புதன், 30 நவம்பர், 2011

அழகிரி வெளியேற்றம்?மதுரை மாநகராட்சியில்2009 ம் ஆண்டு தெற்கு மண்டல அலுவலக கட்டிடம் மேலமாரட் வீதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் ஒரு அலுவலகம் மாநகராட்சி அனுமதியின்படி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டது,அதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டு அந்த அலுவலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. 

இந்நிலையில், மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம், மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில்  நடந்தது. இதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் 3 நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட கூட்ட அஜண்டாவில் இடம் பெறாத ஒரு தீர்மானம், அவசர தீர்மானமாக அச்சிட்டு ஒரு மணி நேரத்துக்கு முன் வழங்கப்பட்டது. அதில், மு.க.அழகிரியின் எம்.பி அலுவலகத்தை காலி செய்யும் தீர்மானம் இடம் பெற்று இருந்தது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டது.இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எல்ராஜ், “மத்திய அமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறீர்கள், 2009 முதல் இயங்கி வரும் அவரது எம்.பி. அலுவலகத்தை அகற்ற அவசரமாக தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்”என்று கூறி தி.மு.க,வினர் வெளியேறினர். இதன் பிறகு எம்.பி அலுவலகத்தை காலி செய்யும் அவசர தீர்மானத்தை மேயர் நிறைவேற்றினார்.
                             
இது போன்ற காழ்ப்புணர்ச்சி வேலைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தேவையா?
உங்களை தேர்ந்தெடுத்தவர்கள் நலனுக்கு தேவையான தீர்மானங்கள் ஒன்றை கூட இதுவரை நிறைவேற்றாதவர்கள்.இதற்கு இவ்வளவு அவசரம்காட்டுவது ஏனோ?
அழகிரி நீதிமன்றம் சென்று தடை வாங்கி விட்டால் என்ன செய்ய முடியும் உங்களால்?
_____________________________________________________
வைகை
நதியை பாதுகாப்போம்!
                                                                                                 -எம். முத்துராமு
தமிழ் வளர்த்த மதுரையின் பழம் பெருமையுடன் இணைந் தது வைகை நதி. சிலப்பதிகாரம், திரு விளையாடல் புராணம் என பல தமிழ் இலக்கியங்களிலும் சிறப்பு பெற்றது வைகைநதி. தூயநீர் வைகை என்ற சிறப்பும் உண்டு. மதுரை நகரின் மையப் பகுதியில் வைகை செல்வதால் - வட மதுரை, தென்மதுரை என அழைக்கின்றனர்.


மேற்கு தொடர்ச்சிமலைப் பகு தியில் உள்ள வாலிப்பாறை, வெள்ளி மலை துவங்கி மூல வைகை, முல் லையாறு, சுருளி யாறு மற்றும் வருச நாட்டுப் பகு தியில் வரும் பல காட்டாறுகள் சேர்ந்து வைகை நதியாக பெருக் கெடுத்து ஒன்றுபட்ட மதுரை மாவட்டம், ஒன்றுபட்ட இராம நாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்களையும், கிரா மங் களையும் கடந்துவந்து சுமார் 260 கி.மீ. பயணம் செய்து இராமநாதபுரம் பெரிய கண் மாயில் சங்கமிக்கும் நதி வைகையாகும். மாநிலத்தில் உள்ள நதிகளில் கடலில் கலக் காமல் கண்மாயில் சங்கமிக்கும் நதி வைகைதான்.

ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பரந்துவிரிந்த விவ சாய நிலப்பரப்பை கொண்ட மாவட்டமாகும். இங்கு விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டு இருப்பதால் குடி தண்ணீர் தேவைக்கும் பயன்பட பென்னிகுக் அவர்களால் பெரி யாறு அணை உருவாக்கப்பட்டு, அதன் தண்ணீர் வைகை நீரு டன் இணைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வைகை-பெரியாறு தண்ணீ ரைத் தேக்கி விவசாயத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக் கோடு 1958ல் மத்திய-மாநில அரசுகளால் வைகை அணை கட்டப்பட்டது.

வைகை அணை தண் ணீரை பயன்படுத்தி ஒரு பகுதி யில் மூன்றுபோக சாகுபடியும், இருபோக சாகுபடியும் அணை நிரம்பிய காலத்தில் மட்டும் ஒரு போக சாகுபடியும் நடைபெறும் பகுதி என உணவு உற்பத்தி நடைபெறுகிறது.


மணல் உருவாக பல நூறு ஆண்டுகள் தேவைப்படுவதாக மண்ணியல் ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். ஆனால், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் செல்வத்தை வாரி வழங்கியுள்ளது. வைகை நதி துவக்கம் முதல் நிறைவு வரை ஏராளமான குடிநீர் ஆதா ரம் உருவாக்கப்பட்டு குடிதண் ணீர் வழங்கி வருகிறது.

தூங்காநகரம் என்று அழைக் கப்படும் மதுரை மாநகரில் சாக் கடை கழிவுகளும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயன மருத் துவக் கழிவுகளும் தூங்காமல் ஓடிவந்து வைகையில் சங்கம மாகின்றன. ரகசியமாக இயங் கும் சாயப்பட்டறை கழிவுகள் - சலவை நிலைய கழிவுகள், எண் ணெய் கழிவுகள், நகராட்சியின் குப்பை கழிவுகள் என மதுரை மாநகரின் கழிவுகளின் புகலிட மாக வைகை நதி மாறியுள்ளது.

மதுரை நகரில் தினந்தோறும் 98 லட்சம் லிட்டர் சாக்கடை நீரும் 5 லட்சம் லிட்டர் மருத் துவக் கழிவு நீரும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் குளிக்கும் நீரா கவும், மாநகரத்தின் குப்பை களும், மருத்துவக் கழிவுகளு மாக 1 டன் குப்பை வைகையில் கலக்கிறது. இது மட்டுமல்லா மல், நகரில் பயன்படுத்தப்படும் பாலீத்தீன் பைகளின் புகலிட மும் வைகையாகத்தான் மாறி யுள்ளது.
                   

மதுரை நகரின் சாக்கடை நீரும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன கழிவு நீரும், குப்பை கழிவுகளும் மதுரை நகர் எல் லையைத் தாண்டி விரகனூர் அணையில் தஞ்சம் புகுந்துள் ளது. இது தடுக்கப்படாவிட்டால் பார்த்திபனூர் மதகு அணை மட் டுமல்ல, இராமநாதபுரம் பெரிய கண்மாயிலும் தஞ்சம் புகுந் தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. மதுரையை அடுத்து உள்ள திருப்புவனம், மானா மதுரை - பரமக்குடி நகரங்களின் கழிவுநீரும், குப்பை கழிவுகளும் வைகையில் சங் கமிக்கின்றன. இந்த ஆபத்தான கழிவுகளோடு கலந்து பாசனத்திற்கு செல்வ தால் விளைநிலம் மாசுபடுகிறது.

