புதன், 31 ஜனவரி, 2018

நடிப்பு அரக்கன்!

நடிகர் நாகேஷ் பூர்வீகம் மைசூரு. 
கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை. 
குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய்.நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல. எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
 குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும், 'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை. 
நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும். 

சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!
 'அன்பே வா!'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!நாடகக் குழுக்களில் நடித்து வந்த நாகேஷ், கதாநாயகனாக நடித்த முதல் படம் 'சர்வர் சுந்தரம்'. அந்தப் படத்தைத் தயாரித்தது புகழ் பெற்ற ஏவி.எம்.நிறுவனம்; இயக்கியது இரட்டையர்களான கிருஷ்ணனும் பஞ்சுவும்; படத்திற்குக் கதை--வசனம் எழுதியது கே.பாலசந்தர். 
நாகேஷ் என்னும் நடிகரின் ஆளுமையைச் செதுக்கிப் பட்டை தீட்டியதில், -அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதில் கே.பாலசந்தருக்குப் பெரும் பங்கு உண்டு.
கே.பாலசந்தரின் கை வண்ணத்தில் உருவான 'எதிர்நீச்சல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'பாமா விஜயம்' முதலான திரைப்படங்கள் நாகேஷ் என்னும் நடிகரின் பன்முக ஆற்றலை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பவை. 
1965-ல் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் 'நீர்க்குமிழி'. அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்னும் பாத்திரத்தினை ஏற்று நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்தார். அதிலும் குறிப்பாக,''ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா”என்னும் சுரதாவின் அற்புதமான தத்துவப் பாடலுக்கு நாகேஷ் நடித்திருக்கும் நடிப்பு, இன்றளவும் காண்போர் உள்ளத்தை உருக்கும். வி.குமாரின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அப்பாடலை அருமையாகப் பாடியிருப்பார்.

"நம்மவர் "நாகேஷ் -கமல் 
தொடக்க காலத்தில் நாகேஷ் ரயில்வே துறையின் சிற்றுண்டியகத்தில் பணியாற்றி வந்தார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அவர், ம.ரா. என்பவரைத் சந்தித்து வாய்ப்புக் கேட்டார். 

ம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில் நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் நோயாளியாக நடித்தார். 

சிறிய வேடமே என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்; நாடகத்தின் பதினேழாவது காட்சியில் ஒன்றரை மணித்துளிகளே வந்தாலும், அதில் தனித்திறமையைக் காட்டினார்.“ஒன்றரை நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து 'அம்மா' என்று அலறி துடித்துக் கதறி...'யாரடா இவன்! 

திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!' என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் 'சிரித்து வாழ வேண்டும்' என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். 
“ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்!” என்று கூறி நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார். 
பிற்காலத்தில் நாகேஷ் என்கிற அற்புதமான நகைச்சுவை நடிகர் உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய நிகழ்ச்சி இது!


நாகேஷ் என்றதும் நம் நினைவுக்கு முதன்முதலில் வருவது ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு அவர் கதை சொல்லும் காட்சி.
 'சபாஷ்! சரியான போட்டி!' என்று பாராட்டத்தக்க வகையில் டி.எஸ்.பாலையாவும் நாகேஷூம் அக்காட்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் மனோரமாவுடன் இணைந்து துாத்துக்குடி வழங்கு முத்துத் தமிழில் ''முத்துக் குளிக்க வாரீகளா?
மூச்சை அடக்க வாரீகளா?”என்று பாடியிருக்கும் 'டூயட்' பாடலும் புகழ்பெற்றது.
கமல்ஹாசன்  படங்களில் நடிக்கும் போதும் இன்றைய சூழ்நிலைகளுக்கு இசைவான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியவர். 
கமல்ஹாசனின்" நம்மவர்" ,'அபூர்வ சகோதரர்கள்', மகளிர் மட்டும்'அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படங்கள் 'எக்காலத்துக்கும் ஏற்ற நடிகர் நாகேஷ்' என்பதற்குக் கட்டியம் கூறி நிற்பவை.
"அபூர்வ சகோதரர்களில் வில்லனாக நடித்து கலக்கி தனது இரண்டாம் காலை பயணத்தை துவக்கினார்.
நம்மவரில் சோகநடிப்பிலும் தான் சோடை போனவன் அல்ல என்று நிரூபித்து மத்திய அரசின் சிறந்த குணசித்திர நடிகர் விருதை பெற்றார்.

கமல்ஹாசனின் தயாரிப்பான 'மகளிர் மட்டும்' படத்தில் இதுவரை எவரும் ஏற்றிராத - ஏற்கவும் துணியாத - ஒரு பிணத்தின் பாத்திரத்தில் நடித்துத் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். 
இந்த ஒரு வேடத்திற்காகவே நாகேஷூக்கு ஆஸ்கார் விருது என்ன, அதற்கும் மேலான விருதுகள் இருந்தாலும் கொடுக்கலாம்!
ஆடல் காட்சியிலும் தனித்திறமையை நயமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியவர் நாகேஷ். 'அவளுக்கென்ன? அழகிய முகம்!' (சர்வர் சுந்தரம்), 'தாமரைக் கன்னங்கள்!' (எதிர் நீச்சல்) இரு பாடல்கள் போதும், நாகேஷின் ஆடல் திறனைப் பறைசாற்ற!

வாழும் காலத்தில் நாகேஷூக்குத் திரைப்பட உலகின் எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை (ஒருவேளை, வாழும் காலத்தில் மகத்தான கலைஞர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் தமிழனின் தனிக்குணம் போலும்!) ஆனாலும், மக்களின் மனங்கள் என்னும் சிம்மாசனத்தில் தனிப்பெரும் நகைச்சுவை நாயகனாக நாகேஷ் என்றென்றும் வீற்றிருப்பார்.
                                                                                                                               -பேராசிரியர் இரா.மோகன்
=======================================================================================
ன்று,
ஜனவரி-31.

 • யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)

 • அமெரிக்க முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)

 • நவூறு நாடு விடுதலை (1968)
 • தமிழக முன்னாள் முதல்வர் மு.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

 • நடிகர் நாகேஷ் இறந்த தினம் (2009)

========================================================================================
முழு "நிலா"மறைவு.
(சந்திர கிரகணம்)

இன்று நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுகிறது. 

அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே,   கிரகணம் தொடங்கி,  மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும்.  
இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.
இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும். 

குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

முன்னதாக, கடந்த 1866 மார்ச் 31-ம் தேதி இதுபோன்ற சந்திர கிரகணம் ஏற்பட்டது. அடுத்து, 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் இதுபோன்று தோன்றும்.

இன்று 'சூப்பர் மூன்' ,'புளூ மூன்' எனப்படும் வானியல் நிகழ்வும் நடைபெற உள்ளதால், வழக்கத்தை விட நிலவு இன்று பெரியதாகவும், கூடுதல் பிரகாசமாகவும் தோன்றும். இக்கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம்.


செவ்வாய், 30 ஜனவரி, 2018

சென்னையில் தீவிர (வாதிகளுக்கு) வசூல் ?

சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர், பிரதீப், கமல்.
இவர்கள்  இருவரும், அசாமில் இருந்து கள்ள துப்பாக்கிகள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை, ரயிலில் கடத்தி வந்த போது ரகசிய தகவல் மூலம் தேடிய  வேப்பேரி காவல்துறையினரிடம்  சிக்கினர். 

இவர்களை விசாரித்தபோது "தமிழகத்தில், கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை மற்றும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதன் வாயிலாக, பாக்., பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய" தகவல் தெரியவந்துள்ளது.


அதன்படி  திருச்சியில் இரு பெண்கள்  துப்பாக்கிகளுடனும்,அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து மறைத்து வைக்க சொன்ன சென்னையைச் சேர்ந்த  காவலர்  பரமேஸ்வரன் உள்ளிட்ட மூவரும்  கைது செய்யப்பட்டனர். 
இவர்களுக்கு தலைவன் பாக்., உளவாளி, முகமது ரபீக்  என்பதும் தற்போது அவன்  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான் என்பதும் தெரிந்தது.கொடுங்கையூரை சேர்ந்த, முகமது ரபீக், 2014ல், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். 

அசாமில் இருந்து, 10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை, ரயிலில் கடத்தி வந்தது தொடர்பான வழக்கும், இவன் மீது உள்ளது.
இந்நிலையில், செயின் பறிப்பு வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பிரதீப்புடன் நட்பு ஏற்படுத்திய முகமது ரபீக், அவரை தன் சதி வேலைகளுக்கு உதவும் வகையில் தயார்படுத்தினார். தன் யோசனைப்படி செயல்பட்டால், ஆயிரக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும், ஆசை வார்த்தை கூறினார்.

கள்ளத்துப்பாக்கி கடத்தி விற்பது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தொடர்பான, விபரங்களையும் தெரிவித்தார். 

இதையடுத்து, ஜாமினில் வெளிவந்த பிரதீப், தன் கூட்டாளி கமலுடன் சேர்ந்து, ரபீக்கின் யோசனைப்படி, மேற்குவங்க மாநிலம், மால்டாவில் இருந்து, கள்ளத் துப்பாக்கிகள் வாங்கி வந்து, தமிழகத்தில் உள்ள ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் சில முக்கிய புள்ளிகளுக்கு விற்றுள்ளார். 


மேற்குவங்கத்திற்கு கள்ள நோட்டுக்களை கடத்தி வரும், பாக்., உளவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து, அவற்றை பெற்று தமிழகத்திற்கு கொண்டு வந்து புழக்கத்தில் விட்டுள்ளார். இவர்களுக்கு, போலீஸ்காரர் பரமேஸ்வரன் உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்களை பகடைகாயாக பயன்படுத்தி, புழல் சிறையில் இருந்தபடி, மொபைல் போன் வாயிலாக, சதி திட்டம் தீட்டிய ரபீக், கள்ள துப்பாக்கி விற்பனை மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதன் வாயிலாக, பாக்., பயங்கரவாதிகளுக்கு, நிதி திரட்டியது தெரிய வந்துள்ளது. 

மேலும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும், ஒருங்கிணைப்பாளர், காஜா மைதீனுக்கும், ரபீக்கிற்கும் தொடர்பு இருக்கும் தகவலும் கிடைத்துள்ளது. அதனால், முகமது ரபீக்கை மீண்டும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையில், திருச்சியில் கைதான போலீஸ்காரர் பரமேஸ்வரன், சென்னை வழக்கறிஞர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிலருக்கு, துப்பாக்கி விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

தற்போது  தனிப்படை போலீசார், துப்பாக்கி வாங்கியோரை தேடி வருகின்றனர்.
==========================================================================================
மனதில் உறுதி வேண்டும்,

ஒருவர் மன உறுதியுடன் இருக்க, தனக்குள் மன உறுதி ஏராளமாக இருப்பதாக நம்புவது மிக முக்கியம் என்கிறது ஆய்வு ஒன்று. 
மலைக்க வைக்கும் செயல்களை செய்து முடிப்பதற்கு முன், தனக்குள் மிகக் குறைந்த அளவே சுய கட்டுப்பாடும், உறுதியும் இருப்பதாக நம்புபவர்களை விட, தன்னிடம் அளவற்ற மன உறுதி இருப்பதாக நம்புபவர்கள், சிக்கலான காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில், 4,000 பேருக்கும் மேல் பங்கேற்ற ஆய்வின் முடிவு இது.


