உலக நாட்டாமை அமெரிக்காவும்,

 உக்ரைன் பிரச்சினையும்!

சிறப்புக் கட்டுரை: உலக நாட்டாமை அமெரிக்காவும், உக்ரைன் பிரச்சினையும்!

ரஷ்யா, யுக்ரைன் மீது படையெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால், இந்தக் கட்டுரையின் தலைப்பு ஏன் ரஷ்யாவும் உக்ரைனும் என்று இருக்காமல் அமெரிக்காவும் உக்ரைனும் என்று இருக்கிறது? இந்தப் பிரச்சினையில் “அமெரிக்கா எங்கே வந்தது?” என்று ஒருவர் கேட்கலாம். 

உலகின் பிரச்சினைகள் பலவும் அமெரிக்காவால் வந்ததுதான் என்று சொன்னால் பலருக்கும் கோபம் வரும். 

உடனே பனிப்போர் காலத்தில் கம்யூனிச சோவியத் யூனியனை ஆதரித்த பழக்கத்தில் பேசுகிறேன் என்று கொந்தளிப்பார்கள். நான் பிரச்சினையை வேறு விதமாகப் பார்க்கிறேன். 

உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யா அந்த நாட்டின் மீது படையெடுத்ததைக் கண்டிப்பதும், தங்கள் தந்தை நிலத்தைக் காக்க யுக்ரைன் மக்கள் மேற்கொள்ளும் வீரம் செறிந்த போராட்டத்தைப் பாராட்டுவது என்பதும் அனைவரும் செய்யக்கூடியதுதான். ஆனால், இந்தப் பிரச்சினையின் வேர்கள் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் விடுவது என்பது மீண்டும் அமெரிக்கா உருவாக்கி வரும் வரலாற்று கதையாடலை (Narrative) விமர்சனமின்றி அனுமதிப்பதாகிவிடும்.

இந்திய புராண கற்பனையில் தேவலோகத்தவர்கள், அதாவது தேவர்களும், கடவுள்களும் ஒருபுறமும், அசுரர் மற்றும் அரக்கர் மற்றொருபுறமும் ஓயாது முரண்பட்டு போரிடுவார்கள்.

 ராஜாஜி சக்ரவர்த்தி திருமகன் எழுதும்போது “தேவர்கள் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் சுபாவத்தில் நல்லவர்கள்; அரக்கர்கள் சில நல்ல காரியங்கள் செய்தாலும் அடிப்படையில் தீயவர்கள்” என்று எழுதியிருப்பார். இதை மனிக்கியன் இருமை (Manichean Dualism), அதாவது கறுப்பு வெள்ளை போல முழுமையான இருமை என்றழைப்பார்கள். 

அப்படியான ஒரு இருபதாண்டு இருமையில் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உலகில் சுதந்திரம், சமத்துவம், சமாதானம், மக்களாட்சி, மனித உரிமை ஆகிய உயர்ந்த விழுமியங்களை நிறுவுவதற்கே அயராது பாடுபடும் உன்னத சக்திகளாகவும், அவ்வப்போது ஓசாமா பின் லேடன், சதாம் ஹுசைன், புடின் போன்ற அரக்கர்கள் தோன்றி அவர்களை எதிர்த்துப் போரிடுவதாகவும் ஒரு கதையாடலை உருவாக்கப்படுகிறது. 

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் போன்றவைதான் மேற்குலகம் உருவாக்கும் கதையாடல். 

இதை எதிர்கொள்வதற்கான ஒரு விமர்சனப் பார்வையை வளர்த்தெடுப்பது நமது கடமை என்பதால் அமெரிக்காவின் நாட்டாமை வேலைகளைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

அமெரிக்கா எப்படி நாட்டாமை ஆகியது?

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா அணு ஆயுதத்தை உருவாக்கியது. 

போரில் தோல்வி முகம் காணத் தொடங்கியிருந்த ஜப்பான் விரைவில் சரணடைந்துவிடும் என்ற சாத்தியம் இருந்தாலும், தான் உருவாக்கிய அணுகுண்டினை பரிசோதிக்க விரும்பி 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீதும், அது போதாதென்று மூன்று தினங்கள் கழித்து நாகாசாகி என்ற நகரின் மீதும் அணுகுண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தியது. 

