முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நமது பூமி எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துகள்.

 பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன.
இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? 

தீர்வு என்ன என்பது குறித்து மிக மிக முக்கியமான, விரிவான அறிவியல் அறிக்கையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது ஓர் ஐ.நா. அமைப்பு.

இந்த அறிக்கை இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகும்.

இது போன்ற தீவிர பேரிடர்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன? பருவநிலை மாற்றத்துக்கும் அவற்றுக்கும் என்ன தொடர்பு? எந்த அளவுக்கு பருவநிலை மாற்றம் ஆபத்தான கட்டத்துக்கு பூமியை கொண்டு சென்றிருக்கிறது? தீர்வு என்ன என்பது குறித்தெல்லாம் உலக அளவில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி ஒரு அறிக்கையை உருவாக்குகிறார்கள்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு என்ற ஐ.நா. அமைப்பு இந்த விரிவான அறிக்கையை உருவாக்கி வருகிறது. பருவநிலை மாற்றம் புவியை எதிர்நோக்கும் அடுத்த கட்ட ஆபத்தாக உருவாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் கருதும் நிலையில், இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல நாடுகளுக்குமான கையேடு போல இந்த அறிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

2013ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமாக அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி இந்த அறிக்கை விரிவாகப் பேசும்.

195 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறார்கள். விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை வரிக்கு வரி விவாதித்து இந்த அறிக்கையை உருவாக்குவார்கள்.

அரசுகளுக்கு இந்த 40 பக்க அறிக்கை ஒரு அறைகூவலாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்து வரும் புவி வெப்ப நிலையை ஆராயும் மைய அமைப்பாக ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு இருக்கிறது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதி தீவிர இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையை தற்போது தயாரிக்கிறது ஐபிசிசி. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் பற்றிய கேள்வி இப்போது முன்னெப்போதையும் விட உரத்து கேட்கிறது.

ஐபிசிசி என்றால் என்ன?

1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.

1950ல் இருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிடப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கை கூறியது முக்கியத்துவம் பெற்றது. 2015ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.

6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.


தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018ல் வெளியிட்டது ஐபிசிசி. அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.

"காரணம், இந்த அறிக்கை எல்லோரைம் ஆச்சரியப்படுத்தி, சிந்திக்கவைத்தது. இது எதிர்காலப் பிரச்னை அல்ல. இப்போதைய பிரச்னை என்ற எண்ணத்தை இந்த அறிக்கை தந்தது" என்கிறார் ஐபிசிசி துணைத் தலைவரும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான கோ பாரெட்.

ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக உள்ள ஐபிசிசி அறிவியல் அறிக்கையும் அதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. புவி வெப்பமாதல் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் கிளாஸ்கோவில் சந்திக்க உள்ளார்கள். COP26 மாநாட்டில் பங்கேற்கும் பலரும் இந்த அறிக்கையை படித்துவிட்டு வரவேண்டியிருக்கும்.

"தூக்கத்தில் இருந்து எழுப்புகிற அறைகூவலாக இது இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை," என்கிறார் ரிச்சர்ட் பிளாக் என்ற விஞ்ஞானி. லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள கிரான்தம் இன்ஸ்டிடியூட்டில் கௌரவ ஆய்வாளராக இருக்கிறார் இவர்.

ஐபிசிசி என்பது வெறும் விஞ்ஞானிகள் அமைப்பு என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. 195 நாடுகளின் பிரதிதிநிகள் இதில் இருக்கிறார்கள். பல கல்விப் புல ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இவர்கள் அறிக்கைகளை கோரிப் பெறுகிறார்கள் என்கிறார் ரிச்சர்ட் பிளாக்.

ஏதோ சில விஞ்ஞானிகள் எழுதுகிற அறிக்கை அல்ல ஐபிசிசி அறிக்கை. மாறாக இது அரசுகள் கோரிப் பெறுகிற அறிக்கை. அரசுகளுக்கு உரிமையான அறிக்கை. இது மிகவும் தனித்துவமானது என்கிறார் அவர்.

ஐபிசிசி எப்படி செயல்படுகிறது?

ஐபிசிசி-க்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. ஆனால், இது தாமாக ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஐபிசிசி அறிக்கை தயாரிக்கிறது. முதல் அறிக்கை இயல் அறிவியல் அறிக்கை. இரண்டாவது தாக்கம் தொடர்பான அறிக்கை. மூன்றாவது அறிக்கை, தீர்வுகள் தொடர்பான அறிக்கை. தாக்கம், தீர்வுகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியாகும். மூன்று அறிக்கைகளையும் இணைத்து அளிக்கப்படும் அறிக்கையும் அடுத்த ஆண்டு வெளியாகும்.

ஆகஸ்ட்டில் வெளியாகப்போகும் இயல் அறிவியல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் 200 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகைகளில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து அறிக்கையை உருவாக்குகிறார்கள்.

வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கலாம், அரசுகள் கருத்து கூறலாம். இதைப் போல இந்த வரைவு அறிக்கை தொடர்பாக 75 ஆயிரம் கருத்துகள் வந்தன. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கருத்துகளை எல்லாம் கணக்கில் கொண்டு இறுதி அறிக்கை 40 பக்கங்களில் தயாராகும்.

தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரியை தாண்டக்கூடாது அது மிக முக்கியம் என்று ஐபிசிசி வாதிட்டுவருகிறது. கடந்த ஆண்டு புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்பவே, இந்த ஆண்டு தீவிர இயற்கைப் பேரிடர்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், இந்த அமைப்பின் அறிக்கை கடுமையான உண்மைகளைப் பேசுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அது அரசுகளுக்கு உண்மையில் களத்தில் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்த அழுத்தத்தை உண்டாக்கும்.

------------------------------------------------------------------------------

பிச்சை எடுப்பது உரிமை.

குற்றம் அல்ல....



PREV

மகாராஷ்ட்ரா அரசு பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் என்று பிச்சை தடுப்புச் சட்டம்கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது குற்றமென்று கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீடு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா நீதிபதிகள் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



Supreme Court | பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்1


அப்போது இந்த வழக்கில், நீதிபதிகள் பிச்சைக்காரர்களை பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து விலக்க முடியாது. வறுமை என்ற ஒன்று இல்லாவிட்டால் யாரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். பிச்சை எடுப்பதற்கு தடைசெய்ய ஒருபோதும் உத்தரவிட முடியாது. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தேவைப்படுகிறது. குறிப்பாக, போக்குவரத்து நிறுத்தங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு கல்வியையும். பிச்சைக்காரர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கவேண்டும்.


இது ஒரு சமூக பொருளாதார பிரச்சினை. தேசிய தலைநகரான டெல்லியில் தெருவில் வசிப்பவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள் அவசர கவனம் செலுத்த வேண்டும். பிச்சை எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். வேண்டுமென்றால், கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களுக்கு எதிராக தனியாக சட்டம்கொண்டு வரலாம். மக்களுக்கு தேவையான உணவு, பணியிடங்களை அரசு அளிக்காதபோது பிச்சை எடுப்பதை எப்படி குற்றமாக அறிவிக்க முடியும். பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவரை வசதியானவர்கள் கண்ணோட்டத்தில் அணுக முடியாது.  



Supreme Court | பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்


இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசிற்கும். டெல்லி அரசுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.  மேலும், இந்த வழக்கின் விசாரணையை மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். இவர்களில் 2.2. லட்சம் ஆண்களும். 1.90 லட்சம் பெண்களும் அடங்குவர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.  கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலே மேற்கு வங்கத்தில்தான் ஒரு லட்சம் என்ற அளவில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?