கொரோனா - கரும் பூஞ்சை.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நிர்மலா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறினார்.
'உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களையும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களையும் எளிதாக தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய், சில நேரங்களில் நல்ல உடல் நலம் உள்ளவர்களையும் தாக்கும். கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு இப்போது இந்நோயின் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
இப்பூஞ்சை சுவாசிக்கும் காற்றிலும், வீட்டில் உள்ள அழுகிய காய்கறிகள், பழவகைகள், செடிகள் மற்றும் நாள்பட்ட ரொட்டி ஆகியவற்றிலும் பரவலாக காணப்படும்.
மூக்கடைப்பு, மூக்கிலிருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணை சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் கண் பார்வை குறைபாடு, தலைவலி, பல் வலி மற்றும் பற்கள் ஆடுவது ஆகியவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள்.
இக்கிருமி காற்றில் பரவி மூக்கின் வழியே உடலுக்குள் வருகிறது. வந்த பிறகு நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாக இருந்தால் அது நம்மை ஒன்றும் செய்யாது. நோய் எதிர்ப்பு குறையும் பொழுது இந்தக் கிருமி மூக்கில் உள்ள சதைகளின் உள்சென்று வளரும். பிறகு ரத்த நாளங்களிலும் சென்று பரவும்' என விளக்குகிறார் மருத்துவர் நிர்மலா.
கருப்பு பூஞ்சை நோய் பரவல் குறித்து விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்நோய் ஒரு மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது என தெரிவித்துள்ளது.
சர்க்கரை நோய், காச நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார் மருத்துவர் நிர்மலா.
'பூஞ்சை ஆரம்ப கட்டத்தில் மூக்கில் மட்டும் இருக்கும் போது மூக்கடைப்பு மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் கலந்த சளி வருதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். இந்த நேரத்திலேயே இந்த நோயை நாம் கண்டறிந்தால் எளிதாக குணமாக்கி விடலாம்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உள்ளபோது அல்லது மீண்ட பிறகும் கருப்பு பூஞ்சைக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சர்க்கரை நோய், காச நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துணியாலான முககவசம் பயன்படுத்துபவர்கள் முகக்கவசம் ஈரம் ஆகிவிட்டால் அதை அணியக்கூடாது. தினமும் முக கவசத்தை துவைத்து காய வைத்து பயன்படுத்த வேண்டும். ஒரே முக கவசத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடாது' என்கிறார் இவர்.
ஜுன் 30 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர், தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாகவும், தற்போது வரை 3,200 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பகுதியினர் அதில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கண் பார்வை இழப்பை தவிர்க்க என்ன செய்வது?
கருப்பு பூஞ்சை சிகிச்சையை தாமதித்தால் கண்பார்வை இழப்பு மற்றும் உயிர் இழப்பு ஏற்படும் என்கிறார் மருத்துவர் நிர்மலா.
'இந்த நோய் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர்களை உடனடியாக பரிசோதனை செய்து, என்டோஸ்கோபி சோதனை செய்யப்படுகின்றது. உடனடியாக மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.
பாதிப்புடன் வருவோருக்கு எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து மூக்கில் உள்ள அழுகிய சதைகளை எடுத்து திசு பரிசோதனைக்கு அனுப்புகிறோம். அதன் முடிவின் அடிப்படையில், எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
முகத்தில் உள்ள எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த எலும்புகளும் தேவைக்கேற்ப அகற்றப்படுகிறது. இதுவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110 நபர்களுக்கு சைனஸ் எண்டோஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து இந்த நோயை குணப்படுத்தி உள்ளோம். சுமார் 30 நபர்கள் நோய் முற்றிய நிலையில் வந்ததால் அவர்களுடைய கண் பார்வை பறிபோய் விட்டது.
ஆனால், அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்தி விட்டோம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம். தாமதித்தால் கண்பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும்.
இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமின்றி பூஞ்சை கொல்லி மருந்தையும் கொடுக்க வேண்டும். இந்த மருந்து நமது மருத்துவமனையில் தேவையான அளவு உள்ளது.
பொதுமக்கள் யாரும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்' என வலியுறுத்துகிறார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர். நிர்மலா.
