திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு...,!நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளினால் சிக்கல்கள் ஏற்படுகையில், இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் சில இடங்களைப் பெற்றவற்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தர வரிசைப் பட்டியல் பல பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, செயல் திறன், பயன்பாடு, பழுது நீக்கும் தன்மை மற்றும் ஆண்ட்ராய்ட் பாதுகாப்பு என்ற பிரிவுகளில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில், சிறந்த பாதுகாப்பிற்கான விருதினை செமாண்டெக் (Semantec Norton Security) நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் Symantec Endpoint Protection தொகுப்பு, நிறுவனங்களுக்கான சிறந்த பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 
தற்போது கம்ப்யூட்டர்களைத் தாக்கி வரும் 1,50,000 வைரஸ் புரோகிராம்கள் மட்டுமின்றி, 1,500க்கும் மேற்பட்ட, ”ஸீரோ டே” தாக்குதலைத் தொடுக்கும் வைரஸ்களுக்கும் எதிராகவும், செமாண்டெக் பாதுகாப்பு அளிக்கிறது. ('ஸீரோ டே' தாக்குதல் என்பது, வைரஸ் புரோகிராம் ஒன்று, அது வெளியாகி, அதற்கான எதிர்ப்பு புரோகிராம் தயார்ப்படுத்த எடுத்துக் கொள்ளும் காலத்திற்குள் தாக்குதலைத் தொடுக்கும் கெடுதல் புரோகிராம் ஆகும்). 
பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் பிரிவில் இயங்கும் புரோகிராம்கள், இத்தகைய பாதுகாப்பினை சராசரியாக 97.9% அளவில் வழங்கி வருகின்றன. ஆனால், செமாண்டெக் 98.3% அளவிற்கு வழங்கி வருகிறது. அதனாலேயே முதல் இடம் பெற்றுள்ளது.

 பல்வேறு நிறுவனங்கள், நல்ல பாதுகாப்பினைத் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், பல புரோகிராம்கள், அவை இயங்கும்போது, கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப்படுத்துபவையாக உள்ளன. இங்கு கம்ப்யூட்டர்களில், விளையாட்டுகள் மேற்கொள்கையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தைக் குறிப்பிடவில்லை. வழக்கமாக, கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சாதாரண பணிகள் தான் குறிப்பிடப்படுகின்றன. 
இணைய தளங்களைப் பெறுதல், சாப்ட்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்தல், டேட்டா காப்பி செய்தல் மற்றும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தல் போன்ற பணிகள் இதில் அடங்கும். இந்தப் பணிகளை மேற்கொள்கையில், கம்ப்யூட்டரின் வேகத்தினை எந்தவிதத்திலும் பாதிக்காத ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வகையில் “சிறந்த செயல்திறனுக்காக” மூன்று ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விருதைப் பெற்றன. 
நுகர்வோர்களுக்கான செயல்திறன் மிக்க ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக, Bitdefender மற்றும் Kaspersky Lab முதல் இடத்தைப் பெற்றுள்ளன. நிறுவனங்களுக்கான செயல் திறன் மிக்க புரோகிராமாக, Bitdefender தேர்ந்தெடுக்கப்பட்டது. வேகத்தின் அடிப்படையில், வீட்டுப் பயன்பாட்டு கம்ப்யூட்டர்களில், Bitdefender Internet Security தொகுப்பு சிறந்த செயல்பாட்டினைக் கொண்டதாக உள்ளது. 
Kaspersky Internet Security தொகுப்பு சில கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தேவைகளை இழுத்தது. நிறுவனங்கள் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, Bitdefender Endpoint Security தொகுப்பு முதல் இடத்தைப் பெற்றது. இது அனைத்து ஆறு வகை பரிசோதனைகளிலும் தன் செயல் திறனைக் காட்டியது என்று இதனைச் சோதனை செய்த AV-Test அறிவித்துள்ளது.

