சனி, 23 மார்ச், 2019

திருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி.

பிரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து #mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம்.
இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை.
யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர்.
ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை.
உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் அக்கவுண்டிலிருந்து பதில் வந்தது.
இது மட்டுமல்ல, மோடியையும் பாஜக-வையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.
அவ்வளவுதான், ட்விட்டர் உலகில் ஓட்டித் தீர்த்துவிட்டார்கள். காவலனாக இருக்கச் சொல்லி நீரவ் மோடியை பிரதமரின் ட்விட்டரிலிருந்து கேட்டிருக்கிறார்களா என ஒமர் அப்துல்லாவும் சீரியஸாக கேள்வியெழுப்ப, என்ன செய்வதென தெரியாமல், அம்மாதிரி ட்வீட்களையெல்லாம் டெலீட் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி, தனது ட்விட்டர் பதிவில் “மோதி தனது நண்பர்களுக்கு நன்றி சொல்கிறார்” என்று இதைக் கடுமையாகக் கேலிசெய்திருக்கிறது. உடனே பாஜக அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், என் பள்ளி நண்பர்கள் என்னைத் திட்டுவதுபோல திட்டிவைத்திருக்கிறார்கள்..
-----------------------------------------------------------------------------------------------------
திசையெட்டும் பரவட்டும் தியாக வெளிச்சம்
ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன்

1931 மார்ச் 23 அன்று மாலை 7.30 மணிக்கு லாகூர்சிறையின் மதில் சுவர்களையும் தாண்டி ஒலித்த அந்த மாவீரனின் முழக்கங்கள். . . உடலை விட்டுஉயிர் பிரியப்போகிறது என்ற நிலையில் கூட ஒருவிவசாயியைப் போல் விதைத்தான் தன் உயிரையே!

இன் குலாப் ஜிந்தாபாத்!

புரட்சி நீடுழி வாழ்க!

என்ற முழக்கங்களோடு.... !

இந்திய தேசத்தின் விடுதலை வேட்கையை நெருப்பைப் போல் அடைகாத்த பாரத புத்திரர்கள் பலர் இருந்தாலும் பகத்சிங் ஒரு துருவ நட்சத்திரத்தைப்போல் வரலாற்றில் தனித்து நிற்கும் பெயர்.

மகாகவி பாரதி பாடிய

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் - பாடல் வரிகளில்,

‘ ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ ’

-என்ற வரியைப் போல் 24 வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஜோதியாய் பிரகாசித்த இளைஞன் பகத்சிங்.ஒரு தூக்கு மேடை கைதி சிறைக்குள் 64 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றத்திற்குப் போகிறபோதெல்லாம் போராட்டம்; தன் உயிர்த் தோழர்கள் ஜதீன்தாசையும் மஹாவீர் சிங்கையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பறிகொடுத்த துயரம் என அனைத்தையும் உளவியல் ரீதியில் எதிர்கொண்டு; சிறைக்குள் சுமார் 151 புத்தகங்களை படித்து குறிப்பெடுத்து; 6 சிறுநூல்களை பகத்சிங் என்ற 24 வயது இளைஞனால் எழுத முடிந்தது என்றால் அவன்தான் இளைஞர்களுக்கான அடையாளமாக இருக்க முடியும். “இளைஞர்கள் நாங்கள் 60 கோடி இந்தியநாட்டின் இருதய நாடி” என இந்தியாவில் நல்லதொரு வாழ்க்கைக்காக ஏக்க பெருமூச்சு விட்டுக் கிடக்கும் இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கிறார் பகத்சிங்.1929 அக்டோபர் 19 அன்று லாகூரில் இரண்டாவது பஞ்சாப் மாணவர்கள் மாநாடு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. அம் மாநாட்டிற்கு பகத்சிங் அனுப்பிய வாழ்த்து செய்தி நமக்கான பாதையை காட்டுகிறது:

