வங்கிகள் மோசடி?
மத்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமரின் முக்கிய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல், உதவி கவர்னர் வைரல் ஆச்சார்யா போன்றவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டுமென்று தொடர்ந்து பொது வெளியில் பேசி வருகின்றனர்.
வங்கித் துறையை பற்றி இந்த அரசாங்கத்தின் கொள்கை நிலை என்ன என்பதற்கு இவையெல்லாம் சான்றாகும்.
இந்தப் பின்னணியில்தான் வங்கித் துறை பற்றிய சர்ச்சை பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
இன்றைக்கு வங்கித் துறையை அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை பீடித்திருக்கும் முக்கிய நோய் “வாராக் கடன்”. “வங்கிகளின் மொத்தக் கடனில் 56 சதவீதம் கடன் பெற்றுள்ள ரூ.5 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியுள்ள பெரும் கடனாளிகள்தான் மொத்த வாராக் கடனில் 88 சதவீதத்திற்கு பொறுப்பானவர்கள்” என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையே தெள்ளத் தெளிவாக கூறுகிறது.
அதிலும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேலாக வாராக் கடன் வைத்துள்ள 12 பெரு நிறுவனங்களின் வாராக் கடன் ரூ.2,53,000 கோடியாகும்.
இது மொத்த வாராக் கடனில் 25 சதவீதமாகும்.
இதுவல்லாமல் அடுத்த நிலையில் உள்ள 28 பெரு நிறுவனங்கள் சுமார் ரூ.4,00,000 கோடி வாராக் கடனுக்கு சொந்தக்காரர்கள். ஆக, 40 நிறுவனங்கள் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை உருவாக்கியுள்ளன. இக்கடன்கள் வாராக் கடன் என்று அறிவிக்கப்பட்ட பிறகு வசூலிக்கப்பட வேண்டிய வட்டி இத்தொகையில் சேராது.
அதையும் சேர்த்தால் 40 நிறுவனங்களே சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுக்கு பொறுப்பாவார்கள்.
மத்திய பாஜக அரசு பதவியேற்கும் போது ரூ.2,16,000 கோடியாக இருந்த மொத்த வாராக் கடன் 2017 மார்ச் மாதம் ரூ.7,11,000 கோடியாக உயர்ந்துள்ளது.
2016-17ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம் ரூ.1,59,000 கோடி.
ஆனால், வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.1,70,000 கோடி.
ஆக பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.11,000 கோடி நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த ஒதுக்கீடுகள் எந்த வகை கடனுக்காக என்று வங்கிகள் அறிவிக்காவிட்டாலும் இவற்றில் 90 சதவீதம் ஒதுக்கீடு என்பது பெரு நிறுவனங்களுக்காகத்தான் என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.
காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கம் 2005 முதல் 2014 வரை பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்த தொகை சுமார் ரூ.1,47,000 கோடி. ஆனால், தற்போதைய பாஜக அரசாங்கம் கடந்த மூன்றே ஆண்டுகளில் தள்ளுபடி செய்த தொகை மட்டும் ரூ.1,88,000 கோடி.
யாருடைய வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை பொதுவெளியில் வைக்கவோ, பாராளுமன்றத்தில் பகிரவோ இவ்வரசாங்கம் தயாராக இல்லை. “ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும்” என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை மத்திய அரசாங்கம் நிராகரித்து விட்டது.
மூடி வைக்கப்பட்ட உறையில் இப்பட்டியல் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றமும் இப்பட்டியலை இன்று வரை பொதுவெளியில் வைக்கவில்லை.
இத்தகைய பெரு நிறுவனங்களின் வாராக் கடன்தான் இன்றைக்கு வங்கித் துறையை செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. இதற்கு தனியார் துறை வங்கிகளும் விலக்கல்ல.
இக்கடனை வசூலிக்க 2016-க்கு முன்பு வரை சிவில் நீதிமன்றம், கடன் வசூல் தீர்ப்பாயம் மற்றும் சர்பேசி (SARFAESI) சட்டம் ஆகியவை மட்டுமே அமுலில் இருந்தன.
இச்சட்டங்களெல்லாம் உரிய பலனை தரவில்லை என்று கூறிய பாஜக அரசாங்கம் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதென்று தீர்மானித்தது. “அச்சட்டம் வந்தால் அனைத்து பெரு நிறுவனங்களிடமிருந்தும் மிகக்குறுகிய கால இடைவெளியில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வாராக் கடனை வசூல் செய்து விடுவோம்” என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறினார்கள்.
