செவ்வாய், 30 ஜூன், 2015

'தம் படங்கள் ' எனும் 'செல்பி'

இன்றைய காலத்தில்  'செல்பி' எனப்படும் தம்படங்கள் எடுத்துக் 
கொள்வது வெறித்தனமாய்ப் பரவி வரும் பழக்கமாக உள்ளது. 
இதனாலேயே, எந்த ஒரு மொபைல் போனிலும் முன்பக்கமாய் ஒரு கேமரா இருப்பது அவசியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. 
அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முன்பக்க கேமரா, அதன் மெகா பிக்ஸெல் தன்மை குறித்து அவசியம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். 
ஸ்மார்ட் போன் வாங்குபவர்களும், செல்பி கேமரா குறித்து அறிந்த பின்னரே ஒன்றை வாங்குவது குறித்து முடிவு எடுக்கின்றனர். 
அதே சமயத்தில், செல்பி படம் எடுப்பது என்பது ஒழுக்கமற்ற நாகரிகத்தையும்,ஒருவித அச்சுறுத்தும் பழக்கமாக மாறி வருகிறது.விருப்பமில்லாதவர்களையும் தன்னுடன் இணைத்து படங்கள் எடுப்பது எந்தவகையில் நாகரிகம்.?
இந்த பழக்கத்தை ஒட்டி நமக்கு வந்த தகவல்களை இங்கு காணலாம்.

அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுக்கும் முயற்சியில் இரண்டு மீட்டர் உயரத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து உயிரை விட்டார். 
இது நடந்தது இந்தோனேஷியாவில் பாலி என்ற இடத்தில். 
இதே போன்ற இன்னொரு விபத்தில், 21 வயது நிரம்பிய ரஷ்ய பெண், பாதுகாப்பு அதிகாரி விட்டுச் சென்ற 9 எம்.எம் துப்பாக்கியுடன் செல்பி படம் எடுக்கையில், துப்பாக்கி வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். 
இது நடந்தது மாஸ்கோ நகரில்.
 மக்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலமானவர்கள் பலர், மற்றவர்களுடன் செல்பி படம் எடுக்க மறுப்பு தெரிவிப்பார்கள். அண்மையில் பாரிஸ் நகரில் ப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்ற போது, அவரின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர், தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து ஓடி அவரிடம் சென்று, இந்த நிகழ்வினை உங்களுடன் செல்பி எடுத்து பதிந்து வைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். 
பெடரர் அதிகக் கோபமுற்று, பாதுகாப்பில் இது ஒரு பெரிய குளறுபடி எனச் சத்தம் போட்டு தன் கோபத்தைக் காட்டினார். செல்பி படம் எடுக்க அனுமதிக்க முடியாது என கூக்குரலிட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில், சிகப்பு கம்பள வரவேற்பின் போது, செல்பி போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. 
இந்த விழாக் குழு தலைவர் இது பற்றிக் கூறுகையில், செல்பி போட்டோவில் ஒருவர் மிகக் கோரமாக காட்சி அளிக்க வாய்ப்புண்டு என்றுரைத்தார்.
 செல்பி எடுக்க விதிக்கப்பட்ட தடை சரியே என்று வாதிட்டார். 
நிகழ்ச்சிக்குப் பொருந்தாத செயல் என்றும் குறிப்பிட்டார்.

 2013 ஆம் ஆண்டில், டானிஷ் பிரதமர் ஹெல் தார்னிங், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நெல்சன் மண்டேலாவிற்கான நினைவு நிகழ்ச்சி ஒன்றில், செல்பி எடுப்பது குறித்த விஷயம் குறித்துப் பல முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்தனர். 
டேனிஷ் பிரதமர் (பெண்) அவருடைய ஸ்மார்ட் போனில் ஒரு செல்பி எடுத்தார். 
அந்த போட்டோவில், ஒபாமா மற்றும் கேமரூன் இரு புறமும் இருந்தனர். ஆனால், அது தகுதிக்குக் குறைவான செயல், ஒழுக்கம் குறைவதன் அறிகுறி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் வீழ்ச்சி என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

 சென்ற ஆண்டில், செல்பி படங்கள் ஒரு விமான விபத்திற்குக் காரணமாய் அமைந்தது. கொலரடோவில் டென்வர் நகர் அருகே, அம்ரித் பால் சிங் என்பவர் தன்னையே செல்பி படம் எடுத்தார். 
அப்போது அவர் ஒரு விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பட்ட ப்ளாஷ் வெளிச்சம் அவருடைய கவனத்தைச் சிதறடித்து, விபத்தை ஏற்படுத்தியது என National Transportation Safety Board அமைப்பு இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்தது. வெளிச்சத்தினால் கவனம் சிதறிய விமானம் தரையில் மோதியது. 
சிங் மற்றும் ஒரு இந்திய பயணி இதில் மரணமுற்றனர். 
இந்தப் பயணி ஓர் இசைக் கலைஞர் ஆவார். 
சென்ற மே மாதம், இத்தாலியில், கிரிமோனா நகரில் மியூசியம் ஒன்றில், அங்கிருந்த நினைவுச் சிலை ஒன்றுடன் செல்பி போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின் எடை தாங்காமல், சிலையின் கிரீடத்தின் ஒரு பகுதி உடைந்தது. 
சென்ற மார்ச் மாதம், கலிபோர்னியாவிலிருந்து வந்த இரு பெண்கள், ரோம் நகரில் உள்ள கொலாசியத்தில், தங்கள் பெயரின் முன் எழுத்துகளைச் செதுக்கி பின் அவை தெரியும் வகையில் செல்பி எடுத்தனர். 
அங்கிருந்த பழங்காலச் சிலை புதிய எழுத்துகளால், தன் புகழை இழந்தது தான் மிச்சம்.
========================================================================
இன்று,
ஜூன்-30.
 • காங்கோ விடுதலை தினம்(1960)
 • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
 • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
 • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)
========================================================================
ஹாட் லைன் பீப்... பீப் ... செய்கிறதுவிண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி லைனில் காதை கொடுக்கிறார்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதம செயலாளர் பேசுகிறேன். வணக்கம் ஐயா... பதறுகிறார் விஞ்ஞானி. 
ஏற்பாடெல்லாம் எப்படியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் தயார் செய்து விடுவீர்களா?
ஐயா.. அது.... சாதாரண விஷயமல்ல... எச்சில் முழுங்குகிறார்.
செயலாளரின் குரல் இறுகுகிறது. என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாதுபிரதமர் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புவியில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் போய் வந்து விடுவார். 
ஓரிரு நாட்கள் இந்தியாவில் தங்குவதே அவருக்கு கடினமான வேலை. உடனே ஏதாவது ஒரு கிரகத்திற்கு பயணப்படுவதற்கு ஏற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.

