வியாழன், 30 நவம்பர், 2017

முதல்வரின் கூடுதல் பொறுப்பு ஆளுநர்.

தமிழ் நாட்டில் முதல்வராக உட்கார்ந்திருக்கும்  எடப்பாடி பழனிசாமிக்கு இணையான இன்னோர் அரசாங்கத்தை ராஜ்பவன் மோடியின் ஆசியுடன் வெளிப்படையாகவே  நடத்தத் துணிந்து விட்டது தெளிவாகிறது.

இது எந்த காலத்திலும் காலூன்றி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியா பாஜகவின் கொல்லைப்புற ஆட்சியாகவே அமையும்.
கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (நடுவில்).  
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில்  நிதின் கட்கரி உடன் .


அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக ஆளுநர் மாளிகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான, புதிய கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற அறிவிப்பின் மூலம் மத்திய அரசு தமிழகத்தில் ஆளுநர் மாளிகை மூலம் இணை அரசு நடத்தி வருவது வெளிப்படையாகிவிட்டது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) இரவு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.
“தமிழ்நாடு ஆளுநருக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அப்பதவியில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்படுகிறார். 

இவர் ஒரு வருட காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்.எதற்கு இதற்கு எதற்கு அவசரம்,அவசியம்?.
ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி எனப்படுவது தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு நிகரானதாகும்.

இதுவரை தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகத்துக்கு மாற்றப் பட்டிருக்கிறார்” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், பிரதமர் அலு வலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் தமிழகத் திட்டம், வளர்ச்சிசிறப்பு செயலாக்கத் துறை செயலா ளராக நியமிக்கப்பட்டார். 
டி.வி.சோமநாதன்பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்க மானவர் என்றும் மோடியின் கண் களாகவே அவர் கோட்டையில் இருப்பார்என்றும் கூறப்பட்டது. 

அத்துடன் ‘தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் டி.வி.சோமநாதன் என்றால், மத்திய உள்துறையின் முக்கிய அதிகாரியான ராஜகோபால் ஐ.ஏ.எஸ். தமிழக ஆளுநர் மாளிகைக்கு வருகிறார்’ என்றும் கூறப்பட்டது.
அதன்படியே செவ்வாயன்று தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜகோபால் தலைமைச் செயலா ளர் அந்தஸ்தில் உள்ள 1987ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. 
அவர் ஆளுநர் மாளிகையில் இருக்கும் ரமேஷ் சந்த் மீனா என்ற 1991 பேட்ச் அதிகாரியின் இடத்தில் எப்படி நியமிக்கப்படுவார் என்று கடந்த வாரத்தில் இருந்து குழப்பம் நிலவியது. 

இந்நிலையில் ஆளுநருக்கென புதிய பதவியாகக் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையானவர் என்ற ஆணையை தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனே வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கோவையில் தமிழக அரசுஅதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 

இதற்கு ஆளுங் கட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், சட்டப்படிதான் ஆளுநர் ஆய்வுகளை நடத்துகிறார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.

அதேநேரம் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியபோது ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்க முடியாது என்பதும் ஆனால், மாநில அரசின் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு இணையாக ஆளுநர் ஒரு தலைமைச் செயலாளரைத் தனக்கென வைத்துக் கொள்ளலாம் என்றும் சட்டத்தில் உள்ள ஓர் அம்சம் மத்திய அரசுத் தரப்புக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாகவும், அதன்படி இந்திய ஆட்சிப் பணி சட்டம் 1954இன் 4(2)இன்படி ஆளுநருக்குத் தலைமைச் செயலாளர் என்ற தற்காலிக பதவியை உருவாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.


இனி தமிழக தலைமைச் செயலாளர்கிரிஜா வைத்தியநாதனுக்கு இருக்கும் அத்தனை அதிகாரமும் ஆளுநரின் தலைமைச் செயலாளர் ராஜகோபா லுக்கும் உண்டு.  

அதிமுக முதல்வர்களை கட்டுப்படுத்தத்தான் கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளரானார்.

அவரின் பணிக்கு ஆதரவாக செயல்படவே ராஜகோபாலை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இருவருமே கவுடில்யர் வம்சம்.

இனி தமிழகத்தை பாஜக கோலோட்சும்.

ஆளுநர் ஆய்வை வரவேற்ற அடிமை ஆட்சியாளர்களுக்கு இனி கட்டளைகளைப் பெற டெல்லிக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.

சுடச்சுட ராஜ்பவனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.தமிழ்நாடு தனித்தன்மையாக கூறிவந்த மாநில சுயாட்சி இனி மெல்ல ..........!
 ======================================================================================

"நவில்தொரும் நூனயம் போலும் பயில்தொரும் 

பண்புடை யாளர் தொடர்பு"

படிக்கப்படிக்க நல்ல நூல்போல பழகப்பழக இன்பம் தரும் பண்பாளர் நட்பு

ன்று,
நவம்பர் -30.
ஜகதிஷ் சந்திர போஸ்


 • ஸ்காட்லாந்து தேசிய தினம்

 • இந்திய விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)

 • பார்போடஸ் விடுதலை தினம்(1966)

 • வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
======================================================================================
புதிய போலி இந்தியா.
இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10ல் ஒன்று போலியானது என உலக சுகாதார நிறுவன, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் சார்பில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறை கடந்த 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது சர்வதேச அளவில் 3 கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. 
அப்போது 1500 தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
முடிவில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
குறிப்பாக மலேரியா மற்றும் ஆன்டி பயாடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது. 
இதன்மூலம் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவ அமைப்பும்,சுகாதார தர நிர்ணயத்துறையினரும் இது போன்று மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதை விட என்ன வேலையை செய்து கிழிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து பொருட்களில் தரமே இல்லை. அதனால் அந்த பொருட்களை திரும்பப்பெற நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
போலிச்சாமியார் பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தில் ஆயுர் வேத முறையில் மருத்துகள் தயாரிக்கப்படுவதாக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்யப்படுகிறது. 
விளம்பரங்களை நம்பி மக்கள் பதஞ்சலி பொருட்களை வாங்கத்துவங்கி உள்ளனர். மேலும் ஆளும் அரசும் பதஞ்சலி நிறுவனப்பொருட்களுக்கு பல வகைகயில் ஆதரவு அளித்து வருகிறது. 
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள திவ்யா பார்மசியில் தயாரிக்கப்பட்டுள்ள 6 பொருட்கள் நுண்ணுயிர் சோதனை மூலம் தரமற்றது என்று கண்டு படிக்கப்பட்டுள்ளது.
 இதனால் தரக்குறைவானது என்று நிரூபிக்கப்பட்ட ஆம்லா சூர்ணா, திவ்ய கஸ்ஹர் சூர்ணா, திரிபாலா சூர்ணா, பகுச்சி சூர்ணா, அஸ்வகந்தா, அதிவ்யா சூர்னா, ஆகிய 6 மருந்து பொருட்களை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்பப்பெறும் படி பதஞ்சலி நிறுவனத்திற்கு நேபாள் அரசு நோட்டீஸ் வழங்கி உள்ளது. 
மேலும் இந்த பொருட்களை பரிந்துரை செய்யவும் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ஆம்லா சூஸ்(நெல்லி சாறு) தரமற்றது என்று ஆய்வக சோதனையில் தெரியவந்தது. 
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ராணுவ கேண்டீன்களில் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆம்லாசூஸ்சை(நெல்லி சாறு) திரும்பப்பெற உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
=========================================================================================புதன், 29 நவம்பர், 2017

இந்த கொடுமைக்கு முடிவெப்போ ??


எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். 

முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தில் தங்களது கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது போல அரசு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். 

ஒரு மாவட்டத்துக்கு 3கோடிகள் எனக்கணக்கிடப்பட்டு வருவாய்த்துறை மூலம் இந்த நூற்றாண்டு விழாக்கள் மக்கள் வரிப்பணத்தில் நடக்கின்றன.


ஏன் இதை நடத்த அதிமுகவிடமும்,அமைச்சர்களிடம் பணம் இல்லையா?

வருமானவரி ஆய்வில் பிடிபடும் கணக்கைப் பார்த்தால் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல அவர் அம்மா சத்ய பாமா ,சந்தியா,ஜெயலலிதா ஆகியோருக்கும் கோடிகளைக்கொட்டி விழா கொண்டாடலாம்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல,சம்பளமும் கொடுக்க முடியாமல் போக்குவரத்துக்கு கழக பணிமனைகள் ,கட்டிடங்களை தனியாரிடம் அடகுவைத்து நிர்வகிக்கும் கையாலாகாத அரசுதான் மக்கள் பணத்தை இறைத்து விளம்பரம் தேடுகிறது.கொடுமை.

முதல்வரும், துணை முதல்வரும் தங்களதுஆட்சியை யாரும் அசைக்க முடியாது என்று சவால் விடுவதற்கே இந்த மேடைகளை பயன்படுத்துகின்றனர். உண்மையில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும்தான் ஒருவரை ஒருவர் கவிழ்க்க முயல்கின்றனர். இருவரது ஆதரவாளர்களும் போட்டியிட்டு வைக்கும் பேனர்கள்,கட்டவுட் களில் இருவருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூற்றாண்டு காணும் எம்.ஜி.ஆர் தான் பாவம்,காணாமல் போய் விடுகிறார்.

இந்த கலெபரத்தில் எடப்பாடி அறிவிக்கும் திட்டங்கள் யாருக்கும் பயனின்றி யார்யாரையோ திருப்தி படுத்த முனைகிறது.
தமிழ்நாட்டில் தினசரி நடத்தி பல்லாயிரம் கோடிகளை குவித்து வைத்திருக்கும் தினத்தந்தி சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அரசு காட்டுகிறதாம்.

இதனால் மக்களுக்கு என்ன பயன்?சிவந்தி ஆதித்தனார் தமிழக மக்களுக்கு செய்த சேவை,நன்மைகள் ஒன்றை இந்த அரசு சொல்ல முடியுமா?
தினத்தந்தி,மலைமுரசு,மாலைமலர்,ராணி,ராணி முத்து,ராணிகாமிக்ஸ்,aside ,கோகுலம் கதிர் என்று இவர்கள் வெளியிட்ட வெளியீடுகளை இலவசமாக மக்களுக்கு கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களா?தமிழை வளர்த்தார்களா?


வழக்கமான பக்கங்ளுக்கு அதிகமாக விளம்பரம் கிடைத்தால் அதிக பக்க விளம்பரம் வெளியிட்டு அதற்கும் பத்திரிக்கை விலையை இரண்டு ரூபாய் வாங்கி கல்லாவை நிரப்பிய சுத்தமான வியாபாரிக்கு அரசு செலவில் மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் கொடுமையான செயல்.

பிரதமர் மோடியிடம் நெருக்கமாக இருப்பது யார் என்பதில் இவர்களுக்குள் பெரும் போட்டியேநடக்கிறது. மத்திய அரசின் தயவில் இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்ட நிலையில், அவர்களிடையே மோதல் முற்றியுள்ளது.

பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சிக்கு ஆளுநர் முட்டுக்கொடுத்து வருகிறார். இந்த பின்னணியிலும் கூட முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்ததுபோல ஆடம்பரம், படாடோபத்தில் ஈடுபடுகின்றனர். 

