வியாழன், 30 ஜூன், 2022

மோ(ச)டி மன்னன்

வ்வொரு வாரமும் ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதைப்போன்று, ஓவ்வொரு வாரமும் ஒரு மோசடி வெளியாகிறது. 

அந்த வரிசையில் இந்த வார வெளியீடு தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Limited)  நிறுவனம் செய்த மோசடி.
17 வங்கிகள் (Consortium) இணைந்து தந்த ரூ.34,615 கோடி கடனை மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் இயக்குநர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ கடந்த புதன்கிழமை (ஜுன் 17) வழக்கு பதிவு செய்துள்ளது. 
இதுவரை சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய வழக்கு இதுவாகும்.
2020 மார்ச் மாதம் யெஸ் வங்கியின் தலைமை செயல்அதிகாரி ரானா கபூர் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். 
அவரும், DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் இணைந்து செய்த மோசடியை சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்தன. 
அதன் பின்னர் ஏப்ரல் 2020-இல், கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் டெல்லி நீதிமன்றம் தந்த பிணையில் வெளிவந்தனர். அதற்கு இடைப்பட்ட  இரண்டு ஆண்டுகளில் பலமுறை நீதிமன்றங்களால் பிணை மறுக்கப்பட்டாலும் தீரஜ் வாதவான் சிறையில் இருந்த காலம் 9 மாதங்கள் மட்டுமே.
மீதமுள்ள 15 மாதங்களை, தீரஜ் வாதவான் நோய்களைக் காரணம்காட்டி மருத்துவமனைகளில் இருந்துள்ளார்.
 மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 10 மாத காலம் தங்கியிருந்த காலகட்டமும் இதில் அடங்கும். கூட்டுக் களவாணிகள் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வதுதானே தொழில் தர்மம். உனக்கு நான், எனக்கு நீ துணையாக.
இந்த மோசடி வெளிவராமல் இருந்திருந்தால் வாதவான் சகோதரர்களுக்கு நோய் வந்திருக்காது.
வாதவான் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கையோ, விதிமீறலோ புதிதன்று.
தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது (ஏப்ரல் 2020) மராட்டிய மாநிலத்திலிருந்து மகாபலிபுரத்திற்கு சொகுசு பங்களாவிற்கு சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் சகிதம் சொகுசு கார்களில் வந்திறங்கினர் வாதவான் குடும்பத்தினர்.
 ரூ.100-க்கு கத்திரிக்காய் வாங்கச் சென்றவர்களை விரட்டிவிரட்டி அடித்த போலீசு, வாதவான் குடும்பத்தினருக்கு சிறப்பு அனுமதி தந்தது. 
இதில் கேலிக்கூத்து என்னவெனில், மகாபலிபுரம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் யெஸ் வங்கி ரானா கபூருடன் இணைந்து செய்த மோசடி வழக்கில் விசாரணக்காக அழைத்தபோது கொரோனாவைக் காரணம்காட்டி விசாரணைக்கு செல்லவில்லை. 
மார்ச் மாதம் இருந்த நோய் அச்சுறுத்தல் ஏப்ரல் மாதத்தில் மகாபலிபுரத்திற்கு ஆடம்பரச் சுற்றுலாவிற்கு வந்தபோது இல்லை.
 ரூ.300 சம்பளத்திற்கு 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்துவந்த வடமாநில தொழிலாளர்களை நடக்கவிட்ட அரசுகள் 30,000 கோடி மோசடி செய்த வாதவான் சகோதரர்களை மூன்று மாநில எல்லைகள் கடந்து ராஜ மரியாதையோடு சொகுசு பங்களாவிற்கு அனுப்பி வைத்தன.
DHFL நிறுவனத்தின் சேர்மன் கபில் வாதவான் கைது செய்யப்படும் வரை,  அந்நிறுவனத்தின் அறிவுஜீவி முகமாக பல தொலைக்காட்சிகளில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை அவரை அறிவு ஜீவியாக காட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் தற்போது வில்லனாக காட்டுகின்றன. 
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, சி.சி.டீவி.யில் மாட்டும் வரை சாமியார், மாட்டிவிட்டால் போலிச் சாமியார் என்பதைப் போல தனியார்மயத்தில் மாட்டும் வரை அறிவு ஜீவி, மாட்டிவிட்டால் பிராடு. 
தனியார்மயத்தைப் பொறுத்தவரையில் மாட்டியவன் சிறைக்கு உள்ளே இருப்பான். மாட்டாதவன் வெளியே கோட்டு சூட்டு போட்டு இருப்பான். 
அவ்வளவு தான். தவறு செய்யாதவன் என்பவனில்லை. மாட்டாமல் தவறு செய்வதைக் கற்றுக் கொள் என்கிறது தனியார்மய பெருந்தத்துவம். தீரஜ் வாதவான் போல் திறமைசாலியாக இருந்தால், கைது செய்யப்பட்ட பின்னரும் சொகுசு மருத்துவமனையில் ஓய்வெடுக்கலாம்.
கபிலின் தம்பி தீரஜ் வாதவானும் சளைத்தவர் இல்லை. அண்ணன் அறிவுஜீவியாக அறியப்பட, தம்பி தீரஜ் திவான் மும்பை வட்டாரத்தில் பாபா திவான் என்று அறியப்பட்டவர்.
 பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு, 
பல சொகுசு கார்கள், எண்ணற்ற பாடி கார்டுகள் (தனிப் பாதுகாவலர்கள்) என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். முதலாளித்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால், “வாழ்ந்தா இவரை மாதிரி வாழனும்னு” எனும் அளவிற்கு வாழ்ந்தவர். யார் உழைப்பில்? 
யார் காசில் சொகுசு வாழ்க்கை?
