திங்கள், 19 ஜூலை, 2021

உளவு பார்ப்போம் வாரீர்.

 பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது.

பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.

ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பெகாசஸ் எப்படி வேலை செய்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போனை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம்.

இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க முடியும்.

அத்துடன் மறையாக்கம் செய்யப்பட்ட ( encrypted) மேசேஜ்களை கூட பெகாசஸ் மூலம் படிக்கலாம் என கெஸ்பர்ஸ்கி சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்

மறையாக்கம் செய்யப்பட்ட மேசேஜ்களை அனுப்புநர் மற்றும் பெறுநரால் மட்டுமே படிக்க முடியும். மெசேஜிங் தளங்களை நடத்தும் வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களால் கூட அதை பார்க்க முடியாது.

ஒரு நபரின் ஃபோனில் பெகாசஸ் நுழைந்தவுடன், வேவு பார்ப்பதற்குத் தேவையான மாட்யூல்களை இன்ஸ்டால் செய்யும். பின்னர் ஃபோனின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும்.

மேலும் அதைக் கட்டுப்படுத்துபவர்களுடன் 60 நாட்களுக்கு மேலாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது தவறான ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டாலோ தானாக அழிந்துகொள்ளும் வகையில் அது வடிவமைப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தொடங்கிய சர்ச்சை

பெகாசஸ் மூலம் மக்கள் உளவுபார்க்கப்படுவதை 2016-ம் ஆண்டு ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அகமது மன்சூர் கண்டறிந்தார்.

மன்சூரின் செல்போனுக்கு பல எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதில் உள்ள இணைப்புகள் தவறான நோக்கத்திற்காக அனுப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகப்பட்டார்.

இதனால், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர்களிடம் தனது செல்ஃபோனை ஒப்படைத்து, தனக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்-கள் குறித்து ஆராயுமாறு கூறியுள்ளார்.

மன்சூரின் சந்தேகம் சரிதான். ஒருவேளை எஸ்.எம்.எஸ்-களில் இருந்த இணைப்புகளை அவர் கிளிக் செய்திருந்தால், அவரது ஃபோன் பெகாசஸ் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கும். மன்சூரின் போனை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள், இந்த தாக்குதலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று எனக் கூறியுள்ளனர்.

பெகாசஸ்

பட மூலாதாரம்,

அதன் பின்னர் 2017-ம் ஆண்டு பெகாசஸ் மூலம் மக்களை வேவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மெக்சிகோவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

தங்களது ஃபோன்களை ஒட்டுக் கேட்பதாகப் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெக்சிகோ அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பெகாசஸ் பயன்படுத்தப்படும் என்ற நிபந்தனையுடன், இந்த மென்பொருளை என்எஸ்ஓ மெக்சிகோ அரசுக்கு விற்றுள்ளது என அந்த செய்தி கூறுகிறது.

``இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால், இது ஸ்மார்ட் ஃபோனைக் கண்டறிந்து அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் பிற உரையாடல்களைக் கண்காணிக்கும். போனின் மைக் அல்லது கேமராவையும் இதனால் இயக்க முடியும்`` என 2017-ம் ஆண்டில் வெளியான செய்தியில் தி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

போலி ஃபேஸ்புக் தளத்தை உருவாக்கிய என்எஸ்ஓ

பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ஹேக்கிங் மென்பொருளை ரகசியமாக அனுப்புவதற்கு, ஃபேஸ்புக் போன்ற ஒரு வலைத்தளத்தை என்எஸ்ஓ உருவாக்கியதாக 2020-ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.

மதர்போர்டு எனும் செய்தி இணையதளம் நடத்திய புலனாய்வில், பேஸ்புக் போலவே காட்சியளிக்கும் ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் பெகாசஸ் ஹேக்கிங் டூலை என்எஸ்ஓ பரப்பியது கண்டறியப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் `இட்டுக்கட்டப்பட்டவை` என கூறி என்எஸ்ஓ மறுத்தது. இந்த இஸ்ரேலிய நிறுவனம் ஏற்கனவே ஃபேஸ்புக் உடனான சட்டப் போரில் சிக்கியுள மூலாதாரம்,

வாட்ஸ்அப் மூலம் வேவு மென்பொருளை பரப்பி, தங்களது வாடிக்கையளர்கள் மொபைல்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக ஃபேஸ்புக் வழக்கு தொடர்ந்தது.

இந்த மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மொபைல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக ஃபேஸ்புக் கூறியது.

வேவு பார்க்கப்பட்ட ஜமால் கஷோக்ஜி

சௌதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது செல்போனும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவரது குடும்பத்தினரின் செல்போனும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்

கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை சௌதி அரேபியா வாங்கியது. நாட்டில் உள்ள மாறுபட்ட கருத்து கொண்டவர்களை நசுக்குவதற்கும், வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கண்காணிப்பதற்கும் இந்த மென்பொருளை சௌதி பயன்படுத்தியது என தி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

  • பாதிக்கப்பட்ட அல் ஜசீரா செய்தியாளர்கள்

கடந்த டிசம்பர் 2020-ல் டஜன் கணக்கான அல் ஜசீரா செய்தியாளர்கள் செல்ஃபோன்கள் வேவு பார்க்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், அல் ஜசீராவின் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 36 பேரின் செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கண்காணிப்பு

கடந்த ஆண்டு, கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிக்க உதவும் மென்பொருளை உருவாக்கியதாக என்எஸ்ஒ நிறுவனம் கூறியது. இதற்கு மொபைல் ஃபோன் தரவைப் பயன்படுத்துகிறது. இதை நடைமுறைப்படுத்த உலகெங்கிலும் பல அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சில நாடுகள் இதை சோதனை செய்வதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

பெகாசஸ்

பட மூலாதாரம்,

என்எஸ்ஒவின் பதில் என்ன?

