சனி, 6 பிப்ரவரி, 2016

இளைஞர்களை தற்கொலைக்

குத் தள்ளும் பணி நீக்கங்கள்!

சென்னை சைதாப்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார் எனவும், அவரை சமாதானப்படுத்தி பொதுமக்களும் காவல் துறையினரும் மீட்டனர் எனவும்  சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. 
டைடல் பூங்கா அருகில் இருக்கும் இராமானுஜன் ஐ.டி. பூங்காவில் உள்ள ஜெ.எல்.எல்(JLL) நிர்வாகம் தன்னுடன் சேர்த்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாகவும், நியாயம் கேட்க சென்ற தன்னை அடிக்க ஆட்களை ஏவியதாகவும் அந்த இளைஞர் தற்கொலைக்கு செல்லும் முன் எழுதிய கடிதம் நமக்கு கிடைத்தது. 
காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு  தற்பொழுது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
20160203185335
நடந்தது என்ன?
அவரின் நண்பர்களிடம் பேசியதிலிருந்து, ஜெயபாலன் என்ற அந்த இளைஞர் திருச்சியைச் சேர்ந்தவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (EEE) படித்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி சென்னை வந்தவர். 
தமிழ்நாட்டில் இருக்கும் இலட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் சந்திக்கும் அதே பிரச்சனையை அவரும் சந்தித்தார். வேலை கிடைக்கவில்லை. பல மாதங்கள் விடா முயற்சிகள் செய்து இறுதியாக சைதாப்பேட்டை சபரி ஆலோசனை மையம் (SHABARI CONSULTANCY) மூலமாக இராமானுஜன் ஐடி பூங்காவில் உள்ள சி.டி.எஸ் (CTS) வளாகத்தில் ஜெ.எல்.எல் (JLL) நிர்வாகத்தின் கீழ் மின் பராமரிப்பாளர் பணியில் சேர்ந்தார்.
ramanujan-it-city-logo
மாதம் ரூ.10,500 சம்பளம். குறைவான ஊதியமாக இருந்தாலும் படிப்படியாக நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவுகளுடன் பணியைத் தொடங்கியுள்ளார். CTS-க்கு கீழ் JLL. JLL-க்கு கீழ் SHABARI. எனவே, அவருக்கு சம்பளம் SHABARI-யில் இருந்து வந்தது. 
இந்தப் பல நிலை பண பரிமாற்றங்களிலேயே அவருக்கு கிடைக்க வேண்டிய முறையான சம்பளம் பெரிய அளவில் சுரண்டப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சென்னைப் பெருவெள்ளத்தின் போது, பணிக்கு அழைக்கப்பட்ட அவர், தொடர்ந்து மூன்று நாட்கள் வீடு திரும்பாமல், இரண்டு பணிமுறையில் (ஷிப்டுகளாக) தொடர்ச்சியாக  வேலை பார்த்துள்ளார். ஒவ்வொரு பணிமுறைக்கும் CTS நிறுவனம் ரூ.1500 சம்பளம் கொடுத்ததாகவும், 6 பணிமுறைகள் வேலை பார்த்து அதை எதிர்பார்த்திருந்த ஜெயபாலனுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 
அவர் தான் வேலை பார்த்ததற்கான சம்பளத்தைக் கேட்டபோது அவரைத் தொடர்ச்சியாக அலைக்கழித்திருக்கிறார்கள். இந்நிலையில் , அவருக்குக் கொடுக்க வேண்டிய நவம்பர் மாத சம்பளத்தையும் கொடுக்கவில்லை. எனவே, வெள்ளம் வடியத் தொடங்கியிருந்த அந்தக் கடினமான சூழலில் சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.
சம்பளம் வாங்கிக் கொள்ளலாம், தொழிலாளர் துறையில் புகார் செய்யலாம் என நண்பர்கள் சமாதானப்படுத்தியதன் பேரில் 10 நாட்கள் கழித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் ஜெயபாலன். ஆனால், டிசம்பர் மாத சம்பளத்தையும் அந்த நிறுவனம் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறது. அவருடன் வேலை பார்த்த சிலரைப் பணி நீக்கமும் செய்ததாகத் தெரிகிறது. 
அது பற்றி நண்பர்களிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். 
சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவரை நண்பர்கள் தேற்றியுள்ளனர். இந்நிலையில் பிப்.1 அன்று செல்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக அறிவுப்பு செய்தவரை  பொது மக்களும் காவல் துறையினரும் பல வகையிலும் பேசி, திசை திருப்பி, கிட்டத்தட்ட 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். 
அப்பொழுது தன்னைப் பிடிக்க வந்த பொதுமக்கள் மீது ஜெயபாலன் கல் வீசியதாகவும் செய்திகள் வந்துள்ளன.
114654353
” பழகுவதற்கு மிகவும் எளிமையானவன் ஜெயபாலன். 
இப்படிலாம் பண்ணுவான்னு நெனைச்சு கூடப் பாக்கலை”, என்கின்றனர் அவரின் நண்பர்கள். 
ஐ.டி. மக்களுக்கான தொழிற்சங்கமான  நமது  FITE (Forum for IT Employees) சார்பாக ஜெயபாலனை புழல் சிறையில் சந்தித்தோம். 
மிகுந்த மன அழுத்தத்தில் உடைந்து அழுதுவிட்டார்.
 அவரை தேற்றுவதே பெரிய வேலையாகிவிட்ட்து. அவரின் பிணை மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்களின் மன்றமான FITE ஜெயபாலனுக்குத் துணையாக நிற்கும்.இது ஜெயபாலன் என்ற தனிநபரின் பிரச்சனையா? கண்டிப்பாக இல்லை.
தொண்ணூறு இலட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படித்தவர்கள். 