இப்படி அவசரப்படுத்துகிறீர்களே, புவியில் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா போவது போல் அண்ட வெளியில் போக முடியாது.
ஓசோன் மண்டலம் இருக்கிறது, புவியீர்ப்பு விசையை கடக்க வேண்டும். அதை கடப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. 
எங்கள் அலுவலகத் திட்டத்தின்படி உலக நாடுகள் அனைத்தையும் மாரத்தான் சுற்றுச் சுற்றி இரண்டே மாதத்தில் முடித்து தொழில் வளத்தை பெருக்கி விடுவோம். அப்புறம் தொழில் வளத்தை பெருக்க கிரகங்களுக்குத்தான் போக வேண்டும். எனவே, உடனே ஏற்பாடுகளை செய்யுங்கள்.
அண்ட வெளியில் பயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏராளமான பயிற்சிகள் வேண்டும். 
அதைபற்றியெல்லாம் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அவர் எல்லா பயிற்சிகளையும் பெற்றுவிட்டார். மேலும் ஏதாவது வேண்டும் என்றால் அதானி ஏற்பாடு செய்வார்.
 எந்த கிரகத்திற்கு முதலில் போகலாம் என்று சொல்லுங்கள்சந்திரன் வரைக்கும்தான் நாம் எட்டியிருக்கிறோம். 
சந்திராயன் திட்டத்தை வேகப்படுத்துகிறோம். ஆனால் அங்கு மக்கள் வசிக்கவில்லையே. அது தேவையில்லை. 
ஏற்கனவே, ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் நட்ட கொடிகள் இருக்கிறதே. அதற்கு பக்கத்தில் நமது கொடியையும் வைத்து படம் எடுத்தால் போதும். அடுத்தது செவ்வாய் என்று திட்டமிடலாமா?
ஐயா... கொஞ்சம் பொறுங்கள் தெரியாமல்தான் கேட்கிறேன். 
கோபித்துக் கொள்ளாதீர்கள். எதற்காக பிரதமர் இப்படி பறந்துக் கொண்டேயிருக்கிறார்.
சரியான டியூப் லைட்டாக இருக்கிறீர். 
தொழில் வளர்ச்சியில் இந்தியாவை முதல் நாடாக்கத்தான் இந்த பயணங்கள். எல்லோரையும் அழைத்து, எல்லோரும் வந்து, இந்தியாவை `ஃமேக்’ செய்யப்போகிறார்கள். இந்தியாவை மேக் செய்வதற்கு இந்தியர்கள் 120 கோடிபேர் இருக்கிறோமே.
அவர்களெல்லாம் எதற்கு?
இப்படியெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது. 
அவர்கள் வந்தால்தான் தொழில்கள் பெருகும், வேலை வாய்ப்புகள் குவியும், வீட்டுக்கு மூன்று, நான்கு என எடுத்துக் கொள்ளலாம்.ஏற்கனவே கறுப்புப் பணத்தையும் இப்படி பங்கிட்டுக் கொள்ளலாம். 
ஆளாளுக்கு 15 லட்சம் கிடைக்கும் என்று சொன்னீர்கள்.அது தேர்தலுக்காக சொன்னது. உடனே மறந்து விட வேண்டும்.
எனக்கு தெரிய நமது நாட்டில் விவசாயம் அடிப்படைத் தொழில் இல்லையா?
ஆமாம், அதற்கென்ன?
அதிலேயே ஒரு சமநிலை ஏற்படுத்தப்படவில்லை.
என்ன சொல்கிறீர்!

