வியாழன், 27 நவம்பர், 2014

அன்று நடந்தது என்ன? என்ன? கலைஞர் விளக்க கடிதம் .திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதியுள்ள கடிதம் :

முதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக வாய்த்திருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தி.மு.க.வினர் அராஜகம் செய்ததாக நேற்றைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.
 1957ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகச் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கிறது. 
15 பேராக நுழைந்து, 50 பேராக உயர்ந்து, 1967இல் பெரும்பான்மையைப் பெற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. 
அப்போது இந்தியாவையே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. 
ஆனால் ”அ.தி.மு.க. என்ற ஒரு அமைப்பு பேரவையில் நுழைந்த பிறகு தான், அதுவும் குறிப்பாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான், சட்ட சபையில் அராஜகம் - அநாகரீகம் என்பவை நுழைந்தன” என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகையாளர்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே பிரச்சினை எழுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. (ஜா) அணி என்றும், அ.தி.மு.க. (ஜெ) அணி என்றும் பிரிந்து பேரவையிலே 28-1-1988 அன்று, எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்த போது; எதிர் அணியான ஜெயலலிதா அம்மையார் அணியினர், கலவரத்தை ஆரம்பித்து, சட்டப்பேரவையையே ரணகளமாக்கி, பேரவைக்குள் காவல்துறைத் தலைவர் தேவாரம் தலைமையிலே போலீசார் நுழைந்து தாக்குகின்ற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய், ஜெயலலிதா எதிர்பார்த்ததைப் போலவே, அதை வைத்து ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப் பட்டது.
 அப்போது அ.தி.மு.க.வினர் அங்காடித் தகராறு போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட சம்பவங்கள் மறந்தா விட்டன? 
பேசுவதற் காகக் கொடுக்கப்பட்ட “மைக்”குகளைப் பிடுங்கி, ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்கிய சம்பவங்கள் தெரியாதா? 
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளிலே “மைக்”குகளை ஏந்திக் கொண்டு ஏதோ போர்க் களத்திலே வாளேந்தி நடந்து வரும் வீரர்களைப் (! ) போல, வெற்றி நடை நடந்து வெளியே வந்த புகைப்படங்கள் எல்லாம் பழைய ஏடுகளிலே இன்றைக்கும் பார்க்கலாம்! 
அவையின் நாகரிகம் - பண்பாடு என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்ட இந்தச் சம்பவம் பன்னீர்செல்வத்திற்கு தெரியாதா?

பன்னீர்செல்வம் தேடித் தேடிப் பிடித்து, 25-3-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சராக வும், நிதியமைச்சராகவும் இருந்த நான் 13 ஆண்டு களுக்குப் பிறகு புதிய திட்டங்களையெல்லாம் நிதிநிலை அறிக்கையில் எடுத்துச் சொல்ல முற்பட்ட போது, தி.மு.க. ஏதோ அராஜகத்தில் ஈடுபட்டதாக ஒரு கற்பனைக் கதையைச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதையை ஒரு நாடகமாகவே அரங்கேற்றிய நிகழ்ச்சியெல்லாம் எப்போதோ வெட்ட வெளிச்சமாகி நாட்டு மக்கள் வேதனையை வெளியிட்டதைப் பன்னீர்செல்வம் மறந்துவிட்டாரா? 
அவரே அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதி விட்டதால், அன்றையதினம் என்ன நடந்தது என்பது பேரவையிலேயே பேசப்பட்டு, அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்று, பின்னர் அதனை அவைக்குறிப்பிலேயிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எல்லாம் நடைபெற்றன.


”25-3-1989 அன்று நான் பேரவையில் நிதிநிலை அறிக்கையைப் படித்த போது, தற்போது காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர்களில் ஒருவராக இருப்பவரும், அப்போது ஜெயலலிதா கட்சியிலே அவருக்கு மிகவும் உதவியாக இருந்தவருமான திரு. திருநாவுக்கரசர் பேரவையிலே விரிவாக உறுப்பினர் களுக்கும், நாட்டிற்கும் அதை விளக்கினார்.
 அந்த நிதிநிலை அறிக்கையினை நான் படித்தபோது சட்டமன்றத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து நான் கூறுவதைவிட, அன்றைக்கு எதிர்க் கட்சித் துணைத் தலைவராக அ.தி.மு.க.விலே ஜெய லலிதாவிற்கு ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள் அந்தச் சம்பவம் நடைபெற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே சட்டப்பேரவையில் பேசியதை அப்படியே குறிப்பிடுகிறேன்.
 இதோ நண்பர் திருநாவுக்கரசு பேசுகிறார்:-

”“இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். 
இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து “நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது.
 எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்” என்று சொன்னார். 
நான் உடனே மிகுந்த வேதனை யோடு சொன்னேன். “தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். 
தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை.
 இரண்டாவது, இதுபோன்ற சம்பவம் வேண்டாம்” என்று நான் வாதாடியதுடன்; “முதல் அமைச்சர் நமக்குப் பிடிக்காதவராகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அவருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். 
அவர் மீது கை வைக்கிற போது அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். 
அங்கு நிச்சயமாக அடிதடி நடக்கும், ரகளை நடக்கும். புரட்சித்தலைவர் இருக்கும்போது எவ்வளவோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. 
அவருக்குப் பக்கத்தில் யாராவது போனால் கூட நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்; தாக்கியிருப்போம். அதுபோல இன்றைய முதலமைச்சருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தாக்குவார்கள். அசம்பாவிதம் நடக்கும். அசிங்கமாகப் போய்விடும்.
 பத்திரிகைகளிலே எல்லாம் கேவலமாக எழுதுவார்கள்” என்று வாதாடியதோடு “மூத்த தலைவர்களை எல்லாம் கேட்டீர்களா?” என்று கேட்டேன். 
அதற்கு அவர் “அவர்களைக் கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக் கிறேன்” என்று சொன்னார். 
“நான் முடியாது” என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து “சரி, அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார்.
 உங்களில் யாருக்கு வசதிப்படுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கிக் கிழியுங்கள்” என்று சொல்லி விட்டு மேலே போய்விட்டார்.

டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே, திரு. ராகவானந்தம், திரு. மாதவன், திரு. எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட் கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், “யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?” என்று அவர் களிடத்திலே சண்டை போட்டேன்.

செல்வி ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார். 
வந்தவுடனே, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, “புறப்படலாம், நேரம் ஆச்சு” என்றார். 
மூத்த தலைவர்கள் யாருக்கும் அவர் வந்த வேகத்திலே தடுத்துச் சொல்ல துணிச்சல் இல்லை. அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற அவையிலே உட்கார வைத்துவிட்டு,
 “தோழமைக் கட்சி, காங்கிரஸ் கட்சி யிடத்திலே இதுபற்றி கேட்டீர்களா?” என்றேன். 
அவர், “எல்லோரையும் கலந்துதான் சொல்லுகிறேன்.
 இன்றைக்குச் சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது” என்று சொன்னார். 
நான் உடனே தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அறைக்குச் சென்று “இன்றைக்கு நாங்கள் எல்லாம் வெளிநடப்பு செய்வதாக இருக்கிறோம்.
 நீங்களும் எங்களோடு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்றும், அத்துடன், “இன்றைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களும் உள்ளேயிருந்து ஏதாவது உதவி செய்வீர்களா?” என்றும் மறைமுகமாகக் கேட்டேன். 
நேரிடையாகச் சொல்லாமல், அவர் “நான் புறப்படுவதற்கு முன்னாலேயே பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 8.30 மணிக்கு பேசிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு காவல் துறையின் மீது ஒரு கண்டன அறிக்கையைப் படித்துவிட்டு எங்களுடைய காங்கிரஸ் கட்சி வெளி நடப்பு செய்யப் போகிறது. இதுதான் எங்களுக்கு டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவு” என்று சொன்னார். 
செல்வி ஜெயலலிதா அவையில் உட்கார்ந்திருந்தார். 
நான் வேகமாக வந்து, “திரு. மூப்பனார் அவர்களிடத்திலே கேட்டேன். அவர்கள் எந்தவிதமான அசம்பாவிதமும் இங்கே நிகழ்த்து வதற்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் காரர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்” என்று சொன்னேன்.
 “மூப்பனார் எப்போதும் இப்படித்தான். எனக்கு விரோதமாகத்தான் அவர் சொல்லுவார். எனக்கு வேறு மாதிரித் தகவல் வந்திருக்கிறது” என்று கூறியதுடன் “நீங்கள் போய் ஏன் அவரிடத்தில் கன்சல்ட் செய்தீர்கள்?” என்றார். 
அதன் பிறகு அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன் றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும் திரு. கே.கே.எஸ்.எஸ். ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிறவரை, “இன்றைக்கு மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.”

