நடிப்பு அரக்கன்!

நடிகர் நாகேஷ் பூர்வீகம் மைசூரு. 
கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை. 
குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய்.நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல. எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
 குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும், 'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை. 




நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும். 

சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,''காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,''பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்!
 'அன்பே வா!'வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!நாடகக் குழுக்களில் நடித்து வந்த நாகேஷ், கதாநாயகனாக நடித்த முதல் படம் 'சர்வர் சுந்தரம்'. அந்தப் படத்தைத் தயாரித்தது புகழ் பெற்ற ஏவி.எம்.நிறுவனம்; இயக்கியது இரட்டையர்களான கிருஷ்ணனும் பஞ்சுவும்; படத்திற்குக் கதை--வசனம் எழுதியது கே.பாலசந்தர். 
நாகேஷ் என்னும் நடிகரின் ஆளுமையைச் செதுக்கிப் பட்டை தீட்டியதில், -அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதில் கே.பாலசந்தருக்குப் பெரும் பங்கு உண்டு.
கே.பாலசந்தரின் கை வண்ணத்தில் உருவான 'எதிர்நீச்சல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'பாமா விஜயம்' முதலான திரைப்படங்கள் நாகேஷ் என்னும் நடிகரின் பன்முக ஆற்றலை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பவை. 
1965-ல் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் 'நீர்க்குமிழி'. அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்னும் பாத்திரத்தினை ஏற்று நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்தார். அதிலும் குறிப்பாக,''ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா”என்னும் சுரதாவின் அற்புதமான தத்துவப் பாடலுக்கு நாகேஷ் நடித்திருக்கும் நடிப்பு, இன்றளவும் காண்போர் உள்ளத்தை உருக்கும். வி.குமாரின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அப்பாடலை அருமையாகப் பாடியிருப்பார்.

"நம்மவர் "நாகேஷ் -கமல் 
தொடக்க காலத்தில் நாகேஷ் ரயில்வே துறையின் சிற்றுண்டியகத்தில் பணியாற்றி வந்தார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அவர், ம.ரா. என்பவரைத் சந்தித்து வாய்ப்புக் கேட்டார். 

ம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில் நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் நோயாளியாக நடித்தார். 

சிறிய வேடமே என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்; நாடகத்தின் பதினேழாவது காட்சியில் ஒன்றரை மணித்துளிகளே வந்தாலும், அதில் தனித்திறமையைக் காட்டினார்.“ஒன்றரை நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து 'அம்மா' என்று அலறி துடித்துக் கதறி...'யாரடா இவன்! 

திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!' என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் 'சிரித்து வாழ வேண்டும்' என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். 
“ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்!” என்று கூறி நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார். 
பிற்காலத்தில் நாகேஷ் என்கிற அற்புதமான நகைச்சுவை நடிகர் உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய நிகழ்ச்சி இது!


நாகேஷ் என்றதும் நம் நினைவுக்கு முதன்முதலில் வருவது ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு அவர் கதை சொல்லும் காட்சி.
 'சபாஷ்! சரியான போட்டி!' என்று பாராட்டத்தக்க வகையில் டி.எஸ்.பாலையாவும் நாகேஷூம் அக்காட்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் மனோரமாவுடன் இணைந்து துாத்துக்குடி வழங்கு முத்துத் தமிழில் ''முத்துக் குளிக்க வாரீகளா?
மூச்சை அடக்க வாரீகளா?”என்று பாடியிருக்கும் 'டூயட்' பாடலும் புகழ்பெற்றது.
கமல்ஹாசன்  படங்களில் நடிக்கும் போதும் இன்றைய சூழ்நிலைகளுக்கு இசைவான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியவர். 
கமல்ஹாசனின்" நம்மவர்" ,'அபூர்வ சகோதரர்கள்', மகளிர் மட்டும்'அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படங்கள் 'எக்காலத்துக்கும் ஏற்ற நடிகர் நாகேஷ்' என்பதற்குக் கட்டியம் கூறி நிற்பவை.
"அபூர்வ சகோதரர்களில் வில்லனாக நடித்து கலக்கி தனது இரண்டாம் காலை பயணத்தை துவக்கினார்.
நம்மவரில் சோகநடிப்பிலும் தான் சோடை போனவன் அல்ல என்று நிரூபித்து மத்திய அரசின் சிறந்த குணசித்திர நடிகர் விருதை பெற்றார்.

கமல்ஹாசனின் தயாரிப்பான 'மகளிர் மட்டும்' படத்தில் இதுவரை எவரும் ஏற்றிராத - ஏற்கவும் துணியாத - ஒரு பிணத்தின் பாத்திரத்தில் நடித்துத் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். 
இந்த ஒரு வேடத்திற்காகவே நாகேஷூக்கு ஆஸ்கார் விருது என்ன, அதற்கும் மேலான விருதுகள் இருந்தாலும் கொடுக்கலாம்!
ஆடல் காட்சியிலும் தனித்திறமையை நயமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியவர் நாகேஷ். 'அவளுக்கென்ன? அழகிய முகம்!' (சர்வர் சுந்தரம்), 'தாமரைக் கன்னங்கள்!' (எதிர் நீச்சல்) இரு பாடல்கள் போதும், நாகேஷின் ஆடல் திறனைப் பறைசாற்ற!

வாழும் காலத்தில் நாகேஷூக்குத் திரைப்பட உலகின் எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை (ஒருவேளை, வாழும் காலத்தில் மகத்தான கலைஞர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் தமிழனின் தனிக்குணம் போலும்!) ஆனாலும், மக்களின் மனங்கள் என்னும் சிம்மாசனத்தில் தனிப்பெரும் நகைச்சுவை நாயகனாக நாகேஷ் என்றென்றும் வீற்றிருப்பார்.
                                                                                                                               -பேராசிரியர் இரா.மோகன்
=======================================================================================
ன்று,
ஜனவரி-31.

  • யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)

  • அமெரிக்க முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)

  • நவூறு நாடு விடுதலை (1968)
  • தமிழக முன்னாள் முதல்வர் மு.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

  • நடிகர் நாகேஷ் இறந்த தினம் (2009)

========================================================================================
முழு "நிலா"மறைவு.
(சந்திர கிரகணம்)

இன்று நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுகிறது. 

அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே,   கிரகணம் தொடங்கி,  மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும்.  
இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.
இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும். 

குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.

முன்னதாக, கடந்த 1866 மார்ச் 31-ம் தேதி இதுபோன்ற சந்திர கிரகணம் ஏற்பட்டது. அடுத்து, 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் இதுபோன்று தோன்றும்.

இன்று 'சூப்பர் மூன்' ,'புளூ மூன்' எனப்படும் வானியல் நிகழ்வும் நடைபெற உள்ளதால், வழக்கத்தை விட நிலவு இன்று பெரியதாகவும், கூடுதல் பிரகாசமாகவும் தோன்றும். இக்கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?