நிலக்குவியல் பகிரப்படவில்லை, நிலம் பயன்படுத்துபவர்கள் கையில் கிடைக்கவில்லை, எனவே, உணவு உற்பத்தி உயரவில்லை. கிராமங்களில் வறுமை, வட்டிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. 
தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 
விவசாயிகள் கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கொடுமைகள் போதாது என்று சமூக நலத்திட்டங்களின் மானியங்களை வெட்டி, நூறுநாள் வேலைத் திட்டத்தைச் சுருக்கி, இப்போது நிலத்தைப் பறிக்கும் அவசரச் சட்டம் என்று அடிப்படைத் தொழிலான விவசாயமே அழிகிறதே!
 நீர் சொல்லும் விவசாயத்தை உயர்த்துவதற்குத்தான் அவர் பறந்து கொண்டிருக்கிறார்.
அது இந்தியாவில் இருந்து செய்ய வேண்டிய வேலையல்லவா?
உமக்கு பொருளாதாரம் தெரியவில்லை, விவசாயமெல்லாம் பழமையான தொழில், நவீன இந்தியாவுக்கு ஆகாது.
அப்படியென்றால் நவீன இந்தியா எப்படி வாழும்?அமெரிக்கர்களும், ரஷ்யர்களும், ஆப்பிரிக்கர்களும் பெரிய பெரிய தொழிற்சாலைகளை இந்தியாவில் கட்டுவார்கள், தொழில் பெருகும், வேலைகள் மலியும்.வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு அடிப்படை சிறு, குறு, நடுத்தரத் தொழில்களல்லவா?
 அதெல்லாம் பழைய கணக்கு, மோடிக்கு பிடிக்காது. அவர் போடுவதெல்லாம் புது கணக்கு.அதானியும், அமெரிக்கர்களும் இயந்திரங்களை நிறுவுவார்கள். மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் தர மாட்டார்களே.
அதற்காக சிறு, குறு தொழில்களை ஊக்குவித்து அவர்களை பகைத்துக் கொள்ள முடியுமா?
அப்படியானால் வேலை வாய்ப்பு எங்கிருந்து வரும் என்றுதான் கேட்கிறேன்.
நிலங்களைப் பறிக்கும் போது வீட்டுக்கு மூவருக்கு வேலைக் கொடுப்போம், கிராமங்களை விட்டு துரத்தும் விவசாயிகளுக்கு இலவசமாக வேலை கொடுப்போம். 
சிறு, நடுத்தர தொழில்களை எல்லாம் அழித்து அனைவருக்கும் வேலை கொடுப்போம்.வெளிநாட்டு மூலதனத்தைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்போம். 
இதுதான் எங்கள் திட்டம்.ஆமாம், இப்படித்தான் அருண்ஜெட்லியும் சொல்கிறார், அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள், சாத்விக்கள், சாதுக்கள் என எல்லோரும் சொல்கிறார்கள். 
எல்லோரும் சொல்கிறார்கள் இல்லையா? ஆமாம் சொல்கிறார்கள். எல்லோரும் சொல்வதைத்தான் நீரும் சொல்ல வேண்டும். எங்கே சொல்லும்.சொல்லலாம். 
ஆனால்...ஆனால் என்ன?
என் விஞ்ஞான அறிவுக்குப் பொருந்தி வரவில்லையே. ம்.... இப்போதுதான் புரிகிறது, நீர் யார் என்று. விஞ்ஞானத்தை நம்புகிறீரா. 
அப்படியானால் நீர் தேசபக்தர் இல்லை. இந்த தேசத்தில் இருப்பதற்கு உமக்குத் தகுதி இல்லை. கருத்து மோதல் செய்கிறீர். நீர் இந்துவே இல்லை.எனக்குப் புரியவில்லையே, புரியும்படி சொல்கிறேன்.... கேளும்..
. இந்துவாக இருப்பவன் சிந்திக்கக் கூடாது... சீர்திருத்த கருத்துக்களை கேட்கக் கூடாது. விஞ்ஞானத்தை நம்பக் கூடாது. விதியைத்தான் நம்ப வேண்டும். பட்டினியில் செத்தால் அவன் விதி. 
தற்கொலை செய்தால் அதுவும் விதிதான். பசி, பிணி எல்லாம் விதிதான்.இதனால் எல்லாம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை இந்து மக்களல்லவா? 
தவறான கொள்கைகளையெல்லாம் மாற்றுவோம் என்று தேர்தலின் போது பேசினீர்களே, தேர்தல் என்றால் ஓட்டு வாங்க வேண்டாமா? 
இந்த பரதேசி, பஞ்சைகளிடம்தானே ஓட்டு இருக்கிறது.
இது அதர்மமில்லையா?
இல்லை, இதுதான் தர்மம்! 
ராஜ தர்மம்!! 
அதானி, அம்பானி வகையறாக்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடப்பாடு. எங்கோ கிடந்த எங்களை இப்படி இந்தியாவின் முதன்மை நாற்காலிகளில் உட்கார வைத்தவர்கள் அவர்களல்லவா!என்ன கொடுமை இது.... ஓட்டுப்போட்ட மக்களை இப்படி வஞ்சிக்கிறீர்களே. 
உமக்கு அரசியல் ஞானமே இல்லை. எந்த ஞானமும் இல்லாதவர்கள்தானே இப்போது அரசின் தலைமை பொறுப்புகளில் இருக்கிறார்கள். 
அவர்களுக்கு என்ன ஞானம் இருக்க வேண்டுமோ, அது இருக்கிறது. கல்வியை வர்ணாசிரம கல்வியாக்க, கல்விக் கூடங்களை, ஆய்வு நிறுவனங்களை... மனுவின் பர்ண சாலைகளாக்க தகுதியானவர்களைத்தான் நியமித்திருக்கிறோம்.
அப்படியானால்.... சொல்லும்....புஷ்பக விமானங்களை, பறக்கும் கம்பளங்களை, கண்டுபிடித்தவர்களை வைத்து ஐ.ஐ.டியையும் நிர்வகித்தால் என்ன? சரியாக சொன்னீர், 
இதோ வருகிறது... உமக்கு டிஸ்மிசல் உத்தரவு !

நன்றி:தீக்கதிர்.
=========================================================================  
                      

திங்கள், 29 ஜூன், 2015

வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ?

இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக் கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவதாகஉளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்ற உண்மையை, “அமெரிக் காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள்” என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச்சத் திற்கு கொண்டு வந்துள்ளது.
 மேலும்இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 
அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப்பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச்சூழல், கட்டுமானத் தொழிலாளர் கள்துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.
உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன.
ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்எஸ்எஸ்தான் என்பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக்கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு வந்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே “வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி” என்ற தலைப்பில், ஆர்எஸ்எஸ் தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, “வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து” என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்காவின் நிதி, எப்படி ஆர்எஸ்எஸ்ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசியலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வ மாக அந்த அறிக்கை முன்வைத்தது.
பலலட்சம் கோடி டாலர்கள் ஆர்எஸ்எஸ்அமைப்புகளுக்கு சென்றுள்ளதை யும் அந்த அறிக்கை அம்பலப்படுத் தியது.
இந்த அறிக்கையின் அடிப்படை யில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
நாட்டில் அரசு சாரா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்எஸ்எஸ்-ஸின் அந்நிய நிதி பின்னணிகுறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ-யின் உயர்மட்ட உளவுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திரமோடி அரசு விசாரிக்குமா? 
அந்த விசாரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்குமா? 
-என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.
பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார். 
அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியிலிருந்துதான், இவ்வளவு காலமாக வும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. 
அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக் கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்எஸ்எஸ் மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?
இன்று சென்னையில் ஓட்டம் காணும் மெட்ரோ ரெயில்ஆரம்ப  ஆயத்தப்பணிகளில் அன்று ஆய்வு செய்யும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆரம்பித்தவர்கள் பெயர்களை காணோம்.வரலாற்றில் மெட்ரோ வேண்டாம் .மோனோ கொண்டுவரப்போறேன் என்றவர் பெயர் ஆரம்பித்து கொடியசைத்தவர் என்று வரும் அவலம்.
========================================================================
இன்று,
ஜூன்-29.
 • செஷெல் விடுதலை தினம்(1976)
 • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
 • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
 • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)
=======================================================================

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
======================================================


