செவ்வாய், 6 ஜூலை, 2021

மூளை என்றொரு ஆச்சரியம்.

 ATMமோசடி 

வடமாநிலத்தவர் ஆதிக்கம்.

இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.

சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு செய்திருப்பது தெரிந்தது.

அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும் சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும், மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:

இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள் நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து பதிவிடுகின்றனர். இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.

இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள் குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என, பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம் புகார் அளிக்கின்றனர். மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத் தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள், குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு, ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என, சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி) எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை திருடுகின்றனர்.

இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும் வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க, மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது. தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்கவேண்டும், என்றனர்.

--------------------------------------------------------

மூளை என்றொரு ஆச்சரியம்.

அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியலாளரும், பிபிசியில் ஒளிபரப்பாகும் ‘தி ப்ரெய்ன்’ என்ற புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சியை வழங்குபவருமான டேவிட் ஈகிள்மேன், மனித மூளையின் அசாத்தியமான நெகிழ்வுத்தன்மை குறித்து சமீபத்தில் எழுதியுள்ள ‘லைவ்வயர்ட்’ நூல் குறித்து ‘தி கார்டியன்’ இதழுக்கு ஒரு நேர்காணலை அளித்துள்ளார். புதிய அனுபவங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மூளை எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்த நேர்காணலில் பகிர்கிறார். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக இவர் கைக்கடிகாரத்தின் வடிவத்தில் உருவாக்கிய ‘பஸ்’ (buzz) என்ற கருவி, ஒலியை வெவ்வேறு அதிர்வு வடிவங்களாகப் பெயர்த்து என்ன சத்தம் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பதாகும்.

நமது கபாலத்துக்குள் மூன்று பவுண்ட் எடையில் கொழகொழப்பாக இருக்கும் சிறிய உறுப்பான மூளையில் நடக்கும் நிகழ்ச்சியை ‘உயிர்மின்தடம்’ (live wire) என்று கூறுகிறார். அங்கே 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 10 ஆயிரம் இணைப்புகளைக் கொண்டவை. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியைக் கடக்கும்போதும் மூளையை அவை மறுவடிவாக்கம் செய்துகொண்டேயிருக்கின்றன. இந்தப் பத்தியை வாசித்து முடிக்கும்போதே, இதை வாசிக்கத் தொடங்கிய நபர் சற்றே மாறிய வேறு நபர் என்கிறார் ஈகிள்மேன்.நியூ மெக்சிகோவில் இருக்கும் அல்பகொகீ நகரத்தில் செயல்படும் போதைப்பொருள் விற்பனையாளர்களின் செயல்திறனுடன் மூளையின் செயல்திறனை ஈகிள்மேன் ஒப்பிடுகிறார். ஒரு குழந்தையின் மூளையில் பாதி அளவு அறுவைச்சிகிச்சை மூலம் துண்டிக்கப்படுகிறதென்று வைத்துக் கொள்வோம். மிச்சமிருக்கும் மூளை, அந்தப் பாதிப் பகுதிக்குத் தனது தொடர்பிணைப்பு களைப் புதுப்பித்துக் கொண்டு செயல்படத் தொடங்கிவிடும் என்கிறார். ஈகிள்மேன் தான் பிறந்து வளர்ந்த அல்பகொகீ நகரத்தின் ஒரு பகுதி, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்றால் அழிந்துபோய்விட்டால், அங்குள்ள போதைப்பொருள் வியாபாரிகள், மிச்சமிருக்கும் பகுதியில் தங்கள் இணைப்புகளைப் பலப்படுத்தி வியாபாரத்தை வெற்றிகரமாகத் தொடரும் காரியத்துடன் மூளையின் செயலை ஒப்பிடுகிறார். மூளைக்குள் இருக்கும் பல நூறு கோடி நியூரான்கள் தங்களது சொந்தப் பிராந்தியத்துக்காக, அல்பகொகீ நகரத்து போதைப்பொருள் வியாபாரிகளைப் போலவே போராடுபவை என்கிறார்.

