ஞாயிறு, 20 டிசம்பர், 2020

2020 மோசமானதா!

 பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம்.

பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால் இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக இருந்திருக்கலாம். 2020ஆம் ஆண்டை பகடி செய்து பல மீம்களும்கூட வலம் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே இது உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? தெரிந்து கொள்ள வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம். இது உலக நடப்புகளின் வரலாற்று ஒப்பீடு. வரலாற்றில் இதைவிட மோசமான சம்பவங்கள்கூட நிகழ்ந்திருக்கலாம். அவ்வாறு இருந்தாலும், நாம் நமக்கு நடந்த நல்லவற்றை மட்டும் நினைத்து மகிழ்ச்சியடைந்து கொள்வதே சிறந்த ஒன்று.

2020- கோவிட் -19 பலரை கொன்றுவிட்டது

டிசம்பர் 17 வரையில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 74.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். இருப்பினும் இது உலகின் மோசமான பெருந்தொற்று என்று கூறிவிடமுடியாது. ஆம், புபோனிக் பிளேக் என்ற நோயால் 1346ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் மட்டும் 25 மில்லியன் பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 200 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

1520ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீஸியர்களின் வருகையால் 60-90 சதவீத பூர்வீக குடிமக்கள் உயிரிழந்தனர்.

1918ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் ஃபுளூவால் 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். முதல் உலகப் போரிலிருந்து திரும்பி வந்த சிப்பாய்களால் பரவியது இந்நோய்.

இதில் உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றிலிருந்து ஐந்து சதவீதம் பேர் உயிரிழந்தனர்.

அதன்பின் 1980ஆம் ஆண்டிலிருந்து கண்டு கொள்ளப்பட்ட எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் உலகளவில் 32 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

2020 - பலர் தங்களின் பணிகளை இழந்தனர்

இந்த பெருந்தொற்றால் உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இருப்பினும் 1929 -33ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு மந்தநிலையால் ஏற்பட்ட பணி இழப்புகள் அளவிற்கு இது இல்லை.

1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் மூன்றில் ஒருவர் தங்கள் பணியை இழந்தனர். அடோல்ஃப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார்.

2020 நண்பர்களை காண முடியவில்லை

இந்த ஆண்டு முழுவதும் பலர் தங்களின் அன்புக்குரியவர்களை காணாமல் இருந்திருக்கலாம். ஆனால் 536-ல் நடந்த அளவிற்கு மோசமில்லை. ஆம் அந்த சமயத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் ஒரு மர்மமான பனி சூழ்ந்து கொண்டு வானத்தைக்கூட காண முடியாத நிலை இருந்தது.

கிட்டதட்ட 18 மாதங்களுக்கு அந்த நிலை நீடித்தது என்கிறார் ஹார்வட் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் நிபுணர் மைகேல் மெக் கார்மிக்.

அது ஐஸ்லாந்திலோ அல்லது வட அமெரிக்காவிலோ நிகழ்ந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட புகையாக இருந்திருக்கலாம்.

2020 - போலிசார் காட்டிய கொடூரம்

2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், நைஜீரீயாவின் 'எண்ட்சார்ஸ்' இயக்கம், மற்றும் கொலம்பியா, ஹாங் காங், ஃபிரான்ஸ் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற போலிசாரின் அடக்குமுறை என இந்த ஆண்டு பல சம்பவங்கள் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சாத்தான்குளம் சம்பவத்தையும் யாராலும் மறந்துவிட முடியாது.

ஆனால் இது எதுவும் புதியதல்ல. 1992ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நான்கு வெள்ளை இன போலிசார், கருப்பின மோட்டர் சைக்கிள் பந்தய வீரர் ரோட்னி கிங்கை அடித்த வழக்கில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. மேலும் இந்த வன்முறையால் பல திருட்டு சம்பவங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. 54 நான்கு பேர் உயிரிழந்தனர்.

Getty Images

2020 - பெய்ரூட் துறைமுகத்தில் நடைபெற்ற வெடிப்பு சம்பவம்

ஆகஸ்டு நான்காம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்தில் 190 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் அணு சக்தி அல்லாத மிகப்பெரிய வெடிப்பாக இது கருதப்படுகிறது.

ஆனால் 1984ஆம் ஆண்டு இந்தியாவின் போபால் நகரில் ரசாயன ஆலை ஒன்றிலில் ஏற்பட்ட கசிவால் பலர் உயிரிழந்தனர். நவீனகால வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழிற்சாலை பேரழிவாக அது உள்ளது.

அரசாங்கத்தின் கணக்குப்படி ஒரு சில நாட்களில் 3,500 பேர் உயிரிழந்தனர். அதன்பின் ஓராண்டிற்குள் தீவிர நுரையீரல் பிரச்னையால் 15,000 பேர் உயிரிழந்தனர்.

2020 பில்லியன் கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டன

Getty Images

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயால் சுமார் மூன்று பில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டன அல்லது இடம்பெயர்ந்துள்ளன. இந்த தீ, 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது.

இந்த தீ ஏற்படுத்திய புகையால் ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள், தவளைகள் உயிரிழந்தன. பல தங்களின் இருப்பிடத்தை இழந்து உயிரிழந்தன.

ஆனால் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜப்பானின் டோக்கியோ மற்றும் யோகோஹாமா நகருக்கு இடையில் ஏற்பட்ட நிலநடுக்கால் உருவான தீ புயல் மற்றும் சூறாவளியால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை கோவிட்19 பாதிப்பை விட அதனை வைத்துக்கொண்டு மோடியின  பா.ஜ.க ஆட்சியினர் செயல்படுத்திய மக்கள் விரோத  சட்டங்கள் உண்மையிலேயே இந்தியாவற்கும்,இந்தியர்களுக்கும் மிக மோசமான ஆண்டுதான்2020.

நல்லதை நினைப்போம்

ஆம். 2020ஆம் ஆண்டு நம் அனைவருக்கும் சற்று கடினமான ஆண்டுதான். பொதுமுடக்கம், விடாமல் கைகளை சுத்தம் செய்வது, வீட்டில் முடங்கி இருப்பது என்று இருந்திருந்தாலும் இந்த ஆண்டு நடைபெற்ற சில நல்ல விஷயங்களையும் நினைவு கூர்வோம்.

உலகளவில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு பெண் தலைவர்களை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இது 1995ஆம் ஆண்டு 12ஆக இருந்தது.

நாடாளுமன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.

முதன்முறையாக தெற்காசியத்தை பூர்வீகமாக கொண்ட கருப்பின பெண் அமெரிக்க துணை அதிபராகியுள்ளார். நிற வேறுபாடுகளுக்கு எதிராக உலகளவில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் ரீதியாக பல நிறுவனங்கள் தங்களின் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உறுதியளித்துள்ளன.

முன்பு நினைத்ததைக் காட்டிலும் நிலவில் அதிக நீர் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

இது அனைத்தும் ஒருபக்கம் இருந்தாலும் இந்த பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்களையும் நாம் மறந்துவிட கூடாது.


சுரன்.