தோழர்களே,

இன்று துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு, இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப்போவதில்லை. இன்று அதைவிட அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்றை நீங்கள் எதிர் கொண்டுள்ளீர்கள். வரவிருக்கும் லாகூர் மாநாட்டில், நாட்டின் சுதந்திரத்திற்காக உக்கிரமான போராட்டம் ஒன்றுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்க இருக்கிறது. தேசவரலாற்றின் சிக்கலான இக்கால கட்டத்தில் மிகப்பெரும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாக வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி களத்தில்பல மாணவர்கள் மரணத்தையும் சந்தித்துள்ளனர் என்பது உண்மையே! அதே உறுதியையும் தன்னம்பிக்கையையும் நிரூபிப்பதற்கு இம்முறை மட்டும் என்ன அவர்கள்தயங்கவா போகிறார்கள்?இளைஞர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான இப்புரட்சிகரமான செய்தியை நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தொழில்மயமான பகுதிகளில் வாழும் மக்களிடத்திலும் கிராமப்புறங்களில் ஓட்டைக் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களிடத்திலும் சென்று மக்களை விழிப்படைய செய்ய, அவர்களை விடுதலைப் போராட்டத்திற்கு திரட்ட வேண்டும். அப்போது தான் நாம் சுதந்திரம் அடைவோம். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை சாத்தியமற்றதாகும்! - இப்படி எழுதுகிறார் பகத்சிங்.சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தான் இன்றைய சுதந்திர இந்தியாவின் நிலையாகவும் இருக்கிறது. பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள் முன்அன்று இருந்தது இந்திய விடுதலைப் போராட்டம். இன்றுநம் முன் உள்ளது பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதற்கான போராட்டமாகும். ஆம் 17வது நாடாளுமன்ற தேர்தல்கலத்தில் உள்ளோம். ஜனநாயகத்தை பாதுகாத்திட பகத்சிங் காட்டிய பாதையில், மக்களை திரட்டுவோம். மக்களாட்சியை பாதுகாக்க, பகத்சிங் என்னும் தியாக தீபத்தின் பாதையில் பயணிப்போம்.
------------------------------------------------------------------------------------------------------
ன்று,
மார்ச்-23.
தோழர் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம்.-----------------------------------------------------------------------------------------------------
குளங்களை மூடி சாலை போடும் கனவுத்திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகளும், கடலும் சூழ்ந்த இயற்கையின் கொடைகள் மட்டுமல்லாது, சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால் உருவான கால்வாய்கள், குளங்களுக்கு வளர்ச்சி என்கிற பெயரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக்கூட மதிக்காமல் குளங்களை மூடும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. 
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, மாம்பழத்துறை அணை என 4 பெரிய அணைகளும், இயற்கையாக அமைந்த 961 குளங்கள், மன்னராட்சி காலங்களில் உருவாக்கப்பட்ட 1558 குளங்கள் என மொத்தம்2519 குளங்களும், அவற்றுக்கு நீர் கொணரும் 24 கால்வாய் திட்டங்களும் உள்ளன. 
இவற்றின் மூலம் 62,219.66 ஏக்கர் நிலம்பாசன வசதி பெற்று மக்கள் வாழத்தகுந்தசிறந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இம்மாவட்டம் உள்ளது. 30 சதவீதத்துக்கும் அதிகமான வனப்பரப்பும் உள்ளது. அனைத்து உயிரினங்களின் வாழிடமான இம்மாவட்டத்தில் அருவிகளும், சிற்றோடைகளும், காடுகளும், மறுபக்கத்தில் கடலும் என இயற்கை அன்னை தாலாட்டும்தொட்டிலாக குமரி மாவட்டம் விளங்கி வருகிறது. கடந்த காலங்களில் குமரி மாவட்டத்தில்நடந்த வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் இய
ற்கை அமைப்பை சீரழிக்காமல் மேம்படுத்தியே நடந்துள்ளன. மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற உயரத்திலும் அதே அளவுக்கு பள்ளத்திலும் செல்லும் கால்வாய்கள் மாவட்டம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. ஆனால் அவை இயற்கையோடு கலந்து வலுவூட்டவே செய்துள்ளன. சாலைகள் ரயில் திட்டங்கள் கூட நீர் நிலைகளை சிதைக்காமல் கடந்துசென்றன. 
ஆனால் தற்போது நான்கு வழிச்சாலை என்கிற பெயரில் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளை போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக பல்வேறு தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், முன்னாள் வங்கி அதிகாரிகள் சங்க அகில இந்திய தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான தாமஸ் பிராங்கோ, எம்.சிவசுப்ரமணியன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் குளங்களை மூடி நாற்கர சாலைகள் அமைக்கப்படுவது குறித்து புகார்தெரிவித்துள்ளனர். 
அதன்மீது 19.3.2019க்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து செயலர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர், குமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர்ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. 
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகசாலை அமைக்கும் பணி தொடர்கிறது. புத்தேரி குளத்தை இருபாகங்களாக பிரித்துபெயரளவுக்கு நான்கு குழாய்களை பதித்து இணைப்பு கொடுத்துள்ளனர்.
இதுபொன் .ராதாகிருஷ்ணனின்  குமரி மாவட்ட வளர்ச்சி கனவு திட்டமாம்.
 மழை காலங்களில் சுற்றிலும் உள்ள மலைகளிலிருந்து வரும் தண்ணீர் குளத்தின் மொத்த பரப்பிலும் சமநிலையில் நிற்கவாய்ப்பில்லாமல் பெரும் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்பது இப்பகுதிமக்களின் கவலையாக உள்ளது. 
இதுபோல் சுங்கான் கடை ஐயப்பா கல்லூரி அருகிலும் வேறு பல இடங்களிலும் உள்ள குளங்கள் வரைமுறையில்லாமல் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனக்கூறியதாமஸ் பிராங்கோ அதற்காக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறினார். 
கண்களை விற்று சித்திரம் வாங்கலாமா? என்பதே வளர்ச்சி குறித்து பேசிவரும் பாஜகவினருக்கு கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களின் கேள்வியாக உள்ளது.-
--------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 14 மார்ச், 2019

மதுரை எய்ம்ஸ்&வைகை பாலம்


  மோடி கட்டிக்கொடுத்த  
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.                                                                 வைகை  நவீன   பாலம்.