இதுவரை மானுடம் காணாத மாபெரும் கோரப் பேரழிவினை அமெரிக்கா தேவையில்லை என்று தெரிந்தே நிகழ்த்தினாலும் அது போரை நிறுத்தவும், ஆதிக்க வெறி பிடித்த ஜப்பானுக்குப் பாடம் கற்பிக்கவும் நிகழ்த்தப் பெற்றது என்றே வரலாற்று கதையாடல் கட்டமைத்தது.

அதிலிருந்து நியூக்ளியர் பவர் எனப்படும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள்தாம் உலகில் நாட்டாமை செய்யும் தகுதி படைத்தவை ஆயின. 

அமெரிக்காவுக்கு இணையாக சோவியத் யூனியன் (அன்றைய யு.எஸ்.எஸ்.ஆர் – இன்றைய ரஷ்யா) அணு ஆயுத வல்லரசாக மாறியது. கூடவே இங்கிலாந்தும், ஃபிரான்சும் அணு ஆயுத வல்லரசாயின. 

கடைசியாக சீனா அணு ஆயுத ஆற்றல் பெற்று அவர்களுடன் இணைந்தது. இந்த ஐந்து நாடுகளே அணு ஆயுத வல்லரசுகளாக தங்களை அறிவித்துக்கொண்டன. அதன்பின் இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய நாடுகளும் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனைகள் செய்துள்ளன. இஸ்ரேல், இரான் போன்ற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. 

ஆனால் அறியப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள் பதிமூன்றாயிரத்துச் சொச்சத்தில் தொண்ணூறு சதவிகிதம் அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும்தான் உள்ளன.

அமெரிக்காவின் அணு ஆயுத பலம் தவிர ஒட்டுமொத்த ராணுவ பலமும் கடுமையானது. விமானப்படை, கப்பற்படை, நீர்மூழ்கிக் கப்பல்கள் என பலவிதமான ராணுவ பலம் கொண்டது அமெரிக்கா. 

இரண்டாம் உலகப்போர் 1945-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகு ஆசிய கண்டத்தில் மட்டும் நான்கு நேரடி ராணுவத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா. 

வியட்நாம் போர், ஈராக் போர் ஒன்று, ஆஃப்கானிஸ்தான் போர், ஈராக் போர் இரண்டு ஆகியவை அவை. இந்த போர்களின் கதைகளை விரிவாகப் பார்த்தால் இந்தக் கட்டுரை ஒரு புத்தகமாக மாறிவிடும். 

ஒரே ஓர் உதாரணம் போதும்.

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களாட்சி மலரச்செய்ய 2001ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது அமெரிக்கா. 

இருபதாண்டுக் காலம் அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானில் தங்கியிருந்தன. சென்ற ஆண்டு மீண்டும் தாலிபானிடம் நாட்டை விட்டுவிட்டு அமெரிக்கப் படைகள் வீடு திரும்பின. படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்து ஒரு நாட்டில் மக்களாட்சியை மலரச்செய்ய முடியுமா என்ற கேள்விக்கு முழுமையான பதில் கிடைத்தது என்றுதான் கூற வேண்டும்.

இப்படியான நாட்டாமை வேலைகள் பார்க்க இன்னொரு முக்கிய காரணம் பொருளாதாரப் பலம். உலகிலேயே மிக அதிகமான உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கொண்டது அமெரிக்கா.

 23 டிரில்லியன் டாலர்கள். அதற்கு அடுத்த சக்தி சீனா; 17 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் அமெரிக்காவின் நாட்டாமையை அமைதியாக வலுவிழக்கச் செய்து வருகிறது. ஜப்பான் 5 டிரில்லியன். 

ஜெர்மனி 4 டிரில்லியன்; இங்கிலாந்து 3 டிரில்லியன்; இத்தாலி, ஃபிரான்சு, இந்தியா 2 டிரில்லியன். இதற்கெல்லாம் பிறகுதான் 1.65 டிரில்லியனில் ரஷ்யா இருக்கிறது.

இங்கேதான் முக்கிய பிரச்சினை இருக்கிறது. அணு ஆயுத ஆற்றலில் அமெரிக்காவுக்கு இணையாக உள்ள ரஷ்யா, பொருளாதார ஆற்றலில் பலவீனமாக இருக்கிறது. இந்த முரண்பாடு விபரீதமானது; எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டியது.

 ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவைத் தான் வீழ்த்திவிட்டதாக, அது வலுவற்று போய்விட்டதாக நினைத்தது. அதாவது 1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா பதினைந்து நாடுகளாகச் சிதறியதும், அங்கே கம்யூனிஸ ஆட்சி முடிவுக்கு வந்ததும், உலகமே ஒரு துருவ உலகம் ஆகிவிட்டது; தன்னுடைய நாட்டாமையே இனி உலகில் நிரந்தரம் என்று நினைத்தது அமெரிக்கா. அதனால் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த சிறிய நாடுகளை எல்லாம் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு (North Atlantic Treaty Organization; NATO) சுருக்கமாக நேட்டோ அமைப்பினுள் இணைத்தது. 

ஆனால், இவ்விதம் நேட்டோ விரிவாக்கப்படாது என ரஷ்யாவுக்கு உறுதி அளித்திருந்தது அமெரிக்கா. 

அந்த உறுதியை மீறி ஒவ்வொரு பழைய சோவியத் நாட்டையும் அது நேட்டோவில் சேர்த்தது. இது என்றைக்கு இருந்தாலும் பிரச்சினையை உருவாக்கும் என சர்வதேச விவகார வல்லுநர்கள் எச்சரித்தனர். புடின் 2007ஆம் ஆண்டிலேயே தன்னுடைய கடும் அதிருப்தியைத் தெரிவித்தார். 

தான் சும்மா இருக்கப் போவதில்லை என ஜியார்ஜியாவைத் தாக்கிக் காட்டினார். ஆனாலும் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க விழைந்தன. பிரச்சினை வெடித்தது.

அமெரிக்காவின் கபட நாடகம்

அமெரிக்கா மக்களாட்சி விழுமியம், மனித உரிமை என்றுதான் தத்துவம் பேசும். 

ஆனால் தன்னுடைய முதலீட்டிய நலன்களுக்காக எந்தவித சமரசமும் செய்துகொள்ளும். சீனாவில் முதலீடு செய்யும் வாய்ப்புக்காக சீனா மக்களாட்சியை நடைமுறைப்படுத்தாவிட்டாலும் அதனுடன் நட்புறவு கொள்ளும். சவுதி அரேபியா மனித உரிமை கிலோ என்ன விலை என்று கேட்டாலும் அதனுடன் நெருங்கிய நட்பினை பேணும். 

ஏனெனில் சவுதி அரேபியாவின் பெட்ரோல் விற்ற உபரி பணம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்தாலும் ஒரு வார்த்தை பேசாது. ஐம்பதாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அளப்பரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு கெளரவமான சுயாட்சி பகுதியைப் பெற்றுத் தர எதுவும் செய்யாது.

உலகிலுள்ள பல தேசிய அரசுகளும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களின் சுயாட்சி உரிமைகளை கடுமையாக காலில் போட்டு மிதித்துதான் ஆட்சி செய்கின்றன. குர்து இனமக்களை ஈராக்கும் ஒடுக்கியது; துருக்கியும் ஒடுக்குகிறது. 

அமெரிக்கா குர்து இனமக்களுக்கு ஒரு சுயாட்சி பிரதேசத்தை உருவாக்கி தருமா? அது அவர்கள் “உள் நாட்டு” பிரச்சினை என்று ஒதுங்கிக்கொள்ளும். சிங்கள பேரின வாதம் ஈழத்தமிழர்களை ஒடுக்கியதில் அவர்கள் முப்பதாண்டுக் காலம் தனியாட்சி பிரதேசம் கேட்டுப் போராடினார்கள். 

அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அவர்கள் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்தன? அதுவும் “உள் நாட்டு பிரச்சினை”. காஷ்மீர் பள்ளத்தாக்கில் எழுபது லட்சம் பேர் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சுயாட்சி வேண்டும் எனக் கேட்கிறார்கள். 

அமெரிக்கா பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பாரபட்சமின்றி லாக் ஹீட் போர் விமானங்களை சப்ளை செய்யும். அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நேட்டோ நாடுகள் எல்லாம் முதலில் ஆயுத வியாபாரிகள். 

அதற்குப் பிறகுதான் மக்களாட்சி, மனித உரிமை, மண்ணாங்கட்டியெல்லாம்.

அமெரிக்காவிலேயே மக்கள் பரப்பில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்து வருகிறது. 