-பன்னீர்செல்வம் அவர்களே, தீய எண்ணத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தச் சம்பவமாவது உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? 
திருநாவுக்கரசர் அவர்களும் அ.தி.மு.க.விலே உண்மையாக உழைத்து வெளியே வந்து இந்த நாட்டிற்கு உண்மை தெரியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக இதனை வெளியிட்டார்.


நான் இந்தப் பழைய உண்மைச் சம்பவங்களை வெளியிட்டால், நானும், தம்பி ஸ்டாலினும் தரம் தாழ்ந்து அறிக்கை விடுவதாகச் சொல்வதா முதலமைச்சருக்கு உள்ள அழகு? சட்டசபையைக் கூட்டுங்கள் என்றால், அது தரம் தாழ்ந்த செயலா? 
இந்த ஆட்சியிலே அப்படித்தானா? சட்டசபையைக் கூட்டும்படி நாங்கள் மட்டுமா கூறினோம்? மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடத்தான் பேரவையைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார்கள்? எதற்கெடுத்தாலும் தந்தை, தனயன் என்று பேசுவதா? ஏன், உங்களுடைய தம்பியைப் பற்றிய நிகழ்வுகளைச் சொன்னால் ஊரே சிரிக்குமே? 
கடந்த தீபாவளியின் போது பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் எல்லாம் யாரை வந்து சந்தித் தார்கள்? 
என்ன நடந்தது?
 வாரப் பத்திரிகையிலே அதைப் பற்றிய கட்டுரை வெளி வந்து எங்கும் நாற்றமெடுத்து எத்தனை நாளாயிற்று? 
அதற் கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லை, வகையில்லை. எனக்கா சவால் விடுகிறீர்கள்?

உங்களுக்குத் தெரியுமா? 
ஓமந்தூரார் மாளிகை யிலே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட போது, நான் அன்றாடம் அங்கே சென்று பணிகளைப் பார்வையிட்டு வந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அமருவதற்கு, முதலமைச்சர் அமருவதற்கு எவ்வாறு இடவசதி செய்யப்படு கிறதோ, அதுபோலவே அமைக்கப்பட வேண்டு மென்று கூறியவன் நான்! 
அது மாத்திரமல்ல; எதிர்க் கட்சித் தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த அறையினை நானே சென்று பார்த்து, அது அளவிலே சற்றுச் சிறிதாக இருந்தது என்பதால், அதனை மேலும் பெரிதாக்கிக் கொடுக்க வேண்டுமென்று கூறியவன் நான். தரத்தைப் பற்றி என்னிடமா பேசுகிறீர்கள்?
தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் 8-2-2013 அன்று நடைபெற்ற போது, தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று, பின்னர் அந்தக் கட்சித் தலைமைக் குக் கட்டுப்படாமல் வெளியேறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் (தமிழழகன்) பேரவையில் பேசும்போது, தான் கட்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால், ஆட்சியினர் தன் தொகுதிக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்றும், மற்ற தே.மு.தி.க. உறுப்பினர்களும் தன்னைப் போல் முடிவு எடுத்தால், அவர்களும் பயன் பெறலாம் என்றும் வெளிப்படை யாக அழைப்பு விடுத்தார். அவரது அந்தப் பேச்சுக்கு தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இரு சாராருக்கும் இடையே தகராறு அப்போது ஏற்பட்டது. தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவகாரம் இது. இதில் தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பாகச் செயல்படும் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி, தே.மு.தி.க.விலே தொடர்ந்து உறுதியாக இருக்கின்ற ஆறு பேர் மீது பிரச்சினை எழுப்பப்பட்டு, உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

உரிமைக் குழுவும் ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வு செய்து தனது அறிக்கை யினைத் தாக்கல் செய்து விட்டது. அதன்படி அந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஓராண்டு காலத்திற்கு பேரவைக்கு வரமுடியாத அளவிற்குத் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலத்திற்கு அவர்களுக்கு ஊதியமும் கிடையாது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டு அவர்களின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சி ஒன்றுக்கு ஏற்பட்ட நிலை இது. 
இந்த அநாகரீக நிகழ்வுக்கு யார் காரணம்?

24-11-1986 அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், மொழிப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, பேரவைத் தலைவர்; தி.மு. கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அவர்களையும், மற்றும் எஸ். பாலன், ஏ. செல்வராசன், பரிதி இளம்வழுதி, பி. பொன்னுரங்கம், கோவை எம். ராமநாதன், தர்மபுரி ஆர். சின்னசாமி, ஆலந்தூர் ம. ஆப்ரகாம், மதுராந்தகம் சி. ஆறுமுகம், அரக்கோணம் வி.கே.இராசு ஆகியோரையும் பேரவை யிலிருந்து நிரந்தரமாக நீக்கி தனது தீர்ப்பினைப் படித்தார். 
எதிர்க்கட்சிகள் சார்பில் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட - அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கடைசிவரை முன்வரவில்லை.

மற்றொரு உதாரணம் - 1991ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியிலே ஜூலை 4ந்தேதி ஆளுநர் உரையாற்றினார். 
ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய போது, பா.ம.க. உறுப்பின ராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஒரு அறிக்கையை அவையிலே ஆங்கிலத்திலே படிக்கத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் அருகில் வந்து தாக்கினார்.
22-3-1999 அன்று ஒரு சம்பவம்! சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலே குத்தினார். அவர் அணிந்திருந்த மோதிரம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கிலே குத்தி ரத்தம் கொட்டியது. 
தாக்கிய அ.தி.மு.க. உறுப்பினர் அ.தி.மு.க.விலிருந்து பின்னர் விலகி கழகத்திலேயே சேர்ந்தார்.

இதோ மற்றொரு உதாரணம் :- 7-1-2011 அன்று தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றிய போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக் காவலர்களை கடுமை யாகத் தாக்கினார்கள். அதிலே ஒருவர், அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளைப் பறித்து அவர்கள் முகத்திலேயே அடித்தார். 
அந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே அப்போதே வெளிவந்தன. 
ஆளுநர் உரையாற்றிய போது அத்துமீறிச் செயல்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்பது பேரை மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ அல்ல; அந்தத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் திரு. இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
 அதை எதிர்த்து அ.தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 
ஆனால் அதற்கு அடுத்த நாள் என்ன நடந்தது தெரியுமா?

முதல் அமைச்சராக இருந்த நான் மறுநாள் பேரவையில் கூறும்போது, “பேராசிரியர் உள்ளிட்ட பத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை - அ.தி.மு.க. ஆட்சியிலே நீக்கப்பட்டவர்களை மீண்டும் அந்த ஆட்சியில் அனுமதிக்கவில்லை. 
ஆனால் வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டு மென்று அண்ணா வழியிலே நடைபெறுகின்ற இன்றைய தி.மு.கழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தேன்.

மற்றொரு நிகழ்ச்சி. 18-10-2007 அன்று காலை உள்ளாட்சித் துறை அமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின், ஒரு உரிமை மீறல் பிரச்சினை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். 
அப்போது அவையில் இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக எழுந்து பயங்கரமாக கூச்சலும், குழப்பமும் விளைவித்து, அவரைப் பேச விடாமல் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண் டிருந்தார்கள். 
மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளை விட்டுக் கும்பலாக எழுந்து, பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள். பேரவைத் தலைவர் பலமுறை அவர்களை இருக்கைக் குத் திரும்புமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும் அவர்கள் திரும்பாத காரணத்தினால், பேரவைத் தலைவர் அவைக் காவலர்களை அழைத்து, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். 
அப்போது திருப்பரங் குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் தன்னை அப்புறப்படுத்த வந்த காவலர் பி. மதிவாண னின் தொப்பியைப் பிடுங்கி, பேரவைத் தலைவர் மீது தூக்கி எறிந்தார். அதை அவையின் உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள்.
 பேரவைத் தலைவரையே தாக்கிய அந்தச் செயலுக்காக தி.மு. கழக ஆட்சியில் முதலில் ஆறு மாத காலத்திற்கு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போதிலும், நான் உடனடியாகத் தலையிட்டு அடுத்த கூட்டத் தொடரின் முதல் பத்து நாள்களுக்கு மட்டும் நீக்கம் செய்தால் போதும் என்று கூறி அவ்வாறே கடைப்பிடிக் கப்பட்டது. 
இது தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற மற்றொரு உதாரணம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த் அவர்களையே பத்து நாட்களுக்கு பேரவை நடவடிக்கை களில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சி வேறு எப்போதாவது நடந்தது உண்டா?
 அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றது.