வேர்வை சொட்ட, ரத்தம் சிந்தி உழைத்து, ரூ.1, ரூ.2 என மிச்சம் பிடித்து பாதுகாப்பாக இருக்கட்டும் என உழைக்கும் மக்கள் வங்கியில் போட்ட பணத்தில் சொகுசாக தின்று கொழுத்திருக்கிறார்கள் வாதவான் குடும்பத்தினர்.
மோசடி வழக்கு விவரங்களுக்குள் போக விரும்பவில்லை, பல வழக்குகளில் நாம் பார்த்த கதைதான். தொழில் நடத்துகிறோம் என்ற பெயரில் கடன் வாங்கி, பணத்தை திசை திருப்பி, கடனை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததுதான் கதை.
 விஜய் மல்லையா, முகுல் சோக்சி, நீரவ் மோடி, அனில் அம்பானி என பல பெயர்களில் வரும் ஒரே கதை. தனியார்மய உலகில் திரும்பத் திரும்ப வெற்றிகரமாக ஓடும் கதை.
யெஸ் வங்கி (Yes Bank), பஞ்சாப் – மகாராஷ்டிரா வங்கி (PMC Bank) சரிந்து கீழே விழ காரணமாக இருந்தவர்கள் வாதவான் குடும்பத்தினர் நடத்திய நிறுவனங்கள். 
அதற்கு துணையாக இருந்தவர்கள் யெஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரானா கபூரும், PMC வங்கியின் நிர்வாகிகள் சிலரும். இது தவிர யூனியன் வங்கி, எஸ்.பி.ஐ என ஏமாந்த வங்கிகளின் எண்ணிக்கை 17. ஏமாந்த ரூ.34,615 கோடி ஒருபோதும் திரும்ப கிடைக்காது. 
வாதவான் குடும்பத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 2012-இல் விஜய் மல்லையாவின் மோசடிகள் வெளி வந்தாலும், இன்று வரை விஜய் மல்லையா கைது செய்யப்படவிலலை. சொத்துக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவும் இல்லை. 
மல்லையோவோ இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து, இலண்டனில் தனது ஆடம்பர வாழ்வை தொடர்கிறார்.
யெஸ் வங்கி மோசடி வழக்கில் ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்டு, மே 2022-இல் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பிணையில் வந்த வாதவான் சகோதரர்கள் மீது யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா தந்த வழக்கில் தற்போது மீண்டும் குற்றச் சாட்டப்பட்டுள்ளனர்.
 மே 2022-இல் பிணை கிடைத்தாலும், பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதால், நீதிமன்றக் காவலில்தான் உள்ளனர். 
பல கோடி ரூபாய் மோசடி செய்தது வெளிப்படையாக தெரிந்தாலும், பிணை கிடைக்க சட்ட நுணுக்கங்கள் கிடைத்தைப் போன்று, தற்போது குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் ரூ.34,615 கோடி மோசடி வழக்கில் இருந்து வெளிவர சட்டத்தில் ஓட்டைகள் (அது தான் சட்ட நுணுக்கம்) கிடைக்காதா என்ன? 
எந்த சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகுல் சோக்சியும், விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் சிறைக்குள் வராமல் வெளி நாடுகளில் சுற்றுகிறார்களோ, அதே சட்ட நுணுக்கங்கள் வாதவான் சகோதரர்களுக்கு கிடைக்கும். சட்ட நுணுக்கங்களை கண்டுபிடிக்க திறமையான வழக்கறிஞர்களும் கிடைப்பார்கள். 
அதற்கான சாட்சி வாதவான் சகோதரர்களிடமே உண்டு.
ஆதாரம் 1:  ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை. காரணம் என்ன? 
மக்கள் பணத்தை தீரஜ் மோசடி செய்திருந்தாலும், இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு மோசடி செய்யவில்லை. மாறாக, அமைப்பை கட்டமைக்க உதவினார். வரவரராவிற்கு அந்த திறமை இல்லை. 
இந்த மோசடி அரசாங்களை எதிர்த்தார். எனவே ஏராளமான உடல் உபாதைகளோடு, சாகப் போகிற 81 வயதிலும் வரவரராவிற்கு சிறை. திரஜ்ஜிற்கு சொகுசு மருத்துவமனை.
ஆதாரம் 2: கபில் மற்றும் தீரஜ் வாதவனால் ஏமாற்றப்பட்ட வங்கிகள் அவர்களுக்கு எதிராக அக்டோபர் 18, 2019 அன்று லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டாலும், ஆறு மாதங்கள் கழித்தே கைது செய்யப்பட்டனர்.
கூடுதலாக DHFL நிறுவனம் பாஜகவிற்கு 27.5 கோடி  நன்கொடை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு அள்ளித் தந்த கருணை வள்ளல்களை கண்டிப்பாக பாஜக அரசு தண்டிக்காது.
கடந்த பிப்ரவரி மாதம் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் 22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குத் தொடர்ந்த போதும், இதுவரை நடந்த வங்கி மோசடி ஊழல்களில் இதுதான் மிகப் பெரிய மோசடி எனச் சொல்லப்பட்டது. 
அந்த சாதனையை தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் முந்திவிட்டது. தனியார்மயம் செய்துவரும் மெச்சந்தகுந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. எங்கும் எதிலும் தனியார்மயம் என்றாகிவிட்ட பின்னர், ஊழல்களின் அளவும் எண்ணிக்கையும் அளவில்லாமல் போய்விட்டன.
அடுத்தமுறை DHFL நிறுவன மோசடியை மிஞ்சி சாதனை படைக்கும் மோசடி வெளிவரும். அதற்கான அத்தனை தகுதியும் தனியார்மயத்திற்கு உண்டு. 
ஏனெனின் ஊழலின் ஊற்றுக் கண் தனியார்மய கொள்கைகளில் உள்ளது.
-சு.விஜயபாஸ்கர்.
------------------------------------------------------------------------