வைகை நதியில் நச்சுத் தன் மையுள்ள சாக்கடை நீரும், மருத்துவக் கழிவுகளும், குப்பை களும் கலந்து தேங்கி ஆற்றின் வழிநெடுக செல்வதால் ஏராள மான குடிதண்ணீர் ஆதாரம் மாசுபடுகிறது. விதிமுறையை மீறி மணல் அள்ளியதால் ஏற் பட்ட பள்ளங்களில் தேங்கி யுள்ள நீரைப் பயன்படுத்திய தால் கால்நடைகள் மரணம், மலட்டுத்தன்மை என பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. விளை நிலம் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.


ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கும் - ஒன்றுபட்ட மதுரை மாவட்ட விவசாயிகளுக்கும் பாதுகாப்பு கிடைத்திட சாக்கடை கழிவு களையும், மருத்துவக் கழிவு களையும் குப்பைகளையும் வைகையில் கலக்காமல் தடுத் திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை நீரை தடுத்து மறு சுழற்சி செய்து மாற்று பணிகளுக்குப் பயன் படுத்த வேண்டும். சுதந்திரத் திற்கு முன்பே மதுரையில் சாக் கடை நீரைத் தேக்கி மறுசுழற்சி செய்ய தொட்டி கட்டி பாது காக்கப்பட்ட விபரம் உள்ளது.

இந்த முன் மாதிரிகளை தற் போது பொறுப்பேற்றுள்ள தமிழக ஆட்சியாளர்களும், மதுரை மாநகராட்சியில் பொறுப்பேற் றுள்ள மக்கள் பிரதி நிதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் :

இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,


______________________________________________________________________________

 புற்று நோயை பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதில், கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது.இந்த கதிர்வீச்சு சிகிச்சைகள் தினமும், 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படும். ஆனால், தற்போது வந்திருக்கும், "ரேபிட் ஆர்க்' சிகிச்சையின் மூலம், முன்பை விட பல மடங்கு துல்லியமாகவும், வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சை,"லினாக்' இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளிக்கு, சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்த பின், நோயின் தன்மை, நிலை ஆகியவற்றை கண்டறிந்து, நோயாளிக்கு, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சையைத் தொடங்குவோம்.நோயாளியை,"லினாக்' இயந்திரத்தின் கீழே படுக்க வைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல், பிடித்துக் கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக் கொண்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்பட்டு, கதிர் வீச்சு மூலம் அழிக்கப்படும்.

முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து, கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால், புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சை மூன்றே நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். இது தவிர, "ஸ்கேட்டரிங்' எனும் கதிர்வீச்சு சிதறலும், மிகக் குறைவான அளவிலேயே இருக்கும். இது போன்ற காரணங்களால், நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை.நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்புண்டு. மிகக் குறுகிய நேரத்தில், துல்லிய மாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால், நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லை!

                               

அந்நிய செலவாணி - பண வீக்கம்

இவைகளைப்பற்றி அதிகம் பேசுகிறோம்.ஆட்சியாளர்களும் ,பொருளாதார மேலேயுள்ள[?]நிபுணர்களும் 
அடிக்கடி இதைக்கூறி இந்தியா முன்னேறுகிறது .வல்லரசாகிறது என்று கதைக்கிறார்களே.உண்மை நிலவரம் என்ன?
இதோ சிறு விளக்கம்.
நீங்களே இதை படித்து விட்டு இந்திய நிலையை கூடிக்கழித்துப்பாருங்கள்.ஆட்சியாளர்கள் -கூறும் கணக்கு சரியாவே வராது.


                    $   இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த முரண்பட்ட நிலைமை என்பதும் இன்று விளக்கப்பட வேண்டியதொன்றாகும். இவற்றிற்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்னர் அந்நியச் செலாவணி மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

செலாவணி மதிப்பு

ஒவ்வொரு நாட்டின் நாணயமும் தத்தம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பண்டங்களை அல்லது சேவைகளை (A unit of Goods and services) வாங்குவதற்கான சக்தி படைத்தவை. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்திலான உணவுக்கு ரூ.100 கொடுக்க வேண்டுமென்று வைத்துக்கொள் வோம். அதே போன்ற அந்தஸ்துள்ள உணவிற்கு அமெரிக்காவில் 10 டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ.500) கொடுக்க வேண்டியதிருக்கலாம். அதே போன்று இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் விமானப் பயணத்திற்கு குறைவாகவும், இரயில் பயணத்திற்கு கூடுதலாகவும் கட்டணங்கள் இருக்கின்றன. விலைகளில் இப்படி பல முரண்பட்ட நிலைமைகள் இருந்தாலும் நடைமுறையில் இரு நாடுகளின் நாணயங்களுக்கு இடை யில் ஒரு சராசரி சமநிலையினைக் கணக்கிடுவது என்பது சாத்தியமே. அதுவும் இன்றைய கணினி யுகத்தில் இதுவெல்லாம் ஒன்றும் பெரிதல்ல. அதாவது, நாணயங்களின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் நாணய மாற்று மதிப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அத்தகைய நியாயத்தினை சர்வதேச முதலாளித்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, எந்த நாட்டுப் பண்டங்களுக்கு அல்லது நாணயத்திற்கு மற்றொரு நாட்டில் கிராக்கி இருக்கிறதோ அதைப் பொறுத்து பரஸ்பரம் இரு நாடுகளின் நாணயங்களின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான், டாலர் நம் நாட்டிற்குள் நுழையும் போது ரூபாய்க்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு உயர்கிறது; மறுபுறத்தில் ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு குறைகிறது. அதே போன்று டாலர் நாட்டினை விட்டு வெளியேறும்போது டாலருக்கான கிராக்கி உயர்ந்து, அதன் விளைவாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது.
                       

