வியாழன், 31 டிசம்பர், 2020

2020 சென்று வா.....

 
தலைமுடி.

ஒருவரின் தலைமுடி அவரின் அழகை மட்டுமல்லாது, உடல் நலத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது.

தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும், அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன ?

முன்பெல்லாம் இளநரை என்பது 15-20 வயதில் வந்த நிலை மாறி, குழந்தைகளுக்கு இளநரை வருவது அதிகரித்துள்ளது.

தலை முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் ஆகியவை குறித்து அவர் கூறிய முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

உங்கள் வாழ்வியல் மாற்றங்களும் முடியை நரைக்க வைக்கும். நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி.

விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு.

தலைமுடிக்கு எந்த எண்ணெய் சிறந்தது? எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான மற்றும் தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும் நரைத்த முடி வரக் காரணமாகும்.

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்தான் முடிக்கு கரு நிறத்தைத் தருகிறது. விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து அடங்கிய உணவு, எண்ணெய் தேய்த்து பராமரிப்பு செய்தல் ஆகியவை நரை முடி வருவதைத் தடுக்கும்.

இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவுவதுடன் முடி உதிர்வதையும் தடுக்கும்.

அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிக மிக அவசியம். விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்.

எண்ணெய் தேய்ப்பதற்கும் முடி உதிர்வது நிற்கும் என்பதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஆனால், முடியைப் பராமரிக்க எண்ணெய் தேய்ப்பது அவசியம். அது முடி உதிர்வைத் தடுக்கும்.

விற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு கிரீம், ஆயில் ஆகியவற்றை தடவுவதால் முடி உதிர்வது, நரைப்பது தடுக்கப்படும் என்பது ஓரளவே உண்மை. பல வண்ணங்களில், ஊட்டம் மிகுந்த உணவுகளே முடிக்கு மிகவும் அவசியம்.

வெவ்வேறு வண்ணம் உள்ள உணவுகளை வழக்கமாக உண்பதற்காக அட்டவணை ஒன்றைத் தயார் செய்துகொள்வது நல்லது.

-------------------------------------------

கொரோனா போராளிகளுக்கு அஞ்சலி

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி வரும் வேளையில், இதுவரை இந்தியாவில் மட்டும் அந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 1,45,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முன்களத்தில் பணியாற்றி உயிரை பறிகொடுத்த எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் அடக்கம். இதில் இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் 40க்கும் அதிகமான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பணிக்காலத்தில் குடும்பத்தையும் உறவுகளையும் வாரக்கணக்கில் பிரியும் நிலை, சிக்கலான சூழலில் ஆற்றும் சவாலான பணிகள், பிபிஇ ஆடையுடன் ஒவ்வொரு முறையும் கொரோனா வார்டுகளுக்கு சென்று வரும் அழுத்தம் என பல சவால்களை இந்த மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் அன்றாடம் எதிர்கொள்கிறார்கள்.

இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான களப்பணியில் ஈடுபடும் மருத்துவம் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தடுப்பூசி போடுவதில் உலக நாடுகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. ஆனால், இதிலும் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் மீண்டும் கொரோனா பணியை ஆற்ற வேண்டும்.

இத்தகைய சூழலில்தான் கொரோனா வைரஸ் புதிய திரிபு பிரிட்டனில் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட உலகின் பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த புதிய திரிபு அதிக வீரியத்துடன் தாக்கும் வல்லமை கொண்டுள்ளதால், அதை அழிப்பதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 155 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தது. அந்த 155 பேரில் 64 பேர் மருத்துவர்கள் என்று அரசு தரப்பு தெரிவித்தாலும், பல மதிப்பீடுகள் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவே கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே, உடல்நலம் ஒரு மாநில விவகாரம் என்றும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் பதிவுகளை மத்திய அரசு வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த ஆண்டு முழுவதும், கிட்டத்தட்ட முழு வசதிகள் இல்லாத நிலையில் , மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக தொடர்ச்சியான செய்திகள் வந்தன.

மேலும், இந்த தொற்றை தடுக்க தேவையான பொருட்கள், ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஊழியர்களிடம் கிடைக்கவில்லை, பல இடங்களில் அவர்கள் எந்த விடுப்பும் இல்லாமல் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றினர்.

