்க வைப்பது பொருத்தமானதுஅல்ல.
உண்மையான பிரச்சனை என்ன? 
வாராக்கடன் பிரச்சனை பூதாகாரமாக ஆகியுள்ளதால் வங்கிகளுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. 

பொதுத்துறை வங்கிகளின்வராக்கடன் ஏன் அதிகரித்தது? 
இதற்கான மூலம் தாராளமயக்கொள்கைகளில் உள்ளது.

நாடு விடுதலை பெற்றவுடன் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்நோக்குடன் நீண்டகால கடன்களை குறைந்த வட்டியில் தருவதற்காக வளர்ச்சிசார் வங்கிகள்உருவாக்கப்பட்டன.
உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் மத்திய அரசாலும் இவைபோன்றவை மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டன. இவை நீண்ட காலம்எடுக்கும் கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள குறைந்த வட்டி கடன் அளித்தன. 

இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உள்ளிட்டு சில அரசு நிறுவனங்களிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெறவும் ஏற்பாடு இருந்தது.
ஆனால், தாராளமயக் கொள்கைகளின்படி நிதித்துறை படிப்படியாக முழுமையாக பன்னாட்டு, இந்நாட்டு ஏகபோகங்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நரசிம்மம் கமிட்டி பரிந்துரையில் துவங்கி அடுத்தடுத்து வந்த அரசு கமிட்டிகள் ளயீநஉயைடளைநன வளர்ச்சிவங்கி செயல்பாடுகள் தேவையில்லை, 

எல்லா வங்கிகளும் எல்லாவிதமான சேவை பணிகளையும் அனைத்துவாடிக்கையாளர்களுக்கும் வணிக அடிப்படையில் அளிக்கலாம் என்ற மாற்றங்களைக் கொணர்ந்தனர். 

கடந்த பல ஆண்டுகளாக அரசுபொதுத்துறை முதலீடுகளை குறைத்துவரும் சூழலில், பெரும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்துள்ளன.

இவற்றில் பல இன்று வராக்கடன்களாக மாறியுள்ளன. 

மீண்டும் வளர்ச்சிசார் வங்கி நிறுவனங்கள் தேவை என்பதையும் அவை பொதுத்துறையில் இருக்க வேண்டும்என்பதையும் ஏற்க தாராளமய ஆதரவாளர்கள் தயாராக இல்லை. 

இந்த அடிப்படை விஷயங்களில் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இல்லை. இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் புதிதாக உதித்தவை அல்ல, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே இந்த அரசே முன்வைத்தவை தான். 
இவை பிரச்சனைகளை தீர்க்காது.

வராக்கடனால் பாதிக்கப்பட்டிருக்கும் வங்கிகளை  இவற்றின் மூலம் உயர்வதால் வங்கிகள் மீண்டும் கடன்கொடுக்கும் வாய்ப்புகளை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று சிலர் சொல்கின்றனர். 

ஆனால் இப்பொழுதும் கூட கடன் கொடுக்க கணிசமான பணம்வங்கிகளிடம் உள்ளது. 
அவை கொடுக்கத் தயாராக இல்லை என்பதுபிரச்சனையின் ஒரு அம்சம். ஆனால்கடன் வாங்க தகுதி உள்ள வாடிக்கையாளர்கள் க்யூ வரிசையில் நிற்கவில்லை என்பதும் உண்மை. 

பொருளாதார மந்தநிலை, கிராக்கியின் வீழ்ச்சி ஆகியவற்றைஎதிர்கொள்ள அரசின் தொழில் மற்றும் கட்டமைப்பு மற்றும் வேளாண்சார் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். 

இப்பொழுது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் பலவீனமான ஊக்குவிப்பைதான் அளிக்கும்.ஒருவகையில் நடப்பது ஒருநாடகம். 

வங்கிகளை காப்பாற்றுவதாகக் கூறி, அடிமாட்டுவிலையில் பொதுத்துறை வங்கிகளை அவர்கள் பெற்ற வங்கிக்கடனை திருப்பித்தராத திருடர்களிடமே விற்கும் வாய்ப்பே இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.