தன் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்எஸ்ஒ மறுக்கிறது.

இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

இந்தத் தரவுகள் எங்கள் நிறுவனத்தின் 'சர்வர்களில்' இருந்து கசிந்தது என்பதே நகைப்புக்குரியது. ஏனெனில் இந்தத் தரவுகள் எங்கள் கணினிகளின் சர்வகளில் சேமித்து வைக்கப்படவே இல்லை. ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் தவறான அனுமானங்கள் மற்றும் உண்மையுடன் பொருந்தாத கோட்பாடுகளுடனும் உள்ளன. அவர்களுக்கு தகவல் வழங்கியவர்களின் நம்பகத்தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஐயங்கள் எழுகின்றன என்கிறது என்எஸ்ஓ.

பெகாசஸ்

பட மூலாதாரம்

``எங்கள் தொழில்நுட்பம் பாலியல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கும், காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்தான டிரோன்களிடம் இருந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு, பயங்கரவாத குற்றங்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனம் உயிர்களை காப்பாற்றும் பணியில் இருக்கிறது. எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை`` என என்எஸ்ஒ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். அவதூறு வழக்கு தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

---------------------------------------------------------

த்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 75 பதவிகளில் 67 இடங்களை பா.ஜ.க.வும் சமாஜ்வாதி கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பா.ஜ.க.-வுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையில் அப்படித்தானா என்பதைப் பார்க்கலாம். இது தொடர்பாக பிபிசி-யின் இந்தி சேவையின் செய்தியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் படித்தால், இந்த வெற்றியின் அர்த்தம், அதன் பின்னணியை புரிந்துகொள்ளலாம்.

மொத்தமுள்ள 75 இடங்களில் 22 இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் 21 இடங்கள் பா.ஜ.க-வுக்கும் 1 இடம் சமாஜ்வாதி கட்சிக்கும் கிடைத்தது. மீதமுள்ள 53 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டதில் 46 இடங்களைப் பா.ஜ.க.-வும் ஐந்து இடங்களை சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தை ஆர்.எல்.டி.-யும் ஒரு இடத்தை ஜன்சட்டா தளமும் வென்றிருக்கின்றன.

அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த வெற்றிகளை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமென்றே பலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அது அப்படியில்லை. நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர்.

இங்குதான் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தபோது மொத்தமுள்ள 3052 இடங்களில் பா.ஜ.க. 603 இடங்களையே பிடித்தது. மாறாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 842 இடங்களில் வெற்றிபெற்றது.

பெரும்பான்மையான இடங்களை சுயேச்சைகளே கைப்பற்றினர். இந்த சுயேச்சைகள்தான் இப்போது பா.ஜ.க.-வால் விலைக்கு வாங்கப்பட்டு, பெரும்பாலான தலைவர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்த்து காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், பெரும்பாலன இடங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களையே நிறுத்தவில்லை.

“இந்தத் தேர்தலை செமி – பைனல் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். மக்களே வாக்களிக்காதபோது அதை எப்படி செமி – ஃபைனல் என்று சொல்லலாம்? வேண்டுமானால் ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலை செமி – ஃபைனல் என்று சொல்லலாம். அதில் பெரும்பலான இடங்களை சமாஜ்வாதி கட்சிதான் பிடித்தது. அரசின் ஆதரவுடன்தான் இம்மாதிரி தேர்தல்கள் வெல்லப்படுகின்றன” என்கிறார் உ.பியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கலகன்ஸ்.

தவிர, இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க. பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.பி-யும் காங்கிரசும் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு சுயேச்சை உறுப்பினருக்கும் லட்சக் கணக்கில் பணம் தரப்பட்டது. ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சைகள் உடனடியாகக் கடத்தப்பட்டு, தலைவர் தேர்தல் முடியும் வரை பா.ஜ.க-வின் பிடியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், கடந்த மூன்று முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மூன்று முறையும் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடித்ததோ, அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

“2010-ம் ஆண்டில் மாயாவதியின் பி.எஸ்.பி பெரும்பாலான தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2012-ம் ஆண்டில் பெரும்தோல்வியடைந்தது அக்கட்சி. 2016-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி பெரும்பாலான தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2017-ம் ஆண்டில் பெருந்தோல்வியைச் சந்தித்தது. இப்போது பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.” என்கிறார் சித்தார்த்.

---------------------------------------------------------------------------------

வியாழன், 15 ஜூலை, 2021

வெள்ளைக்காரன் ஆட்சி

 தேச துரோக சட்டப்பிரிவு 124ஏ' 75 வருடங்களுக்குப் பிறகும் அவசியமா? 