உலகம் முழுவதும் சுதந்திரவாத அரசியலும், சந்தை பொருளாதாரமும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகின்றன. தாமஸ் பிக்கெட்டி தன்னுடைய Capital and Ideology நூலில் மிக விரிவாக புள்ளி விவரங்களுடன் இருபதாம் நூற்றாண்டு உலகப் பொருளாதார வரலாற்றை விளக்குகிறார். 

அமெரிக்காவிடம் இதற்கு எந்த பதிலும் கிடையாது. தேர்தலுக்குத் தேர்தல் அமெரிக்க மக்களுக்கு எப்படி மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்குவது என்று வேட்பாளர்கள் ஓயாமல் பேசுவார்கள். 

ஏனெனில் அங்கே காப்பீடு இல்லையென்றால் சாக வேண்டியதுதான். தமிழ்நாடு போல “இன்னுயிர் காப்போம்” இலவச சிகிச்சையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இவ்வாறாக முதலீட்டிய குவிப்பு என்பது, உண்மையான மக்களாட்சி அதிகாரப் பரவலுக்கு எதிராக இருப்பதை ஏற்க மறுப்பதன் மூலமாக போலித்தனமான விழுமியங்களைப் பேசி கபட நாடகம் போட்டு வருகிறது அமெரிக்கா. 

அதன் ஒரு பகுதிதான் ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சங்களைக் குறித்த அக்கறையில்லாமல் அதனுடன் வரலாற்றில் நெருங்கிய உறவு கொண்ட உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முயற்சி செய்ததும்.

ரஷ்யாவும் உக்ரைனும்

உலகில் எந்தவொரு மக்கள் தொகுதிக்கும் சுயாட்சி கோர உரிமையுள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகுதியின் வரலாற்றிலும் அதற்குரிய காரணங்கள், அதன் நீண்டகால உறவு நிலை அம்சங்கள் ஆகியவை கவனமாக கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்பதே வெற்றிகரமான சுயாட்சி நடைமுறைக்கு உகந்தது. 

உதாரணமாக அண்ணா, தமிழக சுயாட்சி உரிமைகளுக்காக உரத்து குரல் கொடுத்தார்; ஆனால் சீன-இந்திய போரின்போது இந்திய அரசினை ஆதரித்தார். இந்திய தேசியமும், குடியரசும் தமிழ்நாட்டின் சுயாட்சி, கூட்டாட்சி கோரிக்கைகளின் வரலாற்று அடிப்படை என்பதை கணக்கில்கொண்டே தமிழ்நாடு தன் உரிமைகளை, தனித்துவத்தை வலியுறுத்தி வருகிறது.

உக்ரைனின் மக்கள்தொகை நாலரை கோடி; ரஷ்யாவின் மக்கள் தொகை பதினாலரை கோடி. உக்ரைனைவிட மூன்று மடங்கு பெரிய பொருளாதாரம் ரஷ்யாவுடையது. 

உக்ரைனின் நவீன அரசியல் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய பேரரசுடனும், இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனும் பிணைந்துள்ளதை காணமுடிகிறது. 

எந்த அளவு உக்ரைனின் தனித்த அடையாளம் குறித்து எழுதப்பட்டு வந்துள்ளதோ, அதே போல ரஷ்ய உறவு குறித்தும் எழுதப்பட்டு வந்துள்ளதாகவே தெரிகிறது. உக்ரைனை சின்ன ரஷ்யா என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதே சமயம் உக்ரைன் சிந்தனையாளர்கள் அதன் தனித்துவத்தை வலியுறுத்தியும் வந்துள்ளார்கள்.

ஸ்டாலின் காலத்துக்குப் பிறகு பனிப்போரின் உச்சத்தில் ஏறக்குறைய முப்பதாண்டுகள் ரஷ்யாவின் அதிபர்களாக இருந்த குருஷேவும் (1953-1964), பிரஷ்னேவும் (1964-1982) உக்ரைனைச் சேர்ந்தவர்கள் என்று அறியும்போது வியப்பாக இருக்கிறது. 

இவர்கள் ஆட்சியில்தான் உக்ரைனில் ரஷ்ய மொழியின் பயன்பாடு அதிகாரபூர்வமாகப் பரவலாகியுள்ளது. இதையெல்லாம் கூறுவது இன்று உக்ரைன், ரஷ்யாவின் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்பதற்கு அல்ல. 