தனக்கு,வைராக்கியம் ( 'வில்பவர்') அதிகம் என்று நம்புபவர்களுக்கு, எடுத்த காரியத்தை முடிக்கும் மன உறுதி இருப்பதையும், தனக்கு வில்பவர் கம்மி என்று நினைப்பவர்களால், எடுத்த காரியங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதையும் இந்த ஆய்வில் தெளிவாகத் தெரிந்தது,'

இதைத்தான் நம் வள்ளுவர் 
"எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் -எண்ணியார் 
திண்ணியாராகப்  பெறின் ."
என்று முன்பே கூறி சென்றார்.
என்னதான் அர்ஜுன் சம்பத்லாம் இந்து இந்துனு பார்ப்பானுகளுக்கு முட்டுக்கொடுத்து சூத்திரர்களிடம் சண்டை போட்டு வாங்கிக்கட்டிக்கொண்டாலும் அவனுகள பொறுத்தவரை "நாலு அடி தள்ளிதான் நிக்க வச்சிருப்பானுக" காரணம், அவனுகள பொறுத்தவரை நீ சூத்திரன் முடிந்தால் விஜயேந்திரனை உன்னிடம் கைகுலுக்கச்சொல் பார்க்கலாம் போடா சூத்திராம்பான்.நீ போன பிறகு உன்னால் தீட்டான இடத்தை புனித நீர் தெளித்து சரி செய்வான்.
இதுதான் அவாள் இந்துதர்மம்.
அவாளைப் பொறுத்தவரை நீங்கள் என்னதான் அடிபணிந்தாலும் சூத்திரன்தான்,தீட்டுதான் .சரிக்கு சரியாக சாமியார் எதிரே அவாள்கள் உட்காருவது போல் உட்கார விடமாட்டான்.ஆண்டவன் கருவறை அருகே கூட விடமாட்டான்.
அவாள் அர்ச்சகர் கருவறையில் பலானது பண்ணினாலும் தீட்டு அல்ல.ஆனால் நம் கால் பட்டாலே பரிகாரம் செய்தாகணும்பா .
=======================================================================================
ன்று,
ஜனவரி-30.
வள்ளலார் ராமலிங்க அடிகளார் மறைவு(1874)
 • இந்திய தியாகிகள் தினம்
 • உத்தமர் காந்தி இறந்த தினம்(1948)
 • ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)
 • பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
=======================================================================================
கமல்ஹாசன் தான் சரிப்பட்டு வருவார்!
தினமலர் இணையதளத்தின் விவாத தள பகுதியில், அவ்வப்போது மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், முக்கிய சம்பவங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படும். கடைசியாக கேட்கப்பட்ட கேள்வி
' "அரசியலுக்கு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? 
கமல்ஹாசன் ?ரஜினிகாந்த் ?' 

உலகம் முழுவதிலும் இருந்து 1600 தினமலர் இணைய தள வாசகர்கள், இதில் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். 

அரசியலுக்கு வந்தால் ரஜினியே முன்னணியில் இருப்பார் என்று சமீபத்தில், நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்தது. 

ஆனால், இந்தியா டுடே கூறியதற்கு  மாறாக தினமலர் கணிப்பு  முடிவு ஆச்சரியப்படுத்ததக்க வகையில் அமைந்தது.  

தினமலர் இணையதள வாசகர்கள் கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 
அதாவது, கமலுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டு 67 சதவீதம். 
ரஜினிக்கு 33 சதவீதம் மட்டுமே . 
ஆக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு பெரும்பாலும் தமிழ் நாட்டு மக்கள் கணிப்பு அல்ல என்பதும் தமிழ் நாட்டில் இருந்து மேல்தட்டு மக்கள் மட்டுமே  கலந்திருப்பார்கள் என்ற ஐயத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
=========================================================================================


தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி தரும் அதியமான் எழுத்துரு மாற்றி, 
தகடூர் தமிழ் மாற்றி ஆகிய கருவிகளை உருவாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் தகடூர் கோபி..
==========================================================================================
நானும் ரவுடிதான்!


தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும்என்பதற்காக பாரதிய ஜனதாகட்சி என்னென்ன வெல்லாமோ சொல்லிப்பார்க்கிறது; என்னென்னவெல்லாமோ செய்து பார்க்கிறது. 
குஜராத் மாதிரி வளர்ச்சி கோஷம் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதால் ‘கவலையற்ற தமிழகம் கழகங்களில்லா தமிழகம்’ என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள்; ஆனாலும் கூட மோடியா, இந்த லேடியா என்று பாஜகவுக்கு - மோடிக்கு சவால்விட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை அவரது மறைவுக்குப் பிறகு கைப்பாவையாக்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் தமிழகத்தில் திராவிட அரசியலின் தாக்கத்தை மீறிச் செயல்பட முடியாது என்று எண்ணிவிட்டார்கள் போல. தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் ஈரோட்டு பேச்சைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

‘‘தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட திராவிட மாநிலங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பாஜகவும் திராவிடக் கட்சிதான்’’ என்று அவர் கூறியிருப்பது நகைப்புக்குரியதாகும்.தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகளை கொஞ்சம் பொன்.ராதாகிருஷ்ணன் பட்டியலிட்டால் நன்றாக இருந்திருக்கும். 

ஆனால் சொல்வதற்குஎதுவுமில்லை என்பதால் அதோடுவிட்டு விட்டார் போலும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லஇந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக் கும் உதவக்கூடியதாக அமைந்திருந்த சேது சமுத்திரத் திட்டத்தை - நாட்டின் பிரதமரே மதுரையில் துவக்கி வைத்த திட்டத்தை - ஊற்றி மூடியவர்கள் பாஜகவினர் தானே.அது தவிர வெள்ளச்சேதம், புயல்சேதம், வறட்சி, அண்மைக்காலத்து ஒக்கி புயல் நிவாரணம் என எதற்கும் தமிழகத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசும் பாஜகவும் நடந்து கொள்ளவில்லையே. 

காவிரிநீர், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையில் பாஜக என்ன செய்தது? 
செய்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாதா? 
ஆனாலும் கூட துணிந்து உண்மை யில்லாதவற்றை உண்மை போல பேசுவது அவர்களுக்கே உரியகுணம்தானே!ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவது என்ற உறுதிமொழியை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது என்றும் வேறு பல திட்டங்களை புறக்கணிக்கிறது என்றும் கூறியுள்ளதுதான் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் வளர்ச்சி போல.