தேச விரோத குற்றச்சாட்டை சுமத்த பயன்படுத்தப்படும் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்த 75 பிறகும் அவசியமாகிறதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.வொம்பாட்கெரே தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, விடுதலை உணர்வை ஒடுக்கவும் காந்தி, பாலகங்காதர் திலக் போன்றோருக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட காலனிய கால சட்டப்பிரிவு இன்னும் தேவையா என்று இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரிடம் (அட்டர்னி ஜெனரல்) கேள்வி எழுப்பியது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, இதே விவகாரத்துடன் தொடர்புடைய எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்த வழக்குடன் சேர்த்து ஒரே விவகாரமாக விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், "இந்த விவகாரம் தங்களுடைய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள அதே அம்சத்தை கொண்டுள்ளது. சட்டப்பிரிவை பயன்படுத்துவதில் சில வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் 124ஏ பிரிவு அரசியலமைப்புக்கு எதிராகவும் அது அப்பட்டமாக தவறாக பயன்படுத்தப்படுவது பற்றியும் நாங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரசின் தலைமை ஆலோசகரிடம் தலைமை நீதிபதி ரமணா கேள்விகளை எழுப்பினார்."தேச விரோத சட்டப்பிரிவின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் வரலாற்றை பார்த்தீர்கள் என்றால், தண்டனை விகிதம் மிகக் குறைவாகவே இருந்துள்ளதை அறியலாம். இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படும் விதத்தை, ஒரு மரத்தை அறுக்க கொடுக்கப்பட்ட ரம்பத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த காட்டையே அழிப்பதற்கு இணையாக ஒப்பிடலாம்," என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின்படியும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் எப்படி அந்த பிரிவை சட்ட அமலாக்க அமைப்புகள் பயன்படுத்துகின்றன என்றும் தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

"தவறாக சட்டப்பிரிவு பயன்படுத்தப்படும் போது அதற்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுப்புடைமை ஆக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பிற வழக்குகளையும் ஆராய்ந்து நிலுவையில் உள்ள அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே விவகாரமாக விசாரிக்கப்படும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு பல்வேறு பழைய சட்டங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி திருத்தம் செய்து கொண்ட இந்திய அரசு, எப்படி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை மட்டும் மாற்ற பரிசீலிக்காமல் போனது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கே.கே. வேணுகோபால், "இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அதன் நோக்கம் சட்டபூர்வமாக அமல்படுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்கலாம்," என்று கூறினார்.

இருப்பினும், ஒரு தரப்பால் எதிர் தரப்பு குரலை கேட்க முடியாமல் போனால் பிறகு எதிர் தரப்புக்கு எதிராக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படலாம் அல்லது தவறாக ஒரு குற்றச்சாட்டில் சேர்க்கப்படலாம். தனி நபர்களைப் பொருத்தவரை இது மிகவும் தீவிர பிரச்னை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கின் மனுதாரர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல். இந்த நாட்டுக்காக தமது மொத்த வாழ்வையும் அவர் அர்ப்பணித்துள்ளார். எனவே இதை உள்நோக்கம் கொண்ட மனுவாக கருதி விட முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா மனுவுடன் வொம்பாட்கெரே மனுவையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட அறிவுறுத்திய நீதிபதி, அதன் பிறகு மனுதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரிட்டார்.

1962ஆம் ஆண்டில் கேதார்நாத் சிங்குக்கும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் வொம்பட்கெரே.

இந்திய அரசியலமைப்பின் 19(1) விதியில் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரிமையின்படி ஒருவர் தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாமல், அதை அரசுக்கு எதிரான செயல்பாடு போல குற்றம்சாட்டி கிரிமினல் குற்றமாக்க முற்படுவது, குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் பொம்பட்கெரே கூறியிருந்தார்.

எனவே, அரசியலமைப்பின் 14, 21 ஆகியவற்றை பின்பற்றும் வகையில், அவற்றுக்கு எதிரான சட்டப்பிரிவு அவசியத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தும் தேவை எழுகிறது என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு, கேதார்நாத் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டது என்பதற்காக அதே அளவுகோலை வைத்து அந்த சட்டப்பிரிவை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்றும் அதுவே அந்த சட்டப்பிரிவை ஏன் மறுஆய்வு செய்யக்கூடாது என்ற கேள்வியின் அவசியத்தை நீதிமன்றத்துக்கு உணர்த்துவதாகவும் பொம்பாட்கெரே மனுவில் கூறியுள்ளார்.

இதே 124ஏ சட்டப்பிரிவுக்கு எதிராக மணிப்பூரை சேர்ந்த கிஷோர் சந்திரா வாங்கெம்சா, சத்தீஸ்கரை சேர்ந்த கன்னையா லால் ஷுக்லா ஆகிய இரு செய்தியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு யு.யு.லலித், இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசஃப் ஆகிய நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

124ஏ சட்டப்பிரிவு என்ன சொல்கிறது?

எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால் அல்லது மற்றபடி இந்தியாவில் சட்டபூர்வமாக அமைந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அது குற்றமாக கருதப்படும்.

இதற்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை அல்லது அபாரதம் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இதில்,"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது.

