செய்தீர்களா?செய்தீர்களா??

2011 சட்டசபை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக, பல நல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...’ என சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா  கூறியிருக்கிறார்.
அப்படியா?
உண்மையில் சொன்னதை செய்தாரா?
சட்டசபையில் மனமறிந்தே பொய் சொல்லுவதை ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் தான் பார்க்கிறோம்.
விலைவாசியைக் குறைக்க சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும்;
இணையத்தில் ஊக வணிகம் தடை செய்யப்படும் என்றார்.
இரண்டுமே செய்யப்படவில்லை.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று 2011ல் அறிவித்தார் ஜெயலலிதா.  ஜனவரி 2016ல் கரும்பு விலை ரூ.2650 ஆக உயர்த்தப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.   
அம்மா குடிநீர் என்று அறிவித்து, ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்றதுதான் நடந்தது. இத்திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.
ஆனால், எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மிகுந்த வீடுகள் கட்டித் தரப்படும். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டித் தரப்படும் என்று அறிவித்த 10 ஆயிரம் வீடுகள் கூட கட்டித்தரப்படவில்லை.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை. அனைத்து கிராமங்களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் தடையில்லா 3 ஃபேஸ் மின்சாரம் வழங்கப்படும். 2013ம் ஆண்டுக்குள் ஐந்தாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் என்றார்.
 கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.

திமுக ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்ட எண்ணூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களும், டெண்டரில் செய்த குளறுபடிகளால் நீதிமன்ற வழக்குகளில் முடங்கியுள்ளன.
ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யாமல், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2012ம் ஆண்டுக்குள், 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குப்பையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
160 கிராமப் பஞ்சாயத்துகளில் 150 கிலோ வாட் பயோ கேஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றார்.
குப்பைகளைக் கூட ஒழுங்காக வாராத அரசு என்று பெயர் வாங்கியதைத் தவிர எதையுமே அதிமுக அரசு செய்யவில்லை.
இத்திட்டங்களின் மூலம், 1,20,000 கோடி கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்தகைய சிறப்புத் திட்டங்களின் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைகுனிவில் இருந்து தமிழகத்தை மீட்டு, நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்றார்.

மார்ச் 2016 அன்று உள்ளபடி, தமிழகத்தின் மொத்த கடன் 2,16,000 கோடி என்று தமிழகத்தின் நிதித் துறை செயலாளரே அறிவித்துள்ளார். இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார்.
 இப்படி தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியதைத் தவிர வேறு எந்த சாதனையும் அதிமுக அரசு செய்யவில்லை.விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும்.
குறைந்த விலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் அனைத்து விவசாயப் பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கிற வகையில் நவீன மக்கள் சந்தைகள் அமைக்கப்படும் என்றார்.

1996 - 2001 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த உழவர் சந்தைகளை மூடியதுதான் ஜெயலலிதாவின் சாதனை. மற்றபடி எந்த சந்தைகளையும் அமைக்கவில்லை.
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட ஆறு ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதனால் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.  பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் பளிச்சிடுகிறது. பால் உற்பத்தி 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
2013 - 2014 புள்ளி விபரத்தின்படி 7.04 மில்லியன் டன்னாக பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கூடவே பால் விலையை கணிசமாக உயர்த்தியது அதிமுக அரசு.

மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும். பள்ளிக் கல்வியின் நடைமுறைக் குறைபாடுகள் நீக்கப்படும் என்றார்.
ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை
. பல்கலைக்கழகங்கள் தனித்தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டங்கள் தீட்டப்பட்டு, பல்கலைக்கழங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்றார்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லை. அனைத்துப பல்கலைக்கழக நியமனங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
துணை வேந்தர் பதவிக்கு 14 கோடி லஞ்சம் பெறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக நதிகளை நீர்வழிச்சாலை மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல் வெள்ளப்பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி, பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். தமிழக நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை, உலகவங்கி கடன் உதவியோடு அமைக்கப்படும் என்றார்.

நீர்நிலைகளை இணைத்து, வெள்ளப்பெருக்கு நீரை சேமிக்க முயன்ற அதிமுக அரசின் வழியை சமீபத்திய வெள்ளத்தில் ஒட்டுமொத்த மக்களும் பார்த்துவிட்டார்கள்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரண்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் நிறைவு செய்யப்படும் என்றார்.
அரசு ஊழியர்கள் தங்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு, கிடைக்காத காரணத்தால், படிப்படியாக பல்வேறு போராட்டங்களில் இறங்கி, இப்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம் என்றார்.ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளும், கடையை காலி செய்து விட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலைமைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை, போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
சிறுதொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும் என்றார்.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு புதிய தொழில் கூட தொடங்கப்படவில்லை.
இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்பட்ட தமிழகம், தொழில் துறையில் அதளபாதாளத்துக்கு வீழ்ந்தது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி, முதலீடுகளை வரவேற்று வந்த நிலையில், தமிழகத்தில் முதல்வரையே சந்திக்க முடியாத ஒரு அவலச் சூழல் நிலவியது.

முதல்வரை சந்திக்க முடியாதது மட்டுமல்ல, அப்படியே சந்தித்தாலும், தொழில் தொடங்க வருபவர்களிடம் 25 சதவகிதிம் கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஆட்சி முடியப்போகிற கடைசி கட்டத்தில், முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் 2,42,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நாடகமாடியதைத் தவிர்த்து, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை.

தொழில் தொடங்க வருபவர்களிடம் 25% கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறியபடி வேறு மாநிலங்களுக்கு ஓடிவிட்டனர் .வெளிநாடு ,வெளிமாநிலங்கள் தொழிலதிபர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர்களே வேறுமாநிலங்களில் 5000 கோடிகளில் தொழில் தொடங்கியுள்ளதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை.
                                                                                                                                        நன்றி:தினகரன்.
========================================================================================
இன்று,
பிப்ரவரி-21
.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?