கடந்த பத்து ஆண்டுகளில் புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதித்ததும், அதனால் உருவான பெருந்திரள் கூட்டத்தில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு இளைஞர்களை பெருநிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள் அல்ல. 
கடந்த ஆண்டு டி.சி.எஸ். செய்தது போல, ஏழு ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்த ஊழியர்களை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்திற்கு புதிய இளைஞர்களை (freshers) வேலைக்கு எடுப்பதிலும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் பெருநிறுவன முதலாளிகளுக்குக் கைகொடுக்கிறது.
தன் பிள்ளை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என இருக்கும் நிலம், சொத்தை விற்றோ அடமானம் வைத்தோ, கந்துவட்டி, கல்விக் கடன் வாங்கியோ பொறியியல் கல்லூரிகளில் பெற்றோர் சேர்த்து விடுகின்றனர். 
தரமற்ற கல்லூரிக் கட்டமைப்பில் மாணவர்கள் பலர் மனம் நொந்தே படிக்கின்றனர். படித்து முடித்ததும் வேலைக்கு சென்று கடனைத் திருப்பி அடைக்கலாம், வீட்டுக் கஷ்டம் தீர்ந்தது என்னும் கனவில் கல்லூரிகளை விட்டு வெளியில் வரும் மாணவர்கள், இலட்சக்கணக்கான வேலையில்லாப் பட்டதாரிகளுள் தாங்களும் ஒருவராக மாறிபோனதை சில காலம் கழித்தே உணருகின்றனர். 
வீட்டுக் கஷ்டம், சொந்த பந்தங்களின் கேலிப் பேச்சுகள், சமூகத்தால் ஏற்படுத்தப்படும் மனஉளைச்சலில் இருந்து விடுபட, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தால் போதும் என்று குறைவான சம்பளத்தில் கிடைத்த வேலையில் சேர்ந்து விடுகின்றனர்.
படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாமல், கல்விக் கடனையும் அடைக்க முடியாமல், வாழ்க்கையே தடுமாற்றமாய் உணரும் நம் இளைஞர்களின் மீது மேலும் ஒரு தாக்குதலாய் நிறுவனங்களின் சுரண்டல் நடக்கிறது. 
நீண்ட வேலை நேரம், குறைவான சம்பளம், வைப்பு நிதியத் தொகை , ஊதிய உயர்வு போன்ற பணியாளர் உரிமைகள் மறுக்கப்படுவது, பெரும்பாலும் ஒப்பந்தத்தில் வேலை என அனைத்து வழிகளிலும் நம்மைப் போன்ற இளைஞர்கள் சுரண்டப்படுகிறார்கள். 
இவற்றைக் கேள்வி கேட்க பணியாளர்கள் தங்களுக்கான சங்கம் அமைக்கும் உரிமைகளையும் அனைத்து வழிகளிலும் முதலாளிகள் முடக்குகின்றனர். இதற்கு முற்று முழுதாக அரசு துணை நிற்கிறது.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பது அரசின் கொள்கையாக மாறிப்போன பின்பு, அதன் அத்தனை விளைவுகளையும் மக்கள் அனுபவித்துத் தானே ஆக வேண்டும். இவற்றுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாக சுருக்குவதும், நமக்கு எதுக்கு வம்பு என்று பொது சமூகத்தை போராட்டங்களில் இருந்து விலகி நிற்கச் செய்வதும் இறுதியில் இக்கொள்கைகளால் பலன் அடையும் பெருமுதலாளிகளுக்கே பயனளிக்கின்றன.
ஜெயபாலனின் பிரச்சனை என்பது தனிநபரின் பிரச்சனை அல்ல. இன்னும் செல்பேசி கோபுரத்தில் ஏறாத நாம் தினமும் கடந்துபோகும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் பிரச்சனை. 
ஆசை ஆசையாக படித்துவிட்டு, வேறு வழியில்லாமல் நாம் கடந்து போகும் வழியில் விளம்பர துண்டறிக்கைகள் நீட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் பிரச்சனை. அரசின் தவறான, மக்கள் விரோத கொள்கைகளின் விளைவால் வந்த பிரச்சனை. 
பெருமுதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக நம் சமூகத்தில் எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் கட்டமைப்பின் பிரச்சனை.
இவற்றைக் கேள்விக்குட்படுத்தாமல் நமது ஜெயபாலன்களுக்குத் தீர்வில்லை. அமைப்பாய் அணிதிரளாமல் இவற்றைக் கேள்விக்குட்படுத்த வழியுமில்லை.
என்ன செய்யப் போகிறோம்? 
 நம்முடைய கைகளில் தான் முடிவு உள்ளது.!

தமிழ் நாசர்
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கான மன்றம்
நன்றி:விசை .
=========================================================================================
இன்று,
பிரவரி-06.
  • ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது(1819)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி இறந்த தினம்(1827)
  • இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் ஏவுகணையான டைட்டன் புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)
=========================================================================================
இதற்கு மேலும் ஜெயலலிதா படத்தை வைத்து விளம்பரம் செய்ய ஆலோசனை வழங்குபவர்களுக்கு 1000காசுகள் அன்பளிப்பாக கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்படும்.

=========================================================================================