ஸ்டேட் வங்கி தன்னிடம் வாங்கிய ஆயிரங்கோடிகள் கடனை திருப்பித்தராத அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திடமே ஏழை ,வேலைகிடைக்காத மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வாங்கித்தரும் குத்தகையை 50% கழிவில் கொடுத்ததும்,அதனால் மூன்று மாணவர்கள் ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் இதே பாஜக ஆட்சியின் ஆரம்பத்தில்தான் நடந்தது.அதற்கு முழு கரணம் மோடியும்,ஜெட்லீயும்தான் என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.
========================================================================================
ன்று,
அக்டொபர்-30.
 • உலக சிக்கன தினம்
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
 • அணு அறிவியலார் ஹோமி பாபா பிறந்ததினம் (1909)
 • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
 • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
 • இயக்குனர் சாந்தாராம் மரணம் (1990)
"1924 அக்., 31ல், இத்தாலி, மிலன் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம்  அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. "

=========================================================================================

 ‛‛ உயர் நீதிமன்றங்களில், தீர்ப்புகள், ஆங்கிலத்தில் தான் வழங்கப்படுகின்றன. மனுதாரர்களுக்கு, ஆங்கிலத்தில் நல்ல புலமை இருக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது. அதனால், தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சில மணி நேரத்துக்குள், அதை, உள்ளூர் மொழியில், மாற்றம் செய்து தர வேண்டும்.'' -                                                                                                                -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்ஞாயிறு, 29 அக்டோபர், 2017

பதவிக்கு மரியாதை ,

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தப்பட்ட போது இடதுசாரி கட்சிகள் ,காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
காரணம் ராம்நாத் கோவிந்த்ஆரம்பகாலம் முதலே ஆர்.எஸ்.எஸ்,பின்னர் அதன் மற்றோரு வடிவான பாஜக காரர்.
அதுதான் அவரை எதிர்த்து வேட்பாளரை  நிறுத்த முதல் காரணம் .
ஆனால் குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியில் அமர்ந்ததில் இருந்து அவரின் பேச்சுக்கள்,நடவடிக்கைகள் அப்பதவிக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ளது.
அவரைக்கண்டு பயந்து எதிர்த்த வர்கள் அவரை பாராட்டும்படியும்,அவரை முன்னிறுத்திய பாஜக,ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருக்கு அதிருப்தியையும் தருகிறது.


பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருந்து, வேட்பாளராக நிறுத்தப்பட்டு, குடியரசுத் தலைவரான பின்னர், ராம்நாத் கோவிந்த் பேசிவரும் பேச்சுக்கள் பெரும்பாலும்- அவரின் முந்தைய பேச்சுக்களிலிருந்து நிறைய மாறுபட்டிருப்ப தால், பாஜகவினர் பதற்றம் அடை யத் துவங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது “இந்தியாவைப் பொறுத்தவரை, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வேற்றுகிரக வாசிகள்” என்று கூறியதுடன், சிறுபான்மையினரின் உரிமை தொடர்பான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை, கடுமையாக எதிர்த்தவர்தான் ராம்நாத் கோவிந்த். அதன்மூலம் தீவிர ஆர்எஸ்எஸ்காரராக, ராம்நாத்கோவிந்த் தன்னை அடை யாளப்படுத்தி இருந்தார். 

நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியில் பாஜக அவரை அமர்த்துவதற்கும் அதுதான் காரணம்.

ஆனால், தற்போது ராம்நாத் கோவிந்தின் பேச்சுக்கள், பாஜக-வினரை நிம்மதி இழக்க வைத்து வருகிறது. ராம்நாத் எழுதிக் கொடுத்த தைச் சொல்கிறாரா; அவரின் சிந்த னைகள்தான் இதுவா? என்று குழம்பி வருகின்றனர். 
முதலில் இந்தித் திணிப்பு விஷயத்தில்தான் ராம்நாத், பாஜக-வினருக்கு மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட காலங்களில் இந்தித் திணிப்புக்கு எதிராக அண்மையில் போராட்டங் கள் வெடித்தன. 

குறிப்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங் களில் இடம்பெற்றிருந்த இந்தி வார்த்தைகளை கன்னட அமைப்பி னர் தார் பூசி அழித்தனர். தமிழ்நாடு,மும்பை, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் சாலையோர மைல் கற்கள், ரயில்நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டன. ஒரு குடியரசுத் தலைவராக இதன்மீது உடனடியாக ராம்நாத் கவனம் செலுத்தினார். 

“இந்தி பேசும்மாநிலங்கள், அம்மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது” என்றார். “இந்தித் திணிப்பால் நாட்டின் ஒற்றுமை குலையும்”என்றும் அதிரடியாக எச்சரிக்கை கொடுத்தார்.
திப்புசுல்தான்
அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய ‘தீக்ஷா பூமி’க்குச் குடியரசுத் தலைவர் சென்றார். அங்கு “அஹிம்சை, அன்பை போதிக்கும் புத்தரின் போதனைகளே தற்போதைய உலகுக்கு அவசியமானது” என குறிப்பிட்டார்.


