ஓய்வை {கொட} நாடு


”நவம்பர் -30 முதல் தமிழக முதல்வர் கொடநாடு மாளிகையில் ஓய்வெடுக்கப்போகிறார்.அரசுப்பணிகளை சில வாரங்கள் அங்கிருந்தே செய்வார்.”


இது தமிழக அரசின் செய்தி குறிப்பு.


தமிழக அரசின் தலமைச்செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றாமல் கொடநாடுக்கு மாற்றியிருக்கலாம்.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தமிழக மக்களுக்கு தான் பாடுபடுவதாகக் கூறிவரும் ஒருவர் ‘பெங்களூர் நீதி மன்றத்தில் இரு நாட்கள் பதில் கூறி வந்ததற்காக சில வாரங்கள் ஓய்வா?
மழை வெள்ளத்தில் தமிழகம் தத்தளிக்கும் போது நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தாமல் கொடநாடு செல்வதுதான் மக்கள்பணியாற்றுவதா?
 பாவம்.மின்,பால்,பேருந்து கட்டணங்களை உயர்த்திய அசதியாக இருக்கும்.
மிக முக்கிய நிலையில் நாடு சென்று கொண்டிருக்கும் போது ஒய்வு என தள்ளிப்போவது சரியா.? விடாத மழையின் பாதிப்பால் ஏராளமான மக்கள் வீட்டைவிட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு அரசின் ஆதரவு கரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். 
விலைவாசி ஒருபக்கம் கடித்து தின்கிறது.மறுபக்கம் சில்லறை விற்பனையில் அந்நியர்களைக்கொண்டு வர மத்திய அரசு துடியாய் துடிக்கிறது.
அதைக்கூட விடுங்கள் .இப்போது பேரிடர் மேலாண்மை எனப்படும் மழை,வெள்ளம் காலம் இது போன்ற நிலையில் ஒரு மாநில முதல்வருக்கு ஓய்வு என்ன ஒய்வு
.
அப்படி என்ன உடல் வருத்த பணிகளை செய்து விட்டார்.?தலைமைச்செயலகம் கூட வராமல் இதுவரை போயஸ்தோட்டத்தில்தானே கோப்புகலைப்பார்த்துக்கொண்டார்.அப்படி பார்த்தக் கோப்புகள் கூட வாரா,வாரம் அதிகாரிகளை மாற்றுவது.மாதா,மாதம் அமைச்சர்கலை மாற்றுவது.இடையிடையே கருணாநிதி செய்தவைகள்-கட்டியவைகளை மாற்றுவது.வரிகளை-விலைகளை உயர்த்தியது.
இவைதானே இந்த ஆறுமாதகால நடைமுறை இதற்கு ஒய்வு எதற்கு?
போயஸ் வீட்டைத்தவிர தனக்கு ஒன்றும் சொந்தமில்லை என பெங்களூரில் கூறிவந்தாரே இப்போது கொடநாடு என்கிறாரே அது யாருக்கு சொந்தமானது?
                     
ஜம்முவிலும் ,ஸ்ரீ நகரிலும் ஆட்சி நடக்கும் காஷ்மீர் போன்று தமிழ் நாட்டிலும் கொடநாட்டிலும் -கோட்டையிலும் ஆட்சி செய்யும் முறையைக்கொண்டு வந்தால் போச்சு.
____________________________


தலை மறைவு குற்றவாளி அம்பானி ?
            


வாடிக்கையாளரை மோசடி செய்த குற்றத்திற்காக இந்திய தொழிலதிபரான அனில் அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் நீதிபதி பி.கே.பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக பிரதாப்குமார் வர்மா என்பவரின் மனைவி ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை ஈசி ரீசார்ஜ் செய்தபோது குறிப்பிட்ட திட்டத்துக்கென ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த சலுகைகள் எதுவுமே கிடைக்கவில்லை.ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை.மேலும் விபரங்களைக்கூறாமல் தரக்குறைவான முறையில் பேசியுள்ளனர். நடத்தியுள்ளனர்.
இதனால் ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. வாடிக்கையாளர்களை மோசடி செய்கிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது மோசடி
 வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் கடந்த மே 21-ம்தேதி ஜார்கண்ட் நீதிமன்றம் அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆணையிட்டது. அதை காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை.எனவே அனில் அம்பானி இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கருதி தேடப்படும் குற்றவாளியான அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யுமாறு நீதிபதி பி.கே.பாண்டே உத்தரவிட்டார்.
_________________________________________________________________
மூளை படுத்தும் பாடு.....,