ஒரு நபருக்குப் பார்வை பறிபோய்விட்டாலோ, அவர் தனது கை, காலை இழந்துவிட்டாலோ, உடனடியாக அதற்கு ஏற்றபடி தகவமைக்கும் ஏற்பாடுகள் மிக வேகமாக மூளையில் நடக்கத் தொடங்கிவிடுகின்றன. வெள்ளையர்கள் நிறைய மக்களை அனுப்பியதால் பிரெஞ்சு மக்கள் வடஅமெரிக்காவில் தாங்கள் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை இழந்ததைப் போன்ற நிகழ்ச்சிதான் அது. மூளையின் ஒவ்வொரு செல்லும் உயிர்ப்பைத் தக்கவைக்கத் தங்கள் ‘அண்டை வீட்டாருடன்’ தொடர்ந்த யுத்தத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

உறங்கும்போது கனவுகள் தோன்றுவதற்கான காரணத்தை ஈகிள்மேன் விளக்கும் விதம் ஆச்சரியத்தைத் தருவது. புலன்களுக்குள் நடக்கும் போட்டி, அவை ஒன்றையொன்று வெல்ல முயல்வதன் ஓர் உதாரணச் செயல்பாடே கனவுகள் என்கிறார். ஒருவரின் கண்ணைத் துணியால் கட்டிவிட்டால், கொஞ்ச நேரத்தில் தொடுதல் மற்றும் செவிப்புலன்களில் மாற்றங்கள் தொடங்குகின்றன. மூளையின் பார்வைத் திறன் சார்ந்த அம்சத்தைத் தொடு புலனும், செவிப் புலனும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகின்றன. அதேபோலத்தான் நாம் உறங்கப் போகும்போது, பார்வை மண்டலம் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இருட்டில் நம்மால் முகரவும் கேட்கவும் தொடவும் ருசிக்கவும் முடிகிறது. ஆனால், பார்ப்பது இயலாததாகிறது. ஒவ்வொரு இரவும் இப்படியாக, நாம் உறங்கும்போது, கருவிழிகள் இயக்கத்தில் இருக்கும்போது, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வை மண்டலம், தான் எதிர்கொள்ளும் அச்சத்தை வெல்லவும் தனது ஆட்சியைப் பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கைதான் கனவுகள் என்று ஈகிள்மேன் கூறுகிறார். கனவின் வழியாக நாம் உறக்கத்திலும் நமது பார்வைப் புலன் மண்டலத்தை அனுபவிக்கிறோம். மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத உலகில் இருட்டு, மனிதனின் பார்வைப் புலனுக்கு அளித்த சவால் இது என்கிறார் ஈகிள்மேன்.

மனிதனின் பிரக்ஞையைப் புரிந்துகொள்வதும், அது எப்படி உருவானது என்பதும் இன்னமும் தீர்க்க முடியாத மர்மமாகவே திகழ்கிறதென்கிறார் ஈகிள்மேன். சிவப்பைச் சிவப்பென்றும், வலியை வலியென்றும், நறுமணமென்றும் வீச்சமென்றும் தன்வயமாக்கிப் புரிந்துகொள்வதை இன்னமும் விளக்கவே முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.

டேவிட் ஈகிள்மேன் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் முதுகலை படித்தவர். இலக்கியம்தான் தனது முதல் நேசம் என்றும் கூறுகிறார். தத்துவப் புரிதலுக்காக வகுப்புகளுக்குச் சென்றபோதுதான் நரம்பியலில் ஈடுபாடு வந்ததாகக் கூறுகிறார். தத்துவரீதியான புதிர்களில் சிக்கும்போதெல்லாம், அதிலிருந்து விடுபட முடியாத நிலையில்தான் நரம்பியலை நோக்கிய ஆர்வம் இவருக்கு எழுந்ததென்று சொல்கிறார். உலகத்தைப் பாரத்து விளக்கும் குறிப்பிட்ட இயந்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியுமானால், இந்தப் புதிர்களுக்கு விடை கிடைக்கும் என்று நினைத்துக் கல்லூரி நூலகத்தில், மூளை பற்றிக் கிடைத்த எல்லா நூல்களையும் படிக்கத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

மூளையில் மிகச் சிறிய பகுதியையே மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுவது கற்பிதம் என்கிறார் ஈகிள்மேன். நாம் எல்லாச் சமயங்களிலும் நூறு சதவீதம் நமது மூளையைப் பயன்படுத்தவே செய்கிறோம் என்னும் அவர், தகவலை உள்வாங்கும் முறைதான் வித்தியாசமானது என்கிறார். அடுத்த தலைமுறையினர் நம்மைவிடப் புத்திசாலிகளாக இருக்கப்போவது நிச்சயம் என்கிறார். ஏனெனில், விருப்பார்வம் கொண்டு பதில்களைப் பெறும்போது மூளை, அதிகபட்சமாக நெகிழ்வுத்தன்மை கொள்கிறது என்கிறார்.

