மணிமண்டபம் குளிரச் செய்யாது
விவசாயிகள் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் அமைப்பதாகவும் அவரது அமைப்பு சார்பில் நடந்த போராட்டங்களின் போது உயிரிழந்த 40 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணநிதி வழங்குவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளில் அறிவித்தார்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அவரது நினைவுக்கு வராத நாராயணசாமி நாயுடு இப்போது நினைவுக்கு வரக்காரணம்... தேர்தல் வருவதும் மக்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதும் தான்.ஜெயலலிதாவின் அரசியல்பிரவேசத்துக்குக் காரணமான எம்ஜிஆர் பெயரே அவருக்கு தேர்தல் காலத்தில் தான் நினைவுக்கு வரும்.
மக்களவைத் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ நடக்க விருக்கும் சமயத்தில்தான் எம்ஜிஆரின் பிறந்தநாளும் நினைவுநாளும் ஞாபகம் வரும். அப்போது தான் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்துவார் அல்லது நினைவிடத்துக்குச் செல் வார்.
அப்படிஇருக்கையில் நாராயணசாமி நாயுடு எப்படி நினைவுக்கு வருவார்?
தேர்தல் வருவதும் கொங்கு மண்டலத்து மக்களின் வாக்குகள் தேவைப்படுவதும் அவரை விண்ணிலிருந்து மண்ணுக்கு கொண்டு வந்திருக்கிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விளைபொரு ளுக்கு கட்டுபடியான விலை, பாலுக்கு உரிய விலை, உரம்உள்ளிட்ட இடு பொருட்களின் விலை குறைப்பு போன்ற கோரிக்கைகளுக்காக நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் 1977க்குப்பின் போராட்டங்களில் ஈடுபட்டது.
.“முக்கா முழம் நெல்லுப் பயிரு முப்பது கெஜம் தண்ணிகிணறு” என்ற பாடல் அன்றைய விவசாயி பாசனம் செய்வதற்குப் படும் பாட்டை எடுத்துரைத்தது.
நூறடி ஆழக்கிணற்றிலிருந்து இரண்டு, மூன்று மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கடுமையான நெருக்கடி.
அதற்கு மும்முனை மின்சாரம் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. மேலும் மின் இணைப்புக் கேட்கும் விவசாயிகளை இணைப்புத் தராமல் ஆண்டுக்கணக்காய் காக்க வைத்தது அப்போதைய அதிமுக அரசு. (இப்போதும் அதில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது).விவசாயி தவிர மற்றவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தாங்களே விலைநிர்ணயம் செய்கிறார்கள்.
ஆனால் விவசாயிகளோ, வியாபாரிகள், தரகர்களிடம் சிக்கிச் சீரழிகிறார்கள்.
எங்கள் பொருளுக்கு நாங்களே விலை நிர்ணயம் செய்யும் நிலை வர வேண்டும்.விவசாயப் பெருமக்கள் வளர்க்கும் கால்நடைகள் தரும் பாலுக்கு கட்டுபடியான விலை வழங்காத நிலை உள்ளதால் கீழே கொட்டுவது போன்ற அவல நிலை.
நெல், பருத்தி போன்றவற்றுக்கு விலை கிடைக்காத நிலையில் அவற்றுக்குப் பயன்படுத்தும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது விவசாயி களின் மனநிலையாக இருந்தது.மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் கால அவகாசம் கொடுக்காமல் உடனே இணைப்பைத் துண்டிக்கும் மின்வாரியத்தை எதிர்த்த போராட்டம்.
இவைதான் 1970-80 காலகட்டத்தின் பிரதான விவசாயப் போராட்டம்.
1977க்குப் பின், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு உழவர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவியது. இரும்புக் கரம் கொண்டு அடக்கியது.
எம்.ஜி.ஆர்,அரசுதான் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பச்சைத் துண்டு விவசாயிகள் 47 பேர் பரிதாபமாக பலியானது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் .
இவை நடந்த பின் அதிமுகவின் ஆட்சி எம்ஜிஆர் காலத்தில் இரண்டு முறை, ஜெயலலிதா காலத்தில் மூன்று முறை தமிழகத்தில் நீதி பரிபாலனம் செய்திருக்கிறது.
அப்போதெல்லாம் தோன்றாத எண்ணம்- மணி மண்டபம் அமைக்கும் திட்டம், இப்போது ‘அம்மா’வுக்குத் தோன்றி யிருப்பது விவசாயிகள் மீதான பரிவினால் அல்ல. கொங்கு மண்டல மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கூறும் வாக்குறுதிதான்.
நாராயண சாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்...47 விவசாயிகளில் வாரிசு இல்லாத 7 பேர் குடும்பம் தவிர்த்த 40 விவசாயிகளின் வாரிசுகளுக்கு நிவாரணம்..
உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறையிருந் தால், வேளாண்மையை காக்க விரும்பினால் அவர்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.கடந்த தேர்தலில் கரும்புக்கு கொடுப்பதாகச் சொன்ன விலையை இன்னும் வழங்கிடவில்லை.
நெல்லுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திட மனம் வரவில்லை. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையை விட கூடுதலாக தரும் தொகை கூட இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.கடன் சுமையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யால் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவிட மனம் வரவில்லை.