மோ(ச)டி  மன்னன்

மகாராஷ்டிரா அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவந்த நிலையில் தற்போது க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. ஆளும் சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பினர். பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர், உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதனால், அவர் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

விரைவில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் அனல்பறக்க கருத்து தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு குறித்தும், அங்கு பாஜக ஆட்சி அமைத்தது அல்லது ஆட்சி அமைப்பதில் பாஜக பங்கு குறித்தும் விரிவாகக் காண்போம்.

சிவசேனா -பாஜக
சிவசேனா -பாஜக

2016 - அருணாச்சல பிரதேசம்:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சல சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க வெறும் 11 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. அந்த நிலையில், காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராக அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில் 21 காங். எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதைத் தொடர்ந்து, 2015 டிசம்பரில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் கைகோத்துக்கொண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராகப் போட்டி சட்டசபைக் கூட்டத்தை நடத்தினர். அதில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அரசு கவிழ்ந்ததாக அறிவித்தனர். மேலும், புதிய முதல்வராக கலிகோ புல்லையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் முதல்வர் நபம் துகி பதவி விலக மறுத்தார். இதனால் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவுக்கும் (Jyoti Prasad Rajkhowa) முதல்வர் நபம் துகிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


அசாதாரணமான அரசியல் சூழ்நிலையை அடுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் நபம் துகி அரசைக் கவிழ்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது. கலிகோ புல் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தனது தார்மிக ஆதரவை வழங்கிய பா.ஜ.க தனது 11 பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் 2016, பிப்ரவரி 19-ல் கலிகோ புல்லை முதல்வராக்கியது.

கலிகோ புல், நபம் துகி,
கலிகோ புல், நபம் துகி,

அதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நபம் துகி. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ராஜ்கோவாவைக் கண்டித்ததுடன், ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்றும், 2015 டிசம்பர் 15-ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை 13-ம் தேதி நபம் துகி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த சில நாள்களிலே அவர் பதவி விலக, காங்கிரஸ் சார்பில் பீமா காண்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், முதல்வர் பதவியை இழந்த மன வருத்தத்தில் இருந்த கலிகோ புல், கடிதம் எழுதிவைத்துவிட்டு அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

பீமா காண்டு
பீமா காண்டு

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, காங்கிரஸ் சார்பில் புதிதாக முதல்வரான பீமா காண்டு, பா.ஜ.க ஆலோசனைக்கேற்ப, 40 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாச்சல் மக்கள் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தவர், அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் முழுவதுமாக பா.ஜ.க-வில் இணைந்தார். 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்ற பீமா காண்டு தற்போது அருணாச்சலப் பிரதேச முதல்வராகத் தொடர்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல்,கடந்த 2020-ல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ-க்களில் ஆறு பேரையும் பா.ஜ.க தன்பக்கம் இழுத்துக்கொண்டது.