ஆனால் இத்தனைக்கும் நடுவே, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்களின் துணிச்சலான சேவை பற்றிய கதைகள் வெளிவந்தன.

இத்தகைய சூழ்நிலையில், இந்த தொற்றை எதிர்கொண்டு உயிர் துறந்த மருத்துவ ஊழியர்களின் படங்களையும் பிபிசி சேகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருந்தபோது அவர்கள் உயிரை இழந்ததாக தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் புதிய வைரஸ் திரிபு, இந்த களப்பணியாளர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தரவு கூறுகிறது.

பொது மருத்துவர்களே கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் . .  .

அதிலும் குறிப்பாக, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 40க்கும் அதிகமான மருத்துவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். .  .

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது, அதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இந்த 2020 ஆண்டின் முடிவில் அஞ்சலி செலுத்துவோம்.

----------------------------------------------------------------------

நடிப்பு அரசியல்.

'நடிகர்கள் அரசியலில் வருவது தமிழகத்தில் தொடர்கதை. ரஜினி, கமலுக்கு முன்னதாக, விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி ராஜேந்திரன் என பல நடிகர்கள் திமுக, அதிமுக பலமான கட்சிகளாக இருக்கும் நேரத்தில் அரசியலில் பங்கெடுத்தவர்கள். இவர்களில் விஜயகாந்தை தவிர பிற நடிகர்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். அதே காரணத்தால்தான் கமல் ஹாசனுக்கு ஓட்டு கிடைப்பதில் சிக்கல் இருக்கும். அதாவது ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் அரசியல் உணர்வை இந்த நடிகர்கள் பெருமளவு ஏற்படுத்த தவறிவிட்டார்கள். விஜயகாந்தை பொறுத்தவரை, ரசிகர் மன்றங்களை கட்சியின் உறுப்பினர் மன்றங்களாக மாற்றினார். 2005இல் கட்சி தொடங்கிய அவர், ஜனரஞ்சகமான கொள்கைகளை பேசினார். கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தினார். 

அடுத்த ஆண்டே தேர்தலை சந்தித்து 10 சதவீத வாக்குகளை பெற்று, எதிர்க்கட்சியாக தனது பலத்தை நிரூபித்தார். அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த ஆர்வத்தை தக்கவைக்க தவறியதால், கட்சி பலம் இழந்து வீழ்ச்சியையும் சந்தித்தார். நடிகர்கள் அரசியலில் எப்படி இருந்தால் வெற்றி, எப்படி இருந்தால் தோல்வி என்பதற்கு விஜயகாந்த் சான்று .

சரத்குமாரை எடுத்துக்கொள்வோம். விஜயகாந்தை போல தனது ரசிகர் மன்றங்களை ஊக்குவிக்க முடியவில்லை என்பதால்தான் இன்று வரை அவரது கட்சி கவனம் பெறவில்லை. 2007இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினர் சரத் குமார். அப்துல் கலாம், காமராஜ் ஆகியோரின் சிந்தனைகளை தனது கட்சி முன்னெடுக்கும் என்றார். ஆனால் அரசியல் ஆர்வத்தை அவர் ரசிகர்களிடம் வளர்க்கவில்லை. அதனால், திமுக அல்லது அதிமுகவை நம்பித்தான் தேர்தலை சந்திக்கவேண்டும் என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது.

 சமத்துவ மக்கள் கட்சி விஜயகாந்த் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் அளவுக்கு வளர்ந்ததற்கு ரசிகர் மன்றங்களை தொடர்ந்து அரசியல் ஈடுபாட்டோடு வைத்திருந்ததுதான். எல்லா கிரமங்களிலும் திமுக, அதிமுக போல தனது கட்சி கொடியை விஜயகாந்த் பறக்கவிட்டார் என்பதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம்."

"பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதோடு சரி, அவருடைய திரை பாணியை ரசித்த மக்கள் அரசியல் தலைவராக அவரை பார்க்கவில்லை. அவர் கட்சியின் கொள்கை என்ன என்று கூட தெளிவாக அவர் பேசவில்லை. ஒரு கட்டத்தில் அவரது கட்சியை திமுகவோடு இணைத்துவிட்டார். 

எம்ஜிஆரின் சினிமா வாரிசு என்ற பிம்பம் அவருக்கு உதவவில்லை. அதிமுகவில் இருந்தவர்கள் கூட, அவருக்கு ஆதரவாக பேசவில்லை.

