திங்கள், 29 பிப்ரவரி, 2016

5.1 லட்சம் செலவில்

ஆறு மாதங்களில்

ஆறு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உங்கள் பொருளை தயாரிப்பதாகக் கூறுங்கள்

 (இதற்கு சல்லி பைசா செலவாகாது)

எல்லாரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் நம்பமுடியாத விலையில் ஒரு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இருப்பதாக அறிவியுங்கள். அதன் பெயர் எல்லாரையும் கவரும் விதத்தில் இருக்கவேண்டும். 
உதாரணத்திற்கு 'ஃப்ரீடம் 251'. 
மேலும் அதில் இரண்டு கேமரா, 3ஜி, ஹெச்.டி திரை உள்ளிட்ட கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக அறிவிக்க வேண்டும்.
மார்க்கெட்டிங் செலவு (இதற்கும் நயா பைசா செலவழிக்க வேண்டியதில்லை) 

மேலே சொன்ன அறிவிப்பின் மூலம் உலக மீடியாக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிவிடலாம். இணையதளங்களும் உங்களை மொய்க்கத் தொடங்கிவிடும். சமூக வலைதளங்களில் உங்கள் அறிவிப்பு ட்ரெண்டாகும். 
இந்த மாதிரியான அறிவிப்புகளில் இந்திய மக்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கும் இந்திய மீடியாக்களும் உங்களை கவர் செய்வார்கள்.

பொருளை அறிமுகப்படுத்த ஒரு தேதி குறியுங்கள் 

ஒரு தேதி குறித்துக் கொண்டு அந்த தேதியில் உங்கள் பொருளை அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் குறித்த தேதியில் ஏதாவது அரசு விழாக்கள் நடந்தால் இன்னும் வசதி. அந்த விழாவிலேயே அறிமுகப்படுத்திவிடலாம். எப்படியும் எல்லா மீடியாக்களும் அங்கு இருப்பார்கள். இலவச பப்ளிசிட்டி. 
மட்டமான சைனா மொபைல்கள் ஐந்தை வாங்கி உங்கள் ஸ்டிக்கரை அதில் ஒட்டி விடுங்கள். அழகான மாடல்கள் கையில் அவற்றை கொடுத்து நிற்கச் சொல்லுங்கள். அறிமுக விழா இனிதே நிறைவடைந்தது.(இதற்கான செலவு 5 லட்சம்)
உங்கள் போன்களை புக் செய்ய ஒரு தளத்தை தொடங்குங்கள்
ஒரு சிம்பிளான இணையதளத்தை தொடங்குங்கள். 
அதில் உங்களைப் பற்றிய விவரங்களையும், தொடர்பு எண்களையும் தருவது உங்கள் மீதான நம்பகத்தன்மையை வளர்க்கும்.
 (ஃப்ரீடம் 251 இணையதளத்தில் இந்த தகவல்கள் இல்லை)
உங்கள் தளத்தில் ஒரே ஒரு விதியை மட்டும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 'ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களுக்கு பொருள் வழங்க முடியாமல் போனால் பணம் திரும்பத் தரப்படும்' என்பதே அது. (செலவு 7,500 ரூபாய்)
இதுதான் நீங்கள் கோடீஸ்வரனாகப் போகும் இடம்
50 லட்சம் வாடிக்கையாளர்களிடம் போனுக்கு 251 ரூபாய், 
டெலிவரி செய்ய 40 ரூபாய் என தலா 291 ரூபாய் வாங்குங்கள். 
இதன்மூலம் உங்களிடம் 145 கோடி ரூபாய் வசூலாகும். ஆறே மாதத்தில் டெலிவரி செய்யப்படும் இல்லையென்றால் பணம் வாபஸ் என அறிவியுங்கள். 
அந்த 145 கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்யுங்கள். 
ஒன்பது சதவீத வட்டியில் ஆறு மாதத்தில் உங்களுக்கு 6.5 கோடி ரூபாய் கிடைக்கும்.
ஆறு மாதம் கழித்து நீங்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய அந்த 145 கோடியை திரும்ப அரசு உதவி வழங்காததால் தயாரிப்பை அனைவருக்கும் வழங்க இயலவில்லை என்று நாணயமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை 291 ஐ கொடுத்து விடுங்கள்.  இப்போது உங்கள் கணக்கில் வட்டியாக வந்த 6.5 கோடி ரூபாய் லாபம்.அதையாரும் உரிமை கொண்டாடமுடியாது.
உங்கள் நாணயமும் காக்கப்பட்டது.நாணயமும் கிடைத்து விடும்.
வாழ வளமுடன்.
                                                                                                                                                                                     -ரோஹித் லோஹாடே 
| தமிழில் : சமரன் சேரமான்,
============================================================================================================================ ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு...,!நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளினால் சிக்கல்கள் ஏற்படுகையில், இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பெற்றவற்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தர வரிசைப் பட்டியல் பல பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, செயல் திறன், பயன்பாடு, பழுது நீக்கும் தன்மை மற்றும் ஆண்ட்ராய்ட் பாதுகாப்பு என்ற பிரிவுகளில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில், சிறந்த பாதுகாப்பிற்கான விருதினை செமாண்டெக் (Semantec Norton Security) நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் Symantec Endpoint Protection தொகுப்பு, நிறுவனங்களுக்கான சிறந்த பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
தற்போது கம்ப்யூட்டர்களைத் தாக்கி வரும் 1,50,000 வைரஸ் புரோகிராம்கள் மட்டுமின்றி, 1,500க்கும் மேற்பட்ட, ”ஸீரோ டே” தாக்குதலைத் தொடுக்கும் வைரஸ்களுக்கும் எதிராகவும், செமாண்டெக் பாதுகாப்பு அளிக்கிறது. ('ஸீரோ டே' தாக்குதல் என்பது, வைரஸ் புரோகிராம் ஒன்று, அது வெளியாகி, அதற்கான எதிர்ப்பு புரோகிராம் தயார்ப்படுத்த எடுத்துக் கொள்ளும் காலத்திற்குள் தாக்குதலைத் தொடுக்கும் கெடுதல் புரோகிராம் ஆகும்). 
பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் பிரிவில் இயங்கும் புரோகிராம்கள், இத்தகைய பாதுகாப்பினை சராசரியாக 97.9% அளவில் வழங்கி வருகின்றன. ஆனால், செமாண்டெக் 98.3% அளவிற்கு வழங்கி வருகிறது. அதனாலேயே முதல் இடம் பெற்றுள்ளது.

