திருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி.

பிரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து #mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம்.
இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை.
யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர்.
ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை.
உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் அக்கவுண்டிலிருந்து பதில் வந்தது.
இது மட்டுமல்ல, மோடியையும் பாஜக-வையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.
அவ்வளவுதான், ட்விட்டர் உலகில் ஓட்டித் தீர்த்துவிட்டார்கள். காவலனாக இருக்கச் சொல்லி நீரவ் மோடியை பிரதமரின் ட்விட்டரிலிருந்து கேட்டிருக்கிறார்களா என ஒமர் அப்துல்லாவும் சீரியஸாக கேள்வியெழுப்ப, என்ன செய்வதென தெரியாமல், அம்மாதிரி ட்வீட்களையெல்லாம் டெலீட் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி, தனது ட்விட்டர் பதிவில் “மோதி தனது நண்பர்களுக்கு நன்றி சொல்கிறார்” என்று இதைக் கடுமையாகக் கேலிசெய்திருக்கிறது. உடனே பாஜக அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், என் பள்ளி நண்பர்கள் என்னைத் திட்டுவதுபோல திட்டிவைத்திருக்கிறார்கள்..
-----------------------------------------------------------------------------------------------------
திசையெட்டும் பரவட்டும் தியாக வெளிச்சம்
ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன்

1931 மார்ச் 23 அன்று மாலை 7.30 மணிக்கு லாகூர்சிறையின் மதில் சுவர்களையும் தாண்டி ஒலித்த அந்த மாவீரனின் முழக்கங்கள். . . உடலை விட்டுஉயிர் பிரியப்போகிறது என்ற நிலையில் கூட ஒருவிவசாயியைப் போல் விதைத்தான் தன் உயிரையே!

இன் குலாப் ஜிந்தாபாத்!

புரட்சி நீடுழி வாழ்க!

என்ற முழக்கங்களோடு.... !

இந்திய தேசத்தின் விடுதலை வேட்கையை நெருப்பைப் போல் அடைகாத்த பாரத புத்திரர்கள் பலர் இருந்தாலும் பகத்சிங் ஒரு துருவ நட்சத்திரத்தைப்போல் வரலாற்றில் தனித்து நிற்கும் பெயர்.

மகாகவி பாரதி பாடிய

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் - பாடல் வரிகளில்,

‘ ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ ’

-என்ற வரியைப் போல் 24 வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஜோதியாய் பிரகாசித்த இளைஞன் பகத்சிங்.ஒரு தூக்கு மேடை கைதி சிறைக்குள் 64 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றத்திற்குப் போகிறபோதெல்லாம் போராட்டம்; தன் உயிர்த் தோழர்கள் ஜதீன்தாசையும் மஹாவீர் சிங்கையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பறிகொடுத்த துயரம் என அனைத்தையும் உளவியல் ரீதியில் எதிர்கொண்டு; சிறைக்குள் சுமார் 151 புத்தகங்களை படித்து குறிப்பெடுத்து; 6 சிறுநூல்களை பகத்சிங் என்ற 24 வயது இளைஞனால் எழுத முடிந்தது என்றால் அவன்தான் இளைஞர்களுக்கான அடையாளமாக இருக்க முடியும். “இளைஞர்கள் நாங்கள் 60 கோடி இந்தியநாட்டின் இருதய நாடி” என இந்தியாவில் நல்லதொரு வாழ்க்கைக்காக ஏக்க பெருமூச்சு விட்டுக் கிடக்கும் இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கிறார் பகத்சிங்.1929 அக்டோபர் 19 அன்று லாகூரில் இரண்டாவது பஞ்சாப் மாணவர்கள் மாநாடு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. அம் மாநாட்டிற்கு பகத்சிங் அனுப்பிய வாழ்த்து செய்தி நமக்கான பாதையை காட்டுகிறது:

தோழர்களே,

இன்று துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு, இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப்போவதில்லை. இன்று அதைவிட அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்றை நீங்கள் எதிர் கொண்டுள்ளீர்கள். வரவிருக்கும் லாகூர் மாநாட்டில், நாட்டின் சுதந்திரத்திற்காக உக்கிரமான போராட்டம் ஒன்றுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்க இருக்கிறது. தேசவரலாற்றின் சிக்கலான இக்கால கட்டத்தில் மிகப்பெரும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாக வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி களத்தில்பல மாணவர்கள் மரணத்தையும் சந்தித்துள்ளனர் என்பது உண்மையே! அதே உறுதியையும் தன்னம்பிக்கையையும் நிரூபிப்பதற்கு இம்முறை மட்டும் என்ன அவர்கள்தயங்கவா போகிறார்கள்?இளைஞர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான இப்புரட்சிகரமான செய்தியை நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தொழில்மயமான பகுதிகளில் வாழும் மக்களிடத்திலும் கிராமப்புறங்களில் ஓட்டைக் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களிடத்திலும் சென்று மக்களை விழிப்படைய செய்ய, அவர்களை விடுதலைப் போராட்டத்திற்கு திரட்ட வேண்டும். அப்போது தான் நாம் சுதந்திரம் அடைவோம். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை சாத்தியமற்றதாகும்! - இப்படி எழுதுகிறார் பகத்சிங்.சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தான் இன்றைய சுதந்திர இந்தியாவின் நிலையாகவும் இருக்கிறது. பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள் முன்அன்று இருந்தது இந்திய விடுதலைப் போராட்டம். இன்றுநம் முன் உள்ளது பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதற்கான போராட்டமாகும். ஆம் 17வது நாடாளுமன்ற தேர்தல்கலத்தில் உள்ளோம். ஜனநாயகத்தை பாதுகாத்திட பகத்சிங் காட்டிய பாதையில், மக்களை திரட்டுவோம். மக்களாட்சியை பாதுகாக்க, பகத்சிங் என்னும் தியாக தீபத்தின் பாதையில் பயணிப்போம்.
------------------------------------------------------------------------------------------------------
ன்று,
மார்ச்-23.
தோழர் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம்.