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான- தென்னிந்திய விடுதலைப் போராட்டத்தின் குவிமையமாக விளங்கியவர் திப்பு சுல்தான். அவரைப் பாஜகவினர் ஏற்பதில்லை. 
கர்நாடகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடத்த மாநிலஅரசு தீர்மானித்திருப்பதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். விழா கொண்டாடக்கூடாது என்று வெறிக்கூச்சல் போட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் திண்டுக்கல் லில் அமைக்கப்பட்டுள்ள திப்பு மணிமண்ட பத்தை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வரு கின்றனர்.
ஆனால், கடந்த அக்டோபர் 25-ஆம்தேதி காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பவள விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், திப்பு சுல்தான் விவகாரத்திலும் பாஜகவினரை கதற விட்டார்.

“மைசூர் புலி எனப்பட்ட திப்பு சுல்தான் வலிமையான வீரர்; 
அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தவர்; இந்த போர்களில் அவர் பயன்படுத்திய ராக்கெட்டுகளை வைத்துத்தான் பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் ராக்கெட் தொழில்நுட்பத்தையே உருவாக்கினார்கள் பின்பற்றத் தொடங்கினர்; அத்தகைய மாவீரர் கர்நாடகத்தின் மைந்தன் என்பது சிறப்பு” என்று திப்பு சுல்தானை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.

ஆனால், குடியரசுத் தலைவரின் கேரள வருகை பாஜகவினரை இன்னும்அதிகமாக பதறடித்துள்ளது. கேரளத்தில் ஆர்எஸ்எஸ்காரர்கள் படுகொலை செய்யப்படுவதாக கூறி, பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா துவங்கி, மத்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிர தேச பாஜக முதல்வர் சாமியார் ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் கேரள அரசுக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பரப்பி வருகின்றனர். 

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையில், நாட்டிலுள்ள 29 மாநிலங்களிலும் போராட்டம் என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று மாலை நடந்த அரசு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், “கேரளா மனித வள மேம்பாடு, சுகாதார நலன் மற்றும் கல்வியில் நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது” என்று உண்மைப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். 

“வெளிநாடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை இந்தியா கையாள கேரளமே தலைமை தாங்குகிறது; கேரளா இந்திய வர்த்தகத்தின் எல்லையாகவும் விளங்குகிறது; 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோமானியக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கு வந்தன;
அரேபிய மற்றும் ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் மசா லாப் பொருட்களைத் தேடி கேரளாவையே வந்தடைந்தன; கேரளத் துறைமுகங்களின் செயல்திறனையும், நெறிவழுவா நடை முறைகள் குறித்தும் அவர்கள் (அரேபிய, ஐரோப்பிய வணிகர்கள்) எழுதியிருந்தனர்” என்று கேரளத்தின் சிறப்புக்களை வரிசைப் படுத்தியுள்ளார்.
“கேரள ஆயுர்வேத மையங்கள் நோயில் இருந்து மக்களை மீட்டெடுப்பதில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன; 
அவை மனதளவிலும் நோயாளர்களைப் புத்துணர்வு பெறச் செய்கின்றன; 

எத்தியோப்பியாவில் உள்ள ஏராளமான முன்னோடி பள்ளி ஆசிரியர்களை என்னுடைய பய ணத்தின் போது அந்நாட்டில் கண்டேன்; விசாரிக்கையில் அவர்களும் கேரளத்தின் ஆசிரியர்களே!” என்ற ராம்நாத் கோவிந்த், “கேரள மக்கள் தங்களின் கல்வியையும், அறிவையும் நம் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்த விரும்புகின்றனர்” “கேரளநிர்வாகிகளின் நேர்மையைப் பாராட்டு கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

கேரளத்தில் வெள்ளியன்று தகவல் தொழில்நுட்ப நகர துவக்கவிழாவிலும் சனிக்கிழமை உயர்நீதிமன்ற வைரவிழா விலும் அவர் பங்கேற்றார்.

கேரள மாநிலத்தின் கல்வி,சுகாதாரத்துறைகள் படுமோசமாக இருப்பதாக பாஜக தலைவர் களான அமித் ஷா , ஆதித்யநாத் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கடுமையாக விமர்சித் திருந்தனர். 
இந்நிலையில், அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளத்தை மிகவும் புகழ்ந்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியிருப்பது, பாஜக-வினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

=====================================================================================================================================
ன்று,
அக்டொபர் -29.


 • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து  "சர்வதேச செஞ்சிலுவை சங்கம்" அமைத்தனர்(1863)
 • துருக்கி குடியரசு தினம்(1923)
 • கவிஞர்  வாலி பிறந்த தினம் (1931)
 • கல்கியின் "பொன்னியின் செல்வன்" தொடர் வெளிவர ஆரம்பித்தது(1950)
 • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
=======================================================================================
 கவிஞர்  வாலி
தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர்.   அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.   இவர் இயற்பெயர் ரங்கராஜன். 
 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்.  இவர் சிவாஜி, எம் ஜி ஆர் காலம் தொடங்கி தற்போதைய கதாநாயகர்கள் நடித்த படங்கள் வரை பல தலைமுறையாக புகழ் பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர்.
1958ஆம் வருடம் அழகர்மலைக்கள்ளன் என்னும் திரைப்படத்தில் தனது முதல் பாடலை எழுதினார்.   ஆனாலும், 1963ஆம் வருடம் வெளியான கற்பகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் புகழ் பெற ஆரம்பித்தார்.    எம் ஜி ஆரின் மனதைக் கவர்ந்த இவர் தொடர்ந்து எம் ஜி ஆரின் கொள்கைப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.   இவரின் பல பாடல்கள் அந்த காலகட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கண்ணதாசன் பாடல்கள் என்றே பலரும் கருதினர்.    எம் ஜி ஆருக்கு மட்டும் இன்றி அப்போது புகழ் பெற்ற கதாநாயகனான சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதி உள்ளார்.
அன்று தொடங்கிய அவர் கலைப்பயணம் பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடர்ந்தது.   அவர் பாடல்களில் தாயைப் புகழ்ந்து எழுதிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்னும் பாடல் இன்றைய தலைமுறையினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.  அவர் பல ஜனரஞ்சகப் பாடல்களையும் எழுதி அதனால் பல சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறார். எளிமையை விரும்பும் வாலி எப்போதும்  நூலாடையாக இருந்தால் வெள்ளையும், பட்டாக இருந்தாலும் சந்தன நிறமும் விரும்பி உடுத்துவார்.
நடிப்புத் துறையிலும், இவர் கால் பதித்துள்ளார்.   பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  பாலசந்தரின் தொலைக்காட்சி தொடரான கையளவு மனசு தொடரில் இவர் நடிப்பு பெரும் புகழைப் பெற்றுத்ததந்தது.   அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் முதலிய 15 புத்தகங்களுக்கு மேல் எழுதி உள்ளார்.  இவர் ரமணதிலகம் என்பவரை காதல் மணம் புரிந்துள்ளார்.   நடிகைகள் பத்மினி, ஈ வி சரோஜா ஆகியோருடன் நடனம் பயின்றுக் கொண்டிருந்த இவரை மணம் செய்ய பத்மினியும் ஈ வி சரோஜாவும் மிகவும் உதவி உள்ளனர்.
பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள இவர் இயக்கிய ஒரே படம் வடைமாலை ஆகும்.   எம் ஜி ஆர் மட்டுமின்றி கருணாநிதியுடனும் இவருக்கு நட்பு இருந்தது.   பல விருதுகளைப் பெற்றுள்ள வாலி ஆன்மீக நாட்டம் உடையவர்.  முருக பக்தர்.  ஆனால் பெரியாரை புகழ்ந்து வாலி எழுதிய ஒரு பாடலுக்கு பெரியாரால் பாராட்டுப் பெற்றுள்ளார்.    விஸ்வநாதன் – ராம மூர்த்தி தொடங்கி இன்றைய ஏ ஆர் ரகுமான் வரை பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் விருப்பக் கவிஞர் வாலி ஆவார்.  
 வாலி கடைசியாக பாடல் எழுதிய படம் காவியத்தலைவன் .
இவர் தனது 82ஆம் வயதில் 2013ஆம் ஆண்டு ஜூலை மதம் 18ஆம் நாள் மரணம் அடைந்தார்.  சுவாசக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.  இவருடைய மனைவி இவருக்கு முன்பே 2009ஆம் வருடம் இறந்து விட்டார்.  இவருக்கு ஒரே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.   அவர் மூச்சுக் காற்று மறைந்தாலும் அவருடைய பாடல்கள் என்றும் மறையாமல் அமரத்துவம் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சனி, 28 அக்டோபர், 2017

குரோமின் தொடர்ச்சி ?