''டி.ராஜேந்தருக்கு பல திறமைகள் இருந்தாலும், அரசியல் களம் அவருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

 2005இல் திமுகவில் இருந்து பிரிந்து வந்த அவர், அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால், அவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த வரலாறை மட்டும்தான் மக்கள் மனத்தில் வைத்திருக்கிறார்கள். 

திமுக, அதிமுக பலம் பொருந்திய கட்சிகளாக நீடிப்பதால், நடிகர்கள் கட்சி தொடங்கி தங்களது அடையாளத்தை தக்கவைத்து பன்மடங்கு உழைக்க வேண்டும்.

''நடிகர் கார்த்திக் சாதி அரசியல் பக்கம் சென்றார். அவர் கட்டமைப்பு பற்றி கவலைப்படவில்லை. 2006இல் அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அவர் அரசியல்வாதியாக வலம் வந்ததார். அரசியல் கட்சிக்கான கட்டமைப்பை அவர் ஏற்படுத்தவில்லை. அதன் அவசியத்தை அவர் உணரவும் இல்லை. ஒருவேளை அந்த வளர்ச்சி பற்றி அவர் கவலைகூடபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கியதோடு அவரது அரசியல் பயணம் நின்றுவிட்டது.

பல நடிகர்கள், திரைத்துறையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு ஒன்றை மட்டுமே நம்பி அரசியலில் இறங்கினால் என்ன நிலை ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது என்று கூறிய அவர், ''1989ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் சிவாஜி, அரசியல் கணக்கில் சூழலுக்கு ஏற்ற முடிவை எடுக்கவில்லை. எம்ஜிஆர் மறைவால் அதிமுகவில் உருவான பிளவில், ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார். ஜெயலலிதா அணியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற காரணத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார்."

"ஆனால் ஜெயலலிதா அணி தேர்தலில் வெற்றி பெற்றது. அதனால் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய அதே ஆண்டு கலைத்துவிட்டார். 

திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதோடு, தனது கட்சியை ஜனதாதளத்துடன் இணைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகிவிட்டார். இப்போதும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்ற வாய்ப்பை எப்போதும் தமிழக அரசியல் களம் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் திரை செல்வாக்கு என்பது அரசியல் செல்வாக்காக மாறுவதற்கு திரை பிரபலம் என்ற அடையாளத்தை தாண்டி கடுமையான உழைப்பு தேவை என்பதைத்தான் நடிகர்களின் வீழ்ச்சி உணர்த்துகிறது,'

எம்.ஜி.ஆர்.அரசியலில் வென்றார் என்றால் அவருக்கு முதலில் காங்கிரஸ் பின் தி.மு.க என அரசியல் பின்புலம் இருந்தது.

தி.மு.க வின் பரங்கிமலை சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதி. இருந்தது.தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கொள்கைகளைப் புகுத்தியவர்.

ஜெயல்லிதாவுக்கு எம்.ஜி.ஆரின் ஜோடி என்ற தகுதிதான் இருந்தது.மேலும் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு முன்னரே அவரால் கட்சிக்கு கொண்டு வரப்பட்டு கொள்கை(?) பரப்புச் செயலாளர் பதவி தரப்பட்டு அதிமுக பிரபலமாக்க மேடைகளில் வலம் வந்தார். பாமர மக்களுக்குத் தெரிந்த இரட்டை இலை சின்னமும் கைகொடுத்தது.( சேவல் சின்னத்தில் தோற்றவர்) 

ரஜினிகாந்துக்கு வெற்றிகரமான மசாலா பட நாயகன்,பஞ்ச் வசனம்  என்ற தகுதியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.இதே தகுதி கொண்ட  ரஜினியைப் போன்ற மிகப்பிரபலம் சிரஞ்சீவி தெலுங்கு மசாலா நடிகர் ஆந்திராவில் கட்சி துவங்கி காங்கிரசில் கரைந்து போன வரலாறு அவரின் நெருங்கிய நண்பர் ரஜினிக்கும் தெரியும்தானே.