மேலே உள்ளப்படங்கள் கொஞ்சம் போட்டோஷாப் செய்யபப்ட்டாலும் கலைஞ்சர் கட்டிய தலைமைச்ச்செயலகம் என்று தெரிகிறது.
அடுத்தபடம் வெளிநாட்டில் உள்ள ஆற்றுப்பாலம் என்று நீங்கள் யூகித்தால் அது தவறு.
இரண்டுமே நம் மதுரையில்தான் உள்ளது.
முதலாவது படம் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு கம்பிரமாக காட்சியளிக்கிறது.
இரண்டாவது கரை புரண்டோடும் வைகை ஆற்றை மக்கள் கடக்க மோடி கட்டிக்கொடுத்த பாலம்.
மதுரைக்காரர்களுக்கே தெரியாத இந்த செய்திகளும்,படங்களும்தான் பாஜகவினர் வடமாநிலங்களில் மோடியின் சாதனை எனப்பரப்பிக்கொண்டிருக்கும் திருவிளையாடல்கள்.
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுப்பா” என்பார்கள்.
இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறது நரேந்திர மோடி படை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து நான்கரை ஆண்டுகளாக முடிவெடுக்காமல் மோடி அரசு காலம் கடத்தி வந்தது. தமிழகத்திலும் பல நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு போராட்டங்கள் நடைபெற்றன.
 அதன் பிறகும் அசையாத நடுவண் அரசு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?
 வராதா?
 வரும் என்றால் எங்கு அமைக்கப் போகிறீர்கள் என்பதை சொல்லுமாறு உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.அதன் பிறகு அசைந்த நடுவண் அமைச்சரவை, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்தது.
 கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பொட்டல் வெளியாக காணப்படும் தோப்பூரில், மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது அயோத்தி ராமனுக்கும் தெரியாது.இந்நிலையில்தான், இங்கேயுள்ள இரண்டு படங்களை நரேந்திர மோடி பட்டாளம் உத்தரப்பிரதேசத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறது.

 அதில் ஒன்றில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது புதிய தலைமைச் செயலகமாக சென்னையில் கட்டிய மிகப்பெரும் கட்டடமும், இந்தி வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. 
மதுரையில் நரேந்திர மோடியால் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைதான் இது என்பதுதான் அந்த வாசகம்.
 காவிப் பட்டாளமே பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கப்பா...அடுத்த படம், தண்ணீர் நிரம்பி ஓடும் ஆறும், அதிநவீன முறையில் கட்டப்பட்ட பாலமும் இருக்கிறது.
அந்தப் பாலத்தின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருக்கிறது.
மதுரையில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் வைகை ஆற்றின் குறுக்கே பிரதமர் நரேந்திர மோடி கட்டிய அதிநவீன பாலம்தான் இது என்று அதிலுள்ள வாசகம் கூறுகிறது.
மதுரையில், வைகை ஆற்றில் தண்ணீரின்றி மணல் வெளியில் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. 
 அப்படியானால், அந்த ஆறும் பாலமும் எங்கே இருக்கிறது. 
ஹாலந்து நாட்டில் இந்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. 
அதில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பாலம்தான் இது.  
இதை வைகை ஆறு என்றும் அதில் கட்டப்பட்டுள்ள பாலம் என்றும் கூறுவதற்கு எப்படி இவர்களுக்கு மனசு வந்தது.
போட்டோ ஷாப் தொழில்நுட்பம் இருக்கும்வரை பொய்யை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என நரேந்திர மோடி பட்டாளம் நினைக்கிறது.
எல்லாக் காலத்திலும் மக்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்களா?
படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்றார் பாரதி.
                                        பாஜக வைப்பொறுத்தவரை  அது உண்மையாகும் காலமும் வருகிறது..
                                                                                                                                     படம் உதவி.குமரன்(ஜனசக்தி)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மரணமில்லா மாமேதை
                                                                                                                                                                                                                               - நாகைமாலி


