புதன், 13 ஜூலை, 2022

ஆளுநராக? பாஜக கொபசெ வா??

 தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கும் ஆளுநர், அதில் அரசியலைப் புகுத்துவதாகவும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு எல் முருகனை அழைப்பதைக் கண்டித்து விழாவைப் புறக்கணிப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விரைவில் நடக்கவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி ஆகியோர் கலந்துகொள்வதோடு, கௌரவ விருந்தினர் என்ற முறையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பேசுவதற்காக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் விருந்தினர்கள் யார் என்பதை ஆளுநர் மாளிகையே முடிவுசெய்வதாகவும் கேட்டால், அப்படித்தான் செய்வோம் என்று சொல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

"பட்டமளிப்பு விழாவுக்கு யார் விருந்தினர் என்பதை உயர் கல்வித் துறை அமைச்சகத்தில் கேட்டு, அவர்கள் அனுப்பும் பட்டியலில் இருந்து தேர்வுசெய்து அறிவிக்க வேண்டும். ஆனால், அவர்களாக அறிவிக்கிறார்கள். 

அது குறித்து துணைவேந்தரைக் கேட்டால் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் ஆளுநர் மாளிகையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கிறார். 

நான் பல்கலைக்கழகங்களின் இணை வேந்தர் என்ற முறையில், யாரை விருந்தினராக அழைப்பது என்பதை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கேட்கலாம். அப்படிக் கேட்கவில்லை.

பொதுவாக சிறப்பு விருந்தினர் மட்டும்தான் இருப்பார்கள். கௌரவ விருந்தினர் என யாரும் அழைக்கப்படுவதில்லை. யாருக்காவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டால் அவர்கள் கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவார்கள். ஆனால், இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு கௌரவ விருந்தினராக எல். முருகனை அழைக்கிறார்கள்.

ஆகவே பட்டமளிப்பு விழாவிலே ஆளுநர் அரசியலைப் புகுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. எங்கள் துறையின் செயலரும் அதிகாரிகளும் ஆளுநர் அலுவலகத்தோடும் துணை வேந்தர் அலுவலகத்தோடும் தொடர்பு கொண்டு பேசினார்கள். 

துணைவேந்தர் அலுவலகத்தைப் பொறுத்தவரை, "எங்களுக்கு ஒன்றும் தெரியாது; ஆளுநர் அலுவலகத்தில் சொல்கிறார்கள், செய்கிறோம்" என்கிறார்கள். ஆளுநர் அலுவலகத்தைக் கேட்டால், "இப்படித்தான் செய்வோம், என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க" என்கிறார்கள்.

அதிகார அடுக்கில் வேந்தர், அதற்குப் பிறகு இணை வேந்தர் இருப்பார்கள். வேந்தர் பேசுவதற்கு முன்பாக இணை வேந்தர் பேசுவது வழக்கம். சிறப்பு விருந்தினர் என்றால் ஒருவர்தான் இருக்க முடியும். ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்று ஒருவரைப் போட்டு, எனக்குப் பிறகு அவரைப் பேச வைக்கிறார்கள். 

அது வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். துணைவேந்தரிடம் கேட்டால், ஆளுநர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு வந்த உத்தரவு என்கிறார். ஆளுநர் அலுவலகத்தில் கேட்டால், "இப்படித்தான் செய்வோம்" என்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கிறபோது, பல்கலைக்கழகங்களிலே மாணவர்களிடேயே அரசியலைப் புகுத்தும் நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் ஏற்பட்ட காரணத்தினால், நான் இணை வேந்தர் என்ற முறையிலும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை. 

எல். முருகன் கல்வித் துறையைச் சார்ந்தவர்கூட அல்ல. அப்படியானால், ஆளுநரின் நோக்கம் என்ன? 

அவர் பல்கலைக்கழகங்களில் அரசியலைப் புகுத்த பட்டமளிப்பு விழாக்களைப் பயன்படுத்துகிறார் என்று நான் கருதுவதால் நாங்கள் இதைப் புறக்கணிக்கிறோம்.

பட்டமளிப்பு விழாக்களைப் பொறுத்தவரை ஆளுநருக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. துணைவேந்தருக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு.

 ஆனால், வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடுகிறார். ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறார். இதெல்லாம் தவறு.

நான் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவன். அலெக்ஸாண்டருக்குப் பிறகுதான் ஆரியர்கள் இங்கே வந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் திராவிடம் இங்கே வந்தது என்கிறார். வரலாற்றை லேசாகப் படித்திருந்தால்கூட இதெல்லாம் புரிந்திருக்கக்கூடிய விஷயம்.

ஆளுநர் என்பவர் பெயரளவுக்கான தலைவர்தான். அவர் மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர் அல்ல. அவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர், அப்படி நியமிக்கப்பட்டதற்காக அங்குள்ள ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கேயுமே சொல்லப்படவில்லை. 

மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் அவரது கடமையாக இருக்க வேண்டும். மாநில அரசை எதிர்த்துப் பேசுவது தவறான கொள்கை.

புதிய கல்விக் கொள்கையை வகுக்க மாநில அரசு ஒரு குழு அமைத்திருக்கும்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேசுகிறார். அவருக்கு யார் அந்த அதிகாரங்களைக் கொடுத்தது எனத் தெரியவில்லை. 

அவர் ஆளுநர் என்பதைவிட, பா.ஜ.கவின் பிரசாரகராக இருக்கிறார் என்பதை டி.ஆர்.பாலு விளக்கியிருக்கிறார். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.

புதிய கல்விக் கொள்கையை படித்துப் பார்க்க வேண்டுமென எங்களிடம் சொல்கிறார் ஆளுநர். 

அவர் திராவிட நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும்" என்று கூறினார் அமைச்சர் பொன்முடி.