தேர்தல் வாக்குறுதிகள்... நிறைவேற்றிவிட்டாரா முதல்வர்?


5 ஆண்டு கால ஆட்சி... - ஜூ.வி. ஸ்கேன்

‘‘2011 சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, அதற்கு மேலும் தமிழக மக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்’’ - சட்டசபையில் ஜெயலலிதா சொன்னது இது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா சொன்னது, வெற்று வீர வசனம் மட்டுமே. 90 சதவிகித வாக்குறுதிகள் பஞ்சராகிப்போயின. தேர்தல் காலத்தில் கொளுத்திப் போட்ட கலர் மத்தாப்புகள் புஸ்வாணமாகிவிட்டன.  அ.தி.மு.க தேர்தல் அறிக்கையின் ‘ஸ்கேன்’ ரிப்போர்ட் இது.
சந்தி சிரித்த சட்டம் - ஒழுங்கு!
தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும்’ என்றார்கள். 5 ஆண்டுகளில் 9,948 கொலைகளும், ஒரு லட்சம் கொள்ளைகளும் நடந்திருப்பது சட்டம் - ஒழுங்குக்குக் கிடைத்த ‘நற்சான்றிதழ்’. அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டுவீச்சு, ராமஜெயம் கொலை வழக்கு, தர்மபுரி, விழுப்புரம் சாதி வன்முறைகள், பரமக்குடி துப்பாக்கிச்சூடு என சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்தது.
வெள்ளப்பெருக்கு... வாய்ச்சவடால்!
‘நதிகளை நீர்வழிகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப்பெருக்கு நீரைத் தேக்கி, பாசனப் பகுதிகளுக்குத் தேவையானபோது பயன்படுத்துவோம்’ - இது தேர்தல் அறிக்கையின் வாசகம். நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்பும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு காரணமாக சென்னை மூழ்கியதும் கண்முன்னே நடந்த பேரழிவு. 
கோலிவுட் கோக்குமாக்கு!
‘திரைப்படத் துறையினர் பிரச்னைகள் தீர்க்கப்படும்’ என்பதும் ஒரு வாக்குறுதி. ‘விஸ்வரூபம்’, ‘துப்பாக்கி’,  ‘தலைவா’ ஆகிய படங்கள் தியேட்டரை எட்டிப் பார்ப்பதற்கு தலைமைச் செயலகத்தின் கதவுகளைத்தானே தட்ட வேண்டியிருந்தது. அரசு சினிமா விருதுகளை 9 ஆண்டுகளுக்குத் தராமல் பரணில் தூக்கி வைத்திருக்கிறார்கள். தரமான படங்களுக்கு மானியம், சின்னத்திரை விருதுகள், அண்ணா, எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், சிவாஜி பெயர்களில் வழங்கப்படும் கலைத் துறை வித்தகர்கள் விருதுகளையும் மூட்டை கட்டி வைத்தார்கள்.
வெண்மைப் புரட்சி ஜிகினா!
‘பால் உற்பத்தி தினமும் 10 மில்லியன் லிட்டராக்கப்படும். மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சி உருவாக்கப்படும்’ என்றார்கள். ஆவின் நிறுவனம், பால் கொள்முதல் செய்யாததால் பாலை ரோட்டில் கொட்டிப் போராடினார்கள் பால் உற்பத்தியாளர்கள். சாலைகளில் ஆறாக ஓடிய பாலைதான் வெண்மைப் ‘புரட்சி’ என ‘புரட்சி’த்தலைவி அர்த்தப்படுத்திக்கொண்டார் போல. ‘பதப்படுத்தும் நிலையங்கள், பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்’ என்பதும் பணால் ஆனது.
மோனோ ரயில்... ஃபெயில்!
‘சிங்கப்பூரில் இருப்பதைப் போல சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்கிற கலர் மத்தாப்பு, ஆட்சி முடியும் தருவாயிலும் எரிந்தபடியே இருக்கிறது. ‘வண்டலூர் டு வேளச்சேரி, பூந்தமல்லி டு கத்திப்பாரா, பூந்தமல்லி டு வடபழனி என மோனோ ரயிலுக்காக மூன்று வழித்தடங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன’ என 2011-ல் அறிவித்தார் ஜெயலலிதா. அதோடு ‘மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் ஓடும்’ என்றார். எல்லாமே புஸ்வாணம்தான்.  ‘‘சென்னையில் 8,500 கோடி ரூபாயில் 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் ஓடும்’’ என்று சொன்னதும், டுப்பாக்கூர்தான். மூன்று வழித்தடங்களுக்கே வழியைக் காணோம். அதற்குள் ‘வண்டலூரையும், புழலையும் இணைக்கக்கூடிய 54 கி.மீ நீளமுள்ள நான்காவது வழித்தடம் செயல்படுத்தப்படும்’ என கலர்கலராக அறிவிப்புகள்தான் வந்தன. மோனோ ரயிலை போட்டோவில்கூட காட்டவில்லை.
தொழில் துறை
‘தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், கப்பல் கட்டும் துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்க நடவடிக்கைகள். நிலம் கொடுக்கும் விவசாயிகளை பங்குதாரர்களாக மாற்றிச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்’ என தொழில் துறைக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னாவாயின? மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முதலில் ஆதரித்து பிறகு, ஜகா வாங்கியது, முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆட்சியின் அந்திமக் காலத்தில் நடத்தியது. இவை எல்லாமே தொழில் துறையின் மீது காட்டிய அக்கறைக்கு சாம்பிள்கள்.
அம்மா நீர்... சும்மா நீர்!
‘வறுமைக்கோட்டைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர். இதற்காக 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும்’ என்பதும் தேர்தல் வாக்குறுதி. வெறும் குடிநீரைக்கூட பல இடங்களில் கொடுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம், ‘அம்மா குடிநீர்’ என அரசாங்கமே தண்ணீரை விற்று கல்லா கட்டியது. அதில் ‘இரட்டை இலை’யைப் போட்டு கட்சிக்கு ‘லைக்ஸ்’ அள்ளியது.
கடன்... அம்மா சேர்த்த சொத்து!
‘ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து தமிழகத்தை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத் துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்’ - முந்தைய தி.மு.க ஆட்சி வைத்துவிட்டுப் போன கடனுக்கு, தேர்தல் அறிக்கையில் சொன்ன விளக்கம் இது. ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இப்போது இரண்டு லட்சம் கோடியாகிவிட்டது. ‘2015 - 16-ம் ஆண்டில் ரூ.2.11 லட்சம் கோடியாக கடன் அதிகரிக்கும்’ என சட்டசபையிலே சர்டிஃபிகேட் கொடுத்தார்கள். பொதுத் துறை நிறுவன கடன்களையும் சேர்த்தால், ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. தலைகுனிவைப் போக்குவதற்குப் பதில் ,ஒவ்வொரு தலையிலும் கடனை ஏற்றியதுதான் சாதனை. 