டாலர் மதிப்பு

பொருளாதார மந்தத்தில் அதிகமாகச் சிக்கியுள்ள அமெரிக்காவின் நாணயமான டாலரின் மதிப்பு இந்தக் காலத்தில் எவ்வாறு உயர்கிறது என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக டாலர் மதிப்பு, தங்கத்தின் விலை, சர்வதேச எண்ணெய் வர்த்தகம் ஆகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் வர்த்தகம் ஆகப் பெருமளவில் டாலர் அடிப்படையில் நடைபெறுவதால் டாலருக்கான சர்வதேசக் கிராக்கியும் அதன் காரணமாக அதன் மதிப்பு உயர்வதும் எண்ணெய் வர்த்தகம் கீழிறங்கும் போது டாலர் மதிப்பு குறைவதும் நாம் தொடர்ந்து கண்டு வரும் காட்சிகள். அதே போன்று டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்புக்களை தங்கத்திற்கு மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். அண்மையில் சீனா, இந்தியா உட்பட சில அரசாங்கங்கள் தங்கத்தை விலை கொடுத்து வாங்கின. தங்கத்திற்கும் அதே போன்று மற்றொரு அரிய உலோகமான வெள்ளிக்கும் ஏற்பட்ட அத்தகைய கூடுதல் கிராக்கி அவற்றின் விலைகளை எவ்வாறு உயர்த்தின என்பதும் இன்றைய காட்சிகளேயாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை டாலரின் மதிப்பு சற்றுக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அண்மையில் டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இது எப்படி?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’(BRICKS) நாடுகளின் வளர்ந்துவரும் சந்தைகளை நோக்கி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலீடுகள் பெருமளவு படை யெடுத்தன. நம் நாட்டிற்கு வந்த முதலீடு பெரும்பாலும் டாலர் அடிப்படையிலானதே. இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியின் பின்னணியில் வலுவிழந்திருக்கின்றன. அந்நிலையில் தங்களது பாலன்ஸ் ஷீட்டுகளை ஓரளவு கவர்ச்சிகரமாகக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து தங்களது முதலீடுகளை அவை திரும்பப் பெறுகின்றன. இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 2.2 பில்லியன் டாலரை அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) திரும்பப் பெற்றிருக்கின்றனர்.

இந்த மூலதனம் நாடுகளுக்கு உள்ளே நுழையும் போது எவ்வாறு நமது ரூபாய் நாணயம் உட்பட அந்தந்த நாடுகளின் நாணயங்களின் மதிப்பு உயர்ந்ததோ அதே போன்று இன்று டாலர் வெளியேறும்போது அந்நாடுகளின் நாணயங்களின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

இது தவிர, ஐரோப்பிய நாடுகள் கடுமையான நெருக்கடியிலிருக்கும் பின்னணியில், டாலருக்கு சர்வதேசப் போட்டி நாணயமாகக் கருதப்படும் யூரோ மதிப்பிழந்து வருவது மட்டுமல்லாமல், அதன் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. சட்டபூர்வமாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் கிடைத்திருக்கும் சர்வதேச நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு இப்படிப் பல வகையில் உதவி வருகிறது. அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் டாலர் உயர்ந்து வரும் கதை இதுதான். தனது நாட்டின் நெருக்கடியினை பிறநாடு களுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க சக்தியின் பின்புலமும் இதுவேயாகும்.


நமது நாட்டில்…

ரூபாயின் நாணய மதிப்பு குறைவதன் காரணமாக நமது நாட்டில் பயன் அடைபவர்கள் எவரும் இருக்க முடியாது. வெளி நாட்டில் இருக்கும் தங்களது பிள்ளைகளோ, உறவினர்களோ பணம் அனுப்பும் பட்சத்தில் அத்தகைய குடும்பங்களுக்கு இது சற்று மகிழ்ச்சி அளிக்கலாம். அவர்களுக்கு சற்றுக் கூடுதலாக ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் வேலை இழப்புகளும், ஊதிய இழப்புகளும் பெருகி வரும் நிலையில் அவர்கள் கவலை அடைவதையும் தவிர்க்க இயலாது.

ஏற்றுமதி : ரூபாய் நாணய மதிப்பு குறையும் போது, இந்தியப் பண்டங்களின் விலை குறையும் என்பதால் அது ஏற்றுமதிச் சந்தையில் போட்டியிடுவதற்கு உதவும் என்ற வகையில் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார மந்தம் இந்தியப் பண்ட ஏற்றுமதிக்கான கிராக்கியினைக் குறைத்துவிட்டது. எனவே அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. இது தவிர, ஒரு டாலருக்கு ரூ.47 என்ற விலையின் அடிப்படை யில் ஏற்கனவே செய்துகொண்ட முன்பேர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இன்று ரூ. 52 வரை குறைந்திருக்கும் சாதகத்தினை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இழந்திருக்கின் றனர். ரூபாயின் மதிப்பு இவ்வளவு குறையும் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஏமாற்றமடைந்த வேறு சில ஏற்றுமதியாளர்களும் இருப்பார்கள்.

இறக்குமதி : இறக்குமதியின் நிலைமை மிகவும் மோசமடையும் என்பதை விளக்கவே தேவையில்லை. இதனுடைய உடனடி விளைவு, அண்மைய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திலேயே தெரிந்துவிட்டது. ஏற்கெனவே, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் என நமது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 22சதவீதம் வரை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. உலக பருப்பு வகை உற்பத்தியில் 21 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். நமது உணவுப் பண்டங்களின் விலைகள் மேலும் உயரப்போகின்றன என்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

கார்ப்பரேட் கடன்கள்
 : குறைவான வட்டியில் எங்கு கடன் கிடைக்கும் என சாமானிய மக்கள் உள்நாட்டில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உள்நாட்டு வங்கிகளில் வட்டி விகிதம் குறித்து பேரம் பேசும் சலுகை பெற்ற பெருமுதலாளிகள், வட்டி குறைந்த வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கும் அனுமதி பெற்றிருக்கின்றனர். உள் நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்குக் கூட அத்தகைய வெளிநாட்டுக் கடனை அவர்கள் பெற்றிருக்கின்றனர். இன்று ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாக ரூ.25,000 கோடி (சுமார் 5 பில்லியன் டாலர்) அதிகமாக கட்ட வேண்டியுள்ளது. குறைந்த வட்டியில் கிடைத்த அனுகூலங்கள் அனைத்தையும், குறைந்து போன ரூபாய் மதிப்பு அடித்துக் கொண்டு போய்விட்டது.

நடப்புக் கணக்கு : இவ்வாண்டு ஜனவரி-மார்ச் முதல் காலாண்டில் 5.4 பில்லியன் டாலராக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதி- இறக்குமதி இடை வெளி, + நாடுகளுக்கிடையில் வரவு - செலவு இடைவெளி ) ஜூன்-மார்ச் காலாண்டில் 14.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இப்படி ஒட்டுமொத்தத்தில் நாம் பிற நாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவு ரூபாய் மதிப்பில் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இது ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நமது பொருளாதாரத்தினை மேலும் பலவீனப்படுத்தும்.

ரூபாயின் மதிப்பு இவ்வாறு குறைந்து வரும் வேளையில், மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பில், ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது பணத்தினை பெறுவதைத் தாமதப்படுத்துவார்கள். அதே போன்று இறக்குமதியாளர்கள் மேலும் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் உடனடியாக தங்களது இறக்குமதித் தேவைக்கான டாலர்களை வாங்கிக் குவிப்பார்கள். இது நிலைமையினை மேலும் சிக்கலாக்கும்.