அப்படி கொண்டு வரப்பட்ட சட்டம்தான் Insolvency and Bankruptcy Code என்ற திவால் சட்டம். இச்சட்டம் 2016 மே மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2016 நவம்பர் 30ஆம் தேதி முடிக்கப்பட்டு, டிசம்பர் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 2017 மே மாதம் வரை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்டு மொத்தம் 3 வங்கிகள் மட்டுமே இச்சட்டத்தை அணுகின.
இச்சட்டத்தை கறாராக அமுல் செய்ய வேண்டுமென்றால், மத்திய அரசாங்கத்திற்கு தனியாக அதிகாரம் வேண்டும் என்று நிதியமைச்சகத்தால் வாதாடப்பட்டு 2017 மே மாதம் 4ஆம் தேதி ஓர் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தி வாராக் கடனை வசூல் செய்ய முன்முயற்சி மேற்கொள்ள வகை செய்யப்பட்டது.
இதனடிப்படையில்தான் ரிசர்வ் வங்கியின் உள் ஆலோசனைக் குழு கூடி 12 பெரிய நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க திவால் சட்டத்தின் அடிப்படையில் தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை அணுகுமாறு வங்கிகளை அறிவுறுத்தியது.
இத்தீர்ப்பாயம் “ஒரு வாராக் கடன் கணக்கை வசூல் செய்யத் தகுந்தது” என்று அறிவித்த 180 நாட்களுக்குள் தவறினால் 270 நாட்களுக்குள் அக்கம்பெனியின் வாராக் கடனை வசூலிக்கும் அனைத்து வழிவகைகளையும் செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
ஆனால், நடைமுறையில் தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் ஏற்கனவே 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமல்லாமல் வருடா வருடம் கம்பெனி சட்டப்படி மேலும் 4,000 வழக்குகள் கூடுதலாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பாயத்தை வங்கிகள் மட்டுமல்லாமல் கடன் கொடுத்த எந்த நிறுவனம் வேண்டுமானாலும் அணுகலாம். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வழக்குகள் இதில் குவிவதற்கான வாய்ப்புள்ளது.
தற்போது இத்தீர்ப்பாயத்தில் 7 தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்டு 16 பேர் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசாங்கம் சொல்வது போல் மிக விரைவாக வாராக் கடன் நிறுவனங்கள் தீர்வு காணப்பட்டு கடன் வசூல் செய்வதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது.
வங்கியில் வாராக் கடன் வைத்துள்ள 12 பெரும் நிறுவனங்களில் 11 கணக்குகள் மட்டுமே தற்போது தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையில் பல நிறுவனங்கள் பல்வேறு நீதிமன்றங்களை அணுகி முட்டுக்கட்டை போடவும் முயற்சித்து வருகின்றன.
ஒருபுறம் திவால் சட்டத்தின் வாயிலாக தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் மூலமாக பெரு நிறுவனங்களின் கடனை வசூல் செய்வோம் என்று சொல்கின்ற மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் மறுபுறம் இத்தீர்ப்பாயத்திற்கு எடுத்துச் செல்லும் அத்தனை கடன் தொகைக்கும் ஈடாக 2 ஆண்டுகளில் வங்கியின் லாபத்திலிருந்து முழுத் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்குகின்றன.