அவர்களது மரணத்தை கொச்சைப்படுத்தும் வேலையையே தமிழக அரசு செய்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தான் அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங் களுக்கு போதிய இழப்பீடு கூட வழங்கவில்லை. இழப்பை குறைத்துக் காட்டவே அரசு எந்திரம் முயற்சிக்கிறது.
ஆயினும் வானில் பறந்த விமானம் தரையிறங்கித் தானே ஆக வேண்டும் என்ற நிலையை ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் உருவாக்கி விடுகிறது.கடந்த 2011 தேர்தலின் போதும் பின்னர் மக்களவைத் தேர்தலின் போதும் அதிமுக பொதுச் செயலாளராக அள்ளி வீசிய வாக்குறுதிகள் இன்னும் பல அப்படியே இருக்கின்றன.
எனினும் புதிதாக மக்களைக் கவர வேறுசில தூண்டில்களை வீசத் துவங்கிவிட்டார் ஜெயலலிதா. ஆனால் வேளாண் பெருங்குடி மக்கள் ஏமாற மாட்டார்கள்.மணிமண்டப அறிவிப்பால் மனம் குளிர மாட்டார்கள்.
பலியான விவசாயிகளின் குடும்பத்தினர் பரிவு காட்டமாட்டார்கள்.
47 விவசாயிகளை பலி கொண்ட அதிமுக ஆட்சிக்கும் - கட்சிக்கும் பாவ விமோசனம் கிடைக்காது.
- ப.முருகன்
======================================================================================
நெஞ்சுவலி என்று வருபவர்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு, பிரச்னை வயிற்றில் இருப்பதைப் பார்க்கிறோம்.
இதற்கு முக்கிய காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
காலையில் எழுந்ததிலிருந்து, பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடும் நாம், சாப்பிடுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை.
ஒரு வேலை செய்ய நேரமில்லை என்றால், உணவு நேரத்தையும் சேர்த்து, அந்த வேலையை முடிப்பதற்கு எடுத்துக் கொள்கிறோம்.
நம்மிடம் இருக்கும் இன்னொரு கெட்ட பழக்கம், காலை உணவைத் தவிர்ப்பது. இரவில், 10:00 மணிக்குள் பெரும்பாலும் இரவு உணவை சாப்பிட்டு விடுகிறோம். அதன்பின் காலை உணவிற்கு, 10:00 மணி நேர இடைவெளி உள்ளது.
இந்த நேரத்தில் நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவை நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவசியம் சாப்பிட வேண்டும்.
ஆனால் அவசர கோலத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், நான்கு வாய் அள்ளிப் போட்டு கிளம்பி விடுகிறோம்.
அதன்பின் மதிய உணவுக்கு முழு சாப்பாடு, மாலையில் சிற்றுண்டி, இடையில் சில முறை காபி, டீ, இரவு உணவு என்று, இடைவெளியே கொடுக்காமல் சாப்பிடுகிறோம். ஒன்று, பல மணி நேரம் தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது அல்லது சிறிய இடைவெளியில் தொடர்ந்து சாப்பிடுவது என்று இருப்பது, வயிற்றுக்கு நல்லதில்லை.
உப்பு, மசாலா, எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுதான் நாக்கிற்கு ருசியைத் தரும்; ஆனால் வயிற்றுக்கு நல்லதல்ல.
அசைவ உணவுகளை சாப்பிடும்போதும், மசாலா சேர்க்காமல் வேக வைத்த சிக்கன், மீன் சாப்பிடலாம். உணவிற்கென்று நேரம் ஒதுக்கி ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; அதற்காகத் தான் பற்கள் இருக்கிறது. மெல்லும்போது சுரக்கும் ஜீரண அமிலம் நல்ல செரிமானத்திற்கு உதவும்.
அப்படி இல்லாத பட்சத்தில் பற்களின் வேலையையும் வயிறே செய்ய வேண்டியிருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை இரைப்பை, ஜீரண மண்டலம் தொடர்பான புற்றுநோயால், 40 முதல் 50 சதவீதம் ஜப்பானியர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
உணவில் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்த பின், அங்கு புற்றுநோயின் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.
அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, உங்கள் உணவை பச்சை, மஞ்சள், சிவப்பு என்று வண்ணங்களாக
மாற்றுங்கள். மிகச் சிறந்த உணவாக இயற்கை நமக்கு அளித்ததே காய்கறி, பழங்கள்தான். அதை அதிகமாக சாப்பிட பழகுங்கள். வயிற்றுப் பிரச்னை வராது.
அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, உங்கள் உணவை பச்சை, மஞ்சள், சிவப்பு என்று வண்ணங்களாக
மாற்றுங்கள். மிகச் சிறந்த உணவாக இயற்கை நமக்கு அளித்ததே காய்கறி, பழங்கள்தான். அதை அதிகமாக சாப்பிட பழகுங்கள். வயிற்றுப் பிரச்னை வராது.
டாக்டர் ஆர்.சுரேந்திரன்,
=====================================================================================
இன்று,
பிப்ரவரி-23.
- கயானா குடியரசு தினம்(1970)
- உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
- ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
- புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)
======================================================================================