 பல்வேறு நிறுவனங்கள், நல்ல பாதுகாப்பினைத் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், பல புரோகிராம்கள், அவை இயங்கும்போது, கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப்படுத்துபவையாக உள்ளன. இங்கு கம்ப்யூட்டர்களில், விளையாட்டுகள் மேற்கொள்கையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தைக் குறிப்பிடவில்லை. வழக்கமாக, கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சாதாரண பணிகள் தான் குறிப்பிடப்படுகின்றன. 
இணைய தளங்களைப் பெறுதல், சாப்ட்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்தல், டேட்டா காப்பி செய்தல் மற்றும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தல் போன்ற பணிகள் இதில் அடங்கும். இந்தப் பணிகளை மேற்கொள்கையில், கம்ப்யூட்டரின் வேகத்தினை எந்தவிதத்திலும் பாதிக்காத ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வகையில் “சிறந்த செயல்திறனுக்காக” மூன்று ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விருதைப் பெற்றன. 
நுகர்வோர்களுக்கான செயல்திறன் மிக்க ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக, Bitdefender மற்றும் Kaspersky Lab முதல் இடத்தைப் பெற்றுள்ளன. நிறுவனங்களுக்கான செயல் திறன் மிக்க புரோகிராமாக, Bitdefender தேர்ந்தெடுக்கப்பட்டது. வேகத்தின் அடிப்படையில், வீட்டுப் பயன்பாட்டு கம்ப்யூட்டர்களில், Bitdefender Internet Security தொகுப்பு சிறந்த செயல்பாட்டினைக் கொண்டதாக உள்ளது. 
Kaspersky Internet Security தொகுப்பு சில கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தேவைகளை இழுத்தது. நிறுவனங்கள் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, Bitdefender Endpoint Security தொகுப்பு முதல் இடத்தைப் பெற்றது. இது அனைத்து ஆறு வகை பரிசோதனைகளிலும் தன் செயல் திறனைக் காட்டியது என்று இதனைச் சோதனை செய்த AV-Test அறிவித்துள்ளது.

நுகர்வோர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் திறன் மிக்கதாகவும் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சோதனையிடுகையில், வைரஸ் இல்லாத புரோகிராம்களை, வைரஸ் உள்ள புரோகிராம்களாகக் (false positives) காட்டுதல், கெடுதல் சிறிதும் தராத இணைய தளங்களைத் தடுத்தல் போன்றவற்றை முதன்மைச் சோதனை காரணிகளாகக் கொண்டு சோதனையிடப்பட்டன. 
ஆயிரக்கணக்கான இணைய தளங்களைப் பார்வையிட்டும், நூற்றுக் கணக்கான புரோகிராம்களைப் பதிந்தும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், நுகர்வோர்களுக்கானவையாக, Avira AntiVirus Pro மற்றும் Kaspersky Lab Internet Security தொகுப்புகள் முதல் இரு இடங்களைப் பிடித்தன. நிறுவனங்களுக்கான தொகுப்புகளில், Intel Security McAfee Endpoint Security தேர்ந்தெடுக்கப்பட்டது. 
 நம் கம்ப்யூட்டர் ஏதேனும் மால்வேர் புரோகிராம்களின் தாக்குதல்களினால், பிரச்னையச் சந்தித்தால், எந்த ஆண்ட்டி வைரஸ் அதனை விரைவாக நீக்குகிறது? என்ற கேள்விக்கான சிறந்த தீர்வே, இந்த விருதிற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை உறுதி செய்தது. மேலே குறிப்பிட்ட விருதுகளில், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் என இரண்டு பிரிவாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் பார்க்கப்பட்டன. இந்தப் பிரிவில் அந்தப் பிரிவினை இல்லாமல், மொத்தமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பான தொகுப்பு (“security suite”) மற்றும் (“stand-alone clean-up tool”) என இரண்டு திறன் வகைகளும் சோதனை செய்யப்பட்டன. 
எட்டு மாத காலத்தில், நூற்றுக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் பாதித்த பல பெர்சனல் கம்ப்யூட்டர்கள் சோதனைக்குள்ளாயின. இவற்றில், மேலே சொல்லப்பட்ட இரு திறன் அடிப்படையில், சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 
பாதுகாப்பான பழுது நீக்கும் தொகுப்பாக Avira AntiVirus Pro புரோகிராமும், இலவசமாக பழுது நீக்கும் சாதனமாக Kaspersky Virus Removal Tool புரோகிராமும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், ஏறத்தாழ கம்ப்யூட்டரின் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வகையிலான திறன் கொண்டதாக உள்ளதால், இணையம் நாடும் பெரும்பாலானவர்கள், தங்கள் ஸ்மார்ட் போன் வழியாகவே அதனை மேற்கொள்வதால், ஹேக்கர்கள் தங்கள் வைரஸ்களை போன்களுக்கும் அனுப்பி, தகவல்களைத் திருடுகின்றனர். 
ஆனால், கம்ப்யூட்டரில் பாதுகாப்பினை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்குத் திட்டமிடும் பயனாளர்கள், தங்கள் போன்களுக்கும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என முனைப்பாகச் செயல்படுவதில்லை.
ஆண்ட்ராய்ட் போன்களைப் பொறுத்தவரை முழுமையான பாதுகாப்பு தரும் வகையில் அமைக்கப்பட்டுத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையே AV-Test ஆய்வு செய்தது. இதில், பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவை முதன்மை ஆய்வுக் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில், அனைத்திலும் சிறப்பாக முதல் இடம் பெற்றது Bitdefender Mobile Security தொகுப்பாகும். 
தவறாக நல்ல புரோகிராம்களை அல்லது தளங்களை, “மோசமானவை” (false positives) என இந்தத் தொகுப்பு காட்டவில்லை. 
இந்த புரோகிராம் இயங்கும்போது, கூடுதலாக பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தவில்லை. இது தரும் கூடுதல் வசதிகளும், பயனாளர்களுக்கு ஆர்வம் தருபவையாக இருந்தன.
பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கையில், Sophos Mobile Security புரோகிராமும் ஆண்ட்ராய்ட் போன்களுக்குச் சிறந்ததாக அமைந்திருந்ததாக AV-Test கூறியுள்ளது. 
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் மற்றும் மால்வேர்களைக் கண்டறிவதில், 100% திறமையுடன் செயல்பட்டது. மிகுந்த அபாயம் கொண்ட வைரஸ்களாக, ஏறத்தாழ 3,000 வைரஸ்களை, ஸ்கேன் செய்து, கண்டறிந்து, நீக்குமாறு இந்த புரோகிராம் செயல்படுத்தப்பட்டது. இந்த வகையில் 18,000 அப்ளிகேஷன்கள் இச் சோதனைக்குள்ளாக்கப் பட்டன. 
அவை அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, முதல் இடத்தை Sophos Mobile Security பிடித்தது.
மேலே தரப்பட்டுள்ளவற்றில், நீங்கள் உறுதியாக நம்பும் சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இல்லாமல் இருக்கலாம். 
அதனால், இங்கு தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். இருப்பினும், பல்வேறு சோதனைகளை, அறிவியல் ரீதியாகத் தொடர்ந்து சோதனை செய்து, இந்த முடிவுகளும் விருதுகளும் அறிவிக்கப்பட்டன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
=========================================================================================
இன்று,
பிப்ரவரி-29.
  • பின்லாந்து, குளிர்காலப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி முயற்சிகளில் இறங்கியது(1940)
  • செயின்ட் பீட்டஸ்பர்க், புளோரிடா ஆகியன இணைக்கப்பட்டன(1892)
  • ஹிலிகோலாந்து தீவு மீண்டும் ஜெர்மனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது(1952)==========================================================================================
இப்படியும் நடக்கிறது..
வெள்ள நிவாரணத்துக்கு அடுத்தவர் அனுப்பிய உதவிப் பொருட்கள் அனைத்தையும் பிடுங்கி ஜெயலலிதா ஸ்டிக்கர் ஓட்டுகிற தமிழகத்தில் காணும் எல்லாவற்றிற்கும் ரேசன் உப்பு வரை அம்மா பெயர்,நடக்கும் மணவிழாக்களில் நெற்றியில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ,என்ற நிலையில் இப்படியும் ஒரு சம்பவம் நம் கண்களின் வெளிச்சம் படாமல் நடந்துள்ளது.
அது எப்படி நிகழ்ந்தது என்பதை அவர்கள் வாக்கு மூலம் படியே :-