நுகர்வோர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் திறன் மிக்கதாகவும் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சோதனையிடுகையில், வைரஸ் இல்லாத புரோகிராம்களை, வைரஸ் உள்ள புரோகிராம்களாகக் (false positives) காட்டுதல், கெடுதல் சிறிதும் தராத இணைய தளங்களைத் தடுத்தல் போன்றவற்றை முதன்மைச் சோதனை காரணிகளாகக் கொண்டு சோதனையிடப்பட்டன. 
ஆயிரக்கணக்கான இணைய தளங்களைப் பார்வையிட்டும், நூற்றுக் கணக்கான புரோகிராம்களைப் பதிந்தும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், நுகர்வோர்களுக்கானவையாக, Avira AntiVirus Pro மற்றும் Kaspersky Lab Internet Security தொகுப்புகள் முதல் இரு இடங்களைப் பிடித்தன. நிறுவனங்களுக்கான தொகுப்புகளில், Intel Security McAfee Endpoint Security தேர்ந்தெடுக்கப்பட்டது. 
 நம் கம்ப்யூட்டர் ஏதேனும் மால்வேர் புரோகிராம்களின் தாக்குதல்களினால், பிரச்னையச் சந்தித்தால், எந்த ஆண்ட்டி வைரஸ் அதனை விரைவாக நீக்குகிறது? என்ற கேள்விக்கான சிறந்த தீர்வே, இந்த விருதிற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை உறுதி செய்தது. மேலே குறிப்பிட்ட விருதுகளில், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் என இரண்டு பிரிவாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் பார்க்கப்பட்டன. இந்தப் பிரிவில் அந்தப் பிரிவினை இல்லாமல், மொத்தமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பான தொகுப்பு (“security suite”) மற்றும் (“stand-alone clean-up tool”) என இரண்டு திறன் வகைகளும் சோதனை செய்யப்பட்டன. 
எட்டு மாத காலத்தில், நூற்றுக் கணக்கான மால்வேர் புரோகிராம்கள் பாதித்த பல பெர்சனல் கம்ப்யூட்டர்கள் சோதனைக்குள்ளாயின. இவற்றில், மேலே சொல்லப்பட்ட இரு திறன் அடிப்படையில், சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 
பாதுகாப்பான பழுது நீக்கும் தொகுப்பாக Avira AntiVirus Pro புரோகிராமும், இலவசமாக பழுது நீக்கும் சாதனமாக Kaspersky Virus Removal Tool புரோகிராமும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், ஏறத்தாழ கம்ப்யூட்டரின் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வகையிலான திறன் கொண்டதாக உள்ளதால், இணையம் நாடும் பெரும்பாலானவர்கள், தங்கள் ஸ்மார்ட் போன் வழியாகவே அதனை மேற்கொள்வதால், ஹேக்கர்கள் தங்கள் வைரஸ்களை போன்களுக்கும் அனுப்பி, தகவல்களைத் திருடுகின்றனர். 
ஆனால், கம்ப்யூட்டரில் பாதுகாப்பினை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்குத் திட்டமிடும் பயனாளர்கள், தங்கள் போன்களுக்கும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என முனைப்பாகச் செயல்படுவதில்லை.
ஆண்ட்ராய்ட் போன்களைப் பொறுத்தவரை முழுமையான பாதுகாப்பு தரும் வகையில் அமைக்கப்பட்டுத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையே AV-Test ஆய்வு செய்தது. இதில், பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் கூடுதல் வசதிகள் ஆகியவை முதன்மை ஆய்வுக் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில், அனைத்திலும் சிறப்பாக முதல் இடம் பெற்றது Bitdefender Mobile Security தொகுப்பாகும். 
தவறாக நல்ல புரோகிராம்களை அல்லது தளங்களை, “மோசமானவை” (false positives) என இந்தத் தொகுப்பு காட்டவில்லை. 
இந்த புரோகிராம் இயங்கும்போது, கூடுதலாக பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்தவில்லை. இது தரும் கூடுதல் வசதிகளும், பயனாளர்களுக்கு ஆர்வம் தருபவையாக இருந்தன.
பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கையில், Sophos Mobile Security புரோகிராமும் ஆண்ட்ராய்ட் போன்களுக்குச் சிறந்ததாக அமைந்திருந்ததாக AV-Test கூறியுள்ளது. 
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் மற்றும் மால்வேர்களைக் கண்டறிவதில், 100% திறமையுடன் செயல்பட்டது. மிகுந்த அபாயம் கொண்ட வைரஸ்களாக, ஏறத்தாழ 3,000 வைரஸ்களை, ஸ்கேன் செய்து, கண்டறிந்து, நீக்குமாறு இந்த புரோகிராம் செயல்படுத்தப்பட்டது. இந்த வகையில் 18,000 அப்ளிகேஷன்கள் இச் சோதனைக்குள்ளாக்கப் பட்டன. 
அவை அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, முதல் இடத்தை Sophos Mobile Security பிடித்தது.
மேலே தரப்பட்டுள்ளவற்றில், நீங்கள் உறுதியாக நம்பும் சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இல்லாமல் இருக்கலாம். 
அதனால், இங்கு தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். இருப்பினும், பல்வேறு சோதனைகளை, அறிவியல் ரீதியாகத் தொடர்ந்து சோதனை செய்து, இந்த முடிவுகளும் விருதுகளும் அறிவிக்கப்பட்டன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
=========================================================================================
இன்று,
பிப்ரவரி-29.
  • பின்லாந்து, குளிர்காலப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி முயற்சிகளில் இறங்கியது(1940)
  • செயின்ட் பீட்டஸ்பர்க், புளோரிடா ஆகியன இணைக்கப்பட்டன(1892)
  • ஹிலிகோலாந்து தீவு மீண்டும் ஜெர்மனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது(1952)==========================================================================================
இப்படியும் நடக்கிறது..
வெள்ள நிவாரணத்துக்கு அடுத்தவர் அனுப்பிய உதவிப் பொருட்கள் அனைத்தையும் பிடுங்கி ஜெயலலிதா ஸ்டிக்கர் ஓட்டுகிற தமிழகத்தில் காணும் எல்லாவற்றிற்கும் ரேசன் உப்பு வரை அம்மா பெயர்,நடக்கும் மணவிழாக்களில் நெற்றியில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ,என்ற நிலையில் இப்படியும் ஒரு சம்பவம் நம் கண்களின் வெளிச்சம் படாமல் நடந்துள்ளது.
அது எப்படி நிகழ்ந்தது என்பதை அவர்கள் வாக்கு மூலம் படியே :-