தாங்கள் நடத்தும் விழாக்களுக்கு மக்கள் வர தயங்குவதால் நலத்திட்ட உதவி என்கிற பெயரில் முதியவர்களை, எளிய மக்களை அலைக்கழிக்கின்றனர். 


கலைநிகழ்ச்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களை விழாவுக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததை பொதுநல வழக்குஒன்றில் அளித்த தீர்ப்பின்மூலம் உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது.
உயிரோடு உள்ள தலைவர்களுக்கு கட்அவுட்வைக்கக்கூடாது என்பதும் நீதிமன்ற தீர்ப்பு. 


ஆனால் இதை மீறி முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்களின் கட்அவுட்கள் வைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது செல்வாக்கை காட்ட அலங்கார வளைவுகள் அமைக்கின்றனர். 

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதன் உச்சகட்டமாக கோவையில் எம்ஜிஆர்நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவின் மீது மோதி ரகு என்றஇளம் வயது பொறியாளர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இது தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் ஆடம்பர அரசியலால் நிகழ்த்தப்பட்டுள்ளஒரு படுகொலையாகும். இந்த கொடிய விபத்தை மூடி மறைக்கும் வகையில் காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். 

விபத்து தொடர்பாக பதிவாகியுள்ள கேமரா காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். 

அலங்கார வளைவு அமைத்தவரை பலிகடாவாக்கி பெரிய மனிதர்கள் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது.
கட்அவுட் கலாச்சாரம் என்பது தமிழக அரசியலில் ஒரு நோய் போல பரவியுள்ளது. 

மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் போது ஆள்வோர்கள் ஆடம்பரத்தில் திளைப்பதும் அரசு செலவில் ஊர் ஊராக உலா நடத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. 

அரசியலின் பெயரில் செய்யப்படும் ஊதாரித்தனம் குறித்து பொது வெளியில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
=======================================================================================
ன்று,
நவம்பர்-29.


 • தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)

 •  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)

 • பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)
=====================================================================================
சிரிக்கவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த கலைவாணர்.

“அண்ணே.. நம்ம தெருக்கோடி செல்லமுத்தண்ணன் நடக்குறது கொஞ்சம்கூட சரியில்லேண்ணே..’

கலைவாணர்: ”ஏன் அவருக்கு காலுல கட்டி வந்திருக்கோ?”

“அது இல்லண்ணே.. பொண்டாட்டிய ஆத்தா வூட்டுக்கு அனுப்பிட்டு.. எவளோ ஒருத்தியை கொண்டாந்து வீட்டுல வச்சிருக்காரு. ஊரு முழுக்க கடன்.. குருசாமி செட்டியாரு ஆளைப்புடிக்கிறதுக்கு வாரண்ட்டோட அலையுறாராம்.’

“அப்படியா? அப்ப செல்லமுத்து அண்ணன் குளோஸ். நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே.. அப்படித்தானே? அது இருக்கட்டும்.. தம்பி உன் ஜேப்புல (பாக்கெட்) என்ன இருக்கு?''

“அதுவாண்ணே கொஞ்சம் சில்லறை, அப்புறம் பேப்பரு, பேனா இதெல்லாம் இருக்கு”

“அப்படி சொல்லக்கூடாது.. சில்லறைண்ணா எவ்வளவு சில்லறை.. பேப்பருன்னா எத்தனை பேப்பரு.. அதுல என்னன்ன எழுதியிருக்கு? எல்லாத்தையும் விவரமா சொல்லணும்”


“இருங்கண்ணே.. ஒரு முறை பார்த்துட்டு சொல்றேன்..”

“பார்க்காம சொல்லணும் தம்பி”

“பார்க்காம எப்படிண்ணே முடியும்?”

“சரிதான்.. ஜேப்புல இருக்கிறத பார்க்காம சொல்ல முடியாது. செல்லமுத்தண்ணன் விசயம்னா பார்க்காமலேயே சொல்ல முடியும். அப்படித்தானே.. இப்படித்தான் நம்ம நாட்டுல, தன் தப்பை தெரிஞ்சிக்காம பிறத்தியானைப் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க.... ”

https://www.youtube.com/watch?v=9mBRhw0u0zM
-கலைவாணர் தயாரித்து நடித்த ‘மணமகள்’ (1951) படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி இது. 
வசனகர்த்தா, கலைஞர். 
இந்தப் படத்திற்கு வசனம் எழுதியதற்காக கலைஞருக்கு கார் வாங்கித் தந்தார் கலைவாணர். 
அப்போது கலைஞருக்கு வயது 28. 
இத்தனை இளம் வயதில், எழுத்துத்திறமையால் கார் சம்பாதித்த ஒரே தமிழ் எழுத்தாளர் கலைஞர்தான். 

“தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும்மகான் கிருஷ்ணன். 
தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 
கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம்வாய்த்திருக்கிறார்.
இல்லை; தப்பிதம்.சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்ததுபோல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். 
இது தமிழ்நாட்டின் பாக்கியமாகும்” 1943-ஆம் ஆண்டிலேயே கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் அக்கிரகாரத்து அதிசய மனிதர் எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.கலைவாணர் என்.எஸ்.கே. என்று தமிழகமக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் நாகரீகக் கோமாளி என்பதாகும்.
 “நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடிபாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தான் அய்யா!” என்று தமது சொந்தப் படமான நல்ல தம்பியில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர்.
ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் ‘என்கடன் களிப்பூட்டல்’ என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.
கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் சில சுவையான நிகழ்ச்சிகள்...மதுரை வீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:அத்தே! என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). 
அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரைவீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.
இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரைமாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையானஉரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?” “வை அண்டான்னானா? 
குண்டான்னானா? வை, கைன்னு தானே சொன்னான்?
”1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ஆம் ஆண்டு(வெள்ளி) விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட்ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார். 
கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார் என்று பலரும் நினைத்தனர். “அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.
“அதற்கு நான்கு மை வேண்டுமே?” என்றார் கல்கி.
“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிகஅருமை...” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!'
என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். 
அந்தச் சரித்திரநாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார்.
“வங்க ராஜாதங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள்கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க,வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப்போக,அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.'
திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன் என்ற கலைவாணரைப் பற்றியநூலின் முடிவில் எழுதியிருக்கும் வரிஇது:“1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”. அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர்அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை;
“பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார்.தமிழ் கூறும் நல்லுலகை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நிகரற்ற கலைஞர் கலைவாணர் சோஷலிச சோவியத் ரஷ்யாவிற்குச்சென்று அங்கு கண்டு வந்ததைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசியவை காலத்தால் அழியாதவை.
சோவியத் ரஷ்யா குறித்து கலைவாணர்“மதபீடத்தில் சாயாத, மதியை இழக்காத நாடு” எனப் புகழ்ந்தார். மேலும் “பொன்னாடு, தர்மபுரி, உல்லாசமிருந்த சோலைவனம், அறிவு நிறைந்த கலைக்கூடம்” என்றெல்லாம் வாயாரப் புகழ்ந்து பேசினார். கலைவாணர் அந்நாட்டுடன் நம் நாட்டை ஒப்பிட்டுப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. 
“ உலகம், மாயை, காயம், பொய்என்ற வேத பாராயணம் அல்ல.
தொழில் பெருக்கம், அறிவு வளர்ச்சி, நல்ல ஆற்றல்,வாழ்க்கையில் இன்பம் எல்லாம் காண்கிறோம் அங்கு ரஷ்யாவில்! கடவுள், மதம்,சாதிமதம், பழைய புராணப் பண்பாடுகளுக்கு இருப்பிடம் இங்கு இந்நாட்டில் நிலவுவது’’ என்றார். மேலும் “வாழ்கின்ற மக்கள்முப்பத்து முக்கோடி என்றால், சூழும் பேதங்கள் அந்தத் தொகை இங்கு நம்நாட்டில் காண்பது. 
எல்லோரும் ஓர் குலம்,எல்லோரும் ஓரினம், எல்லோரும் சரிசமம் என்னும் நிலை அங்கு ரஷ்யாவில் காணப்படுவது எனப் புகழ்ந்தார். சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்த எந்தக் கலைஞரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைப் போல் சோஷலிச சோவியத் ரஷ்யாவின் அருமை பெருமைகளை விரிவாக வியந்தும்புகழ்ந்தும் பேசியதில்லை. 
அந்தளவிற்கு மண்ணில் சொர்க்கம் எனும் மாண்புகளை நேரடியாகக் கண்டும் கேட்டும் ஒன்றிப் போனவராய்த் திகழ்ந்தார் கலைவாணர்.

=======================================================================================

விழித்தெழும் இந்தியா?
இந்தியாவில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுஅதிகரித்துள்ளது.
 இயற்கையை பேணுவது குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பரித்ததால் தமிழகத்தில் பன்னாட்டு மென்பானங்கள்  விற்பனை குறைந்ததுள்ளது. 
மேலைநாடுகள் தங்கள் மென்பானங்களை நம்நாட்டில் திணித்து   பொருளாதாரத்தை மட்டுமல்ல இயற்கைவளங்களையும் சீர்குலைப்பதை இளம்தலை முறையினர் உணர்ந்து விட்டனர்.
குடிக்க நீர் இல்லாமல் மக்கள் அலையும் இடத்திலேயே கோககோலா ,பெப்சி நிறுவங்கள் நிலத்தடி நீரை பகல்கொள்ளை அடிப்பதுடன் ,தனது ரசாயன கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டி நிலங்களையும் விஷமாகி விட்டன.
யார் போட்டோ எடுத்தாலும்
 போஸ் கொடுக்காரே பாஸ்
.

அரசிடம் நிலத்தடி நீரை 100 லிட்டர்கள் ஒரு ரூபாய் அளவில் வாங்கி அதையே கோலாவாக்கி 180 மி.லிட்டர் 30 ரூபாய்க்கு விற்கிறது கோலா . 
இருக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளை  பார்க்கும் கோலா,பெப்சி நிறுவங்கள் ரசாயன கழிவுகளை மட்டும் விவசாய நிலங்களில் போட்டு விட்டு,பல்லாயிரக்கணக்கான கோடிகளில் லாபத்தை அமெரிக்காவிற்கு  செல்கிறது
 இதற்கு எதிராக கேரளாவில் மக்கள் கிளர்ந்தெழுந்து கோககோலா தொழிற்சாலையை மூட வைத்தது வரலாறு.
ஒருபக்கம் இளைய தலைமுறை விழிப்புணர்வு.
மறுபக்கம் இந்தியா முழுக்கவும் கோக் ,பெப்சி உறிஞ்சுவதை நாகரிகமாக கருத்திய மேட்டுக்குடி  மக்கள்,கோககோள ,பெப்சியில் சேரும் ரசாயனங்களை ,கழிப்பறை கழுவும் அமிலம் போல் அவை உள்ளதை அறிந்து  ஆரோக்கிய பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் லாபம்தான் இதுபோன்ற காரணங்களால் கோலா உற்பத்தியாளர்கள், விற்பனை சரிவை சந்தித்து வருகிறார்கள். தற்போது நாடு முழுக்க கோககோலா நிறுவனத்திற்கு 21 ஆலைகள் உள்ளன. 

