விஷ்ணுப்பிரியா-ஹரீஸ்

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவம் நிகழ்ந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான காரணங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. 
அதற்குள் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் துறைக்கே கரும்புள்ளியாக அமைந்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான ஹரீஸ் சென்னையில் தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 
விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. 
ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் சொல்லிவருகின்றனர்.
அதிக அளவு மது அருந்தியதால் உண்டான மாரடைப்பில் மரணம் என்கிறார்கள்.அப்படியானாலும் கூட அவர் அந்த அளவு மது அருந்த காரணமே அவற்றின் நியாயமான பதவி உயர்வை வழங்காமல் வைத்திருந்த அந்த உயர் அதிகாரியின் டார்ச்சர்தானே.அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவல்துறை சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கும் இடத்தில் இருப்பவர் எனப்படுகிறது.

அவரது மரணத்தின் பின்னணியில் உயர் அதிகாரிகள் டார்ச்சரே காரணம் என்று துறையில் உள்ள  பலரும் கருதுகின்றனர்.
தேசிய குற்ற ஆவண காப்பக கணக்குப்படி நாட்டிலேயே போலீசில் அதிக தற்கொலை மரணங்கள் நடக்கும் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடம். 
தமிழகத்திற்கு இரண்டாவது இடம். 

கடந்த 2006 முதல் 2013 வரையிலான காலத்தில் மட்டும் 216 பேர் தற் கொலை செய்தனர். தமிழக போலீசில் ஆண்டுக்கு  சராசரியாக 27 பேர் தற்கொலை செய்கின்றனர். 

இதில் பெரும்பாலானோர் கீழ் மட்ட போலீசார். தற்கொலை செய்து கொண்ட ஹரீஸ் அல்லது விஷ்ணுப்பிரியா அடிமட்டத்தில் இருந்த ஏட்டைய்யாக்கள் அல்ல. 
இருவருமே எந்த ஒரு பிரச்னையிலும் முடிவெடுக்கக்கூடிய அதிகாரமிக்க பொறுப்பில் இருந்தவர்கள். தேவைப்பட்டால் டிஜிபி அல்லது அரசு செயலரை கூட தொடர்பு கொள்ளக்கூடிய இடத்தில் இருந்தவர்கள். சொந்த பிரச்னைகளுக்காக மட்டுமே துயரமான முடிவுகளை மேற்கொண்டதாக கருதி மூடி விடக்கூடிய வழக்குகள் அல்ல. 
 இருவரின் மரணத்தின் பின்னணியில் ஏதாவது ஒரு வகையில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி இருந்திருக்கும். 

தமிழகத்தில் போலீஸ் மட்டுமின்றி பல அரசு துறைகளில் அதிகார, அரசியல் ரீதியிலான நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. 

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி முதல் தொடர்ச்சியாக அரசு துறை ஊழியர்கள் மரணங்களே இதற்கு சான்று. மன உறுதி படைத்தவர்களாக இருக்கவேண்டிய போலீஸ் அதிகாரிகளையும் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கடி மிகுந்திருக்கிறது என்றால் அத்துறைக்கு அவசர சிகிச்சை அவசியம். 
பல சிக்கலான குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானவர்கள் தமிழக போலீசார். தற்போது சின்ன வழக்குகளை கூட கண்டுபிடிக்க திணறுவது மட்டுமின்றி, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனும் மழுங்கிப்போனது. 
வரையறுக்கப்பட்ட ேநரமில்லாமல் பணியாற்றும் போலீசாருக்கு பணிச்சுமை,  ஓய்வு குறைவால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம். 

அதற்கு மேலும் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடிகளை தாங்கி கொள்வது சிலருக்கு சாத்தியமில்லாமல் போகிறது. இதன் வெளிப்பாடு தான் தற்கொலைகள்.

போட்டிகள்  நிறைந்த கார்ப்ரேட் உலகில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாதது. மன அழுத்தம் எந்த வகையிலும் பணித்திறனை பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது என்பதை உணர்ந்து தான் ஊழியர்களுக்கு  மனநல மேம்பாடு(Stress management) பயிற்சிகளை தொடர்ச்சியாக நிறுவனங்கள் வழங்குகின்றன. 
போலீசில் அத்தகைய பயிற்சிகள் மிக குறைவு. 
போலீஸ் நிர்வாகத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 முறையாவது மனநல பயிற்சிகள் அளிப்பது அவசியம். 
மேலும் வாரம் தோறும் கவாத்து பயிற்சிகள் எப்படி அவசியமோ, அதுபோல் மனதுக்கு தெம்பூட்டும் பாலின நிகர்நிலை பயிற்சிகளும்,  போலீசாருக்கு ஆலோசனை வழங்குவதற்கென தனியாக மனநல ஆலோசகர்களை நியமிப்பதும் கூட அவசியமாகிறது. 
அதை செய்ய தவறியதன் விளைவு தான் அடுத்தடுத்த 2 தற்கொலைகள். 
அதுமட்டுமல்ல ஜெயலலிதாவுக்கு ஆதரவான காவல் அதிகாரிகளுக்கு பணி ஓய்வுக்குப்பின்னரும் அதிகாரம் வழங்கி பணியில் வைத்திருப்பது ,அவர்கள் மட்டுமே முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசி முக்கிய முடிவுகளை எடுப்பது,அவர்கள் அதிகாரத்தில் பதவி உயர்வு,இடமாற்றல்கள் இருப்பதும் தமிழ் நாடு காவல் துறையை பிடித்துள்ள பிணி.ஜெயலலிதாவுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே பணி உயர்வு மற்றவர்கள் எவ்வளவு திறமையான அதிகாரியாக இருந்தாலும் கண்டு கொள்ளாமல் அவருக்குரிய இடத்தை வழங்காதது,அவற்றின் திறமையை பயன் படுத்தாதது போன்றவை இருக்கும் வரை மன உளைச்சல்கள் உண்டாவதை தடுக்க முடியாது.
இனியும் போலீசில் இத்தகைய மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத வரை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானவர்கள் என்று பெருமை பேசுவதற்கான பலன் கிடைக்காது.

=====================================================================================
இன்று,
பிப்ரவரி-22.
  • சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)

  • ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)

  • வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)

  • எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)



======================================================================================
கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்! 

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

1. கண் பார்வை அதிகரிக்கும்


கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.

2. என்றும் இளமையாக

கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.

3. மாரடைப்புக்கு குட்பை

கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.

4. புற்று நோய்க்கு தடா

கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

5. பள பள பற்கள்

கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.

இனி தினமும் ஒரு கேரட் கடிக்கலாம் தானே!


                                                                                                                                       -பு.விவேக் ஆனந்த்

=====================================================================================================

நல்லாப் பாருங்க மேடம் .உங்க ஊட்டுக்காரர் மாதிரி தெரியல?




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?