ஜூன் 29 ஆம் தேதி, இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில், கொரோனா நோய்த்தொற்று தொடர்பான அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், நாட்டில் மொத்தம் 40,845 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதாக பதிவாகி உள்ளது எனவும், இதுவரை 3,129 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து குப்பிகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------
84 வயது முதியவரை
படுகொலை செய்த
பாசிச மோடி அரசு.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் 84 வயது பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி. இவர் ஜார்கண்ட் மாநில பழங்கவந்தவர். பழங்குடியின மக்களுக்கு எதிரான மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சித்தவர். இவர் இன்று உயிருடன் இல்லை. மோடி அரசின் அடுக்குமுறையால் இவர் கொல்லப்பட்டுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் என்ற இடத்தில், நடந்த கலவரத்துக்கு 84 வயது ஸ்டான் ஸ்வாமி காரணம் என கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அவரை அக்டோபர் 2020-ல் கைது செய்தது. அவர் இதுவரை பீமா கோரேகான் பகுதிக்கு சென்றது கூட கிடையாது. UAPA எனப்படும் தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் என்ற கடுமையான பிரிவில் அந்த முதிய பாதிரியாருக்கு எதிராக வழக்கு பதிந்தனர். ராஞ்சியிலிருந்து 1300 கி.மீ அலைக்கழித்து மும்பை சிறையில் அடைத்தனர்.
இந்தியாவிலேயே இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் 84 வயது நபர் இவரே. அவருக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கம்பி கட்டும் கதைகளை விட்டனர். ஆனால் ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என்.ஐ.ஏ அம்முதியவருக்கு ஏற்கனவே பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் உள்ளது. BHL எனப்படும் இரு காதுகள் கேளாமையும் உண்டு. அக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஜாமின் மறுத்தனர்.
நடுக்குவாத நோய் காரணமாக அவரால் தண்ணீர் டம்பளரை கூட கையில் ஏந்தி குடிக்க முடியாது. அவர் வைத்திருந்த உறிஞ்சு டம்பளர் மற்றும் ஸ்ட்ராக்களை பிடுங்கி வைத்துக்கொண்டது என்.ஐ.ஏ, சிறை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை. கொரோனா காரணமாக கொலை செய்தவன், தாலி அறுத்தவனை எல்லாம் பரோலில், பிணையில் அனுப்பிய கோர்ட், இந்த 84 வயது கிழவனால் இந்தியாவுக்கே ஆபத்து என கருதியது. சமீபத்தில் சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்கு அந்நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. மே மாதம் மருத்துவமனையில் சேர்க்க சம்மதித்தனர் நெஞ்சில் ஈரம் உள்ள நீதிபதிகள். ஆனாலும் நிலைமை மோசமாகி ஜூலை 5, 2021-ல் அவர் இறந்தார். அவர் இறந்தார் என்பதை விட, தனது அரசுக்கு எதிராக பேசியதால், எழுதியதால் அவரை கொன்றுப்போட்டது மோடி, அமித்ஷாவால் இயக்கப்படும் கொடூர அரசு. இக்கொலைக்கு நீதிமன்றமும் சாட்சியாகிப் போனது. ஓய்வுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பி., கனவு காணும் நீதிபதிகள் இருக்கின்ற வரை நீதி செத்துக்கொண்டு தான் இருக்கும்.
ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “எதிர்க்கட்சித் தலைவர்களான நாங்கள், மனித உரிமைப் போராளியான பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கொடூர மரணத்தால் மிகுந்த மனத்துயரோடு உள்ளோம். பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி, பலமுறை முறையிட்டும், அவருக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. மேலும் அவர் நீர் அருந்துவதற்கு ஸ்ட்ரா (Straw) வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அளவில் பலர் இதற்காக குரல் எழுப்பிய பிறகே அவருக்கு ஸ்ட்ரா வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக சிறைக் கைதிகள் இருந்த தலோஜா சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என பாதிரியார் ஸ்டேன் சுவாமி கோரிக்கை வைத்தும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அது காலதாமதமான நடவடிக்கை என்பதால் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இதனால் ஸ்டேன் சுவாமியின் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, ஜாமீனில் கூட விடுவிக்காமல் தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்திருந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்தியாவின் குடியரசுத் தலைவரான நீங்கள் உங்களுடைய அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் பாதிரியாரின் மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், UAPA எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பிஹிமா கோரிகோன் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை, தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரிகள் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ளனர்.
----------------------------------------------------------------------------முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி டெல்லியில் கொலை.
கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த இருவர் கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்ததாக டெல்லி காவல்துறை தகவல்.
----------------------------------------------------------------------------
முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தமது 98வது வயதில் காலமானார்.
அவர் சிகிச்சை பெற்றுவந்த மும்பை இந்துஜா மருத்துவமனை யில் அவர் இன்று மரணமடைந்தார்.
----------------------------------------------------------------------------
வங்கி,ரெயில், மற்ற ஒன்றிய அரசுத் துறைகளுக்கு
ஒரே தேர்வுதான்.