அனுபவங்களுக்கும் சூழல்களுக்கும் தகுந்தாற்போல பொருந்தித் தகவமைத்துக் கொள்ளும் வகையில் நமது மூளைகள் நெகிழ்வுடன் படைக்கப்பட்டுள்ளன. கூர்மை யான பற்களும் நீளமான கால்களும் நமக்கு உயிர்தரிப்பதற்கு உதவுவதைப் போலவே மூளைகள் தம்மை மறுவடிவமைப்பு செய்து கொள்கின்றன. மூளையின் உயிர்த்தன்மை கொண்ட நுட்பமான மின்தடங்கள், புதியதைக் கற்று, திறன்களையும் மேம்படுத்திக்கொள்வதை நிறுவுகிறார் டேவிட் ஈகிள்மேன்.

-----------------------------------------------------------------------

மனிதர்கள் உலகம் முழுக்க பரவ உதவிய பாக்டீரியா


மனித இனத்தின் மூதாதையரின் குடல் பகுதியில் குடியிருந்த பாக்டீரியாக்கள் மனித பரிணாம வளர்ச்சியில் முதன்மை
பங்காற்றியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய நிலப்பரப்புகளுக்கு மனித இனம் குடிபெயர்ந்த போது அங்கு
தாக்குப்பிடித்து உயிர் வாழ இந்த நுண்ணுயிர்கள் உதவி இருக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள், மனிதக்குரங்குகள், இதர பாலூட்டிகளின் குடலில் வெவ்வேறு வகைப்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுக்கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. அப்படி ஆராய்ந்ததில் மனிதக்குடிலில் காணப் படும் பாக்டீரியாக்கள் புதிய சூழலுக்குத் துரிதமாக தங்களைத் தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது.

மனித இனத்தின் மூதாதையர் புதிய நிலப்பரப்புக்குள் நுழைந்த போது புதிய உணவு முறை மட்டுமின்றி புதிய நோய்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் உணவை பதப்படுத்த அவர்கள் வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தினார்கள். அப்போது அவர்கள் குடலில் இருந்த பாக்டீரியாக்கள் புதியவகை உணவு பண்டங்களை ஜீரணிக்கவும் ஒவ்வாமையைச் சரி
செய்யவும் கற்றுக்கொண்டன. இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியானது மனிதர்களுக்கு வளர்ந்தது.மனித குடலில் குடிகொண்டிருந்த பாக்டீரியாவின் உதவியால்தான் மனிதர்கள் வெற்றிகரமாக வெவ்வேறு பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். சொல்லப்போனால் மனிதக் குலம் உலகம் முழுவதும் பரவித் தழைத்தோங்கியது இந்த பாக்டீரியாவினால் தான் என்பதுஇந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

உடலுக்குள் இருந்தபடி மனிதர்கள் உதவியது மட்டுமல்லாமல் உணவு பண்டங்களை பதப்படுத்தவும் இந்த பாக்டீரியாக்கள் உதவுகின்றன. உதாரணத்துக்கு, மனித உடலுக்குள் குடியிருந்த பாக்டீரியாக்களை கை வழியாகப் பரிமாறமுடியும் என்பதை கண்டுபிடித்ததன் மூலம்தான் உரைமோர் கொண்டு பாலை தயிராக்கும் வித்தையை மனிதர்கள் கண்டுபிடித்தார்கள். மொத்தத்தில் மனிதர்கள் உணவைச் சேமிக்கவும் ஒரே இடத்தில் நெடுங்காலம் தங்கி வாழ்க்கையை நடத்தவும், குழுக்களாக இணைந்து கூடி வாழவும் வழி வகைசெய்தது இந்த பாக்டீரியாக்கள் என்றால் மிகையாகாது என்கிறது இந்த ஆய்வு.

--------------------------------------------------------------------------