ஸ்விஃப்ட் என்றால் என்ன??

 ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: -

ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை விலக்கி வைக்க ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது ரஷ்யாவின் வங்கி அமைப்பு மற்றும் ஸ்விஃப்ட் மூலமான நிதி போக்குவரத்துகளை தாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட், உலகளாவிய பணப் பரிவர்த்தனைக்கு முக்கியமானது.

ரஷ்யாவின் மத்திய வங்கியின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இது வெளிநாடுகளில் தன் நிதி இருப்புகளைப் பயன்படுத்துவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

தொடக்கத்தில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகள் , ரஷ்யாவை ஸ்விஃப்ட் பயன்பாட்டிலிருந்து விலக்கிவைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தயக்கம் காட்டின.

இந்தத்தடையானது, பிற நாடுகளையும் நிறுவனங்களையும் பாதிக்கும் என்ற கவலைகளும் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது தடைபடும்.

இருப்பினும், "ரஷ்யா மீது தொடர்ந்து தடைகளை விதிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச நிதி அமைப்பில் இருந்தும், எங்கள் பொருளாதாரங்களில் இருந்தும் அது ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும்," என்று சனிக்கிழமையன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஸ்விஃப்ட் என்றால் என்ன?

ஸ்விஃப்ட் என்பது உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளுக்கான சேவை அமைப்பு ஆகும். அதாவது, எல்லைகளைத் தாண்டி பணத்தை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அனுப்ப இந்த முறை அனுமதிக்கிறது. ஸ்விஃப்ட் என்பது, சொசைட்டி ஃபார் வேர்ல்டுவைட் இன்டர்பேங்க் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன் (Worldwide Interbank Financial Telecommunication) என்பதன் சுருக்கமாகும்.

1973 இல் இது பெல்ஜியமில் உருவாக்கப்பட்டது. ஸ்விஃப்ட், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000 வங்கிகள் மற்றும் நிறுவனங்களை இணைக்கிறது.

பணப்பரிவர்த்தனை

ஆனால் ஸ்விஃப்ட் என்பது பாரம்பரிய வங்கி அல்ல. இது ஒரு வகையான உடனடி செய்தியிடல் அமைப்பாகும். பணம் அனுப்பப்பட்ட பிறகும், பெறப்பட்ட பிறகும் பயனர்களுக்கு தகவல் அளிக்கிறது.

இது ஒரு தினத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமான செய்திகளை அனுப்புகிறது. ஏனெனில் நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கு இடையில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் கைமாறுகின்றன.

அந்த செய்திகளில் 1% க்கும் அதிகமானவை ரஷ்ய கட்டணங்களை உள்ளடக்கியவை என்று கருதப்படுகிறது.

ஸ்விஃப்ட் யாருக்கு சொந்தம், யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள்?

ஸ்விஃப்ட் , அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளால் உருவாக்கப்பட்டது. ஒரே நிறுவனம் இதை சொந்த அமைப்பாக உருவாக்குவதையும் ஒரே ஒருவர் கட்டுப்படுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை.

இந்த நெட்வொர்க் இப்போது 2,000 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கூட்டாக சொந்தமானது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஆஃப் இங்கிலாந்து உட்பட, உலகெங்கிலும் உள்ள முக்கிய மத்திய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து, நேஷனல் பேங்க் ஆஃப் பெல்ஜியத்தால் இது மேற்பார்வை செய்யப்படுகிறது.

ஸ்விஃப்ட் அதன் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான சர்வதேச வர்த்தகத்தை சாத்தியமாக்க உதவுகிறது. மேலும் பிரச்னைகளின்போது அது பக்கசார்பை கொண்டிருக்கக்கூடாது.

இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக 2012 இல் அந்த நாடு ஸ்விஃப்ட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக,எண்ணெய் ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட பாதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் 30 சதவிகிதத்தை இரான் இழந்தது.

பொருளாதாரத் தடைகள் தொடர்பாக தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவற்றைச் சுமத்துவதற்கான எந்த ஒரு முடிவும் அரசுகளிடம் உள்ளது என்றும் ஸ்விஃப்ட் கூறுகிறது.