கேரளம், கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாஜக என்னென்ன செய்து கொண்டிருக்கிறது என்பதும் அமைதியை கெடுக்கவும் வளர்ச்சியைசிதைக்கவுமே அங்கு பாஜக முயன்று கொண்டிருக்கிறது என்பதும் நாடறிந்தது. 

இந்த நிலையில் தான் நாங்களும் திராவிடக் கட்சிதான் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதைப் பார்த்தால் ஒரு படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் எனச் சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

                 சீன விமான நிலையத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும்  வரவேற்பு 
அவரவர்  கொடியுடன் மொழியில்.                              இந்தியர்களுக்கு  வரவேற்பு.                                                                    


திங்கள், 29 ஜனவரி, 2018

கட்டாத கட்டணம்?

தமிழகத்தில் அநியாயமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்துப்பகுதி மக்களும் கொந்தளித்தனர். 
குறிப்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டக் களம் கண்டனர். 
இந்த உணர்வைப் புரிந்து கொண்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக அச்சுறுத்தல் மூலம் மாணவர்கள், வாலிபர்களை மிரட்ட முயன்றது அதிமுக அரசு.போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தது. 
ஆனால், அஞ்சாமல் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடின. ஆனால், போக்குவரத்து அமைச்சர் உட்பட சில அமைச்சர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திமிர்வாதம் பேசினர். இந்த நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திங்களன்று தமிழகம் முழுவதும் மாபெரும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
போராட்டப் பெருநெருப்பின் வெம்மை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைத்திருப்பது போல கண்கட்டி வித்தை காட்டுகிறது அதிமுக அரசு. 
ஒட்டகத்தின் முதுகில் பல டன் எடையை ஏற்றி விட்டு ஒரு கிலோ எடையை குறைப்பதன் மூலம் சுமையை குறைத்துவிட்டது போல ஏமாற்றுவார்கள் என்று கூறுவார்கள். மக்களையும் ஒட்டகம் என நினைத்துக் கொண்டு சித்து வேலையில் ஈடுபடுகிறது அதிமுக அரசு.
ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட இரு மடங்கு உயர்த்திவிட்டு, தற்போது பைசா கணக்கில் குறைப்பதாக அறிவிக்கிறார்கள். இந்தக் கட்டணக் குறைப்பின் மூலம் அரசிற்கு ரூ. 4 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கதையடிக்கிறார்கள்.
நகர மற்றும் மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுவதாகவும் அனைத்து நிலைகளிலும் ஒரு ரூபாய் குறைக்கப்படுவ தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு பைசா குறைக்கப்பட்டுள்ளது. 
நூறு கிலோ மீட்டர் அளவுக்கு பயணம் செய்தால், ரூ. 20 தான் குறையும். பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை.
அரசின் ஏமாற்று வித்தையை புரிந்து கொண்டதால்தான் , பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 
இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமே உயர்த்தப்பட்ட பல மடங்கு கட்டண உயர்வை திரும்பப் பெற வைக்க முடியும்.
திமுக ஆட்சியின் போது அதிகாரிகள் பேருந்து கட்டணத்தை உயர்த்தினால்தான் லாபத்தில் போக்குவரத்துக்  கழகங்கள் இயங்கும் என்று கூற கலைஞ்சரோ "லாபம் ஈட்ட நாம் கம்பெனி நடத்த்தவில்லை.மக்கள் நலனுக்காக அரசு தான் இயங்குகிறது"என்று பேருந்து கட்டணத்தை உயர்த்த மறுத்து விட்டார்.
கமல்ஹாசனும் பேருந்து கட்டணம் உயர்வுக்கு கழகங்கள் நட்டத்த்தில் ஓடுவதுதான் காரணம் என்கிறார்களே என்ற கேள்விக்கு "அது லாபத்தில் ஓடவேண்டும் என்று யார் சொன்னார்கள்.மக்களுக்கான அரசு செய்யும் சேவைதான் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதியை செய்து தருவது.அதை இந்த ஆட்சி செய்யாதது ,அக்கட்டணத்தை உயர்த்தியது தவறு.என்று கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்காலம் முழுக்க பேருந்துக்கு கட்டணங்கள் உயர்த்தப் படவில்லை.அப்போதும் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.
போக்குவர்த்துத் தொழிலார்களுக்கு உரிய நேரங்களில் ஊதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
22% முதல் 24%வரை மிகை ஊதியங்கள், பொங்கல்,தீபாவளி பணங்கள் வழங்கப்பட்டன.
அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அந்த மிகை ஊதியங்கள்,ஊதிய உயர்வுகள் போதாது என்று அறிக்கை விட்டது.சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கங்கள் போராடின.

ஆனால் ஜெயலலிதா ஆட்சி வந்த பின்னர் அவரின் செயல்பாடுகளைக் கண்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்களில் சிஐடியூ,தொழிற்சங்கப் பேரவை (திமுக)ஆகியவைதான் தொழிலாளர்கள் வாக்கெடுப்பில் வென்று அங்கிகாரம் பெற்ற தொழிற்சங்கங்களாகின.
இந்த வாக்கெடுப்பை ஜெயலலிதா கொண்டுவந்ததே தனது கட்சி செல்வாக்கினால் திமுக தொழிற்சங்கத்தின் அங்கிகாரத்தை நீக்கிவிடத்தான் என்பது வேடிக்கை.
அங்கிகாரம் பெற்ற சங்கங்கங்கள்தாம் அரசுடன் பேசசு வார்த்தைகளில் கலந்து கொள்ளலாம் என்று அரசு முதலில் அறிவித்தது.
ஆனால் அதிமுக தோல்வியால் அதை அப்படியே மறக்கடித்து பேசசு வார்த்தைக்கு அண்ணா தொழிற்சங்கம் முதலான எல்லா சங்கங்களையும் இப்போது அலைக்கிறது.
ஆனால் இந்த வேலை நிறுத்தத்தில் 99% போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டது அண்ணா தொழிற்சங்கம் இருக்கிறதா?அதன் செல்வாக்கு அளவை அளக்கவும் முடிந்தது.
அண்ணா திமுகவினர் பலர் திமுக,கம்யூனிஸ்ட் சங்கங்களில் செயல்படுவது அதிமுக ஆட்சியின் நிர்வாகத்திறமையையும்,தொழிலாளர் -மக்கள் நலனையும் மக்கள் மத்தியில் வெளிச்ச்சம் போட்டு காட்டி விட்டது.
======================================================================================
ன்று,
ஜனவரி-29.
 •  மூன்று சக்கரம் கொண்ட காருக்கு, கார்ல் பென்ஸ் காப்புரிமை பெற்றார். (1886)
 • அமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம்(சி.ஐ.ஜி.,) அமைக்கப்பட்டது(1946)
 • ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)
 • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி இறந்த தினம்(1998)

