மோ(ச)டி மன்னன்

வ்வொரு வாரமும் ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதைப்போன்று, ஓவ்வொரு வாரமும் ஒரு மோசடி வெளியாகிறது. 

அந்த வரிசையில் இந்த வார வெளியீடு தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Limited)  நிறுவனம் செய்த மோசடி.
17 வங்கிகள் (Consortium) இணைந்து தந்த ரூ.34,615 கோடி கடனை மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் இயக்குநர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ கடந்த புதன்கிழமை (ஜுன் 17) வழக்கு பதிவு செய்துள்ளது. 
இதுவரை சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய வழக்கு இதுவாகும்.
2020 மார்ச் மாதம் யெஸ் வங்கியின் தலைமை செயல்அதிகாரி ரானா கபூர் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். 
அவரும், DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் இணைந்து செய்த மோசடியை சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்தன. 
அதன் பின்னர் ஏப்ரல் 2020-இல், கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் டெல்லி நீதிமன்றம் தந்த பிணையில் வெளிவந்தனர். அதற்கு இடைப்பட்ட  இரண்டு ஆண்டுகளில் பலமுறை நீதிமன்றங்களால் பிணை மறுக்கப்பட்டாலும் தீரஜ் வாதவான் சிறையில் இருந்த காலம் 9 மாதங்கள் மட்டுமே.
மீதமுள்ள 15 மாதங்களை, தீரஜ் வாதவான் நோய்களைக் காரணம்காட்டி மருத்துவமனைகளில் இருந்துள்ளார்.
 மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 10 மாத காலம் தங்கியிருந்த காலகட்டமும் இதில் அடங்கும். கூட்டுக் களவாணிகள் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வதுதானே தொழில் தர்மம். உனக்கு நான், எனக்கு நீ துணையாக.
இந்த மோசடி வெளிவராமல் இருந்திருந்தால் வாதவான் சகோதரர்களுக்கு நோய் வந்திருக்காது.
வாதவான் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கையோ, விதிமீறலோ புதிதன்று.
தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது (ஏப்ரல் 2020) மராட்டிய மாநிலத்திலிருந்து மகாபலிபுரத்திற்கு சொகுசு பங்களாவிற்கு சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் சகிதம் சொகுசு கார்களில் வந்திறங்கினர் வாதவான் குடும்பத்தினர்.
 ரூ.100-க்கு கத்திரிக்காய் வாங்கச் சென்றவர்களை விரட்டிவிரட்டி அடித்த போலீசு, வாதவான் குடும்பத்தினருக்கு சிறப்பு அனுமதி தந்தது. 
இதில் கேலிக்கூத்து என்னவெனில், மகாபலிபுரம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் யெஸ் வங்கி ரானா கபூருடன் இணைந்து செய்த மோசடி வழக்கில் விசாரணக்காக அழைத்தபோது கொரோனாவைக் காரணம்காட்டி விசாரணைக்கு செல்லவில்லை. 
மார்ச் மாதம் இருந்த நோய் அச்சுறுத்தல் ஏப்ரல் மாதத்தில் மகாபலிபுரத்திற்கு ஆடம்பரச் சுற்றுலாவிற்கு வந்தபோது இல்லை.
 ரூ.300 சம்பளத்திற்கு 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்துவந்த வடமாநில தொழிலாளர்களை நடக்கவிட்ட அரசுகள் 30,000 கோடி மோசடி செய்த வாதவான் சகோதரர்களை மூன்று மாநில எல்லைகள் கடந்து ராஜ மரியாதையோடு சொகுசு பங்களாவிற்கு அனுப்பி வைத்தன.
DHFL நிறுவனத்தின் சேர்மன் கபில் வாதவான் கைது செய்யப்படும் வரை,  அந்நிறுவனத்தின் அறிவுஜீவி முகமாக பல தொலைக்காட்சிகளில் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை அவரை அறிவு ஜீவியாக காட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் தற்போது வில்லனாக காட்டுகின்றன. 
ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, சி.சி.டீவி.யில் மாட்டும் வரை சாமியார், மாட்டிவிட்டால் போலிச் சாமியார் என்பதைப் போல தனியார்மயத்தில் மாட்டும் வரை அறிவு ஜீவி, மாட்டிவிட்டால் பிராடு. 
தனியார்மயத்தைப் பொறுத்தவரையில் மாட்டியவன் சிறைக்கு உள்ளே இருப்பான். மாட்டாதவன் வெளியே கோட்டு சூட்டு போட்டு இருப்பான். 
அவ்வளவு தான். தவறு செய்யாதவன் என்பவனில்லை. மாட்டாமல் தவறு செய்வதைக் கற்றுக் கொள் என்கிறது தனியார்மய பெருந்தத்துவம். தீரஜ் வாதவான் போல் திறமைசாலியாக இருந்தால், கைது செய்யப்பட்ட பின்னரும் சொகுசு மருத்துவமனையில் ஓய்வெடுக்கலாம்.
கபிலின் தம்பி தீரஜ் வாதவானும் சளைத்தவர் இல்லை. அண்ணன் அறிவுஜீவியாக அறியப்பட, தம்பி தீரஜ் திவான் மும்பை வட்டாரத்தில் பாபா திவான் என்று அறியப்பட்டவர்.
 பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய நட்பு, 
பல சொகுசு கார்கள், எண்ணற்ற பாடி கார்டுகள் (தனிப் பாதுகாவலர்கள்) என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். முதலாளித்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால், “வாழ்ந்தா இவரை மாதிரி வாழனும்னு” எனும் அளவிற்கு வாழ்ந்தவர். யார் உழைப்பில்? 
யார் காசில் சொகுசு வாழ்க்கை?