மணிப்பூர்:

2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க 21 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பெரும்பான்மை இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளில் வென்றிருந்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி, ஒரு தொகுதியில் வென்றிருந்த லோக் ஜனசக்தி மற்றும் சுயேச்சையின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷியாம்குமார் சிங்கை தன் பக்கம் இழுத்தது. பா.ஜ.க சார்பில் பிரேன் சிங் முதல்வரானார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் ஐக்கியமாகினர். இந்த நிலையில், நடந்து முடிந்த 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., தனிப்பெரும்பான்மையுடன் தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது.

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்

2017 - கோவா:

2017-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் வென்றது காங்கிரஸ். அதேசமயம் பா.ஜ.க 13 இடங்களிலேயே வென்றிருந்தது. பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியிலிருந்த 12 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் கொண்டுவந்தது. மேலும், சில சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களையும் இழுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக கோவாவில் தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. மேலும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்களில் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கி அழகுபார்த்தது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Twitter

இதுமட்டுமல்லாமல், கோவாவின் மாநிலக் கட்சியான எம்.ஜி.பி-யின் மூன்று எம்.எல்.ஏ-க்களில் இருவரையும் தங்கள் கூடாரத்துக்குள் சேர்த்துக்கொண்டது. தற்போது நடந்து முடிந்த 2022 கோவா சட்டமன்றத் தேர்தலில், 20 இடங்களில் வென்றிருக்கும் பா.ஜ.க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறது.

பீகார்:

2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், 80 இடங்களில் வென்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், 71 இடங்களில் வென்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 53 இடங்களில் வென்றிருந்த பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

2018 - மேகாலயா:

2018-ம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். அடுத்தபடியாக, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால் பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தந்திரமாக ஆட்சியைப் பிடித்தது.

சிக்கிம்
சிக்கிம்

2019 - சிக்கிம்:

2019-ம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதேசமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களில் 2 இடங்களை பா.ஜ.க-வே கைப்பற்றியது.

கர்நாடகா:

2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க.

அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அதையடுத்து, 16 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்.

எடியூரப்பா- குமாரசாமி
எடியூரப்பா- குமாரசாமி

2020 - மத்தியப் பிரதேசம்:

2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் இழுத்தது.

கமல்நாத் - சிவராஜ் சிங்
கமல்நாத் - சிவராஜ் சிங்

அதையடுத்து பா.ஜ.க-வின் ஆலோசனைப்படி ஆறு அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சௌகான் முதல்வரானார்.

2021 - புதுச்சேரி:

2016-ல் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாராயணசாமி முதல்வரானார். சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கவிழ்த்தது பா.ஜ.க.

நாராயணசாமி
நாராயணசாமி

இதுதவிர, 2018-ல் காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்தும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 சட்டப்பிரிவை நீக்கி மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

- விகடனில் இருந்து.

-----------------------------------------------------------------------------------பயனேதும் இல்லை!

 திரௌபதி முர்முவால்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க. கூட்டணி. உடனே, சமூகநீதி உணர்வு அவர்களது வட்டாரத்தில் பொங்கி வழிகிறது. ‘பார்த்தீர்களா! பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை நாங்கள் வேட்பாளராக அறிவித்துவிட்டோம். நாங்கள்தான் உண்மையான சமூகநீதியைக் காப்பாற்றுபவர்கள்” என்று அவர்கள் சொல்வதைப் பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

இசுலாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் இசுலாமியர்கள் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவும் - பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் பட்டியலின சமூகத்தவர் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவுமான ‘உண்மை நிலவரம்' தான் - இப்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலமும் அடையும் பயனாகும்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா அவர்கள். அவர் அளித்த பேட்டியில் இதனை மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

ஒட்டுமொத்த சமூகத்தின் உயர்வு என்பது அரசாங்கம் பின்பற்றும் அதன் கொள்கைகளைப் பொறுத்தது. தவிர, ஒரு சமூகத்தில் தனிமனிதனின் உயர்வு, அந்தச் சமூகத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்த உதவவில்லை என்பதற்கு நமது வரலாற்றில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. 

எனவே இது வெறும் அரசியல் குறியீடுதானே தவிர இதில் வேறொன்றுமில்லை.

நம் நாட்டின் அரசியல், இன்று பல்வேறு பலவீனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனவே இந்தத் தேர்தல் வெறும் இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைவிடவும் மேலானது. மேலும் அரசின் யதேச்சதிகாரக் கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒருபடிதான் இந்தத் தேர்தல்” எனத் தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரராவ் கட்சி இதனை மிக எளிமையாக - அனைவர்க்கும் புரியும் படியாக விமர்சித்துள்ளது. “22 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை, 2 முறை எம்.எல்.ஏ., 1 முறை அமைச்சர், 1 முறை ஆளுநர், இன்னும்...! 

