இந்திய நலனுக்கு
நல்லதல்ல!
வங்க தேச கலவரம் வெடித்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ராணுவ தளபதி ஜெனரல் வக்கார் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். இதற்காக பல்வேறு தரப்பினரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அரசு பதவிகளில் இடஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த மாதம் முதல் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் எதிர்காலத்தை இருண்ட கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு வங்கதேசத்தில் யார் ஆட்சிக்கு வருவார்கள் வங்கதேச நிகழ்வுகள் இந்தியா மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?என்பதுதான் இப்போதைய கேள்வி.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கடந்த 53 ஆண்டுகளாக இருதரப்பு உறவு உள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வங்கதேசத்தை இந்தியா அழைத்திருந்தது.
G-20 இல் இந்தியா இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரே அண்டை நாடு வங்கதேசம். ஆனால் இப்போது ஷேக் ஹசீனா பிரதமராக இல்லாதது இந்தியாவிற்கு பல பிரச்னைகளை உருவாக்கலாம்.
வங்கதேச அரசியலில் இரண்டு பெரிய மற்றும் முக்கிய முகங்கள் உள்ளன. பங்களாதேஷ் அவாமி லீக்கின் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (BNP) காலீதா ஜியா.
வங்கதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சியில் இருந்தது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசை இந்தியா பார்க்க விரும்புவதாக வெளியுறவுத்துறை நிபுணர் கமர் ஆகா கூறுகிறார்.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் பக்கசார்பை கொண்டுள்ளது. அக்கட்சி எப்போதுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகிறது. சீனாவும் பாகிஸ்தானும் நண்பர்கள் என்பதால் சீனாவுக்கு இதன் நன்மை கிடைக்கிறது.
மறுபுறம், அவாமி லீக் தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பை நம்புகிறது. இந்தியா அதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இதுவே காரணம்.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றும் அங்கே ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் விரும்புகிறது. இந்தியாவுக்கு இன்னும் இந்த ஆசை இருக்கிறது. இந்தியா ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முயற்சிக்கும்,
“பிஎன்பி கட்சி பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல் சீனாவுக்கும் ஆதரவு அளிக்கிறது. அது இஸ்லாமிய அரசியலைப் பற்றி பேசுகிறது. ஷேக் ஹசீனா இல்லாத நிலையில் அது இந்தியாவிற்கு பதிலாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி நகரும்.
இந்தியா வங்கதேசத்துடன் சுமார் நாலாயிரம் கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. எனவே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சவால்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அந்தப்பகுதியில் இந்தியாவுக்கு நண்பனாக இருக்கும் ஓர் அரசு தேவை.
வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததில், ஷேக் ஹசீனாவுக்கு முந்தைய அரசு முக்கியப் பங்காற்றியதாக கமர் ஆகா கூறுகிறார்.
வங்கதேச முகாம்களில் இருந்து வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத இயக்கத்திற்கு கிடைத்து வந்த ஆதரவை நசுக்குவதில் ஷேக் ஹசீனா அரசும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
உல்ஃபா தலைவர் அரவிந்த் ராஜ்கோவா மற்றும் பல பிரிவினைவாத தலைவர்கள் உட்பட பிரிவினைவாத இயக்கத்தின் பெரிய தலைவர்களை வங்கதேச அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இப்போது அவர்கள் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இல்லையென்றால் அது இந்தியாவுக்கு உகந்த சூழ்நிலையாக இருக்காது
வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். எனினும் இந்த அரசின் வடிவம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
“அவாமி லீக் கட்சியிடம் முப்பது முதல் நாற்பது சதவிகித வாக்குகள் உள்ளன. வங்கதேச மக்களின் விருப்பப்படியான ஒரு ஒற்றுமை அரசு அங்கு அமைக்கப்பட வேண்டும்,
“வங்கதேசத்தில் ராணுவம், ’அரசியல் அதிகாரத்தை’ தன் கையில் எடுக்க விரும்பவில்லை. 2007-08 இல் ராணுவ ஆதரவு அரசு உருவாக்கப்பட்டது.
அது இரண்டு ஆண்டுகள் நீடித்தது.
ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாது என்பதும் அப்போது தெரிந்தது.
இதையடுத்து ராணுவம் கவனமாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச கலவர நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவத்தால் மட்டுமே முடியும்.
ஆனால் தங்கள் தேசத்தை உருவாக்கிய ஷேக் முஜிபுர் ரகுமான் சிலையையே உடைத்து எறியும் கலவரக்காரர்கள் தங்கள் பகுத்தறிவை இழந்து பாக்கிஸ்தான் ஆட்டுவித்தபடி ஆடுவதாகத் தெரிகிறது.
அது இந்திய நலனுக்கு நல்லதல்ல!