13-11-2008 அன்று தி.மு.கழக ஆட்சியில் நான் அவையிலே இல்லாத நேரத்தில் - பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து - “அவர்கள் மின்சார வாரிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டு விட்ட காரணத்தால், அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே” என்று எண்ணி - நானே எதிர்க் கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசிட முயற்சித்து - அது கிடைக்காத காரணத்தால் - ஆளுங்கட்சியைச் சேர்ந்த தம்பிகள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு - எதிர்க் கட்சித் தலைவரின் அறைக்கே சென்று அ.தி.மு.க.வினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன்.
 மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியிலே பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களையெல்லாம் கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையிலேயே அழைப்பு விடுக்கவும் கேட்டுக் கொண்டேன். 
அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார்.

25-3-1989 அன்று பேரவையில் நடைபெற்றது பற்றி நண்பர் திருநாவுக்கரசு கூறியதை இந்தக் கடிதத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். 
நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கிய போது நடந்தது என்ன?
 எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எழுந்து, “முதல் அமைச்சர் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவர் நிதிநிலை அறிக்கையைப் படிக்கக் கூடாது” என்று கூறி, என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கிட முற்பட்டார். 

அவருக்குத் துணையாக அ.தி.மு.க. உறுப்பினர்கள், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு “படிக்காதே, படிக்காதே” என்று கூச்சலிட்டனர். 
அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் என் கையிலிருந்த நிதிநிலை அறிக்கைப் புத்தகத்தைப் பிடித்திழுத்து கிழித்தெறிந்தார். 
அதைத் தடுக்க முனைந்த போது என் முகத்தில் குத்தி, மூக்குக் கண்ணாடி கீழே நொறுங்கி விழுந்தது. அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் ஒலிபெருக்கிக் கம்பியால் தாக்கி, ரத்தம் ஒழுகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

கொடூரமான இவ்வளவு பெரிய சம்பவத்திற்கே அப்போது என்ன தண்டனை வழங்கப்பட்டது தெரியுமா? கலவரம் செய்த அ.தி.மு.க. உறுப்பினர் களை ஒரு வார காலம் தற்காலிக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஆனால் 27-3-1989 அன்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவராக இருந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், 
அந்தத் தற்காலிக நீக்கத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையொட்டி, நான்;

“எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ, இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையிலே இந்தப் பிரச்சினையை நான் அணுகுகிறேன். 
அன்றையதினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக கொந்த ளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட் டேன். 
இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். 
இதனை அப்போது “பாரத ரத்னா” சி. சுப்ரமணியம் அவர்களே ஏடுகள் வாயிலாகப் பாராட்டியிருந்தார்.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமலும், ஏன் கையெழுத்துப் போடாமலும் கூட இருந்தார்.
 ஒரு உறுப்பினர் குறிப்பிட்ட இத்தனை நாட்களுக்கு மேல் சட்டசபைக்கு வராமல் இருந்தால், அவருக்குப் பதவி போய்விடும். அப்போது அ.தி.மு.க. சார்பில் இதே பன்னீர்செல்வம், ஜெயலலிதா தொடர்ந்து பேரவை உறுப்பினராக நீடிக்க தீர்மானம் கொண்டு வர முனைந்த போது, தி.மு.க. நினைத்திருந்தால், அந்தத் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். 
ஆனால் தி.மு.கழகம் அதற்கே உரிய பெருந்தன்மை யோடு ஜெயலலிதா அவைக்கு வராமல் இருந்ததை ஏற்றுக் கொண்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற உதவியது என்பதை அனைவரும் அறிவர்.

ஏன், அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., கழகம் பிரிந்த போது, பேரவைக்கு வராமல் எத்தனை நாட்கள் இருந்தார்? 
ஜெயலலிதா எத்தனை கூட்டத் தொடருக்கு வராமல் இருந்தார்? 
ஏன், இப்போதும் நான் பேரவைக்கு வருவதைப் பற்றி ஏற்கனவே இரண்டு முறை தெரிவித்திருக்கிறேன். 
என் னுடைய உடல் நிலை காரணமாக நான் அமருவதற்கேற்ப இட வசதி செய்து தந்தால் நான் பேரவைக்கு வரத் தயார் என்று கூறிவிட்டேன். 
தை ஏற்படுத்திக் கொடுக்க முன் வராத அ.தி.மு.க. அரசு, நான் ஏன் பேரவைக்கு வரவில்லை என்று கேட்பதற்கு ஏதாவது தார்மீக நியாயம் என்ற ஒன்று இருக்கிறதா?

இறுதியாக சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், பேரவைக்கு வரட்டும் என்கிறார் பன்னீர்செல்வம்! 
பன்னீர்செல்வம் என்று உங்களுக்குப் பெயர் இருப்பதைப் பார்த்து, ஒரு காலத்தில் உங்களைப் பற்றிய நல்ல எண்ணம் எனக்கு இருந்தது. கறுப்புக் கலரிலே உள்ள ஒருவருக்கு “வெள்ளையன்” என்று பெயர் வைப்பதைப் போன்றதுதான் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. 
சட்டமன்றத்திற்கு வந்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறதா என்றா கேட்கிறீர்கள்! நான் பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவத்சலம், சி. சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன், ஜி.கே.மூப்பனார், கே.வினாயகம், பொன்னப்ப நாடார், எம்.கல்யாணசுந்தரம், பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், உமாநாத், கே.டி.கே. தங்கமணி, அனந்த நாயகி, குமரி அனந்தன், மணலி கந்தசாமி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கோலோச்சிய பேரவையிலேயே இருந்து வாதம் செய்தவன்.
 எனது வாதத்தைக் கேட்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களே மறுநாள் வந்து பதில் கூறுவதாகச் சென்றதை மறந்துவிட வேண்டாம்!
 உனக்குத் தைரியம் இருந்தால் பேரவையில் நான் அமருவதற்கேற்ற இடத்தினை ஏற்பாடு செய்து விட்டு, எனக்குத் தகவல் அனுப்புங்கள்! 
அடிக்கின்ற காற்றின் வேகத்திலே கோபுரத்தின் உச்சியில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொள்ள வேண்டாம்!
 காற்று இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்தால் இலை எங்கே போய் விழும் தெரியுமா? முதலமைச்சர் என்பவர் “பினாமி”யாக இருந்தாலும்;
 “பிராக்சி”யாக இருந்தாலும், அந்தப் பொறுப்பில் இருப்பதால் நிதானமும் பண்பாடும் தேவை என்பதை அறிக! 
அதைப் பெறுவதற்கு முயலுக! ”
என கலைஞர் எழுதியுள்ளார்.


சீமான்:ஒரு ஈழப்பார்வை.

 ”ஈழத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும்  ஜெயலலிதாவின் சொம்பு தமிழன் சீமான் பற்றி ஈழ மக்கள் கருத்து என்னவாக இருக்கும்.சீமான் தாந்தான்  மாவீரன் பிரபாகரனின் தமிழக பதிப்பு என்று ஈழத்தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தினாலும் இங்குள்ள மக்கள் ஏமாந்தாலும் சீமானின் பருப்பு இலங்கைத்தமிழர்களிடம் வேகவில்லை. அங்குள்ளவர்களின் கருத்தை-ஈழ இணையத்தள கட்டுரை ஒன்றை பார்ப்போம்:”

சீமானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் !!

இலங்கைத் தமிழர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்காமல் சீமான் போன்ற இனவெறியர்கள் ஓயப்போவதில்லை.