2017ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி, கோககோலா நிறுவன வருவாய் ரூ.9,472 கோடியாக இருந்தது.
இதனால் கோக்கோ கோலா உற்பத்தி மையங்கள் பலவும் கடந்த இரு வருடங்களில் மூடப்பட்டு வருகின்றன. 

மேலும் புதிதாக உற்பத்தி மையங்களை அமைக்கும் இடங்களில் உள்ளூர் மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


எனவே இந்த நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மட்டத்தில்  சுமார் 250 பேர்களை கோலா வீட்டுக்கு அனுப்ப  செய்துள்ளதாம். நிதிப்பிரிவு, மனிதவள பிரிவுகளில் பணியாற்றியவர்கள் அதிகம்பேர் இதில்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
==================================================================================================

செவ்வாய், 28 நவம்பர், 2017

கொலையாளிகள் ?


அதிமுக வினரின் அலங்கார மோகம் பேனர், பிரமாண்ட வளைவுகள் வைக்கும் வியாதிக்கு இதுவரை பலர் பலியாகியிருந்தாலும் அவர்கள் திருந்துவதாகவே தெரிய வில்லை.
ஜெயலலிதாவிடம் பெயர் எடுக்க அதன் மூலம் பதவியை கைப்பற்றி பணம் சம்பாதிக்க ஆரம்பித்த இந்த கடஅவுட் கலாசாரம்  ஜெயலலிதா போய் சேர்ந்த பின்னரும் எந்த குறைவுமின்றி தொடர்வது கவலையை தருகிறது.
டிராபிக் ராமசாமி என்னதான் போராடினாலும்,நீதிமன்றம் கண்டித்தாலும் அதிமுகவினர் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தங்கள் பேனர்,வளைவு,கட் அவுட் பணியை தொடர்ந்து மக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடைஞ்சல் செய்வதை தொடரவே செய்கின்றனர்.
 ரகு கொலைக்கான அதிமுகவினரின்வளைவு 

மக்கள் வெறுக்கும் ஒரு செயலை செய்வதில் அதிமுகவினரை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை.
இவர்களின் வீணாய்ப்போன இந்த விளம்பர மோகத்தில் பல உயிர்கள் காணாமல் போய்வுள்ளது மிகுந்த வேதனை.
இதனால் பல விபத்துகள் உண்டாகியுள்ளதும்,சிலர் உயிரிழந்துள்ளது தெரிந்தும் இந்த விளம்பர மோக பிசாசு இன்றும் அதிமுகவினரை பிடித்து ஆட்டுகிறது.அதற்கு மாவட்ட ஆட்சியரில் ,இருந்து நெடுஞ்சாலை அதிகரைகள்,மாநகராட்சி அதிகாரிகள் வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை கோபம்தான் கொள்ளவித்துள்ளது.

கோவையில் மணமுடிக்க வந்திருந்த  ரகு அதிமுகவினரின் வளைவு ,பேனர் கலாச்சாரத்துக்கு பலியாகியுள்ளதே கடைசி அதிமுகவினர் வாங்கும் பலியாக இருந்தால் நல்லதாயிருக்கும்.
அதிமுகவினர் மட்டுமே இந்த கொலைக்கு பொறுப்பல்ல.பொறுப்பற்றத்தனமாக அதிமுகவினர் வளைவுகள்,பேனர்கள்,கட் அவுட் களை நடவடிக்கை எடுத்து அகற்றாமல் பாதுகாப்பு வேறு கொடுக்கும் அதிகாரிகள்,காவல்துறையினரும் கொலையாளிகளே.
டிப்பர் லாரிதானே விபத்தை ஏற்படுத்தியது என்று கூறி யாரும் தப்பவியலாது.ராகுவை கொன்றது விளம்பர மோகிகள் அதிமுகவினர்,அதை பாதுகாக்கும் அதிகாரிகள்தான்.
இவர்களால் உண்டான போக்குவரத்து குளறுபடிகள்தான் இது போன்ற உயிர்வாங்குதலுக்கு மூலம்.

நீதிமன்றம் தானாகவே முன்வந்து அதிமுகவினர் பேனர்,வளைவுகள்,கட் அவுட்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக  வைப்பதை தருக்கும்விதம் வழக்கு பதிவு செய்து தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஒரு டிராபிக் ராமசாமிக்கு இருக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு இல்லாமல் போய்விடுமா என்ன?
தேசிய நான்கு வழிச்சாலையையும் அதிமுகவினர் இப்போது கையில் எடுத்து தங்கள் கொலைகார வளைவுகளை அமைப்பதை யார் தடுக்க வேண்டும்.
மக்கள் நலனுக்காக அரசா,அதிமுக கொலைவெறி பேனர்,வளைவுக்காக மக்களா? 
========================================================================================
மழைக்கால எச்சரிக்கை.
தமிழகத்தில் மழைக்காலம் . பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
ஏற்கனவே தமிழத்தில் டெங்கு பரவி தமிழக மக்களை பரிதவிக்க வைக்கும்  நிலையில் தற்போது மழை காரணமாக மேலும் பல நோய்கள் வர அபாயம் இருக்கிறது.