ஐன்ஸ்டீன் 1921ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார்..  தனது 76 வது வயதில் மரணமடைந்த ஐன்ஸ்டீன் கணித திறமைகள் கொண்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானி. இவர் புள்ளியில் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளில் தனது மாபெரும் கண்டுபிடிப்புகளின் மூலம் இயற்பியலில் பல சாதனைகளை செய்துள்ளார்.
 அவருடைய மூளை நியுயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனை லென்சு மூலம்  பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
ஐன்ஸ்டீன் மூளையின் பின் ஒரு கதையே உள்ளது.அவர் மரணமடைந்ததும்
அவரின் மூளையை ஆய்வு செய்ய அவரது நண்பரும் மருத்துவருமான தாமஸ் ஹார்வே உடல் பரிசோதனை என்று ஐன்ஸ்டீன் மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டாராம்.
 இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் ஹார்வே மீது வழக்கு தொடுத்தனர்.
நீதிமன்றத்தில் ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதியளித்ததாக கூறி அரசிடம் ஒப்படைத்துவிட்டார்.அதுதான் இப்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________

மாவீரன் பிரபாகரன் பிறண்டநாள் கொண்டாட்டங்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 57வது பிறந்த தினம் கொண்டாடப்பட்து.

நசுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க, இலங்கையில் 30 ஆண்டு காலம் தனி ஈழம் கேட்டுப் போராடியது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. 

கடந்த 2009ம் ஆண்டு உலக நாடுகளின் துணையுடன் பிரபாகரனின் படைகளை வென்றது இலங்கை ராணுவம். தங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு உலகம் எதிர்ப்பு காட்டுவதைப் புரிந்துகொண்ட புலிகள் அமைப்பு, ஆயுதங்களை மவுனிப்பதாகக் கூறிவிட்டு, அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

புலிகளின் வலையமைப்பு இன்னும் இருப்பதாக ராஜபக்‌ஷே கூறிக்கொண்டுவருகிறார்.. 
முள்ளி வாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும், அவர் இன்னும் இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கமும் இதுவரை அவரது இறப்பை உறுதிசெய்யவில்லை. ஆண்டுதோறும் வெளியாகும் மாவீரர் தின அறிக்கையில், தேசியத் தலைவர் வழிகாட்டுதலில் போராட்டம் தொடரும் என்றே கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் பிரபாகரனின் 57வது பிறந்த தினம் இலங்கையிலும்கொண்டாடப்பட்டது. பொதுவாக பிரபாகரன் தனது பிறந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், தன்னுடன் நின்று இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த போராளிகளின் நினைவு நாளான மாவீரர் தினத்துக்குதான் (நவம்பர் 27) அதிக முக்கியத்துவம் தருவார். 
மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள், அவர்களது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு புலிக்கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றன.

தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் பிரகபாகரன் பிறந்தநாள் நிகழ்வுகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடக்கூடும் என்பதால், அதைத் தடுக்க ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

ஆனாலும் இந்த நெருக்கடியையும் மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பிரபாகரன் பிறந்தநாளை பட்டாசு வெடித்துக் கொண்டி ராணுவத்தை அதிரவைத்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பே மாவீரர்களை நினைவேந்தியும், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே ராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, மாணவர்களை அச்சுறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

நேற்று பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.


ஆனாலும் இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவும் விதத்திலும் சிங்களத்தை தலைகுனிய வைக்கும் வகையிலும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு பட்டாசு கொளுத்தி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எண்ணி அச்சமடைந்தனர். ஆனால் நேரில் சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பினர்.

இன்றைக்கு தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிங்கள ராணுவத்தினரும் உளவுப் பிரிவினரும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுத அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் எமது மதம், தமிழீழம் எமது ஆலயம், தலைவர் பிரபாகரன் எமது கடவுள் என்று பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராணுவம், போலீஸ் கெடுபிடி என அனைத்து வழிகளிலும் இலங்கை அரசு அடக்குமுறையை ஏவிவிட்ட போதும் மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் தலைவரின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூஜைகள் நடத்தினர். இந்த நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் இலங்கை படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் வருவது வரட்டும் என்ற மனப்பான்மையுடன் பிரபாகரன் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் பிரபாகரன் எந்த அளவு நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்தன. 


அதேபோல இன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரிவான அறிவிப்புகளுடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாடினால் ராணுவம் கலைத்துவிடும் என்பதால், திடீரென பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
___________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?