வேர்வை சொட்ட, ரத்தம் சிந்தி உழைத்து, ரூ.1, ரூ.2 என மிச்சம் பிடித்து பாதுகாப்பாக இருக்கட்டும் என உழைக்கும் மக்கள் வங்கியில் போட்ட பணத்தில் சொகுசாக தின்று கொழுத்திருக்கிறார்கள் வாதவான் குடும்பத்தினர்.
மோசடி வழக்கு விவரங்களுக்குள் போக விரும்பவில்லை, பல வழக்குகளில் நாம் பார்த்த கதைதான். தொழில் நடத்துகிறோம் என்ற பெயரில் கடன் வாங்கி, பணத்தை திசை திருப்பி, கடனை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததுதான் கதை.
 விஜய் மல்லையா, முகுல் சோக்சி, நீரவ் மோடி, அனில் அம்பானி என பல பெயர்களில் வரும் ஒரே கதை. தனியார்மய உலகில் திரும்பத் திரும்ப வெற்றிகரமாக ஓடும் கதை.
யெஸ் வங்கி (Yes Bank), பஞ்சாப் – மகாராஷ்டிரா வங்கி (PMC Bank) சரிந்து கீழே விழ காரணமாக இருந்தவர்கள் வாதவான் குடும்பத்தினர் நடத்திய நிறுவனங்கள். 
அதற்கு துணையாக இருந்தவர்கள் யெஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ரானா கபூரும், PMC வங்கியின் நிர்வாகிகள் சிலரும். இது தவிர யூனியன் வங்கி, எஸ்.பி.ஐ என ஏமாந்த வங்கிகளின் எண்ணிக்கை 17. ஏமாந்த ரூ.34,615 கோடி ஒருபோதும் திரும்ப கிடைக்காது. 
வாதவான் குடும்பத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 2012-இல் விஜய் மல்லையாவின் மோசடிகள் வெளி வந்தாலும், இன்று வரை விஜய் மல்லையா கைது செய்யப்படவிலலை. சொத்துக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவும் இல்லை. 
மல்லையோவோ இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து, இலண்டனில் தனது ஆடம்பர வாழ்வை தொடர்கிறார்.
யெஸ் வங்கி மோசடி வழக்கில் ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்டு, மே 2022-இல் சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி பிணையில் வந்த வாதவான் சகோதரர்கள் மீது யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா தந்த வழக்கில் தற்போது மீண்டும் குற்றச் சாட்டப்பட்டுள்ளனர்.
 மே 2022-இல் பிணை கிடைத்தாலும், பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதால், நீதிமன்றக் காவலில்தான் உள்ளனர். 
பல கோடி ரூபாய் மோசடி செய்தது வெளிப்படையாக தெரிந்தாலும், பிணை கிடைக்க சட்ட நுணுக்கங்கள் கிடைத்தைப் போன்று, தற்போது குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் ரூ.34,615 கோடி மோசடி வழக்கில் இருந்து வெளிவர சட்டத்தில் ஓட்டைகள் (அது தான் சட்ட நுணுக்கம்) கிடைக்காதா என்ன? 
எந்த சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகுல் சோக்சியும், விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் சிறைக்குள் வராமல் வெளி நாடுகளில் சுற்றுகிறார்களோ, அதே சட்ட நுணுக்கங்கள் வாதவான் சகோதரர்களுக்கு கிடைக்கும். சட்ட நுணுக்கங்களை கண்டுபிடிக்க திறமையான வழக்கறிஞர்களும் கிடைப்பார்கள். 
அதற்கான சாட்சி வாதவான் சகோதரர்களிடமே உண்டு.
ஆதாரம் 1:  ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை. காரணம் என்ன? 
மக்கள் பணத்தை தீரஜ் மோசடி செய்திருந்தாலும், இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு மோசடி செய்யவில்லை. மாறாக, அமைப்பை கட்டமைக்க உதவினார். வரவரராவிற்கு அந்த திறமை இல்லை. 
இந்த மோசடி அரசாங்களை எதிர்த்தார். எனவே ஏராளமான உடல் உபாதைகளோடு, சாகப் போகிற 81 வயதிலும் வரவரராவிற்கு சிறை. திரஜ்ஜிற்கு சொகுசு மருத்துவமனை.
ஆதாரம் 2: கபில் மற்றும் தீரஜ் வாதவனால் ஏமாற்றப்பட்ட வங்கிகள் அவர்களுக்கு எதிராக அக்டோபர் 18, 2019 அன்று லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டாலும், ஆறு மாதங்கள் கழித்தே கைது செய்யப்பட்டனர்.
கூடுதலாக DHFL நிறுவனம் பாஜகவிற்கு 27.5 கோடி  நன்கொடை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தனக்கு அள்ளித் தந்த கருணை வள்ளல்களை கண்டிப்பாக பாஜக அரசு தண்டிக்காது.
கடந்த பிப்ரவரி மாதம் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் 22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குத் தொடர்ந்த போதும், இதுவரை நடந்த வங்கி மோசடி ஊழல்களில் இதுதான் மிகப் பெரிய மோசடி எனச் சொல்லப்பட்டது. 
அந்த சாதனையை தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் முந்திவிட்டது. தனியார்மயம் செய்துவரும் மெச்சந்தகுந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. எங்கும் எதிலும் தனியார்மயம் என்றாகிவிட்ட பின்னர், ஊழல்களின் அளவும் எண்ணிக்கையும் அளவில்லாமல் போய்விட்டன.
அடுத்தமுறை DHFL நிறுவன மோசடியை மிஞ்சி சாதனை படைக்கும் மோசடி வெளிவரும். அதற்கான அத்தனை தகுதியும் தனியார்மயத்திற்கு உண்டு. 
ஏனெனின் ஊழலின் ஊற்றுக் கண் தனியார்மய கொள்கைகளில் உள்ளது.
-சு.விஜயபாஸ்கர்.
------------------------------------------------------------------------