2013 ஆகஸ்ட்.
கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...
"சார்" ஒரு சிறு குரல்.
திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள்.
" என்னம்மா ?" என்றேன். " லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்". காரை விட்டு இறங்கி விட்டேன்.
" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா ?" "அது தெரியலிங்க சார்" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் "என்ன காரணம் தெரியுமா ?". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.
சிறுமியிடமே திரும்பினேன், "சாவி யாருகிட்டமா இருக்கு ?" "அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்" "எந்தக் கட்டிடத்தில் இருக்கு" "ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்" "சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா"
காரில் ஏறினேன். "எங்கம்மா படிக்கிற ?" "பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்" "எத்தனாவதும்மா?" "எட்டாவது சார்" "பேர் என்னம்மா ?"
"செம்பருத்தி சார்"
அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். "எதுக்கும்மா ?" "நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்" "மகிழ்ச்சிம்மா, நல்லா படி" வாழ்த்தினேன். "சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”
இன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.
நூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...
# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” ! 
அங்கு  இருந்த நூலகம், பகுதி நேர நூலகம் என்பதால் ஒதுக்கிய நிதி திரும்பி வந்தது. மீண்டும் அதற்கு புதிய தலைப்பு "படிப்பகம்" என்று வைத்து அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கினேன்.
கட்டிடம் கட்டப்படும் போதே செம்பருத்தியை தொடர்பு கொள்ளச் சொன்னேன். கட்டி முடித்த உடன் திறப்பு விழாவிற்கு செம்பருத்தியை அழைக்கச் சொன்னேன். இன்று திறப்பு விழா.
வரவேற்பு பதாகையில் செம்பருத்தி புகைப்படம். கல்வெட்டில் செம்பருத்தி பெயர் திறப்பாளர். செம்பருத்தி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நாங்கள் எல்லோரும் உரையாற்றிய பிறகு, செம்பருத்தி இறுதியில், "நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி தெரிவித்து" சிறப்புரையாற்றினார். இன்று செம்பருத்தி தான் வி.ஐ.பி.
பின்னாளில் கல்விக்கு உதவுவதற்கு அலைபேசி எண் கேட்ட உடன் எழுதிக் கொடுத்தார், "செம்பருத்தி IPS 7639681791 ". 
நூலகம் கேட்ட போது இருந்த அதே உறுதி. 
நிச்சயம்  IPS ஆவார். 
உதவிடுவேன்.
# சல்யூட் செம்பருத்தி IPS !
                                                                                                                                                                                                                                                                                            -எஸ் எஸ் சிவசங்கர்                                                                                                                      [குன்னம் சட்ட மன்ற உறுப்பினர்.]           
                                      
சிரிப்பு நடிகர் குமரிமுத்து காலமானார்.உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை காலமானார்.நடிகர் குமரி முத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். தவிர தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தார்.