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடல் எந்திரமாக (பிரவுசராக) குரோம் உள்ளது .
 இதற்கான குரோம் தொடர்ச்சி நிரல்கள் ( எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்), பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. 

குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.
இது ஒரு நல்ல ஏற்பாடு தான். 


ஆனால், நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட இந்த புரோகிராம்கள், சில வேளைகளில் நம் கணினி இயக்கத்தில் தலைவலையையும் ஏற்படுத்துகின்றன. 


மிக அதிகமான எண்ணிக்கையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, நீங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், அவை நம் கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தைக் குறைக்கின்றன.

 குறிப்பாக, நாம் பழைய விண்டோஸ் இயங்கு முறையில்  இயங்கினால், இந்த வேகக் குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. நம் இணையத் தேடலின் வேகமும் மிகவும் குறைவாகவே இருக்கும். 

இத்தகைய சூழ்நிலைகளில், நமக்குத் தேவையில்லாத, ஏதோ ஒரு காரணத்திற்காக, நாம் பதிந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவதே சிறந்த வழியாகும். 

எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்கும் முயற்சியில் இறங்கும் முன், எந்த புரோகிராம்கள், அதிக மெமரி இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன என்று அறிந்து, நீக்குவதில் அவற்றுக்கு முதல் இடம் தர வேண்டும். இதற்கு டாஸ்க் மேனேஜரைப் (Chrome Task Manager) பயன்படுத்தலாம். 


அதில் எந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்து அதனை அன் இன்ஸ்டால் செய்திடலாம். கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
குரோம் பிரவுசர் விண்டோவினைத் திறக்கவும். 


இதன் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். இது 'control and customize' என்று சொல்லப்படும். 

இதில் கிளிக் செய்து, குரோம் பிரவுசர் இயக்கத்தினை, நம் விருப்பப்படி நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். 

இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் 'tools' என்னும் லேபிள் மீது கிளிக் செய்திடவும். 

பின்னர், 'Task Manager” என்பதில் கிளிக் செய்திடவும். டாஸ்க் மேனேஜரைத் திறக்க Shift+Esc என்ற இரு கீகளை அழுத்தவும் செய்திடலாம்.

இப்போது டாஸ்க் மேனேஜர் விண்டோ உங்களுக்குக் கிடைத்திருக்கும். இங்கு நாம் திறந்திருக்கும் டேப்களுடன், உங்கள் பிரவுசருக்கென, நீங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். 


எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பெயர்களின் முன்னால், jigsaw puzzle கட்டங்கள் போன்ற சிறிய படம் இருப்பதைப் பார்க்கலாம். 
இங்கு எளிதாக, ஒவ்வொரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமும், எவ்வளவு மெமரி இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன என்று கண்டறியலாம். 


'Memory tab' என்பதில் கிளிக் செய்தால், இந்த மெமரி இட அளவின் அடிப்படையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வரிசைப்படுத்தப்படும். 

'Stats for nerds' என்பதில் கிளிக் செய்வதன் மூலம், மெமரி பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்களையும் பெறலாம். 
இந்த 'Stats for nerds' டாஸ்க் மானேஜர் விண்டோவின் இடது கீழ் மூலையில் தென்படும். 
இந்த தகவல்களைப் பார்க்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், எது அதிகமாக நினைவகத்தில்  இடத்தைப் பயன்படுத்துகிறது என்று தெரியவரும். 


அந்த நிரல் உங்களுக்கு அவசியமாக  தேவைப்படவில்லை எனில், அதனை நீக்கிவிடுங்கள் .இதனால் தேவையற்ற இடநெருக்கடியை தவிர்க்கலாம்.

இதன் பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்து உங்கள் கணினியை  இயக்கினால், தேடல் எந்திரத்தை பயன்படுத்தினால், அதன் இயக்கத்தில் வேகம் சற்று அதிகமாக இருப்பதை உணர்வீர்கள்.


=========================================================================================
ன்று,
அக்டொபர் -28
 • ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
 • செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
 • கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
 • முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
 • ==========================================================================================

சென்னை எண்ணூர் பகுதிகளில் கமல்ஹாசன் ஆய்வு.
எண்ணூர் துறைமுக கழிமுகப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும்.மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிநடவடிக்கைசிரிப்புக்கு தடா."சிரிப்பதற்கு கூட மோடி அரசு சென்சார் தடை விதிக்கத் துவங்கிவிட்டது. 