இந்தியாவில் விடுதலை முழகத்தை எதிரொலிப்பவர்களை ஒடுக்க இந்த தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு இயற்றியது. ஆனால், அதே பிரிட்டன் நாட்டில் இந்த சட்டம் 2009இல் நீக்கப்பட்டது. இந்தியாவில் இன்னும் தொடருகிறது.

---------------------------------------------------------------------------

தோழர்

சங்கரய்யா.


இன்று நூறாவது பிறந்த நாளைக் காணும் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, தன் வாழ்வின் குறிப்பிடத்தக்க காலகட்டத்தை நாட்டிற்கான போராட்டங்களில் சிறையில் கழித்தவர். சங்கரய்யாவின் வரலாறு என்பது தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும்கூட.

இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கு எதிரான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் சங்கரய்யா.

தற்போது தூத்துக்குடியில் உள்ள ஆத்தூரைச் சேர்ந்தது சங்கரய்யாவின் குடும்பம். சங்கரய்யாவின் தாத்தா எல். சங்கரய்யா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் நரசிம்முலு பம்பாயில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு, கோவில்பட்டியில் செயல்பட்டுவந்த ஜப்பானிய நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கும் அவருடைய மனைவி ராமானுஜத்திற்கும் 1922 ஜூலை 15ஆம் தேதி சங்கரய்யா பிறந்தார். அவருக்கு எட்டு சகோதர - சகோதரிகள். சங்கரய்யாவுக்கு பெற்றோர் இட்டபெயர் பிரதாபசந்திரன்.

ஆனால், தனது பெயரையே தன் பேரனுக்கு வைக்க வேண்டுமென தாத்தா வலியுறுத்தியதால், அவரது பெயர் சங்கரய்யா என மாற்றப்பட்டது. 1930ல் நரசிம்முலு மதுரை ஹார்வி மில்லில் பணியாற்ற மதுரைக்கு குடும்பத்தோடு சென்றார். புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்தார் சங்கரய்யா. 1937ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தார்.

அந்த காலத்தில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடமும் மேலோங்கிவந்த அந்த உணர்வை கல்லூரி முதல்வர் பிளிண்ட் விரும்பவில்லை. இருந்தபோதும் சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் தேசிய உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டனர். அப்போது சென்னை மாகாண பிரதமராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாயப் பாடமாக்கியபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் சங்கரய்யா.

இதற்குப் பிறகு சுதந்திர போராட்டத்திற்கென சென்னையில் செயல்பட்ட சென்னை மாணவர் சங்கத்தைப் போலவே மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கரய்யா அதன் செயலாளரானார். மதுரையில் உள்ள மக்கள் பிரச்சனைக்காக இந்த சங்கம் தொடர்ந்து ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. இதன் பிறகு பல்வேறு இடங்களில் மாணவர் சங்கங்கள் துவக்கப்பட்டன.

இதில் கலவரமடைந்த கல்லூரி முதல்வர் பிளின்ட், சங்கரய்யாவை அழைத்து வேறு கல்லூரிக்குச் சென்றுவிடும்படி கூறினார். ஆனால், சங்கரய்யா மறுத்து விட்டு, அமெரிக்கன் கல்லூரியிலேயே படிப்பைத் தொடர்ந்தார்.

துவக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சங்கரய்யா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேசிய விடுதலை இயக்கத்தின் பக்கம் திரும்பினார். அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே 'பூரண சுதந்திரம்' கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்ததால், அந்த கட்சியில் இணைவதென முடிவெடுத்தார் சங்கரய்யா. ஆனால், அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

1941ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அதனைக் கண்டித்து அமெரிக்கன் கல்லூரியில் கூட்டம் நடத்தி, பேசினார் சங்கரய்யா. முடிவில் பிப்ரவரி 28ஆம் தேதி காலையில் காவல்துறை ஆய்வாளர் தீச்சட்டி கோவிந்தனால் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார்.

பி.ஏ. தேர்வுக்கு 15 நாட்களே இருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டதால், அவர் படிப்பைத் தொடர முடியாது போயிற்று. மதுரைச் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சங்கரய்யா 1942 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். ஜூலை மாதம் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வெளிப்படையாக தன் செயல்பாட்டைத் தொடங்கியது. இதையடுத்து பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக சங்கரய்யா கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து கண்ணணூர் சிறைக்கும் பிறகு தஞ்சாவூர் சிறைக்கும் மாற்றப்பட்ட சங்கரய்யா 1944ல் விடுதலை செய்யப்பட்டார்.

சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே, கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழுவின் தலைவராக சங்கரய்யா தேர்வானார். இதற்குப் பிறகு, ஆங்கிலேய அரசால் தொடரப்பட்ட மதுரைச் சதி வழிக்கில் சங்கரய்யா சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சங்கரய்யா 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது பொய் வழக்கு என்பதை நிரூபித்து, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, அதாவது இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் சங்கரய்யா விடுவிக்கப்பட்டார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆசிரியையான நவமணியைத் திருமணம் செய்தார் சங்கரய்யா.

இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தடைசெய்யப்படுவதற்கு முன்பாகவே கைது நடவடிக்கைகள் துவங்கின. சங்கரய்யா தலைமறைவானார். சுமார் இரண்டு ஆண்டு காலம் தலைமறைவாக இருந்தபடி, மாறுவேடம் பூண்டு கட்சிப் பணியை மேற்கொண்டார் சங்கரய்யா.

1948-51ல் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறை கடுமையாக இருந்தது. பலர் கொல்லப்பட்டனர். பாலு தூக்கிலிடப்பட்டார். ஐ.வி. சுப்பய்யா சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். 1950ல் உமாநாத் இருந்த தலைமறைவு மையம் கண்டுபிடிக்கப்பட்டு, உமாநாத் பாப்பா, கல்யாணசுந்தரம் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். 1951ல் சங்கரய்யாவும் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட சங்கரய்யா, முதல் பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார் செய்வதில் தீவிரமானார். இந்தத் தேர்தலில் மதுரை வடக்குத் தொகுதியில் பி. ராமமூர்த்தி வெற்றிபெற்றார்.

1957ல் நடந்த பொதுத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார் சங்கரய்யா. ஆனால், வெற்றிகிடைக்கவில்லை.

1962ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் யுத்தம் மூண்டபோது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். சங்கரய்யாவும் கைதுசெய்யப்பட்டார்.ஆறு மாதங்களுக்குப் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.

1963ல் மார்க்சிய - லெனினியப் பார்வையோடு தீக்கதிர் நாளேடு வெளியாக ஆரம்பித்தது. சங்கரய்யா, பி. ராமமூர்த்தி உள்ளிட்டோரின் கட்டுரைகள் புனைப்பெயரில் வெளியாக ஆரம்பித்தன. இந்த கட்டத்தில் கட்சி, தி.மு.கவுக்கு எதிராக காங்கிரசுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது. இதனை சங்கரய்யா உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

1964ல் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் கட்சி இரண்டாக உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மாநிலக் குழுவில் சங்கரய்யா இடம்பெற்றார். 1965ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார். 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.

1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். சட்டமன்ற துணைத் தலைவராகவும் தேர்வானார். 1967ல் திருவாரூரில் நடந்த விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில், சங்கரய்யா மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். 1969ல் மாநிலத் தலைவராகவும் தேர்வானார். 1982, 91லும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். இந்த காலகட்டங்களில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கூட்டங்களிலும் போராட்டங்களிலும் பங்கேற்றார் சங்கரய்யா.

1977லிலும் 1980லும் நடந்த தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட சங்கரய்யா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசிய சங்கரய்யா, மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தினார்.

1986ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார் சங்கரய்யா. அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியக் குழுவில் இருந்து வருகிறார் அவர்.

1995ல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரிவரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

என். சங்கரய்யா - நவமணி தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். நான்கு பேரன்களும் மூன்று பேத்திகளும் உள்ளனர்.

---------------------------------------------------------------------------

புதன், 14 ஜூலை, 2021

5 மணிநேரத்துக்கு ஒரு என்கவுன்ட்டர்

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.

போலி என்கவுன்டர்கள், லவ் ஜிகாத், கோவிட் பேரிடர் அலட்சியம் என பல விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். என்ன நடக்கிறது உ.பியில்?

இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி, காவல், வெளியுறவு, வனத்துறை, வருவாய் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், `அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (constituition conduct group)' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.

`அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே ஆட்சி நடக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளனர். விவசாயிகள் போராட்டம், லட்சத்தீவு விவகாரம் போன்றவற்றில் சிசிஜி எழுதிய கடிதங்கள், அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அந்த வரிசையில், `உ.பி மாநிலத்தில் ஆட்சி முறையின் மொத்த சீர்குலைவு மற்றும் சட்டத்தின்படியான ஆட்சிக்கு எதிராகப் பல செயல்கள் நடக்கின்றன' என்பதை திறந்த மடலில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அந்த மடலில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த மீனா குப்தா, முதல் தகவல் ஆணையராக இருந்த வஜாகத் ஹபிபுல்லா, பா.ஜ.க அரசில் டெல்லி துணைநிலை ஆளுநராக பணிபுரிந்த நஜீப் ஜங், பஞ்சாப் ஆளுநரின் ஆலோசகர் மற்றும் ருமேனியாவின் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த ஜூலியோ ரிபைரோ, முன்னாள் வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஷ்யாம் சரண், வெளிநாடுகளில் தூதராகப் பணியாற்றிய சுஷில் துபே, மகாராஷ்டிர மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த வி.பி.ராஜா, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ், மேற்கு வங்க மாநில அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி.பாலச்சந்திரன் உள்பட 236 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இவர்களில் 78 பேர் மட்டுமே சி.சி.ஜியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள், மேலை நாட்டுக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரன்
படக்குறிப்பு,

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரன்

``உ.பி மாநிலத்தைப் பற்றி தற்போது திறந்த மடல் எழுத வேண்டிய அவசியம் என்ன?" என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.

`` இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்புகின்ற மாநிலம் அது. மிக அதிகப்படியான மக்கள் தொகை உள்ள மாநிலமாக இருந்தாலும் படிப்பறிவின்மை போன்ற சில சமுதாய சிக்கல்களும் அங்கு காணப்படுகின்றன. இங்கு சிறுபான்மைச் சமூகமான இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். உ.பி மாநிலத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு, `இந்துத்துவ' என்ற மத அடிப்படையில் சில செயல்கள் நடப்பதும் அவை சிறுபான்மை மதத்தவருக்கு விரோதமாக இருப்பதும் கண்கூடாகக் காணப்பட்டது.

இதுதவிர, `போலீஸ் என்கவுன்ட்டர்' என்ற பெயரில் நடத்தப்படுகின்ற அரசு வன்முறைகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு எதிராகக் காணப்பட்டது. இந்த என்கவுன்டர்கள் காவல்துறையினரைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் அல்ல. இதுதவிர `லவ் ஜிகாத்' என்ற பெயரில் அரசு கொண்டு வந்த சட்டமாகட்டும். அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகட்டும் எல்லாமே சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களாக உணரப்பட்டது.

பொதுவாக, அரசை எதிர்த்து எந்தவொரு கருத்தைக் கூறினாலும் அதை தேசவிரோதக் கருத்தாகச் சித்தரிப்பதுவும், அத்தகையை கருத்துகளைக் கூறுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற மிகக் கடுமையான சட்டங்களைப் பிரயோகிப்பதுவும் காணப்பட்டது.

இவை அனைத்தும் ஜனநாயகத்துக்கு எதிரானவை. அதையும் தவிர, கோவிட் தொற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும், அவை எந்தளவில் பின்னடைவை சந்தித்துள்ளன என்பதைப் பற்றியும் கூற முற்பட்டவர்களின் மீதும் குற்ற வழக்குகள் பாய்ந்துள்ளன என்பது மிகவும் துரதிஷ்டவசமானது. இவை அனைத்தையும் கண்ட பிறகுதான் இப்படியொரு திறந்த மடல் எழுத வேண்டிய தேவை உள்ளது என்று உணர்ந்தோம். இந்த திறந்த மடல் மக்களுக்காக எழுதப்பட்டது. உ.பி.யில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது" என்கிறார்.

உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

பட மூலாதாரம்சுரன்

``உ.பி அரசு எந்தவகையில் சட்டவிரோதமாகச் செயல்படுவதாக உணர்கிறீர்கள்?" என்றோம். `` குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அமைதியான வழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது நாடு முழுவதும் நடைபெற்றது. அதேபோல், உ.பியிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை உ.பி அரசு எவ்வாறு கையாண்டது? அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த மாணவர்களைக் காவலர்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அவர்கள் மீது பயங்கரவாதிகளை தாக்குவதற்குப் பயன்படும் ஸ்டென் கிரானேடை பயன்படுத்தினார்கள்.

10,990 எஃப்.ஐ.ஆர்; 22 மரணங்கள்

இதனைத் தொடர்ந்து 10,990 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. கலவரத்தைத் தூண்டி, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் 705 பேர் மீது வழக்குகள் பதிவானது. 13,000-க்கும் அதிகமான சமூக வலைதளப் பதிவுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 63 எஃப்.ஐ.ஆரும் 103 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 41 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

பொதுச் சொத்துகளை நாசப்படுத்தியதாக 500 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதற்காக நஷ்ட ஈடு தர வேண்டும் என 57 நபர்கள் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில். இதன் முடிவு வருவதற்கு முன்னரே முன்னாள் டி.ஜி.பி உள்பட பலரின் புகைப்படங்களை பொது நோட்டீஸாக வெளியிட்டு அவர்கள் மீது பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்த உ.பி உயர் நீதிமன்றம், `இது ஜனநாயகத்துக்கு விரோதமானது' எனப் பதிவு செய்தது.

ஜனநாயகரீதியாக போராடுகிறவர்கள் மேல் இத்தகைய தாக்குல்களை நடத்துவது என்பது அரசின் சகிப்புத்தன்மையின்மையைக் காட்டுவதாகவே பார்க்கிறோம். எனவே, திறந்த மடலில் அதைக் குறிப்பிட்டோம். மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், உத்தரபிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும், அரசு நிர்வாகத்தின் அனுமதியுடன் எரிக்கப்பட்ட வந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்து செய்தி கொடுப்பதற்காகச் சென்ற சித்திக் கப்பான் என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார். அவர் 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். முதலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது உ.பி அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்பின், இதைப் பற்றி செய்தி எடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தனர்".

உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

பட மூலாதாரம்

``போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளதாகச் சொல்கிறீர்கள். அதைப் பற்றி விளக்க முடியுமா?" என்றோம்.

`` முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு 2017 முதல் 2020 வரையில் 124 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதாவது, 6,476 மோதல்களில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் கொடும் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களைச் சுட்டுக்கொல்வது மட்டுமல்லாமல், பலரை முழங்காலுக்குக் கீழே சுடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பல பேர் ஆயுள் முழுக்க மாற்றுத் திறனாளிகளாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அரசு பதவியேற்றதற்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் ஐந்து மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு என்கவுன்ட்டர் நடந்துள்ளது என்பதை அரசு கொடுக்கும் தகவல்களில் இருந்தே அறிய முடிகிறது. இதுதவிர, 2019 ஜனவரியில் உ.பி மாநிலத்தின் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், என்கவுன்டர்கள் போன்ற சட்டவிரோத மரணங்களை எல்லாம் அரசின் சாதனைகளாகக் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் யாரையெல்லாம் சுட்டுக் கொன்றுள்ளார்களோ, அவர்கள் எல்லாம் சிறு குற்றங்கள் புரிந்தவர்களாகவோ, அல்லது எந்தக் குற்றங்களும் செய்யாதவர்களாகவோ இருந்துள்ளனர்.

