12 லட்சம் கோடி ரூபாய்
அமித் சா கை பரபரக்கிறது.
இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகத்தில் ஒரு பிரிவாக இருந்த கூட்டுறவுத் துறையை, தனி அமைச்சகத்தின்கீழ் கொண்டு வந்துள்ளனர். ` இதனால் கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது' என்கின்றனர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?
இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த கூட்டுறவுத் துறையை தனியாகப் பிரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. 'கூட்டுறவு அமைச்சகம்' (Ministry of Cooperation) என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்கீழ் தேசிய அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், பல மாநில கூட்டுறவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனம், தேசிய அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை வருகின்றன.
அதேநேரம், தனி அமைச்சகத்தின் முயற்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. `` கூட்டுறவு அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக திகழ வேண்டும் என்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் 97வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக நகர கூட்டுறவு வங்கிகளை சட்டத் திருத்தம் மூலம் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. கூட்டுறவுத் துறை என்பது மாநில அரசின்கீழ் உள்ள துறையாகும். தனி அமைச்சகத்தை உருவாக்குவது தொடர்பாக மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமலேயே அறிவித்துள்ளனர். இதனால் மாநில அரசின் உரிமைகளும் அதிகாரமும் பறிபோய்விட்டது. இது கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரானது" என்கிறார் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி.
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக மேலதிக தகவல்களைப் பட்டியலிட்டார். `` நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. வராக்கடன் என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கிகளில் முதலிடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடன்பெற்ற 685 பேர் செலுத்த வேண்டிய கடன் பாக்கி தொகை மட்டும் 43,887 கோடி ரூபாய். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 பேருக்கும் மேல் 200 கோடி ரூபாய்க்கும் மேலாக கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். மேலும், `வராக்கடன் நஷ்டம்' எனக் கூறி வங்கிகளை கலைத்தும் இணைத்து வருகிறார்கள்.
தற்போது இந்திய அரசின் கவனம் முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மீது திரும்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது. கேரளாவில் மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகர கூட்டுறவு வங்கிகளில் 8.6 கோடி வைப்பீட்டாளர்களின் வைப்பீடு தொகை மட்டும் 4.85 லட்சம் கோடி. இதுபோன்று அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள வைப்பீடுகளை காலி செய்வதற்காகவே கூட்டுறவுக்கு என்று தனி அமைச்சகத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளதாக அச்சப்பட வேண்டியுள்ளது" என்கிறார்.
மேலும், `` கூட்டுறவுத் துறை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதி செய்துள்ளது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே வராக்கடன் குறித்து அபாய சங்கினை ஊதியுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள வைப்புத் தொகையினை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதற்காக மாநில உரிமையை பறித்து கூட்டுறவு நிறுவனங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது கூட்டுறவின் தன்னாட்சி அமைப்பை தகர்க்கவே செய்யும். இதனால் அடுத்து வரும் நாள்களில் மக்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம். மேலும், கூட்டுறவு நிர்வாகங்களில் இந்திய அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அபாயம் ஏற்படும். இதனால் கூட்டுறவு அமைப்புகள் தொடங்கப்பட்டதன் நோக்கம் முற்றிலுமாக சீரழியும்.
கூட்டுறவு இயக்கம் என்பது 150 ஆண்டுகால வரலாற்றினை கொண்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரூர் கிராமத்தில்தான் முதல் கடன் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதேபோன்று முதல் நகர கூட்டுறவு வங்கியும் 1904 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் தங்களது கடன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் நீண்ட காலமாக மக்களின் உணர்வுடன் ஒன்றிணைந்து கூட்டுறவு இயக்கம் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 1,482 நகர கூட்டுறவு வங்கிகளையும் 58 பலமாநில கூட்டுறவு வங்கிகளையும், `ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் கொண்டு வருகிறோம்' எனவும் இதனால் கூட்டுறவு வங்கியில் நடைபெறும் முறைகேடுகளை களையவும், வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, `` ஏற்கனவே நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுத்தான் செயல்படுகின்றன. மேலும் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏதோ இப்போதுதான் நகர கூட்டுறவு வங்கிகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம் என்பதெல்லாம் வெளி உலகுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழுள்ள பொதுத்துறை வங்கிகளில் 2019 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாத காலத்தில் நடைபெற்ற மோசடிகளால் ஏற்பட்ட நஷ்டம் என்பது 5,743 கோடியாக உள்ளது. நாட்டில் அதிக கிளைகளைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25,400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10,800 கோடி மோசடி அரங்கேறியது. பேங்க் ஆஃப் பரோடாவில் 8,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் மட்டும் வங்கிகளில் நடைபெற்ற 5,916 மோசடிகளால் 41,167 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் மோசடிகள் என்பது 15 சதவிகிதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பஞ்சாப், மகாராஷ்டிரா நகர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அதிர்ச்சி அடைந்த 5 வைப்பீட்டாளர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் வங்கியில் முதன்மையான வங்கியாக இருந்த யெஸ் வங்கியும் திவாலாகிவிட்டது. மேலும் இந்திய அரசு அறிவித்த முத்ரா கடன் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களில் தொடர்ந்து வராக்கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் எச்சரித்திருந்தார். அடுத்துவந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவியிலிருந்து விலகிய பின், `உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்குவது சிக்கலை உருவாக்கும்' எனக் கூறியிருந்தார். இதையெல்லாம் தடுப்பதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை.
நாடு முழுவதும் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல மாநில கூட்டுறவு வங்கிகளின் நிதி ஆதாரத்தை பயன்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் வைப்பீடு செய்பவர்களுக்கு மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைவிட கூடுதலாக வட்டி வழங்கப்பட்டுள்ள நிலையில் `வட்டி சீரமைப்பு' என்ற பெயரில் வைப்பீட்டாளர்களுக்கு வட்டிவிகிதம் குறைக்கப்படும் அபாயமும் உள்ளது. வைப்பீட்டாளர்களின் வைப்பீடு மீது வருமானவரி கணக்கு மற்றும் வருமானவரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. கண்காணிப்பு என்ற பெயரில் ஏற்கனவே உள்ள கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கும் மேலாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளை மேலாண்மை நிர்வாகிகளை பணியமர்த்தலாம்.
இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்படும். ஆளும்கட்சி அரசியல் பின்னணியில் இவ்வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகள் முத்ரா கடன், பண்ணை சாரா கடன் என மடைமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. இது ஏதோ நகரகூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் அனைத்து விவசாயம், பால், கைத்தறி உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு இந்திய அரசு முன்னெடுப்பதற்கான முன்னோட்டமாகவே உள்ளது" என்கிறார்.
---------------------------------------------------------------------------------