        சீத்தாராம் யெச்சூரி ,தி.ராஜா,கேஜ்ரிவால்,ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மனிதன் ஒருவன்தான் சிந்திப் பான்மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. 
மனிதன் ஒருவன்தான் சிந்திப் பான். 
வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். 
மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது.
பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறி வினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகு காலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள் தனமாக நம்பிக் கொண்டு முட்டாளாக இருக்கின்றான்.
மனிதன் தோன்றிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகின்றன. 
அப் படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், சாதி என்கின்றவை களில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர் களாக, முட்டாள்களாக இருக்கின்றனர். 
சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவைகளேயாகும். 
இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிற நம் ஒரு நாட்டு மனிதன் மட்டும் தான் மதம் - கடவுள் - சாஸ்திரம் என்கின்ற மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக சிந்திப் பது பாவம், பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபாவம் என்று கருதிக்கொண்டு இன்னமும் காட்டு மிராண்டியாக இருக்கிறான்.
ஆடு, கோழி, பன்றிகளைத்தின்பவன் மாடு தின்பது பாவம் என்கிறான். ஆடு, மாடு, கோழிகளைத் தின்பவன் பன்றி தின்பது பாவம் என்கின்றான் எதனால் பாவமென்றால், மதத்தில் அப்படி இருக்கிறது; பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று மதத்திற்கு அடிமையாக இருக்கிறான்.
அதன் காரணமாக மனிதன் அறிவு வளர வேண்டிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக்கிறான். இங்குள்ள இந்தவிஞ்ஞான விந்தைகளைக் கண்டவர்களெல்லாம் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்பவைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தங்கள் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிந்தித்தலேயாகும். 
உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் அறிவிற்கு முதன்மை கொடுத்து அறிவைக்கொண்டு சிந்திக்கின்றார்கள்.
பகுத்தறிவுக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாடுகள் உலகில் பல இருக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் பகுத்தறிவாளர் களாக இருக்கிறார்கள்.
நம் ஒரு நாட்டில் மட்டும் எதற்காக இத்தனை மதம்? 
இதனால் மனிதன் ஒருவனுக்கு ஒருவன் பிரிந்து வேறுபட்டு சண்டையிட்டு கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர இவைகளால் மனிதன் பெற்றபலனென்ன? 
இத்தனைக் கடவுள்களும், மதமும் இருந்து மனிதனை ஒன்றாக்கவில்லையே! 
இன்றைக்கு உலகம் மிகச் சுருங்கிவிட்டது.
 முன் மாதக் கணக்கில் பயணம் செய்து போகவேண்டிய இடத்திற்கு ஒருசில மணிநேரத்திற்குள் இன்று போகும் படியான வசதி கிடைத்து விட்டது. நினைத்தவுடன் 10 ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பேசும்படியான (டெலிஃபோன்) சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன.
 இரண்டு நாட்களுக்குள் உலகத்தின் எந்தப் பாகத்திற்கு வேண்டு மானாலும் போகும்படியான நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளது. 
இன்னும் மனிதனின் உறுப்புக்களை மாற்றியமைக்கவும், மனி தனின் உறுப்பில் கேடானதை நீக்கி வேறு மிருகங்களின், இறந்த மனிதனின் உறுப்பினை வைத்துச் சரி செய்யும் படியான அளவிற்கு வைத்திய வசதியும் இன்று பெருகியுள்ள தென்றால் இதற்குக் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சியினாலேயேயாகும்.
பகுத்தறிவு என்பதற்குச் சக்தி எவ்வளவு இருக்கிறது? 
அதற்கு எவ்வளவு பலன் இருக்கிறது? 
அதனால் எவ்வளவு நன்மை விளைகிறது? 
அதனால் எவ்வளவு கேடுகள் நீங்கு கின்றன? 
என்பவைகளைச் சிந்தியுங்கள். 
இவற்றையெல்லாம் சிந்திக் காமல் கடவுள் என்கின்ற முட்டாள் தனமான நம்பிக்கை யால் மனிதன் வளர்ச்சியடையாமல் கேட்டிற்கு ஆளா கின்றான்.
மனிதனை மாற்றவேண்டும்; மனி தனைச் சிந்திக்கச் செய்யவேண்டும் பகுத்தறிவுடையவனாக்கவேண்டும். 
உலகில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடையவர்கள் பலர் இருக்கின் றனர். என்றாலும், இதில் எவரும் கடவுள் சக்தியை உண்மையில் நம்புவது கிடையாது. நம்பி அதன்படி நடந்து கொள்வதும் கிடையாது.
 எவ்வளவு தீவிரமான கடவுள் நம்பிக்கைக்காரனாக இருந்தாலும் தனக் குச் சிறு நோய் ஏற்பட்டால் டாக்டரிடம் சென்றுதான் மருத்துவம் செய்து கொள் கின்றானே தவிர, கடவுள் அருளால் தான் இந்த நோய் நமக்கு வந்தது என்று கருதி சும்மா இருப்பதில்லையே! 
கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்கின்றபோது அவர் தனது நோயினைத் தீர்ப்பார் என்று கருதி எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைத்தியம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று கேட்கின்றேன்.
இன்று நாட்டிலிருக்கிற கேடெல்லாம் மதத்திற்காகக் கடவுளுக்காக - செய்யப் பட்டவைகளேயாகும். சைவன் எத்தனை பேரைக் கொன்றிருக் கின்றான்? 
முஸ்லிம், கிறிஸ்தவன் எத்தனை பேரைக்கொன்றிருக் கின்றார்கள்? 
மதத்தையும், கடவுளையும் பலாத்காரத்தால், கொலையால் தான் மக்களிடையே பரப்பி இருக்கின்றனரே தவிர அன்பாலல்ல. கடவுள் நம்பிக்கை யற்றவர்களையெல்லாம் கொடுமைகள் செய்து அழித்து ஒழித்திருக்கின்றனர். 
நாம் இன்னமும் இந்த அளவிற்கு வரவில்லை.
பகுத்தறிவு என்பது அறிவைக்கொண்டு சிந்திப்பது. அனுபவத்திற்கு ஏற்றதைப் பஞ்சேந்திரியங்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதை ஏற்றுக்கொள்வதாகும். 
அதற்கு மாறானது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாததாகும். 
15.12.1970 அன்று தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 30.1.1971)
================================================================================================================

நமது பாவங்களுக்கான வரி!

ட்ஜெட் 2016 தாக்கலாகப்போகிறது. உலக நாடுகளெல்லாம் பொருளாதார ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. நாம் நம் உள் நாட்டுப் பிரச்னையைத் தவிர, இந்த நாடுகளின் பிரச்னைகளையும் உள் வாங்கி, பாதிப்படைந்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் பட்ஜெட்,  பொதுநல பட்ஜெட்டாக இருக்குமா, இல்லை இருக்காதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு நடுவே.... இந்த பட்ஜெட்டில் வரக்கூடிய ஒரு புதிய வரியான சின் டாக்ஸ் (SIN TAX ) பற்றி பார்ப்போம். 
வரி, வட்டி,  கிஸ்தி…… இந்தப்பட்டியலில் இது குஸ்தி. ஆமாம் பாவங்களுக்கு எதிரான குஸ்தி. இந்த வரி வருமா வராதா தெரியாது. ஆனால் வருமென்றே தோன்றுகிறது. சரி முதலில் இது என்ன வரி என்று பார்த்துவிட்டு, ஏன் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் பார்க்கலாம்.