உக்ரைன் நேட்டோவில் சேர்வது என்பது ரஷ்யாவுக்கு ஏற்படுத்தக்கூடிய பதற்றத்தைப் புரிந்துகொள்ளத்தான். சோவியத் யூனியன் 15 நாடுகளாக முப்பதாண்டுகளுக்கு முன் பிரிந்தாலும், அவர்கள் கடந்த கால தொடர்புகளிலிருந்து விரைவாக துண்டித்துக்கொள்வதில் பல சவால்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை கணக்கில்கொள்ள வேண்டும். 

மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து இந்த நாடுகளில் ஊடுருவி ஏற்படுத்தும் தாக்கங்கள் அவற்றினிடையே தொடர்ந்து பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன. 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் போதுமான கவனத்துடன் முன்னாள் சோவியத் நாடுகளின் விவகாரத்தில் நடந்து கொண்டனவா என்பது ஆய்வுக்குரியது. அவர்களது கவனமின்மை, அமெரிக்காவின் சுயநல விரிவாக்க சிந்தனை, நாட்டாமை மனோபாவம் உக்ரைன் பிரச்சினை கடுமையாக வெடிப்பதற்கு முக்கிய காரணமென தோன்றுகிறது.

ஆனால் புடினை புதிய அரக்கனாக்குவதில் அமெரிக்கா நிச்சயம் வெற்றி பெறும். ஒரு மோசமான சர்வாதிகாரியான புடினும் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பார். 

அமெரிக்கா தன்னுடைய நோக்கமெல்லாம் உலகில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ வழி செய்வதுதான் என்று கூறும். உக்ரைனின் பாதுகாப்புக்காக லாக் ஹீட் போர் விமானங்களை விற்கும். பல்வேறு ஆயுதங்களை விற்கும். 

ராணுவ பயிற்சி கொடுக்கும். ஹாலிவுட் படங்களை ஏற்றுமதி செய்து டப்பிங் செய்து திரையிடும். 

இன்னும் உக்ரைன் மக்கள் கோகோ கோலாவுக்கும், மாக் டொனால்டு உணவுக்கும் பழகிக்கொண்டால் பிறகு உலகில் அனைத்து மக்களாட்சி விழுமியங்களும் தழைத்தோங்கிவிடும்.

கட்டுரையாளர்;-

ராஜன் குறை கிருஷ்ணன்

--------------------------------------------------------------------

முழுமையான தலைவர்.முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கேரளாவிலிருந்து வெளிவரும் மலையாள ``மீடியா ஒன்’’ இணையதளம் ``அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேமுடியாது’’ என்றும், ``திராவிட அரசியலின் சாம்பியனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாறி வருகிறார்’’ என்றும் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி வருமாறு :

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான வெற்றியை தி.மு.க. பதிவு செய்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்குவந்த பிறகு, திராவிட கட்சிக்கு ஏற்பட்ட பிழைகளை சரி செய்து, பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை காண முடிகிறது.

அதன் தாக்கம் எல்லா தரப்புகளிலும் பிரதிபலித்து, ஒவ்வொரு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த விதத்திலும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

திராவிட அரசியல் என்பது ஏறக்குறைய தி.மு.க.வை மட்டுமே சார்ந்ததாக மாறிவருகிறதைக் கவனிக்க வேண்டியுள்ளது.
திராவிட கழகத்தின் பழைய நிலைக்கு ஸ்டாலின் திரும்பிக் கொண்டிருக்கிறார். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவுரை அமைந்ததாகக் கருத தோன்றுகிறது.

ஏனெனில் உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே சில இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ள அ.தி.மு.க., பெரிய அளவிலான தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே ஆட்சிக்கு திரும்ப வருவது என்பது கடினமான ஒன்றாகும்.

கிராமப்புறங்களில் ஏறக்குறைய 90% சீட்களை திமுக கைப்பற்றியுள்ளது. இதனால் திராவிட கழகத்தின் கருத்துகளை முன்வைத்து அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தொண்டர்கள், தி.மு.க.விற்கு திரும்புவதை காணலாம். மேலும் பல கட்சிகளும் சிதறிப் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவின் ஆட்சி மீண்டும் அமைவது கடினம்.