ஸ்டார் டி.வி. சமீபத்தில் நடத்திய ஒரு மிமிக்ரி நிகழ்ச்சியில் பிரபல மிமிக்ரி கலைஞரான ஷ்யாம் ரங்கீலா பங்கேற்று நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களை போல மிமிக்ரி செய்து அசத்தினார். 

ஆனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது, ஒரு குறிப்பிட்ட தலைவரைப்போல ஷ்யாம் செய்திருந்த மிமிக்ரி மட்டும் எடிட் செய்யப்பட்டுவிட்டது. 

அந்த தலைவர் நமது பிரதமர் நரேந்திர மோடிதான். கடைசியில் நமது நாட்டில் அரசியல் தலைவர்களை - அதாவது பாஜக தலைவர்களைப் போல மிமிக்ரி செய்வது கூட குற்றமாகிவிட்டது. தணிக்கைத் துறைக்கு இது நல்ல காலம் போலும்.
பாரதிய ஜனதா கட்சிக்கு திடீரென்று காஷ்மீர் மீது பாசம் வந்துவிட்டது. 

அங்குள்ள அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் தீனேஷ்வர் சர்மா சென்றிருக்கிறார். 

முதலில் அவர் காஷ்மீர் அமைப்புகளுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்கான மத்திய அரசின் தூதரா அல்லது பாஜகவின் செய்தி தொடர்பாளரா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். 

அடுத்து, காஷ்மீர் மீது பாஜகவின் பாசம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள கடந்த 41 மாத கால மோடி ஆட்சியில் காஷ்மீருக்காக என்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்தாலே போதுமானது. காஷ்மீர் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை."
                                                                                                                        - தோழர் சீத்தாராம் யெச்சூரி

=========================================================================================


வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஊழல்னா என்னங்க?

ஊழல் பாஜக ஊழல் மோடி

“நான் ஊழல் செய்யமாட்டேன்; எவரையும் ஊழல் செய்யவும் விட மாட்டேன்!” -இது 2014 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிமுழங்கியது! 

ஊழல்களில் மூழ்கியிருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில் மோடியின்கூற்று மக்களிடம் சாதகமான தாக்கத்தை உருவாக்கியது. 

மோடி முதல்வராக இருந்த குஜராத்திலேயே பல ஊழல்கள்நடைபெற்றன எனும் உண்மை மக்களிடம் சென்றடையவில்லை. குஜராத் ஊழல்கள் பற்றிய பிரச்சாரமும் பலவீனமாக இருந்தது.

தற்போது, பா.ஜ.க.வின் 40 மாத ஆட்சியில் வேலையின்மை, விவசாயிகளுக்கு வருமானம், கறுப்புப் பணம் ஆகிய பிரச்சனைகள் எப்படி மோடியின் வாய்பந்தலாக மாறியதோ அதே போல ஊழலுக்கு எதிரான போரும் வெற்றுப் பேச்சாகவே அமைந்தது என்பதை மக்கள் உணர தலைப்பட்டுள்ளனர்.

ஊழலை ஒழிக்க “லோக்பால்” எனும் அமைப்பு உருவாக்க வேண்டும் என்பது ஊழல் எதிர்ப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அனைத்து மட்டங்களில் உள்ளஅரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக லோக்பால் இருக்க வேண்டும் என்பதே கோரிக்கையின் அடிநாதம் ஆகும்.

2013ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியக் கோரிக்கை இதுதான்! அப்பொழுது அன்னா ஹசாரேவை ஆர்.எஸ்.எஸ். உட்பட மோடியும் பாஜகவும்ஆதரித்தனர். 

லோக்பால் சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 
லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், 8 உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும். 
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி,ஒரு சிறந்த நீதித்துறை நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுலோக்பால் தலைவரை தீர்மானிக்க வேண்டும். 

ஆனால் ஆட்சியில் அமர்ந்து 40 மாதங்கள் கடந்த பின்னரும் லோக்பால் அமைக்கப்படவில்லை.
லோக்பால் எனும் சொல்லையே மோடி மறந்துவிட்டார் போலும்!லோக்பால் எனும் கோட்பாடிற்கு சாவு மணி அடிப்பதுபோல ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசாங்கம் ஒரு அவசரச் சட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்தசட்டத்தின்படி எந்த ஒரு அரசு அலுவலர் அல்லது அரசியல்வாதி மீதும் மாநில அரசாங்க அனுமதி இல்லாமல் எவரும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தக் கூடாது. அது மட்டுமல்ல; பத்திரிகைகள் இது பற்றி எழுதவும் கூடாது. நீதி மன்றங்களும் வழக்கை விசாரிக்கக் கூடாது; 
ஊழலுக்குஎதிரான நடவடிக்கைக் கோரி எவரும் இயக்கம் எதையும் நடத்தக் கூடாது. 

