அலைபேசி பயங்கரம்!


செங்கல்பட்டைச் சேர்ந்த தனுஷ் என்கிற 9 வயது சிறுவன் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததன் காரணமாக, அவனது பார்வை பறிபோனது. 
வியாசர்பாடியில் மெத்தை மீது சார்ஜ் போடப்பட்டு வைத்திருந்த செல்போன் வெடித்து மெத்தை தீப்பற்றி அவ்வீட்டில் இருந்த கணவன் - மனைவி இருவரும் இறந்தனர். 
சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்திகள் இவை. நம் வாழ்வியலில் இரண்டறக் கலந்து விட்ட செல்போன் உயிருக்கும் உலை வைக்குமா என்பதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம். ஏன் இந்த விபத்துகள் நடந்தன? செல்போனை எவ்வாறு கையாள வேண்டும்?

செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனுள் மின்சாரம் ஏற்றப்படுவதன் காரணமாக அது சூடாகும். அப்போது செல்போன் பயன்படுத்துவதை முடிந்த வரை தடுக்கலாம். பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். நிறைய பேர் இரவு படுக்கும்போது சார்ஜ் போட்டு விட்டு தூங்கி விட்டார்கள் என்றால், சராசரியாக 8 மணி நேரம் கழித்து தூங்கி எழுந்த பின்புதான் கழற்றுவார்கள்.

பேட்டரி சார்ஜ் ஆன பிறகும் மின் இணைப்பில் இருக்கும்போது, வெளியாகும் மின்சாரத்தை பேட்டரி தாங்காது என்பதோடு, அது வெடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கிற கால அளவுக்குள்தான் சார்ஜ் போட வேண்டும்.

பெட்ரோல் பங்கில் செல்போன் உபயோகிக்கக்கூடாது எனும் எச்சரிக்கையைப் பார்த்திருப்போம். செல்போனில் இருந்து வெளிப்படும் அலைவரிசை பெட்ரோலின் ஆவியோடு ஸ்பார்க் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதால்தான். 
முடிந்த வரை தேவை அடிப்படையில் மட்டும் செல்போனை பயன்படுத்துவதே சிறந்தது.

தலையணைக்குப் பக்கத்திலேயே செல்போனை வைத்துக் கொண்டு படுப்பதும் தவறுதான். சார்ஜ் போட்டு பயன்படுத்தும் எல்லா செல்போன்களும் வெடிப்பதில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதே சிறந்தது.தலையணைக்குப் பக்கத்திலேயே செல்போனை வைத்துக் கொண்டு படுப்பதும் தவறுதான்.
=========================================================================
"251 "ன்னா ? அல்லது "111"ன்னா ??
Freedom’ என்ற வார்த்தைக்குள் இந்தியாவே சிறைபட்டுப் போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கடந்த வாரத்தில் யாரைப்  பார்த்தாலும் மந்திரம் போல உச்சரித்த வாக்கியம், 
‘ஃப்ரீடம் 251 போன் புக் பண்ணியாச்சா?’ 
நிஜமாகவே 251 ரூபாயில் ஒரு ஸ்மார்ட் போன்  கிடைக்கிறதென்றால் யார்தான் விடுவார்கள்? ஆனால், நாஞ்சில் ஸ்டைலில் ‘‘அது வராது’’ என்கின்றன அனுபவமுள்ள டெக் நிறுவனங்கள்.

‘‘மக்கள் பணத்தை ஏமாற்றும் மிகப் பெரிய ஊழலாக இது இருக்கப் போகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
என்னதான் உண்மை?



இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே உலகின் மிக மலிவான ஸ்மார்ட் போன் இந்த ‘ஃப்ரீடம் 251’தான். அதுவும், நான்கு கோர் ப்ராசஸர், 4  அங்குல தொடுதிரை, 1 ஜி.பி ராம், 8 ஜி.பி கொள்ளளவு என சகல வசதிகளும் வெறும் 251 ரூபாய்க்கு. 
ஆரம்பத்தில் இதை புரளி என்றுதான்  மக்கள் நினைத்தார்கள். நிஜமாகவே ஒரு விழா நடத்தப்பட்டு, பி.ஜே.பியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இதை  வெளியிட்டதும்தான் பற்றிக்கொண்டது பரபரப்பு.ஆப்பிளின் அடுத்த போன் என்ன, சாம்சங்கின் சாதனை போன் எது என விவாதித்துக்  கொண்டிருந்த உலகம், சட்டென்று கலவரமாகி இந்தியா பக்கம் திரும்பியது. காரணம், இந்த விலையில் இப்படியொரு போன் வெளிவந்தால்  ‘மொபைல் போன் தயாரிக்கிறேன்’ எனப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பாதிப் பேர் ஊரைப் பார்த்துப் போக வேண்டியதுதான். (இதில்  நோக்கியா போன்ற பெரு நிறுவனங்களும் அடக்கம்)

இப்படியொரு போனை அறிவித்து உலகையே கதிகலங்க வைத்திருப்பது ‘ரிங்கிங் பெல்ஸ்’... நொய்டாவில் இயங்கும் சிறு இந்திய நிறுவனம்  இது. 
விவசாயத் துறை சார்ந்த பொருட்களைத் தயாரித்து வந்த இவர்கள், திடீரென்றுதான் மொபைல் தயாரிப்பில் இறங்கினார்கள். 
ஏற்கனவே  இவர்கள் தயாரித்து விற்கும் Smart 101 என்ற ஸ்மார்ட் போனின் விலை ரூ. 2,999/- திடீரென அதை விடப் பத்து மடங்கு விலை குறைவாக  எப்படி ஒரு மொபைலைத் தயாரிக்க முடியும்? 
‘‘நாங்கள் இந்தியாவிலேயே உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதாலும் அதிக எண்ணிக்கையில்  உற்பத்தி செய்வதாலும் லாபத்தைக் குறைத்துக் கொள்வதாலும் இந்த விலையில் தர முடியும்!’’ என வெளியீட்டு விழாவில்  சொல்லியிருக்கிறார் இந்நிறுவனத்தின் தலைவரான அசோக் சதா. 
இதற்காக நொய்டாவிலும் உத்தர்காண்டிலும் இரு பெரும்  தொழிற்சாலைகளை அவர்கள் நிறுவப் போகிறார்களாம்.

