இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 13 மார்ச், 2019

பாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி?

அடுத்த ஆப்பு தயார் !
 மின் மீட்டர்களுக்கு இனி பிரிபெய்டு சிஸ்டம்
 
“ஜெயலலிதா இருந்திருந்தால் என்னமுடிவு எடுத்திருப்பாரோ அதைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்றால் மோடிதான் பிரதமராக வரவேண்டும்”.இப்படிப் பேசியது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அல்ல.

 தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான். அதாவது தமிழகத்தின் துணை முதல்வரும் முதல்வரும்தான்.
சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் அது எப்படி எல்லாம்பேச வைக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

மின் நுகர்வோருக்குக் கம்பம் நட்டு,ஒயர் இழுத்துமின் தேவையைப் பூர்த்தி செய்து வருவது மின்வாரிய களப்பணியாளர்கள். அந்த களப்பணிக்குச் செலவிடப்பட்ட தொகையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதன் மூலம் ஈடு செய்கிறது.
அதற்காக மின் கணக்கீடு பணி என்பது மிக மிக அவசியத் தேவையாகும்.


இந்தக் களப்பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பணியாற்றி வருகின்றனர்.
6 ஆயிரத்திற்கும் அதிகமானஇடங்கள் கலியாக உள்ளன.
இதனால் கணக்கீட்டாளர்களுக்கு வேலைப் பளு ஒரு பக்கம் அதிகம் என்றாலும்,மறுபக்கம் நுகர்வோருக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
இந்த வசூல் பணிக்கும், கணக்கீட்டுப்பணிக்கும் மோடியின் பாஜக அரசு ‘ஆப்பு’வைத்திருக்கிறது.

அடுத்த மாதத்திலிருந்து நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் பிரீ பெய்டு மின் கட்டண மீட்டர்’ பொருத்துவதை மத்தியபாஜக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அலைபேசிகளுக்கு எப்படி மாதக்கணக்கில் அல்லது தேவைப்படும் நாள்வரைரீசார்ஜ் செய்து கொள்கிறோமோ அதைப்போல் இந்த ப்ரீபெய்டு மீட்டர்களுக்கு மின்கட்டணமும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டுமாம்.
நாம் ரீசார்ஜ் செய்த தொகைக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும்.
இது மிக மோசமான திட்டமாகும். இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் மோடிதான் மீண்டும்பிரதமராக வரவேண்டும் என்று தோள் மீது சுமந்து கொண்டு முழங்குகிறார்கள் கூஜா தூக்கிகள்.

கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதியமின்சார மசோதாவை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்தன.
அதில் குஜராத்தும் ஒன்று.
இன்றைய பிரதமர் மோடிதான் அன்றைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர்.
அப்போது கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தவர், பிரதமரானபின் தனியார்துறை ‘கொள்ளைக்கு’ தோதாகமின்சார மசோதா 2014-ஐ வேகவேகமாக சட்டமாக்கினார்.

புதிய மின்சார சட்டம், மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க வகை செய்கிறதா, என்றால் இல்லை.
மின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறதா, என்றால்?
அதுவும் கிடையாது.

அப்படி என்றால் வேற என்னதான் செய்கிறது?
இதுவரை வழங்கப்பட்டு வந்த மின் மானியம் முற்றிலும்நிறுத்தப்படுமாம்.
மின் உற்பத்தி செய்து வரும் தனியார் நிறுவனங்களுடன் அரசு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமாம்.
அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை நமது மின்வாரியம் கொடுக்க வேண்டுமாம்!

இத்தகைய பின்னணியில்தான் கடந்த 2015 ஆம் ஆண்டில், உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா (உதய்) திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது.
மாநிலவளர்ச்சிக்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் எனஎச்சரிக்கை செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.
இன்றைய திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.நாட்டிலேயே அதிக மின் இணைப்புகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்றாலும் மின்சார வாரியத்தில் உள்ளகாலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான்.

இந்த திட்டத்தை அனுமதித்தால் களப்பணியில் இருக்கும் கொஞ்ச நஞ்சஊழியர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மின் கட்டணமும் பெட்ரோல், டீசலை போல் தினசரி விலை உயரும்.


இந்த பேராபத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அனைத்து தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இடதுசாரிக் கட்சிகளும்,மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வும் எச்சரிக்கை மணி ஒலித்தன.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மோடிக்குக் கொடுத்த நிர்ப்பந்தம்தான் உதய் திட்டம். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனும் கிடையாது என மோடியின் ‘மோசடி’ தந்திரத்தை அம்பலப்படுத்தினார்.