மேலும் மத்திய,மாநில உளவுத்துறைகள் கமல் வாங்கிய வாக்குகளை விட 2% வேண்டுமானால் இவருக்கு அதிகம் கிடைக்கலாம்.அதுவும் கிராமப்புறங்களில் மட்டும் என்ற கள நிலவரங்களை எடுத்துக் காட்டியது.ஆனாலும பா.ஜ.க அதிமுகவை மிரட்டவே இவரை கையில் எடுத்தது.ரஜினி தங்களுக்கே ஆதரவுதருவார் என தனக்கான இடங்களை அதிகப்படுத்தவும்,முதல்வராக பன்னீர்செல்வத்தை கொண்டு வரவும் கண்ட கனவில் ரஜினி மண்ணை அள்ளிப் போட்டதே உண்மை.

பள்ளி வாடகைப் பாக்கி,மாநகராட்சி சொத்துவரியையே கட்ட வருந்துபவர்,நண்பர்களுக்கு அரசு அனுமதி பெறாமல் வட்டிக்கு விடுபவர்,பல கோடிகளை ஊதியமாகப் பெற்றும் ஒருமுறை வரிகட்ட தயங்கி இரு முறை சோதனைக்கு உள்ளானவர் எப்படி அரசியல் தேர்தல் களத்தில் பணத்தைசெலவிடுவார்.எம்.ஜி.ஆர் செவிட பணமின்றி கடன் வாங்கியதும்.தனது லாயிட்ஸ் சாலை சொத்தை ஜானகி அம்மையாருக்கு விற்ற வரலாறும் இங்கே உண்டு.

+--------------------+------------------+-------------------+
திங்கள், 21 டிசம்பர், 2020

ஏழை விவசாயிகள் அதானி,அம்பானி

 யிரம் ஆயிரமாய் அணிவகுத்து இந்திய தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான  விவசாயிகள் முற்றுகையிட்டு நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான  ட்ராக்டர் வாகனங்களில் அணி அணியாய் விவசாயிகள் டெல்லியை நோக்கி போர்ப்பரணி பாடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண்மை திருத்த சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று மிகப்பெரும் அச்ச உணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உலகமயத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகளின் தலையில் பேரிடியாக இந்த சட்டம் அமைந்துள்ளது.

உலகமயம் – தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளால் விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இடுபொருள்கள் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த அரசு மானியங்கள் அளவை குறைப்பது,  இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது. இவற்றின் விளைவாக விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.

கடன் நெருக்கடி, வேலையின்மை, பட்டினிச் சாவுகள் – இதுவே இன்றைய கிராமங்களின் அவல வாழ்வு. கடன் நெருக்கடி தாங்காமல் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019-ல் மட்டும் 10 ஆயிரத்து 281 விவசாயிகளின் தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளன. 30 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

மூன்று வேளாண்மை அவசரச் சட்டங்களை 2020, ஜூன் மாதம் மோடி அரசு பிறப்பித்தது. 1955 ஆண்டு உருவாக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களை செய்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டம் யாருடைய நலனுக்காக? இந்த சட்டத்தால் ஆதாயம் அடையப் போவது யார்? இந்திய விவசாயத்தில் வேளாண் சட்டங்கள் 2020 அமுல்படுத்துவதால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?

விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு சட்டம்) 2020.

இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்படுகிறது என்று கூறப்படுகிறது. விவசாய உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல விலையை பெறுவார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டங்கள் தனியார் முதலீடுகளை கொண்டுவரும் என்கிறது மோடி அரசு. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் விவசாயத்தை மொத்தமாக ஒப்படைப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் இச்சட்டம். சட்டம் நாடாளுமன்ற அவையில் நிறைவேறுவதற்கு முன்பாகவே மோடியின் பேரன்பை பெற்ற கார்ப்பரேட் முதலாளி அதானி குழுமம் உணவு கொள்முதல் நிலையங்களை பிரம்மாண்டமான முறையில் கட்டி அமைத்ததன் மர்மம் என்ன?

அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்திய விவசாயத்தை காவு கொடுக்க கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசு முடிவு செய்துவிட்டது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளின் பின்னே அம்பானி, அதானி கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கொள்ளைக் கும்பலின் நலன் ஒளிந்திருக்கிறது.

வயலில் பயிர்கள் வளரும் நிலையிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை தீர்மானித்து விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தானியங்களை அறுவடை செய்து கொள்ளும். ஆனால் அதைவிட பலமடங்கு கொள்ளை லாபத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்றுக் கொள்ளும்.