காருக்கு காப்புரிமை . 

1886 - முதல் நடைமுறை சாத்தியமான, பெட்ரோ லில் இயங்கும் உள்ளெரி என்ஜின் கொண்டதும், முதலில் வணிகரீதியில் உற்பத்தி செய்யப்பட்டதுமான மூன்று சக்கரம் கொண்ட காருக்கு, கார்ல் பென்ஸ் காப்புரிமை பெற்றார். 

குதிரைகள் இல்லாமலேயே நீண்டதூரப் பயணங்கள் சாத்தியம் என்று நிரூபிப்பதற்காக, பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ், இரு மகன்களுடன், 104 கி.மீ. தொலைவிலுள்ள தன் சொந்த ஊருக்கு, இந்தக் காரை ஓட்டிச் சென்று திரும்பினார். 

இந்தப் பயணம்தான் உலகின் முதல் நீண்ட தொலைவு சாலைவழிப் பயணம் என்பதால், இந்தப் பாதை, பெர்த்தா பென்ஸ் நினைவுப் பாதை என்ற பெயரில் சுற்றுலா இடமாக அறிவிக்கப்பட்டது. 

இந்தப் பயணத்தின் வெற்றிக்குப்பின், 1888இல் பென்ஸ் காரின் வணிகரீதியான உற்பத்தி தொடங்கியது.

1672இல் சீனப் பேரரசருக்காக உருவாக்கப்பட்ட ஒரு நீராவி வாகனம், மனிதர்கள் பயணிக்கும் அளவு இல்லையெனினும், அதன் சாத்தியத்தை நிரூபித்தது. தொடர்ந்து, நீராவியிலும், பின்னர் மின்சாரத்திலும் இயங்கும் வாகனங்கள் பல நாடுகளிலும் உருவாக்கப்பட்டாலும், பேருந்துகள் நீராவியில் இயங்கத் தொடங்கினாலும், சிறிய வாகனத்துக்கான தேடல் தொடர்ந்தது. 
ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலவையில் இயங்கும் உள்ளெரி என்ஜின்கள்கூட உருவாக்கப்பட்டன.

 1870இல் ஆஸ்திரியாவின் மார்க்கஸ் என்பவர் பெட்ரோலில் இயங்கும் ஓர் உள்ளெரி என்ஜினை கையால் இழுக்கும் வண்டியில் பொருத்தி வெற்றி கண்டார்.

1883இல் குறைந்த மின்னழுத்தத்தில் இயங்கும் மேக்னெட்டோவை உருவாக்கி காப்புரிமை பெற்ற இவர் 1888இல் உருவாக்கிய நான்கு சக்கரம் கொண்ட காரில் அதைப் பயன்படுத்தி தானாக ஸ்டார்ட் செய்யும் வசதி உட்பட செய்திருந்தார். 
பென்ஸின் காரைவிடப் பலவிதங்களிலும் மார்க்கசின் கார் மேம்பட்டிருந்தாலும் அதற்குக் காப்புரிமை பெறவோ, உற்பத்தி செய்யவோ அவர் முயற்சிக்கவில்லை. 

மேலும், அவர் ஒரு யூதர் என்பதால், ஹிட்லர் காலத்தில், அவரது பெயர் வரலாற்றுப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு, ஜெர்மானியரான பென்ஸ் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டது.
=======================================================================================
                                                                ஆன்மிக அரசியல் ?

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

குறுக்கு வழிகள் .


 இன்றைய காலத்தில் கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடியை  பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை. 
இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள்தான் தற்போது  பெரும் உதவி கரமாக உள்ளது.
 இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் தேடியே நமக்கு  சில குறுக்கு வழி வசதிகளை  தந்துள்ளது. 
அவற்றில் சில, இங்கு .குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடிட  (inurl:command): 
இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். 
எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.

விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”): 
தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். 
ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். 
எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.

குறிப்பிட்ட சொல் உள்ள பக்கம் மட்டும் தேடிட  (intext command): 
இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. 
எடுத்துக்காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். 
கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.
இணைய தளம் கட்டளை (The site: command): 
இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். 
எடுத்துக் காட்டாக வளர் தொழில் மாத இதழ் இணைய தளத்தில் மட்டும் Bluetooth என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், bluetooth site www. valar thozhil .in எனக் கொடுக்க வேண்டும்.
 இந்த கட்டளையானது வளர் தொழில் இணைய தளத்தில் மட்டும், Bluetooth என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். 
இதனால் வளர் தொழில்  இணைய பக்கம் தவிர மற்ற இணையதளங்களில் இந்த Bluetooth சொல் பயன்பாடு பற்றி  தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.

''convert' கட்டளை
இதை ஒரு செயலி என்றே  சொல்லலாம். 
இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். 
இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். 
எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும்.
மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. 
இதே போல பல குறுக்கு வழிதேடல் வசதிகளை கூகுள் நமக்கு தந்துள்ளது. 
=====================================================================================
ன்று,
ஜனவரி-28.