என்ன செய்வது


இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இருப்பு அனைத்தையும் நம் நாட்டிற்குக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் செக்யூரிட்டிகளில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பினை தலா 5 பில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. இதைத் தாண்டி எதையும் செய்வதற்கு ரிசர்வ் வங்கி தயாராக இல்லை.

மத்திய அரசின் நிலை இன்னும் வேடிக்கையானது. நாட்டை விட்டு வெளியேறும் மூலதனத்தை தடுப்பதற்காக அத்தகைய பணத்தின் மீதான வரிவிதிப்பு உள்ளிட்ட எதையும் செய்ய மாட்டோம் என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது. மாறாக, மேலும் அந்நியக் கடன்கள் உள்ளே வருவதற்கான முயற்சிகளே அரசுத் தரப்பில் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.


நாட்டிற்குள் டாலர் அதிகம் நுழையும் போது, ஏற்றுமதிச் சந்தையினைப் பாதிக்கும் வகையில் ரூபாய் மதிப்பு ஏறாமல் ரிசர்வ் வங்கி பார்த்துக் கொள்வதுண்டு. டாலரை விலை கொடுத்து வாங்கி, டாலருக்கு ஒரு செயற்கையான கிராக்கியினை உருவாக்கி, ரிசர்வ் வங்கி நிலைமையினைச் சமாளிக்கும். ஆனால், டாலர் வெளியேறும் போது ரூபாய் மதிப்பினை உயர்த்துவதற்கு ரிசர்வ வங்கியால் அப்படி எதுவும் செய்ய முடியாது. டாலர் மதிப்பினை உயர்த்துவதும், ரூபாய் மதிப்பினைக் குறைப்பதும் உள்நாட்டுச் சந்தை சம்பந்தப்பட்டது. எனவே அதை ரிசர்வ் வங்கி செய்துவிட முடிகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும் அளவிற்கு அதாவது டாலரின் மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு நம்மால் ஏதும் செய்துவிட முடியாது. நமது வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக் கையிருப்போ 314 பில்லியன் டாலர் மட்டுமே. இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட முடியும்? மூலதனப் போக்குவரத்தினை நாட்டின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தவில்லை என்றால் இத்தகைய துயரங்கள் தொடர்வதை தவிர்க்கவே இயலாது.
                  

மூலதனப் போக்குவரத்தினை பெருமளவு தளர்த்திவிட்டாலும் இன்னும் கூட சில கட்டுப்பாடுகள் அரசின் கைகளில் உள்ளன. ஆனால் இதையும் கூட கைவிடுவது என்ற ரீதியில் ஐ.மு.கூட்டணி அரசு செயல்பட்டு வருவது துரதிருஷ்டமே. அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு விட்டன. இன்றைக்கும் 865 வங்கிகள் பிரச் சனைக்குரிய நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. இதையெல்லாம் இந்திய அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நிதி நிறுவனங்களை அந்நியருக்குத் திறந்துவிட்டு, இந்திய மக்களின் சேமிப்பினை அவர்களுக்குத் தாரை வார்க்கும் வகையில், இன்சூரன்ஸ், வங்கி, பென்ஷன் நிதியம் குறித்த மசோதாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் காத்திருக்கின்றன.

“செய்தக்க அல்ல செயக் கெடும்
செய்தக்க செய்யாமையானும் கெடும்”
- (குறள்)


இன்று ஐ.மு.கூட்டணி- 2 அரசு, செய்ய வேண்டியதைச் செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்து கொண்டும் இருக்கிறது. அனுபவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும். கற்காவிட்டால், மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பார்கள். 

                                      -இ.எம். ஜோசப்
நன்றி:”தீக்கதிர்”
____________________________________________________________________________________________


'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது! 
__________________________________________________________________________________________

செவ்வாய், 29 நவம்பர், 2011

இந்தியாவை சூடான் அளவு முன்னேற்றுவோம்?பிரதமர் மன்மோகன்சிங் ”கடந்த 5 ஆண்டு காலத்தில் இளைஞர் காங்கிரஸ் பெரும் பலம் உள்ள இயக்கமாக உருவெடுத்துள்ளது. இது ராகுலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். நாட்டில் பல்வேறு நல்ல பல திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இதனை எட்டுவதில் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு பெரும் சவால்களை எதிர்நோக்கும் நிலையில் இருக்கிறோம். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சிந்தித்துதான் எடுத்துள்ளோம். அன்னிய முதலீட்டில் சில நிபந்தனைகள வைத்துள்ளோம். இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்கப்படுத்தும். விவசாயிகள் நல்ல விலை பெறுவர்” என்று ராகுல் காந்தி தலைமையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் வருத்தத்துடன் மொழிந்திருக்கிறார்.


நீங்கள் சந்தித்த சவால்கள்.
புதிய பொருளாதார திட்டம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் லாபம் தந்த பொதுத்துறை நிறுவனங்களை வெளிநாட்டி ற்கு விற்ற நல்லதை சொல்லவா?
அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய அணு உலைகளை அமெரிக்காவிற்கு திறந்து வைத்து விட்டு போபால் போல் பெரும் அழிவு வரும் போது மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டிய நிலையை அகற்றியதை சொல்லவா?
இன்று நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம்,தேசிய வங்கிகளை தனியாருக்கு விற்க ஆளாய் பறப்பதை சொல்லவா?
நாட்டில் சில்லறை விற்பனயில் 25 லட்சம் கடையினர் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடம் கிட்டதட்ட 70 லட்சம் பேர்கள் பணிபுரிகின்றனர்.அவர்கள் குடும்பம் சேர்த்து 2கோடி இருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தையே குழிதோண்டி புதைத்து விட்டு சில நூறு வெளிநாட்டினர் கொள்ளை ,கொள்ளையாக நம் பணத்தை அவர்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்களே அதுவா?
நீங்கள் செய்ய நினைத்து செய்ய தடங்கள் வரும் நல்ல காரியங்கள் இவைதானே?