நிலம் மட்டுமே விவசாயிகளிடம் இருக்கும்.  நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரங்களை,  எந்த பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட்டுகளே தீர்மானிக்கும். விவசாய கருவிகள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்தையும்  கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவெடுக்கும். தீர்மானிக்கப்பட்ட விலைப்படி,  உற்பத்தியும் கணக்கிட்டு, செலவுகளை கழித்துக்கொண்டு மீதி உள்ளதை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கும்.

உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுகின்ற பொழுது, அதற்கான காலம், விலை, விளைபொருட்களின் தரம் இவற்றை பற்றி மூன்றாவது நபர் சான்றிதழ் வழங்குவார்கள். தரம் இல்லை என்று உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மறுப்பதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.

இயற்கையின் சீற்றங்கள் – வறட்சி,  வெள்ளம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொறுப்பேற்காது. அரசாங்கம் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழங்காது. தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் உற்பத்திப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்துவது நடக்கும்;  தரசான்றிதழ் வழங்கினால் மட்டுமே நிறுவனங்கள் கொள்முதல் செய்யும்.

உற்பத்திப் பொருட்களை குறைவாக மதிப்பிட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்கள். விவசாயிகள் நஷ்டம் அடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வாங்கிய முன் தொகைக்கு ஈடு செய்ய இயலாமல் தங்களது வாழ்வாதாரமான நிலங்களை இழந்து நிற்கும் கொடுமைக்கு தள்ளப்படுவார்கள்.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப் படுத்துதல்) சட்டம்2020

உற்பத்திப் பொருளை வாங்குவதிலும் விற்பதிலும் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை இந்த சட்டம் வழங்குவதாக மோடி அரசு கூறுகிறது. இலாபகரமான விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்.  உற்பத்திப் பொருள் விற்பனை தடை இல்லாமல் நடைபெறும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தும்போது ஒரு சில வினாடிகளில் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ளவருக்கு இங்குள்ள விளைபொருள் உரிமையாகும்.

மின்னணு வர்த்தகத்தின் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளூரில் சேமிப்புக் கிடங்கை வைத்துவிட்டு ஆன்லைன் மூலமாக பிற நாடுகளுக்கு விற்று விடுவார்கள். தொடர்ந்து பொருள்கள் ஏற்றுமதி ஆகிவிடும்.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், மண்ணின் மைந்தர்களுக்கு கையளவு உணவு பொருள் கூட கிடைக்காமல் போகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்களை பல மடங்கு விலை ஏற்றி கொள்ளை அடிப்பார்கள். இதன் விளைவாக உணவு பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் நிகழ இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற வர்த்தக சுதந்திரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இந்தியா, ஒரே விவசாயம்,  ஒரே சந்தை; இந்த லட்சியத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது மோடி அரசு.

நாட்டின் செல்வவளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது போதாதென்று மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அவர்களது கரங்களில் ஒப்படைக்கும் ஏற்பாடுதான் இந்த புதிய வேளாண் சட்டங்கள்.

எதிர்காலத்தில்

சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளுக்கும், மக்களை விழிப்புறச் செய்வதற்கும் விவசாயிகளின் போராட்டம்

துவக்க உரையாக அமைந்துள்ளது. இந்தத் துவக்க உரையைத் தொடர்ந்து முடிவுரையை இந்திய பாட்டாளி வர்க்கம் விரைவில் எழுதி முடிக்கும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

60 சதவீதத்துக்கும் மேலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இந்திய அரசின் கணக்குப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை 86 விழுக்காடு, பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு, இந்திய வேளாண்மை துறையின் கணக்கெடுப்பின்படி குறு விவசாயிகள் ஒன்னேகால் ஏக்கர் முதல் 2  -1/2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். சிறிய விவசாயிகள் இரண்டரை ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் நிலத்தைசொந்தமாக வைத்துள்ளனர். நடுத்தர விவசாயிகள் பத்து ஏக்கரில் இருந்து 25 ஏக்கர் வரை வைத்து உள்ளனர். விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையில் 86 விழுக்காடு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களும் அனைத்து விவசாயிகளையும், கூலி ஏழை உழவர்களையும், ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக் கூடியது. இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். விவசாயிகளுடைய ஒவ்வொரு வருமானமும் கணக்கிடப்பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

படிக்க :
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

வேளாண் திருத்த சட்டங்கள் அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாநில உரிமைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை அமல்படுத்தும் மோடி கும்பலுக்கு கணக்கின்றி நிதி ஆதாரத்தையும் நன்கொடைகளையும் வாரி வழங்குகின்றன கார்ப்பரேட் அம்பானி, அதானி கும்பல். அதற்கு நன்றிக் கடனாக விவசாயத்தை முற்றிலுமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது என்பதே மோடி அரசு கொண்டுவந்திருக்கும் இச்சட்டங்களின் நோக்கம்.