மானுட சமூகத்தை ஒளிநிறைந்த எதிர்காலத்திற்குஅழைத்துச் சென்றவர்; ஆய்வு விளக்கை ஏந்திக்கொண்டு அறிவுச் சுரங்கத்தின் நெடிய ஆழத்திற்குச் சென்றவர் மாமேதை மார்க்ஸ்.
 1818-ஆம் ஆண்டு, மே மாதம் 5-ல் பிறந்தார் மார்க்ஸ்.பள்ளி, கல்லூரிப் படிப்புகள் முடித்த மார்க்ஸ், வேலைபார்த்து ஊதியம் பெறும் ஆசையை விடுத்து, அறிவுத்தளத்தில் இயங்க ஆரம்பித்தார். பொருள் ஈட்ட நாட்டமில்லாமல், பணம் பற்றி எழுதத் தெரிந்த தன் மகனுக்குப் பணத்தைச்சம்பாதிக்கத் தெரியவில்லையே என வருத்தப்பட்டார் மார்க்சின் தாய்.
 மார்க்சின் தந்தையோ, தனது மகனை நிகழ் காலத்திற்கு இழுக்க முயன்றார். ஆனால், மகனோ எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
 மார்க்ஸ் பள்ளியில் படிக்கும்போது, 12 வயதில், எழுதியகட்டுரைகளைக் கண்டு, பள்ளி ஆசிரியர்கள் வியந்துபோனார்கள். எதிர்காலத்தில் மார்க்ஸ், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பான் என ஆசிரியர்கள் மனதால் ஆசீர்வதித்தார்கள்.மார்க்ஸ் படிக்கும் காலத்திலேயே காதல் வயப்பட்டார்.
பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஜென்னியைக் காதலித்தார்.
ஜென்னி, மார்க்சை விட 4 வயது மூத்தவர். இருந்தால்என்ன?
 காதலுக்கு வயது தடையாக இருக்க முடியுமோ?
ஏழு ஆண்டுகள் உயிருக்கு உயிராய்க் காதலித்துப் பின்இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஜென்னி பேரழகி!
பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். மார்க்சோ சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால்,உலக வரலாற்றில், இவர்களைப் போன்ற காதல் இணையரைக் காண முடியாது.உலகின் தத்துவங்களையெல்லாம் மார்க்ஸ் ஒரு வெறியோடு கற்றார்.
அறிவாளிகளோடு தர்க்கங்கள் செய்தார். அறிவுலக மேதையானார்.
 இவரின் நுட்ப அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்கள் மற்றவர்கள்.
எண்ணங்களின் பட்டறை என்றனர்.

மற்றவர்களுக்குத் தோன்றாத சிந்தனைகள் இவருக்குத் தோன்றின.
 இளையவயதில் எவ்வளவு பண்பட்ட மூளை என வியந்தார்கள்.
 மார்க்சின் 23 ஆம் வயதில் பெர்லின் பல்கலைக் கழகம்டாக்டர் பட்டம் வழங்கியது. ஆனால், அந்த டாக்டர் பட்டத்தை மார்க்ஸ் கடைசி வரைத் தன் பெயருக்கு முன் போட்டுக் கொண்டதே இல்லை.

இந்தக் காலக் கட்டங்களில் மார்க்ஸ், ஏராளமானஅறிவார்ந்த கட்டுரைகளை எழுதினார். பின்னர், ‘ரைன்லாநிலகெஜெட்’ பத்திரிகையின் ஆசிரியரானார்.
 பத்திரிகையில்மார்க்சின் கட்டுரைகள் ஆட்சியாளர்களுக்கு வெறுப்பைத்தேடிக் கொடுத்தன.
‘‘பத்திரிகைகள் பணம் சம்பாதிக்கவேண்டியதுதான்.
ஆனால், பணம் சம்பாதிக்க மட்டுமே பத்திரிகைகள் இருக்கக் கூடாது’ என்பார் மார்க்ஸ்.
சந்தாதாரர்கள் பத்திரிகையின் கொள்கைகளை நிர்ணயிக்கக் கூடாது.
பத்திரிகைகள்தான் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.

அரசாங்கத்தின் தயவில் இருந்துகொண்டு, மக்களுக்காக உழைக்கிறோம் எனச்சொல்வதெல்லாம் வெறும் பாசாங்கு என்றார் மார்க்ஸ்.ஆட்சியாளர்களைத் தொடர்ந்து மார்க்ஸ் விமர்சித்ததால், ஆட்சியாளர்களால் மார்க்ஸ் பல்வேறு நாடுகளுக்கு விரட்டப்பட்டார்: நாடுகடத்தப் பட்டார்.
இதனால் மார்க்ஸ் துவண்டுபோய் விடவில்லை.
 எதையும் கண்டுகலங்காத மனம் படைத்த மார்க்ஸ், எந்த நாட்டிற்குச்சென்றாலும், அங்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினார்.
இதனால், பல இடர்பாடுகளைச் சந்தித்தார்.

இக்காலங்களில்தான் இவருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர்.
ஆனால் மார்க்சின் இறுதிக்காலம் வரை பயணித்த ஒரே நண்பர் ஏங்கல்ஸ் மட்டுமே.
மார்க்சின் மகிழ்ச்சியிலும், துயரத்திலும் துக்கத்திலும்,ஏற்றத் தாழ்விலும் இணைந்தே இருந்தார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் இல்லாமல் ஏங்கல்ஸ் இல்லை, ஏங்கல்ஸ் இல்லாமல் மார்க்ஸ் இல்லை.
உலக வரலாற்றில் நட்புக்கு எடுத்துக்காட்டானவர்கள் இந்த இருவரும்.