ஆனால், இவ்வளவு காலம் பதவியில் இருந்தும் சொந்த கிராமத்துக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியவில்லை. இதில் இவர்கள் பழங்குடி சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார்கள்?” எனக் காட்டமாக டி.ஆர்.எஸ். கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.

அவரால் சொந்தக் கிராமத்துக்கு ஆன பயன் ஏதுமில்லை. பழங்குடியின மக்கள் அடையும் பயன் என்னவாக இருக்க முடியும்? 

திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதன் பின்னணியை அனைத்து ஊடகங்களும் அம்பலப்படுத்தி உள்ளன.

மயூர்பஞ்ச் மாவட்ட எல்லை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ளது. அப்பகுதிகளில் முர்முவின் சந்தால் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அம்மக்களிடம் ஓட்டு வேட்டையாட முயல்கிறது பா.ஜ.க. என்று விமர்சனம் எழுந்துள்ளது.

வரவிருக்கும் 5 மாநில தேர்தலில் குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்களில் கணிசமாக வசிக்கும் பழங்குடியின மக்களின் ஓட்டுக்களை அள்ளவும் திட்டமிட்டிருக்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே பழங்குடியினர் மீது அக்கறை இருந்தால் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்க்கண்டில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது பழங்குடியினர் அல்லாத ரகுபார் தாஸை ஏன் முதல்வராக்கியது என்ற கேள்விகள் தொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. 14 கோடி மக்கள் வாழ்கிறார்கள். 

தங்கள் நிலங்களைக் காக்கும் போராட்டத்தில் அவர்கள் தொடர்ச்சியாக இறங்கியிருக்கிறார்கள். அவர்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்றும் நிலை தொடர்கிறது. அதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.

2006 ஆம் ஆண்டு வனச்சட்டத்தை திருத்துவதற்கு பா.ஜ.க. அரசு 2019 ஆம் ஆண்டு முயற்சித்தது. வனத்தில் இருக்கும் மரங்களை பழங்குடியினர் தொடக்கூடாது என்பதுதான் இந்த சட்டம். மரங்கள், இயற்கை வளங்கள், கனிமங்கள் ஆகியவை அரசின் சொத்துகளாக அறிவிக்கப்பட்டது. 

மரங்களை வெட்டினால் பிணையில் வரமுடியாத வழக்கு போடுவதாகச் சொன்னது இந்தச் சட்டம்.

வனத்தை அந்த பழங்குடியினர் ஆக்கிரமித்துள்ளார்கள் என்றே சொல்லி கைது செய்யலாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காடுகளையும், மலைகளையும் நம்பி வாழ்ந்த மக்களை வெளியேற்ற சட்டம் இயற்றிய கட்சிதான் பா.ஜ.க. காடுகளை ‘உற்பத்திக் காடுகள்' ஆக்கிய சட்டம் இது. காடுகளை, மனை நிலங்களைப் போல குத்தகைக்கு எடுக்க வழி வகை செய்யும் சட்டம் அது.

ஆங்கிலேய அரசால் 1927 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனச்சட்டத்தை விடக் கொடுமையானது பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்டது ஆகும். பழங்குடியினரைப் பாதுகாக்கும் பழைய சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் நீர்த்துப் போகச் செய்யும் சட்டம் இது.

பழங்குடியினரின் பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான் 2006 ஆம் ஆண்டு சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அவை அனைத்தையும் அழித்துக் கட்டுகிறது இந்த சட்டம். பழங்குடியினரின் கிராம சபைகள் அதிகாரம் பொருந்திய அமைப்புகளாக இருந்தன. 

அவை அனைத்தையும் செல்லாது ஆக்கியது 2019ஆம் ஆண்டைய சட்டம். 144 தடையுத்தரவு போட்டு வனங்களுக்குள் யாரும் நடமாட முடியாமல் வழிவகை செய்த அடக்குமுறை சட்டம் இது.

இதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பா.ஜ.க. அமுக்கி வைத்திருக்கிறதே தவிர, திரும்பப் பெறவில்லை. இவர்கள்தான் பழங்குடியினர்களின் பாதுகாவலர்களாம். இந்த லட்சணத்தில் சமூகநீதி வேறுபேசுகிறார்கள்.