ஆட்சியாளர்கள் தங்களது அகண்ட பாரத கனவை நிறைவேற்ற, மாநில உரிமைகளைப் பறித்து,  ஒரே நாடு என்கின்ற ஒற்றை இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோம் நகர் பற்றி எரிகின்ற பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அலங்காரங்களோடு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்கிறார். உறைய வைக்கும் கடும் குளிரிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் வீசி எறியும் எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு சில ஊடகங்கள் மாபெரும் விவசாயிகளுடைய எழுச்சியை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

டெல்லி தலைநகரை அதிர வைத்துக் கொண்டிருக்கும் போராட்டம், பஞ்சாப், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டம் மட்டுமல்ல, இந்திய துணை கண்டத்தின் அனைத்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்கான போராட்டம். அனைத்து மாநில விவசாயிகளும் ஓரணியில் போராட்டக் களத்தில் நின்றால், ஆட்சியாளர்களின் ஆணவத்தை அடக்கி வெற்றியை  நோக்கி இந்தப் போராட்டம் செல்லும்.

வரலாற்றின் திசையை மாற்றும் வல்லமை கொண்டவர்கள் இந்திய விவசாயிகள்.

டெல்லி தலைநகர் இதுவரை கண்டும் கேட்டிராத போராட்டக் களத்தை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இறுமாப்போடு இருக்கும் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்கிறது விவசாயிகளின் போராட்டம். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் பாசிஸ்டுகள் படு தோல்வி அடைவது திண்ணம்

நன்றி: வினவு

------------------------------8--------------------------ஞாயிறு, 20 டிசம்பர், 2020

2020 மோசமானதா!

 பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம்.

பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால் இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக இருந்திருக்கலாம். 2020ஆம் ஆண்டை பகடி செய்து பல மீம்களும்கூட வலம் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே இது உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? தெரிந்து கொள்ள வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம். இது உலக நடப்புகளின் வரலாற்று ஒப்பீடு. வரலாற்றில் இதைவிட மோசமான சம்பவங்கள்கூட நிகழ்ந்திருக்கலாம். அவ்வாறு இருந்தாலும், நாம் நமக்கு நடந்த நல்லவற்றை மட்டும் நினைத்து மகிழ்ச்சியடைந்து கொள்வதே சிறந்த ஒன்று.

2020- கோவிட் -19 பலரை கொன்றுவிட்டது

டிசம்பர் 17 வரையில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 74.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். இருப்பினும் இது உலகின் மோசமான பெருந்தொற்று என்று கூறிவிடமுடியாது. ஆம், புபோனிக் பிளேக் என்ற நோயால் 1346ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் மட்டும் 25 மில்லியன் பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 200 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

1520ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீஸியர்களின் வருகையால் 60-90 சதவீத பூர்வீக குடிமக்கள் உயிரிழந்தனர்.

1918ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் ஃபுளூவால் 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். முதல் உலகப் போரிலிருந்து திரும்பி வந்த சிப்பாய்களால் பரவியது இந்நோய்.

இதில் உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றிலிருந்து ஐந்து சதவீதம் பேர் உயிரிழந்தனர்.

அதன்பின் 1980ஆம் ஆண்டிலிருந்து கண்டு கொள்ளப்பட்ட எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் உலகளவில் 32 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

2020 - பலர் தங்களின் பணிகளை இழந்தனர்

இந்த பெருந்தொற்றால் உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இருப்பினும் 1929 -33ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு மந்தநிலையால் ஏற்பட்ட பணி இழப்புகள் அளவிற்கு இது இல்லை.

1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் மூன்றில் ஒருவர் தங்கள் பணியை இழந்தனர். அடோல்ஃப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார்.

2020 நண்பர்களை காண முடியவில்லை

இந்த ஆண்டு முழுவதும் பலர் தங்களின் அன்புக்குரியவர்களை காணாமல் இருந்திருக்கலாம். ஆனால் 536-ல் நடந்த அளவிற்கு மோசமில்லை. ஆம் அந்த சமயத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் ஒரு மர்மமான பனி சூழ்ந்து கொண்டு வானத்தைக்கூட காண முடியாத நிலை இருந்தது.