அவ்வாறு பத்திரிகையோ அல்லதுசமூக அரசியல் இயக்கங்களோ மீறி ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இத்தகைய ஊழலுக்கு ஆதரவான சட்டம் எந்த மாநிலத்திலும் இல்லை. 
இந்த சட்டம் சரியானதுதான் என மத்திய அமைச்சர் ஒருவர் ஆதரித்துள்ளார் என்பதுமேலும் கொடுமை!

ஊழலுக்கு எதிரான மோடியின் குரல் எத்தகைய வெத்து வேட்டு என்பதை லோக்பால் அமைப்பதில் காட்டும் உதாசீனமும் ராஜஸ்தான் பா.ஜ.க. மாநில அரசாங்கத்தின் சட்டமும் தெளிவுபடுத்துகின்றன. இதில்ஆச்சரியம் அடையவோ அல்லது அதிர்ச்சி பெறவோ ஒன்றும் இல்லை. காங்கிரசைப் போலவே பா.ஜ.க.வும் ஊழலில் ஊறிய கட்சிதான்! 

மோடியின் ஆட்சி அல்லது பா.ஜ.க. மாநில அரசாங்கங்களின் ஆட்சியில் நடந்துள்ள சில ஊழல்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன. 

இவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் போன்ற ஊழல்களும் உள்ளன.


மோடியின் ஆட்சியில் அதானி மட்டும் பெற்ற சலுகைகள் ஏராளம். அவற்றில் சில:
ஆண்டு 2005. முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புபொருளாதார மண்டலத்திற்கு 16,000 ஏக்கர் நிலம் ஒரு சதுர அடி வெறும் 12 பைசாவுக்கு தரப்பட்டது. 
சந்தை விலை சதுர அடிக்கு ரூ.102. அதானிக்கு ஆதாயம் ரூ.6546கோடி.

2006-09ஆம் ஆண்டுகளில் குஜராத் பெட்ரோலிய நிறுவனம் இயற்கை வாயுவை அதிக விலைக்கு வாங்கி அதானிக்கு குறைவாக விற்றது. அதானி பெற்ற ஆதாயம் ரூ. 70.5 கோடி.
2015ஆம் ஆண்டு இறக்குமதி வரி மற்றும் எக்ஸைஸ் வரி தள்ளுபடி ரூ.1000 கோடி.ட ஆண்டு 2016 நிலக்கரி ஊழல் மூலம் ஆதாயம் ரூ.50,000 கோடி. 
அமலாக்கத் துறை விதித்த அபராதம் ரூ.5,000 கோடி.

2016 வர்த்தக அமைச்சகம் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான விதிகளை திருத்தியதன் மூலம் அதானிக்கு லாபம் ரூ.500 கோடி.
இதனை வெளியிட்ட எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி ஆசிரியர் பதவி விலக நேர்ந்தது.
2002ஆம் ஆண்டு ரூ.3000 கோடியாக இருந்த அதானியின் வருமானம் 2015ஆம் ஆண்டு ரூ.75,659 கோடியாக உயர்ந்ததில் என்ன ஆச்சர்யம் உள்ளது? 

2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பயன்படுத்திய விமானம் அதானிக்கு சொந்தமானது . அத்தேர்தலில்  அதானி செய்த செலவு ரூ.10,000 கோடி எனவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

இந்த ஊழல்களின் வரிசையில் தற்பொழுது அமித்ஷாவின் மகனின் ஊழலும் சேர்ந்துள்ளது. 
இந்த ஊழல்களை வெளியிடும் பத்திரிகைகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது. 