இதன் பொருள் இந்த புதிய அமைப்பு மூலமாகவும், பெரு நிறுவனங்களின் கடனை வசூல் செய்ய முடியாது என்பதுதான். வெளிநாட்டு ஏஜென்சிகளும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் வெளிப்படையாகவே இத்தகைய பெரு நிறுவனங்களின் கடனில் 80 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என்று பேசுகின்றனர்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது ரூ.12,00,000 கோடி வாராக் கடனில் எவ்வளவு வசூலாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இக்கடனை வசூல் செய்யும் நடைமுறையின்போது ஏற்கனவே வாராக் கடன் வைத்திருப்பவர்களே வங்கியில் வாராக் கடன் வைத்துள்ள பெரு நிறுவனங்களின் சொத்தை ஏலத்தில் எடுக்கும் முயற்சியை தடுக்க புதியதாக 2017 நவம்பர் 23ஆம் தேதி மேலும் ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதிலிருந்து பெரு நிறுவனங்களுக்கு சாதகமான பல ஓட்டைகளுடன்தான் இந்த திவால் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தகைய பெருந் தொகையை வசூலிக்காமல் வங்கிகளின் செயல்பாடு தொடர்ந்து இயங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இத்துடன் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரம் மூலமாக “உடனடி சரிசெய்யும் செயல்பாடு” என்ற ஒரு கட்டுப்பாட்டை 9 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
இதன்படியும் பொதுத்துறை வங்கிகளை பலவீனமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய அரசாங்கம் உலக அரங்கில் வளர்ந்த நாடுகள் அறிவுறுத்தி வரும் பேசல் விதிகளை இந்திய வங்கிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு 2019 வாக்கில் ரூ.1,80,000 கோடி மூலதனம் தேவைப்படும் என்றும், அதில் ரூ.70,000 கோடியை மத்திய அரசாங்கம் வழங்கும் என்றும், மீதமுள்ள ரூ.1,10,000 கோடியை பொதுத்துறை வங்கிகளே சந்தையில் திரட்டிக் கொள்ள வேண்டுமென்றும், இந்திர தனுஷ் என்ற ஒரு திட்டத்தை 2015 ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
அத்திட்டத்தின்படி இதுவரை ரூ.50,000 கோடி மூலதனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசாங்கம் சுமார் ரூ.35,000 கோடி மட்டுமே இதுவரை பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக வழங்கியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் ரூ.2,11,000 கோடி மறுமுதலீட்டு அறிவிப்பை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. இது ஏதோ முழுவதுமாக அரசாங்க கஜானாவிலிருந்து கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
ஆனால், உண்மையில் இதில் ரூ.1,35,000 கோடி மறு முதலீட்டு பத்திரம் மூலமாகவும், ரூ.58,000 கோடி பங்கு விற்பனை மூலமாகவும், இந்திர தனுஷ் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.18,000 கோடி அரசாங்க கஜானாவிலிருந்து வரும் என்பதுதான் உண்மை நிலவரம்.
பங்கு விற்பனை என்று வரும்போது அது பொதுத்துறை வங்கிகளை மேலும் தனியார்மயத்தை நோக்கி செலுத்தும். தற்போதுள்ள நிலைமையிலேயே பொதுத்துறை வங்கிகள் அவற்றின் உண்மையான நோக்கத்தை கைவிட்டு புதிய தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகளின் கொள்கைகளை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு முயல்கின்றன.
அதன் காரணமாகத்தான் ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்குவது பின்னுக்கு தள்ளப்பட்டு, கார்ப்பரேட்களுக்கான கடனுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சாதாரண மக்கள் பெறும் கடனுக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டு, பெரு நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி குறைக்கப்படுகிறது. சேவைக் கட்டணம் என்ற பெயரில் சாதாரண வாடிக்கையாளர்கள் மீது கடும் சுமை ஏற்றப்படுகிறது.
பங்கு விற்பனை மூலம் பொதுத்துறை வங்கிகள் மேலும் பலவீனமடைந்தால், சாதாரண வாடிக்கையாளர்கள் மீதான இத்தாக்குதல் தீவிரமாகும்.
கல்விக் கடனையும், விவசாய கடனையும் வசூலிக்க பொதுத்துறை வங்கிகளே வெளியாட்களை நியமிக்கின்றன. அத்தகைய வெளியாட்கள் எளிய மக்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதன் காரணமாக பல தற்கொலைகளும், உயிரிழப்பு சம்பவங்களும்கூட நடைபெறுகின்றன.
ஆனால், இத்தகைய கடுமையான நடைமுறையை பெரு நிறுவனங்கள் மீது காட்டுவதற்கு பொதுத்துறை வங்கிகளே தயாராக இல்லை.