 • உலக  தொழுநோய் தினம்
 • அலெக்சாண்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
 • பஞ்சாப் சிங்கம் லாலா ரஜூபதி ராய் பிறந்தார்.(1865)
 • சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
 • இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
======================================================================================
                      இன்றும் 11.03.2018 ம் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் தினங்கள்.


சனி, 27 ஜனவரி, 2018

வங்கிகள் மோசடி?

மத்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமரின் முக்கிய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல், உதவி கவர்னர் வைரல் ஆச்சார்யா போன்றவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டுமென்று தொடர்ந்து பொது வெளியில் பேசி வருகின்றனர். 
வங்கித் துறையை பற்றி இந்த அரசாங்கத்தின் கொள்கை நிலை என்ன என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும்.
இந்தப் பின்னணியில்தான் வங்கித் துறை பற்றிய சர்ச்சை பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. 
இன்றைக்கு வங்கித் துறையை அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை பீடித்திருக்கும் முக்கிய நோய் “வாராக் கடன்”. “வங்கிகளின் மொத்தக் கடனில் 56 சதவீதம் கடன் பெற்றுள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியுள்ள பெரும் கடனாளிகள்தான் மொத்த வாராக் கடனில் 88 சதவீதத்திற்கு பொறுப்பானவர்கள்” என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையே தெள்ளத் தெளிவாக கூறுகிறது.
அதிலும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேலாக வாராக் கடன் வைத்துள்ள 12 பெரு நிறுவனங்களின் வாராக் கடன் ரூ.2,53,000 கோடியாகும். 

இது மொத்த வாராக் கடனில் 25 சதவீதமாகும். 
இதுவல்லாமல் அடுத்த நிலையில் உள்ள 28 பெரு நிறுவனங்கள் சுமார் ரூ.4,00,000 கோடி வாராக் கடனுக்கு சொந்தக்காரர்கள். ஆக, 40 நிறுவனங்கள் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை உருவாக்கியுள்ளன. இக்கடன்கள் வாராக் கடன் என்று அறிவிக்கப்பட்ட பிறகு வசூலிக்கப்பட வேண்டிய வட்டி இத்தொகையில் சேராது. 
அதையும் சேர்த்தால் 40 நிறுவனங்களே சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுக்கு பொறுப்பாவார்கள்.
மத்திய பாஜக அரசு பதவியேற்கும் போது ரூ.2,16,000 கோடியாக இருந்த மொத்த வாராக் கடன் 2017 மார்ச் மாதம் ரூ.7,11,000 கோடியாக உயர்ந்துள்ளது. 
2016-17ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம் ரூ.1,59,000 கோடி. 
ஆனால், வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.1,70,000 கோடி. 
ஆக பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.11,000 கோடி நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது. 
இந்த ஒதுக்கீடுகள் எந்த வகை கடனுக்காக என்று வங்கிகள் அறிவிக்காவிட்டாலும் இவற்றில் 90 சதவீதம் ஒதுக்கீடு என்பது பெரு நிறுவனங்களுக்காகத்தான் என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும். 
காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கம் 2005 முதல் 2014 வரை பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்த தொகை சுமார் ரூ.1,47,000 கோடி. ஆனால், தற்போதைய பாஜக அரசாங்கம் கடந்த மூன்றே ஆண்டுகளில் தள்ளுபடி செய்த தொகை மட்டும் ரூ.1,88,000 கோடி. 
யாருடைய வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை பொதுவெளியில் வைக்கவோ, பாராளுமன்றத்தில் பகிரவோ இவ்வரசாங்கம் தயாராக இல்லை. “ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும்” என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை மத்திய அரசாங்கம் நிராகரித்து விட்டது. 
மூடி வைக்கப்பட்ட உறையில் இப்பட்டியல் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றமும் இப்பட்டியலை இன்று வரை பொதுவெளியில் வைக்கவில்லை.
இத்தகைய பெரு நிறுவனங்களின் வாராக் கடன்தான் இன்றைக்கு வங்கித் துறையை செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. இதற்கு தனியார் துறை வங்கிகளும் விலக்கல்ல. 
இக்கடனை வசூலிக்க 2016-க்கு முன்பு வரை சிவில் நீதிமன்றம், கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் சர்பேசி (SARFAESI) சட்டம் ஆகியவை மட்டுமே அமுலில் இருந்தன.
இச்சட்டங்களெல்லாம் உரிய பலனை தரவில்லை என்று கூறிய பாஜக அரசாங்கம் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதென்று தீர்மானித்தது. “அச்சட்டம் வந்தால் அனைத்து பெரு நிறுவனங்களிடமிருந்தும் மிகக்குறுகிய கால இடைவெளியில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வாராக் கடனை வசூல் செய்து விடுவோம்” என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறினார்கள். 
அப்படி கொண்டு வரப்பட்ட சட்டம்தான் Insolvency and Bankruptcy Code என்ற திவால் சட்டம். இச்சட்டம் 2016 மே மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2016 நவம்பர் 30ஆம் தேதி முடிக்கப்பட்டு, டிசம்பர் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 2017 மே மாதம் வரை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்டு மொத்தம் 3 வங்கிகள் மட்டுமே இச்சட்டத்தை அணுகின. 
அதுவும் சில நூறு கோடி வாராக் கடனுக்காக மட்டுமே.