 இலங்கைத் தமிழர்களிற்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையின் யதார்த்தம், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் உள்ள உலக அரசியல் நிலைமைகள் என்பவற்றை பற்றிய எந்தவிதமான அறிவுமின்றி இவர்கள் ஊளையிடுகிறார்கள்.

 இந்தியாவில் ஒரு பலவீனமான மத்திய அரசு அமையும் போது சரியாக அதே நேரம் தமிழ்நாட்டில் ஈழ மக்களிற்காக குரல் கொடுக்கும் இலட்சிய வெறி கொண்ட ஒருவனின் கீழ் முப்பத்தொன்பது பாராளுமன்ற ஆசனங்களும் கிடைத்தால் அந்த பலவீனமான மத்திய அரசை மிரட்டி அந்த இலட்சிய வேங்கை இலங்கைத் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்குமாம்.
"நல்ல காலம் பிறக்கப் போகுது" என்று குடுகுப்பைக்காரன் சொல்வது போல இருக்கிறதா?. 
என்ன செய்ய தமிழனின் தலையெழுத்து அப்படி. அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் மகிந்தாவை தண்டித்து தமிழ் மக்களிற்கு தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று நாடு பாய்ந்த  பிரதமரும், மந்திரிகளும் சொல்கிறார்கள்.
 பிரேமானந்தாவின் அருளாசி பெற்ற முதலமைச்சர் "இந்தியா அன்றி அணுவும் அசையாது, அவர்கள் மகிந்தாவை அசைத்து இலங்கைத் தமிழர்களிற்கு அதிகாரங்களை பெற்றுத் தருவார்கள் என்கிறார். இலங்கையில் ஒரு கும்பல் "ஏன் அங்கே இங்கே என்று திரிகிறீர்கள், உலகமே மகிந்தா தானே, மகிந்தாவை சுற்றி வந்தால் அவரே எல்லாம் தருவார்" என்று மகிந்தாவின் பின்பக்கத்தை கழுவுகிறார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் ஒரே நோக்கம் தான் யாரைப் பலியிட்டும் பணமும், பதவியும் பெறுவது தான் இவர்களின் ஒரே குறிக்கோள். கணவனைப் பறி கொடுத்த பெண்கள், தாய், தந்தையரை பறி கொடுத்து விட்டு யாருமற்று தனித்து விடப்பட்ட பெண்கள், குடும்பத்துடன் இருந்தாலும் வருமானம் இன்றி வறுமையில் வாடும் பெண்கள் என்று ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த கொடூரமான யுத்தத்தாலும், இலங்கை அரசின் புதிய பொருளாதார கொள்ளையினாலும் வீதிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் உடலை விற்று பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 சீமான்  அந்த பெண்களின் துன்பவாழ்வை சிங்களவனிற்கு உடலை விற்று பிழைக்கிறார்கள் என்று களங்கப்படுத்துகிறார். 
புலிகள் இயக்கம் ஒரு வலதுசாரி அமைப்பு. அது என்றைக்குமே முற்போக்கு, மார்க்சிச அரசியலை பேசியதில்லை. 
ஆனால் அதன் அடித்தளம் மார்க்சிச அரசியல் விஞ்ஞானத்தின் விளக்கத்தை, உண்மையை எடுத்து சொல்கிறது. புலிகளின் பெரும்பாலான போராளிகள் வன்னியின் ஏழை மக்கள். இனக்கலவரத்தின் போது மலையகத்தில் இருந்து வன்னிக்கு இடப்பெயர்ந்து வந்த மலையகத் தமிழ்மக்களின் பிள்ளைகள்.
 இழப்பதற்கு எதுவும் இல்லாத ஏழை மக்களே போராடுவார்கள் என்ற மார்க்கசிய வரிகளின் எடுத்துக்காட்டுகள். இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் அவர்கள். 
இன்று ஆயுதப்போர் முடிந்த பிறகு வாழ்க்கைக்கான போரில் அலைகடல் துரும்பாக அவதிப்படுபவர்கள் அவர்கள்.
 நடராசன் என்ற நாயுடனும், வைகுந்தராசன் என்னும் கனிமவள கொள்ளைக்காரனுடனும் சேர்ந்து நிற்கும் சீமான் சொல்கிறார் மலையக தமிழ்மக்கள் ஈழப்போராட்டத்தில் நிற்கவில்லையாம்.
வெளிநாட்டு உளவுநிறுவனங்களுடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்கள் பராக் ஒபாமா, டேவிட் கமரோன் போன்ற ஆயுதவியாபாரிகளை நம்பச் சொல்கிறார்கள். 
சோனியாவின் கண்களில் இலங்கைத் தமிழ்மக்களை நினைத்து ஈரம் இருக்கிறது என்றார்கள். 
பம்பாயில் பிழைப்புத் தேடி, தொழில் தேடிச் சென்ற தமிழ், மலையாள தொழிலாளிகளை எதிர்த்து சிவசேனா தொடங்கிய பால் தக்கரே என்ற என்ற இந்துத்துவ வெறியன் இலங்கைத் தமிழ்மக்களின் நண்பன் என்றார்கள்.
 குஜராத்தில் முஸ்லீம் மக்களைக் கொன்ற நரேந்திர மோடி தான் தமிழ்மக்களின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார்கள். இப்படி மக்கள் விரோதிகளுடன் கூடிக் குலாவும் புலம்பெயர் தமிழ்தேசிய வியாபாரிகளை தேசபக்தர்கள் என்று சொல்லுவதனால் சீமானிற்கு இலாபம் இருக்கிறது. ஏழை மலையக மக்களை போராளிகள் என்று சொல்லுவதனால் என்ன ஆதாயம் இருக்கப் போகிறது.
ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம் போன்றவர்கள் உலக வல்லரசுகளுடனும், சிங்கள பெருந்தேசியவாதிகளுடனும் சேர்ந்து செய்த அரசியலைத் தான் இவர்கள் போன்றவர்கள் ஜனநாயக, அகிம்சை அரசியல் என்கிறார்கள். 
அதன் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டமும் மறுபடியும் உலக வல்லரசுகளுடன் மர்ம விளையாட்டுக்கள் விளையாடி மறைந்து போனது. தமிழ் தலைமைகளின் அகிம்சை அரசியலும், ஆயுத அரசியலும் பாடி ஸ்ராங் போல காட்டி கொண்டாலும் வல்லரசுகளின் பின்னால் போகும் வீக்கான அத்திவாரத்தை கொண்ட ஒரே மாதிரியான கட்டிடங்கள். 
மக்களை நம்பாத ஒடுக்கப்படும் மக்களை இணைத்து போரிடாத எந்த போராட்டமும் எதிரிகளால் சுலபமாக அழித்து ஒழிக்கப்படும் என்பதை இவர்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை.
 அதனால் தான் மறுபடியும் முதலிலே இருந்து தொடங்குகிறார்கள். பலவீனமான இந்திய மத்திய அரசை இலட்சிய வேங்கை வேட்டையாடப் போகுது என்று அவரது தமிழ்ப்படங்களை போலவே லூசுத்தனமாக ஒரு கதை சொல்கிறார். 
ஜெயலலிதாவின் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அண்ணன் அவவின் காலில் விழுந்து பார்த்தார். 
ஜெயலலிதா இவரை கவனித்ததாக தெரியவில்லை. 
பின்பக்கத்தை கீழே எவ்வளவு கொண்டு போக முடியுமோ அவ்வளவுக்கு கீழே கொண்டு போய் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆகி விட்டார். 
 ஒழுங்காக ஒரு வசனம் பேசத் தெரியாதவன் எல்லாம் முதல் மந்திரி ஆகும் போது லவுட்ஸ்பீக்கரை விழுங்கியது போல கதறும் அண்ணன் சீமான் முதலமைச்சர் ஆகாமல் இருக்கிறாரே.
 அதனால் தான் தமிழ்நாட்டின் முப்பத்தொன்பது பாராளுமன்ற தொகுதிகளையும் ஒரு இலட்சிய வேங்கை ஒரு நாள் அடிச்சுப் பிடிக்கும் என்று உறுமுகிறார்.
 பாவம் அவரும் எவ்வளவு நேரம் தான் வலிக்காதது மாதிரியே நடிக்க முடியும்.