அவசர நிலை [எமர்ஜென்சி ]காலமும் 
கலைஞரின் சாதுர்யமும்.
- நக்கீரன்.
இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட 40வது ஆண்டு இது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதை மீறி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலையை நாடு முழுவதும் அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெருந்தலைவர் காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இத்தகைய நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே ஆண்டு அக்டோபர் 2ல் பெருந்தலைவர் மரணமடைந்தார்.
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எமர்ஜென்சி காலத்தைக் கூறலாம். அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, இந்த நெருக்கடி நிலையை எதிர்த்தது. இதற்காக கடற்கரையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக 1976ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. அன்றிரவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர். (தி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினரும் கைது செய்யப்பட்டனர்)
பிப்ரவரி 1ந் தேதி கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் படை, மு.க.ஸ்டாலினை கைது செய்தது. திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் மனைவி கண்கலங்கி நிற்க, ‘மாமியார் வீட்டு’க்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டார். ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, நீலநாராயணன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தி.க. தலைவர் கி.வீரமணியும் அதே சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். வைகோ உள்ளிட்ட தி.மு.கவினர் பலரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில் லாக்கப்பைத் திறக்கக்கூடாது என்பது சிறை விதி. அதை மீறி சென்னை மத்திய சிறையின் லாக்கப் கதவுகள் திறக்கப்பட்டன. காவலர்கள் தடியுடன் சென்று மிசா சிறைவாசிகளைக் கடுமையாகத் தாக்கினர். மு.க.ஸ்டாலின் மீதுதான் கொலைவெறியுடன் தாக்குதல் நடந்தது. அவரைப் பாதுகாப்பதற்காக குறுக்கிட்ட சிட்டிபாபு கடுமையான தாக்குதலுக்குள்ளாகி பின்னர் மரணமடைந்தார். தாக்குதலில் ஆற்காடு வீராசாமியின் காது திறனிழந்தது. முரசொலி மாறனின் முதுகுப்பகுதியில் கடுமையான தாக்குதல். கி.வீரமணியையும் பலமாகத் தாக்கினர். இவர்களைப் போலவே மதுரை சிறையில் தாக்குதலுக்குள்ளான தி.மு.க பிரமுகர் சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணமடைந்தார்.
தமிழகம் முழுவதும் கைதானவர்களை எந்த சிறையில் வைத்திருக்கிறார்கள் என்ற விவரம்கூட வெளியிடப்படவில்லை. தி.மு.கவினரைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என அறிவித்து, அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) நடந்தபடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார் கலைஞர். (அவற்றை அச்சிடவும் முடியாதபடி நெருக்கடி நிலை இருந்தது- கையால் எழுதி, சைக்ளோஸ்டைல் எனும் முறையில் அச்சில் உருட்டி நகல் எடுக்கவேண்டும். மு.க.அழகிரியும் கோபாலபுரத்தில் இருந்த தி.மு.கவினரும் இந்த வேலையை செய்திருந்தனர்). கலைஞரின் இந்தப் போராட்டத்திற்குப் பிறகே சிறையில் உள்ள தி.மு.கவினரைக் குடும்பத்தினர் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. ரத்த உறவுகள் மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் கலைஞரால் ஸ்டாலினை மட்டுமே பார்க்க முடிந்தது.
கலைஞரின் வீடு, முரசொலி அலுவலகம் என அனைத்தும் சோதனைக்குள்ளாயின. அவரது குடும்பத்து உறுப்பினர்களையும்கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. கலைஞரைப் பார்ப்பதற்கு வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வரும் தொண்டர்களையும் போலீசார் மிரட்டத் தொடங்கினர். அன்றைய தி.மு.க தொண்டர்கள் இதற்கெல்லாம் மிரண்டவர்களா என்ன? திருப்பதிக்கும் திருத்தணிக்கும் யாத்திரை செல்வது போல வாகனம் பிடித்துக்கொண்டு, குடும்பத்து உறுப்பினர்கள் சிலரை மொட்டைப் போடவும் வைத்து, சந்தனம் தடவிய மொட்டைத் தலையுடன் வாகனத்தை சென்னை கோபாலபுரத்திற்குள் விட்டு கலைஞரைத் ‘தரிசித்து’விட்டுத்தான் போவார்கள்.
பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டுமென்றால் அது சென்சார் செய்யப்பட்டபிறகே அனுமதிக்கப்படும். சென்சார் செய்யும் பொறுப்பில் இருந்தவர்களோ ராஜாவை (இந்திராணியை) மிஞ்சிய ராஜவிசுவாசிகள். ஆட்சிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல.. பெருந்தலைவர் காமராஜர் என்று எழுதினால் பெருந்தலைவரை கட் செய்துவிடுவார்கள். அறிஞர் அண்ணா என்று எழுதினால் அறிஞரை கட் செய்வார்கள். தந்தை பெரியார் என்ற பெயரை எழுதவே முடியாது. இந்திரா அரசுக்கு எதிராக இருந்த முரசொலி, விடுதலை, துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிக்குள்ளாயின.
எதையும் எழுத முடியவில்லையே என கடுப்பான கலைஞர் 1976ஆம் ஆணடு மார்ச் 2ந் தேதி நாளேட்டின் முதல் பக்கத்தில் இப்படித் தலைப்பிட்டார். “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. இரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலெட்சுமி ஆராய்ச்சி”
எங்கே வெட்டு பார்ப்போம் என்று சென்சார் அதிகாரிக்கு சவால் விடுவது போன்ற தலைப்பு இது. இதைவிட முக்கியமான ஒன்று உண்டு.
பிப்ரவரி 3ந் தேதி அண்ணாவின் நினைவு நாள். மறுநாள் முரசொலியில், ‘அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர் பட்டியல்’ என்ற தலைப்புடன் யார், யார் வரவில்லை என்பது வெளியாகியது. பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களின் பட்டியல்தான் வெளிவரும். வராதவர்களின் பட்டியலை வெளியிட என்ன அவசியம்? அங்கேதான் இருக்கிறது கலைஞரின் சாதுர்யம்.
எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தில் கைதாகி சிறைப்பட்ட தி.மு.கவினர் யார் யார் என்பது சக கட்சிக்காரர்களுக்கே சரியாகத் தெரியாது. அதனை வெளிப்படையாக வெளியிடவும் முடியாது. அதனால்தான் சிறைப்பட்டிருந்தவர்களின் பெயரை ‘அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர் பட்டியல்’ என வெளியிட்டார் இரண்டு, மூன்று நாட்கள் இந்தப் பட்டியல் வெளியான பிறகே சென்சார் அதிகாரிகள் திடுமென விழித்துப் பார்த்தனர். அதற்குள் கலைஞரின் பணி கச்சிதமாக நிறைவேறியிருந்தது.
ஓராண்டு காலத்திற்குப் பின், எமர்ஜென்சியை ரத்து செய்தார் இந்திராகாந்தி அம்மையார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அனைவரும்  விடுதலையாயினர்.
========================================================================