'சின் டாக்ஸ்' என்பது ஒரு மறைமுக வரி. மத்திய கலால் வரி (Central Excise Duty  ) யில் ஒரு வகை. பண்டங்கள் மேல் விதிக்கப்படும். எந்தப் பண்டங்கள் என்று பார்த்தால் பீடி ,சிகரெட், மதுபானங்கள் , குளிர் பானங்கள் , உயர் ரக கார் இப்படி சமூகத்துக்கு தீமை விளைவிக்கும் அல்லது உபயோகத்தைக் குறைக்கவேண்டும் என்று அரசாங்கமே எண்ணுகின்ற பொருட்களின் மேல் போடப்படும் அதிகப்படியான வரிதான். இது ஒரு மறைமுக வரியாதலால் உற்பத்தியாளர்களுக்கு கவலை இல்லை. நுகர்வோர் தலையில் ஏற்றிவிடலாம். இந்த வரி எதற்காகப்போடப்படுகிறது?

இரண்டு காரணங்கள். ஒன்று,  உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விலை ஏற்றப்பட்டால் அதை உபயோகிப்போர் விகிதம் குறையும். இரண்டு, நாட்டுக்கு அதிக வரி வசூல் ஏற்பட்டு நிதி பற்றாக்குறை நிலையில் மாற்றம் வரும்.

முதலாவது காரணமாக சொல்லப்பட்ட நம்பிக்கையின் அடித்தளம் பீடி, சிகரெட், மது குடிப்பவர்களுக்கு அடி மனதில் ஒர் குற்ற உணர்ச்சி இருக்கும். அப்போது விலையும் ஏற்றப்பட்டால் குடிப்பதை நிறுத்திவிடுவர் யோசித்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

எங்கோ இருக்கும் அரசாங்கம் தனி மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி நினைத்தால் இப்படிப்பட்ட பண்டங்கள் நாட்டிலேயே இல்லாமல் செய்யலாமே!

தவிர தனி மனிதனுக்கு தனக்கு என்ன வேண்டும் , வேண்டாம் என்று பாகுபடுத்தி உணரத்தெரியாதா?

எதற்கு இந்த போலித்தனம் ?

ஆக விஷயத்துக்கு வந்துவிட்டோம்.அரசாங்கம் தன் கையிருப்புத்தொகையை அதிகரிக்க எடுக்கும் முயற்சிதான் இது,  நாட்டு மக்களின் நன்மைக்கு என்ற போர்வையில். ஆனால் இந்த நம்பிக்கை, அதாவது பழக்கம் குறையும் என்பது ஓரளவு நடக்க வாய்ப்பும் இருக்கிறது. இப்பழக்கங்களை புதிதாகத் தொடங்கியவர்கள், விலை ஏற்றப்படும்போது பழக்கத்தை நிறுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பழக்கத்திற்கு நீண்டநாட்கள் அடிமையானவர்கள் மாற மாட்டார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மை.

முதன் முதலில் ஃப்ரென்ஞ்ச் நாட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய உப்பு வரியாக அறிமுகம் ஆகி , அமெரிக்க காலனிகளில் தேனீர் வரியாக கூறப்பட்டு,  பாஸ்டன் டீ பாட்டி என்று கூறப்படும் நிகழ்ச்சியும் நடந்தது.  இதுவே பின் அமெரிக்கப் புரட்சியாக மாறியது. அதேபோல் ஜார்ஜ் வாஷிங்டன் அறிமுகப்படுத்திய விஸ்கி மீதான வரி (Whiskey Insurrection) மாணவர்கள் மத்தியில்  பெரும் கிளர்ச்சியைத் தூண்டியது. இங்கிலாந்து தற்போது உடல் பருமனைக்கட்டுப்படுத்த சாப்பாடு மற்றும் பானங்களில் அதிக சர்க்கரை அளவு கொண்டிருந்தால், அதன் மேல் கூடுதல் வரி விதிக்க எண்ணியுள்ளது.

நம் நாட்டுக்கு வருவோம்....

GST  கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்த போது புகையிலை, மதுபானங்கள் மீது இந்த பாவ வரி வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. லாட்டரி டிக்கெட், சூதாட்டம், பான் மசாலா, குளிர் பானங்கள், உயர் ரக கார், இவைகளும் இந்த வரி வலைக்குள் கொண்டு வரப்படலாம். 

இன்றும் GST அமல்படுத்தப்படாததால் எதன் மேல் எவ்வளவு வரி என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதே போல் 2012 ல் திட்டக்குழு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி தேவைகளுக்காக ,புகையிலை, மது மீது இந்த பாவ வரி விதிக்கப்படலாம் என்று பரிந்துரைத்தது.

இப்படி ஏதாவது ஒரு துறையின் நலனுக்காக கூடுதல் வரி போடப்படுவது புதுமையானது அல்ல. ஸ்வச் பாரத் வரி, படிப்பு வரி போன்றவை இவ்வகையான கூடுதல் வரிகளே. தற்போது சுகாதாரத் துறையிலிருந்து இந்தப் பாவ வரி விதிக்கப்பட வேண்டும் என்றும்,  அந்த வரிப்பணம் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்கு செலவிடப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலே கூறியதை வைத்துப்பார்க்கும்போது இந்த வரி, வரும் பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் என்றே தோன்றுகிறது.
                                                                                                                                        -லதா ரகுநாதன்
நன்றி:விகடன்.
========================================================================================
இன்று,
பிப்ரவரி-28.