இவர்கள் இல்லைஎன்றால், பொதுவுடைமைக் கொள்கைகள் இல்லை.

இந்தச்சமதர்மக் கொள்கைகள் இல்லாவிட்டால், உழைப்பாளிகளுக்கு வாழ்க்கை இல்லை. சுரண்டலுக்கு முடிவே இல்லை.உலகத்தொண்டே வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்ட மார்க்ஸ், தன் குடும்பத்தைத் துறந்துவிடவில்லை.
வறுமையின் உச்சிக்குச் சென்றாலும் தனது சுகத் துக்கங்களிலும் தன் குடும்பத்தைக் கூடவே அழைத்துச் சென்றார். மார்க்சின் மனைவி ஜென்னி இவரோடு ஈடுகொடுத்து வாழ்ந்தார்.

1881,டிசம்பர் 2 அன்று ஜென்னி மறைந்தார்.
ஜென்னி மரணம் குறித்து ஏங்கல்ஸ் சொன்னார், ‘மார்க்ஸ்இறந்து போய்விட்டார்’ என்று.
ஜென்னி இல்லாமல் மார்க்ஸ் உயிர் வாழமுடியாது.
வாழ்வதற்கு அவருக்குத் தெரியாது. உலகில் இப்படி அன்பால் பிணைக்கப்பட்ட வேறு ஒரு தம்பதியை வரலாறுநமக்குக் காட்டவில்லை.

1883-ஆம் ஆண்டு, மார்ச்-14 அன்றுகாரல் மார்க்ஸ் காலமானார்.
 மார்க்ஸின் மறைவை ஏங்கல்சால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏங்கல்ஸ்சொன்னார் ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்’என்று.
மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் கண்டுபிடித்தார்.

மனிதகுலச் சரித்திரத்தில் எப்படியெல்லாம் மாற்றம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் ஆய்ந்தறிந்தார்.
மார்க்ஸ் 65 ஆண்டுகள்தான் வாழ்ந்தார்.

 காரல்மார்க்ஸ்என்னும் புகழ் நாமமும் ‘மார்க்சியம்’ என்னும் அழியாத்தத்துவமும் இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை, ஓங்கிஒலித்துக் கொண்டேயிருக்கும்!

இவர் ஒருவரே எல்லாக்காலங்களுக்கும் வழிகாட்டி ஒளிவீசும் தீர்க்கதரிசி!
கட்டுரையாளர்: சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.
 ====================================================
ன்று,
மார்ச்-14.


இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)


 தோழர் "கார்ல் மார்க்ஸ்" நினைவு தினம்(1883)


அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)


ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)
====================================================


இதுதான்  தேசபக்தி...!
பொதுத்துறை நிறுவனங்களை சீரழிப்பதே பாஜகவின் தேசபக்தியாக மாறியிருக்கிறது. ராணுவம், விண்வெளி, அரசு நிர்வாகம் உள்ளிட்ட தேசத்தின் முக்கிய கட்டமைப்புகள் இயங்க அச்சாணியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை இருந்து வருகிறது.
அந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க கூட வழியின்றி கடும் நெருக்கடிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

 2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற போது, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்; அதற்கு முந்தைய அரசுகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு தடையாக இருந்தன.
அதன் காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இது ஊழியர்களால் ஏற்பட்ட நஷ்டம் அல்ல என கூறினார்.
அதன் பின்னர், பிஎஸ்என்எல் ஊழியர்களின் சிம்கார்டு விற்பனை முகாம், வாடிக்கையாளர்களை தேடிச் சென்று நேரடி சேவை உள்ளிட்ட கடும் உழைப்பின் காரணமாக 2014 முதல் 2016 வரை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு லாபத்திற்கு வந்தது. அதன் பின்னர்2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸின் ஜியோநிறுவனத்திற்கு கழுத்தறுப்பு விலை குறைப்பிற்கு மோடி அரசு அனுமதி வழங்கியது.

அதுமட்டுமின்றி ஜியோ நிறுவன வளர்ச்சிக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக; பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை அனுமதி ஆட்சியின் கடைசி காலம் வரை மோடி அரசு வழங்கவில்லை.
இதுதான் மோடி அரசின் தேசபக்தி.
 இதன் காரணமாக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் தற்போது கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.நாடுமுழுவதும் 1லட்சத்து 70 ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

 இதில் காஷ்மீர், ஒரிசா, கேரளா மற்றும்தில்லி கார்ப்பரேட் அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களை தவிர மற்ற அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த 3மாதங்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

 பிஎஸ்என்எல் வரலாற்றில் இதுபோன்று நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது இதுவேமுதல் முறை. இதுவும் மோடி அரசின் வரலாற்று சாதனை பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
ஏற்கனவே எச்ஏஎல் பொதுத்துறை நிறுவனம்ராணுவத்திற்கு பாதுகாப்பு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்து கொடுத்ததற்கான பணத்தை மோடி அரசு வழங்காமல் திட்டமிட்டுஇழுத்தடித்து வந்தது.
அதனை தொடர்ந்து ரபேல்விமானம் பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தையும் எச்ஏஎல் க்கு வழங்காமல், ரிலையன்ஸ் டிபன்ஸ்நிறுவனத்திற்கு வழங்கி மோடி அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டது.