மோ(ச)டி  மன்னன்

மகாராஷ்டிரா அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவந்த நிலையில் தற்போது க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. ஆளும் சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பினர். பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர், உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதனால், அவர் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

விரைவில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் அனல்பறக்க கருத்து தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு குறித்தும், அங்கு பாஜக ஆட்சி அமைத்தது அல்லது ஆட்சி அமைப்பதில் பாஜக பங்கு குறித்தும் விரிவாகக் காண்போம்.

சிவசேனா -பாஜக
சிவசேனா -பாஜக

2016 - அருணாச்சல பிரதேசம்:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சல சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க வெறும் 11 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. அந்த நிலையில், காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராக அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில் 21 காங். எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதைத் தொடர்ந்து, 2015 டிசம்பரில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் கைகோத்துக்கொண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராகப் போட்டி சட்டசபைக் கூட்டத்தை நடத்தினர். அதில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அரசு கவிழ்ந்ததாக அறிவித்தனர். மேலும், புதிய முதல்வராக கலிகோ புல்லையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் முதல்வர் நபம் துகி பதவி விலக மறுத்தார். இதனால் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவுக்கும் (Jyoti Prasad Rajkhowa) முதல்வர் நபம் துகிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


அசாதாரணமான அரசியல் சூழ்நிலையை அடுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் நபம் துகி அரசைக் கவிழ்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது. கலிகோ புல் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தனது தார்மிக ஆதரவை வழங்கிய பா.ஜ.க தனது 11 பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் 2016, பிப்ரவரி 19-ல் கலிகோ புல்லை முதல்வராக்கியது.