-----------------------------------------------------------------------------------------------------
குளங்களை மூடி சாலை போடும் கனவுத்திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகளும், கடலும் சூழ்ந்த இயற்கையின் கொடைகள் மட்டுமல்லாது, சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால் உருவான கால்வாய்கள், குளங்களுக்கு வளர்ச்சி என்கிற பெயரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக்கூட மதிக்காமல் குளங்களை மூடும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. 
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2, மாம்பழத்துறை அணை என 4 பெரிய அணைகளும், இயற்கையாக அமைந்த 961 குளங்கள், மன்னராட்சி காலங்களில் உருவாக்கப்பட்ட 1558 குளங்கள் என மொத்தம்2519 குளங்களும், அவற்றுக்கு நீர் கொணரும் 24 கால்வாய் திட்டங்களும் உள்ளன. 
இவற்றின் மூலம் 62,219.66 ஏக்கர் நிலம்பாசன வசதி பெற்று மக்கள் வாழத்தகுந்தசிறந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இம்மாவட்டம் உள்ளது. 30 சதவீதத்துக்கும் அதிகமான வனப்பரப்பும் உள்ளது. அனைத்து உயிரினங்களின் வாழிடமான இம்மாவட்டத்தில் அருவிகளும், சிற்றோடைகளும், காடுகளும், மறுபக்கத்தில் கடலும் என இயற்கை அன்னை தாலாட்டும்தொட்டிலாக குமரி மாவட்டம் விளங்கி வருகிறது. கடந்த காலங்களில் குமரி மாவட்டத்தில்நடந்த வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் இய
ற்கை அமைப்பை சீரழிக்காமல் மேம்படுத்தியே நடந்துள்ளன. மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற உயரத்திலும் அதே அளவுக்கு பள்ளத்திலும் செல்லும் கால்வாய்கள் மாவட்டம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. ஆனால் அவை இயற்கையோடு கலந்து வலுவூட்டவே செய்துள்ளன. சாலைகள் ரயில் திட்டங்கள் கூட நீர் நிலைகளை சிதைக்காமல் கடந்துசென்றன. 
ஆனால் தற்போது நான்கு வழிச்சாலை என்கிற பெயரில் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளை போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக பல்வேறு தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், முன்னாள் வங்கி அதிகாரிகள் சங்க அகில இந்திய தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான தாமஸ் பிராங்கோ, எம்.சிவசுப்ரமணியன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் குளங்களை மூடி நாற்கர சாலைகள் அமைக்கப்படுவது குறித்து புகார்தெரிவித்துள்ளனர். 
அதன்மீது 19.3.2019க்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து செயலர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர், குமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர்ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. 
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகசாலை அமைக்கும் பணி தொடர்கிறது. புத்தேரி குளத்தை இருபாகங்களாக பிரித்துபெயரளவுக்கு நான்கு குழாய்களை பதித்து இணைப்பு கொடுத்துள்ளனர்.
இதுபொன் .ராதாகிருஷ்ணனின்  குமரி மாவட்ட வளர்ச்சி கனவு திட்டமாம்.
 மழை காலங்களில் சுற்றிலும் உள்ள மலைகளிலிருந்து வரும் தண்ணீர் குளத்தின் மொத்த பரப்பிலும் சமநிலையில் நிற்கவாய்ப்பில்லாமல் பெரும் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்பது இப்பகுதிமக்களின் கவலையாக உள்ளது. 
இதுபோல் சுங்கான் கடை ஐயப்பா கல்லூரி அருகிலும் வேறு பல இடங்களிலும் உள்ள குளங்கள் வரைமுறையில்லாமல் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனக்கூறியதாமஸ் பிராங்கோ அதற்காக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறினார். 
கண்களை விற்று சித்திரம் வாங்கலாமா? என்பதே வளர்ச்சி குறித்து பேசிவரும் பாஜகவினருக்கு கன்னியாகுமரி தொகுதி வாக்காளர்களின் கேள்வியாக உள்ளது.-
--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?