இதன் காரணமாக எச்ஏஎல் நிறுவனம் வரலாற்றில் முதன் முறையாக தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதுவும் மோடியின் சாதனையாக மாறியிருக்கிறது.

இப்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக; தேசத்தின் சொத்தான ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களையும் திட்டமிட்டு சீரழித்திருப்பதே பாஜகவின் தேசபக்தியாக மாறியிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ஒரு உண்மைக்கதை.

புதன், 13 மார்ச், 2019

பாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி?

அடுத்த ஆப்பு தயார் !
 மின் மீட்டர்களுக்கு இனி பிரிபெய்டு சிஸ்டம்
 
“ஜெயலலிதா இருந்திருந்தால் என்னமுடிவு எடுத்திருப்பாரோ அதைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்றால் மோடிதான் பிரதமராக வரவேண்டும்”.இப்படிப் பேசியது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அல்ல.

 தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான். அதாவது தமிழகத்தின் துணை முதல்வரும் முதல்வரும்தான்.
சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் அது எப்படி எல்லாம்பேச வைக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

மின் நுகர்வோருக்குக் கம்பம் நட்டு,ஒயர் இழுத்துமின் தேவையைப் பூர்த்தி செய்து வருவது மின்வாரிய களப்பணியாளர்கள். அந்த களப்பணிக்குச் செலவிடப்பட்ட தொகையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதன் மூலம் ஈடு செய்கிறது.
அதற்காக மின் கணக்கீடு பணி என்பது மிக மிக அவசியத் தேவையாகும்.


இந்தக் களப்பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பணியாற்றி வருகின்றனர்.
6 ஆயிரத்திற்கும் அதிகமானஇடங்கள் கலியாக உள்ளன.
இதனால் கணக்கீட்டாளர்களுக்கு வேலைப் பளு ஒரு பக்கம் அதிகம் என்றாலும்,மறுபக்கம் நுகர்வோருக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
இந்த வசூல் பணிக்கும், கணக்கீட்டுப்பணிக்கும் மோடியின் பாஜக அரசு ‘ஆப்பு’வைத்திருக்கிறது.

அடுத்த மாதத்திலிருந்து நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் பிரீ பெய்டு மின் கட்டண மீட்டர்’ பொருத்துவதை மத்தியபாஜக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அலைபேசிகளுக்கு எப்படி மாதக்கணக்கில் அல்லது தேவைப்படும் நாள்வரைரீசார்ஜ் செய்து கொள்கிறோமோ அதைப்போல் இந்த ப்ரீபெய்டு மீட்டர்களுக்கு மின்கட்டணமும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டுமாம்.
நாம் ரீசார்ஜ் செய்த தொகைக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும்.
இது மிக மோசமான திட்டமாகும். இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் மோடிதான் மீண்டும்பிரதமராக வரவேண்டும் என்று தோள் மீது சுமந்து கொண்டு முழங்குகிறார்கள் கூஜா தூக்கிகள்.

கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதியமின்சார மசோதாவை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்தன.
அதில் குஜராத்தும் ஒன்று.
இன்றைய பிரதமர் மோடிதான் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர்.
அப்போது கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தவர், பிரதமரானபின் தனியார்துறை ‘கொள்ளைக்கு’ தோதாகமின்சார மசோதா 2014-ஐ வேகவேகமாக சட்டமாக்கினார்.

புதிய மின்சார சட்டம், மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வகை செய்கிறதா, என்றால் இல்லை.
மின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறதா, என்றால்?
அதுவும் கிடையாது.

அப்படி என்றால் வேற என்னதான் செய்கிறது?
இதுவரை வழங்கப்பட்டு வந்த மின் மானியம் முற்றிலும்நிறுத்தப்படுமாம்.
மின் உற்பத்தி செய்து வரும் தனியார் நிறுவனங்களுடன் அரசு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமாம்.
அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை நமது மின்வாரியம் கொடுக்க வேண்டுமாம்!

இத்தகைய பின்னணியில்தான் கடந்த 2015 ஆம் ஆண்டில், உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா (உதய்) திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது.
மாநிலவளர்ச்சிக்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் எனஎச்சரிக்கை செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.
இன்றைய திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.நாட்டிலேயே அதிக மின் இணைப்புகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்றாலும் மின்சார வாரியத்தில் உள்ளகாலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான்.