இதை மக்களுக்கு வரும் முன் காத்து நிற்க வேண்டிய அரசோ தங்கள் பதவி பித்து நோயால் பாதிக்கப்பட்டும்,நாற்காலியை,அடித்த சொத்துக்களைப் பாதுகாக்கும் முயசியில்தான் உள்ளனர்.
எனவே நமக்கு நாமேதான் தற்போது கைக்கொடுக்கும் சூரிய கதிராக உள்ளது.
மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களின் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டால் முளையிலேயே அந்நோயை நாம் தடுத்து விடலாம்.அதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
 மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அநோய்களைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிக்கக்கூட முடியும். 
மழைக்கால  நோய்கள்
* மலேரியா
மலேரியா என்னும் நோயானது பெண் அனாஃபிலிஸ் கொசுக்களால் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்கிருக்கும் இடத்தில் இவ்வகை கொசுக்கள் காணப்படும். எனவே இதை தடுக்க, வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும். 
* டெங்கு
டெங்கு காய்ச்சல் மழைக்காலத்தில் கொசுக்களால் ஏற்படுவது. இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
* சிக்கன்குனியா

ஏய்டெஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது தான் சிக்கன்குனியா. தேங்கிய நீரில் இந்த கொசுக்கள் காணப்படும். இது பகல் நேரத்தில் தான் கடிக்கும். திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து வரும் மூட்டு வலி தான் இதற்கான முக்கிய அறிகுறி. 
* வைரஸ் காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் வரும். இந்த காய்ச்சல் 3-7 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும்.
* காலரா
பருவக்காலத்தில் வரும் ஆபத்தான நோய் காலரா.
 இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் வரும். காலரா இருந்தால் வயிற்றுப் போக்குடன் பேதி சேர்ந்து இருக்கும். 
=========================================================================================
ன்று,
நவம்பர்-28.
மரைனர் 4 


 • பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து கொலம்பியாவில்  இணைந்தது(1821)
 • நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (1893)
 • அல்பேனியா விடுதலை தினம்(1912)
 • செவ்வாய்க் கோளுக்கு நாசா , மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)
==========================================================================================
பாலைவனச் சோலை,
பாலைவனத்தில் கூட பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய ,காட்டிக்கொண்டிருக்கும் நாடு இஸ்ரேல்.
இஸ்ரேலில் தன் கிணறுகளில் கிடைக்கும் உவர் நீருக்கு தக்கபடி  விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.

உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.
பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 
இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உவர் நீரிலும் கழிவாக கிடைக்கும் நிறையும் மறு  சுழற்சி செய்து அதையும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கு கிடைக்கக் கூடிய தண்ணீரில்  ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் பயன்படுத்தும் விதத்தை உலகமே  இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் .
கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றி மக்களுக்கு பயன்படுத்த வழங்கும் இஸ்ரேல் அதன் மூலம் கிடைக்கும்  கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.எனவே தனக்கு கிடைக்கும் மழைநீர்,உவர் நீர்,கடல் நீர் என்று எதையுமே இஸ்ரேல் விட்டுவைப்பதில்லை.ஒவ்வொரு சொட்டையும் பயன்படுத்துகிறது.நீர் மேலாண்மையை இஸ்ரேலிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.
 இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.
பயிரின் வேர்ப்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். 
மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனத்தை இஸ்ரேல் பல்லாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி வெற்றி கண்டுவிட்டது.
பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில் இஸ்ரேல் தன் நாட்டில் உள்ள மரங்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கிறது. சூரியசக்தி மூலமே  தனது ஆற்றல்,மின்  தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.
இஸ்ரேல் சென்று போர்த்தளவாடங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் செய்யும்  இந்தியா ,அங்குள்ள நீர் மேலாண்மை ,விவசாய முறைகளை  இங்கு கொண்டுவந்தால்தான் வருங்கால தண்ணீர் தட்டுப்பாட்டை இந்திய அரசு சமாளிக்க முடியும்.                                                                                                                 
=======================================================================================

திங்கள், 27 நவம்பர், 2017

அரசமைப்புச் சட்ட விரோதச் செயல்பாடு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், “உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும்; தீர்ப்புகளின் நகல்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
 “பல்வேறு மொழிகளைக் கொண்டது நம் நாடு. தீர்ப்பின் முக்கியமான, நுட்பமான விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் மனுதாரருக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார். 
இந்திய மக்களில் பெரும்பான்மையினரது கருத்தின் வெளிப்பாடாக நாம் இதைக் கருதலாம். ஆனால், அப்படிப்பட்ட நடைமுறைக்கு உண்டான திறவுகோல் அவர் கையிலேயே இருக்கிறது!

ராஜஸ்தான், உத்தர பிரதேசம் இந்த இரு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதாடுவதற்குத் தடையில்லை. மேலும், அவர்களது மாநில மொழிகளிலேயே வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் வசதி உண்டு. ஒருவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை ஆங்கிலத்தில் பகர நேர்ந்தால், அதனுடைய மொழிபெயர்ப்பை அந்தந்த மாநில மொழியில் மொழிபெயர்த்து நகல் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் ஆட்சிமொழி யில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாகவே தமிழ்நாடு வலியுறுத்திவருகிறது. 