கிட்டதட்ட 18 மாதங்களுக்கு அந்த நிலை நீடித்தது என்கிறார் ஹார்வட் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் நிபுணர் மைகேல் மெக் கார்மிக்.

அது ஐஸ்லாந்திலோ அல்லது வட அமெரிக்காவிலோ நிகழ்ந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட புகையாக இருந்திருக்கலாம்.

2020 - போலிசார் காட்டிய கொடூரம்

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், நைஜீரீயாவின் 'எண்ட்சார்ஸ்' இயக்கம், மற்றும் கொலம்பியா, ஹாங் காங், ஃபிரான்ஸ் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற போலிசாரின் அடக்குமுறை என இந்த ஆண்டு பல சம்பவங்கள் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சாத்தான்குளம் சம்பவத்தையும் யாராலும் மறந்துவிட முடியாது.

ஆனால் இது எதுவும் புதியதல்ல. 1992ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நான்கு வெள்ளை இன போலிசார், கருப்பின மோட்டர் சைக்கிள் பந்தய வீரர் ரோட்னி கிங்கை அடித்த வழக்கில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. மேலும் இந்த வன்முறையால் பல திருட்டு சம்பவங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. 54 நான்கு பேர் உயிரிழந்தனர்.

Getty Images

2020 - பெய்ரூட் துறைமுகத்தில் நடைபெற்ற வெடிப்பு சம்பவம்

ஆகஸ்டு நான்காம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்தில் 190 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் அணு சக்தி அல்லாத மிகப்பெரிய வெடிப்பாக இது கருதப்படுகிறது.

ஆனால் 1984ஆம் ஆண்டு இந்தியாவின் போபால் நகரில் ரசாயன ஆலை ஒன்றிலில் ஏற்பட்ட கசிவால் பலர் உயிரிழந்தனர். நவீனகால வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழிற்சாலை பேரழிவாக அது உள்ளது.

அரசாங்கத்தின் கணக்குப்படி ஒரு சில நாட்களில் 3,500 பேர் உயிரிழந்தனர். அதன்பின் ஓராண்டிற்குள் தீவிர நுரையீரல் பிரச்னையால் 15,000 பேர் உயிரிழந்தனர்.

2020 பில்லியன் கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டன

Getty Images

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயால் சுமார் மூன்று பில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டன அல்லது இடம்பெயர்ந்துள்ளன. இந்த தீ, 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது.

இந்த தீ ஏற்படுத்திய புகையால் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள், தவளைகள் உயிரிழந்தன. பல தங்களின் இருப்பிடத்தை இழந்து உயிரிழந்தன.

ஆனால் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜப்பானின் டோக்கியோ மற்றும் யோகோஹாமா நகருக்கு இடையில் ஏற்பட்ட நிலநடுக்கால் உருவான தீ புயல் மற்றும் சூறாவளியால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை கோவிட்19 பாதிப்பை விட அதனை வைத்துக்கொண்டு மோடியின  பா.ஜ.க ஆட்சியினர் செயல்படுத்திய மக்கள் விரோத  சட்டங்கள் உண்மையிலேயே இந்தியாவற்கும்,இந்தியர்களுக்கும் மிக மோசமான ஆண்டுதான்2020.

நல்லதை நினைப்போம்

ஆம். 2020ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் சற்று கடினமான ஆண்டுதான். பொதுமுடக்கம், விடாமல் கைகளை சுத்தம் செய்வது, வீட்டில் முடங்கி இருப்பது என்று இருந்திருந்தாலும் இந்த ஆண்டு நடைபெற்ற சில நல்ல விஷயங்களையும் நினைவு கூர்வோம்.

உலகளவில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு பெண் தலைவர்களை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இது 1995ஆம் ஆண்டு 12ஆக இருந்தது.

நாடாளுமன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.

முதன்முறையாக தெற்காசியத்தை பூர்வீகமாக கொண்ட கருப்பின பெண் அமெரிக்க துணை அதிபராகியுள்ளார். நிற வேறுபாடுகளுக்கு எதிராக உலகளவில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் ரீதியாக பல நிறுவனங்கள் தங்களின் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உறுதியளித்துள்ளன.

