இரண்டு நாடுகள்

 ஜப்பான் 

வரலாற்றில் அதிகமுறை பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றவர் ஷின்சோ அபே. இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

ஷின்சோ அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இவர் நேற்று காலை ஜப்பானின் அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் அவர் மேல் குண்டு பாய்ந்தது. பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அன்று மாலையே மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே உயிரிழந்துள்ளார். இந்த செய்தி உலக தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு சார்பில் ஒரு நாள் துக்கதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. 

ஷின்சோ அபே சுடப்பட்டபோதே சுட்டவரை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்த துப்பாக்கி கீழே விழுந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ஜப்பானின் துப்பாக்கி வைத்திருக்க கடுமையான சட்டங்கள் இருக்கும் நிலையில், அவர் வைத்திருந்த துப்பாக்கி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. அந்த துப்பாக்கி யூ-டியூப் பார்த்து வீட்டிலேயே செய்யப்பட்டிருக்கும் துப்பாக்கியாக இருக்கலாம் என ஜப்பானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குற்றவாளியின் புகைப்படத்தை சுட்டி அதில் இருக்கும் துப்பாக்கி ஒரு ஜோடி குழாய், மரத் தடுப்பு மற்றும் டேப் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் துப்பாக்கி போல இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் 41 வயதாகும் டெட்யா யமகாமி என்பதும், அவர் ஜப்பான் கடற்படை என அழைக்கப்படும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் வீரர் என்ற தகவலும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஷின்சோ அபே பிரதமராக இருந்தபோது அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகவும் எனவே அபேவை பழிவாங்க நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி அவரை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை யமகாமி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

---------------------------------++++---------------------------------

இலங்கை


 இலங்கையில் பொருளாதார சீர்குலைவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வீட்டை காலி செய்துவிட்டு.. பின்னங்கால் முதுகில் அடிக்க அவர் தப்பி ஓடி இருக்கிறார். இலங்கையே போர்க்களமாக மாறி உள்ள நிலையில்.. அதன் அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே?

இலங்கையில் மிக கடுமையான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிற்கு எதிராக மக்கள் சாலைகளில் இறங்கி கடுமையாக போராட்டம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார்.

இதன் புதிய பிரதமராக விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இந்த நிலையில் இடையில் கொஞ்சம் குறைந்த போராட்டங்கள் மீண்டும் கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்துள்ளது.

 மக்கள் மீண்டும் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். முக்கியமாக கொழும்பில் நீண்ட நாட்களாக போராட்டம் நடந்த கோட்ட காம கோ பகுதியை மீண்டும் போராட்டக்காரர்கள் நேற்று முதல்நாள் கைப்பற்றினார்கள். அதோடு நேற்று இலங்கையில் அதிபர் அலுவலகம் மற்றும் வீட்டை போராட்டகாரர்கள் கைப்பற்றினார்கள்.

பல்லாயிரம் பேர் மொத்தமாக வந்து இலங்கை அதிபர் வீட்டிற்குள் நுழைந்து நேற்று மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர். அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இருந்த மெத்தையில் தூங்குவது, ஸ்விம்மிங் பூலில் ஆட்டம் போடுவது, அவர் வீட்டு பாத்ரூமில் குளிப்பது என்று கொண்டாட்டமாக போராட்டத்தை மேற்கொண்டனர். இப்போதும் அதிபர் வீட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே போராட்டக்காரர்கள் தங்கி உள்ளனர்.

 இரவு முழுக்க வீட்டிற்குள் உள்ளேயும், வெளியேயும் போராட்டகாரர்கள் தூங்கினார்கள்.

நேற்று போராட்டம் நடக்க போகிறது.. போராட்டம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க போகிறது என்ற தகவல் உளவுத்துறை மூலம் முன்கூட்டியே அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே போராட்டகாரர்கள் தன் வீட்டிற்கு வரும் முன்பே அங்கிருந்து தப்பி ஓடினார். நேற்று இவர் சென்றதாக சொல்லப்படும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியானது.

இவர் தப்பி ஓடியதாக  சொல்லப்படுகிறது. அதன்படி நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டவர் கொழும்பு சென்று, அங்கு கப்பற்படையின் கஜபாகு கப்பலில் இவர் தப்பித்து இருக்கிறார். 

அதோடு இவரின் உறவினர்கள், பொருட்கள், பணம், நகை எல்லாம் எஸ்எல்என்எஸ் சிந்துரால கப்பலில் தனியாக எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. இதற்கான வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது. 

 போராட்டம் உச்சம் பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கொழும்பு விமான நிலையம் நோக்கி தீவிர பாதுகாப்போடு கான்வாய் ஒன்று சென்றுள்ளது. 

இதில் கோத்தபய ராஜபக்சே சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகி உள்ளது.

 இந்த இரண்டில் ஒரு முறையை பயன்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பித்து ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவர் கண்டிப்பாக இலங்கையில் எங்கும் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இலங்கை முழுக்க போராட்டம் நடப்பதால் எங்கே சென்றாலும் கோத்தபய ராஜபக்சேவிற்கு பாதுகாப்பு இருக்காது. அவர் பெரும்பாலும் சீனாவிற்கு சென்று இருக்கலாம். 

அல்லது சீனாவின் நட்பு நாட்களில் தங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் சென்றதாக சொல்லப்படும் கஜபாகு கப்பல் தற்போது எங்கே இருக்கிறது என்ற அதிகாரபூர்வ தகவல் இல்லை.

இருந்தாலும் பெரும்பாலும் சீனாவில் கோத்தபய ராஜபக்சே இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதோடு கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கைக்கு வர வாய்ப்பு குறைவு என்றும் கூறுகிறார்கள். 

அவர் 13ம் தேதி அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். பெரும்பாலும் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்பாமல் ஃபேக்ஸ் அனுப்பி அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?