நாட்டிலேயே முன்னோடியாக 2006-ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழையும் கூடுதல் ஆட்சிமொழியாக ஆக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தது. 
இதற்காக ஆளுநரை அணுகும் முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரினார் கருணாநிதி. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முன்னிலையில் கூடிய அனைத்து நீதிபதிகள் கூட்டம் ஒருமனதாக அதற்கு ஆதரவு அளித்தது.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2)-ன் கீழ், “ஒரு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் ஆட்சி மொழியாக அந்தந்த மாநிலத்தின் மொழி பயன்படுத்தப்பட வேண்டும்” என்றால், அம்மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அறிக்கை வெளியிட வேண்டும். 
விளைவாக, மத்திய அரசின் கைக்கு இத்தீர்மானம் சென்றது. 
மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. அன்றைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார். 
“இப்போதைய நடைமுறையில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வேறு மாநிலத்திலிருந்து வருகிறார். தவிர, பல நீதிபதிகள் ஊர் மாற்றத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் சூழல் இருக்கிறது. 
ஆகையால், இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது” என்பது அப்போது காரணமாகச் சொல்லப்பட்டது. அடுத்து, வங்கம் இதே போன்ற கோரிக்கையை முன்வைத்தது. 
அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படி யான மறுப்பு அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானது என்பதாகும். மக்களின் நலன் கருதி இப்படியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியம் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது, “இந்தியாவின் ஆட்சிமொழி ஆங்கிலம் என்பது 15 வருட காலத்தில் மாற்றப்பட்டு, இந்தி ஆட்சிமொழியாகும்” என்று கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், “நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆட்சிமொழியாக ஆங்கிலமே நீடிக்கும்” என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மாநில மொழிகளைப் படிப்படியாக பயனுக்குக் கொண்டுவரும் வகையில் பிரிவு 348(2) பின்னர் உருவாக்கப்பட்டது.
இன்றைக்கு அந்தச் சட்டப் பிரிவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஆட்சிமொழியாக இருப்பினும் அந்தந்த மாநில மொழிகள் துணை ஆட்சிமொழிகளாகத்தான் இருக்க முடியும். அதைக் கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சட்டப் பிரிவின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டியதற்கான காரணம், மாநில மொழிகளும் உயர் நீதிமன்றங்களில் கூடுதல் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை அந்தந்த மாநில அரசு உருவாக்க வேண்டும் என்பதும்தான்.


அந்தந்த மாநில மொழிகள் கூடுதல் ஆட்சிமொழிகளாக உயர் நீதிமன்றங்களில் பயன்பாட்டுக்குவருவது ஒரு பக்கத்தில் வழக்காடிகள் வழக்குகளைப் புரிந்து கொள்வதோடு மறுபுறம் ஆட்சி அமைப்பை ஜனநாயகப்படுத்தவும் வழிவகுப்பதாகும். 
இதனால் எவ்வகையிலும் நீதிமன்றங்களில் ஆங்கிலப் பயன்பாடு குறைந்துவிடாது. தீர்ப்புகள் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டால் அதன் மொழிபெயர்ப்பு மாநில மொழிகளிலும் கிடைக்கும். தலைமை நீதிபதியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் பதவி வகித்தபோது “இதுகுறித்து முயற்சி எடுப்பேன்” என்று கூறினார். என்றாலும் பலன் ஏதுமில்லை.


இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சார்ந்து மற்றொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் 1956-ம் வருடத்திய ஆட்சி அலுவல் மொழிச் சட்டத்தில் 1976-ல் திருத்தங்கள் செய்யப்பட்டு அச்சட்டத்தில் 4-பி என்ற புதிய பிரிவு நுழைக்கப்பட்டது. 
அதன்படி அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் கட்டாய ஆட்சிமொழியாக்கப்பட்டது.
இப்பிரிவு சட்டப்படி நடைமுறைக்கு வரும் முன்னரே, ஒரு முன்சீப் தமிழில் தனது தீா்ப்பை அளித்தார். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “தமிழ் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே இப்படித் தீா்ப்பளித்தது தவறு” என்று கூறி அத்தீா்ப்பை 1978-ல் ரத்துசெய்தது உயர் நீதிமன்றம்.
கருணாநிதி அரசு 1976-ல் கொண்டுவந்த சட்டத் திருத்தம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆறாண்டுகள் கழித்து 1982-ல் அதை அமலுக்குக் கொண்டுவருவதாக அறிவித்து அரசாணை கொண்டுவந்தது எம்ஜிஆர் அரசு. இதையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 
“தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுவருவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது” என்று வாதாடினார் இந்த வழக்கைத் தொடர்ந்த ராஜஸ்தானிய வழக்கறிஞர் ரங்கா. 
இது சம்பந்தமான வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.சீனிவாசன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்குகளைத் தள்ளுபடிசெய்து, “தமிழ் ஆட்சிமொழியாக இம்மாநிலத்தில் இருப்பதால் அதை நீதிமன்றங்களிலும் அமல்படுத்தும் சட்டத்திருத்தம் செல்லும்” என்று 21.4.94-ல் தீா்ப்பளித்தனா்.


இதற்கு இடையிலேயே இன்னொரு கொடுமையும் நடந்தது. இவ்வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே கா்நாடக நீதிபதி கே.ஏ.சுவாமி சென்னை உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1.7.93-ல் நியமிக்கப்பட்டார். 
தமிழில் தீர்ப்பளிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு கேட்டு, தமிழில் சரியான பரிச்சயமில்லாத நீதிபதிகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தபடி இருந்தனர். 
அவற்றின் தனித்தன்மையைப் பரிசீலித்து தகுதிக்கேற்ப விதிவிலக்கு அளிக்காமல் 5.1.94 அன்று தலைமை நீதிபதி கே.ஏ.சுவாமி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
அதாவது, “கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களது விருப்பப்படி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீா்ப்புகளை அளிக்கலாம்” என்பதே சுற்றறிக்கையாகச் சென்ற அந்த உத்தரவின் சுருக்கம். தமிழ்நாட்டு அரசின் அலுவல் மொழிச் சட்டத்துக்கு விரோதமானது அது. 
தமிழ்நாட்டின் தமிழ் ஆட்சிமொழி்க் கொள்கையை அச்சுற்றறிக்கை குழி தோண்டிப் புதைத்துவிட்டது.