இந்த திட்டத்தை அனுமதித்தால் களப்பணியில் இருக்கும் கொஞ்ச நஞ்சஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மின் கட்டணமும் பெட்ரோல், டீசலை போல் தினசரி விலை உயரும்.


இந்த பேராபத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அனைத்து தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இடதுசாரிக் கட்சிகளும்,மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வும் எச்சரிக்கை மணி ஒலித்தன.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மோடிக்குக் கொடுத்த நிர்ப்பந்தம்தான் உதய் திட்டம். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனும் கிடையாது என மோடியின் ‘மோசடி’ தந்திரத்தை அம்பலப்படுத்தினார்.

ஜெயலலிதா மட்டுமல்ல, அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த திட்டத்தால் உண்மையிலேயே தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எந்த நன்மையும் கிடையாது.
தனியார் மின் நிலையங்களுக்கு மட்டுமே நன்மை தரும் திட்டம். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாஜகவுக்கு எதிர்த்துக்குரல் கொடுத்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அதிமுகவுக்குள் ஏற்பட்டகுடுமிப்பிடி சண்டையால், சிபிஐ, வருமான வரித்துறை,அமலாக்கத்துறை என அடுக்கடுக்காக ஏவப்பட்ட‘ரெய்டு’ நடவடிக்கையால் மோடி-அமித்ஷாவிடம் சிக்கிக்கொண்டனர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅமைச்சரவை சகாக்கள்.அதனால் அவர்களின்‘குலதெய்வமான’ அம்மாவின் கொள்கைக்குச் சமாதிகட்டிய மின்துறை அமைச்சர் தங்கமணியோ,“உதய் மின் திட்டத்தின் அனைத்து சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
 மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண உயர்வு என்பதை மட்டும்தான் மத்திய அரசிடம் பேச வேண்டியுள்ளது” என பாஜக அரசின் திட்டத்துக்கு நடைபாவாடை விரித்தார்.

அதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டு உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைத்தார்.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிட முடியாதா என ‘தவமாய் தவம்’ கிடந்த தாமரையோடு தற்போது கூட்டணி பேரத்தையும் ‘கன கச்சிதமாக’ முடித்து அம்மாவுக்கு துரோகம் செய்துள்ளனர்.


நிலக்கரி ஒப்பந்தங்கள் மற்றும் மின்சார கொள்முதலில் நடந்த ஊழல்கள் குறித்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் எடப்பாடி அரசின் அனைத்து துறை ஊழல்கள் பற்றிவிசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் மாற்றம், முன்னேற்றத்தின் பசுமை நாயகன் அன்புமணி ராமதாஸ் கேட்டார்.
அவரது தந்தையோ, மின் கட்டணத்தை உயர்த்தி கூடுதல் சுமையை மக்களின் தலையில் வைத்து அதிக கட்டணம் கட்ட சொல்வது மிகப்பெரிய குற்றம் என்றுஅதிமுக அரசுக்கு எதிராகப் “போர்க்கொடி தூக்கினார்’.
ஆனால், பாஜகவைக் காட்டிலும் இரண்டு சீட்டுகள் கூடுதலாக வாரி வழங்கியதால் அதிமுகவின் ஊழலும், மக்கள்விரோத நடவடிக்கையும் ‘புனிதமாக’ மாறிவிட்டது.


பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவதால் மின் கட்டணம் எவ்வளவு உயரும்?
100 யூனிட் இலவச மின்சாரமும், விவசாய பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரத்தின் கதியும் என்னவாகும்?
 ரீசார்ஜ் செய்யும் முறை கொண்டு வருவதால் எப்போது கரண்ட் கட் ஆகும் என்பது தெரியாமல் பரிதவிக்கும் நுகர்வோரின் நிலை என்னவாகும்?

வேலை இழக்கப் போகும் ரீடிங் எடுப்போர், பணம் வசூலிப்போர் போன்றோரின் நிலையும் இட ஒதுக்கீட்டு உரிமைகளும் என்னவாகப் போகிறது?

படித்து பட்டம் பெற்று வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் கனவு என்னவாகும்?

இப்படி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கவிருக்கும் இந்த பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவையா?

 பதவி சுகம், பகட்டுவாழ்க்கை, சுய லாபத்துக்காக ஆளுங்கட்சியினர் பாஜகஅரசின் திட்டத்தை தமிழக மக்கள் மீது திணிப்பது சரியா?

சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பாதகமான பிரீபெய்டு மீட்டர்முறையை கொண்டு வரத்துடிக்கும் மாநில அதிமுக ஆட்சியாளர்களுக்கு புரியும் வகையில் பாடம் புகட்ட வேண்டும். தமிழக மக்கள்புகட்டுவார்கள் .
                                                                                                                                      - சி.ஸ்ரீராமுலு
(தீக்கதிரில்)
====================================================
 
ன்று,


மார்ச்-13.

ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)

வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)

மங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)

தமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)
====================================================

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு துணைபோவது உண்மையாகிறது..?.
2மாதம்முன்பே பாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி?

17-ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு, 3 நாட்களே ஆகின்றன.
 ஆனால், பாஜக-வின் சமூகவலைத்தளங்களில் ஜனவரி மாதமே,இந்த தேர்தல் தேதிகள் வெளியாகிஇருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தலைமைத் தேர்தல்ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டுள்ள 7 கட்டத் தேர்தல் தேதிகள், 2 மாதங்களுக்கு முன்பே பாஜக-வின் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
தற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
ஆனால், மார்ச் மாதம் பிறந்த பிறகும், தேர்தல் ஆணையத்திடம் எந்த அசைவும் இல்லை.

மறுபக்கத்தில் பிரதமர் மோடி, பறந்து பறந்து நலத்திட்டங்களை துவக்கிவைத்துக் கொண்டிருந்தார். ஒரே மாதத்தில் 28 பயணங்களை மேற்கொண்டு, 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 157 திட் டங்களை அவர் துவக்கி வைத்தார். இதுசர்ச்சையைக் கிளப்பியது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, ஒரு சுற்றுப் பிரச்சாரத்தை முடித்துவிட பிரதமர் மோடியும், பாஜக அமைச்சர்களும் தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்கு சாதகமாகவே தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிப் போட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கின. ஒருகட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டு வலுவானது.

 காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் வைத்தனர்.இதையடுத்துத்தான், மார்ச் 10-ஆம்தேதி மக்களவைத் தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார்.
              பாஜக-வின் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஜனவரி மாதம்  வெளிவந்த தேர்தல் தேதிகள்.

ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் தேதிகளும், பாஜக-வின் சமூக வலைத்தளங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வெளியான தேர்தல் தேதிகளும் ஒன்றாகஇருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தி ஏஜ் ஆப் பனானாஸ்’ என்றட்விட்டர் பக்கத்தில், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பகல் 11.57 மணியளவில், மக்களவைத் தேர்தல் தேதிகளைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 
 பாஜக-வின் வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து இந்தப் பட்டியல் கிடைத்ததாக, அந்த ட்விட்டர் பக்கத்தில்பதியப்பட்டுள்ளது.

 பின்னர்  அந்த பட்டியல் நீக்கப் பட்டுள்ளது.ஆனால், பட்டியல் நீக்கப்படுவதற்கு முன்னரே அதனை பலர் பகிர்ந்ததால், முற்றிலுமாக தகவலை அழிக்க முடியவில்லை.
 அவ்வாறு பகிரப்பட்ட தேர்தல்தேதிகளைப் பார்த்த சிலர், இது பொய்ச்செய்தி என்றே 2 மாதங்களாக கருதி வந்தனர். 

ஆனால், தற்போது அந்ததேர்தல் தேதிகளையே, இந்திய தேர்தல் ஆணையமும் வெளியிட்டிருப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பீகார், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் தேதிகள், தற்போதுதேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல்தேதிகளை ஒட்டியே இருக்கின்றன.
 சரியாக ஒருநாள் முன்னதாக அல்லது ஒருநாள் பின்னதாக அந்த தேதிகள் உள்ளன.

 தேதியை துல்லியமாக வெளியிட் டால் மாட்டிக் கொள்வோம் என்று கருதிக்கூட அவர்கள் ஒரு நாள் முன்னும்பின்னுமாக தேதியை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், 7 கட்டத்தேர்தல் என்பதில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் துவங்கி நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரை, அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில்தான் விடப்பட்டுள்ளன.
அதனாலேயே, யாருடைய கைப்பாவையாகவும் தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது என்பதற்காக, அரசியலமைப்புச் சாசன அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், தேர்தல் ஆணையமும் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியாகவே, பாஜக சமூகவலைத்தளங்களில் வெளியான தேர்தல்தேதிகள் அமைந்திருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் கூட முன்கூட்டியே பாஜக எண்ணப்படி இருக்க வாய்ப்புள்ளது.
அப்படித்தான் தேர்தல் ஆணைய  செயல்பாடுகள் உள்ளது.
அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மென்பொருள் துணைபோகவும் வாய்ப்புள்ளது.தகவல் தொழில் நுட்பத்திலும்,டிஜிட்டளிலும்,போட்டோஷாப்பில்  கலக்கும் பாஜகவுக்கு அது ஒன்றும் பெரியதில்லை.
முதலில் பரிசோதனைக்கட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுவதுபோல தோற்றம் காட்டி பின்னர் வாக்குப்பதிவில் தனது வேலையை காட்டும் வண்ணம் மென்பொருளை வடிவமைப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் மக்களை எண்ண வைப்பது பாஜக ஆதரவு தேர்தல் ஆணைய செயல்பாடுகள்தாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------