மிகப் பயங்கரமான குற்றவாளிகள், கைது செய்யப்படுவதை எதிர்த்து, காவலர்களுடன் சண்டையிட்டு, அதன் விளைவாய் காவலர்கள் உயிருக்கு ஆபத்து வரும் சூழ்நிலையில், தற்காப்புக்காக மட்டுமே, தங்களைத் தாக்குகிறவர்கள் மீது துப்பாக்கியை பிரயோகிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சிறு குற்றவாளிகளை நிரபராதிகளையோ `என்கவுன்டர்' என்ற பெயரில் கொல்லுவதோ நிரந்தர காயம் ஏற்படுத்துவதோ எப்படிச் சரியாக இருக்க முடியும். அதிலும், 2020 ஆகஸ்ட் வரையில் இதுபோன்ற என்கவுன்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகர், சிறுபான்மையினராக உள்ளனர் என்பது தெரியவருகிறது. இது தற்செயலானதா.. திட்டமிடப்பட்டதா என்ற கேள்வி எழத்தான் செய்யும். இவை தவிர, பசு தடுப்புக் குழு போன்ற சில குழுக்களை `காவலர் நண்பர்' என்ற பெயரில் உ.பி அரசே ஆதரிப்பதையும் கவலைக்குரிய விஷயமாக உணர்ந்தோம்" என்கிறார்.

உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

பட மூலாதாரம்,

``சரி.. லவ் ஜிகாத் விவகாரத்தில் என்ன நடந்தது?" என்றோம். `` 2020 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று உ.பி அமைச்சரவை ஓர் அவசரச் சட்டத்தை (Uttar Pradesh Prohibition of Unlawful Religious Conversion) அமல்படுத்தியது. அதன்பிறகு 2021 பிப்ரவரி 25 அன்று முறையாக வாக்களிக்காமல் `குரல் வாக்கெடுப்பு' மூலம் இது சட்டமாக்கப்பட்டது. இதற்கென சிறப்பு நுண்ணறிவுப் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்க வெளிநாடுகளில் இருந்து நிதி வருவது குறித்தோ அல்லது திட்டமிட்ட சதிச் செயலாக இந்தக் காதல்கள் நடத்தப்படுகின்றன என்பது குறித்தோ எந்தவித ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை.

2021 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி பார்த்தால், லவ் ஜிகாத் என்பது எந்தச் சட்டத்தின்படியும் விளக்கமாகக் கூறப்படாத ஒன்று என்பது தெளிவாகிறது. அதாவது, லவ் ஜிகாத் என்பது உ.பி அரசு கற்பித்துக் கொண்ட ஒரு வார்த்தைப் பிரயோகம் என்பது தெரியவருகிறது. கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து இந்தச் சட்டம் இருப்பதால், அதன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையாகப் பார்த்தால் முஸ்லிம் ஆண்கள், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தால், திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீது இந்தச் சட்டம் பாய்ந்திருக்கிறது.

இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகக் கைதானவர்களில் பெரும்பாலோனார் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதாக உள்ளது என்பது பல்வேறு செயல்களின் மூலம் திரும்பத் திரும்ப நிரூபணமாகியுள்ளது. அண்மையில் பாரபங்கி என்ற இடத்தில் ஒரு மசூதி உள்ளடங்கியதாக உள்ள ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது சட்டத்தின் வழி இவர்கள் நடப்பதாகத் தெரியவில்லை. சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக தங்கள் செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது தெரியவருகிறது" என்கிறார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நிலை.

உ.பியில் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?" என்றோம். `` 1980 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது குற்றம் இழைப்பதற்கு முன்னர், குற்றம் இழைக்கும் மனப்பான்மை உள்ளவர்களைப் கைது செய்வதற்கும் அவர்களை ஓராண்டு சிறையில் வைப்பதற்கும் வழிவகை செய்கிறது. யாரெல்லாம் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் வைத்திருக்க முடியும். ஆனால், உ.பியில் இந்தச் சட்டம் முஸ்லிம்கள், பட்டியலினத்தவர்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள்மீது, சட்ட விரோத முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளின்படி பார்த்தால், உ.பியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டு 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 76 பேர் பசு வதைக்காகக் கைது செய்யப்பட்டனர். 13 பேர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டனர். 37 பேர் கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவை தேசவிரோதமானவையா என்பதைப் பார்க்க வேண்டும். தவிர, பசு வதைக்காக கைது, குடியுரிமை சட்டத்துக்காக கைது போன்றவற்றின் மூலம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது தெரியவருகிறது.