ஜெயலலிதா மட்டுமல்ல, அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த திட்டத்தால் உண்மையிலேயே தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எந்த நன்மையும் கிடையாது.
தனியார் மின் நிலையங்களுக்கு மட்டுமே நன்மை தரும் திட்டம். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாஜகவுக்கு எதிர்த்துக்குரல் கொடுத்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அதிமுகவுக்குள் ஏற்பட்டகுடுமிப்பிடி சண்டையால், சிபிஐ, வருமான வரித்துறை,அமலாக்கத்துறை என அடுக்கடுக்காக ஏவப்பட்ட‘ரெய்டு’ நடவடிக்கையால் மோடி-அமித்ஷாவிடம் சிக்கிக்கொண்டனர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅமைச்சரவை சகாக்கள்.அதனால் அவர்களின்‘குலதெய்வமான’ அம்மாவின் கொள்கைக்குச் சமாதிகட்டிய மின்துறை அமைச்சர் தங்கமணியோ,“உதய் மின் திட்டத்தின் அனைத்து சரத்துக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
 மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண உயர்வு என்பதை மட்டும்தான் மத்திய அரசிடம் பேச வேண்டியுள்ளது” என பாஜக அரசின் திட்டத்துக்கு நடைபாவாடை விரித்தார்.

அதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டு உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைத்தார்.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிட முடியாதா என ‘தவமாய் தவம்’ கிடந்த தாமரையோடு தற்போது கூட்டணி பேரத்தையும் ‘கன கச்சிதமாக’ முடித்து அம்மாவுக்கு துரோகம் செய்துள்ளனர்.


நிலக்கரி ஒப்பந்தங்கள் மற்றும் மின்சார கொள்முதலில் நடந்த ஊழல்கள் குறித்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் எடப்பாடி அரசின் அனைத்து துறை ஊழல்கள் பற்றிவிசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் மாற்றம், முன்னேற்றத்தின் பசுமை நாயகன் அன்புமணி ராமதாஸ் கேட்டார்.
அவரது தந்தையோ, மின் கட்டணத்தை உயர்த்தி கூடுதல் சுமையை மக்களின் தலையில் வைத்து அதிக கட்டணம் கட்ட சொல்வது மிகப்பெரிய குற்றம் என்றுஅதிமுக அரசுக்கு எதிராகப் “போர்க்கொடி தூக்கினார்’.
ஆனால், பாஜகவைக் காட்டிலும் இரண்டு சீட்டுகள் கூடுதலாக வாரி வழங்கியதால் அதிமுகவின் ஊழலும், மக்கள்விரோத நடவடிக்கையும் ‘புனிதமாக’ மாறிவிட்டது.


பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவதால் மின் கட்டணம் எவ்வளவு உயரும்?
100 யூனிட் இலவச மின்சாரமும், விவசாய பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரத்தின் கதியும் என்னவாகும்?
 ரீசார்ஜ் செய்யும் முறை கொண்டு வருவதால் எப்போது கரண்ட் கட் ஆகும் என்பது தெரியாமல் பரிதவிக்கும் நுகர்வோரின் நிலை என்னவாகும்?

வேலை இழக்கப் போகும் ரீடிங் எடுப்போர், பணம் வசூலிப்போர் போன்றோரின் நிலையும் இட ஒதுக்கீட்டு உரிமைகளும் என்னவாகப் போகிறது?

படித்து பட்டம் பெற்று வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் கனவு என்னவாகும்?

இப்படி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கவிருக்கும் இந்த பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவையா?

 பதவி சுகம், பகட்டுவாழ்க்கை, சுய லாபத்துக்காக ஆளுங்கட்சியினர் பாஜகஅரசின் திட்டத்தை தமிழக மக்கள் மீது திணிப்பது சரியா?

சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் பாதகமான பிரீபெய்டு மீட்டர்முறையை கொண்டு வரத்துடிக்கும் மாநில அதிமுக ஆட்சியாளர்களுக்கு புரியும் வகையில் பாடம் புகட்ட வேண்டும். தமிழக மக்கள்புகட்டுவார்கள் .
                                                                                                                                      - சி.ஸ்ரீராமுலு
(தீக்கதிரில்)
====================================================
 
ன்று,


மார்ச்-13.

ஆக்ஸிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)

வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்(1781)

மங்கோலியா, சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1921)

தமிழறிஞர் கா.நமச்சிவாயம் இறந்த தினம்(1936)
====================================================

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு துணைபோவது உண்மையாகிறது..?.
2மாதம்முன்பே பாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி?