நன்றி:http://ndpfront.com/
==============================================================================================

புதன், 26 நவம்பர், 2014

செவ்வணக்கம் மாவீரனுக்கு.

விதைகள் அனைத்தும் மரமாவதில்லை.

மனிதர்கள் அனைவரும் மாமனிதர்கள் ஆவதில்லை.

கொள்கைவாதிகள் அனைவரும் வீரர்கள் ஆனதில்லை.

வீரர்கள் எல்லோரும் மாவீரர்களாவதில்லை.

மாவீரர்கள் எல்லோரும் பிரபாகரன் ஆக கருக்கொள்வதில்லை.

செவ்வணக்கம் மாவீரன் பிரபாகரனுக்கு.

"கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை" 

                                         --      விக்கிலீக்ஸ்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம்.
ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.
அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
 அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறித்து அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை.
இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும்,
 இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
=================================================================================================================================

செவ்வாய், 25 நவம்பர், 2014

மக்கள் கோவணத்தை உருவி...


அதானிக்கு பரிவட்டம்..? 
=======================
”இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம்கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டுகாலமாக திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம்விட்டுள்ள தனியார் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமத்திற்கு இன்னுமொரு ரூ.6,200 கோடி பணத்தை கடனாக வாரி வழங்க பாரத ஸ்டேட் வங்கி ஒப்புக் கொண்டிருக்கிறது. ”
இதை நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
நாட்டு மக்களின் சேமிப்புப் பணத்தை பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இப்படி சூறையாடுகிற மத்திய பாஜக அரசின் கொள்கையை எதிர்த்தும், வங்கித்துறை உள்பட ஒட்டுமொத்த நிதித்துறையையும் சீர்குலைவு பாதையில் தள்ளிவிட முயற்சி மேற்கொண்டுள்ள மோடி அரசைகண்டித்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிசம்பர் 2ம்தேதிமுதல் 5ந்தேதி வரை நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிசம்பர் 2ந்தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர் 1ந்தேதி வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன.

கள்ளத்தனமான பேரம்
இதையொட்டி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
’ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம்தொடங்கவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி 6200 கோடிரூபாய்களை வாரி வழங்கிட ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. 
இப்பேரத்தின் கள்ளத்தனம் பலரது புருவங்களை உயரச் செய்திருக்கிறது.

அதானிகுழுமத்தின் நிலுவையிலுள்ள மொத்தகடன் என்பது இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் 72,732 கோடி ரூபாய் ஆகும். 

இதில் பெரும்பாலான தொகை இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்டவையே ஆகும். 

இப்போது கூடுதலாக கிட்டத்தட்ட ரூ.6200 கோடி ரூபாய் அளிக்கப்படுவது என்பது பாரத ஸ்டேட் வங்கியின் முதுகை முறித்திடும் நடவடிக்கையாகவே அமைந்திடும்.

கடன் தர மறுத்த தனியார் வங்கிகள்.

சிட்டி குழுமம், மார்கன் ஸ்டேன்லி, ஜே.பி. மார்கன், எச்எஸ்பிசி, பார்க்லேய்ஸ், சேஸ்-மன்ஹாட்டன், கோல்ட்மேன் சாச்சே, டட்ச் வங்கி, ஸ்காட்லாந்து ராயல்வங்கி, கிரெடிட் அக்ரிகோல் ஆகிய சர்வதேச பகாசுர நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இத்திட்டத்திற்காக கடன் அளித்திட மறுத்துள்ளபோது, பாரத ஸ்டேட் வங்கி இக்கடனை வழங்கிடப் பாய்ந்தோடுகிறது. 
வெளிநாட்டில் செயல்படுத்தப்படவுள்ள ஓர் திட்டத்திற்கு இதற்கு முன்னெப்போதும் எந்த ஒரு இந்திய வங்கியாலும் அளிக்கப்படாததொரு மிகப் பெரிய தொகையை வழங்க காட்டப்படுகின்ற அவசரம் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது.
அனைத்து பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனின் அளவு அதிகரித்து வரும் வேளையில், பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடனின் அளவும் அதிகரித்து வரும் வேளையில், அதானி குழுமத்திற்காக நடத்தப்படும் இந்த பேரம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

மோடியின் பயணமே காரணம்.

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சமீபத்தில் பிரதமர் பயணம் மேற்கொண்டபோது, அவரோடு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்டோர் அடங்கியவர்த்தகக் குழுவும் பயணித்தது. 
இப்பயணத்தின்போது, குயின்ஸ்லாந்து மாகாணஅரசின் பிரதமர் கேம்ப்பெல் நியூமேனை பிரதமர் சந்தித்தார். 
ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தின் ரயில் மற்றும் துறைமுக கட்டமைப்புத் திட்டங்களில் குறுகிய காலத்திற்கு குறைந்த அளவிலான முதலீட்டை குயின்ஸ்லாந்து அரசு செய்திடுவதற்கான உத்தரவாதத்தினைப் பெறஇந்த சந்திப்பு வழி வகுத்துள்ளது.
இப்பின்புலத்தில் அதானி குழுமம் மற்றும் பாரதஸ்டேட் வங்கி இடையேயான இந்த பேரம் பெருத்த சந்தேகத்தினை எழுப்புகிறது.

மோசடித் திட்டம்.

வர்த்தக ரீதியாக இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படக் கூடிய ஒன்றல்ல. இத்தகைய திட்டங்களுக்குத் தேவைப்படுகின்ற நிதியை அளிக்கப் போவதில்லை என ஏற்கனவே சர்வதேச அளவிலான எட்டு மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 இச்சூழலில் ஆஸ்திரேலியாவின் கர்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தோண்டிடும் நிலக்கரியில் மூன்றில் இரண்டுபங்கினை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதாகக் கூறும் அதானிகுழுமத்தின் திட்டமானது ஒரு கேலிக்கூத்தே.
அதிக செலவு பிடிக்கின்ற நிலக்கரி இறக்குமதியின் வாயிலாக இந்தியாவில் தனது எரிசக்தி பிரச்சனைக்குத் தீர்வைக் காண இயலாது என ஆஸ்திரேலியாவின் எரிசக்தித் துறை அமைச்சரே தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இதுவும் `வாராக்கடன்’
ஆக, அதானி குழுமம் துவங்கவுள்ள நிலக்கரிச் சுரங்கத் திட்டமானது “வர்த்தக ரீதியாக வெற்றி பெறக்கூடிய ஒன்றல்ல” எனில், பாரத ஸ்டேட் வங்கி அளித்திடவுள்ள 6200 கோடி ரூபாய் கடனும் வாராக் கடனிலேயே போய்ச் சேர்ந்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
“பொதுத்துறை வங்கிகளின் லாபம்அனைத்தும் அவற்றில் பணியாற்றிடும் ஊழியர்களுக்கு மட்டுமேயானது அல்ல“என முன்னாள் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய லாபங்கள் எல்லாம் வாராக் கடன் என்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்கைக்கு தாரைவார்க்கப்பட வேண்டியவையே என்ற அர்த்தத்திலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும். இதற்கான கொள்கையையே தற்போது மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களும் அடிபிறழாது பின்பற்றுகின்றனர். 
மேலும், இக்கொள்கைகளை மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படுத்திட முனைகின்றனர்.

ஆனால், தாங்கள் அல்லும்பகலும் அரும்பாடுபட்டு சம்பாதித்து, பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்துள்ளசேமிப்பை அதானிகளும், அம்பானிகளும் கொள்ளையடித்துச் செல்ல ஒருபோதும் இத்தேசத்தின் எளிய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
 எனவே, அரசியல் அதிகாரத்தில் உள்ளோரும், அவர்களுக்குப் பிரியமான கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்கு எதிராக வங்கித்துறையைச் சார்ந்த அனைத்து ஊழியர்களும் ,பொது மக்களும் போராட அழைத்துள்ளது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் .

எளியவர்கள் சொந்த தொழில் ந்டத்த 50000 ரூபாய் கடன் கேட்டாலே பல அலைக்களிப்புகளை சந்திக்கையில் ஏற்கனவே 72 ஆயிரம் கோடிகளை கடனாக வங்கிகளில் வாங்கிக்கொண்டு வராக்கடனாக மாற்றிட முயற்சிக்கிறது அதானி குழுமம்.