-2022ஆம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் சேருவதற்காக பொது தகுதிகாண் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் இந்திய பணியாளர், மக்கள் குறைதீர், அணுசக்தித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
டெல்லியில் 2021ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளின் கையேட்டை வெளியிட்ட அவர், ஏற்கெனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தபடி இதுவரை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வாணையம் (ஆர்ஆர்பி), வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) ஆகியவை நடத்தி வந்த தேர்வுகளை பொது தகுதிகாண் தேர்வு (சிஇடி)என்ற பெயரில் மத்திய அரசின் தேசிய ஆள்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) நடத்தும் என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மத்திய அரசு பணியில் தொழில்நுட்ப பதவிகள் அல்லாத குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் சேர விண்ணப்பிப்போருக்கு என்ஆர்ஏ என்ற பல்நோக்கு ஒருங்கிணைப்பு முகமையே பொது தகுதி தேர்வை நடத்தும்.
இந்த தேர்வு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மையத்திலாவது நடத்தப்படும். இதன் மூலம் தொலைதூரத்தில் உள்ளவர்களும் அவர்கள் சார்ந்த மாவட்ட மையத்திலேயே தேர்வை எழுதலாம்.
பெண்கள், மாற்றுத்திறனாளி, தொலைதூர விண்ணப்பதாரர்கள், இனி அவர்களின் சமூக பொருளாதார பின்புலத்தை கடந்து இந்த தேர்வுகளை எழுத முடியும். ரயில்வே, வங்கி, மத்திய பணியில் சேர பொதுவான தேர்வை எழுதுவதன் மூலம் தனித்தனியாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நேரமும் அதற்கான மையங்களுக்கு தனித்தனியாக பயணிக்க வேண்டிய நேரமும் சேமிக்கப்படும்.
- இந்த தேர்வு கணிப்பொறி பயன்படுத்தி எழுதக்கூடியதாக இருக்கும்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ்களில் அத்தாட்சி கையொப்பம் பெற அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் பெறுவதற்கு பதிலாக விண்ணப்பதாரரே சுயமாக தமது சான்றிதழ் நகலில் அத்தாட்சி கையெழுத்திடலாம்.
பணியில் சேர தேர்வானவுடன் தொடங்கும் முதல் மூன்று மாதங்களை ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவி செயலாளர்களாக பணிபுரிய தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
பொது தகுதிகாண் தேர்வு இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் நாடு முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்துவதற்கு இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
---------------------------------------------------------------------------
எல்லையற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள, “உலக பத்திரிகை சுதந்திர தரவரிசை”யில் பட்டியலிடப்பட்டுள்ள 180 நாடுகளில், இந்தியா 142-வது இடத்தில் இருக்கிறது.
இதே அமைப்பு, பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் என 37 தலைவர்களின் பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலிலும் மோடி இடம்பெற்றுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான், மியான்மாரின் புதிய இராணுவ சர்வாதிகாரி மின் ஆங் ஹ்லைங், வட கொரியாவின் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரசிய அதிபர் விளாடிமிர் புடின், பெல்லாரஸின் அலெக்சாண்டர் லூகாஷென்கோ, ஈரானின் அலி காமனேனி, சிரிய அதிபர் பஷார் அல் அஸாட் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களைப் பற்றி அடையாளப்படுத்துகையில், “பத்திரிகை தணிக்கைக்கான ஏற்பாடுகளை செய்தல், பத்திரிகையாளர்களை மனம்போன போக்கில் சிறையிலடைத்தல் அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுதல், தங்கள் கையில் இரத்தக்கறையின்றி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பத்திரிகையாளர்களைக் கொலை செய்தல்” ஆகியவற்றைச் செய்யும் நபர்களாகக் குறிப்பிடுகிறது.
தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, “பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள்” (Predators of Press Freedom) ஒவ்வொருவரும், பத்திரிகை சுதந்திரத்தை எப்படி எப்படியெல்லாம் நசுக்குகிறார்கள் என்ற வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இத்தகையோர் ஒவ்வொருவரும் எப்படி பத்திரிகையாளர்களை மட்டறுக்கிறார்கள் மற்றும் எப்படி துன்புறுத்துகிறாரக்ள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுவோரின் விருப்பமிக்க இலக்குகளைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளது. இவர்கள் குறிப்பாக ஒடுக்கும் ஊடக வெளியீட்டகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வகைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் தங்களது நடத்தையை நியாயப்படுத்தும் விதமாக இவர்கள் கொடுத்த நேர்காணல்கள் மற்றும் அவர்களது பேச்சுக்கள் ஆகியவற்றில் இருந்து முக்கியமான வரிகளையும் எடுத்துக் காட்டியுள்ளது இந்த அறிக்கை.
பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் 37-வது இடத்தைப் பிடித்துள்ள மோடியைப் பற்றியும் இந்தப் பத்திரிகை, மேற்கூறியவகையில் பரிசீலித்து விவரித்துள்ளது.