17-ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு, 3 நாட்களே ஆகின்றன.
 ஆனால், பாஜக-வின் சமூகவலைத்தளங்களில் ஜனவரி மாதமே,இந்த தேர்தல் தேதிகள் வெளியாகிஇருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தலைமைத் தேர்தல்ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டுள்ள 7 கட்டத் தேர்தல் தேதிகள், 2 மாதங்களுக்கு முன்பே பாஜக-வின் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
தற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
ஆனால், மார்ச் மாதம் பிறந்த பிறகும், தேர்தல் ஆணையத்திடம் எந்த அசைவும் இல்லை.

மறுபக்கத்தில் பிரதமர் மோடி, பறந்து பறந்து நலத்திட்டங்களை துவக்கிவைத்துக் கொண்டிருந்தார். ஒரே மாதத்தில் 28 பயணங்களை மேற்கொண்டு, 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 157 திட் டங்களை அவர் துவக்கி வைத்தார். இதுசர்ச்சையைக் கிளப்பியது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, ஒரு சுற்றுப் பிரச்சாரத்தை முடித்துவிட பிரதமர் மோடியும், பாஜக அமைச்சர்களும் தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்கு சாதகமாகவே தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிப் போட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கின. ஒருகட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டு வலுவானது.

 காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் வைத்தனர்.இதையடுத்துத்தான், மார்ச் 10-ஆம்தேதி மக்களவைத் தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார்.
              பாஜக-வின் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஜனவரி மாதம்  வெளிவந்த தேர்தல் தேதிகள்.

ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் தேதிகளும், பாஜக-வின் சமூக வலைத்தளங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வெளியான தேர்தல் தேதிகளும் ஒன்றாகஇருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தி ஏஜ் ஆப் பனானாஸ்’ என்றட்விட்டர் பக்கத்தில், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பகல் 11.57 மணியளவில், மக்களவைத் தேர்தல் தேதிகளைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 
 பாஜக-வின் வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து இந்தப் பட்டியல் கிடைத்ததாக, அந்த ட்விட்டர் பக்கத்தில்பதியப்பட்டுள்ளது.

 பின்னர்  அந்த பட்டியல் நீக்கப் பட்டுள்ளது.ஆனால், பட்டியல் நீக்கப்படுவதற்கு முன்னரே அதனை பலர் பகிர்ந்ததால், முற்றிலுமாக தகவலை அழிக்க முடியவில்லை.
 அவ்வாறு பகிரப்பட்ட தேர்தல்தேதிகளைப் பார்த்த சிலர், இது பொய்ச்செய்தி என்றே 2 மாதங்களாக கருதி வந்தனர். 

ஆனால், தற்போது அந்ததேர்தல் தேதிகளையே, இந்திய தேர்தல் ஆணையமும் வெளியிட்டிருப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பீகார், ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் தேதிகள், தற்போதுதேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல்தேதிகளை ஒட்டியே இருக்கின்றன.
 சரியாக ஒருநாள் முன்னதாக அல்லது ஒருநாள் பின்னதாக அந்த தேதிகள் உள்ளன.

 தேதியை துல்லியமாக வெளியிட் டால் மாட்டிக் கொள்வோம் என்று கருதிக்கூட அவர்கள் ஒரு நாள் முன்னும்பின்னுமாக தேதியை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், 7 கட்டத்தேர்தல் என்பதில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் துவங்கி நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரை, அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில்தான் விடப்பட்டுள்ளன.
அதனாலேயே, யாருடைய கைப்பாவையாகவும் தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது என்பதற்காக, அரசியலமைப்புச் சாசன அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், தேர்தல் ஆணையமும் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியாகவே, பாஜக சமூகவலைத்தளங்களில் வெளியான தேர்தல்தேதிகள் அமைந்திருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் கூட முன்கூட்டியே பாஜக எண்ணப்படி இருக்க வாய்ப்புள்ளது.
அப்படித்தான் தேர்தல் ஆணைய  செயல்பாடுகள் உள்ளது.
அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மென்பொருள் துணைபோகவும் வாய்ப்புள்ளது.தகவல் தொழில் நுட்பத்திலும்,டிஜிட்டளிலும்,போட்டோஷாப்பில்  கலக்கும் பாஜகவுக்கு அது ஒன்றும் பெரியதில்லை.
முதலில் பரிசோதனைக்கட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுவதுபோல தோற்றம் காட்டி பின்னர் வாக்குப்பதிவில் தனது வேலையை காட்டும் வண்ணம் மென்பொருளை வடிவமைப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் மக்களை எண்ண வைப்பது பாஜக ஆதரவு தேர்தல் ஆணைய செயல்பாடுகள்தாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------