வீட்டில் இருக்கும் கொஞ்சம் தங்கத்தை வைத்து கடன் வாங்கி அவசரத் தேவைகளை சமாளிக்கும் மக்கள் கடனை செலுத்த வழியில்லாவிட்டால் அந்த ஒரே நகையையும் ஏலம் விடும் வங்கிகள் இவ்வளவு பெரியத் தொகையை கைகழுவுவது எப்படி?

அதை விட கேவலம் மீண்டும் 62 ஆயிரம் கோடிகளை அதே ஏமாற்றுக்கார அதானிக்கு கடன் என்ற பெயரில் அள்ளிக் கொடுப்பது.எவ்வளவு பெரிய பித்தலாட்ட மோடி வித்தை.?

இவ்வளவு ஆயிரம் கோடிகளை அள்ளி வீசச் செய்யும் மோடி,பாஜக இதில் கொஞ்சம் கூட ஆதாயம் இல்லாமலா இவ்வளவு மோசடி வேலைகளுக்கு துணை போவார்கள்?
===========================================================================

மானிய ஒழிப்பும்,

 கார்ப்பரேட் மணியமும்.

கிராமங்களில் அட்டூழியம் செய்கிறவனைப் பற்றி, “எல்லாம் அவனுடைய மணியமாப் போச்சு,” என்று புலம்புவார்கள்.
 சமையல் எரிவாயுவுக்கான அரசாங்கத்தின் மானியம் விலக்கிக்கொள்ளப்படுவதன் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மணியம் இருக்கிறது.
அரசுக்கு ஏற்படுகிற இழப்பைத் தடுப்பதற்காகத்தான் சமையல் எரிவாயு மானியம் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிச்சந்தை விலையிலேயே இனி எல்லோருக்கும் விற்கப்படப்போகிறது என்று மத்திய அரசு கூறுகிறது. மக்களுக்கு இதனால் ஏற்படும் சுமையை ஈடுகட்ட அந்தக் கூடுதல் தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிடும் என்றும் சொல்கிறார்கள்.
மக்கள் வாங்குகிற கேஸ் சிலிண்டர் களுக்காக அரசாங்கம் தருகிற மானியத் தொகை இப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
அதே அரசாங்கப் பணத்தை இனிமேல் மக்களின் வங்கிக்கணக்கில் போட்டுவிடு வார்கள் என்றால், எப்படி அரசுக்கு ஏற்படுகிற இழப்பு தடுக்கப்படும்?
 இந்த “லாஜிக்” என்ன என்று மக்களுக்கு மத்திய அரசு விளக்கட்டும்.முதலில் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து கேஸ் சிலிண்டரை வாங்க வைத்து, அதற்காக வங்கிக்கணக்கில் கூடுதல் செலவுக்கான பணத்தைப் போடுவது போல் காட்டிக்கொண்டு, எதிர்காலத்தில் அப்படிப் பணம் போடுவதை நிறுத்துகிற ஏற்பாடுதான் இது. 
அதன் மூலம் அனைத்து மக்களும் வெளிச் சந்தையிலேயே, அப்போதைய சந்தை விலையிலேயே தொடர்ந்து கேஸ் வாங்க வைக்கிற தந்திரம்தான் இது.கார்ப்பரேட் நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறுகிறபோது, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இப்படித்தான் பெரு முதலாளிகளைக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் எதற்காக அரசாங்கத்திற்கு மானியத்தை வெட்டச்சொல்லி நிர்ப்பந்திக்க வேண்டும்?


மக்களுக்கு நாமம் தயாராகிறது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் பல ஊர்களில் தங்களுடைய சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறக்கின்றன.
மக்கள் மானிய விலையில் அரிசி, கோதுமை, காஸ் என்று வாங்குகிறபோது, அதனால் அந்த நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் குறுகிய அளவிலேயே இருக்கின்றன.
மக்களை மானிய விலையில்லாமல் வெளிச்சந்தை விலையில்தான் வாங்கி யாக வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளிவிட்டால், மானியக் கேடயம் இல்லாத நிலையில் தனியார் பிடியில்தான் மக்கள் சிக்குவார்கள். 
அந்த நிறுவனங்களின் வியாபாரமும் லாபக் கொள்ளையும் பல மடங்கு அதிகரிக்கும். இப்படி கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டு செய்கிற இலக்கோடுதான், பலவிதமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு மானியங்களை ஒழித்துக்கட்டுவதற்கான மனியம் நடக்கிறது.மக்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காக, பணக்காரர்கள் எதற்காக மானிய விலையில் கேஸ் வாங்க வேண்டும் என்பதாக நிதியமைச்சர் பேசுகிறார். 
“நான் எதற்காக மானிய விலையில் காஸ் வாங்க வேண்டும்,” என்று நேர்மையே உருவெடுத்துவந்தது போல் கேட்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. கேட்பதற்குக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது.

 ஆனால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் யார் என்பதை வரையறுப்பதில் எப்படி புள்ளிவிவரத் தில்லுமுல்லுகள் நடத்தப்படுகின்றன என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
வறுமையை ஒழிப்பதற்கு மாறாக, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துககாட்டுகிற மோசடி அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டு வந்திருக்கிறது. மற்றபடி பெரும் பணக்காரர்கள் ரேசன் கடையில் நின்று அரிசி கோதுமை வாங்குவதில்லை, மானிய விலை கேஸ் வாங்குவதில்லை.
உண்மையிலேயே அந்தப் பெரும்பணக் காரர்கள் ஆதாயமடைவதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றால், அவர்களுக்குத் தரப்படுகிற பல லட்சம் கோடி வரிச் சலுகைகளைஅரசு விலக்கிக்கொள்ளட்டும்.
 2005-06முதல் இன்று வரையில் சுமார் 36.5 லட்சம் கோடி ரூபாய் அவர்களுக்கு வரிச் சலுகையாகவும் வரித் தள்ளுபடியாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. 
இதுவும் மானியம் தானே?
 அதை நிறுத்தினால் இப்படி மக்களுக்கான மானியத்தில் கை வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. 
அதற்கு இவர்கள் தயாரா?
அடுத்து, எரிவாயுவுக்கான அரசுப் பணம் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும் என்றும், பின்னர் எல்லோரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என அரசு கூறுகிறது. 
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாத சட்டவிரோத ஏற்பாடுதான் ஆதார் அட்டை.
 உச்சநீதிமன்றமும் அதை மக்களுக்கான சேவைகளோடு இணைக்கக்கூடாது என்று ஆணையிட்டிருக்கிறது.
ஆக, நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத சட்டவிரோத, நீதிமன்ற விரோத ஏற்பாட்டைத்தான் மக்கள் மீது திணிக்கிறார்கள்.
குடிமக்களின் உடல் சார்ந்த அந்தரங்க அடையாளங்களைத் தெரிந்துகொள்கிற அதிகாரம் அரசுக்கு இருக்கலாகாது.
 அது பிற்காலத்தில், அரசின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடியவர்களை முடக்குவதற்கும் அடக்குவதற்குமான ஏற்பாடுதான்.

அனுமனுக்கே ஆதார் அட்டை தந்த ராம ராஜ்யம்?
 உலக ஆக்கிரமிப்பு சக்திகளின் தேவைக்காகவே இந்த ஏற்பாடு. 
மக்கள் என்பவர்கள் ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் உள்ள பிறவிகள்.

அவர்களை வெறும் நம்பர்களாகவும் டிஜிட்டல் பிம்பங்களாகவும் மாற்றுவதுதான் இந்த ஆதார் அட்டை. 

ஆனால் இது இல்லாவிட்டால் எதுவுமே கிடைக்காது என்பது போன்ற மனநிலையையும் பதற்றத்தையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள். மக்களிடம் உண்மைகளை உரக்கச் சொல்லியாக வேண்டும்.

 உண்மை நோக்கங்களை உணரும் மக்கள் சக்திதான் அந்த பிம்பங்களைத் தகர்க்கும்.
=======================================================================


திங்கள், 24 நவம்பர், 2014

ஊழலின் வேர்கள் எதுவரை?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தமு.பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது எருக்கன்சேரி என்ற இடத்தில் நில ஆர்ஜிதம் செய்ததில் ஊழல் நடந்தது என்று சட்டமன்றத்தில் கருணாநிதி பேசினார். 