திராவிட அரசியலின் சாம்பியனாக மு.க.ஸ்டாலின் மாறி வருகிறார். அதேநேரத்தில் இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
புதிய திட்டங்களை குறித்த கருத்துக்களை வெளியிடுகிறார். தமிழ் தேசியத்தை எப்படி வளர்க்கலாம் என்பதை குறித்து ஆழமான கருத்துகளை மக்கள்முன் வைக்கிறார்.

முழுமையான அரசியல் தலைவராக கிறார்!

ஏற்கனவே தமிழ் தேசியம் மீது ஆர்வமுள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த செயல்பாடு அதற்கு ஊக்கமளிப்பதாக அமைகிறது.
மாநில அரசின் ஆட்சியை மேலும் வலுவானதாக மாற்றுவது குறித்து பேசி வருகிறார். மேற்கண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் மு.க.ஸ்டாலின் முழுமையான ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார் எனலாம்.

இதனால் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசை, அரசியல் வட்டாரத்தில் தோல்வி அடையச் செய்வது அவ்வளவு எளிதாக அமையாது.
ஒன்றிய அரசுக்குஎதிராக போராடும் மாநிலம் என்பதில் இருந்து திமுக.வில் மட்டும் அந்த நிலை என்பதை விட, தமிழகம்முழுவதும் இந்த மாற்றத்தைக் காண முடிகிறது.

அ.தி.மு.க.வின் ஒரு குளறுபடியில் இருந்துதான், திமுகவின் இந்த வெற்றிப்பயணம் துவங்கியது என்று கூறலாம். இதற்கு முக்கியமான காரணமாக பாரதிய ஜனதா உடனான கூட்டணியைக் காணலாம். இது தி.மு.கவிற்கு மிகவும் எளிதாக மாறியது.

தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பின்றி காணப்பட்டது என்பதை பாரதிய ஜனதா முக்கிய குற்றச்சாட்டாக முன்வைத்து வந்தது.
மேலும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் கேட்பாரின்றி, பிறரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கோவில்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகின என கூறப்பட்டது.

ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள கோவில்களை சீரமைப்பது குறித்த அறிவிப்பை முதலில் வெளியிட்டார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்களை மீட்பது உட்பட பாரதிய ஜனதா குற்றச்சாட்டாக எதைக் கூறிவந்ததோ, அதற்கு தீர்வு கண்டார். 

பாரதிய ஜனதாவின் செயல்பாட்டிற்கு கூட்டணி கட்சியாக இருந்த அ.தி.மு.க.வும் மௌனம் சம்மதம் என்ற நிலையில் இருந்தது.

பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டார் என்பதை கடந்து, பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரும் பூசாரிகளாக நியமிக்கப்பட முடிவு செய்யப்பட்டது.
இது ஒரு பெரிய மைல்கல்லாக அமையும் தீர்மானமாக அமைந்தது.
மு.க.ஸ்டாலின் ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கூறி வந்த குற்றச்சாட்டுக்கு முடிவுகட்டினார்.
இதனால் மேற்கொண்டு அ.தி.மு.க தரப்பில் எதுவும் பேச வாய்ப்பில்லாமல் போனது. திராவிட அரசியல் கட்சி என்று தங்களை கூறிகொள்ளும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி என்பதால், பாரதிய ஜனதா கூறிய கருத்துக்களுக்கு மௌனம் சாதிக்க வேண்டிய நிலை உருவானது.

இதன் மூலம் கேரள அரசியல் தலைவர்களான உம்மன்சாண்டி மற்றும் பினராயி விஜயன் ஆகியோரின் ஒன்றிணைந்த கலவையாக ஸ்டாலினை குறிப்பிடலாம்.
ஏனெனில் ஒருபுறம் மக்களுக்கு சாதகமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சிக்கு வந்த பிறகு, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளார்.
இதை உம்மன்சாண்டியின் ஆட்சியில் கூட காண முடியவில்லை.

ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும் மக்களை எளிதாகச் சென்று சேரும் வகையில் அமைந்துள்ளன.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, சாதாரண மக்களுக்கு உணவு பரிமாற முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கினார்.
இது மக்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

ஒரு சிறந்த அரசியல் நகர்வு!