பொதுத்துறை வங்கிகள் தற்போது செய்ய வேண்டியது பெரு நிறுவனங்களின் வாராக் கடனை கறாராக வசூல் செய்வதுதான். வசதி இருந்தும் வேண்டுமென்றே வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத செயலை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
திவால் சட்டம் உள்ளிட்டு அனைத்து சட்டங்களும் பெரு நிறுவனங்களிடம் மென்மையாகவே நடந்து கொள்கின்றன. பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதிலும், வசூலிப்பதிலும் மத்திய ஆட்சியாளர்களின் ஆசியுடன் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
ஆனால், எந்த உயர் மட்ட நிர்வாகியும் இதற்கு பொறுப்பாக்கப்படுவதில்லை. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் தங்களுக்கும் தனியார் வங்கிகளைப் போல் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய புலனாய்வுத் துறை, மத்திய கண்காணிப்பு அமைப்பு, சிஏஜி ஆகியவற்றிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று கோருகின்றனர். மத்திய நிதியமைச்சர் ஒருபடி மேலே சென்று “பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதிலும், கடன் வசூல் செய்வதிலும் சுயமாக, தாராளமாக கடன் வழங்க தைரியமாக முடிவெடுக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988-லிருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவெடுக்கும்” என்று கூறுகிறார்.
ஆக, பெரு நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசாங்கத்திற்கு அரசியல் உறுதி இல்லை. பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் என்பது வழங்கப்பட வேண்டும். ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய் பெரு நிறுவனங்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்து விட்டு அதற்கு ஈடாக அரசாங்க கஜானாவிலிருந்து மூலதனம் கொடுப்பது என்பது மறைமுகமாக மக்கள் வரிப்பணத்தை பெரு நிறுவனங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சென்று முடியும்.
எனவேதான் ஜி-20 நாடுகள் எடுத்த முடிவின் அடிப்படையில் நிதித் தீர்வு வைப்பு காப்பீட்டு மசோதா (எப்ஆர்டிஐ) என்ற ஒரு மசோதாவை 2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு வங்கி செயல்பட முடியாமல் போனால் பொதுமக்களின் வைப்புத் தொகையை ஈடாக வைத்தோ, பங்குகளாக மாற்றவோ இம்மசோதா வகை செய்கிறது.
1969 முதல் திவாலான பல தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து பெயில்-அவுட் செய்து காப்பாற்றிய மத்திய அரசாங்கம் தற்போது வாடிக்கையாளர் வைப்புத் தொகையை பெரு நிறுவனங்களின் வாராக் கடனுக்கு ஈடாக்கும் பெயில்-இன் முறையை இம்மசோதா மூலமாக அறிமுகப்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல, இம்மசோதாவினால் உருவாக்கப்படும் நிதித் தீர்வு கழகம், எந்தவொரு நிதி நிறுவனம் – அது வங்கியோ, இன்சூரன்ஸ் நிறுவனமோ, பொதுத்துறையோ, தனியார் துறையோ எதுவாக இருந்தாலும் – அதன் இருத்தலுக்கு அதிதீவிரமான ஆபத்து என்று கருதுகிறதோ அந்நிறுவனத்தை கையகப்படுத்தவோ, இணைக்கவோ, விற்கவோ, அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவோ, அவர்களை வேலையிலிருந்து நீக்கவோ, அந்நிறுவனத்தை இழுத்து மூடவோ அதிகாரம் படைத்தது.
தற்போதைய நெருக்கடியை இத்தகைய ஒரு மக்கள் விரோத மசோதாவின் மூலமாக தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி செய்கிறது.
வங்கிகளின் தற்போதைய தேவை மூலதனம் அல்ல. பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக் கடனை கறாராக வசூல் செய்வதுதான்.
இந்தத் திசை வழியில் மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கவும், எப்ஆர்டிஐ மசோதாவை கைவிடக் செய்யவும், பொதுத்துறை, கிராம, கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்தவும், வங்கி ஊழியர் சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுமக்களிடத்தில் கோடிக்கணக்கான கையெழுத்து பெற்று நாடாளுமன்றத்தின் சபாநாயகரிடம் 2018 பிப்ரவரி முதல் வாரத்தில் சமர்ப்பிக்க உள்ளன.
======================================================================================
இன்று,ஜனவரி-27.
வியட்நாம் |
- அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகம் ஜியார்ஜியா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1785)
- தாமஸ் எடிசன், வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்(1880)
- உலக படுகொலைகள் தினம்
- தேசிய புவியியற் கழகம், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1888)
- ஜான் லோகி பயார்ட், முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்(1926)
- வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது(1973)
வரும் பிப்ரவரி 4 அன்று மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது.
அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிகம் விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும்.
பூமியின் சுற்றுப்பாதையின் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெரிய விண்கல் பூமியை தாக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் பூமியை நெருங்கி வரும் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது.
ஆனாலும் பூமியை நெருங்கி வரும் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிகம் |
=========================================================================================