இச்சட்டத்தை கறாராக அமுல் செய்ய வேண்டுமென்றால், மத்திய அரசாங்கத்திற்கு தனியாக அதிகாரம் வேண்டும் என்று நிதியமைச்சகத்தால் வாதாடப்பட்டு 2017 மே மாதம் 4ஆம் தேதி ஓர் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தி வாராக் கடனை வசூல் செய்ய முன்முயற்சி மேற்கொள்ள வகை செய்யப்பட்டது. 
இதனடிப்படையில்தான் ரிசர்வ் வங்கியின் உள் ஆலோசனைக் குழு கூடி 12 பெரிய நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க திவால் சட்டத்தின் அடிப்படையில் தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை அணுகுமாறு வங்கிகளை அறிவுறுத்தியது. 
இத்தீர்ப்பாயம் “ஒரு வாராக் கடன் கணக்கை வசூல் செய்யத் தகுந்தது” என்று அறிவித்த 180 நாட்களுக்குள் தவறினால் 270 நாட்களுக்குள் அக்கம்பெனியின் வாராக் கடனை வசூலிக்கும் அனைத்து வழிவகைகளையும் செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. 
ஆனால், நடைமுறையில் தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் ஏற்கனவே 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வருடா வருடம் கம்பெனி சட்டப்படி மேலும் 4,000 வழக்குகள் கூடுதலாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
இத்தீர்ப்பாயத்தை வங்கிகள் மட்டுமல்லாமல் கடன் கொடுத்த எந்த நிறுவனம் வேண்டுமானாலும் அணுகலாம். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வழக்குகள் இதில் குவிவதற்கான வாய்ப்புள்ளது.
தற்போது இத்தீர்ப்பாயத்தில் 7 தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்டு 16 பேர் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசாங்கம் சொல்வது போல் மிக  விரைவாக வாராக் கடன் நிறுவனங்கள் தீர்வு காணப்பட்டு கடன் வசூல் செய்வதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது. 
வங்கியில் வாராக் கடன் வைத்துள்ள 12 பெரும் நிறுவனங்களில் 11 கணக்குகள் மட்டுமே தற்போது தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையில் பல நிறுவனங்கள் பல்வேறு நீதிமன்றங்களை அணுகி முட்டுக்கட்டை போடவும் முயற்சித்து வருகின்றன.
ஒருபுறம் திவால் சட்டத்தின் வாயிலாக தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் மூலமாக பெரு நிறுவனங்களின் கடனை  வசூல் செய்வோம் என்று சொல்கின்ற மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் மறுபுறம் இத்தீர்ப்பாயத்திற்கு எடுத்துச் செல்லும் அத்தனை கடன் தொகைக்கும் ஈடாக 2 ஆண்டுகளில் வங்கியின் லாபத்திலிருந்து முழுத் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்குகின்றன. 
இதன் பொருள் இந்த புதிய அமைப்பு மூலமாகவும், பெரு நிறுவனங்களின் கடனை வசூல் செய்ய முடியாது என்பதுதான். வெளிநாட்டு ஏஜென்சிகளும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் வெளிப்படையாகவே இத்தகைய பெரு நிறுவனங்களின் கடனில் 80 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என்று பேசுகின்றனர். 
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது ரூ.12,00,000 கோடி வாராக் கடனில் எவ்வளவு வசூலாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இக்கடனை வசூல் செய்யும் நடைமுறையின்போது ஏற்கனவே வாராக் கடன் வைத்திருப்பவர்களே வங்கியில் வாராக் கடன் வைத்துள்ள பெரு நிறுவனங்களின் சொத்தை ஏலத்தில் எடுக்கும் முயற்சியை தடுக்க புதியதாக 2017 நவம்பர் 23ஆம் தேதி மேலும் ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 
இதிலிருந்து பெரு நிறுவனங்களுக்கு சாதகமான பல ஓட்டைகளுடன்தான் இந்த திவால் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தகைய பெருந் தொகையை வசூலிக்காமல் வங்கிகளின் செயல்பாடு தொடர்ந்து இயங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இத்துடன் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரம் மூலமாக “உடனடி சரிசெய்யும் செயல்பாடு” என்ற ஒரு கட்டுப்பாட்டை 9 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. 
இதன்படியும் பொதுத்துறை வங்கிகளை பலவீனமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய அரசாங்கம் உலக அரங்கில் வளர்ந்த நாடுகள் அறிவுறுத்தி வரும் பேசல் விதிகளை இந்திய வங்கிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு 2019 வாக்கில் ரூ.1,80,000 கோடி மூலதனம் தேவைப்படும் என்றும், அதில் ரூ.70,000 கோடியை மத்திய அரசாங்கம் வழங்கும் என்றும், மீதமுள்ள ரூ.1,10,000 கோடியை பொதுத்துறை வங்கிகளே சந்தையில் திரட்டிக் கொள்ள வேண்டுமென்றும், இந்திர தனுஷ் என்ற ஒரு திட்டத்தை 2015 ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. 
அத்திட்டத்தின்படி இதுவரை ரூ.50,000 கோடி மூலதனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால், மத்திய அரசாங்கம் சுமார் ரூ.35,000 கோடி மட்டுமே இதுவரை பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக வழங்கியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் ரூ.2,11,000 கோடி மறுமுதலீட்டு அறிவிப்பை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. இது ஏதோ முழுவதுமாக அரசாங்க கஜானாவிலிருந்து கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 
ஆனால், உண்மையில் இதில் ரூ.1,35,000 கோடி மறு முதலீட்டு பத்திரம் மூலமாகவும், ரூ.58,000 கோடி பங்கு விற்பனை மூலமாகவும், இந்திர தனுஷ் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.18,000 கோடி அரசாங்க கஜானாவிலிருந்து வரும் என்பதுதான் உண்மை நிலவரம். 
பங்கு விற்பனை என்று வரும்போது அது பொதுத்துறை வங்கிகளை மேலும் தனியார்மயத்தை நோக்கி செலுத்தும். தற்போதுள்ள நிலைமையிலேயே பொதுத்துறை வங்கிகள் அவற்றின் உண்மையான நோக்கத்தை கைவிட்டு புதிய தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகளின் கொள்கைகளை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு முயல்கின்றன. 
அதன் காரணமாகத்தான் ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்குவது பின்னுக்கு தள்ளப்பட்டு, கார்ப்பரேட்களுக்கான கடனுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சாதாரண மக்கள் பெறும் கடனுக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டு, பெரு நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி குறைக்கப்படுகிறது. சேவைக் கட்டணம் என்ற பெயரில் சாதாரண வாடிக்கையாளர்கள் மீது கடும் சுமை ஏற்றப்படுகிறது. 
