"ஒரே நாடு ஆபத்து"

 இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் "ஒரு நாடு ஒரே காவல் சீருடை' திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பரிசீலனை செய்து வருகிறது .

இது தொடர்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் மாதிரி சீருடைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இத்திட்டத்தின் பின்னணியில் அரசியல் இழையோடியுள்ளது என்றும், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தற்பொழுது செயல்பட்டுவரும் சட்டம்-ஒழுங்கு காவல்துறையை, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றம் செய்து, மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த "ஒரு நாடு, ஒரே காவல் சீருடை திட்டம்' என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் எந்த மாநிலத்தில் பணிபுரிந்தாலும், அவர்கள் அணிய வேண்டிய சீருடை தொடர்பான விதிகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, 1954-ஆம் ஆண்டில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் இந்திய காவல்பணியைச் சாராத காவல்துறையினரின் சீருடைகளை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசே வடிவமைத்துக் கொள்ளும் முறை நம்நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. 

இந்தியாவில் காவல்துறை என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கான சட்ட வடிவமைப்பை 1861-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தனர். 

அதைத் தொடர்ந்து அவர்கள் உருவாக்கிய காவல் நிலை ஆணைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகள் அணிய வேண்டிய சீருடைகள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

நம்நாடு சுதந்திரம் அடைந்ததும், காவல்துறையினரின் சீருடையில் மாற்றங்கள் எதுவும் உடனடியாகக் கொண்டு வரப்படவில்லை. நாட்டின் விடுதலைக்குப் பின் கால் நூற்றாண்டு காலம் வரை தமிழ்நாட்டில் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் அனைவரும் அரைக்கால் சட்டையை சீருடையாகவும், "கூண்டு தொப்பி' என்ற நீளமான தொப்பியை காவலர்களும், தலைமைக் காவலர்களும் அணிந்து வந்தனர். 

1973-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக இருந்த எஃப்.வி. அருளின் பரிந்துரையின் பேரில், காவலர்கள் முதல் காவல்துறை தலைவர் வரை அனைவரும் முழுக்கால் சட்டையை சீருடையாக அணிய அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. 

காவலர்களின் தொப்பியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை, கலாசாரம், பணியின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப, காவல்துறையினரின் சீருடையில் தேவையான மாற்றங்களை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கொண்டுவந்தன. உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை எதிர்கொள்ள நேரிடுவது போன்ற சவால் நிறைந்த பணிகளில் ஈடுபடும் காவல்துறையினரின் வசதிக்கேற்ப சீருடைகள் வடிவமைக்கப்பட்டன. 

பெண் காவலர்களின் வசதிக்கேற்ற சீருடைகள் அணியும் முறையும் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை காவலர்கள், காவல் அதிகாரிகள் போன்று தனியார் பாதுகாவலர்கள் காக்கி நிற சீருடை அணிந்து வந்தனர். 

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, தனியார் பாதுகாவலர்கள் காக்கி நிற சீருடை அணிய அரசு தடை விதித்தது.

மிடுக்கான தோற்றத்தை வெளிக்காட்டிக் கொள்வதற்காக மட்டும் காவல்துறையினர் சீருடை அணிந்து கொள்வதில்லை.

 சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல், போக்குவரத்தை சீர்செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும்பொழுது, தங்களை பொதுமக்களிடத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டவும், பணியின்போது கட்டுக்கோப்பு, கீழ்படிதல் போன்றவற்றுடன் செயல்படவும், காவல்துறையில் பல நிலைகளில் பணிபுரிபவர்களை அடையாளப்படுத்தவும் காவல்துறையினர் சீருடை அணிகின்றனர்.

மாறுபட்ட காலநிலைகளையும், கலாசாரங்களையும் கொண்ட மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நமது நாட்டில், ஒரே மாதிரியான சீருடையை அனைத்து காவல்துறையினரும் அணிய வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதைக் காட்டிலும், காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக் களைய அரசு முயற்சி மேற்கொள்வதே மக்களின் நலனுக்கு பெரிதும் துணைபுரியும் என்ற கருத்து பொதுமக்களிடத்தில் உள்ளது. 

டெல்லி மாநிலத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் டெல்லி அரசு கட்டளைகளைக் கண்டு கொள்ளாமல் காவல்துறை செயல்படுவதால் அங்கு சட்டம் ஒழுங்கை டெல்லி அரசு மேற்கொள்ள இயலாமல் அடிக்கடி காவல்துறைக்கும் அரசுக்கும் மோதல், குழப்பங்கள் உண்டாகிறது.

நம் நாட்டில் எழுத்தறிவு விகிதம் 77.7% ஆக உயர்ந்துள்ள இன்றைய நிலையில், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பொதுமக்களின் எதிர்பார்ப்பு பல நேரங்களில் ஏமாற்றத்தில் முடிவடைவதும், அதைத் தொடர்ந்து காவல்துறை மீதான அதிருப்தியை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக பொதுமக்கள் வெளிப்படுத்துவதும் நம்நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் பல புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும், குறைந்தபட்சம் மனு ரசீது (சிஎஸ்ஆர்) கூட கொடுப்பதில்லை என்றும் பொதுமக்களிடத்தில் அதிருப்தி நிலவி வருகிறது. வேலை பளுவை காரணம்காட்டி, புகார் மனுக்கள் மீது நடவடிக்கையைத் தவிர்ப்பது, குற்றவாளிகளுக்குத் துணைபுரியும் செயலாக மாறிவிடும் என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்வதில்லை.

திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது, களவுபோன தங்க நகைகளின் மதிப்பைக் குறைத்து புகார் கொடுக்கும்படி புகார்தாரரை காவல்துறையினர் வற்புறுத்தும் பழக்கம் காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் மதிப்பை இழக்கச் செய்கிறது.

சமுதாய அமைதியை சீர்குலைக்கும் "கட்டப் பஞ்சாயத்து' முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவந்த காவல்துறையின் செயல்பாட்டில் மாற்றம் தென்படுகிறது.

 வீட்டைக் காலி செய்தல், கொடுத்த கடனை வசூல் செய்தல் போன்ற சிவில் தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்திவரும் நிலையைத் தற்போது காணமுடிகிறது. 

பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, சமுதாயச் சீரழிவை ஏற்படுத்திய கள்ளச் சாராயத்தைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறை ஓரளவிற்கு வெற்றி கண்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இன்றைய சமுதாயத்தில் அதிக அளவில் வியாபித்துள்ள போதைப் பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் சிலர் நேரடியாக ஈடுபட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

 இச்சம்பவங்கள் காவல்துறையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் குறைந்து விட்டதோ என்ற அச்ச உணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்துகின்றன.

காவல்துறையினரிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் துப்பாக்கி அல்ல. துப்பாக்கியைப் பயன்படுத்தியதும், காவல்துறையினர் தங்களின் பலத்தை இழந்து, துப்பாக்கி சூடு நடத்தியது சரியான செயல் என நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். 

தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க முடியாமல், பல நேரங்களில் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள். 

"புலன் விசாரணை' செய்யும் அதிகாரம்தான் காவல்துறையிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம்.   

கடந்த காலத்தில் பெரும்பாலான கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் அதிகபட்ச தண்டனை அடைந்தது மட்டுமின்றி, மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டதைக் காணமுடிகிறது. 

ஆனால், சமீப காலங்களில் தண்டனையில் முடிவடையும் கொடுங்குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மட்டுமின்றி, அவை மேல்முறையீட்டில் விடுதலையும் பெற்று விடுகின்றன. 

நீதிமன்ற விசாரணையில் வழக்குகள் விடுதலையடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், தரம் குறைந்துவரும் புலன் விசாரணையால் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலை தற்பொழுது நிலவுகிறது.

காவல் அதிகாரிகளின் பணி இடமாற்றங்களைச் செயல்படுத்த காவல்துறையில் உயரதிகாரிகளைக் கொண்ட "நிர்வாகக் குழு' அமைக்கப்பட்டு இருந்தாலும், பல சமயங்களில் திறமையான அதிகாரிகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், அதிகார மையத்தின் பரிந்துரை பெற்றவர்கள் முக்கிய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இதன் விளைவாக மக்கள் பாராட்டும் நேர்மையான நிர்வாகத்தை காவல் நிலையங்களில் காண்பது அரிதாகி வருகிறது.

காவல்துறை நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கையூட்டு கலாசாரம் உச்சத்தில் இருந்து வருவதும், காவல்துறையினர் வெளிப்படையாக தங்களை அரசியல் கட்சிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் நடைமுறையும் நியாயம் தேடி காவல் நிலையம் செல்லும் பொதுமக்களை வேதனை அடையச் செய்திருக்கின்றன.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, குற்ற நிகழ்வு ஆகியவற்றினால் சமூகம் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் முதுகெலும்பாக விளங்கும் காவல்துறை மீதான நம்பிக்கையும், மரியாதையும் பொதுமக்களிடத்தில் குறைந்து வருவதைக் காணமுடிகிறது. 

இந்த சூழலில், நாடு முழுவதும் ஒரே காவல் சீருடை என்பதை நோக்கி பயணிக்காமல், நேர்மை, திறமை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுதல் போன்ற பண்புகளுடன் பணியாற்றும் காவலர்களையும், காவல் அதிகாரிகளையும் உருவாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டியதே இன்றைய சமுதாய நலனுக்கு இன்றியமையாதது ஆகும்.

நிதி, வரி,சுகாதாரம், கல்வி, இப்போது காவல்துறை என்று முக்கியத்துறைகளை ஒன்றிய அரசே தன்னிடம் வைத்துக் கொண்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் மிஞ்சும்.

எப்படி மக்கள் நலன் பணிகளை அவர்கள் செய்ய முடியும்.அனைத்துக்கும் ஆளுநர் கைகளை  எதிர்பார்த்ததுதான் நிற்க வேண்டும்.

இன்றைய பா.ஜ.க ,ஆளுநர்களின் செயல்பாடுகளை பார்த்தால் இந்தியா ஒன்றியத்தில் உள்ளோரின் சர்வதிகார ஆட்சியை நோக்கித்தான் நகர்வது போல் உணர முடிகிறது.

---------------------------------------------------------------------------- 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?