முன்பு நினைத்ததைக் காட்டிலும் நிலவில் அதிக நீர் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

இது அனைத்தும் ஒருபக்கம் இருந்தாலும் இந்த பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்களையும் நாம் மறந்துவிட கூடாது.


சுரன்.

வியாழன், 17 டிசம்பர், 2020

ஆன்மீக வாடகை பாக்கி கட்சி

 சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது. வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த இடத்துக்கு இந்த சங்கம் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு. 2013ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017 ஆகஸ்ட் 16ம் தேதி இடத்தின் உரிமையாளர்கள் பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வருமான வரி ஆவணங்களை வைத்து ரஜினி மீது விமர்சனம்அதன்பின்னரும் வாடகை பிரச்சினை நீடித்த நிலையில் 2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியவில்லை என்று கூறி, மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்துக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு நீதிபதி தடைவிதித்துள்ளார்.

---------------------------*--------------------

"இலவச விசா, சார்ட்டர் விமான பயணம்"

தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான விசாவுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நில அபகரிப்பு, சொத்துகள் மோசடி, இளம் வயதினரை சன்னியாசம் செய்ய நிர்பந்தித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வந்தார் நித்தியானந்தா. தான் வசிப்பதாகக் கூறும் கைலாசாவில் இருந்து அதன் சமூக ஊடக பக்கம், யூட்யூப் வாயிலாக சத்சங்கம் எனப்பெயரில் அன்றாடம் ஆன்மிக சொற்பொழிவை வழங்கி வருகிறார்.

அவரது சத்சங்க நிகழ்வு எந்த இடத்தில் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் நேரலை பின்னூட்ட வலைபின்னல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வழக்குகளில் தேடப்பட்டு வருவதாக கூறப்பட்ட நித்தியானந்தா, நேபாளத்திலோ இமயமலை பகுதியிலோ இருக்கலாம் என்று கூறப்பட்டது. அங்கிருந்தபடி அவர் கைலாசா என்ற தானே அறிவித்துக் கொண்ட இடத்தில் இருந்து சொற்பொழிவை நடத்துவதாக பேசப்பட்டது.

நித்தியானந்தா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கைலாசாவின் சார்பில் ரிசர்வ் வங்கியொன்றை தொடங்கியிருப்பதாகக் கூறி கைலாசாவுக்கான கரன்சியையும் கடவுச்சீட்டையும் அறிமுகப்படுத்தினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நித்யானந்தாவின் இருப்பிடம் தொடர்பான சர்ச்சை வலுத்தபோது, அவரது பெயரிலான கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது.

இந்தியாவில் சில மாநில காவல்துறையால் தலைமறைவாகி விட்டதாக கருதப்படும் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து கண்டறிய உதவுமாறு தங்களை புலனாய்வுத்துறைகள் அணுகவில்லை என்றும் வெளியுறவுத்துறை கூறியது.

அவர் எக்வடோர் நாட்டில் உள்ள ஒரு தீவை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டாலும் அதை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.

அவர் குறிப்பிடும் கைலாசா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவாகவோ அந்த நாட்டுக்குட்பட்ட தீவாகவோ இருக்கலாம். ஆனால், தனது சத்சங்கத்தில் ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்துக்கு வர வேண்டும், அங்கிருந்து எவ்வளவு மணி நேர பயண தூரத்தில் கைலாசா உள்ளது போன்ற விவரங்களை நித்தியானந்தா வெளியிடவில்லை. அவர் குறிப்பிடும் விசா அல்லது நுழைவு அனுமதி என்பது ஒரு தீவுக்குள் நுழையும் அனுமதிச்சீட்டு போல வேறு ஏதேவொரு நாட்டால் கருதப்படலாம். அதே சமயம், விசா கோரும் நபர்களின் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் கைலாசாவுக்கு வர தகுதி பெறும் என்பதையும் நித்யானந்தா தெளிவுபடுத்தவில்லை.

இந்தியாவில் இருந்தபோது அவர் நடத்தி வந்த பிடதி ஆசிரமம் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே பேசப்பட்டது. இப்போது வெளிநாட்டில் ஒரு தனித்தீவை வாங்கி அதை தனி நாடாக அறிவித்துக் கொண்டுள்ளபோதும் நித்தியானந்தாவின் பின்புலம் மர்மமாகவே தொடர்கிறது.

8----------------8-------------8------------8---------------8

இதெப்படியிருக்கு....