சிறு வியாபாரிகளை உயர்த்தும்.விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்கிறீர்களே அது எப்படி என்று விளக்க முடியுமா.சும்மா எழுதி வைத்துக்கொண்டு புள்ளி விபரங்களைக்கூறாமல் மக்களுக்கு விளக்கமாக எவ்விதத்தில்பயன் என்று கூற உங்களால் முடியுமா?
நீங்கள் இந்தியாவை ஆட்சிசெய்யும் இடத்தில் இருக்கிறீர்களே தவிர உண்மையான இந்தியனாக இல்லை.நீங்கள் நடத்துவது உண்மையில் இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல.அமெரிக்கன் காங்கிரஸ்தான்.
உங்களின் எண்ணம் எல்லாம் இந்தியாவை நல்ப்படுத்துவது அல்ல.
அமெரிக்காவை எப்படி திருப்தி படுத்துவது என்பதுதான்.
வால்மார்ட் போன்ற பகாசுர நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை அறியாத அளவு நீங்கள் விபரம் புரியாதவர் அல்ல.ஆயினும் உங்களுக்கு இந்திய நலனைவிட,மக்கள் நலனைவிட வேறு யார் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் தலையாயக்கடமை எனத் தெரிகிறது.இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அந்நிய முதலீட்டைக்கொண்டுவருவேன் என்று திமிராகக் கூறும் மன்மோகன் சிங்,காங்கிரசை தேசத் துரோகிகள் என்று கூறினால் கூட தப்பில்லை என்றே தெரிகிறது.


பாவம்.இந்தியா,அதன் மக்கள். காட்டிக்கொடுக்கும் கட்சியினர் கையில் சிக்கியுள்ளனர்.
பொருளாதாரக் கொள்கைகளை யாரிடம் இருந்து நீங்கள் இறக்குமதி செய்கிறீரகளோ அந்த அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் தங்களின் தவறான கொள்கைகளால் சிக்கி தினறுவதையும் அங்கு தினம் நடக்கும் போராட்டங்களையும் பார்த்தும் அந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்கும் மன்மோகன்சிங்-சோனியா 


வகையறாக்கள்இந்தியாவை இன்னொரு சூடான் ஆக்காமல் விட மாட்டார்கள் என்றே தெரிகிறது. 
_________________________________________________________________________________
சோவியத்ரஷியா நாட்டை உருவாக்கிய இரும்பு மனிதர் ஸ்டாலின். இவரது ஒரே மகள் ஸ்வெத்லானா(வயது 85).
இவர் 1970ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள மத்திய விஷ்கான்சின் நகரில் கணவர் வில்லியம் பீட்டருடன் குடியேறினார்.பீட்டர் கட்டிடக்கலை நிபுணர் .
 புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்வெத்லானா இன்று மரணம் அடைந்தார்.
                                   மகள் ஸ்வெத்லானாவைக் கொஞ்சும் ஸ்டாலின்.
_______________________________________________________________________________
ஈரான்:தாக்கப்பட்ட பிரிட்டீஸ் தூதரகம்.


அடித்து நொறுக்குவோம்,,,...
அகப்பட்டதை சுருட்டுவோம்.
இன்று ஈரான் தலை நகர் டெஹ்ரானில் ஈரானிய இளைஞர்களால் பிரித்தானிய தூதரகம் சூறையாடப்பட்டது.பீரித்தானிய பார்லிமெண்டில் ஈரான் அணு சக்தி விவகாரம் தொடர்பாக பொருளாதார தடை விதிக்கும் மசோதா நிறைவேறியதை அடுத்து இச்சம்பவம் நடை பெற்றிருக்கிறது.
_________________________________________________________________________________


                    ”வாங்க” ,வாங்க உங்களை வரவேற்கிறது வால்மார்ட்
                      

டேம்-999 ?

அணை-999 இல் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் 999 என்ன?
முல்லை பெரியாறு அனை கட்டப்பட்டபோது அணிக்கான இடத்தை ஆங்கிலேய அரசு திருவிதாங்கூர் அரசிடம் இருந்து 999 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது.அதைத்தான் சகான் ராய் தனது படத்துக்கு அணை-999 என்று வைத்து குசும்புத்தனம் செய்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை, 120 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேய ஆட்சியினரால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு அணை கட்ட, 8,000 ஏக்கர் நிலத்தை, 999 ஆண்டு குத்தகைக்கு தர, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால், இந்த ஒப்பந்தமே செல்லாது எனவும், புதிய அணை கட்டப் போவதாகவும் கேரளா கூறுகிறது. ஆனால், தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள, 8,000 ஏக்கரில் புதிய அணையை கட்டாமல், கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் போவதாகச் சொல்கிறது. இதன் மூலம், அணையின் மொத்த கட்டுப்பாட்டையும், தன் பிடிக்குள் கொண்டு வர, கேரளா முயற்சிக்கிறது.
தற்போதைய நிலையில், முல்லை பெரியாறில், 136 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவே, 10 டி.எம்.சி., தான். இதில் தண்ணீர் வெளியேற வேண்டுமென்றால், 106 அடிக்கு மேல், 136 அடிக்கு கீழ் உள்ள தண்ணீர் தான் வெளியேற முடியும். அணை உடைந்தாலும், இந்த தண்ணீர் தான் வெளியேறும். எனவே, வெளியேறப் போவது 6 டி.எம்.சி., தண்ணீர் தான்.
அப்படி வெளியேறினாலும், அந்த தண்ணீர் நேராக இடுக்கி அணைக்கு தான் செல்லும். முல்லை பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில், 1979ல், கேரள மின் வாரியத்தால் கட்டப்பட்டது தான் இடுக்கி அணை. நீர்மின் நிலையத்துக்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை, 70 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளளவு கொண்டது. எனவே, முல்லை பெரியாறு அணை உடைந்தாலும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இந்த விவரங்களை, கேரள அரசு முதலில் மறைத்து வந்தது. இவை எல்லாம், வழக்கு விசாரணையின் போது தான் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, "இடுக்கி அணையே உடைந்துவிடும்' என்ற, புதிய பிரசாரத்தை கேரளா துவக்கியுள்ளது.மேலும், முல்லை பெரியாறு அணை என்பது, மற்ற அணைகளை போல, மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுவது அல்ல. அந்த அணையில் உள்ள தண்ணீரை, மிகப் பெரிய குழாய்கள் மூலம் தான், தமிழகம் எடுத்து வருகிறது. இதனால், அணை உடைந்தால், நான்கு மாவட்டங்கள் அழிந்துவிடும் என்ற வாதத்துக்கே இடமில்லை.அவ்வாறு நடக்க வாய்ப்பு இருந்தால், அதற்கான ஆதாரங்களை, உச்ச நீதிமன்றத்தில் கேரளா தாக்கல் செய்யலாம். ஆனால், அவ்வாறு எதையும் செய்யாமல், பிரதமரை சந்திப்பது, பீதியை கிளப்பும் பிரசாரங்களை மேற்கொள்வது, கடையடைப்பு நடத்துவது என மிரட்டி வருவது, இந்திய கூட்டு மாநிலங்கள் அரசுக்கேஆபத்தானது.
இப்போது ஏன் இந்த அணை உடையும் பிரச்சாரங்கள்?
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் எனகடந்த2006ஆம் ஆண்டு பிப்ரவரியில், உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.
 தீர்ப்பு வெளிவந்த நிலையில், மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன், கேரள காங்கிரஸ் அரசு, அவசரமாக சட்டசபையை கூட்டி, இந்த தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.இதை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணை நடந்து, தீர்ப்பு வெளிவர இருந்த நிலையில், பல்வேறு முறையீடுகளை கேரளா செய்து, அடுத்தடுத்த பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வைத்தது.இறுதியில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை அமைத்து, அதில், இரு மாநில அரசுகளும், தங்களது நியாயங்களைக் கூறி, ஒரு முடிவெடுக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தக் குழுவில், கேரளா தரப்பில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், தமிழகத்தின் தரப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, பல கட்டங்களாக கூடி விவாதித்து வந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை, கேரள அரசு தாக்கல் செய்தது.