அது குறித்துவிசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுநில ஆர்ஜிதம் செய்ததில், ஊழல் நடைபெற்றுள் ளது என்று கண்டறிந்தது. இதற்குள் 1967ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் அமர்ந்தது. 
எருக்கன்சேரி ஊழல் குறித்து மேல் நடவடிக்கை தேவையில்லை என்று திமுக முடிவு செய்தது.  திமுக ஆட்சியின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் எழுந்தன. மஸ்டர் ரோல் ஊழல், கோதுமைபேர ஊழல், வீராணம் குழாய் ஊழல், பூச்சிமருந்து ஊழல் என பட்டியல் நீண்டது. 
1972ல் திமுகவிலிருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆர்., குடியரசுத் தலைவரிடம், கருணாநிதியின் ஊழல்களை பட்டியலிட்டுக் கொடுத் தார்.
அன்றைய மத்திய அரசு அவற்றை வாங்கிவைத்துக்கொண்டு, நான்கு வருடம் கழித்து, 1976-ல் திமுக ஆட்சியை கலைப்பதற்காக அந்த ஊழல்பட்டியலை பயன்படுத்திக் கொண்டது. 
கருணாநிதியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்கு மத்திய அரசு நீதிபதி சர்க்காரியா குழுவை அமைத்தது.
 அக்குழு ஊழல்கள் குறித்து விசாரித்து, ஊழல்கள் நடைபெற்றது உண்மைதான், அவை விஞ்ஞானப் பூர்வமாக நடைபெற்றுள்ளன எனவும் சான்றுஅளித்தது. இந்த அறிக்கையின் மீது சட்டப் படியான நடவடிக்கையை அன்றைய மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. 
மாறாக இதை வைத்துக்கொண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவ்வப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையை மிரட்டி, அரசியல் ஆதாயம் அடைந்துவந்தார்.

திமுகவிலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி அமைத்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி. ஆர் ஆட்சி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

 பல்கேரிய நாட்டுடன், கப்பல் பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என சட்டமன் றத்தில் அவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், எரிசாராயத்திற்கு அனுமதி வழங்குவதில் நடைபெற்ற ஊழலில்,தமிழ்நாடு அரசிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்இழப்பு ஏற்பட்டது எனவும் குற்றம்சுமத்தப் பட்டது. 

உச்சநீதிமன்றம் தலையிட்டு, அந்நிய மதுபான மொத்த விற்பனைக்கு, தனியாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை ரத்து செய் தது. 

இதன் தொடர்ச்சியே தமிழ்நாட்டில் இன்று செயல்படும் டாஸ்மாக்கின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 சில நீதிமன்றங் களிலும் விசாரிக்கப்பட்டன. 
டான்சி நில ஊழல், பிளசன்ட் ஸ்டே விடுதி கட்ட அனு மதி வழங்கியதில் ஊழல் என்பவை ஓரிரு வழக்குகளாகும்.
அவர் முதலமைச்சராக இருந்த 1991-96 வரை 5 ஆண்டுகளில், வருமானத்திற்கு மேல் ( ஒரு ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்ட முதலமைச்சர்) கோடிக் கணக்கில், சொத்துசேர்த்த வழக்கில் தற்போது நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 
இந்த வழக்கு நடைபெற்ற 18 ஆண்டுகாலத்தில், 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது திமுகவே.
இந்தவழக்கில், பல அரசு தரப்புசாட்சிகள் பிறழ் சாட்சிகளாகவும் மாறியுள்ளன. 
அப்படி பிறழ் சாட்சிகளாக மாறியஅதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசு விதிமுறைகள். 
அப்படி எந்த ஒரு அதிகாரி மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுத்த தாக தகவல் இல்லை. 
இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வெளிவந்தவுடன், திமுக தலைமை மௌனம் சாதித்தது கண்டு ஆச்சரியம்கொள்ள ஒன்றுமில்லை.
 ஏனெனில், ஜெயலலிதா வழக்கில் தண்டிக்கப்பட்டது ஜெயலலிதாவிற்கு வேண்டியப்பட்ட மூவரே. 
ஆனால் எதிர்நோக்கியுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தண்டனை பெறக் கூடியவர்கள், திமுக தலைமையின் உற்றார் உறவினர் என்று ஏராளமானோர் தீர்ப்பை எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர்.
 இதனால்தான் திமுக தலைமை ஆற அமரயோசித்து, ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்தை நிதானத்துடன் சொல்ல நேரிட்டது.

ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக்காலத்தை ஒரு சிலர் எளிதாக மறந்துவிடுகின்ற னர். 
ஒவ்வொரு மாவட்டத்திலும் சொத்துக் களை வாங்கி குவிப்பதில், மக்களை மிரட்டு வதில், குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடந்துகொண்டமுறை தமிழக மக்களைஅச்சத்தில் அன்று, உறையவைத்தது.
இதை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா ஆட்சியின் அத்து மீறலைதுணிச்சலுடன் வெளிப்படுத்தியது மார்க் சிஸ்ட் கட்சி ஒன்றே ஆகும். 
ஜெயலலிதாவின் ஊழல்களை பட்டியலிட்டு, அச்சிட்டு, இலட்சக்கணக்கில் வீடு வீடாகச் சென்று விநியோ கம் செய்தது மார்க்சிஸ்ட் கட்சியே ஆகும்.
1996-2001 வரை திமுகவும், 01-06 வரை அதிமுகவும் 06-11 வரை திமுகவும் 11லிருந்து தற்போது வரை அதிமுகவும், மாறி மாறி ஆட்சிபொறுப்பை பங்கிட்டுக்கொண்டு வருகின் றன. 
இவை ஒன்றின் மீது ஒன்று ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்திக் கொண்டும், ஒருவர் மீது ஒருவர் வழக்குகள் தொடுத்துக்கொண்டும் வருகின்றனர்.
ஆனால் இவை எல்லாம் ஒரு நிழல்யுத்தமே ஆகும். 
வழக்குகளை விரைந்து நடத்த வோ, வழக்கிற்கு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்திற்கு அளித்திடவோ இவை தயாராக இல்லை.
 இருபது ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும் தமிழக மக்களுக்கு கண்கட்டிவித்தை காட்டி வருகின்றன. பல ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை போய்க்கொண்டிருக் கின்றது. 
ஒன்றிரண்டு மட்டுமே வெளி வந்துள் ளது. தமிழ்நாட்டில், மூன்றாவது மாற்று ஒன்று,ஆட்சிக்கு வருமென்றால், இந்த 47 ஆண்டு களில் திமுகவும், அதிமுகவும், இலைமறை, காய்மறைவாக செய்துள்ள ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