  • இந்திய தேசிய அறிவியல் தினம்
  • இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
  • முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)
  • வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
  • எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)========================================================================================

நவீன உலகின் பெரும் பாலான கூறுகள் அறி வியலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் மாறாத அடிப்படைகளை விளக்குவது அறிவியலின் முக்கிய பணி. 
இவ்விளக்கங்களை அளிப்பவர்கள் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல திறமையான விஞ்ஞானிகளை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறது. 
இதில், இந்தியா உலகிற்கு அளித்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர். சி.வி.ராமன்.
1888, நவம்பர் 7 ஆம் தேதி சி.வி.ராமன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். 
அவரது தந்தைக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருந்தது. 
இளவயதிலேயே ராமன் அறிவுக்கூர்மை உள்ளவராக விளங்கினார். 
1904இல் தனது பதினாறாம் வயதிலேயே சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 
அந்த ஆண்டு அவருக்கு மட்டுமே இளங்கலை படிப்பில் முதல்நிலைத் தேர்ச்சியும் தங்கப்பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
அதே கல்லூரியில் பல சாதனைகளை முறியடித்து இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.தனது பதினெட்டாவது வயதில் அவர் தனது முதல் ஆய்வு அறிக்கையைத் தயார் செய்தார். அந்த அறிக்கை லண்டனில் உள்ள அறிவியல் சஞ்சிகையில் வெளியானது. 
அறிவியல் உலகம் ராமனை கவனிக்கத் தொடங்கியது. ஒலி, ஒளி, காந்த சக்தி ஆகியவற்றில் ராமன் தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலையில் இருந்த ராமன், சிறிது காலத்திலேயே அந்தப் பணியை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியேற்றார். 
1914ல் கல்கத்தாவில் புதிதாக அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. ராமன், அக்கல்லூரிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1921ல் ராமன் முனைவர் பட்டம் பெற்றார். 1924ல் லண்டனில் உள்ள ராயல் கழகம் ராமனுக்கு கவுரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. 
1929ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
ராமன் விளைவு

சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ்கட்டியிலும், மற்ற பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்று ராமன் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார். 
ஒளி மற்றும் ஒளியின் பயணம் குறித்து அந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.`ஒளி என்பது அலைகளினால் ஆனது’ என்று தாமஸ் யங் என்ற விஞ்ஞானி 1801ல் கூறினார். `ஒளி என்பது துகள்களால் ஆனது’ என்ற சர் ஐசக் நியூட்டனின் கூற்றை யங் எப்படி மாற்றிக் கூறலாம் என்று நியூட்டனின் ஆதரவாளர்கள் குரலெழுப்பினர். 
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளார்க் மாக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி ஒளி, வெப்பம் போன்ற எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் என்றும், அவை அலைகளாகப் பயணம் செய்கின்றன என்றும் கூறினார்.இரண்டு வெவ்வேறு அலைகளின் நீளத்தைக் கணக்கிடுவதை அலைநீளம் (றயஎநடநபேவா) என்று கூறுகிறோம். வயலட் நிறத்தின் அலைநீளம் மிகச்சிறியது. 
சிவப்பு நிறத்தின் அலைநீளம் மிக நீண்டது. பெரிய அலைநீளம் கொண்ட நிறங்கள் தொலைதூரம் பயணம் செய்யக்கூடியவை. சாலைகளில் சிவப்பு விளக்கு சிக்னல் தொலை தூரத்திலிருந்தே நமக்குத் தெரிவது இதனால்தான். எலும்புகளின் புகைப்படத்தை எக்ஸ்ரே எடுப்பதற்கும் தொலைக்காட்சியில் ஒலி, ஒளி தெரிவதற்கும் காரணமான அலைகள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஒளி அலைகள் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் பயணம் செய்கிறது. ஒளியியல் தொடர்பான விஷயத்தில் அலைகளின் கோட்பாடு முக்கியமாகக் கருதப்பட்டாலும் ஒளியின் அத்தனை கூறுகளையும் அலைகளின் கோட்பாட்டால் விளக்க முடியவில்லை. `வெப்பமும் ஒளியும் ஒரு பைக்குள் அடைக்கப்பட்ட சக்திகள். இவ்வாறு பைக்குள் அடைக்கப்பட்ட `ஒளி’ சக்தியின் பெயர் போட்டான்ஸ்’ என்று மாக்ஸ் ப்ளாங்க்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறினார்.ஒளி போட்டான்களால் ஆனதா, அலைகளால் ஆனதா என்ற விவாதம் கிளம்பியது.
 “இரண்டிலிருந்தும்தான்“ என்று சிலர் கூறினர். 
தண்ணீர் மழைத்துளியின் மூலமாகவும் வருகிறது. பெரிய அலைபோல் நதிகளிலும் பாய்கிறது. இதேபோல்தான் ஒளியும் என்று வாதம் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் சர். சி. வி. ராமன் ஒளியியல் கோட்பாட்டில் முக்கியமானதொரு விஷயத்தை கண்டுபிடித்தார். “
ஒளி என்பது திரவம், வாயு மற்றும் திடப் பொருட்களினூடே செல்லும்போது, அதன் தன்மை மாறுகிறது” என்று ராமன் கூறினார். 
“கேரம்போர்டில் ஸ்டிரைக்கரை சுண்டியதும், போர்டில் உள்ள பல்வேறு காய்கள் சிதறி வெவ்வேறு திசை நோக்கி நகர்வதைப் போல ஒளியின் பயணம் மாறுபடுகிறது” என்று கூறினார். 
இதையே நாம் `ராமன் விளைவு’ என்று அழைக்கிறோம். 
சி.வி.ராமனின் இந்த கண்டுபிடிப்பிற்காக 1930ல் அவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தேசிய அறிவியல் தினம்`ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்ட தினத்தை (பிப்ரவரி 28) ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். 
நாட்டில் உள்ள பல்வேறு அறிவியல் இயக்கங்களும், அமைப்புகளும் பிப்ரவரி மாதம் முழுவதையும் அறிவியல் மாதமாகக் கொண்டாடி வருகின்றனர். 
.நன்றி : துளிர் மாத இதழ்.
=======================================================================================================================================
வேலை வாய்ப்பு இல்லாத,94 லட்சம் பேர்கள்.
தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு, காத்திருப்போரின் எண்ணிக்கை, 94 லட்சமாக உயர்ந்துள்ளது' என, தமிழக வேலைவாய்ப்பு துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர், 31ன் படி, பல்வேறு வகை படிப்புகள் முடித்து, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

● வேலை வாய்ப்பு இல்லாத,94 லட்சம்பேர்கள்  புள்ளி விவரம்:

● வேலை வாய்ப்பு இல்லாத,94 லட்சம் பேரில், 
43 லட்சம் பேர் பெண்கள். 11 லட்சம் பேர் சிறப்பு தகுதி பெற்ற மாற்று திறனாளிகள், அகதிகள், கலப்பு திருமணம் செய்தோர்
● பட்டப்படிப்பு முடித்தோர், 60 லட்சம் பேர்
● பிளஸ் 2 முடித்தவர்கள், 35 லட்சம் பேர்
● இடைநிலை ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், 2.28 லட்சம் பேர்
● பி.இ., - பி.டெக் முடித்தவர்கள், 2.28 லட்சம் பேர்
● எம்.இ., முடித்தவர்கள், 2.21 லட்சம் பேர்
● பி.எஸ்சி., போன்ற இளநிலை அறிவியல் 
முடித்தவர்கள், ௬ லட்சம் பேர்
● பி.ஏ., முடித்தவர்கள், 4.48 லட்சம் பேர்
● வணிகவியல் பட்டம் பெற்றவர்கள், 
3.37 லட்சம் பேர்
● எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், 3,883 பேர்
● கால்நடை மருத்துவம் படித்தவர்கள், 1,160 பேர்
● சட்டம் முடித்தவர்கள், 748 பேர்.
முதுநிலை படிப்பு
● ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், 2.67 லட்சம் பேர்
● டாக்டர்கள், 734 பேர்
● சட்டம் படித்தவர்கள், 242 பேர்
● மற்ற பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்பு முடித்தவர்கள், 2.22 லட்சம் பேர்
● வேளாண் படிப்பில் பட்டம் பெற்றவர்கள், 4,000 பேர்; முதுகலை பட்டம் முடித்தவர்கள், 633 பேர்.
கடந்த ஆண்டு, 85 லட்சம் பேர் மட்டுமே வேலைக்காக காத்திருந்த நிலையில், தற்போது, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில், ஒன்பது லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.

சனி, 27 பிப்ரவரி, 2016

அலைபேசி பயங்கரம்!


செங்கல்பட்டைச் சேர்ந்த தனுஷ் என்கிற 9 வயது சிறுவன் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததன் காரணமாக, அவனது பார்வை பறிபோனது. 
வியாசர்பாடியில் மெத்தை மீது சார்ஜ் போடப்பட்டு வைத்திருந்த செல்போன் வெடித்து மெத்தை தீப்பற்றி அவ்வீட்டில் இருந்த கணவன் - மனைவி இருவரும் இறந்தனர். 
சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்திகள் இவை. நம் வாழ்வியலில் இரண்டறக் கலந்து விட்ட செல்போன் உயிருக்கும் உலை வைக்குமா என்பதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம். ஏன் இந்த விபத்துகள் நடந்தன? செல்போனை எவ்வாறு கையாள வேண்டும்?

செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனுள் மின்சாரம் ஏற்றப்படுவதன் காரணமாக அது சூடாகும். அப்போது செல்போன் பயன்படுத்துவதை முடிந்த வரை தடுக்கலாம். பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். நிறைய பேர் இரவு படுக்கும்போது சார்ஜ் போட்டு விட்டு தூங்கி விட்டார்கள் என்றால், சராசரியாக 8 மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த பின்புதான் கழற்றுவார்கள்.

பேட்டரி சார்ஜ் ஆன பிறகும் மின் இணைப்பில் இருக்கும்போது, வெளியாகும் மின்சாரத்தை பேட்டரி தாங்காது என்பதோடு, அது வெடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கிற கால அளவுக்குள்தான் சார்ஜ் போட வேண்டும்.

பெட்ரோல் பங்கில் செல்போன் உபயோகிக்கக்கூடாது எனும் எச்சரிக்கையைப் பார்த்திருப்போம். செல்போனில் இருந்து வெளிப்படும் அலைவரிசை பெட்ரோலின் ஆவியோடு ஸ்பார்க் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதால்தான். 
முடிந்த வரை தேவை அடிப்படையில் மட்டும் செல்போனை பயன்படுத்துவதே சிறந்தது.

தலையணைக்குப் பக்கத்திலேயே செல்போனை வைத்துக் கொண்டு படுப்பதும் தவறுதான். சார்ஜ் போட்டு பயன்படுத்தும் எல்லா செல்போன்களும் வெடிப்பதில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதே சிறந்தது.தலையணைக்குப் பக்கத்திலேயே செல்போனை வைத்துக் கொண்டு படுப்பதும் தவறுதான்.
=========================================================================
"251 "ன்னா ? அல்லது "111"ன்னா ??
Freedom’ என்ற வார்த்தைக்குள் இந்தியாவே சிறைபட்டுப் போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கடந்த வாரத்தில் யாரைப்  பார்த்தாலும் மந்திரம் போல உச்சரித்த வாக்கியம், 
‘ஃப்ரீடம் 251 போன் புக் பண்ணியாச்சா?’ 
நிஜமாகவே 251 ரூபாயில் ஒரு ஸ்மார்ட் போன்  கிடைக்கிறதென்றால் யார்தான் விடுவார்கள்? ஆனால், நாஞ்சில் ஸ்டைலில் ‘‘அது வராது’’ என்கின்றன அனுபவமுள்ள டெக் நிறுவனங்கள்.

‘‘மக்கள் பணத்தை ஏமாற்றும் மிகப் பெரிய ஊழலாக இது இருக்கப் போகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
என்னதான் உண்மை?இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே உலகின் மிக மலிவான ஸ்மார்ட் போன் இந்த ‘ஃப்ரீடம் 251’தான். அதுவும், நான்கு கோர் ப்ராசஸர், 4  அங்குல தொடுதிரை, 1 ஜி.பி ராம், 8 ஜி.பி கொள்ளளவு என சகல வசதிகளும் வெறும் 251 ரூபாய்க்கு. 
ஆரம்பத்தில் இதை புரளி என்றுதான்  மக்கள் நினைத்தார்கள். நிஜமாகவே ஒரு விழா நடத்தப்பட்டு, பி.ஜே.பியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இதை  வெளியிட்டதும்தான் பற்றிக்கொண்டது பரபரப்பு.ஆப்பிளின் அடுத்த போன் என்ன, சாம்சங்கின் சாதனை போன் எது என விவாதித்துக்  கொண்டிருந்த உலகம், சட்டென்று கலவரமாகி இந்தியா பக்கம் திரும்பியது. காரணம், இந்த விலையில் இப்படியொரு போன் வெளிவந்தால்  ‘மொபைல் போன் தயாரிக்கிறேன்’ எனப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பாதிப் பேர் ஊரைப் பார்த்துப் போக வேண்டியதுதான். (இதில்  நோக்கியா போன்ற பெரு நிறுவனங்களும் அடக்கம்)