பங்கு விற்பனை மூலம் பொதுத்துறை வங்கிகள் மேலும் பலவீனமடைந்தால், சாதாரண வாடிக்கையாளர்கள் மீதான இத்தாக்குதல் தீவிரமாகும்.
கல்விக் கடனையும், விவசாய கடனையும் வசூலிக்க பொதுத்துறை வங்கிகளே வெளியாட்களை நியமிக்கின்றன. அத்தகைய வெளியாட்கள் எளிய மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதன் காரணமாக பல தற்கொலைகளும், உயிரிழப்பு சம்பவங்களும்கூட நடைபெறுகின்றன. 
ஆனால், இத்தகைய கடுமையான நடைமுறையை பெரு நிறுவனங்கள் மீது காட்டுவதற்கு பொதுத்துறை வங்கிகளே தயாராக இல்லை.
பொதுத்துறை வங்கிகள் தற்போது செய்ய வேண்டியது பெரு நிறுவனங்களின் வாராக் கடனை கறாராக வசூல் செய்வதுதான். வசதி இருந்தும் வேண்டுமென்றே வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத செயலை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். 
திவால் சட்டம் உள்ளிட்டு அனைத்து சட்டங்களும் பெரு நிறுவனங்களிடம் மென்மையாகவே நடந்து கொள்கின்றன. பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதிலும், வசூலிப்பதிலும் மத்திய ஆட்சியாளர்களின் ஆசியுடன் முறைகேடுகள் நடைபெறுகின்றன. 
ஆனால், எந்த உயர் மட்ட நிர்வாகியும் இதற்கு பொறுப்பாக்கப்படுவதில்லை. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் தங்களுக்கும் தனியார் வங்கிகளைப் போல் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய புலனாய்வுத் துறை, மத்திய கண்காணிப்பு அமைப்பு, சிஏஜி ஆகியவற்றிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று கோருகின்றனர். மத்திய நிதியமைச்சர் ஒருபடி மேலே சென்று “பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதிலும், கடன் வசூல் செய்வதிலும் சுயமாக, தாராளமாக கடன் வழங்க தைரியமாக முடிவெடுக்க வேண்டும். 
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988-லிருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவெடுக்கும்” என்று கூறுகிறார்.
ஆக, பெரு நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசாங்கத்திற்கு அரசியல் உறுதி இல்லை. பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் என்பது வழங்கப்பட வேண்டும். ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய் பெரு நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்து விட்டு அதற்கு ஈடாக அரசாங்க கஜானாவிலிருந்து மூலதனம் கொடுப்பது என்பது மறைமுகமாக மக்கள் வரிப்பணத்தை பெரு நிறுவனங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சென்று முடியும்.
எனவேதான் ஜி-20 நாடுகள் எடுத்த முடிவின் அடிப்படையில் நிதித் தீர்வு வைப்பு காப்பீட்டு மசோதா (எப்ஆர்டிஐ) என்ற ஒரு மசோதாவை 2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு வங்கி செயல்பட முடியாமல் போனால் பொதுமக்களின் வைப்புத் தொகையை ஈடாக வைத்தோ, பங்குகளாக மாற்றவோ இம்மசோதா வகை செய்கிறது. 
1969 முதல் திவாலான பல தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து பெயில்-அவுட் செய்து காப்பாற்றிய மத்திய அரசாங்கம் தற்போது வாடிக்கையாளர் வைப்புத் தொகையை பெரு நிறுவனங்களின் வாராக் கடனுக்கு ஈடாக்கும் பெயில்-இன் முறையை இம்மசோதா மூலமாக அறிமுகப்படுத்துகிறது. 
அதுமட்டுமல்ல, இம்மசோதாவினால் உருவாக்கப்படும் நிதித் தீர்வு கழகம், எந்தவொரு நிதி நிறுவனம் – அது வங்கியோ, இன்சூரன்ஸ் நிறுவனமோ, பொதுத்துறையோ, தனியார் துறையோ எதுவாக இருந்தாலும் – அதன் இருத்தலுக்கு அதிதீவிரமான ஆபத்து என்று கருதுகிறதோ அந்நிறுவனத்தை கையகப்படுத்தவோ, இணைக்கவோ, விற்கவோ, அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவோ, அவர்களை வேலையிலிருந்து நீக்கவோ, அந்நிறுவனத்தை இழுத்து மூடவோ அதிகாரம் படைத்தது. 
தற்போதைய நெருக்கடியை இத்தகைய ஒரு மக்கள் விரோத மசோதாவின் மூலமாக தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி செய்கிறது.
வங்கிகளின் தற்போதைய தேவை மூலதனம் அல்ல. பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக் கடனை கறாராக வசூல் செய்வதுதான். 
இந்தத் திசை வழியில் மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவும், எப்ஆர்டிஐ மசோதாவை கைவிடக் செய்யவும், பொதுத்துறை, கிராம, கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்தவும், வங்கி ஊழியர் சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுமக்களிடத்தில் கோடிக்கணக்கான கையெழுத்து பெற்று நாடாளுமன்றத்தின் சபாநாயகரிடம் 2018 பிப்ரவரி முதல் வாரத்தில் சமர்ப்பிக்க உள்ளன. 
======================================================================================
ன்று,
ஜனவரி-27.
வியட்நாம்


 •  அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகம்  ஜியார்ஜியா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1785)
 • தாமஸ் எடிசன், வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்(1880)
 • உலக படுகொலைகள் தினம் 
 •  தேசிய புவியியற் கழகம், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1888)
 •  ஜான் லோகி பயார்ட், முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்(1926)
 • வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது(1973)
=======================================================================================
வரும் பிப்ரவரி 4 அன்று  மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. 
அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிகம் விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும்.

பூமியின் சுற்றுப்பாதையின் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெரிய விண்கல் பூமியை தாக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும்  
 பூமியை நெருங்கி வரும் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிகம்
=========================================================================================