விவசாயிகளுக்கான 17,000 கோடியில் திட்டத்தை அறிவித்த ஸ்டாலின், அதன் மூலம் ஏறக்குறைய ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானது. குறுகிய காலத்திலேயே சமூக நற்பணிகளுக்கு உதவும் திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.வின் 10 வருட ஆட்சியில் தமிழகம், கடும் பின்னடைவைச் சந்தித்துவந்தது என்பதை காட்டும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, மாநிலத்தின் உண்மை நிலை வெளிக்காட்டப்பட்டது.
ஒன்றிய அரசின் மீதான தாக்குதலை ஸ்டாலின் நடத்தினாலும், தமிழக தேசிய உணர்வை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்.
இதன் மூலம் ஒன்றிய அரசுடனான போராட்டத்தில் நீங்கள் என்னுடன் நிற்க வேண்டும் என்பதை மக்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டார். இது ஒரு சிறந்த அரசியல் நகர்வு எனலாம்.

ஒன்றிய அரசு அளிக்காமல் உள்ள ஜிஎஸ்டி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி என பலவற்றையும் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறார் ஸ்டாலின். அதேநேரத்தில் சிறந்த ஒரு நிதியமைச்சரை நியமித்துள்ள ஸ்டாலின், உலகத் தரம் வாய்ந்த நிதி தொடர்பான ஆலோசகர்களின் குழுவை அமைத்து, அந்தக்குழுவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தமிழகத்தின் நிதி நிலையை சீரமைத்து வருகிறார்.

தி.மு.க. ஆட்சியில் உள்ள கடந்த சில மாதங்களில், ஒரே நேரத்தில் மாநிலத்தின் வளர்ச்சியிலும், மறுபுறம் மக்களுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் ஸ்டாலினின் ஆட்சியில் காணமுடிகிறது.
இதன் பலனை தான் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளில் காண்கிறோம்.

பா.ஜ.க. வுக்கு  வாய்ப்புகள் குறைவு!

இதே நிலையில் ஸ்டாலின் தொடர்ந்து ஆட்சி செய்தால், முன்பே கூறியதுபோல, அ.தி.மு.க. கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும்.
பல சிறிய கட்சிகளுக்கு மக்களின் கவனம் சிதற வாய்ப்பு உருவாகும். இதில் பாரதிய ஜனதா மக்களின் கவனத்தை பெறுமா என்ற சந்தேகம் ஏற்படலாம்.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு குறைவு என்பது தெளிவாகிறது.
ஏனெனில் தி.மு.க.வுக்கு அடுத்த இடங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை காணமுடிகிறது.

திராவிட அரசியலை முன்வைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்புகள் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த கடந்த காலத்தில், அரசியலில் ஜாதிக் கட்சிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது.
வன்னியர் கட்சி, புதிய தமிழகம் என பல ஜாதி பிரிவுகளை கொண்ட கட்சிகளை காணலாம். இந்த ஜாதி பிரிவுகளையும் உட்படுத்த ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் முயற்சி செய்து வந்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இதை தெளிவாக காணலாம். ஜாதி பிரிவை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட ஸ்டாலின் வாய்ப்பு அளிக்க முயற்சிசெய்துள்ளார். பான் தமிழ்நாடு என்ற ஒரு நிலையை ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

கலைஞர்-ஜெயலலிதா,கலைஞர் -எம்ஜிஆர் காலக் கட்டத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த விரோதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வருபவர்கள், முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் மீது கடுமையான குற்றச் சாட்டுகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுஇருந்தனர்.

ஆனால் ஸ்டாலின் அந்தப் பாணியை முற்றிலும் மாற்றி உள்ளார். எதிர்கட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேர்ந்த இறப்புகளுக்கு நேரடியாக வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியில் நடந்த ஊழல்களை குறித்து விசாரணையும் நடந்து வருகின்றன. ஒன்றிய அரசுக்கு பல கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
இதையெல்லாம் கடந்து விவசாயத்திற்கான தனி பட்ஜெட் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இது அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
வேறெந்த மாநில அரசும் கொண்டு வந்ததாக தெரியவில்லை. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைக்கலாம் என்ற கருத்து மட்டுமே வெளியிடப்பட்டது.

ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
இப்படி பல ஆட்சி, அணுகுமுறைகளில் முழுமையான ஒரு மாற்றத்தை ஸ்டாலின் செய்துள்ளார்-
இவ்வாறு மீடியா ஒன் இணையதளம் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

--------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?