உலக நாட்டாமை அமெரிக்காவும்,
உக்ரைன் பிரச்சினையும்! ரஷ்யா, யுக்ரைன் மீது படையெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால், இந்தக் கட்டுரையின் தலைப்பு ஏன் ரஷ்யாவும் உக்ரைனும் என்று இருக்காமல் அமெரிக்காவும் உக்ரைனும் என்று இருக்கிறது? இந்தப் பிரச்சினையில் “அமெரிக்கா எங்கே வந்தது?” என்று ஒருவர் கேட்கலாம். உலகின் பிரச்சினைகள் பலவும் அமெரிக்காவால் வந்ததுதான் என்று சொன்னால் பலருக்கும் கோபம் வரும். உடனே பனிப்போர் காலத்தில் கம்யூனிச சோவியத் யூனியனை ஆதரித்த பழக்கத்தில் பேசுகிறேன் என்று கொந்தளிப்பார்கள். நான் பிரச்சினையை வேறு விதமாகப் பார்க்கிறேன். உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யா அந்த நாட்டின் மீது படையெடுத்ததைக் கண்டிப்பதும், தங்கள் தந்தை நிலத்தைக் காக்க யுக்ரைன் மக்கள் மேற்கொள்ளும் வீரம் செறிந்த போராட்டத்தைப் பாராட்டுவது என்பதும் அனைவரும் செய்யக்கூடியதுதான். ஆனால், இந்தப் பிரச்சினையின் வேர்கள் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் விடுவது என்பது மீண்டும் அமெரிக்கா உருவாக்கி வரும் வரலாற்று கதையாடலை (Narrative) விமர்சனமின்றி அனுமதிப்பதாகிவிடும். இந்திய புராண கற்பனையில் தேவலோகத்தவர்கள், அதாவது தேவர்களும், கடவுள்களு...