இந்த குழுவிலும், ஏற்கனவே நடந்த விசாரணையிலும், அணைக்கு ஆபத்து இருப்பதற்கான எவ்வித ஆதாரத்தையும், கேரள அரசு சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் ரீதியான ஆய்வுகள் போன்றவற்றின் முடிவுகளையும் கேட்கத் தயாராக இல்லை. அதேசமயம், அனைத்து ஆய்வுகளுக்கும் ஒத்துழைக்கவும், நீதிமன்ற விசாரணைக்கும்தமிழகம் முழு ஒத்துழைப்புதந்துள்ளது. 
இக் குழுவின் இறுதிக் கூட்டம்,  டிசம்பர் 5ம் தேதி நடக்கிறது. பின் குழுவின் முடிவை அறிக்கையாக, இக்குழுவின் தலைவர் ஆனந்த் தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில், விரைவில் உச்ச நீதிமன்றம்தனது தீர்ப்பை வழங்கும்.தற்போதைய நிலை தமிழகத்துக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சமீப காலமாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள், வேறு உத்தியை கையாளத் துவங்கியுள்ளன.

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதாகவும், அதன் மூலம் தமிழகத்துக்கு தாராளமாக தண்ணீர் வழங்க இருப்பதாகவும், கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமரை சந்தித்து, இவ்விஷயத்தில் தமிழகத்துடன் மத்தியஸ்தம் செய்யுமாறு  வலியுறுத்தினார்.சிறிய அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை காரணம் காட்டி, முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், "டேம் 999' என்ற திரைப்படத்தை வெளியிட்டு, மக்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பீதியை ஏற்படுத்த, முயற்சிகள் நடந்துள்ளன.இது தவிர, ஆங்கில "டிவி' சேனல்களில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூலம், முல்லை பெரியாறு அணை குறித்து, தவறான செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.கேரளா முழுவதும், தமிழகத்துக்கு எதிரான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நான்கு மாவட்டங்களில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மலையாள திரைப்பட நடிகைகள், நடிகர்களது பேட்டிகள் மூலம், அணைக்கு எதிரான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
 வரும் 5ம் தேதி நடக்கவுள்ள குழுக்கூட்டத்தில் தமிழக ஆதரவு முடிவு எடுக்கப்பட்டு விடக்கூடாது .அக்குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், மத்திய அரசு, மக்கள் என, அனைவரிடமும் முல்லை பெரியாறு அணை தொடர்பாக அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்ளடிவேலையில், கேரள காங்கிரஸ் அரசுஈடுபட்டுள்ளது.இந்த பயத்தை போக்கும் வழியில்தமிழக அரசு   மக்கள் மத்தியில் தனது உத்திகளை செய்தாக வேண்டும்.
 
இல்லையெண்றால் அணை-999 சதி வென்று விடும்.முல்லைப்பெரியாறு அனையும் போய்விடும்.
தமிழகம் குறிப்பாக தென் மாவட்டங்களின் நீராதாரம்,விவசாயம் கனவாகி விடும்.
நல்லா கிளப்புறாய்ங்கயா பீதிய,,,,,,,,,.
என்று புலம்பாமல் அரசு ஆக வேண்டிய வேலைகளை செய்ய வேண்டும்.இது போன்ற இடர்காலத்தில் கொடநாடு ஓய்வு தேவைதானா?
கேரள மக்கள் மத்தியில் அச்சத்தைப்போக்குபடி நாமும் நம்பிக்கை-999% என்று சீமானை வைத்து படம் எடுத்து கேரளாவில் திரையிட்டால் என்ன?