மோடியைப் பற்றி குறிப்பிடுகையில், 2014-ம் ஆண்டு மே 26 அன்று ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து பத்திரிகை சுதந்திரத்தை மோடி வேட்டையாடி வருவதாகக் தெரிவிக்கிறது. மேலும் அவரது வேட்டையாடும் வழிமுறையைப் பற்றி விவரிக்கையில் “தேசிய பிரபலவாதம் மற்றும் தவறான தகவல் பரப்புதல்” எனும் முறையை மோடி பயன்படுத்துவதாக தெரிவித்தது. மதச்சார்பற்றவர்கள் மீதும் பாஜகவை விமர்சிக்கும் ஊடகங்கள் மீதுமே அவரது அவரது முக்கியமான தாக்குதல்கள் இருப்பதாகக் கூறுகிறது.
மதச்சார்பற்றவர்களை (Seculars) நோயுற்றவர்கள் (Sickulars) என்றும், தம்மை விமர்சிக்கும் ஊடகங்களை(Press) விபச்சார ஊடகங்கள் (Presstitudes = Press + Prostitudes) என்றும் மோடியின் ஆதரவாளர்கள் பயன்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறது இந்த அறிக்கை.
சுதந்திர ஊடகத்தின் மீதான மோடியின் தாக்குதல் குறித்து இந்த அறிக்கை குறிப்பிடுகையில், “குஜராத்தின் முதலமைச்சராக 2001-ம் ஆண்டு அமர்ந்த பிறகு, செய்திகள் மற்றும் தகவல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை சோதனை செய்யும் களமாக குஜராத்தை மோடி பயன்படுத்திக் கொண்டார் என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்தியப் பிரதமராக 2014-ம் ஆண்டு அமர்ந்ததும், அந்த வழிமுறையை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தினார்.
தனது தேசிய – பிரப்லவாத சித்தாந்தத்தை நியாயப்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு மையநீரோட்ட ஊடகங்களை நிரப்புவதையே தனது முன்னணி ஆயுதமாக மேற்கொண்டார். இதற்காக அவர் மிகப்பெரும் மீடியா சாம்ராஜ்ஜியத்தை சொந்தமாகக் கொண்டுள்ள ஒரு பெரும் பில்லினியர் தொழிலதிபருடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கிக் கொண்டார்.
ஊடக முதலாளிகளுடனான பிணைப்பு இரண்டு வழிமுறைகளில் வேலை செய்தது.
முன்னணி ஊடகங்களின் முதலாளிகளுடன் வெளிப்படையாக நெருக்கத்தைக் காட்டுவதன் மூலம் அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, மோடி அரசை விமர்சித்தால் பணி பறிபோய் விடும் எனும் அச்சத்தை ஏற்படுத்துவது முதல் வகை.
மோடியின் தீவிரமான பிரித்தாளும் மற்றும் அவதூறு பேச்சுக்களை ஒளிபரப்புவதன் மூலம், புதிய சாதனையை எட்டும் அளவிற்கு அந்த ஊடகங்களின் பார்வையாளர்களை அதிகரிப்பது என்பது இரண்டாவது வகை.
மேற்கண்ட இருவகையில் ஊடகங்களை சரிகட்டிய பிறகு மோடிக்கு மீதமிருப்பது, மோடியின் பிரித்தாளும் வழிமுறைகளைக் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வெளியீட்டகங்கள் மட்டும்தான். இதற்கு, சட்டரீதியான ஆயுதங்களை ஊடக சுதந்திரத்திற்கு எதிராகப் பயன்படுத்துகிறது மோடி அரசு. உதாரணமாக, தேசதுரோக வழக்கின் கீழ் வாழ்நாள் சிறைத் தண்டனை அபாயத்தோடு தான் பத்திரிகையாளர்கள் பணிபுரிகின்றனர்.
இத்தகைய ஆயுதங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக இணையதளப் போராளிகள் எனப்படும் ட்ரோல்களின் படையை வைத்து சமூக வலைத்தளங்களில் அவர்களுக்குப் பிடிக்காத பத்திரிகையாளர்களுக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொள்வது மற்றும் அவ்வப்போது பத்திரிகையாளர்களைக் கொல்வதற்கு அழைப்புவிடுப்பது என்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. ” என்று விவரிக்கிறது இந்த அறிக்கை.
மேலும் இந்த அறிக்கை, 2017-ம் ஆண்டு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதையும், “இந்து தேசிய இயக்கத்தை இலக்காகக் கொண்ட இந்துத்துவாவின்” வெறியாட்டத்திற்குப் பலியானவர் அவர் என்பதையும் பதிவு செய்திருக்கிறது,
மேலும், மோடியை விமர்சித்த ராணா அய்யூப், பர்கா தத் போன்ற பெண் பத்திரிகையாளர்களின் மீது கூட்டுப் பாலியல் வன்முறை செலுத்த அழைப்பு விடுப்பது என கடுமையாகத் தாக்கியதையும் குறிப்பிட்டுள்ளது இந்த அறிக்கை.