விலைவாசி உயர்வு!

‘இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விலைவாசி கட்டுப்படுத்தப்படும்’ என்றது தேர்தல் அறிக்கை. பருப்பு கிலோ 250 ரூபாயையும், வெங்காயம் 100 ரூபாயையும் தொட்டது. வெங்காயத்தை உரிக்காமலே கண்ணீர்விட்டார்கள் தாய்மார்கள். பருப்பு இல்லாமல் சாம்பார் வைத்தார்கள். பூண்டு விலையும் வரலாறு படைத்தது. விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த லட்சணம் இதுதான்.

‘புரட்சி’த்தலைவி ஆட்சியில் விவசாய ‘புரட்சி’ இல்லை! 

‘இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம், மக்கள் இயக்கமாக்கப்படும்’ என்றார்கள். அது உறுதியோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது. ‘கரும்பு உற்பத்தி 1,000 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்’ என்கிற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ‘அனைத்து விவசாய விளைப்பொருட்களுக்கும், கரும்பைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்’ என்ற அறிவிப்பின் தலைவிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ‘விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்’ என்றார்கள். ‘4 ஆண்டுகளில் தமிழகத்தில் 2,123 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்’ எனச் சொல்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். தற்கொலையைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை.

இருண்ட தமிழகம்!

‘இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம். இதற்காகச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என அறிவித்தார்கள். அந்தச் சிறப்புத் திட்டம் எப்போது வரும் என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். ‘2013-ம் ஆண்டுக்குள் 5,000 மெகா வாட் கூடுதல் மின்சாரம், 3,000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்’ என்றார்கள். ‘‘இவர்களே திட்டம் போட்டு நிறைவேற்றி, அதில் இருந்து ஒரு மெகா வாட்கூட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை’’ என குற்றச்சாட்டு படிக்கின்றனர் எதிர்க் கட்சியினர். ‘4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம், மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரின் மின்சார பாதுகாப்புப் படை, மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும்’ என்கிற வாக்குறுதிகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன.     

  கேபிள் டி.வி...

‘கேபிள் டி.வி அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்’ என்றார்கள். ‘மாதம் 70 ரூபாய் கட்டணத்தில் கேபிள் டி.வி’ என நிறைவேற்றினார்கள். ஆனால், 70 ரூபாய் கட்டணம் எங்கே வசூலிக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. ‘Free to Air DTH சேவைகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கிற அறிவிப்புக்கும் அரசுதான் பதில் சொல்ல வேண்டும். 

எங்கே சிறப்புச் சுய பாதுகாப்புப் படை?

‘வீடுகளில் திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க இளைஞர்களைக் கொண்ட சிறப்புச் சுய பாதுகாப்புப் படைகள் அமைக்கப்படும். வீட்டைப் பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகள் பாதுகாக்கப்படும். பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்புப் பாதுகாப்புப் படை’ என்றார்கள். இதெல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றதோடு சரி.

மீனவர்கள் நலன்!

‘மீனவர் பாதுகாப்புப் படை, 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் (Fish Processing Parks), நடுக்கடல் மீன் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக் கப்பல் பூங்கா’ எல்லாம் எப்போது வரும் என்பதை ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொல்லும் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும்.

வேலைவாய்ப்பு!


‘காலியான அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்; சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்’ என்றார்கள். லட்சக்கணக்கில் அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.

தொடராத திட்டங்கள்!


‘நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடரும்’ என்றார்கள். 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருட்கள், இலவச கலர் டி.வி., காஸ் ஸ்டவ், உழவர் சந்தைகள், வரும் முன் காப்போம் திட்டம், சமத்துவபுரங்கள், புதிய தலைமைச் செயலகம் என பல திட்டங்கள் ஊத்தி மூடப்பட்டன.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

==============================================================================================
புஸ்வாண வாக்குறுதிகள்! 

* சென்னை டு கன்னியாகுமரி கடலோர சாலைத் திட்டம். 
* தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’. 
* ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும்.
* 10 ஆடை அலங்காரப் பூங்காக்கள்.  
*திருப்பூர் சாயக்  கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம்.
* 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.
* மின்னணு  ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள்.
* விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
* பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள். 
* நீதிமன்றங்களில் தமிழ்மொழி.
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
* வனவிலங்குகள் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை.
* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?