ஸ்விஃப்ட்டில் இருந்து ரஷ்யாவை தடை செய்வது அதை எவ்வாறு பாதிக்கும்?

ஸ்விஃப்டில் இருந்து எந்த ரஷ்ய வங்கிகள் அகற்றப்படும் என்பது தற்போது தெளிவாகத்தெரியவில்லை. இது வரும் நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த வங்கிகள் சர்வதேச நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவதையும், உலகளவில் செயல்படும் திறனைக் குறைப்பதையும் இந்த நடவடிக்கை உறுதி செய்யும்" என்று கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்விஃப்ட்டில் இருந்து ரஷ்யாவை தடை செய்வது

ஸ்விஃப்ட் வழங்கும் சாதாரண, எளிமையான மற்றும் உடனடி பரிவர்த்தனை வசதியில் இருந்து ரஷ்ய நிறுவனங்களை விலக்கிவைப்பதே இதன் நோக்கம். ரஷ்யாவின் மதிப்புமிக்க எரியாற்றல் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான பணவரவு கடுமையாக பாதிக்கப்படும்.

வங்கிகள் ஒன்றுக்கொன்று நேரடியாகச் சமாளிக்க வேண்டியிருக்கும். தாமதங்கள் மற்றும் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதனால் ரஷ்ய அரசின் வருவாய் குறையும்.

ரஷ்யா, 2014 இல் கிரைமியாவை தன்னுடன் இணைத்தபோது, ஸ்விஃப்ட் செயல்முறையில் இருந்து அந்த நாடு வெளியேற்றப்படும் என்ற அச்சுறுத்தல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை போர்ப் பிரகடனத்திற்குச் சமமாக இருக்கும் என்று ரஷ்யா கூறியது.

மேற்கத்திய நாடுகள் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால் இந்த அச்சுறுத்தல் ரஷ்யாவை தனது சொந்த, அதிக வளர்ச்சி அடையாத, எல்லை தாண்டிய பணப்பரிமாற்ற முறையை உருவாக்கத் தூண்டியது.

அத்தகைய தடைக்கு தயாராவதற்காக ரஷ்ய அரசு, மிர் (Mir) எனப்படும் தேசிய கட்டண அட்டை அமைப்பை உருவாக்கியது. இருப்பினும், சில வெளிநாடுகள் மட்டுமே தற்போது இதைப் பயன்படுத்துகின்றன.

ஸ்விஃப்ட் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ஒருமித்த கருத்தை ஏன் எட்ட முடியவில்லை?

ஸ்விஃப்ட்

ரஷ்யாவை அகற்றுவதால், ரஷ்யாவில் இருந்து பொருட்களை வாங்கும் மற்றும் ரஷ்யாவுக்கு பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பாக ஜெர்மன் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பெரும்பாலும் ரஷ்யாவிடமிருந்துதான் பெறப்படுகிறது. மேலும் மாற்று விநியோகங்களைக் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. எரிசக்தி விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், மேலும் இடையூறு ஏற்படுவதை பல அரசுகள் தவிர்க்க விரும்புகின்றன.

ரஷ்யா பணம் கொடுக்கவேண்டிய நிறுவனங்கள் பணம் பெற மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச வங்கி அமைப்பில் நிகழும் இந்த குழப்பத்தால் விளைந்த ஆபத்து மிகவும் பெரியது என்று சிலர் கூறுகிறார்கள்.

ஸ்விஃப்ட்டிலிருந்து துண்டிக்கப்படுவது ரஷ்யாவின் பொருளாதாரத்தை 5% சுருக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின் கூறியுள்ளார்.

ஆனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் நீடித்த தாக்கம் குறித்து சந்தேகம் உள்ளது. தனது சொந்த பணப்பரிவர்த்தனை முறையை வைத்துள்ள சீனா போன்ற, பொருளாதாரத் தடைகளை விதிக்காத நாடுகளின் வழியாக ரஷ்ய வங்கிகள் பணம் செலுத்தக்கூடும்.

நன்றி: தமிழோசை.

----------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?