ஞாயிறு, 28 ஜூன், 2015

தனியாரிடம் தள்ளிவிடப்படும் ரெயில்வே.எதிர்பார்த்தது போலவே பிபேக் தேப்ராய் கமிட்டி இந்திய ரயில்வேயை பல பிரிவுகளாக பிரித்து தனியார்மயப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 இதனை தனியார்மயம் என அழைப்பதற்கு பதிலாக “அரசின் பிடியிலிருந்து விடுதலைமயம்”என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. 
இந்த அறிக் கையை விமர்சிப்பவர்களை தேவையில்லாமல் கிலியை ஏற்படுத்தும் இடதுசாரிகள் எனவும் காலாவாதியான நேரு காலத்திய சோசலிச கருத்துகளை உடையவர்கள் எனவும் பா.ஜ.க. அரசாங்கமும் அதன் கார்ப்பரேட் துதிபாடிகளும் விமர்சிக்கக்கூடும். 
உண்மையில் அறிக்கையை உருவாக்கியவர்களுக்கும் அதன்ஆதரவாளர்களுக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.
ஏனெனில் இந்த அறிக்கைமுன்வைக்கின்ற தீர்வுகளும் அதற்கான காரணிகளும் நவீன தாராளமய சூத்திரங்களுக்கு முற்றிலும் இசைந்தவையாக உள்ளன. 
ரயில்வேயின் குறைகள் அனைத்திற்கும் காரணம் அது அரசுத்துறையாக இருப்பதுதான் எனவும்இக்குறைகளுக்கு சர்வரோக நிவாரணி தனியார்மயம்தான் எனவும் அறிக்கை கூறுகிறது.பிரிட்டன் ரயில்வேயை தனியார்மயப்படுத் தியதால் ஏற்பட்ட படுபாதகமான விளைவுகளை யும் அல்லது ஐரோப்பாவில் ரயில்வேயை அரசுத்துறையே இயக்குவதின் வளமான அனுபவத்தையும் இக்கமிட்டி உதாசீனப்படுத்தியுள்ளது.
அனைத்துப் பணிகளும் தனியாருக்கு!
ரயில்வேயை பல பிரிவுகளாக உடைத்து பிரிக்க வேண்டும் என இந்த அறிக்கை கோருகிறது. 
இருப்புப் பாதைகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, இருப்புப் பாதை தளவாடங்களை உற்பத்தி செய்வது, ரயில் வண்டிகளை இயக்குவது என பல பிரிவுகளாக பிரித்துஅவற்றை தனியாருக்கு தரவேண்டும் என தேப்ராய் கமிட்டி வலியுறுத்துகிறது. 
இதற்காக அடுத்தஐந்தாண்டுகளில் பல களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமிட்டி கூறுகிறது.
முதலில் ரயில்வேயின் கணக்குகளை பராமரிப்பதில் வணிகமுறை அடிப்படையிலான நடைமுறை கொண்டு வரவேண்டும் என தேப்ராய் கமிட்டி ஆழமாக குறிப்பிடுகிறது. 
ரயில்வேயின் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு வழித்தடமும் அதில் ஈடுபடுத்தும் சமூக முதலீடும்லாபம் தரக்கூடியதுதானா என்பதை வெளிப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. சமூகப்பணிகளுக்காக ஆகும் செலவை ரயில்வே ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக மத்திய அரசாங்கம் பட்ஜெட் மூலம் மானியமாக தந்துவிட வேண்டும். இரண்டாவதாக ஒரு “சுயேச்சையான” கட்டுப்பாட்டுக் குழு உருவாக்கப் படும். கட்டணத்தை நிர்ணயிப்பது, தனியாரி டையே நியாயமான போட்டியை உருவாக்கு வது, ரயில்வேயின் பல்வேறு வசதிகளை பயன்படுத்திட தனியாருக்கு கட்டணத்தை தீர்மானிப்பது ஆகிய பணிகளை இந்த குழுதான் நடைமுறைப்படுத்தும்.
அதே சமயத்தில் ரயில்வே பாதுகாப்பு, ஊழியர்களுக்கான வீட்டு வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
 ஊழியர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான மானியத்தை அரசு தருவது தேவை எனவும்இக்கமிட்டி முன்வைக்கிறது. 
இவையெல்லாம் நவீன தாராளமயக் கொள்கைகளை அப்படியேபின்பற்றுவது என்பதாகும். அடிப்படை வசதிகளை உருவாக்கிட செலவு அரசாங்கத்திற்கு; அதில் அதீத லாபம் தனியாருக்கு எனும் அணுகுமுறை இதில் உள்ளது.
மின்துறை தனியார்மயம் கூறும் பாடம் என்ன?
எழுத்தில் எப்படி எழுதிவைத்தாலும் நடைமுறையில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்திய அனுபவம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மின்விநியோகம் தனியார் மயம் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். மின்கட்டணத்தை நிர்ணயிக்கும் கட்டுப்பாட்டுக் குழுவும் சுயேச்சையானதுதான் என்று கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது எவருக்கு சேவகம் செய்கிறது? மின்விநியோகம் செய்யும் தனியாருக்கு ஆதரவாகவே அது செயல்படுகிறது.
அதுதான் இக்குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டளை ஆகும். தாங்கள் அடிப்படை வசதிகளை உருவாக்கிட முதலீடு செய்திருப்பதால் அதனை ஈடுகட்ட மின் கட்டணங்களை அதிகப்படுத்த வேண்டும் என மின் துறையில் உள்ள தனியார் கோரும் பொழுதெல்லாம் அந்த முதலீடு பற்றிய எவ்வித ஆய்வும் செய்யாமல் மின்கட்டண நிர்ணயக்குழு தனியாருக்கு ஆதரவாக மின்கட்டணத்தை உயர்த்துவதையே செய்துள்ளன. தனியார் மின்விநியோக நிறுவனங்கள் எவ்வித ஆய்வுக்கும் அல்லது கேள்விகளுக்கும் கட்டுப்பாட்டுக் குழு உட்படுத்தியதே இல்லை.
 தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டும் முறைகேடுகள் கூட உதாசீனப்படுத்தப்படுகின்றன. 
உபயோகிப் பாளர்களாகிய சாதாரண மக்களுக்கும் கட்டணம் பற்றி கருத்து முன்வைக்கும் உரிமை உண்டு என்பதை இக்குழு அங்கீகரிப்பது இல்லை. எனவே மக்களுக்கு குறைந்த விலையில் மின்கட்டணம் அளிக்க வேண்டும் எனில் அதன் மானியச்சுமையை மாநில அரசாங்கங்கள் மீது சுமத்தப்படுகிறது. இதுதான் சமீபத்தில் தில்லியில் நடந்தது. தனியார் ஏகபோகங்கள் அரசுஏகபோகங்களைவிட மிக மோசமாக இருக்கும்.
இந்திய ரயில்வேயிலும் இதே போன்ற நடைமுறை உருவாகாது என உத்தரவாதம் இல்லை.தனியார் ஒரு சேவையை இயக்கும் பொழுது அதற்கான செலவுகள் மிகைப்படுத்தியே காட்டப்படும்.
இது கட்டண உயர்வுக்கான தேவையை உருவாக்கும். 
சமூகத்தேவைகள் இருந்தாலும் லாபம் தராத வழித்தடங்கள் எவ்வித தாட்சண்யமும் இன்றி மூடப்படும். 
அடிப்படை வசதிகள் அனைத்தும் உருவாக்கிடும் சுமை அரசின் தலையில் விழும். தனியார்மயத்திற்குப் பிறகு மக்கள் அதீத கட்டணம் தருவதும் அரசின் செலவுகள் பன்மடங்கு உயர்வதும் நடக்கும். அதே சமயம் தனியாரின் வங்கி இருப்பு அபரிமிதமாக உயரும்.
பிரிட்டன் தனியார்மயத்தின் அனுபவம்
இது ஏதோ பைத்தியக்காரத்தனமான கற்பனை என எண்ணுவோர் பிரிட்டன் ரயில்வேதனியார்மயத்தின் அனுபவத்தை நோக்கவேண்டும். 
பிரிட்டனின் தனியார்மயத்தைதான் தேப்ராய் கமிட்டி முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளது.
 இதன் அனுபவம் குறித்து பல ஆய்வுகள் உள்ளன. பிரிட்டன் அரசின் ஆய்வு கூட உள்ளது.பிரிட்டனில் ரயில்வே அடிப்படை வசதிகளை உருவாக்கிட 1993ல் அமைக்கப்பட்ட ரயில் டிராக் பி.எல்.சி. எனும் சுயேச்சையான அமைப்பு 2001ல் திவாலாகியது.
ஏன்? 
ரயில்வேயில் செயல்பட்ட தனியார் அமைப்புகள் தாம் தரவேண்டிய நியாயமான கட்டணங்களை தரவில்லை.
 பிறகு நெட் ஒர்க் ரயில் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. 
2002-03ல் 9,600 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்காக இருந்த கடன் 2012ல் 30,000 மில்லியனாக உயர்ந்தது. 
இருப்புப்பாதைகளை பராமரிக்க ஆகும் செலவைவிட இக்கடனின் வட்டி அதிகமாக உள்ளது. தனியார் வற்புறுத்தலை ஏற்றுக்கொண்டதால் இருப்புப்பாதைகளை பயன்படுத்திட ஆகும் கட்டணங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டன.
எனவே அரசின் வருமானம் வீழ்ந்தது. 
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோட்பாடு அடிப்படையில் இக்கடன் முழுதும் அரசின் பட்ஜெட்டில் திணிக்கப்பட்டது. இன்று பிரிட்டன் மக்கள் தனியார்மயத்திற்கு முன்பு இருந்ததைவிட இருமடங்கு அதிக சுமையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.2263 ரயில் நிலையங்களும் 226 வழித்தடங்களும் லாபமில்லை எனக்கூறி மூடப்பட்டுவிட்டன. 
அரசே ரயில்வேயை நடத்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுது பிரிட்டனில் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதில் முகைநரண் என்னவெனில் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் அரசு நிறுவனங்கள் பிரிட்டனில் ரயில்வேயை இயக்குகின்றன. 
ஆனால் பிரிட்டன் ரயிலை பிரிட்டன் அரசாங்கம் இயக்கதயாராக இல்லை.
லாபம் ஈட்டும் ஒரே ரயில் நிறுவனம் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்தான்! இது அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத் தக்கது. 
ஆனால் இதனையும் தனியார்மயமாக் கிட பிரிட்டன் அரசாங்கம் துடிக்கிறது. எனவேதான் பிரிட்டன் மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் 68 சதவீதம் பேர் ரயில்வேயை மீண்டும் அரசுத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில் எல்லாமே சரியாகஉள்ளது என எவரும் கூற இயலாது. ஆனால்பிரிட்டன் ரயில் தனியார்மயத்தை முன்மாதிரி யாக கொண்டு பிபேக் தேப்ராய் கமிட்டி முன்வைக்கும் சிகிச்சை என்பது நோயைவிட மோசமாக உள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தையும் பிபேக் தேப்ராய் கமிட்டி ஆய்வு செய்திருக்கலாம். 
சில நாடுகளில் அரசே ரயில்வேயை இயக்குகிறது. சில நாடுகளில் மாநில குடியரசுகள் ரயில்வேயை இயக்குகின்றன. சில நாடுகளில் ரயில்வே பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் அனைத்து பிரிவுகளும் அரசின் கீழ் இயக்கப்படுகின்றன. இப்படி பல நல்ல உதாரணங்கள் உள்ளன. ஆனால் தேப்ராய் கமிட்டி இவற்றைஆய்வு செய்யவில்லை. தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை மோடி அரசாங்கம் நிராகரிப்பதேசிறந்தது. 
ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் துதிபாடுவோரின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்யாது.
ரயில்வேயை பொது நன்மைக்கான சேவை என்பதைவிட லாபம் தரவேண்டிய பொருளாதார அமைப்பாக பார்ப்பதும் மக்களைவிட லாபம்தான் முக்கியம் எனும் கோட்பாடும் தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை நிராகரிக்கும் அரசியல் வல்லமையை மோடி அரசாங்கத்திற்கு தராது.