ஆனால், இது சாத்தியமா என்பதில்தான் சந்தேகத்தை விதைக்கிறார்கள் சந்தை நிபுணர்கள். ஏற்கனவே இந்திய அரசும் டேட்டாவிண்ட் என்ற  நிறுவனமும் இணைந்து உருவாக்கிய 3000 ரூபாய் ‘ஆகாஷ்’ டேப்லட் என்ன கதியானது என அனைவருக்கும் தெரியும். 
விலையைக்  குறைப்பதற்காக டேட்டாவிண்ட் தரமற்ற உதிரிப் பாகங்களைப் பயன்படுத்த, அந்த டேப்லட் ஆமை வேகத்தில் இயங்க, மக்களே அதைப்  புறக்கணித்துவிட்டார்கள். 
3000 ரூபாய் என்ற மலிவு விலைக்கே இந்த கதியென்றால் 251 ரூபாய் போன் எப்படியிருக்கும்?

‘‘இவர்கள் சொல்லியிருக்கும் வசதிகளின் படி ஒரு போனை உருவாக்கவே குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவாகும். 
அதை எப்படி இந்த  விலைக்கு விற்க முடியும்? 
சீனாவிலிருந்து உதிரிப் பாகங்கள் வாங்குவதை விட இந்தியாவில் அவற்றைத் தயாரிப்பது அதிக செலவு பிடிக்கும்  வேலை. 
ஆக, இந்த விலைக்கு அவர்கள் மொபைல் தர வாய்ப்பே இல்லை!’’ என்கிறார் டேட்டாவிண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுனித் சிங்  துலி.

இந்த போனில் ‘தூய்மை இந்தியா’ போன்ற அரசு தயாரிப்பு ஆப்கள் இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். 
‘மேக் இன் இந்தியா’  திட்டப்படி இது தயாரிக்கப்படும் என்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை இது நனவாக்கும் என்கிறார்கள். 
அதே சமயம் மத்திய அரசின்  எந்தத் தலையீடும், உதவியும் இந்த முயற்சியில் இல்லை என்றும் சொல்கிறார்கள். இங்கேயே ஏதோ இடிக்கிறது. 
ஒருவேளை திரைமறைவாக  இப்படிப்பட்ட மொபைல்களுக்கு நிதி உதவி செய்து, இந்த போன் வைத்திருப்பவர்களை எல்லாம் பி.ஜே.பியின் பிரசார வளையத்துக்குள்  கொண்டு வரப் போகிறார்களோ என்றும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
இதையெல்லாம் விட இன்னொரு சம்பவம்... ஃப்ரீடம் 251 போன் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் டெக் விமர்சகர்கள்  கையில் ‘இதுதான் ஃப்ரீடம் 251’ என்று சில போன்கள் தரப்பட்டன. 
உற்றுப் பார்த்தால் அது Adcom என்ற நிறுவனத்தால் ஏற்கனவே  மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் Ikon 4 என்ற 4000 ரூபாய் போன். 
போனுக்குப் பின்னால் இருந்த Adcom என்ற பெயர் வொயிட்னர்  கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது.

‘‘என்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா’’ என மீடியா கேள்வி கேட்க, ‘‘இது சும்மா டெமோ பீஸ்... உண்மையான போனை நாங்க  இனிமேல்தான் தயாரிக்கப் போகிறோம்’’ எனச் சொல்லியிருக்கிறது ரிங்கிங் பெல்ஸ் தரப்பு. 
அதாவது, காபி வேண்டுபவர்களிடம் ஆர்டர்  எடுத்து காசெல்லாம் வாங்கிய பிறகுதான் இவர்கள் கன்றுக்குட்டி வாங்கவே போகப் போகிறார்கள்.

இதை நம்பி நம்ம ஊர் இளைஞர்கள் பிப்ரவரி 18 அன்று காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து www.freedom251.com என்ற விற்பனைத் தளத்தின்  முன் தவமாய் தவமிருந்தார்கள். பெயர், முகவரி, செல்போன் நம்பர் எல்லாம் உள்ளிட்டபின் பலருக்கும் வந்த பக்கமே திரும்பத் திரும்ப  வந்துகொண்டிருந்தது. 
‘நம்ம பர்சனல் விவரங்களைத் திருடுறாங்களோ’ எனப் பலர் மெர்சல் ஆனது உண்மை. 
இதையும் தாண்டி நிமிடத்துக்கு  6 லட்சம் பேர் இந்த மொபைலுக்காக முட்டி மோதியிருக்கிறார்கள். நிச்சயம் பல லட்சம் பேர் தலா 251 ரூபாய் கொடுத்திருப்பார்கள்.  
சொன்னபடி இவர்களுக்கு மொபைல் கிடைக்குமா? 
இல்லை, இதுவும் கோல்டு காயின், ஈமு கோழி கதையாகுமா? 
அது ஜூன் 30க்குள்  தெரிந்துவிடும்!

நவநீதன்
-
========================================================================
=======================



-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?