அதானியின் ஊழலை வெளியிட்ட எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி ஆசிரியர் பதவி விலக நிர்ப்பந்திக்பப்பட்டார்.
பா.ஜ.க.வை விமர்சித்த இந்துஸ்தான் டைம்ஸ்ஆசிரியர் பதவி விலக வேண்டி வந்தது. 
அதே போல பா.ஜ.க.வை விமர்சித்த என்.டி.டி.வி. மீது வழக்குகள் போடப்பட்டன. 
ஜெய் ஷாவின் ஊழலை வெளிப்படுத்திய தி வயர் இதழை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
பா.ஜ.க. எவ்விதத்திலும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை மக்கள் வேகமாக உணர ஆரம்பித்துள்ளனர். 
நகமும் சதையும் போல நவீன தாராளமயமும் ஊழலும் பிரிக்க முடியாதவை. 
ஊழல் பல ஆண்டுகளாகவே இருந்தாலும் நவீன தாராளமயக் கொள்கைகள் ஊழலின் இமாலய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. 
ஊழல் ஒழிப்பு குறித்த மோடியின் பொய்கள் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அரசியல் தோல்வியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
                                                                                                                                         அ.அன்வர் உசேன்  
                                                                                                                           
 ஆ தாரங்கள்:
 1)cpim.org
2) இந்துஸ்தான் டைம்ஸ்/23.10.2017/
3) தி வயர்/25.09.2017
==================================================================================================================================
ன்று,
அக்டொபர் -27.


 • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
 • முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிறந்ததினம் (1920)
 • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
 • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)

கேரளாவில்  கோட்டயம் மாவட்டம், உழவூர் கிராமத்தில் 1920 அக்டோபர் 27ல்கே.ஆர்.நாராயணன்  பிறந்தார். 
கோட்டயத்தில் கல்லுாரி கல்வியையும், கேரள பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்பையும் முடித்தார். இதழியல் படிப்பை முடித்த அவர், ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றினார். 
லண்டன் பொருளாதார கல்விக் கழகத்தில், அரசியல் அறிவியலில் மேல்படிப்பை முடித்தார். 
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றியவர்.
இந்திரா வேண்டுகோளை ஏற்று, 1984ல் அரசியலுக்குள் வந்தார். 
கேரள மாநிலம், ஒட்டப்பாலம் லோக்சபா தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். 
ராஜிவ் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். 
1992ல் நாட்டின் ஒன்பதாவது துணை குடியரசுத்தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1997ல் இந்தியாவின் குடியரசுத்தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 
2005 நவ., 9ல் காலமானார். 
   கமல்ஹாசன் அறிக்கை.

சேகர் ரெட்டிக்கு ரிசர்வ் வங்கியே உடந்தையா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுபவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி.
அவரது வீட்டிலும் அவரது கூட்டாளிகளிடமிருந்தும் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகள் அவர்களுக்குக் எப்படிகிடைத்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று சிபிஐ கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் பொதுமக்கள் ஒன்றிரண்டு தாள்களைமாற்றிக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வளவு பெரியதொகையை அவர்கள் மட்டும் எப்படி மாற்றினார்கள் ? 
வங்கி அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆசியில்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூபாய்நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகளைப் பராமரிக்க வில்லை என்று நாட்டின் ரிசர்வ் வங்கி கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை. வேண்டுமென்றே அந்த ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லையா? 
அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா ? 
புதிய ரூபாய் நோட்டுகள் அரசுப் பணக் கிடங்குகள் வரை சென்று சேர்ந்தது குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் பற்றி பணக் கிடங்குகளுக்கு அப்பால் எவ்வித தகவல்களும் சேகரிக்க முடியவில்லை’ என்றும் சிபிஐ போன்ற மிகப்பெரிய விசாரணை அமைப்பு கூறுவது வேடிக்கையாக உள்ளது. 

மகாராஷ்டிரா மற்றும்மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல, கர்நாடகத்திலும், மேற்குவங்கத்திலும் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் இந்தியரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. 

எனவே ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை மத்திய அரசு தான் விளக்கவேண்டும்.

இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் ஏற்கெனவே ஜாமீனில்வந்துவிட்டனர். ஆதாரம் இல்லை என்றவுடன், ‘தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று ரெட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.

ஏற்கெனவே, கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்ட வழக்கும், கரூர் அன்புநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீதெல்லாம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பான விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

எனவே அதோடு சேர்ந்து ரெட்டி மீதான இந்தவழக்கையும் நீர்த்துப்போகச் செய்ய மத்தியஅரசில் அதிகாரமிக்கவர்களின் துணையோடு சதி நடப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகாமல் ரிசர்வ் வங்கி, தன்னிடமுள்ள ஆதாரங்களை முறையாக சிபிஐ வசம் ஒப்படைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய முன்வரவேண்டும்.
==========================================================================================
                                       எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.எம்ஜிஆர் எங்கே?
                                                 எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.மக்கள் எங்கே?