ஆதாரம் : பீப்பிள்ஸ் டெமாக்ரசி.


1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ?

முழு விவரம்
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.
1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள் வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.
நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை. மேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.
சில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா?
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக்குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படி தான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அதுபற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது.இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு நீதிபதி
குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இதுபற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.
கட்டடங்களின் மதிப்பீடுகள்
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.
ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார். பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு  ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது. 
சுதாகரன் திருமணச் செலவுகள்
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரன் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி குமாரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமானவரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.
கடன் மூலம் வந்த வருமானங்கள்
மிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.
அப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப்  பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.
குற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி குமாரசாமி அதைப் புரிந்துகொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும். இப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டுமொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.
திராட்சைத் தோட்ட வருமானம்
ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம்  10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார். ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில்கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.
கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமானவரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.
பரிசுப்பொருள் மூலம் வந்த வருமானங்கள்
ஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப்பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.
ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும் வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.
சசி என்டர்பிரைஸஸ்
சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர்தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்
நமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் என்று 4 கோடி என்று கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ்சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் டூப்பர் டி.வி
சூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல்,  சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.
சொத்துகள்...
அசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர்தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
இதுபோன்ற குளறுபடிகளால், எதிர்தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார். 

- இவ்வாறு பட்டியல் போட்டுள்ளது அப்பீல் மனு. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.
தமிழக அமைச்சர்களுக்கு மீண்டும் கோயில் வேலைகள் காத்திருக்கின்றன என்று கிண்டல் அடிக்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.
- ஜோ.ஸ்டாலின்

நன்றி ;விகடன்.
========================================================================
இன்று,
ஜூன்-28.
 • ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
 • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
 • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
 • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)
==============================================

சனி, 27 ஜூன், 2015

ஊழலற்ற

மே 26 அன்று தனது ஓராண்டு ஆட்சியின் நிறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அனைத்துமொழி நாளேடுகளி லும் தனதுஆட்சியின் சாதனைபற் றிய விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.