2017 ஆம் ஆண்டில் உ.பி மாநில டி.ஜி.பி, `பசு வதை செய்பவர்களையோ அல்லது பசுக்களை வதைப்பதற்காகப் பயணப்படுகிறவர்களையோ என்.எஸ்.ஏ மற்றும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யுங்கள்' என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது தெரிகிறது" என்கிறார்.

கங்கையில் மிதந்த பிணங்கள்

உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

பட மூலாதாரம்,

``சி.சி.ஜி எழுதியுள்ள மடலில் கொரோனாவை எதிர்த்து உ.பி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை சாடியுள்ளது சரிதானா?" என்றோம். `` அப்படியில்லை. கொரோனாவை எதிர்த்து செயலாற்றுவது என்பது அரசின் கடமை. உ.பியில் நிலைமை எப்படியிருந்தது எனப் பாருங்கள். `கடவுளின் இரக்கம் இருந்தால் மட்டும்தான் உ.பியில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் போலத் தெரிகிறது' என அலகாபாத் நீதிமன்றம் கசந்து போய்த் தெரிவித்தது. கொரோனா தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து கருத்துக் கூற முயன்ற மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தனோலி என்ற ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அங்கு பல சிற்றூர்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன அல்லது போதிய பணியாளர்கள் இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகளவில் இருந்திருக்க வேண்டும். அங்கு நிலைமை அவ்வாறு இல்லை. ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் இறப்பது சாதாரணமான ஒன்றாக இருந்துள்ளது. இப்படியெல்லாம் தகவல் வரும்போது, முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் கூற்றில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், `இப்படித் தவறான தகவல்களைப் பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் கூறினார். `ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது' என எந்த மருத்துவ நிலைய அதிகாரிகள் கூறினார்களோ, அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோவிட் பரிசோதனை செய்வதற்கே மக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர். இந்த நிலையில், பல நூற்றுக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதந்து செல்வதை செய்திகள் மூலம் அறிய முடிந்தது. கங்கையில் இறந்தவர்களின் பிணங்களைப் போடுவது மத வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் ஒரேநேரத்தில் இவ்வளவு பிணங்கள் வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை அரசு ஆராய்ந்திருக்க வேண்டும். அவ்வாறு உ.பி அரசு செய்ததாகத் தெரியவில்லை.

6 யோசனைகள்

உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

பட மூலாதாரம்

`` இவற்றை நிவர்த்தி செய்வதற்கு சி.சி.ஜி முன்வைக்கும் ஆலோசனைகள் என்ன?" என்றோம். `` முதலாவது, உ.பியில் அமைதியான முறையில் போராடுகிறவர்களை எந்தக் காரணமும் இல்லாமல் கைது செய்வது, சித்ரவதை செய்வது போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவது, சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மீது சட்டவிரோதமாக நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏறத்தாழ 6,000 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதை பெரும் சாதனைகளாக அம்மாநில அதிகாரிகளே கூறுகின்றனர். கை தேர்ந்த, எதற்கும் அஞ்சாத குற்றவாளிகளுடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே காவல்துறை தன்னுடைய பலத்தைப் பிரயோகிக்க வேண்டும்.

மூன்றாவது, `போலீஸின் நண்பர்கள்' எனச் சொல்லிக் கொள்ளும் இந்து யுவ வாகினி போன்ற குழுக்கள் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். இத்தகைய குழுக்களுக்கு அரசு ஆதரவளிக்கக் கூடாது. நான்காவது, யாராவது ஒரு முஸ்லிம், இந்துப் பெண்ணைப் காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும். கட்டாய மதமாற்றம் இருந்தால் நிச்சயமாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒருவர் காதலிக்கிறார், திருமணம் செய்து கொள்கிறார் என்பதற்காகக் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஐந்தாவதாக, தேசிய பாதுகாப்புச் சட்டம் வரையறுத்துள்ள அதிகாரத்தின்படி, யார் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், அரசுக்கு எதிர்ப்பு உணர்வைக் காட்டுகிறவர்கள் போன்றவர்கள் மீது பிரயோகிக்கக்கூடாது. அவ்வாறு பிரயோகிப்பது சட்டவிரோதமானது. அரசே அந்த சட்டவிரோதச் செயலைச் செய்யக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ஆறாவது, கோவிட் பேரிடர் என்பது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. அரசுக்கும் நிச்சயமாக பிரச்னைகள் உள்ளன. மிகுந்த சிரமத்துக்கிடையேதான் இதனை தீர்ப்பதற்கு அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவோம். இத்தகைய நோயைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எங்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம். அதேசமயம், மருத்துவ வசதிகள் எந்த நிலைமையில் உள்ளது என்ற உண்மையைக் கூறினால்கூட வழக்கு போடும் நிலைமை மாற வேண்டும். தங்களிடம் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத குறைகளைப் போக்க வேண்டும்.

பல மாநில அரசுகள் இந்திய அரசிடமும் வெளிநாடுகளிலும் உயிர்காக்கும் ஆக்சிஜனை வாங்கின. தன்னிடம் இருக்கும் இயலாமையை மறைப்பது என்பது கோவிட் தொற்றை அதிகப்படுத்தவே செய்யும். திறந்த மனதுடன் கோவிட் தொற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்க வேண்டும்" என்றார்.

நன்றி: bbcதமிழோசை.

-----------------------------------------------------------------------------