இப்படியொரு போனை அறிவித்து உலகையே கதிகலங்க வைத்திருப்பது ‘ரிங்கிங் பெல்ஸ்’... நொய்டாவில் இயங்கும் சிறு இந்திய நிறுவனம்  இது. 
விவசாயத் துறை சார்ந்த பொருட்களைத் தயாரித்து வந்த இவர்கள், திடீரென்றுதான் மொபைல் தயாரிப்பில் இறங்கினார்கள். 
ஏற்கனவே  இவர்கள் தயாரித்து விற்கும் Smart 101 என்ற ஸ்மார்ட் போனின் விலை ரூ. 2,999/- திடீரென அதை விடப் பத்து மடங்கு விலை குறைவாக  எப்படி ஒரு மொபைலைத் தயாரிக்க முடியும்? 
‘‘நாங்கள் இந்தியாவிலேயே உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதாலும் அதிக எண்ணிக்கையில்  உற்பத்தி செய்வதாலும் லாபத்தைக் குறைத்துக் கொள்வதாலும் இந்த விலையில் தர முடியும்!’’ என வெளியீட்டு விழாவில்  சொல்லியிருக்கிறார் இந்நிறுவனத்தின் தலைவரான அசோக் சதா. 
இதற்காக நொய்டாவிலும் உத்தர்காண்டிலும் இரு பெரும்  தொழிற்சாலைகளை அவர்கள் நிறுவப் போகிறார்களாம்.

ஆனால், இது சாத்தியமா என்பதில்தான் சந்தேகத்தை விதைக்கிறார்கள் சந்தை நிபுணர்கள். ஏற்கனவே இந்திய அரசும் டேட்டாவிண்ட் என்ற  நிறுவனமும் இணைந்து உருவாக்கிய 3000 ரூபாய் ‘ஆகாஷ்’ டேப்லட் என்ன கதியானது என அனைவருக்கும் தெரியும். 
விலையைக்  குறைப்பதற்காக டேட்டாவிண்ட் தரமற்ற உதிரிப் பாகங்களைப் பயன்படுத்த, அந்த டேப்லட் ஆமை வேகத்தில் இயங்க, மக்களே அதைப்  புறக்கணித்துவிட்டார்கள். 
3000 ரூபாய் என்ற மலிவு விலைக்கே இந்த கதியென்றால் 251 ரூபாய் போன் எப்படியிருக்கும்?

‘‘இவர்கள் சொல்லியிருக்கும் வசதிகளின் படி ஒரு போனை உருவாக்கவே குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவாகும். 
அதை எப்படி இந்த  விலைக்கு விற்க முடியும்? 
சீனாவிலிருந்து உதிரிப் பாகங்கள் வாங்குவதை விட இந்தியாவில் அவற்றைத் தயாரிப்பது அதிக செலவு பிடிக்கும்  வேலை. 
ஆக, இந்த விலைக்கு அவர்கள் மொபைல் தர வாய்ப்பே இல்லை!’’ என்கிறார் டேட்டாவிண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுனித் சிங்  துலி.

இந்த போனில் ‘தூய்மை இந்தியா’ போன்ற அரசு தயாரிப்பு ஆப்கள் இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். 
‘மேக் இன் இந்தியா’  திட்டப்படி இது தயாரிக்கப்படும் என்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை இது நனவாக்கும் என்கிறார்கள். 
அதே சமயம் மத்திய அரசின்  எந்தத் தலையீடும், உதவியும் இந்த முயற்சியில் இல்லை என்றும் சொல்கிறார்கள். இங்கேயே ஏதோ இடிக்கிறது. 
ஒருவேளை திரைமறைவாக  இப்படிப்பட்ட மொபைல்களுக்கு நிதி உதவி செய்து, இந்த போன் வைத்திருப்பவர்களை எல்லாம் பி.ஜே.பியின் பிரசார வளையத்துக்குள்  கொண்டு வரப் போகிறார்களோ என்றும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
இதையெல்லாம் விட இன்னொரு சம்பவம்... ஃப்ரீடம் 251 போன் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் டெக் விமர்சகர்கள்  கையில் ‘இதுதான் ஃப்ரீடம் 251’ என்று சில போன்கள் தரப்பட்டன. 
உற்றுப் பார்த்தால் அது Adcom என்ற நிறுவனத்தால் ஏற்கனவே  மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் Ikon 4 என்ற 4000 ரூபாய் போன். 
போனுக்குப் பின்னால் இருந்த Adcom என்ற பெயர் வொயிட்னர்  கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது.

‘‘என்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா’’ என மீடியா கேள்வி கேட்க, ‘‘இது சும்மா டெமோ பீஸ்... உண்மையான போனை நாங்க  இனிமேல்தான் தயாரிக்கப் போகிறோம்’’ எனச் சொல்லியிருக்கிறது ரிங்கிங் பெல்ஸ் தரப்பு. 
அதாவது, காபி வேண்டுபவர்களிடம் ஆர்டர்  எடுத்து காசெல்லாம் வாங்கிய பிறகுதான் இவர்கள் கன்றுக்குட்டி வாங்கவே போகப் போகிறார்கள்.

இதை நம்பி நம்ம ஊர் இளைஞர்கள் பிப்ரவரி 18 அன்று காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து www.freedom251.com என்ற விற்பனைத் தளத்தின்  முன் தவமாய் தவமிருந்தார்கள். பெயர், முகவரி, செல்போன் நம்பர் எல்லாம் உள்ளிட்டபின் பலருக்கும் வந்த பக்கமே திரும்பத் திரும்ப  வந்துகொண்டிருந்தது. 
‘நம்ம பர்சனல் விவரங்களைத் திருடுறாங்களோ’ எனப் பலர் மெர்சல் ஆனது உண்மை. 
இதையும் தாண்டி நிமிடத்துக்கு  6 லட்சம் பேர் இந்த மொபைலுக்காக முட்டி மோதியிருக்கிறார்கள். நிச்சயம் பல லட்சம் பேர் தலா 251 ரூபாய் கொடுத்திருப்பார்கள்.  
சொன்னபடி இவர்களுக்கு மொபைல் கிடைக்குமா? 
இல்லை, இதுவும் கோல்டு காயின், ஈமு கோழி கதையாகுமா? 
அது ஜூன் 30க்குள்  தெரிந்துவிடும்!

நவநீதன்
-
========================================================================
=======================-