2013 ஆகஸ்ட்.
கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...
"சார்" ஒரு சிறு குரல்.
திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள்.
" என்னம்மா ?" என்றேன். " லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்". காரை விட்டு இறங்கி விட்டேன்.
" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா ?" "அது தெரியலிங்க சார்" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் "என்ன காரணம் தெரியுமா ?". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.
சிறுமியிடமே திரும்பினேன், "சாவி யாருகிட்டமா இருக்கு ?" "அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்" "எந்தக் கட்டிடத்தில் இருக்கு" "ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்" "சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா"
காரில் ஏறினேன். "எங்கம்மா படிக்கிற ?" "பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்" "எத்தனாவதும்மா?" "எட்டாவது சார்" "பேர் என்னம்மா ?"
"செம்பருத்தி சார்"
அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். "எதுக்கும்மா ?" "நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்" "மகிழ்ச்சிம்மா, நல்லா படி" வாழ்த்தினேன். "சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”
இன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.
நூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...
# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” ! 
அங்கு  இருந்த நூலகம், பகுதி நேர நூலகம் என்பதால் ஒதுக்கிய நிதி திரும்பி வந்தது. மீண்டும் அதற்கு புதிய தலைப்பு "படிப்பகம்" என்று வைத்து அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கினேன்.
கட்டிடம் கட்டப்படும் போதே செம்பருத்தியை தொடர்பு கொள்ளச் சொன்னேன். கட்டி முடித்த உடன் திறப்பு விழாவிற்கு செம்பருத்தியை அழைக்கச் சொன்னேன். இன்று திறப்பு விழா.
வரவேற்பு பதாகையில் செம்பருத்தி புகைப்படம். கல்வெட்டில் செம்பருத்தி பெயர் திறப்பாளர். செம்பருத்தி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நாங்கள் எல்லோரும் உரையாற்றிய பிறகு, செம்பருத்தி இறுதியில், "நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி தெரிவித்து" சிறப்புரையாற்றினார். இன்று செம்பருத்தி தான் வி.ஐ.பி.
பின்னாளில் கல்விக்கு உதவுவதற்கு அலைபேசி எண் கேட்ட உடன் எழுதிக் கொடுத்தார், "செம்பருத்தி IPS 7639681791 ". 
நூலகம் கேட்ட போது இருந்த அதே உறுதி. 
நிச்சயம்  IPS ஆவார். 
உதவிடுவேன்.
# சல்யூட் செம்பருத்தி IPS !
                                                                                                                                                                                                                                                                                            -எஸ் எஸ் சிவசங்கர்                                                                                                                      [குன்னம் சட்ட மன்ற உறுப்பினர்.]           
                                      
சிரிப்பு நடிகர் குமரிமுத்து காலமானார்.உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை காலமானார்.நடிகர் குமரி முத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். தவிர தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தார்.

        சீத்தாராம் யெச்சூரி ,தி.ராஜா,கேஜ்ரிவால்,ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.