அதில், ”ஊழலற்ற, வெளிப்படையான தன்மைகொண்ட, கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவை தான் எங்கள் அடிப்படைக்கொள்கை” என்று பிரகடனப்படுத்தினார். 

உத்தரப்பிரதேசம், மதுரா மாவட்டம் நாக்லாசந்த்ரபான் கிராமத்தில் ஒருபொதுக்கூட்டத்தில், “கடந்த ஓராண்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம். 
கடந்த 60ஆண்டுகளாக நாட்டைக்கொள்ளையடித்தவர்களுக்கு (அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த பாஜகவின் 6 ஆண்டுகள் உட்பட?) முடிவு கட்டியுள்ளோம்”என்று முழங்கினார். 
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் தன்பங்குக்கு அதைவழிமொழிந்தார். நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியோ,” கடந்த ஓராண்டில் ஊழலற்ற அரசை அளித்ததே மாபெரும் சாதனை” என்று பூரித்தார்.

சென்னையில் மே 26 அன்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, ”கடந்த ஓராண்டில் ஊழல்கள் ஏதும்நடக்கவில்லை என்றுபிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். 
ஒன்றை நாட்டுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரும் ஊழல்கள்கூட முதல் ஆண்டில் வெளியாகவில்லை. 
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தன. அதுபோல இந்த அரசும் ஆட்சியைத் தொடரத்தான் போகிறது. 
அப்போது முந்தைய ஆட்சியைவிட மிகப்பெரிய ஊழல்கள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.
அவரின் பேச்சு இப்போது உண்மையாகிறது.ஒவ்வொரு பூனைக்குட்டியாக வெளி வருகிறது.

சுஷ்மா சுவராஜ்
யெச்சூரியின் பேட்டி வெளியான இரண்டுவாரங்களுக்குள் ரூ.750கோடி மோசடி ஊழலில் சிக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, லண்டனில் இருக்கும் லலித்மோடியின் கதையும், அதில் அவருக்கு உதவிய பாஜக அரசின்வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-ன் பங்கும் இந்தியாவையே அதிர வைத்தது. 
ஒருமோசடிப் பேர்வழிக்கு, இந்தியச் சட்டங்களுக்கும், விசாரணைகளுக்கும் அடிபணிய மறுத்து வெளிநாட்டுக்கு ஓடிப்போன குற்றவாளி லலித்மோடிக்கு பயணஅனுமதிவழங்க இங்கிலாந்துஅரசிடம் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாதொடர்புகொண்டு உதவிய மன்னிக்க முடியாத குற்றம் வெளிவந்தது. 
ஒரு பொருளாதாரக் குற்றவாளிக்கு சுஷ்மாசுவராஜ் ஓடோடிச்சென்று உதவவேண்டிய அவசியம் என்ன? 
சுஷ்மாவின் மகள் பன்சரி சுவராஜ் லலித்மோடியின் வழக்கறிஞர் என்பதாலா? சுஷ்மாவின் கணவர் சுவராஜூக்கு லலித்மோடி பல லட்சக்கணக்கான ரூபாய்செலவில் ஆடம்பரஓட்டல்களில் தங்கவைத்து உபசாரம் செய்ததாலா? பதிலளிக்க முடியாத இந்தக்கேள்வி களுக்கு பாஜகவும், அதைஇயக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ம் தரும் ஒரே விளக்கம், 
“மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்ததைக் கொச்சைப்படுத்தலாமா?” என்பதே! ”
இந்த மனிதாபி மான உதவிகள் குற்றவாளிகளுக்கு மட்டுமேசெய்யப்படுவது ஏன்? ஏழை,எளிய சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏன் இல்லை?” இந்தக்கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை!

வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா விவகாரமோ இன்னும் ஒருபடிமேல். 
மோசடிமன்னன் லலித்மோடிக்குத் தான் ஆதரவளிப்பதாகவும், இந்த உண்மை இந்தியஅரசுக்கோ,அதிகாரிகளுக்கோ தெரியக் கூடாது என்ற எழுத்துப்பூர்வ நிபந்தனையின்பேரில் ஓடுகாலிக்குற்றவாளியான லலித்மோடிக்கு உதவியுள்ளார். 
இதன் பின்னணியில் வசுந்தராவின் மகனும், பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த்க்கு லலித்மோடி கோடிக்கணக் கான பணத்தைப் துஷ்யந்த்தின் போலிநிறுவனத்துக்கு அளித்த ஊழல் வர்ணஜால மாய் எழுந்து நிற்கிறது. சத்தியவந்தரான நமதுநிதியமைச்சர் அருண்ஜெட்லியோ, “அது அவர்களுக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம்” என்று கூறிவிட்டு இப்போது மழுப்புகிறார்! “லலித்மோடியின் மெகா ஊழலில் சிக்கியுள்ள சுஷ்மாவையும், வசுந்தரா ராஜே சிந்தியாவையும் காப்பாற்றியே தீருவோம்” என்று பாஜகதலைவர் அமித்ஷா முதல் அத்தனை பரிவாரங்களும் களத்தில் இறங்கியுள்ளன.
 “ஊழலற்ற,வெளிப்படைத் தன்மைகொண்ட, கொள்கைஅடிப்படையிலான நிர்வாகம்” என்று விளம்பரப் படுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இதுபற்றி என்ன கூறுகிறார்? 
அவர் எங்கே? 
அவரதுகுரல் எங்கே? 
மேடைக்கு மேடை,’பெஹன் அவுர் பாயியோ” என்று அழைத்த அந்த அழைப்பு எங்கே?

