ஆன்மீக வாடகை பாக்கி கட்சி
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது. வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த இடத்துக்கு இந்த சங்கம் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு. 2013ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017 ஆகஸ்ட் 16ம் தேதி இடத்தின் உரிமையாளர்கள் பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வருமான வரி ஆவணங்களை வைத்து ரஜினி மீது விமர்சனம்அதன்பின்னரும் வாடகை பிரச்சினை நீடித்த நிலையில் 2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியவில்லை என்று கூறி, மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்துக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு நீதிபதி தடைவிதித்துள்ளார்.
---------------------------*--------------------
"இலவச விசா, சார்ட்டர் விமான பயணம்"
தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான விசாவுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவில் நில அபகரிப்பு, சொத்துகள் மோசடி, இளம் வயதினரை சன்னியாசம் செய்ய நிர்பந்தித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வந்தார் நித்தியானந்தா. தான் வசிப்பதாகக் கூறும் கைலாசாவில் இருந்து அதன் சமூக ஊடக பக்கம், யூட்யூப் வாயிலாக சத்சங்கம் எனப்பெயரில் அன்றாடம் ஆன்மிக சொற்பொழிவை வழங்கி வருகிறார்.
அவரது சத்சங்க நிகழ்வு எந்த இடத்தில் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் நேரலை பின்னூட்ட வலைபின்னல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் வழக்குகளில் தேடப்பட்டு வருவதாக கூறப்பட்ட நித்தியானந்தா, நேபாளத்திலோ இமயமலை பகுதியிலோ இருக்கலாம் என்று கூறப்பட்டது. அங்கிருந்தபடி அவர் கைலாசா என்ற தானே அறிவித்துக் கொண்ட இடத்தில் இருந்து சொற்பொழிவை நடத்துவதாக பேசப்பட்டது.
நித்தியானந்தா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கைலாசாவின் சார்பில் ரிசர்வ் வங்கியொன்றை தொடங்கியிருப்பதாகக் கூறி கைலாசாவுக்கான கரன்சியையும் கடவுச்சீட்டையும் அறிமுகப்படுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நித்யானந்தாவின் இருப்பிடம் தொடர்பான சர்ச்சை வலுத்தபோது, அவரது பெயரிலான கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது.
இந்தியாவில் சில மாநில காவல்துறையால் தலைமறைவாகி விட்டதாக கருதப்படும் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து கண்டறிய உதவுமாறு தங்களை புலனாய்வுத்துறைகள் அணுகவில்லை என்றும் வெளியுறவுத்துறை கூறியது.
அவர் எக்வடோர் நாட்டில் உள்ள ஒரு தீவை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டாலும் அதை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.
அவர் குறிப்பிடும் கைலாசா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவாகவோ அந்த நாட்டுக்குட்பட்ட தீவாகவோ இருக்கலாம். ஆனால், தனது சத்சங்கத்தில் ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்துக்கு வர வேண்டும், அங்கிருந்து எவ்வளவு மணி நேர பயண தூரத்தில் கைலாசா உள்ளது போன்ற விவரங்களை நித்தியானந்தா வெளியிடவில்லை. அவர் குறிப்பிடும் விசா அல்லது நுழைவு அனுமதி என்பது ஒரு தீவுக்குள் நுழையும் அனுமதிச்சீட்டு போல வேறு ஏதேவொரு நாட்டால் கருதப்படலாம். அதே சமயம், விசா கோரும் நபர்களின் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் கைலாசாவுக்கு வர தகுதி பெறும் என்பதையும் நித்யானந்தா தெளிவுபடுத்தவில்லை.
இந்தியாவில் இருந்தபோது அவர் நடத்தி வந்த பிடதி ஆசிரமம் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே பேசப்பட்டது. இப்போது வெளிநாட்டில் ஒரு தனித்தீவை வாங்கி அதை தனி நாடாக அறிவித்துக் கொண்டுள்ளபோதும் நித்தியானந்தாவின் பின்புலம் மர்மமாகவே தொடர்கிறது.
8----------------8-------------8------------8---------------8