----------------------------------------------------------------------

ஆஸ்கார்குழுவில் சூர்யா

உலக சினிமாவில் உயரிய விருது ஆஸ்கார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு ஆஸ்கார் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

 இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமை சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் பிரபல இந்திய நடிகையாக காஜோலுக்கும் ஆஸ்கார் விருது குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினராக அழைக்கப்பட்ட சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்’டேக்’கை உருவாக்கிய சூர்யா ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் சூர்யா, காஜோல் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் சார்பில் இயக்குநர் பிரிவில், பான் நலின், ஆவணப்படங்கள் பிரிவில் சுஷ்மித், கோஷ், மற்றும் ரின்டு தாமஸ், எழுத்தாளர் பிரிவில் ரீமா காக்டி ஆகியோருக்கு ஆஸ்கார் விருது குழு உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

---+------------+----------------+----------------+----------------+

பிளாஸ்டிக் தடை
செவ்வாய், 28 ஜூன், 2022

காவி பாசிசம்

குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். 
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது. 
இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்-ம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
அதாவது, தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே, மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாட்-ஐ குஜராத் மாநில போலீசு கைதுசெய்து அவரை குஜராத் அழைத்துச் சென்றுள்ளது.
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி – அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, பீமாகோரேகன் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகளை முன்னரே ஹேக் செய்து; அதில் பொய்யான கடிதங்களை வைத்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
அவர்களில், ஒருவரான நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கூட தடைவிதிக்கப்பட்டு அரசு பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றோர் பேராசிரியர் சாய்பாபா, கொரோனா தொற்றுநோயால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டார். எனினும் அவர் இப்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆனந்த் டெல்டும்டே பலவேறு நோய்களால் பாதிக்கப்பட்டபோதும் அவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. 
ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் வரவரராவ் தன்னுடைய மருத்துவ பரோல் முடிந்து மீண்டும் சிறை செய்வதற்காக காத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தீஸ்தா செதல்வாட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக, சிறுபான்மை மக்களுக்காக, பழங்குடியின – தலித் மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சட்டத்தின்முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். 
இதையெல்லாம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன அல்லது அரச பயங்கரவாதத்தின் ஒரு பிரிவாகவே மாறிப் போயிருக்கின்றன.
இந்த நாட்டின் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்கள் படுகொலை செய்யும்பொழுது அதற்கு எதிராக போராடிய -குரல் கொடுத்த- அறிவுஜீவிகள்,  தலைவர்கள் ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 
நாடு மீளமுடியாத  காவி பாசிச இருளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு எதிராக சிந்திக்கும் அனைவருக்குமான இடம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
-------------------------------------------------------------------------------
காவி பாசிச ஆட்சி.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இந்து சாமியார்கள் மாநாட்டில், முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதை முகமது ஜுபைர் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்தார். 
இதற்காக உ.பி. போலீசார் படுகொலை செய்ய வேண்டும் என்ற சாமியார்களை விட்டுவிட்டு அதை எதிர்த்து எழுதிய அவர் மீது வழக்கும் பதிவு செய்திருந்தனர். பல்வேறு போலி செய்திகளின் உண்மை தன்மையை அம்பலப்படுத்தியதால் வலதுசாரிகளால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார் முகமது ஜுபைர்.
குறித்து அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டில்லிக்கு அழைக்கப்பட்டார். 
ஆனால் இந்து மத உணர்வுகளை 2018 ல் அவர் வெளியிட்ட டுவிட்டர்  புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். 
மேலும் அதுகுறித்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் முதன்மை தகவல் அறிக்கையின் நகல் எங்களிடம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Latest Tamil News
காவல்துறை தரப்பில், ஜுபைர் இந்த வழக்கில் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
மேலும் பதிவில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
மேலும் காவலில் வைக்க நாளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
முகமது நபியை பற்றி அசிங்கமாகப் பேசி உலக அளவில் இந்தியாவை காரித்துப்பச் செய்த பா.ஜ.க. நுபுல்சர்மா வெளியே வெட்கமின்றி காவல் துறையால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு. திரிகிறார்.
இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் அதை விமர்சித்து காவி பாசிசத்தை எழுதியவர் வேறு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவி பாசிச ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது.
--------------------------------------------------------------------------
ஆன்லைன் ரம்மிக்கு தடை?


திங்கள், 27 ஜூன், 2022

"ஒரே நாடு ஆபத்து"

 இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் "ஒரு நாடு ஒரே காவல் சீருடை' திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பரிசீலனை செய்து வருகிறது .

இது தொடர்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் மாதிரி சீருடைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இத்திட்டத்தின் பின்னணியில் அரசியல் இழையோடியுள்ளது என்றும், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தற்பொழுது செயல்பட்டுவரும் சட்டம்-ஒழுங்கு காவல்துறையை, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றம் செய்து, மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த "ஒரு நாடு, ஒரே காவல் சீருடை திட்டம்' என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் எந்த மாநிலத்தில் பணிபுரிந்தாலும், அவர்கள் அணிய வேண்டிய சீருடை தொடர்பான விதிகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, 1954-ஆம் ஆண்டில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் இந்திய காவல்பணியைச் சாராத காவல்துறையினரின் சீருடைகளை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசே வடிவமைத்துக் கொள்ளும் முறை நம்நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. 