திங்கள், 28 நவம்பர், 2011

வருகிறது வால் மார்ட்-

சிறு வியாபாரிகள் வாழ்வை குலைக்குமா [ர்ட்]  ?
வெளிநாட்டு நிறுவனங்கள், பல்பொருள் வர்த்தக துறையில் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோல், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தியது.
 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்கரவர்த்தி”சில்லரை வர்த்தக துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து விலைவாசி (பணவீக்கம்) குறையும். குறிப்பாக உற்பத்தியாளரும் நுகர்வோரும் பயனடைவர்” என்றுள்ளார்.
ரிசர் வங்கி கவர்னர்கள் முதலில் ரூபாயின் மதிப்பு உயர்வுக்கும் ,பணவீக்கத்துக்கும் நிவாரணம் தேடட்டும்.அவர்களின் பொருளாதார நிபுணத்துவ [?] முடிவுகளால் இதுவரை நாட்டில் பணவீக்கத்தையும் ,விலை வாசி உயர்வையும் தடுக்க முடியவில்லை.இவர்களின் பொருளாதார முடிவுகளின் லட்சணம்தான் இந்தியா முழுக்க அவலமாக சிரிக்கிறதே.
        அந்நிய முதலீடு என்றால் வால்மார்ட்தான் முதலிடம் பிடித்து முதலில் நுழையும் அதனால் அமெரிக்காவிலே வேலை இழந்தவர்கள்-காணாமல்போன சிறு உற்பத்தியாளர்கள்,சின்ன வியாபாரிகளின் சோகக்கதைகளை முதலில் சொனியா கம்பெனியார்கள் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.[தெரியாமல் இருக்காது]
    முதலில் உற்பத்தியாளர்களிடம் நல்ல லாபத்தில் ஒப்பந்தம் போட்டு அவர்களின் தயாரிப்பை முழுக்க தாங்களே வாங்கிக்கொள்வார்கள்.சில நாட்களில் தயாரிப்பாளர் மற்ற வாடிக்கையாளர்களை எல்லாம் இழந்து தயாரித்து வால்மார்ட்டில் கொடுத்து பணம் பெறும் சோம்பேறி நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்.
அதன் பின் அவரிடம் கொள்முதல் விலையைக்குறைப்பார்கள்  அவரும் வேறு வழியின்றி அவ்வாறே கொடுப்பார்.பின் அதுவே தொடர்கதையாகி ஒரு கட்டத்தில் வால்மார்ட்டிடமே தனது நிறுவனத்தை ஒப்படைத்து விடுவார்.அல்லது கொத்தடிமை நிலைக்கு சென்றுவிடுவார்.
இந்த நடமுறையைத்தான் வால்மார்ட் போன்ற பெரும் விற்பனை பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.சீனா தவிர மற்ற நாடுகளில் தங்கள் கிளைகளை அதிகம் வைத்துள்ள இவைகள் ஆரம்பித்த கிளைகளையும் சீனாவில் மூடிவருகிறது.
சீனாவில் அந்த நாட்டு அரசு தனது நாட்டில் உள்ள வியாபாரிகளுக்கு ஆதரவாக நடவடீக்கைகளை எடுத்துள்ளது.வால்மார்ட் வாலை சுருட்டிக்கொண்டுள்ளது.ஆனால் இந்தியா ஆளுங்கட்சியினரிடம் இந்திய மக்கள்,வியாபாரிகள் நலனை எதிர்பார்க்க முடியாது.
முன்பு ஜஹாங்கீர் பின் விளைவுகள் தெரியாமல் அனுமதித்ததால்தான் கிழக்கிந்திய கும்பெனியாரின் கையில் இந்தியாவே சென்றுவிட்டது.
இப்போது பின் விலைவுகள் தெரிந்தே இந்தியாவைபன்னாட்டு நிறுவனங்கள் கையில் சோனியா-ராகுல் ஆட்சியாளர்கள் ஒப்படைக்கத்துடிக்கிறார்கள்.
அவர்களிடம் இந்திய நாட்டின் மீதான பாசம் ,பக்தியை எதிர்பார்க்க முடியாது.
இது எல்லாவற்றையும் விட நமது சில்லறை வர்த்தகர்களின் லாபம் இந்தியாவிலேயே சுற்றும்.சுவிஸ் வங்கியில் போடுமளவு காங்கிரசுகாரர்கள் அளவு சம்பாதிக்க மாட்டார்கள்.
ஆனால் வால்மார்ட் லாபத்தின் கடைசி பைசாவரை அமெரிக்கா போன்ற மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டுவிடும்.நம்நாட்டிற்கு அதில் என்ன லாபம்?
பலகோடிக்கு முதலீடு வரும் என்று ஆசை காட்டுகிறார்கள்.அதில் நாட்டுக்கும்,மக்களுக்கும் என்ன லாபம்.
அவர்கள் கடைகளை திறக்க பணத்தைக்கோடிக் கணக்கில் இங்கு கொட்டுவார்கள் ஆனால் அதை போல் பன்மடங்கு வெளியே போகுமே அதை ஏன் இந்த ஆட்சியாளர்கள் சொல்ல மறந்து விட்டார்கள்.?
கோக்க கோலா,பெப்சி,ஹார்லிக்ஸ்,ஜான்சன்&ஜான்சன்,நெஸ்ட்லே,ஐ.டி.சி,இந்துஸ்தான்லீவர்,பிரிட்டானியா,ப்ரூக்பாண்ட்,மெக்டொனால்ய்ட்,கென்ஸ்ட்லி,ஸ்டார் டி.வி.குழுமம்,20சென்சுரி பாக்ஸ் போன்று இறக்குமதி நிறுவனங்களில் எத்தனை லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்?வேலை வாய்ப்பு லட்சக்கணக்கில் பெருகும் என்ற கணக்கு கதைக்குதவாது.காரணம் இந்தியர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பு குறைவுதான் .எல்லாம் கணினி மயம் .இந்தியர்கள் அங்கு குத்தகை அடிப்படையில்தான்[அவுட்சோர்ஸ்]பணியில் உள்ளனர்.பணி பாதுகாப்பும் இல்லை.வேலை வாய்ப்பு என்பது வெறும் பேச்சுதான்.
எந்தவகையிலும் உதவாத,லாபம் தராத,இருக்கும் வேலை வாய்ப்பைபறிக்கும் அந்நிய சில்லரை விற்பனை கடைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு கண்டிப்பாக தேவை இல்லை.காங்கிரசு இவ்வளவு மெனெக்கெடுவது நாட்டைக் கெடுக்க மட்டும்தான்.
_____________________________________________________________
”கனடாவிலிருந்து” என்ற வலைத்தளத்தில் முன்பு வந்த கட்டுரையின் சிறு பகுதி--

வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.

அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.
   -இது 2009இல் வந்த கட்டுரை.
வால்மார்ட் -பற்றிய முழுத்தகவல்களுக்கு;-
_______________________________________________________________________________


’அப்பாடா,ஒரு வழியா வந்தியா?
மேலுள்ளது மகள் கனிமொழியைப்பார்த்து தான் கேட்கும்-பேசும் முதல் வார்த்தை என கருணாநிதி கூறியவை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலுள்ள திமுக தலைவர் மு கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
   
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் இன்று கனிமொழியைத் தவிர கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி, ஒரு தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் இந்தி திரைப்பட்த் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆக்ய நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன்வழங்கி உத்திரவிட்ட்து.
கைதான் பிறகு ஐந்தாம் முறையாக ஜாமீன் கோரும்போதுதான் கனிமொழியின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் வேறு ஐவருக்கு ஜாமீன் வழங்கும்போது, உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் முறைப்படி பதிவாகி, வழக்கு விசாரணையே தொடங்கிவிட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்ய மறுப்பது தவறு எனக்கூறியதன் பின்னணியிலேயே கனிமொழிக்கும் மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்திருக்கிறது.
___________________________________________________________________________________________________

ஞாயிறு, 27 நவம்பர், 2011

ஓய்வை {கொட} நாடு


”நவம்பர் -30 முதல் தமிழக முதல்வர் கொடநாடு மாளிகையில் ஓய்வெடுக்கப்போகிறார்.அரசுப்பணிகளை சில வாரங்கள் அங்கிருந்தே செய்வார்.”


இது தமிழக அரசின் செய்தி குறிப்பு.