கலிகோ புல், நபம் துகி,
கலிகோ புல், நபம் துகி,

அதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நபம் துகி. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ராஜ்கோவாவைக் கண்டித்ததுடன், ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்றும், 2015 டிசம்பர் 15-ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை 13-ம் தேதி நபம் துகி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த சில நாள்களிலே அவர் பதவி விலக, காங்கிரஸ் சார்பில் பீமா காண்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், முதல்வர் பதவியை இழந்த மன வருத்தத்தில் இருந்த கலிகோ புல், கடிதம் எழுதிவைத்துவிட்டு அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

பீமா காண்டு
பீமா காண்டு

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, காங்கிரஸ் சார்பில் புதிதாக முதல்வரான பீமா காண்டு, பா.ஜ.க ஆலோசனைக்கேற்ப, 40 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாச்சல் மக்கள் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தவர், அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் முழுவதுமாக பா.ஜ.க-வில் இணைந்தார். 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்ற பீமா காண்டு தற்போது அருணாச்சலப் பிரதேச முதல்வராகத் தொடர்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாமல்,கடந்த 2020-ல் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ-க்களில் ஆறு பேரையும் பா.ஜ.க தன்பக்கம் இழுத்துக்கொண்டது.

மணிப்பூர்:

2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க 21 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பெரும்பான்மை இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளில் வென்றிருந்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி, ஒரு தொகுதியில் வென்றிருந்த லோக் ஜனசக்தி மற்றும் சுயேச்சையின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷியாம்குமார் சிங்கை தன் பக்கம் இழுத்தது. பா.ஜ.க சார்பில் பிரேன் சிங் முதல்வரானார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏழு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் ஐக்கியமாகினர். இந்த நிலையில், நடந்து முடிந்த 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., தனிப்பெரும்பான்மையுடன் தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது.

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்

2017 - கோவா:

2017-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் வென்றது காங்கிரஸ். அதேசமயம் பா.ஜ.க 13 இடங்களிலேயே வென்றிருந்தது. பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியிலிருந்த 12 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் கொண்டுவந்தது. மேலும், சில சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களையும் இழுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக கோவாவில் தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. மேலும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்களில் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கி அழகுபார்த்தது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Twitter

இதுமட்டுமல்லாமல், கோவாவின் மாநிலக் கட்சியான எம்.ஜி.பி-யின் மூன்று எம்.எல்.ஏ-க்களில் இருவரையும் தங்கள் கூடாரத்துக்குள் சேர்த்துக்கொண்டது. தற்போது நடந்து முடிந்த 2022 கோவா சட்டமன்றத் தேர்தலில், 20 இடங்களில் வென்றிருக்கும் பா.ஜ.க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறது.

பீகார்:

2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், 80 இடங்களில் வென்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், 71 இடங்களில் வென்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 53 இடங்களில் வென்றிருந்த பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

2018 - மேகாலயா:

2018-ம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். அடுத்தபடியாக, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால் பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தந்திரமாக ஆட்சியைப் பிடித்தது.

சிக்கிம்
சிக்கிம்

2019 - சிக்கிம்:

2019-ம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதேசமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களில் 2 இடங்களை பா.ஜ.க-வே கைப்பற்றியது.

கர்நாடகா:

2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க.

அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அதையடுத்து, 16 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்.

எடியூரப்பா- குமாரசாமி
எடியூரப்பா- குமாரசாமி

2020 - மத்தியப் பிரதேசம்:

2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் இழுத்தது.

கமல்நாத் - சிவராஜ் சிங்
கமல்நாத் - சிவராஜ் சிங்

அதையடுத்து பா.ஜ.க-வின் ஆலோசனைப்படி ஆறு அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சௌகான் முதல்வரானார்.

2021 - புதுச்சேரி:

2016-ல் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாராயணசாமி முதல்வரானார். சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கவிழ்த்தது பா.ஜ.க.

நாராயணசாமி
நாராயணசாமி

இதுதவிர, 2018-ல் காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்தும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 சட்டப்பிரிவை நீக்கி மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

- விகடனில் இருந்து.

-----------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?