நீண்ட காலத்துக்குப் பின் நீதிபதி இராமசுப்பிரமணியம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு இந்தத் தமிழ்க் கனவைத் தோண்டி மீட்டெடுத்தது. 2016-ல் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்துசெய்து, கீழமை நீதிமன்றங்களில் கட்டாயத் தமிழ்ப் பயன்பாட்டை நிலைநாட்டினர் இந்த நீதிபதிகள்.
ஆனால், அவ்வழக்கில் ஒரு சென்னை வழக்கறிஞர் மேல் முறையீடு செய்ததில் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, உயர் நீதிமன்றத்தின் சீராய்வு மனு தீர்ப்புக்கும் தடை விதித்தது. 
இந்த வழக்கில் தங்களையும் பிணைத்துக்கொள்ள இதுவரை தமிழக அரசு முன்வராதது இங்கே அவசியம் குறிப்பிட வேண்டிய துயரக் கதை.

மத்திய ஆட்சியில் உள்ளவர்களும், உச்ச நீதிமன்றமும் மக்கள் நலனுக்கு நேர் விரோதமாக இப்படிச் செயல்படுவது வருத்தத்துக்குரியது. இரு விசித்திரமான சூழல்களை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.
முதலாவது, அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக உயர் நீதிமன்றங்களில் மாநில மொழி உரிமை மறுக்கப்படுவது. 
இந்தியும், ராஜஸ்தானியும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் முழங்கப்பட்டுவரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழிகளுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு மறுக்கப்படுவது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட விரோதச் செயல்பாடு!
இரண்டாவது, தமிழே ஆட்சிமொழி என்று மாநில அரசாங்கம் கொள்கை வகுத்திருக்கும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சொந்த மொழி மறுக்கப்படுவது.
சட்ட அரங்கிலும் அரசியல் அரங்கிலும் மாற்றத்துக்கான குரல்கள் ஓங்கி ஒலிப்பதே இதற்கான தீர்வாக அமையும்!
ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரே மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை தன்னுடைய ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தில் குறிப்பிட்டது இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
“கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகமடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். 
அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவதுபோல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்? 
குருடன் கூத்துப் பார்க்கப் போனதுபோலவும், செவிடன் பாட்டுக் கேட்கப்போனது போலவும் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்!”
                                                                                                                                                -கே.சந்துரு,                                                                                                                            உயர் நீதிமன்ற   மேனாள் நீதிபதி,
இந்திய நீதித் துறையில், தன்னுடைய ஏழு ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி பணியில், 96 ஆயிரம் தீர்ப்புகளை அளித்தவர் 
==============================================================================================================

                                                    "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்."


தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்

========================================================================================
ன்று, 
நவம்பர் -27.


 • போலந்து அரசியலமைப்பு அமைக்கப்பட்டது(1815)
 • பாரிசில் ஆல்பிரட் நோபல், நோபல் பரிசு திட்டத்தை ஆரம்பித்தார்(1895)
 • ரத்மலானை விமான நிலையத்திற்கு முதலாவது விமானம் சென்னையில் இருந்து வந்திறங்கியது(1935)
 • கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ரொஸ் மாக்வேர்ட்டர் இறந்த தினம்(1975)
========================================================================================

எப்பொழுது தண்ணீர் குடிக்கக்கூடாது என்று தெரியுமா?

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தீர்வளிக்கும். தண்ணீர் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடாமலும் தடுக்கும். மேலும் தண்ணீர் அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவும். 
ஆனால் அந்த நீரைக் குறிப்பிட்ட நேரங்களில் குடிக்கக்கூடாது. 
உங்களுக்கு எந்த நேரத்தில் நீரைக் குடிப்பது நல்லது, எம்மாதிரியான நேரத்தில் நீரைக் குடிக்கக்கூடாது என்று தெரியுமா?
tomar_agua
ஒருவர் ஏற்கனவே அளவுக்கு அதிகமான நீரைக் குடித்தப் பின், தேவையில்லாமல் நீரைக் குடிக்கக்கூடாது. நீர் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் எதுவுமே அளவாக இருந்தால் தான் என்பதை மறக்க வேண்டாம்.
ஒருவேளை ஒருவர் ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், உடலில் உள்ள இயற்கையான உப்பு வெளியேற்றப்பட்டு, பின் அவஸ்தைப்படக்கூடும்.
உங்கள் உடலில் நீர்ச்சத்து போதுமானதாக இல்லாவிட்டால், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வரும். இம்மாதிரியான நேரத்தில் நீரை அதிகம் பருக வேண்டும்.
ஒருவேளை மஞ்சளாக இல்லாமல், தெளிந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடலில் போதுமான அளவில் நீர்ச்சத்து உள்ளது, நீரை அதிகம் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அர்த்தம்.
உணவு உண்பதற்கு முன் 1 டம்ளர் நீரைக் குடிப்பதன் மூலம், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.
ஆனால் உணவுக்கு முன் அல்லது பின் அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், பின் மிகுந்த அசௌகரியத்தால் அவஸ்தைப்படக்கூடும்.
சாதாரணமாக உடற்பயிற்சிக்கு பின் நீரைக் குடிப்பது எவ்வித தவறும் இல்லை. ஆனால் மிகவும் கடுமையான உடற்பயிற்சியை செய்த பின், உடலில் உள்ள எலக்ட்டோலைட்டுக்கள் வியர்வை மூலமாக வெளியேறியிருக்கும். இந்நேரத்தில் நீரைக் குடிப்பது நல்லதல்ல. மாறாக, இளநீரைக் குடிப்பதே மிகவும் நல்லது.
தற்போது தாகத்தை தணிப்பதற்கு என்று ஏராளமான குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. ஆனால் எவ்வளவு தாகம் எடுத்தாலும், நீரைக் குடியுங்கள்.
மாறாக குளிர்பானங்களைப் பருகினால், அது உங்கள் பசியை அதிகமாக தூண்டிவிடும். மேலும் குளிர்பானங்களில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் பருமனடையவும் செய்யும்.