பங்கஜா முண்டே
ஊழல்இதோ, அவரைக் கண்டுபிடிக்கும் முன் மகாராஷ்டிரத்தில் இன்னும் ஒரு ஊழல். 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியின் முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளவர் பங்கஜாமுண்டே. இவர்மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள். இவர் செய்துள்ள ஊழல் ஒரே நாளில் 24 அரசு உத்தரவுகளின் மூலம் வெறும் ரூ.206கோடி மட்டுமே!
மாகாராஷ்டிர அரசில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான எந்தப்பொருள்களை வாங்குவதானாலும் ஈ-டெண்டர் மூலம் மட்டுமே வாங்கவேண்டும். எந்த நேரடி ஒப்பந்தம் மூலமும் வாங்கக்கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. 
இதை அம்மாநில நிதியமைச்சர் சுதிர்முங்கன்திவார் உறுதிப்படுத்தியுள்ளார்” ரூ.ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட எந்த ஒரு பொருள் வாங்கலும் முழுமையாக ஈ-டெண்டர் கோரிப்பெற்றே வாங்கவேண்டும்:
 நேரடி காண்ட்ராக்ட் மூலம் வாங்கக்கூடாது” என்ற விதியை, எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக வும் கூறியுள்ளார். 
இவை அனைத்தையும் மீறியவர் பங்கஜாமுண்டே! 
ஏனெனில் அவர்”மக்களின் முதல்வர்” அல்லவா?
 பங்கஜாமுண்டேவின் ஊழல் எதில் தெரியுமா? குழந்தைகளுக்கு வழங்கும் தின்பண்டங்களில்! 
தயாரிப்பாளர் யார் என்றே அரசுக்குத் தெரியாத ஒரு அரசுசாரா நிறுவனத் திடம் ரூ.80கோடிக்கு ஆர்டர் வழங்கியுள்ளார்.
 இந்தத்திண்பண்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களுக்கு வாங்கப்பட்டன. இவை அந்த மையங்களுக்குவந்தபோது அவற்றில் களிமண்ணும், கற்களும் கலக்கப்பட்டுக் குழந்தைகள் உண்ணமுடியாத நிலையில் இருந்தன. 
அகமதாபாத் மாவட்ட ஊராட்சித்தலைவர் மஞ்சுஸ்ரீகுண்ட் ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட தின்பண்டங்கள் களிமண்ணும், கற்களும் கலந்து கெட்டு உண்ண முடியாதவையாகஇருந்ததை ஒரு கடிதம் மூலம் தெரிவித்தார். 
இந்தக் கடிதம்தான் பாஜக-சிவசேனா கூட்டணி அரசின் ரூ.206 கோடி மாபெரும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

குடிநீர், மருந்து, பாடக்குறிப்பேடுகளிலும்
குழந்தைகளின், குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள், முதலுதவிப் பெட்டி மருந்துகள் பாடக்குறிப்பேடுகள், தேசப்படங்கள் என பங்கஜாமுண்டேவின் ஊழல் பரவி நிற்கிறது. 
ஐ.சி.டிஎஸ்.ஆணையர் விநிதாசிங்கால் நாசிக்கில் உள்ள ஒரு தரமான நிறுவனத்தில் குடிநீர்சுத்திகரிப்பு சாதனத்தை ஒன்றுரூ.4,500/வீதம்வாங்கிட ஒப்பந்தம் செய்தார். 
ஆனால், அமைச்சர் பங்கஜாமுண்டேவோ அதை ரத்து செய்துவிட்டு உற்பத்திக்கூடமே இல்லாத எவரெஸ்ட் நிறுவனத்திடம் ஒன்று ரூ.5200/ என விலையை உயர்த்தி நிர்ணயித்து வாங்கியுள்ளார்.
 காசோலைகள் வழங்கி யுள்ளார்.குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் மெஷின்களை வாங்க ரூ.6 கோடிக்கும். ரூ.8 கோடிக்கும் இரண்டு நிறுவனங்களில் ஒரேவிதமானமெஷின்களை வாங்கக் காசோலைகள் அளிக்கப்பட்டுள்ளன. 
ரூ.720/மதிப்புள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டி களை ரூ.500/என விலைகுறைத்து அதற்கேற்பக் குறைவான மருந்துகளை வழங்குமாறு ஒப்பந்ததாரரிடம் பங்கஜாமுண்டே தெரிவித்துள்ளார். 
குழந்தைகளுக்கான பாடக்குறிப்பேடுகள், தேசப்படங்கள் அச்சிட்டுவழங்க டெண்டர் ஏதுமின்றி 5.6கோடி ரூபாய் காசோலையை ஒருதனி நபருக்கு, அச்சகத்துக்கு அல்ல- பங்கஜாமுண்டே அளித்துள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான் 
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசிய சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிப் புகாரில் சிக்கி வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் ம.பி. முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 பாஜகவைச் சேர்ந்தராஜேந்திர சவுத்ரி என்பரிடம் பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், மண்டசூர் மாவட்டம், கரோத் சட்டசபை இடைத் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு இன்னொரு பாஜக தலைவர் ராஜேந்திர சௌத்ரியிடம் கூறுகிறார் முதல்வர் சவுகான்.
அப்படிச் செய்தால் அரசாங்கத்தில் அவருக்கு நல்லதொரு பதவி தரப்படும் என்றும் உறுதியளிக்கிறார். 
இந்த ஆடியோ வெளியாகி அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கரோத் தொகுதி இடைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
இந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
,இது தவிர தண்டனையை குற்றவாளி ஜெயலலிதாவை அருண் ஜெட்லி மெனக்கெட்டு வந்து சந்தித்தாரா.அவர் கணக்கிட்டில் பிழையேற்பட்டு குமாரசாமியால் விடுதலை செய்யப்பட்டார்.இதன் திரைமறைவில் நடந்த பேரம் ஏன்ன?

பாஜக என்ன செய்யும்?
எதில்தான் ஊழல்செய்வது என்ற விவஸ்தைபாஜகவிடம் இல்லைபோலும்! இல்லாவிட்டால் ஏழை -எளிய குழந்தைகள் உண்ணும் உணவிலும், குடிநீர் சாதனங்களிலும், முதலுதவிப் பெட்டிகளிலும், பாடக்குறிப் பேடுகளிலும் ஊழல் செய்யத் துணிவார் களா?
 இனி பா.ஜ.க.என்ன செய்யும்? 
அமித்ஷாவின் தலைமையில் பா.ஜ.க. உயர்மட்டத்தலைவர்கள் கூடுவார்கள். அதற்குமுன் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் கீதாபதேசம் பெற்றுவருவார்.
 பின்னர் அவர்கள் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியாவை மட்டுமல்ல: மறைந்த மாபெரும் தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசான பங்கஜாமுண்டேவையும் பாதுகாக்க அணிவகுப்பார்கள்.
“பாவம்: பெண்கள்மீது ஊழல் குற்றம் சாட்டுவது நியாயம் தானா? பெண்மையை இழிவு படுத்தலாமா?
” பெண்களை முன்நிறுத்தி அவர்கள் பெயரில் ஊழல்திருவிளையாடல்களை நிகழ்த்தி அதன்பயன்களை அனுபவிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமோ? உலகின் சாதுரியமான பேச்சாளர் என்று பெயரெடுத்த பிரதமர் நரேந்திரமோடியோ மௌனம் சாதிப்பார். விளம்பரங்களில் “ஊழலற்ற அரசு” என்று மின்னுகிறார்!

========================================================================
இன்று,
ஜூன் -27.

 • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
 • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
 • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
 • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)
========================================================================