சமீபத்தில் தமிழ்நாட்டு மக்களை திடுக்கிடவைத்த ஆவின் பால் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் செல்வாக்கு கட்சிகள்பேதமின்றி உள்ளது. 
2001லிருந்து சென்னை மாநகருக்கு, கிராமப்புறங்களிலிருந்து கொண்டு வரப்படும், பால் லாரிகளை திண்டிவனத்திற்கு அருகில் நிற்க வைத்து, ஒவ்வொரு லாரியிலும், நாள் ஒன்றிற்கு, ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர் வரை பால் திருடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 
இதற்கு சூத்திரதாரியாக விளங் கிய வைத்தியநாதன் என்பவர் அதிமுக பிரமுகர்ஆவார்.
 இவருக்கு மட்டும், 83 பால் லாரிகள் சொந்தமாக உள்ளன.
இந்த அதிமுக பிரமுகர்திமுக ஆட்சிக்காலத்திலும், பால் கொள்ளை யை வெகு விமர்சையாக தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். 
10 வருடங்களாக, அமைச்சர் பெருமக்களின் கண்காணிப் பில் அதிகாரிகளின் அரவணைப்போடு, தினசரி பால் கொண்டுவரும் லாரிகளை நிறுத்திமின் மோட்டார் மூலம் பாலை திருடிக் கொண்டு, அதற்கு மாற்றாக தண்ணீர் கலந்துஅனுப்பப்பட்டுள்ளது. 
இதனால் ஆவின் பால் நிறுவனத்திற்கு ஏற்பட் டுள்ள இழப்பு ரூ.500 கோடி இருக்கும் என்றுஅதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக் கின்றன. 
ஆனால் ஆயிரம் கோடியையும் தாண்டும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின் றன.
சிபிசிஐடியின் முதற்கட்ட விசாரணை யில், தினசரி 1.5 இலட்சம் லிட்டர் பால் கொள் ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 முழு விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட, முதலைகளின் முழுத் தகவல்கள் கிடைக்கும் என நம்பலாம்.
தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளை என்பதும் இவ்விரு ஆட்சிக்காலங்களில் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது.
 மதுரை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக வெளிப்படுத்திய, கனிமவளக்கொள்ளை தமிழக மக்களின் புருவத்தை உயர்த்தியது. 
இதேபோல் தமிழகத்தின் எல்லா மாவட்டங் களிலும், குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை ஓரங்களில் கனிமங்கள் பல ஆண்டுகளாக கட்சி பேதமின்றி கொள்ளை போய்க்கொண்டிருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டி வந்துள்ளது. 
மதுரை மாவட்ட கிரானைட் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் ஒருவரை காப்பாற்ற இவ்விரு கட்சிகளும்எப்படிப் பாடுபட்டன என்பதை மக்கள் அறிவர்.தூத்துக்குடி கடல் பகுதியில் மட்டும் அறிந்திருக்கக் கூடிய தாதுமணல் கொள்ளை யில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இது வெளிவந்த பிறகும் கூட கொள்ளையர் களை காப்பாற்றும் முயற்சிகளிலேயே இவ்விரு கட்சிகளும் ஈடுபட்டன. சென்னைஉயர்நீதிமன்றத்தில், மணல் தொடர்பாக, கனிமக் கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் தற்போதைய அரசு மேற் கொண்டு வரும் நிலைபாடுகள் அரசு நலனை பாதுகாப்பதை விட கொள்ளையர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே உள்ளது என் றால் அது மிகையாகாது.
உச்சகட்டமாக, கனிமவளத் திருட்டை விசாரிக்க, இ.ஆ.ப அதிகாரி சகாயம் அவர்களை சென்னை உயர்நீதி மன்றம்நியமனம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது “பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது” என்பதையே நமக்கு உணர்த்துகிறது. 
மேல்மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடு கையில், அரசு நிர்வாகத்தின் அடிமட்டத்தில் துர்நாற்றம் எடுத்து வீசுகிறது.
 சாதாரண மக்கள்அரசு அலுவலகங்களுக்கு, குறிப்பாக காவல்நிலையங்களுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். 
ஒளிவு மறைவாக இருந்த லஞ்ச லாவண்யம் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அரசுநிர்வாகத்தில் கோலோச்சும் ஊழல், கும்பகோணம் பள்ளி தீ விபத்திலிருந்து, மௌலிவாக்கம் கட்டிட விபத்து வரை பல குழந்தை களை, அப்பாவி மக்களை பலிகொண்டுள்ளது.
இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களான கம்யூனிஸ்ட்டுகள் இன்று களத்தில் இறங்கியுள்ளனர். மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில், முதுபெரும் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டிலிருந்து இந்தியாவின் ஏழை முதலமைச்சர் என்று போற்றப்படும், மாணிக் சர்க்கார் வரை 10 முதலமைச்சர்கள், நூற்றுக்கணக்கான அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர் கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றி ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்கி வருகிறார்கள்.
                                                                                            -க.ராஜ்குமார்.
சுரன் 24112014
 சாரதா நிதி நிறுவன மோசடியில் அதிக பலன் அடைந்தவர் மம்தாவே என்று அவரது கட்சி எம்.பி யான குணால் கோஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குணால் கோஷ் எம்.பி., கொல்கத்தா நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது, ''சாரதா நிதி நிறுவன விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பயனடைந்தவர் மம்தா பானர்ஜிதான்.

அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கட்சித் தொண்டர்களின் கூட்டங்களை நடத்துகிறார். மம்தா ஒரு கோழை. அவரை என் முன்னாள் உட்கார வைத்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் என்னையும் அவரையும் சி.பி.ஐ. கூட்டாக விசாரிக்க வேண்டும்" 
-என்றார்.இதை மறைக்கவே மத்திய அரசை விமர்சித்து  அது தனக்கு எதிராக இருப்பது போலாவும்,அதை தாக்கி பேசியதால் அரசியல் பழி வாங்க  சாரதா ஊழலில் தன்னை கைது செய்ததாக மக்களிடம் காட்டிக்கொள்ள மம்தா நாட்கமாடுகிறார்.என்று குணால் கூறியுள்ளார்.
================================================================================

ஹோமி ஜஹாங்கிர் பாபா

இந்தியாவின் அணு ஆற்றல் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்த சிற்பியும், பன்முகத் திறமையும் கற்பனைத் திறனும் கொண்ட ஒரு நிர்வாகியும், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான ஹோமி ஜஹாங்கிர் பாபா ஒரு தீவிரமான தேசியவாதியும் கூட.
பாபா 1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியானதொரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். 
எல்ஃபின்ஸ்டன் கல்லூரி மற்றும் சயன்ஸ் ராயல் இன்ஸ்டிட்யூட்டில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அவருக்கு இயல்பாக அறிவியலில் இருந்த ஆர்வத்தின் காரணமாக,15 வயதிலேயே ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் தத்துவம் மீதான புத்தகம் உட்பட வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டார்.
இயற்பியல் மீதும் கணிதத்தின் மீதும் பாபாவுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927-ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார்.
 இந்த விஷயத்தில் பாபாவின் தந்தை இன்றைய பெரும்பாலான பெற்றோர்களைப் போலவே நடந்து கொண்டாலும் மகனின் விருப்பம் நிறைவேற தான் இடையூறாக இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். 
பொறியியல் படிப்பில் முதன்மையாகத் தேறினால் பாபா விரும்பிய துறையில் மேற்படிப்பு படிக்க உதவி செய்வதாக அவர் உறுதியளித்தார். 1930-ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதும், கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். 
என்ரிகோ ஃபெர்மி, கிரேமர்ஸ் போன்ற புகழ் பெற்ற இயற்பியலாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். 1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
1937-ல் ஹெய்ட்லருடன் இணைந்து “எலெக்ட்ரான் பொழிவுகளில் காஸ்கேட் கோட்பாடு” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
1939-ல் இந்தியா திரும்பிய அடுத்த ஆண்டில் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் காஸ்மிக் கதிர்கள் ஆய்வுத் துறையில் ரீடர் பதவி ஏற்றார். 1942-ல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேருமாறு வந்த அழைப்பினை பாபா நிராகரித்தார். இந்தியாவில் ஒரு மிகச் சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மாணிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. பாபாவின் தொலைநோக்குப் பார்வையும் தேசபக்தியும் அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா நிறுவனம்அமைய வழிவகுத்தது. 
இன்று அது கூஐகுசு உலகின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அணு ஆற்றலைப் பயன்படுத்துவதின் மூலமாகவே இந்தியாவின் ஆற்றல் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பது பாபாவின் நம்பிக்கை. 
1948-ல் அணு ஆற்றல் கமிஷனின் தலைவராக பாபா நியமிக்கப்பட்டார். பின்னர் டிராம்பேயில் அணு ஆற்றல் நிறுவனம் உருவாவதற்கு பாபாவே காரணமாக இருந்தார். 
அணு ஆற்றலில் இந்தியா சுயசார்புள்ள நாடாக வேண்டும் என்பதற்காக அவர் உழைத்தார். மற்ற நாடுகளில் இருந்த தொழில்நுட்பங்களிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ளலாமே தவிர, தன்னுடைய சொந்த வளங்களையும் விஞ்ஞானிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாபா வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் இருந்த இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டார்.
 இந்தியா வந்த விஞ்ஞானிகள் அவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக செயலாற்றத் தொடங்கினர்.
 அப்சரா, யுரேனியம் மற்றும் சிர்கோனியம் உலைகள், வான் டி கிராஃப் மற்றும் சைக்ளோட்ரான் கருவிகள் எல்லாம் ஹோமி பாபா இந்தியாவிற்குத் தந்த கொடைகள். 

1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 வயதே ஆன பாபா அகால மரணமடைந்தார்.

 இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரின் வாழ்வு இப்படி துயர மான முடிவாக ஆகிப் போனது.

  நன்றி:தீக்கதிர்,                                                               -- பேராசிரியர் கே. ராஜு
=================================================================================