தமிழக அரசின் தலமைச்செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றாமல் கொடநாடுக்கு மாற்றியிருக்கலாம்.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தமிழக மக்களுக்கு தான் பாடுபடுவதாகக் கூறிவரும் ஒருவர் ‘பெங்களூர் நீதி மன்றத்தில் இரு நாட்கள் பதில் கூறி வந்ததற்காக சில வாரங்கள் ஓய்வா?
மழை வெள்ளத்தில் தமிழகம் தத்தளிக்கும் போது நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தாமல் கொடநாடு செல்வதுதான் மக்கள்பணியாற்றுவதா?
 பாவம்.மின்,பால்,பேருந்து கட்டணங்களை உயர்த்திய அசதியாக இருக்கும்.
மிக முக்கிய நிலையில் நாடு சென்று கொண்டிருக்கும் போது ஒய்வு என தள்ளிப்போவது சரியா.? விடாத மழையின் பாதிப்பால் ஏராளமான மக்கள் வீட்டைவிட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு அரசின் ஆதரவு கரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். 
விலைவாசி ஒருபக்கம் கடித்து தின்கிறது.மறுபக்கம் சில்லறை விற்பனையில் அந்நியர்களைக்கொண்டு வர மத்திய அரசு துடியாய் துடிக்கிறது.
அதைக்கூட விடுங்கள் .இப்போது பேரிடர் மேலாண்மை எனப்படும் மழை,வெள்ளம் காலம் இது போன்ற நிலையில் ஒரு மாநில முதல்வருக்கு ஓய்வு என்ன ஒய்வு
.
அப்படி என்ன உடல் வருத்த பணிகளை செய்து விட்டார்.?தலைமைச்செயலகம் கூட வராமல் இதுவரை போயஸ்தோட்டத்தில்தானே கோப்புகலைப்பார்த்துக்கொண்டார்.அப்படி பார்த்தக் கோப்புகள் கூட வாரா,வாரம் அதிகாரிகளை மாற்றுவது.மாதா,மாதம் அமைச்சர்கலை மாற்றுவது.இடையிடையே கருணாநிதி செய்தவைகள்-கட்டியவைகளை மாற்றுவது.வரிகளை-விலைகளை உயர்த்தியது.
இவைதானே இந்த ஆறுமாதகால நடைமுறை இதற்கு ஒய்வு எதற்கு?
போயஸ் வீட்டைத்தவிர தனக்கு ஒன்றும் சொந்தமில்லை என பெங்களூரில் கூறிவந்தாரே இப்போது கொடநாடு என்கிறாரே அது யாருக்கு சொந்தமானது?
                     
ஜம்முவிலும் ,ஸ்ரீ நகரிலும் ஆட்சி நடக்கும் காஷ்மீர் போன்று தமிழ் நாட்டிலும் கொடநாட்டிலும் -கோட்டையிலும் ஆட்சி செய்யும் முறையைக்கொண்டு வந்தால் போச்சு.
____________________________


தலை மறைவு குற்றவாளி அம்பானி ?
            


வாடிக்கையாளரை மோசடி செய்த குற்றத்திற்காக இந்திய தொழிலதிபரான அனில் அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் நீதிபதி பி.கே.பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக பிரதாப்குமார் வர்மா என்பவரின் மனைவி ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை ஈசி ரீசார்ஜ் செய்தபோது குறிப்பிட்ட திட்டத்துக்கென ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த சலுகைகள் எதுவுமே கிடைக்கவில்லை.ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.மேலும் விபரங்களைக்கூறாமல் தரக்குறைவான முறையில் பேசியுள்ளனர். நடத்தியுள்ளனர்.
இதனால் ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. வாடிக்கையாளர்களை மோசடி செய்கிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது மோசடி
 வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் கடந்த மே 21-ம்தேதி ஜார்கண்ட் நீதிமன்றம் அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆணையிட்டது. அதை காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை.எனவே அனில் அம்பானி இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கருதி தேடப்படும் குற்றவாளியான அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யுமாறு நீதிபதி பி.கே.பாண்டே உத்தரவிட்டார்.
_________________________________________________________________
மூளை படுத்தும் பாடு.....,ஐன்ஸ்டீன் 1921ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார்..  தனது 76 வது வயதில் மரணமடைந்த ஐன்ஸ்டீன் கணித திறமைகள் கொண்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானி. இவர் புள்ளியில் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளில் தனது மாபெரும் கண்டுபிடிப்புகளின் மூலம் இயற்பியலில் பல சாதனைகளை செய்துள்ளார்.
 அவருடைய மூளை நியுயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனை லென்சு மூலம்  பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
ஐன்ஸ்டீன் மூளையின் பின் ஒரு கதையே உள்ளது.அவர் மரணமடைந்ததும்
அவரின் மூளையை ஆய்வு செய்ய அவரது நண்பரும் மருத்துவருமான தாமஸ் ஹார்வே உடல் பரிசோதனை என்று ஐன்ஸ்டீன் மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டாராம்.
 இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் ஹார்வே மீது வழக்கு தொடுத்தனர்.
நீதிமன்றத்தில் ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதியளித்ததாக கூறி அரசிடம் ஒப்படைத்துவிட்டார்.அதுதான் இப்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________

மாவீரன் பிரபாகரன் பிறண்டநாள் கொண்டாட்டங்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் கொண்டாடப்பட்து.

நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. 

கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புலிகளின் வலையமைப்பு இன்னும் இருப்பதாக ராஜபக்‌ஷே கூறிக்கொண்டுவருகிறார்.. 
முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிசெய்யவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இலங்கையிலும்கொண்டாடப்பட்டது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார். 
மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.

தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் பிரகபாகரன் பிறந்தநாள் நிகழ்வுகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடக்கூடும் என்பதால், அதைத் தடுக்க ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

ஆனாலும் இந்த நெருக்கடியையும் மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பிரபாகரன் பிறந்தநாளை பட்டாசு வெடித்துக் கொண்டி ராணுவத்தை அதிரவைத்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பே மாவீரர்களை நினைவேந்தியும், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே ராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, மாணவர்களை அச்சுறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

நேற்று பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.


ஆனாலும் இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவும் விதத்திலும் சிங்களத்தை தலைகுனிய வைக்கும் வகையிலும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு பட்டாசு கொளுத்தி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எண்ணி அச்சமடைந்தனர். ஆனால் நேரில் சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பினர்.

இன்றைக்கு தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிங்கள ராணுவத்தினரும் உளவுப் பிரிவினரும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுத அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் எமது மதம், தமிழீழம் எமது ஆலயம், தலைவர் பிரபாகரன் எமது கடவுள் என்று பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராணுவம், போலீஸ் கெடுபிடி என அனைத்து வழிகளிலும் இலங்கை அரசு அடக்குமுறையை ஏவிவிட்ட போதும் மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் தலைவரின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூஜைகள் நடத்தினர். இந்த நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் இலங்கை படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் வருவது வரட்டும் என்ற மனப்பான்மையுடன் பிரபாகரன் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் பிரபாகரன் எந்த அளவு நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்தன. 


அதேபோல இன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரிவான அறிவிப்புகளுடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாடினால் ராணுவம் கலைத்துவிடும் என்பதால், திடீரென பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
___________________________________________________________________________