இந்தியாவில் காவல்துறை என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கான சட்ட வடிவமைப்பை 1861-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தனர். 

அதைத் தொடர்ந்து அவர்கள் உருவாக்கிய காவல் நிலை ஆணைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகள் அணிய வேண்டிய சீருடைகள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

நம்நாடு சுதந்திரம் அடைந்ததும், காவல்துறையினரின் சீருடையில் மாற்றங்கள் எதுவும் உடனடியாகக் கொண்டு வரப்படவில்லை. நாட்டின் விடுதலைக்குப் பின் கால் நூற்றாண்டு காலம் வரை தமிழ்நாட்டில் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் அனைவரும் அரைக்கால் சட்டையை சீருடையாகவும், "கூண்டு தொப்பி' என்ற நீளமான தொப்பியை காவலர்களும், தலைமைக் காவலர்களும் அணிந்து வந்தனர். 

1973-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக இருந்த எஃப்.வி. அருளின் பரிந்துரையின் பேரில், காவலர்கள் முதல் காவல்துறை தலைவர் வரை அனைவரும் முழுக்கால் சட்டையை சீருடையாக அணிய அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. 

காவலர்களின் தொப்பியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை, கலாசாரம், பணியின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப, காவல்துறையினரின் சீருடையில் தேவையான மாற்றங்களை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கொண்டுவந்தன. உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை எதிர்கொள்ள நேரிடுவது போன்ற சவால் நிறைந்த பணிகளில் ஈடுபடும் காவல்துறையினரின் வசதிக்கேற்ப சீருடைகள் வடிவமைக்கப்பட்டன. 

பெண் காவலர்களின் வசதிக்கேற்ற சீருடைகள் அணியும் முறையும் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை காவலர்கள், காவல் அதிகாரிகள் போன்று தனியார் பாதுகாவலர்கள் காக்கி நிற சீருடை அணிந்து வந்தனர். 

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, தனியார் பாதுகாவலர்கள் காக்கி நிற சீருடை அணிய அரசு தடை விதித்தது.

மிடுக்கான தோற்றத்தை வெளிக்காட்டிக் கொள்வதற்காக மட்டும் காவல்துறையினர் சீருடை அணிந்து கொள்வதில்லை.

 சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், போக்குவரத்தை சீர்செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும்பொழுது, தங்களை பொதுமக்களிடத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும், பணியின்போது கட்டுக்கோப்பு, கீழ்படிதல் போன்றவற்றுடன் செயல்படவும், காவல்துறையில் பல நிலைகளில் பணிபுரிபவர்களை அடையாளப்படுத்தவும் காவல்துறையினர் சீருடை அணிகின்றனர்.

மாறுபட்ட காலநிலைகளையும், கலாசாரங்களையும் கொண்ட மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நமது நாட்டில், ஒரே மாதிரியான சீருடையை அனைத்து காவல்துறையினரும் அணிய வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதைக் காட்டிலும், காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக் களைய அரசு முயற்சி மேற்கொள்வதே மக்களின் நலனுக்கு பெரிதும் துணைபுரியும் என்ற கருத்து பொதுமக்களிடத்தில் உள்ளது. 

டெல்லி மாநிலத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் டெல்லி அரசு கட்டளைகளைக் கண்டு கொள்ளாமல் காவல்துறை செயல்படுவதால் அங்கு சட்டம் ஒழுங்கை டெல்லி அரசு மேற்கொள்ள இயலாமல் அடிக்கடி காவல்துறைக்கும் அரசுக்கும் மோதல், குழப்பங்கள் உண்டாகிறது.

நம் நாட்டில் எழுத்தறிவு விகிதம் 77.7% ஆக உயர்ந்துள்ள இன்றைய நிலையில், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பொதுமக்களின் எதிர்பார்ப்பு பல நேரங்களில் ஏமாற்றத்தில் முடிவடைவதும், அதைத் தொடர்ந்து காவல்துறை மீதான அதிருப்தியை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக பொதுமக்கள் வெளிப்படுத்துவதும் நம்நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் பல புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும், குறைந்தபட்சம் மனு ரசீது (சிஎஸ்ஆர்) கூட கொடுப்பதில்லை என்றும் பொதுமக்களிடத்தில் அதிருப்தி நிலவி வருகிறது. வேலை பளுவை காரணம்காட்டி, புகார் மனுக்கள் மீது நடவடிக்கையைத் தவிர்ப்பது, குற்றவாளிகளுக்குத் துணைபுரியும் செயலாக மாறிவிடும் என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்வதில்லை.

திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது, களவுபோன தங்க நகைகளின் மதிப்பைக் குறைத்து புகார் கொடுக்கும்படி புகார்தாரரை காவல்துறையினர் வற்புறுத்தும் பழக்கம் காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் மதிப்பை இழக்கச் செய்கிறது.

சமுதாய அமைதியை சீர்குலைக்கும் "கட்டப் பஞ்சாயத்து' முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவந்த காவல்துறையின் செயல்பாட்டில் மாற்றம் தென்படுகிறது.

 வீட்டைக் காலி செய்தல், கொடுத்த கடனை வசூல் செய்தல் போன்ற சிவில் தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்திவரும் நிலையைத் தற்போது காணமுடிகிறது. 

பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, சமுதாயச் சீரழிவை ஏற்படுத்திய கள்ளச் சாராயத்தைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறை ஓரளவிற்கு வெற்றி கண்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இன்றைய சமுதாயத்தில் அதிக அளவில் வியாபித்துள்ள போதைப் பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் சிலர் நேரடியாக ஈடுபட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

 இச்சம்பவங்கள் காவல்துறையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் குறைந்து விட்டதோ என்ற அச்ச உணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்துகின்றன.

காவல்துறையினரிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் துப்பாக்கி அல்ல. துப்பாக்கியைப் பயன்படுத்தியதும், காவல்துறையினர் தங்களின் பலத்தை இழந்து, துப்பாக்கி சூடு நடத்தியது சரியான செயல் என நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். 

தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க முடியாமல், பல நேரங்களில் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள். 

"புலன் விசாரணை' செய்யும் அதிகாரம்தான் காவல்துறையிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம்.   

கடந்த காலத்தில் பெரும்பாலான கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் அதிகபட்ச தண்டனை அடைந்தது மட்டுமின்றி, மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டதைக் காணமுடிகிறது. 

ஆனால், சமீப காலங்களில் தண்டனையில் முடிவடையும் கொடுங்குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மட்டுமின்றி, அவை மேல்முறையீட்டில் விடுதலையும் பெற்று விடுகின்றன. 

நீதிமன்ற விசாரணையில் வழக்குகள் விடுதலையடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தரம் குறைந்துவரும் புலன் விசாரணையால் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலை தற்பொழுது நிலவுகிறது.

காவல் அதிகாரிகளின் பணி இடமாற்றங்களைச் செயல்படுத்த காவல்துறையில் உயரதிகாரிகளைக் கொண்ட "நிர்வாகக் குழு' அமைக்கப்பட்டு இருந்தாலும், பல சமயங்களில் திறமையான அதிகாரிகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், அதிகார மையத்தின் பரிந்துரை பெற்றவர்கள் முக்கிய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இதன் விளைவாக மக்கள் பாராட்டும் நேர்மையான நிர்வாகத்தை காவல் நிலையங்களில் காண்பது அரிதாகி வருகிறது.

காவல்துறை நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கையூட்டு கலாசாரம் உச்சத்தில் இருந்து வருவதும், காவல்துறையினர் வெளிப்படையாக தங்களை அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் நடைமுறையும் நியாயம் தேடி காவல் நிலையம் செல்லும் பொதுமக்களை வேதனை அடையச் செய்திருக்கின்றன.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, குற்ற நிகழ்வு ஆகியவற்றினால் சமூகம் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் முதுகெலும்பாக விளங்கும் காவல்துறை மீதான நம்பிக்கையும், மரியாதையும் பொதுமக்களிடத்தில் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. 

இந்த சூழலில், நாடு முழுவதும் ஒரே காவல் சீருடை என்பதை நோக்கி பயணிக்காமல், நேர்மை, திறமை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுதல் போன்ற பண்புகளுடன் பணியாற்றும் காவலர்களையும், காவல் அதிகாரிகளையும் உருவாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டியதே இன்றைய சமுதாய நலனுக்கு இன்றியமையாதது ஆகும்.

நிதி, வரி,சுகாதாரம், கல்வி, இப்போது காவல்துறை என்று முக்கியத்துறைகளை ஒன்றிய அரசே தன்னிடம் வைத்துக் கொண்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் மிஞ்சும்.

எப்படி மக்கள் நலன் பணிகளை அவர்கள் செய்ய முடியும்.அனைத்துக்கும் ஆளுநர் கைகளை  எதிர்பார்த்ததுதான் நிற்க வேண்டும்.

இன்றைய பா.ஜ.க ,ஆளுநர்களின் செயல்பாடுகளை பார்த்தால் இந்தியா ஒன்றியத்தில் உள்ளோரின் சர்வதிகார ஆட்சியை நோக்கித்தான் நகர்வது போல் உணர முடிகிறது.

----------------------------------------------------------------------------